Advertisement

அத்தியாயம் 21
இனியன் வந்து சென்ற பின் நிலுபமா கணியோடு சண்டை போட்டவள் தான் தேனிலவுக்கு வர மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.
கலைவாணியை வைத்தே அவளை மிரட்டியவன் தேனிலவு குன்னூர் சென்று வந்தான்.
ஹரியிடம் மட்டுமல்லாது அனுபமாவிடமும் பேசி நிலுபமாவுக்கு என்ன பிடிக்கும், எங்க செல்ல பிடிக்கும் என்று கேட்டுத்தான் அழைத்து சென்றிருந்தான்.
குன்னூர் சென்ற பின் அவள் மனநிலை சற்று மாறியிருந்தது. முறைத்துக் கொண்டிருந்தவள் ஆச்சரியமாக எல்லாவற்றையும் பார்த்தவாறு கணியோடு பகிர்ந்து கொள்ளலானாள். இவனும் சிரித்தவாறு கேட்டுக் கொண்டிருந்தான்.
ஊர் திரும்பிய உடனே திரும்பவும் நிலுபமா கணியை முறைக்க ஆரம்பிக்க, “பேசாம ட்றான்ஸ்பர் வாங்கிக் கொண்டு அங்கேயே போய்டலாம் என்று நினைக்கிறன். நீ என்ன சொல்லுற?” நாடியை தடவி இவன் யோசிக்க,
“நிஜமாவா?” கண்களை விரித்தவள் “பொய் சொல்லாத” என்று மீண்டும் முறைத்தாள்.
“உனக்காக இது கூட பண்ண மாட்டேனா? என்ன நீ என் கூட ப்ரேன்ட்லியா பேசணும். இப்படி அடிக்கடி  முறைக்கக் கூடாது. ஓகே வா…” ஒப்பந்தம் போட…
“ஏமாத்த மாட்டியே” யோசனையாக தலையசைத்தாள்.
“நீ காலேஜ் முடி போய்டலாம்” வாக்கு கொடுத்தான் காவல்காரன்.
அதன்பின் நிலுபமா அவனோடு தோழமையாகத்தான் பழக ஆரம்பித்தாள்.
அன்னமும் அவளோடு நல்லமுறையில் தான் நடந்துக் கொண்டாள். வரதராஜன் கூறிய காரணம் ஒரு பக்கம் இருக்க, நிலுபமாவை நல்லமுறையில் நடாத்தா விட்டால் இனியனை போல் தாங்களும் தனிக் குடித்தனம் செல்வதாக கணி வேறு அன்னத்தை மிரட்டி வைத்திருந்தான்.
என்னதான் வார்த்தைகளை தேள் கொடுக்காக்கி பேசினாலும் பெத்த பிள்ளைகளின் மீது அன்னத்துக்கு அன்பில்லாமல் போகுமா? இனியன் கூட மிரட்டுவதோடு விட்டு விடுவான். கணி சொல்வதை செய்து விடுவான் என்று ரொம்பவும் அடக்கியே வாசித்தாள்.
வடிவேலும் மகளை அழைத்து குழந்தை தனமாக ஏதாவது பேசி வைக்காதே, செய்தும் வைக்காதே அது உன் அக்காவின் வாழ்க்கையை இன்னும் சிக்கலாகும். என்ன நடக்கிறது என்று புரிந்து நடந்து கொள் என்று அறிவுரைக் கூறினார்.
நிலுபமா அன்னத்தோடு சண்டையெல்லாம் போடவில்லை. அன்பாக பேசி கொஞ்சிக் குலாவவுமில்லை. என் அக்கா என்று உன்னை ஏற்றுக்கொள்கிறாளோ அன்று உன்னோடு சுமூகமாக பேசுகிறேன் அதுவரை நீ என் அக்காவுக்கு மட்டும் மாமியார் என்பது போல் எட்ட நின்றுதான் பழகினாள்.
கணி மற்றும் நிலுபமாவின் திருமண வரவேற்பு முடிந்து விருந்தினர்கள் எல்லோரும் சென்ற பின் வள்ளி வந்து அன்னத்தைக் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள்.
“அத்த அப்பா என்ன ரூம்ல அடச்சீ வச்சிட்டீரு அத்த. என்ன வெளியவே விடல அத்த. பன்க்ஷனுக்கு நான் வந்தா பிரச்சினை பண்ணுவானு சொல்லி இப்படி பண்ணிட்டாரு அத்த. என்னனு கேளு அத்த.
நான் தானே உன் மருமக. அவ யாரு? எங்க இருந்து வந்தா? அவளெல்லாம் உனக்கு மருமகளா? அவளை வீட்டை விட்டு துரத்து அத்த” என்றாள்.
