Advertisement

அத்தியாயம் 22
அனுபமாவின் பரீட்ச்சையும் முடிய வடிவேலும், கலைவாணியும் வந்து வளைகாப்புக்காக அவளை ஊருக்கு அழைத்து சென்றனர்.
இனியனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. வீடே வெறுமையாக தெரிந்தது. எங்கு பார்த்தாலும் அனுபமாவின் விம்பம் தெரிந்து அவனை அதட்டுவது போலவும், மிரட்டுவது போலவும் காட்ச்சிகள் தோன்றி இம்சை செயலானது.
ஆறு மாதமாக தன்னோடு இருந்தவள் சட்டென்று இல்லையென்ற பிரிவிவை உடனே ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் தடுமாறுவதாக நினைத்தான்.
அனுபமா இல்லையென்று அவன் வரதராஜனின் வீட்டுக்கு செல்லவில்லை. ஆம் அது தந்தையின் வீடு. இனி இது தான் அவன் வீடு.
அன்னம் கூட “அதுதான் உன் பொண்டாட்டி ஊருக்கு போய் விட்டாலே சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ? வீட்டுக்கு வா” என்று அழைத்தாள். 
“இத்தனை நாள் சாப்பிட்டாயா? என்ன சாப்பிட்டாய் என்று கூட கேட்கல. வீட்டுக்கு வந்தாலும் உன் கையால சமைச்சி கொடுக்க மாட்ட. எனக்கு கல்யாணம் பண்ணி வச்சது வர்றவ எனக்கு ஆக்கிப் போடவா? நீ அப்பாக்கு அதை தான் செய்யிறியா? நீயே கல்யாணமாகி வரும் பொழுது சமைக்க ஆள கூட்டிட்டு வந்தவ தானே. பசிச்சா நான் ஹோட்டல்ல சாப்பிட்டுகிறேன். என் வீட்டை விட்டு நான் எங்கயும் வரமாட்டேன். வை போன” கடுப்பாகி கத்தி விட்டு அலைபேசியை துண்டித்தான் இனியன்.
அனுபமா சென்ற நேரம் இனியனை வீட்டுக்கு அழைத்துக் கொண்டால் பிள்ளையை அழைத்துக் கொண்டு அனுபமா தங்கள் வீட்டுக்குத் தானே வர வேண்டும். வந்து விடுவாள் என்று மகனின் மண்டையை கழுவலாமென்று அன்னம் நினைக்க, இனியனின் பேச்சில் அதிர்ந்தவள் கணவனிடம் புலம்பலானாள்.
வரதராஜன் என்றைக்கும், எதையும் சிந்தித்து திட்டம் போட்டு செயல்படுபவராயிற்றே “விடு அன்னம் எங்க போய்ட போறான்? நம்ம பையன் தானே. இதோ நினைச்ச நேரம் போய் பாக்குற தூரத்துல தானே இருக்கான். விட்டுப் பிடிக்கலாம்” என்றார்.    
அன்னத்திடம் கூறியது போல் இனியனுக்கு சாப்பாட்டுக்கு ஒன்றும் கஷ்டப்பட தேவையிருக்கவில்லை. அனுபமாவின் புண்ணியத்தில் எதையாவது சமைத்து சாப்பிடும் அளவுக்கு தெரிந்து வைத்திருந்தான்.
ஆரம்பத்தில் இவன் காய்களை மட்டும் வேண்டா வெறுப்பாக நறுக்கிக் கொடுத்தவன் தான். சில உணவின் வாசனையும், சமைக்கும் பொழுது அனுபமா வாந்தி எடுப்பதினாலும், அவளை அமர வைத்து இவன் என்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் போட வேண்டும் எவ்வளவு போட வேண்டும் என்று அனுபமாவிடம் கேட்டுக் கேட்டு ஓரளவுக்கு சமயலைக் கற்றுக் கொண்டான். இன்று அது அவள் இல்லாத நேரத்தில் பெரும் உதவியாக இருந்தது.
சிலநேரம் சமைத்து சாப்பிடுபவன், சிலநேரம் கடையில் வாங்கி வந்து சாப்பிடுவான். சிலநேரம் சாப்பிட தோன்றாமல் டீவியை வெறித்தவாறு அமர்ந்திருப்பான். 
