Advertisement

அத்தியாயம் 23
இனியனை மிக முக்கியமான வேலையே அனுபமாவை எந்த வேலையும் பார்க்கவிடாமல் இருப்பதாக இருந்தது. குறிப்பாக அவளை படிகளில் இறங்க விடாமல் மூன்று வேலையும் அவனே சென்று அறைக்கு உணவெடுத்துக் கொண்டு வருவான்.
“மாப்புள அவளை நடக்க விடுங்க” என்று கலைவாணி பலதடவை கூறிப் பார்த்தாள். இனியன் கேட்பதாக இல்லை. நடைப்பயிற்சியை மாடியிலையே வைத்துக்கொள்ளலாம் என்றான்.
இனியன் வந்த பின் அனுபமா என்ற ஒருத்தி வீட்டில் இருக்கின்றாளா என்ற அளவுக்கு மகளின் நடமாட்டம் வீட்டில் காணாது. வடிவேல் கூட “சீமந்தம் முடிஞ்சி குழந்தை பொறந்தா படிக்கணும் என்று அனு கிளம்பிடுவா மாப்புள. கொஞ்சம் எம்பொண்ண கண்ணுல காட்டுங்க” என்று கூறிப்பார்த்தார்.
“இல்ல மாமா இங்க வீட்டுல படிக்கட்டு ரொமப் பெரிசாகவும், நிறையவும் இருக்கு. நானும் உங்க கிட்ட பேசி லிப்ட்டு போடலாமா என்று கேக்கலாம் என்று இருந்தேன்” என்றான்.
அனுபமாவுக்காக மின்தூக்கியென்ன. புதிதாக வீடு வேண்டுமானாலும் கட்டிக் கொடுப்பார். பிரச்சினை அதுவல்லவே. சீமந்தத்துக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்க, வீட்டில் இடிபாடு வேலைகளை தொடங்க முடியுமா? இப்படி செய்வானென்று அறிந்திருந்தால் என்றோ மின்தூக்கியை பொறுத்தியிருப்பார்.
தன்னை விட இவன் என் மகள் மீது பாசம் வைத்திருக்கின்றானா? பொறாமை கொஞ்சம் எட்டிப் பார்த்திருந்தாலும். “மாப்புள கொழந்த பொறந்தா, அவ வளந்தா இங்க வரத்தானே செய்வீங்க, அப்போ லிப்ட்டுல ஏறி, இறங்கி விளையாடுறான்னு அத அகற்ற கூட தோணும். படி கூட பலகையால் தானே கட்டியிருக்கேன். விழுந்து அடிபட்டா கூட ரொம்ப காயமாகாது” என் மகளையே கண்ணில் காட்டமாட்டேங்குறானே என்ற கடுப்பில்தான் கூறினார்.
“உங்க வாய்தான் மாமா அனுக்கு இருக்கு” என்று விட்டு இனியன் செல்ல புரியாது முழித்த வாடிவேலு இனியன் அவ்வாறு ஏன் சொன்னான் என்று ஆராயாமல் “அவ என் பொண்ணு” என்று மீசையை முறுக்கிக் கொண்டார்.
இனியன் செய்பவைகள் அனுபமாவுக்கு கடுப்பாக இருந்தாலும் அவன் விழுந்து விழுந்து அவளை கவனித்துக் கொள்வது அவளுக்கு குஷியாக இருக்க, வேண்டுமென்றே அது வேண்டும், இது வேண்டும் என்று அவனை படிகளில் ஓட விடுவாள்.  
அவ்வாறு இனியனை கீழே அனுப்பியவள் குளியலறைக்குள் நுழைந்திருப்பாள் போலும் இனியன் வந்து அவளை அறையில் தேடிப்பார்த்து விட்டு காணாமல் மாடி முழுவதும் தேடலானான்.