வள்ளியை சமாதானப்படுத்தாமல் “உன்ன ரூம்ல பூட்டி வைக்க சொன்னதே நான் தான்” என்றாள் அன்னம்.
அவளை அதிர்ச்சியாக வள்ளி ஏறிட, “என்ன பாக்குற? என் பையன் வேற மதத்து பொண்ண காதலிக்கிறது தெரிஞ்சப்போ. நீதானே சொன்ன ரூம்ல பூட்டி வைங்க. வெளிய இருந்தா ஏதாவது திட்டம் போட்டு கல்யாணத்த நிறுத்தப் பார்ப்பான்னு.
என் சின்ன மகன் ரிஷப்ஷனுல நீ ஏதாவது குளறுபடி செய்யக் கூடாது என்று உன்ன ரூம்ல வச்சி பூட்ட சொன்னதே நான்தான். உன் சாப்பாட்டுல தூக்க மருந்து வேற கலந்து கொடுக்க சொன்னேன். ஆனா நீ சாப்பிடல. சாப்பிட்டு நிம்மதியா தூங்கி இருக்கலாம். அத விட்டுட்டு. கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி. அழுது புலம்பி வீணா எனர்ஜியை வேஸ்ட் பண்ணிட்ட”
“என்னத்த பக்கா சினமா வில்லி மாதிரி பேசுற?” ஏதாவது பிரச்சினை என்றால் புலம்ப மட்டுமே தெரிந்த அன்னமா இவள்? தான் சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை என்று நினைத்தால் இவள் அனைவரையும் ஆட்டுவிப்பவள் போல் தெரிகிறது. இதுநாள்வரை இப்படியொரு முகத்தை எங்கே மறைத்து வைத்திருந்தாள்?
“எங்கப்பா இதுக்கு எப்படி சம்மதிச்சாரு?” உள்ளுக்குள் கனன்றாலும் அடக்கியவாறு கேட்டாள் வள்ளி.
“நீ அவனுக்கு பொண்ணு, நேத்து வந்தவ. நான் அவனுக்கு அக்கா. அக்கா மட்டுமில்ல, அம்மாவும் கூட. நான் சொன்னா எதையும் செய்வான். தற்கொலை செய்யச் சொன்னா கூட செய்வான் பாரேன். உன் அப்பா உசுரு உனக்கு முக்கியம் என்றா மாமா உனக்கு அமேரிக்கா மாப்பிள்ளையை பார்த்து வச்சிருக்காரு அமைதியா கழுத்த நீட்டித்து அமெரிக்கால போய் குடித்தனம் நடத்துற புரியுதா? உள்ள போய் சாப்பிடு” மிரட்டவோ அதட்டவோ இல்லை. அன்னம் ரொம்பவே அமைத்தியான குரலில் பேச அன்னத்திடம் அப்படியொரு பரிமாணத்தை பார்த்திராத வள்ளி மிரண்டு விட்டாள்.
சாப்பாட்டில் விஷம் கூட வைத்திருக்கக் கூடும் என்று அஞ்சியவள் “இல்ல வேணாம் நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்று ஓடி விட்டாள். 
ராஜகோபால் இழுத்து சென்ற வள்ளி வீட்டில் உள்ள பொருட்களை போட்டுடைத்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவும் அவளை பேசி சமாதானப்படுத்தி வைத்திருந்தார்.
அவளும் நிலுபமாவை துரத்தி விட்டு தந்தை தனக்கு கணியை திருமணம் செய்து வைப்பார் என்ற ஆவலில் காவல் நிலையம் சென்று கணியை சந்திக்கலானாள். கடுப்பான கணி அன்னத்தை மிரட்ட, அன்னம் வளமை போல் வரதராஜனிடம் புலம்பினாள்.
தன்னுடைய அரசியல் கனவு வள்ளியால் சீர்குலையக் கூடாதென்று வள்ளியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த வரதராஜன் வீட்டுக் காவலில் வைத்தார்.  
அதை அன்னத்திடம் கூறியவர் விழா முடிந்த பின் வள்ளி வருவாள் வந்தால் எவ்வாறு பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். இல்லாவிடில் அன்னத்திடம் செல்லம் கொஞ்சவென அடிக்கடி வந்து நிலுபமாவை வம்பிழுக்கக் கூடும். அதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போகலாம்.
அது மட்டுமா? குடும்பப் பிரச்சினையை தீர்த்துக் கொண்டேயிருந்தால் தான் எவ்வாறு அரசியலில் கவனம் செலுத்துவது. அதனால் சிந்தித்து வள்ளி அதிகமாக பாசம் வைத்திருக்கும் ராஜகோபால வைத்து மிரட்டுமாறு கூறியிருக்க, கணவன் சொல்லே மந்திரமென்று அன்னமும் அவ்வாறே செய்திருந்தாள். அதன்பின் வள்ளி அத்தையின் வீட்டுப்பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. 