“வளைகாப்புக்கு இரண்டு வாரங்கள் இருக்க எதற்காக இப்பொழுதே அனுபமாவை ஊருக்கு அழைத்து சென்றார்களோ. வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. வாராவாரம் சினிமாவுக்கு போவேன். இப்போ சினிமாவுக்கு போனாலும் அவ ஞாபகமாகவே இருக்கு. அவ இல்லாததுனால நீயும், நிலுபமாவும் வேற வீட்டுப்பக்கம் வர்றதில்லை” தம்பியை குறை கூறியவாறே புலம்பினான் இனியன்.
“என்னடா அண்ணி மேல அவ்வளவு லவ்வா? அத அவங்க கிட்ட சொன்னியா?” அண்ணனின் மனமாற்றம் கணிக்கு சந்தோஷத்தைக் கொடுக்க சட்டென்று கேட்டு விட்டான்.
“லவ்வுமில்ல ஒரு இழவுமில்லை. உளறாம போன வைடா” என்று அலைபேசியை அணைத்த இனியன் “ஆமா நாம எதுக்கு இப்போ அவளை பத்தியே யோசிச்சு கிட்டு இருக்கோம்?” என்று சிந்தித்தான்.
கணி கூடவே ஒரேயறையில் தங்கிருந்தவன்தான் கொஞ்சம் வளர்ந்த பின் தனியறையில் தாங்கிக்கொள்ள அது ஒருவித வெறுமையை கொடுத்தது. அதை விட அவன் போலீஸ் ட்ரைனிங்க்காக டில்லி சென்ற பொழுது வீடே வெறுமையாக தெரிந்தது. அது போல் தான் கூடவே இருந்த ஒருத்தி இல்லையென்ற பிரிவு தன்னை வாட்டுவதாக நினைத்தான் இனியன்.
“அவளைத்தான் உனக்கு பிடிக்காதே” அவன் மனம் கேலி செய்ய,
“அது அப்போ” என்று மெதுவாக கூறிக் கொண்டவனின் மனம் “இப்போ?” என்று கேட்க, அவனிடம் பதிலில்லை.
நிச்சயமாக அவள் மீது காதல் எல்லாம் இல்லை. அனுபமா நல்ல மகள். நல்ல சகோதரி. அதனால் தான் நிலுபமாவுக்காக என்னோடு வந்து இருக்கின்றாள். நல்ல மனைவியாகவும் இருக்க வேண்டியவள். இருக்கக் கூடியவள் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவனுக்கு ஜான்சியை சந்தித்திராவிட்டால், காதல் வயப்பட்டிருக்க மாட்டான். அப்படியிருந்தால் நிச்சயமாக அவன் வாழ்வில் அனுபமா தான் எல்லாமாகிப் போய் இருப்பாள் என்ற எண்ணம் மின்னல் போல் தோன்றி மறைந்தது.  
“இப்போ எதுக்கு நீ அவளை பத்தியே யோசிக்கிற?”  அவன் மனம் ஞாபகமூட்ட
“நான் எங்க அவளை பத்தி யோசிச்சேன். அவ வயித்துல இருக்குற என் குழந்தையை பத்திதான் யோசிக்கிறேன். இவ பாட்டுக்கு ஒழுங்கா சாப்பிடாம கொள்ளாம பிரசவத்துல சிக்கல் பண்ணா அது என் பொண்ணைத்தான் பாதிக்கும்” தனக்குள் முணுமுணுத்தான் இனியன்.
ஆம் கருவில் இருப்பதும் பெண் குழந்தை என்று ஸ்கேன் ரிப்போர்ட் கூற ரொம்பவே சந்தோஷமடைந்தான் இனியன். அந்த கணம் அவனையறியாமளையே அனுபமாவை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டிருந்தான்.
அதை சற்றும் எதிர்பார்க்காத அனுபமாவின் மேனி சிலிர்த்தது. அதிர்ந்து இனியனை நோக்க, அனிச்சையாக செய்த செயல் என்பதனால் அவனோ கிளம்பலாம் என்றிருந்தான்.