“எங்க போனா இவ?” என்றவாறே வந்தவன் நின்றது ஹரியின் அறை வாயிலில்
“இப்போ என்னதாண்டி உனக்கு பிரச்சினை? இத்தனை வருஷமாகியும் இந்த வீட்டுல எந்த பங்க்ஷன் நடந்தாலும் முகத்தை தூக்கி வச்சிக்கிற. மத்த வீடுகள்ல பன்க்ஷனுக்கு புருஷன் புதுப் புடவை வாங்கிக் கொடுக்கல, நகை வாங்கிக் கொடுக்கல என்ற பஞ்சாயத்து போய் கிட்டு இருக்கும். இங்க என்னடான்னா எத வாங்கிக் கொடுத்தாலும். போட்டுக்க மாட்டேன். பன்க்ஷனுக்கு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிற” கல்யாணி விசும்பிக் கொண்டிருக்க, ஹரி சற்று குரலை உயர்த்தி பேசிக் கொண்டிருந்தான். 
என்ன பிரச்சினை என்று இனியனுக்கு தெரியவில்லை. ஹரியின் பேச்சை வைத்து நித்யாவுக்கு இந்த வீட்டில் அனுபமாவுக்கு வளைகாப்பு செய்வதில் விருப்பமில்லை போல் தெரிகிறது.
சொந்த நாத்தனார் என்றாலே ஆயிரம் பஞ்சாயத்தாக்கும். அனுபமா கணவனின் சித்தப்பா மகள் தானே. என்னதான் ஒற்றுமையாக இருப்பது போல் வெளியே தெரிந்தாலும், சொத்தை பிரித்து வாங்கிக் கொண்டு தனிக் குடித்தனம் சென்று விடலாமென்று நித்யகல்யாணி ஹரியை நச்சரிக்கின்றாளோ! என்றுதான் இனியனுக்கு தோன்றியது.
கணி-நிலுபமா திருமணத்தின் பொழுதும் ஹரி மனைவியோடு இருந்ததற்கு காரணம் அவள் ஏதும் பிரச்சினை செய்வாளென்று தானோ?
“இங்க என்ன பண்ணுற?” அனுபமாவின் குரலில் தன்னை மீட்டுக் கொண்டவன் ஒன்றுமில்லை உன்னைத்தான் தேடி வந்தேன் என்று அவளை அழைத்துக் கொண்டு அறைக்குத் திரும்பினான்.
சீமந்தம் எந்த பிரச்சினையுமில்லாமல் நடக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த இனியன் அனுபமா தூங்கும் நேரம் பார்த்து ஹரியின் அறைக்கதவை தட்டினான்.
இனியன் வந்து மூன்று நாட்களாகின்றன. அவன் அனுபமாவை கவனித்துக் கொள்வது ஹரியின் கண்ணில் பட அவன் மனமாற்றம் அவனுக்கு புரிந்தது.
இனியன் நடிக்க வேண்டிய அவசியமில்லை. அனுபமாவை பிடிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் பெயருக்கு சீமந்தமன்று வந்திருப்பான். ஒருவாரத்துக்கு முன்னாடியே வந்தது மாத்திரமன்றி அனுபமாவை கவனித்து பார்த்துக் கொள்வதில்லையே அவன் அன்பு புரிந்தது.
இவ்வளவு சீக்கிரத்தில் இனியனின் மனம் மாறாக கூடும் என்று ஹரி கூட எதிர்பார்த்திருக்கவில்லை. நிதர்சனம் உணர்ந்ததால் அவரவர் அவரர் வாழ்க்கையை முறையாக அமைத்துக் கொள்வார்கள்.
இனியன் அனுபமாவை கவனித்துக் கொள்வதினாலையே ஹரியால் அவனோடு பேச முடியவில்லை. இனியனும் ஹரியோடு பேச முயற்சிக்கவில்லையே.
கதவை திறந்த ஹரி ஆச்சரியத்தோடு “உள்ள வாங்க மாப்புள. இப்போதான் என் கூட பேச நேரம் கிடைச்சதா?” சிரித்தவாறே வரவேற்றான்.
இனியன் முகத்தில் புன்னகையில்லை. அறையை பார்த்தவன் தங்களது அறையை போலவே இருக்கவே நிம்மதியடைந்தான்.