இந்த மூன்று மாதமாக கணி மற்றும் நிலுபமாவின் வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தது அதற்கு முக்கியமான காரணம் நிலுபமா அடிக்கடி அனுபமாவின் வீட்டுக்கு வந்து செல்வதுதான்.
நிலுபமாவும், கணியும் அடிக்கடி இனியனின் வீட்டுக்கு வந்து செல்வதால் அனுபமா ரொம்பவும் சந்தோசமான மனநிலையில் இருந்தாள். அவர்கள் வந்தால் தான் இனியனும் சற்று எல்லாவற்றையும் மறந்து அவர்களோடு ஒன்றிவிடுவான். அவர்கள் சென்ற பின் மீண்டும் அவன் நெஞ்சில் பாரம் ஏறிக்கொள்ளும்.
இனியன் இறுகிய முகத்தோடுதான் வளம் வந்தான். அனுபமா என்னதான் கோபப்பட்டு பேசினாலும், அவனை சீண்டுவது போல் பேசினாலும் அமைதியாக கடந்து போனான். அனுபமா அவனை ரொம்பவும் சீண்டவுமில்லை. அவன் தான் சுமக்கும் பிள்ளையின் மீது வைத்திருக்கும் பாசத்தை நினைக்கும் பொழுது கொஞ்சம் பொறாமையில் சீண்டுவாள். அதே பாசத்தைக் கண்டு வியந்து பல நேரம் அவனை மன்னித்தும் விடுவாள். சில நேரங்களில் தான் அவளையும் மீறி நடந்தவைகள் ஞாபகத்தில் வந்து கோபத்தில் கத்தி விடுவாள்.   
“இதுநாள் வரை தான் ஜான்சியோடு சேர முடியாமல் போனதற்கு முக்கியமான காரணம் அனுபமா திருமணத்தை நிறுத்தாதது என்று அவளை குற்றம் கூறிக் கொண்டிருந்தேன். என்னுடைய காதலுக்கு நான் தான் போராடியிருக்க வேண்டும். அதை விடுத்து அலைபேசி வழியாக திருமணத்தை நிறுத்துமாறு அனுபமாவிடம் கூறுவது எந்த விதத்தில் நியாயம்? தவறே செய்யாத அவளுக்கு எவ்வளவு பெரிய தீங்கை இளைத்து விட்டேன். அப்படியொரு தவறை செய்யாமலிருந்தால் இன்று ஜான்சியோடு சென்று அமெரிக்காவில் வாழ்ந்திருப்பேன். அவ்வாறு செய்திருந்தால் இங்கு அனுபமா எந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று கொஞ்சமாவது சிந்தித்துப் பார்க்காமல் சுயநலமாக முடிவெடுக்க இருந்தேனே”   
அனுபமாவைக் காணும் கணமெல்லாம் குற்ற உணர்ச்சியில் தவித்தான் இனியன்.
“என்னாச்சு இவனுக்கு ரொம்ப அமைதியாகிட்டான். ஜான்ஸியோட ஞாபகம் வந்திருக்குமோ? இருக்கும். இருக்கும். அவனிடம் கேட்கவா முடியும்? ஆறுதல் சொல்லவா முடியும்? நானா சொன்னேன் என் கூட வந்து தனிக் குடித்தனம் இருக்கச் சொல்லி. அவனுக்கு அவன் குழந்தைதான் முக்கியம் என்றால், அவனாகத்தான் மீண்டு வர வேண்டும்” அனுபமாவும் என்ன? ஏது? என்று கேட்கவில்லை.
வளமை போல் வீட்டு வேலைகளை செய்பவன் வழமையை விட அவளிடம் பேச்சைக் குறைத்தான். பேசினால் அழுது விடுவானோ என்ற அச்சம் தான். அழுது மன்னிப்பு கேட்பது ஒன்றும் இனியனுக்கு பெரிய விசயமமில்லை. அனுபமா மன்னிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராகத்தான் இருக்கின்றான்.
குழந்தையை பிரிய வேண்டும் என்று கூறி விட்டால் அவனால் தாங்க முடியாது. இந்த ஜென்மத்தில் அவன் குழந்தையை பிரிய மாட்டான். அதை விட உயிரை விடுவது மேல். அதனாலயே பேசாமல் அமைதியானான்.