வீட்டுக்கு வரும் வழியெல்லாம் குழந்தையை பற்றி மட்டுமே பேசிய இனியனுக்கு தான் செய்தது கருத்தில் பதியவே இல்லை.
ஆனால் அனுபமாவின் இதயம் பந்தயக் குதிரையின் வேகத்தில் துடித்தது மட்டுமல்லாமல் மேனியில் சிறு நடுக்கம் ஓடிக்கொண்டிருந்தது.
தனிக் குடித்தனம் வந்ததிலிருந்து. இருவரும் ஒரேயறையில், ஒரே கட்டிலில் தான் தூங்குகிறார்கள். இனியன் தூக்கத்தில் கையையோ, காலையோ போட்டு விடக் கூடும் என்று எச்சிரிக்கையாக அவனிடமிருந்து விலகியே தூங்குவதாக அனுபமா எண்ணி இருந்தாள். 
அவன் தான் இவள் தூங்கிய பின் குழந்தையோடு உரையாடி, செல்லம் கொஞ்சுகின்றானே. அவனுக்கு இவளை தொடுவது ஒன்றும் புதிதல்ல. அதனால் கூட அவனது செயல் அவனுக்கு மிக சாதாரண செயலாகவும், வளமையானதாகவும் கூட இருந்திருக்கும்.
ஆனால் அனுபமாவுக்கு முதலிரவில் நடந்த சம்பவமும், அதன்பின் இனியன் பேசியவைகளும் காதுகளில் சதா ஒலித்துக் கொண்டே இருக்க, மனதளவில் அவள் இன்னும் அவனை ஏற்றுக்கொண்டிருக்கவேயில்லை. அவ்வாறிருக்க அவன் அணைப்பு பலநாள் அவள் ஏங்கிய வரம் கிட்டிய உணர்வை கொடுத்தாலும் அதை முழுமனதாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தாள்.
இந்த ஆறு மாதகாலமாக இனியன் அவளை தொட்டுப் பேசாமலுமில்லை. மருத்துவரிடம் செல்லும் பொழுது “பார்த்து பாத்திரம்” என்று கையை பிடித்து அழைத்தும் செல்வான். வண்டியில் அமர வைப்பான். அப்பொழுதெல்லாம் தோன்றாத ஒரு உணர்வை இந்த ஒரே ஒரு அணைப்பும் முத்தமும் கொடுத்திருந்தது.
இனியனின் செயல் அவனையும் மீறி நடந்தது என்று புரிய அனுபமாவும் அதை பற்றி பேசாமல் விட்டு விட்டாள். ஆனால் அவள் மனதில் அலையாய் எழும் எண்ணங்களை கட்டுப்படுத்த வழி தெரியாமல் பெரும் பாடுபட்டாள். 
வீட்டுக்கு வந்தவன் அனுபமாவிடம் கேட்டது “பெயர் ஏதாவது செலெக்ட் பண்ணி வச்சிருக்கியா?” என்றுதான்.
என்ன குழந்தையென்று அறியாமல் அனுபமா எந்த பெயரையும் யோசித்துப் பார்த்திருக்கவில்லை. இனியன் கேட்ட விதத்திலையே அனுபமாவுக்கு அவன் பெயர் தேர்வு செய்திருப்பது புரிந்தது.
ஒருவேளை ஜான்சியென்று வைக்க எண்ணியிருப்பானோ என்று அனுபமாவின் எண்ணம் செல்ல அது அவளுக்கே அபத்தமாக தோன்றியது.
ஆனாலும் அவனை சீண்டாமல் அவளால் இருக்க முடியவில்லை. “ஆமா செலெக்ட் பண்ணிட்டேன் இன்னும் கண்போர்ம் பண்ணல” என்றாள்.
“என்ன பெயர்?” ஆசையாகவும் ஆர்வமாகவும் கேட்டான் இனியன்.
“அத உன் கிட்ட சொல்லணும் என்ற அவசியமில்லை” என்ற அனுபமா உள்ளுக்குள் சிரித்தவாறு நகர,
“என்ன பேர்? என்ன பேர்?” என்று அவள் துப்பட்டாவில் தொங்காத குறையாக பின்னாலையே சென்று கெஞ்சலானான்.