எங்கே அனுபமாவுக்கும், நிலுபமாவுக்கும் வசதியான அறையை கொடுத்து விட்டு ஹரி சாதாரண அறையில் தங்கியிருக்கின்றானோ, அதனால் கூட நித்யகல்யாணி பிரச்சினை செய்கின்றாளோ என்ற எண்ணம் கூட இனியனுக்கு வந்தது.
“மாப்பிளைக்கு எப்பவும் வேலை நினைப்பு போல” ஹரி கிண்டல் செய்ய,
இனியன் புன்னகைக்கக் கூட இல்லை. “உங்க வைப் எங்க? நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் பேசணும்” என்றான் இனியன்.
“என்ன மாப்புள ஏதாவது பிரச்சினையா?” சட்டென்று தீவிரமான முகபாவனையில் கேட்டான் ஹரி.
“சொல்லுறேன். அவங்கள கூப்பிடுறீங்களா?” பிடிவாதமான முகபாவனையில் இனியன் நிற்க,
அறையோடு கூடிய குழந்தைக்கான அறைக் கதவை திறந்து இனியன் வந்திருப்பதாக நித்யகல்யாணியை அழைத்தான் ஹரி.
தயங்கித் தயங்கி வந்த நித்யாவை விநோதமாகப் பார்த்தான் இனியன்.
நித்யாவுக்கும் அனுபமாவுக்கும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் வயது வித்தியாசம் இருக்கும். கிட்டத்தட்ட அவன் வயதுதான். நித்யா ஒரு ஆசிரியை என்று நிலுபமா கூறியதாக ஞாபகம். இவளின் தயக்கமும், சோகமான முகமும் செய்யும் தொழிலும் சம்பந்தமே இல்லை போலயே. தன் சிந்தனை செல்லும் திசையை இழுத்து நிறுத்தியவன். தான் வந்த விஷயத்தை பேச வேண்டும் என்று ஹரியை பார்த்தான்.
அவனோ நித்யாவை தன் அருகில் அமரும்படி அதட்டிக் கொண்டிருந்தான்.
“அனுபமா எந்திருக்க முன்னாடி நான் பேசணும். ப்ளீஸ் சிஸ்டர் உக்காருங்க” இனியன் கூறியதும் நித்யா ஹரி அமர்ந்திருந்த சோபாவில் கொஞ்சம் இடம் விட்டு அமர்ந்தாள்.
இவர்களுக்கு திருமணமாகி ஆறுவருடங்கள் இருக்கும். இவன் பொண்டாட்டி முந்தானையை பிடித்துக் கொண்டு அலைவது போல் தெரிந்தாலும், அறைக்குள்ள அதட்டுறான். இந்தம்மா இவன கட்டுப்படுத்துறான்னு பார்த்தா அழுதுகிட்டு நிக்குது. என்ன இது? என்று இனியன் பார்த்தாலும் எதுவும் கேளாமல் “காலைல நீங்க ரெண்டு பேரும் பேசினது எதேச்சையா என் காதுல விழுந்தது” என்றான் இனியன்.
“அதுக்கு…” ஹரியின் குரலில் கொஞ்சம் கடுமையிருந்தது. 
இனியன் அனுபமாவின் கணவனாக இருந்தாலும் இவர்கள் பேசியதை கேட்டிருக்கக் கூடாது என்ற கோபத்தை உடனே காட்டி விட்டான்.
“மாமா…” என்று நித்யா ஹரியின் கையை பிடித்திருக்க, பதிலுக்கு அவள் கையை தட்டிக் கொடுத்தவன் அவளை சமாதானப்படுத்தலானான்.
“என்ன இதுங்க எட்ட நின்றே ரோமன்ஸ் பண்ணுதுங்க” என்று இனியன் பார்த்தாலும் தொண்டையை கனைத்து அவர்களை தன்புறம் திருப்பினான்.