அனுபமாவுக்கு அது மேலும் சிரிப்பை மூட்ட “ஏன் நீ எந்த பெயரும் செலெக்ட் பண்ணலையா? அவனை திரும்பிப் பார்த்து முறைத்தவாறே கேட்டாள்.
சட்டென்று அவள் திரும்பிக் கேட்பாளேன்று எதிர்பாராதவன் அவள் மேல் முட்டி நிற்க, அவள் வயிறு தான் இடித்தது.
வயிற்றின் மேல் கை வைத்து அடியேதும் படவில்லையே என்று பதறியவனை ஒரு நொடி அன்பாக பார்த்த அனுபமா விலகி நின்றாள்.
தான் தொட்டதால் தான் விலகி விட்டாள் என்று நினைத்த இனியன் “சாரி” என்றான்.
அவன் முத்தமிட்டதிலிருந்து அனுபமாவுக்குள் எதோ ஒரு மாற்றம் நிகழ்ந்துக் கொண்டிருக்க, அவனது நெருக்கம் இம்சிக்கவே விலகி நின்றாள். வயிறு முட்டியதால் தான் சாரி கேட்கின்றான் என்று இவள் நினைத்து பதில் கூறாமல் நகர முனைந்தாள்.
“அனு… என்ன பேர் என்று சொல்லாமலே போறியே” கொஞ்சம் கமறிய குரலில் தான் கேட்டான்.
அக்குரலில் இதயம் உருகி சட்டென்று நின்றவள் “இல்ல. நான் எந்த பெயரும் செலெக்ட் பண்ணல” என்றாள்.
“நிலுபமா கூட சேர்ந்து ஏதாவது பெயர் செலக்ட் பண்ணி இருப்ப என்று நினச்சேன்” அனுபமாவின் ஆசைக்கும், கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியே கேட்டான்.
“இல்ல. நான் எந்த பெயரும் யோசிக்கல. நீங்க ஏதாவது பெயர் யோசிச்சு வச்சிருக்கிறீங்களா?” கோபத்திலும், வெறுப்பிலும் அவனை ஒருமையில் பேசிக் கொண்டிருந்தவள் அவளையறியாமளையே மரியாதை பன்மைக்கு மாறியிருந்தாள். அது அவளுள் ஏற்பட்ட மாற்றத்தினால் மட்டுமல்ல. அவன் குரலில் இருந்த ஏக்கமும் முகத்தில் தோன்றிய பாவனையும் தான் அவளை பழையபடி பேச வைத்திருந்தது.
அவளின் பேச்சில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனிக்கும் மனநிலையில் இனியன் இல்லை. “யுவராணி. எப்படி இருக்கு? நம்ம குட்டி இளவரசிக்கு பொருத்தமான பெயர் தானே. நம்ம பொண்ண ராஜகுமாரி போல வளர்க்கணும். உன்ன போல. உங்கப்பா உன்ன வளர்த்தாரே. அதே போல. இத விட பொறுத்தமான பெயர் எனக்குத் தோணல” அனுபமா கேட்ட உடனே தான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பெயரைக் கூறி விட வேண்டும். அதை அவள் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்று  மனதில் தோன்றியதை பேசினான்.
இனியன் பேசும் பொழுதும் கூட என் பொண்ணு, என் குழந்தை என்று கூறவில்லை. நம்ம பொண்ணு என்றுதான் கூறினான். அதையும் அவனறியாமல் மனதிலிருந்துதான் கூறினான்.
அனுபமாக்கோ ஆச்சரியம். பெயர் லிஸ்ட்டே கையில் வைத்திருப்பான் என்று பார்த்தால் ஒரேயொரு பெயரை மட்டும் தேந்தெடுத்திருக்கின்றான். அது இது என்று என்ற எந்த குழப்பமும் கிடையாது. குழந்தைக்கு இதுதான் பெயர் என்று முடிவே செய்து விட்டான். அது மட்டுமா? தன்னை போல் வளர்க்க வேண்டும் என்றதில் அவளுக்கு தந்தையை நினைத்து பெருமைதான். ஆனால் ஆசையாசையாக அவர் வளர்த்த மகளின் வாழ்க்கை இவனால் இவ்வாறு இருக்கிறதே என்ற கோபம் அக்கணம் அவளுள் எழுந்தது. இவனிடம் போய் இந்த பெயர் வேண்டாம் என்று கூறினால் என்ன ஆகும்? மனதளவில் ரொம்பவும் கஷ்டப்படுவான்.
அவனை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் அனுபமாவுக்கு இந்த விஷயத்தில் எனோ அவனை கஷ்டப்படுத்த தோன்றவில்லை. ஆனால் அவள் மனதில் இருக்கும் காயங்களின் கீறல் நெஞ்சை அறுக்க, எதுவும் பேசாமல் அறைக்கு செல்லலானாள்.
“ஏன் ஒண்ணுமே சொல்லாம போற? பெயர் பிடிக்கலையா?” புரியாது பார்த்தான் இனியன். 
“இறந்தவர்களுக்கு கொல்லி வைக்கிறத விட்டுக் கொடுப்பங்களா? மாட்டாங்கல்ல அது மாதிரி தான் பெயர் வைக்கிறதும் உனக்கு நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்” கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சீறியவள் கதவை சாத்தி விட்டு அழ ஆரம்பித்தாள்.      
அனுபமா மறுத்தது கூட இனியனுக்கு கவலையோ, கோபமோ வரவில்லை. அவள் பேசிய விதம் ஆத்திரம் ஆத்திரமாக வர “அடியேய் அனுபமா உனக்கு வேற உதாரணமே கிடைக்கலையா? நீ என் பொறுமையை ரொம்பதான் சோதிக்கிற. இன்னும் குழந்தையே பொறக்கல. கருமம் கருமாதி என்று பேசிகிட்டு இருக்க, வந்தேன்னா பல்லு மொத்தமும் பேர்ந்துடும்” கதவை தட்டியவாறே கத்தினான் இனியன்.
தான் உயிரோடு இருக்கும் வரை இனியனோடுதானே வாழ்ந்தாக வேண்டும் என்று அனுபமாவும் நடந்ததை மறந்து இயல்பாக இருக்க முயல்வதும் அவளையும் மீறி இவ்வாறு பேசி வைப்பதும் இவர்களுக்கிடையில் வழமைதான்.
அனுபமா இவ்வாறு பேசுவதினாலையே அவள் கோபம் இன்னும் குறையவில்லையென்று புரிந்துக் கொண்ட இனியன் அவளிடம் மன்னிப்புக் கேட்பதை பற்றி சிந்திக்கவேயில்லை. அவள் கோபம் தணிந்த பின் மெதுவாக மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம். 
மன்னிக்கும் மனநிலைக்கு அவள் வந்த பின் மன்னிப்புக் கேட்டால் அவன் குழந்தையை பிரிய வேண்டியதில்லை.
அதுதான் அவள் தங்கைக்காக அவள் உன்னோடு வந்து வாழ்கின்றாலே இப்பொழுது மன்னிப்புக் கேட்டாலும் அவள் உன்னோடு வாழ்வாள். பிறகு கேட்டாலும் அவள் உன்னோடுதான் வாழ்வாள். எதுக்கு குழந்தையை பிரிய வேண்டும் என்று முட்டாள் தனமாக நினைக்கின்றாய்? என்று அவன் மனம் கேட்க,  
நிச்சயமாக இல்லை. இப்பொழுது கோபமாக இருக்கின்றாள். என் மீது கோபத்தை காட்டவென்றும், அவள் மனதில் இருக்கும் கோபத்தை தீர்த்துக்கொள்வென்றும் கூடவே இருப்பாள். இந்த நேரத்தில் உண்மையை கூறி மன்னிப்புக் கேட்டால் தண்டனை கொடுப்பதாக எண்ணி குழந்தையைத்தான் பிரிக்க நினைப்பாள்.