“அதான் சொன்னேனே எதேர்ச்சையாக கேட்டேன் என்று. அதுவும் எதோ கொஞ்சமா காதுல விழுந்தது. நான் கிளம்பிட்டேன். விழுந்தவரைக்கும் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது. அதை பத்திதான் பேச வந்தேன்” என்றான் இனியன்.
எதோ பேச வந்திருக்கின்றான். என்னதான் கூறுகின்றான் என்று கேட்போம் என்று “சரி சொல்லுங்க” மனைவியின் பிடித்த கையை விடாது கூறினான் ஹரி.
“எனக்கு எந்த பிரச்சினையுமில்லாமல் அனுபமாவோட சீமந்தம் இந்த வீட்டுல நடக்கணும். நீங்க ரெண்டு பேரும் பேசினது வச்சிப் பார்த்தா சொத்துப் பிரச்சினை போல தெரியாது. சொத்தை பிரிச்சி தனிக் குடித்தனம் போலாம் என்று இவங்க சொல்லுறதும். அத நீங்க மறுக்குறதும்…” என்று இனியன் கூறும் பொழுதே
அதிர்ந்தவாறே “மாமா…” என்ற நித்யகல்யாணி ஹரியின் கையை இறுக பற்றிக் கொண்டு விசும்ப ஆரம்பித்தாள்.
பேச ஆரம்பிக்கும் முன்பே இவள் அழ ஆரம்பித்தால் இனியன் எவ்வாறு பேசுவதாம்? இவள் நடிக்கிறாளா? நித்யாவை சந்தேகமாக பார்த்தான் இனியன்.
“நித்யா முதல்ல தொட்டத்துக்கெல்லாம் அழுறத நிறுத்து. முதல்ல அவரை பேச விடு” என்று ஹரி அதட்ட புடவை முந்தியால் கண்களை ஒற்றிக் கொண்டாள்.
“நீங்க சொல்லுங்க”
“சொத்தை பத்தி நீங்க எந்த கவலையும் பட வேண்டாம். எனக்கோ, என் தம்பிக்கோ எந்த சொத்தும் வேண்டாம். நான் எழுதியே கொடுத்திடுறேன். ஆனா பொறந்த வீடு என்று அனுபமாவும், நிலுபமாவும் இங்க வந்துட்டு போவாங்க அத தடுக்கக் கூடாது.
எங்கப்பா பிரச்சினை பண்ணுவார்த்தான். எவ்வளவு காலம் பண்ணுவார்? நீங்க லாயர் தானே சமாளிச்சுக்குவீங்க. நம்ம குடும்பத்துல எந்த பிரச்சினையும் வரக் கூடாது. அனுபமாவுக்கு இருக்குறது ஒரே அண்ணன். அது நீங்க மட்டும் தான். சொத்துனால அந்த உறவு பிரியக் கூடாது” என்றான்.
இனியனின் பேச்சில் அவன் உயர்ந்த குணம் புரிய, “நாங்க பேசினத எதேர்ச்சையா மட்டும் நீங்க கேட்கல, அரையும் குறையுமாகத்தான் கேட்டிருக்குறீங்கன்னு புரியுது. அதுவும் நல்லதுக்குத் தான். இப்போ நீங்க பேசினது வச்சி உங்கள பத்தி புரிஞ்சிக்கிட்டேன் மாப்ள” என்ற ஹரி புன்னகைத்தான்.
ஹரி சொன்னது இனியனுக்குத்தான் புரியவில்லை. “சொத்துப் பிரச்சினையில்லையா? வேறு என்ன? நான் ஏதாவது பண்ண முடியுமா?”
“ஆறு வருசமா நானும் முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். ரொம்ப பொறுமையா…” என்ற ஹரி பெருமூச்சு விட்டான்.
ஹரிக்கு சொல்ல விருப்பமில்லையோ? பிரச்சினை என்னவென்று அறிந்தால் தானே தீர்வு காணலாம். இதனால் வீட்டில் பிரச்சினை ஏதும் வருமா? இதுதான் இனியனின் சிந்தனைக்குள் ஓடலானது.
“சொல்ல முடியலையா? சொல்ல விருப்பமில்லையா?” இனியன் சட்டென்று கேட்டு விட்டான்.
இனியன் கேட்ட உடனே கூறும் ராகம் கிடையாது ஹரி. ஆனால் அவன் குணம் புரிந்த உடன் மனம் திறந்தான்.
“இவ என் சொந்த மாமா பொண்ணு. எனக்கு பதினாலு வயசுல அம்மாவும், அப்பாவும் இறந்துட்டாங்க. படிப்பு, காலேஜ், வேலை என்று இங்கயே இருந்துட்டேன். அம்மா பக்கத்து ஊருதான். அம்மா இறந்த பிறகு நான் ஊருக்கே போனதில்ல. தாத்தா உயிரோட இல்ல. பாட்டி படுத்த படுக்கையாக மாமா வீட்டுலதான் இருந்தாங்க. தாத்தா கூட ஒட்டுதல் இருந்தது, பாட்டி கூட இல்ல. அதனாலேயே போகல.
மாமா கல்யாணத்துக்கு கூப்பிட வந்திருந்தார். மூத்த பொண்ணுக்கு இல்ல. ரெண்டாவது பொண்ணுக்கு என்று பத்திரிகை கொடுத்தாரு.
“என்னய்யா சொல்லுற? உன் பொண்டாட்டி பொம்பள புள்ளைய பெத்துப்போட்டு செத்து போனப்போ பொட்ட புள்ளைய வச்சிக்கிட்டு என்ன பண்ண போறேனோ என்று கதறி அழுதியே. அப்போ உனக்கு ரெண்டாவதா உடனே கல்யாணம் பண்ணி வச்சதே நான் தானே. உன் மூத்த பொண்ணு என்ன ஆனா?” வடிவேல் கர்ஜனை குரலில் கேட்க,
“அத பத்தி ஏன் மச்சான் கேக்குறீங்க. அவ ஒரு ராசியில்லாதவ. பொறந்த உடனே ஆத்தாள முழுங்கிட்டா. அவ பேர்ல மில்லு ஆரம்பிச்சேன். தீப்பிடிச்சிருச்சு. வயல் வாங்கினேன் பயிரெல்லாம் நாசமா போச்சு. எதத் தொட்டாலும் நாசமா போகுது. சரி அவ தாத்தா பாட்டி வீட்டுலயாச்சும் விடலாம்னு அங்க விட்டா. இவ போன நேரம் பசு மாடு செத்துப் போச்சாம். அந்தம்மா இவள வந்து கூட்டிகிட்டு போகச் சொல்லிட்டாங்க. அவள போல ஒரு ராசி கெட்டவள எவன் கல்யாணம் பண்ணிப்பான். மாப்புள தேடி தேடி நானும் ஓஞ்சிப் போய்ட்டேன். அவளுக்கு அடுத்து இன்னும் ரெண்டு பொம்பள புள்ளைங்க இருக்காங்களே அதுங்க வாழ்க்கையை பார்க்க வேணாம்” என்றார் ஹரியின் மாமா நாராயணன்.
“அதுசரி உன் அக்கா மகன் இங்க இருக்க, இவன மாப்புள கேக்கணும் என்று உனக்கு தோணலையா?” வடிவேலா சட்டென்று கேட்டு விட, ஹரி அதிர்ந்து நின்றான்.
தன்னுடைய பெற்றோர் இறந்த பொழுது “அழாதே மாமா” என்று தன் கண்ணீரை துடைத்து விட்ட குட்டிப் பெண்ணை கண்ணுக்குள் கொண்டு வர முயற்சி செய்தவனுக்கு அவளது முகம் ஞாபகத்தில் வரவேயில்லை.
வடிவேல் மூடநம்பிக்கைகளை வெறுப்பவர். தன்னுடைய அண்ணன் உயிரோடு இருந்திருந்தால் கூட இந்த முடிவைத்தான் எடுத்திருப்பாரென்று கேட்டு விட்டார்.