கோபத்தில் அவள் எந்த மாதிரியான முடிவையும் எடுக்கக் கூடும். படிப்பை முடித்த உடன் ஊருக்குச் சென்று விட்டால் என்னால் வேலையை விட்டு அவள் வீட்டில் சென்றிருக்கவா முடியும்? எத்தனைநாள் இருக்க முடியும்? 
என்ன? ஏது? என்ற கேள்விகளோடு கணி மற்றும் நிலுபமாவின் வாழ்க்கையிலும் பிரச்சினை வரலாம் என்றெண்ணியே அமைதியாக இருந்தான்.
அவ்வாறு இருந்தவனுக்கு அனுபமா இல்லாத வீட்டில் கூட இருக்க முடியாமல் வளைகாப்புக்கு ஒரு வாரம் இருக்கும் பொழுதே அவளது ஊருக்கு பயணப்பட்டான்.   
வந்ததும் வந்து விட்டான் வீட்டுக்கு எவ்வாறு செல்வது என்று முழித்தான். மனைவியென்று அனுபமாவோடும் அன்பான பேச்சு வார்த்தையில்லை. “அனுபமா…” என்று அவள் பெயரை அழைத்துக் கொண்டு செல்லவா முடியும்?
மாமனார் வடிவேலோடும் ஒட்டுதல் இல்லை. அந்த வீட்டில் இவனோடு நன்றாக பேசும் ஒரே ஜீவன் நிலுபமா ஒருத்திதான் அவளும் கணியோடு இருக்கின்றாள். அவள் மட்டுமா ஹரியும் நன்றாக பேசியவன் தானே இன்று சென்றால் முகம் கொடுத்துக் கூட பேசுவானோ தெரியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் கணியையே அலைபேசியில் அழைத்தான்.
“ஏன்டா பொண்டாட்டிய பார்க்க போக, துணைக்கு ஆள் தேடின மொத புருஷன் நீயாதான் இருக்கும். நீ வாசலுக்கு போ… ராஜமரியாதை கிடைக்கும். எனக்கு ஸ்டேஷன்லேயே நிறைய வேலை இருக்கு. உன் பஞ்சாயத்தை கவனிக்க நேரமில்லை” என்று அலைபேசியை  துண்டித்து விட்டான்.
“இவன் சொல்லுரதப் பார்த்தா அடிப்பாங்க போல இருக்கே…” புலம்பியவாறே இனியன் அனுபமாவின் வீட்டையடைந்தான். 
இனியன் வரும் பொழுது ஹரியும், வடிவேலும் வீட்டில் இல்லை. முற்றத்தில் பாயை விரித்து மிளகு, மிளகாய் என்று காயபோட்டவாறு கலைவாணியோடு சேர்ந்து இரண்டு பெண்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்க, அதில் ஒருவர்தான் இனியனக் கண்டு “அக்கா மாப்பிள வராங்க” என்றார்.
செய்யும் வேலையை அப்படியே போட்டு விட்டு இனியனை வரவேற்ற கலைவாணியும் உள்ளே அழைத்து சென்றவாறே “ஏய் மாலா பின்னாடி மணி இருப்பான் நல்ல இளநீரா பார்த்து வெட்டிக் கொண்டு வரச் சொல்லு” என்றவள் இனியனிடம் நலம் விசாரிக்கலானாள்.
கலைவாணியோடு பேசிக் கொண்டிருந்தாலும் கண்களால் வீட்டை அளந்தான் இனியன்.
விழாவுக்கு இன்னும் ஒரு வாரம் இருந்த நிலையில் வீடு விழாக்கோலம் பூண்டது போல் ஆட்கள் அங்கும் இங்கும் ஓடியாடி வேலை பார்த்தவண்ணம் இருந்தனர்.
இனியன் அனுபமாவைத்தான் தேடுகின்றானோ என்று “அனு மாடில அவ அறைலதான் இருக்கா மாப்புள. நீங்க காலை உணவை சாப்பிட்டுட்டே மாடிக்கு போறீங்களா? இல்ல குளிச்சிட்டு வந்து சாப்பிடுறீங்களா? சாப்பாட்டை அறைக்கே அனுப்பவா?”
“அனு சாப்பிட்டாளா?” அவள் தான் ஒழுங்காக சாப்பிடுவதில்லையே.
புன்னகை பூத்த முகமாக “இப்போதான் கீழ வந்து சாப்பிட்டு மாடியேறினா”
“எதுக்கு கீழே எல்லாம் வர்றா. கால் வேற வீங்கியிருக்கு” கொஞ்சம் கோபமாகவே கேட்டான் .
இனியன் தன் நலனில் அக்கறை செலுத்துகின்றானா? என்று இதை அனுபமா கேட்டிருந்தால் மயக்கம் போட்டே விழுந்திருப்பாள். அடுத்த கணம் சுயநினைவுக்கு வந்து எல்லாம் வயிற்றில் இருக்கும் அவன் குழந்தைக்காக என்பாள்.  
“ஒரே இடத்துல இருக்கக் கூடாது மாப்புள. நல்லா நடந்தால் தான் பிரசவம் இலேசாகும். இல்லனா ஆபரேஷன் பண்ணுற அளவுக்கு சிக்கலாகும்” தனக்கு தெரிந்த அளவுக்கு புரிய வைக்க முயன்றாள் கலைவாணி.
தான் பார்த்த சினிமாக்களில் வந்த காட்ச்சிகளை ஓட்டிப் பார்த்தவன் “நடக்கலாம் அத்த படிதான் ஏறக்  கூடாது. தவறி விழுந்தா என்ன ஆகும்?” அவன் அதை குழந்தைக்காக மட்டும் கூறினானா? அனுபமாகும் சேர்த்து கூறினானா தெரியவில்லை. கூறியவன் அனுபமாவை திட்ட, மாடிப்படிகளில் ஏறலானான்.
அவன் பதிலில் திகைத்தாலும் அவனுக்கு அனுபமாவின் மேல் அவ்வளவு அக்கறை என்று அனைவருடனும் கூறி சிலாகிக்கலானாள் கலைவாணி.
இனியன் அனுபமாவின் அறைக்குள் நுழைய அனுபமா கட்டிலில் சாய்ந்தவாறு காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அதை கவனிக்காமல் “என்ன நீ, நான் இல்லனதும் இப்படி வீட்டுக்கு வந்து கொஞ்சம் கூட கவனமில்லாம இருக்க, இப்படித்தான் படில தாம், தூம்னு குதிச்சிகிட்டு இறங்கி ஓடுவியா?”
வளைகாப்புக்கு இன்னும் நாளிருக்க, இனியனை அன்று எதிர்பார்க்காத அனுபமா அவனைக் கண்டு சட்டென்று எந்திரிக்க போக, காதிலிருந்து ஹெட்போனும் கழன்று விழுந்திருந்தது. இனியனும் அவளருகில் ஓடியிருந்தான்.
“இப்படித்தான் கொஞ்சம் கூட கவனமில்லாம நடந்துபியா? நான் என்ன பேயா? பிசாசா?”
“அதுக்கும் மேல” என்றவள் ஹெட்போனோடு கையிலிருந்த அலைபேசியையும் கட்டிலின் மீது வைக்கும் பொழுதுதான் இனியன் அதை கவனித்தான்.
“நல்லவேளை நான் பேசினது கேட்கல இல்லனா அதுக்கும் குதிப்பா” என்ற மைண்ட் வாயிசை மட்டம் தட்டியவன் “என்ன பாட்டுக் கேக்குற?” என்று மிகமிக சாதாரணமாக கேட்டான்.
அவன் கேள்விக்கு பதில் கூறாமல் “நான் வீட்டுல நிம்மதியா இருக்குறது உனக்கு பிடிக்கலையா? இங்கயும் வந்துட்டியா? என்னதான் வேணும் உனக்கு?”
இந்த ஒருவாரகாலமாக அனுபமா இல்லாமல் தனிமையில் இனியன் எவ்வளவு புலம்பினானோ அதேபோல அனுபமாவும் இரவில் தூக்கம் வராமல் தவித்தாள்.