ஹரியும் வடிவேல் வளர்ப்புதானே. அவனுக்கு இப்பொழுதே திருமணம் செய்துகொள்ள வேண்டுமா என்ற குழப்பம் ஒருபுறம், என்னதான் மாமா பெண்ணாக இருந்தாலும், அவளிடம் கேளாமல் இப்படி பெரியவர்கள் முடிவு செய்யலாமா என்ற குழப்பம் ஒரு புறம்.
ஆனால் நாராயனுக்கு வடிவேல் ஹரிக்கு யாரை பேசி முடிக்கலாமென்று கேட்டது புரியவில்லை. தனது மூத்த மகளான நித்யாவை இவர்கள் கேட்க மாட்டார்கள். இரண்டாவது பெண்ணைத்தான் கேட்டிருப்பார்கள் என்று நினைத்தார்.
ஆனால் அவருமே அறியாத விடயம் தனது மனைவிதான் மூத்த தாரத்தின் மகளின் இந்நிலைக்கு காரணம் என்று.
நாராயணின் மனைவி கனகா ஒருவகையில் கலைவாணியின் உறவும் கூட, அதனால் வடிவேலின் கொள்கை, குணம் என்று அறிந்திருந்தவள் வடிவேல் தான் நினைத்ததை நடாத்த விடமாட்டார் என்று கணவனை இந்தக் குடும்பத்தோடு நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டாள்.
என்னதான் சொத்து, செல்வாக்கு இருந்தாலும் இந்தக் குடும்பத்தில் பெண் கொடுக்காமல் வெளியில் கொடுப்பதே அதனால் தானே.
“அதுவா மச்சான். அது பொண்ணு ஆசைப்பட்டிருச்சு” என்றார்.
“நான் அந்தப் பொண்ண சொல்லல. உண்ட மூத்த பொண்ண சொல்லுறேன்” என்றார் வடிவேல்.
“அதுவா… அத கட்டினா என்ற அக்கா மகன் வாழ்க நாசமா போகும்” பதறினார் நாராயணன்.
ஹரிக்கே கோபம் வந்தது. “இங்க பாருங்க மாமா நான் கல்யாணம் பண்ணுறது உங்க மூத்த மகளைத்தான். உங்க ரெண்டாவது மகளோட கல்யாணம் என்னைக்கோ அன்னைக்கி தான் நம்ம கல்யாணமும் ஏற்பாடு பண்ணுங்க. என்ன? ஏது? என்று சித்தப்பா கூட பேசி முடிவு பண்ணுங்க” கறாராக கூறினான்.
நாராயனுக்கு வேறு வழியுமில்லை. மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தால் போதும் என்று ஊர் திரும்பினார்.
வீட்டுக்கு வந்து மனைவியிடம் விஷயத்தை கூறினால் நித்யாவின் சித்தி கனகா கத்த ஆரம்பித்தாள்.
“அறிவிருக்கா உங்களுக்கு. எப்பேர்ப்பட்ட குடும்பம் வடிவேல் அண்ணன் குடும்பம். நாளைக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிப்போச்சுன்னா நம்மளதான் குறை சொல்லுவாங்க”
கனகா என்ன கூறியும் நாராயணன் கேளாமல் திருமண ஏற்பாட்டை செய்யலானார்.
திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வடிவேலின் குடும்பம் நாராயணின் ஊருக்கு சென்று ஹரியின் தாத்தா பாட்டியின் வீட்டில் தங்கிருந்தனர்.
திருமண வேலைகள் அதன் போக்கில் நடந்து கொண்டுதான் இருந்தது. ஹரிக்கு தான் திருமணம் செய்யவிருக்கும் தனது மாமன் மகளை பார்க்க ஆவலாக இருந்தது. ஆனால் யாரிடம் கேட்பது? புரியாமல் ஊருக்குள் அங்கும் இங்கும் அலைந்து பார்த்தான், எந்த முன்னேற்றமும் இல்லை.
சரிதான் கல்யாணத்து இன்னும் இரண்டு நாட்கள் தானே இருக்கு என்று அமைதியாக இருந்தான்.
திருமணத்துக்கு ஒருநாள் இருக்க, இரவு மணப்பெண்ணான நித்யாவை காணவில்லையென்று வடிவேலுக்கு தகவல் வரவும் ஹரியை அழைத்துக் கொண்டு நாராயணனின் வீட்டுக்கு சென்றார்.
“என்ன மன்னிச்சிடுங்க மச்சான். அவ அப்படி பண்ணுவான்னு நினைக்கல. யாரையோ காதலிச்சு ஓடிபோய்ட்டா” என்று நாராயணன் வடிவேலிடம் மன்னிப்பு கேட்டவாறே அழுதார்.
“நான் அப்பவே சொன்னேன். அந்த ராசி கெட்டவள நம்ம வீட்டோட வச்சிக்கலாமென்று. இப்படி அவளுக்கு கல்யாணத்த பண்ணி வைக்க போய் அவ புத்திய காட்டிட்டா. அவ மட்டும் என் கைல கிடைக்கட்டும்” கனகா ஒரு பக்கம் பொருமிக் கொண்டிருந்தாள்.
“ஆமா எப்போல இருந்து நித்யாவை காணோம்? யாரு கடைசியாக பார்த்தது? ஓடிபோய்ட்டா என்று எப்படி முடிவு பண்ணீங்க? லெட்டர் ஏதாவது எழுதி வச்சிட்டு போய் இருக்காளா?” கேள்விகளை அடுக்கினான் ஹரி.
“என்ன தம்பி புரியாம பேசுறீங்க. வீட்டை விட்டு எங்கயும் போகாதவ எங்க போவா? யார் கூடயோ ஓடித்தான் போய் இருக்கா” என்றாள் கனகா. 
கனகா தன்னை தம்பியென்று அழைத்த விதத்திலையே அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லையென்று நன்றாகவே புரிந்தது. நித்யாவுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. கனகாதான் அவள் ஓடிப்போனதாக முடிவு செய்து பேசுவதாக வடிவேலுக்கு, ஹரிக்கும் நன்றாகவே புரிந்தது. இந்த வீட்டில் அவள் என்னவெல்லாம் அனுபவித்தாளோ? “எங்கடி இருக்க?” ஹரியின் மனம் பதறியது. 
திருமணம் பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டாளோ என்று சிலர் பேச, காதலனோடு ஓடி விட்டாளென்று சிலர் பேச அவளை தேடி இரவு முழுவதும் ஆட்கள் அலைந்தனர்.
விடியலை நெருங்கியும் அவளை கண்டு பிடிக்க முடியவில்லை. சந்தேகப்படும் படியாக யாரும் ஊருக்குள்ளும் வரவில்லை. யாரை சந்தேகப்படுவது? யாரிடம் விசாரிப்பது என்று புரியாமல் ஹரியும் வடிவேலும் ஒரு பக்கம் தேடியலைந்தனர்.
“எனக்கென்னமோ அந்த பொம்பள கனகா மேலதான் சந்தேகமாக இருக்கு சித்தப்பா… வீட்டுலையே எங்கயாச்சும் மறச்சி வச்சிட்டு ஓடிபோய்ட்டா என்று நாடகமாடுறாளோ?”
“அவ பேச்சு அப்படி பண்ணாலும் பண்ணி இருப்பான்னு தான் தெரியுது. அப்படி பண்ணா எத்தனை நாளைக்கு உள்ள பூட்டி வைக்க முடியும். கலைய உள்ள தேட சொல்லி தான் விட்டுட்டு வந்தேன்” என்றார் வடிவேல்
“ஆஹ்… சித்தப்பா… நீங்க வேற லெவல்” அந்த சூழ்நிலையிலும் சிரித்தான் ஹரி.
சில கணங்களளுக்கு பிறகு கலைவாணி அழைத்து நாராயணனின் வீட்டுக்கு வருமாறு கூற, இவர்களும் விரைந்தனர்.