வீட்டுக்கு வந்த அன்று அப்பாவிடம் செல்லம் கொஞ்சினாள். அம்மாவோடு எல்லா வேலைகளையும் பார்த்தாள். கிட்டத்தட்ட எட்டு, ஒன்பது மாதங்கள் கடந்து வீட்டுக்கு வந்தவள் எதையெல்லாம் இழந்தாலோ அதையெல்லாம் செய்தாள். ஆனால் இரவில் தூக்கம் மட்டும் வரவில்லை. அது ஏன் என்று மட்டும் அவளுக்கு புரியவுமில்லை.
இது அவள் வீடு. அவள் அறை. நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த அறையில்தான் தூங்கி விழித்தாள். இன்று தூக்கம் இன்மையின் காரணம் புரியாமல் முழித்தாள்.
இனியன் முத்தமிட்டது வேறு அடிக்கடி கண்ணுக்குள் வந்து நிற்க, தாங்கள் ஒரு அழகான குடும்பமாக வாழ மாட்டோமா என்ற ஏக்கமும் மனதில் எழ ஆரம்பித்திருந்தது. 
“ஜான்சியை காதலிக்கும் அவன் நிச்சயமாக உன்னை ஒருநாளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. வீணான ஆசைகளை வளர்த்துக் கொள்ளாதே” என்று அவள் மனம் தூற்றலானது.
தான் இல்லாமல் இனியன் சென்னையில் நிம்மதியாக இருப்பதாக அவனை மனதுக்குள் வசைபாடிக் கொண்டிருத்தவளும் அறியவில்லை. வசைபாடவாவது அவனை அவள் நினைவு கூர்கின்றாளென்று.
திடிரென்று அவன் வந்து நின்றதும் “ஓஹ்… அவன் குழந்தையை பிரிந்து இருக்க முடியாமல் வந்து விட்டானா? ரொம்பதான் பண்ணுறான்” தனக்கு மட்டும்தான் அவன் பிரிவு தொல்லையாக இருக்கிறது அவனுக்கு என்றுமே அவ்வாறு இறுக்கப் போவதில்லையென்ற கோபத்தைத்தான் வார்த்தைகளாக்கி அவன் மேல் வீசியிருந்தாள்.
அவள் கோபம் இனியனுக்கு புரிந்தாலும் அதன் காரணத்தை உணர்ந்தானில்லையே. அவள் கோபத்தை தூண்டவேன்றே இவனும் “நான் என் பொண்ண பார்க்க வந்தேன்” என்றான்.
அனுபமாவின் கோபம் புசுபுசுவென ஏற அருகிலிருந்த தலைக்கணையாலையே அவனை அடிக்க ஆரம்பித்தாள். 
அவள் செய்கை சிரிப்பாக இருக்கவே அவளை தடுக்கும் எண்ணமெல்லாம் இனியனுக்கு இல்லை.
கதவு திறந்து இருக்கவே ஹரி இவர்களை பார்த்தவாறுதான் கடந்து சென்றான். அவன் முகத்திலும் புன்னகை.
ஹரியை பார்த்த பின்தான் அனுபமா அடிப்பதையே நிறுத்தினாள்.
“என்னாச்சு?” என்று இனியன் கேட்க,
எதோ பார்க்கக் கூடாததை பார்த்தது போல் முகத்தை வைத்துக் கொண்டு  “ஹரிண்ணா பார்த்துட்டாங்க” என்றாள்.
“அவன் ஒரு பொண்டாட்டிதாசன். அவன் ரூம்ல அவன் இதைவிட அவன் பொண்டாட்டிக்கு கூட கொஞ்சிக்கிட்டு இருப்பான்” பாவம் இனியன் தனிக் குடித்தனம் வந்ததிலிருந்து ஜான்சி என்ற ஒருத்தியை மறந்துதான் போய் இருந்தான்.  
“ஓஹ்… உனக்கு இது கொஞ்சலா தெரியுதா?” என்றவள் அவனை எதனால் அடிக்கலாமென்று சுற்றிலும் பார்க்க,
“இன்னைக்கு இது போதும். வேணாம்… அழுத்துடுவேன்” இனியன் வடிவேல் குரலில் கூற, அனுபமா சிரிக்க ஆரம்பித்தாள்.  

Advertisement