அங்கு சென்றால் நித்யா அழுது கொண்டிருக்க, யாரோ ஒரு பெண் கத்திக் கொண்டிருந்தாள்.
அந்த பெண் சரஸ்வதி. நாராயணின் ஊரில் செல்வாக்கான குடும்பம் தான். காலையிலையே நித்யாவை இவள் தான் அழைத்து வந்திருக்கின்றாள். வந்ததும் வராததுமாக கத்த ஆரம்பித்தாள். என்ன? எது? என்று புரியாமல் கலைவாணி கணவனை அழைத்திருந்தாள்.
“யேன்மா நீ துரைபாண்டி சம்சாரம் தானே? எதுக்கு இங்க வந்து கத்திக் கிட்டு இருக்க? என்ன பிரச்சினை என்று சொன்னா தானே தெரியும்?” வடிவேல் சற்று குரலை உயர்த்தவும்
“வாங்க வாங்க இந்த அநியாயத்தை நீங்களே கேளுங்க. இந்த வீட்டு பொண்ணு ராசி கெட்டவ என்று ஊருக்கே தெரியும்”
“இங்க பாருங்க… வயசுல பெரியவங்களா இருக்கிறீங்க வார்த்தையை அளந்து பேசுங்க” என்றான் ஹரி.
“ஓஹ்… நீதான் இவளை கல்யாணம் பண்ணிக்க போறவனா?” என்றதும் விசும்பிக் கொண்டிருந்த நித்யா சட்டென்று அவனை பார்த்தாள்.
ஹரி முதன் முதலாக நித்யாவை பார்த்தான் “என்ன நடந்தது என்று சொல்லுறியா” நீ பேசினா தான் பிரச்சினை தீரும் எனும் விதமாக அவளை பார்த்தான்.
நித்யா அழுதவாறே நேற்று மாலை பின் பக்கம் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் யாரோ தன் மூக்கில் எதையோ வைத்து பொத்தியதாகவும் அதன் பின் சரஸ்வதியின் வீட்டில் கண்விழித்ததாகவும், ஒரு அறையில் தான் பூட்டிக் கிடந்ததாகவும், கதவை தட்டினால், கதவை திறந்த சரஸ்வதி அவளை அழைத்துக் கொண்டு இங்கே வந்து சத்தம் போடுவதாக கூறினாள்.
“என்ன என் பையன் உன்ன கடத்திட்டு வந்தான்னு சொல்லுறியா? கடத்திட்டு வந்தவன் வீட்டுலயா வச்சிருப்பான்? இவ என் பையன மயக்கி இன்னக்கி காலைல கோவில்ல கல்யாணம் பண்ண திட்டம் போட்டிருக்கா. என் பையன் ஒரு அப்பாவி” என்றாள் சரஸ்வதி.
 “எங்க உங்க பையன்” வடிவேல் கேட்க
“எதுக்கு அவனை கேக்குறீங்க? அவன் ஒரு அப்பாவி…”
“இங்க பாருங்கம்மா… நீங்க பழி சொல்லுறது எங்க வீட்டு பொண்ணு மேல. சம்பந்தப்பட்ட உங்க பையனும் இங்க இருக்கணும். இந்த வீட்டுல ரெண்டு கல்யாணம் நடக்க இருக்கு. எந்த பிரச்சினையும் இல்லாம கல்யாணம் நடக்கணும் என்றா என்ன நடந்தது என்று நாம தெரியணும்” என்ற வடிவேல் சரஸ்வதியின் மகனை அழைத்து வரும்படி ஒருவரை அனுப்பினார்.
கனகா சும்மா இல்லாமல் ராத்திரி பூரா இந்தம்மா வீட்டுல இருந்திருக்கா, அதுவும் மயக்கத்துல இருந்ததாக வேற சொல்லுறா. என்ன நடந்திருச்சோ என்று பேச, ஆளாளுக்கு பேச வேறு  செய்தனர்.
வடிவேல் அனைவரையும் சத்தம் போட்டு அமைதி படுத்தினார்.

Advertisement