இன்றும் அவ்வாறுதான் நிலுபமாவை அழைத்து வந்து கணி இரவு சாப்பாட்டுக்கு வருவதாக கூறிவிட்டு காவல்நிலையம் சென்றிருந்தான்.
அக்காவும் தங்கையும் இரவுணவை சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஆபிசிலிருந்து வந்தான் இனியன். கதவை திறந்தது நிலுபமா தான்.
“என்ன மாமா டீ தானே? அக்காவ போட சொல்லவா? இல்ல நான் போட்டுத் தரவா?” இன்முகமாக கேட்டாள் நிலு.
முதன் முதலாக இங்கு வந்த பொழுது நிலுபமா இனியனோடு முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. அதை கவனித்த அனுபமா தன்னால் தங்கையின் வாழ்க்கையில் பிரச்சினை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் நிலுபமாவின் முன்னிலையில் இனியனோடு ரொம்பவும் அந்நியோன்யமாக இருப்பது போல் நடந்துகொள்ளலானாள்.
அவனை ஒருமையில் லெப்ட் அண்ட் ரைட் வாங்குவாள் சட்டென்று “என்னங்க இங்க பாருங்க உங்க பொண்ணு உதைக்கிறா” என்று அவள் அணிந்திருந்த சுடிதாருக்கு மேலாக குழந்தையின் அசைவைக் காட்ட, குழந்தையின் அசைவை தனியாக ரசித்து செல்லம் கொஞ்சுபவள் அவன் ஆசையாக பார்த்தால் முறைப்பவள் அதிசயமாக இன்று எதற்காக இவ்வாறு பேசுகின்றாள் என்று இனியனுக்கோ அதிர்ச்சி.
நிலுபமாவோ அவனைக் கவனிக்காமல் அனுபமாவின் வயிற்றில் கைவைத்து குழந்தையோடு பேசலானாள்.
அனுபமா இனியனை முறைக்க, சட்டென்று புரிந்துக் கொண்டவன் அனுபமாவின் வயிற்றில் கைவைத்தவாறு அவனும் குழந்தையோடு பேசலானான்.
அதை சற்றும் எதிர்பார்க்காத முகபாவனையில் பார்த்த நிலுபமா “இவர்களுக்கு எல்லா பிரச்சினையும் ஓய்ந்து விட்டதா?” என்று சந்தேகமாக பார்த்தாள்.   
நிலுபமா வந்த பொழுது அனுபமா தான் இனியனுக்கு கதவை திறந்து விட்டாள். கொஞ்சல் மொழிகள் எதுவும் இல்லாமல் உள்ளே வந்தவனின் முகத்தில் புன்னகைக்க கூட இல்லாததைக் கண்டு “அக்காவை பார்த்தா இம்புட்டு வெறுப்பா இவருக்கு” உள்ளுக்குள் கனற்றுக் கொண்டிருந்தவளுக்குத்தான் இவர்களின் இந்த செய்கை ஆனந்தத்தைக் கொடுத்தது.
“அது சரி வேர்க் டென்ஷன்ல வந்திருப்பாரு. அதான் சிரிக்காம இருப்பாரு. அத அக்கா புரிஞ்சிகிட்டு இருந்திருப்பா. நான் இருக்குறதால கொஞ்சிப் பேசாம இருப்பாங்களாக இருக்கும்” என்றெண்ணிக் கொண்டாள்.
நிலுபமா கவனித்தவரையில் இனியன் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்து அனுபமாவுக்கு உதவியாகத்தான் இருக்கின்றான். அனுபமா சொல்லாமலே அனைத்து வேலைகளையும் பார்க்கின்றான். ஆகா மொத்தத்தில் அனுபமாவுக்கு ஏத்த கணவனாகவும், புரிதலோடும் இருப்பது போல் தெரிகிறது. “என்ன அத்த மாமாவை மட்டும் இப்படி பொறுப்பா வளர்த்திருக்காங்க. போலீஸ மட்டும் ஒண்ணுமே தெரியாத பச்சை மண்ணா வளர்த்திருக்காங்க”
அதை அவள் கணியிடமும் கூற, “என்னது இனியனா?” வாயை பிளந்தவன் இனியன் வேலை செய்வதை பார்த்து “அண்ணி நல்லா ட்ரைன் பண்ணி இருக்கிறீங்க. இவன் கழட்டி போட்ட துணிய எடுக்கக் கூட குனிய மாட்டான். சோம்பேறி” என்று கிண்டல் செய்து சிரித்தான்.
“நீ மட்டும் என்ன? தலையை துடைச்சு துண்டை தூக்கிப் போடுவ. அதை காயப்போட ஒரு ஆள் வேணும். படுத்து எந்திரிக்கும் பொழுது போர்வை கட்டிலிலிருந்து விழுந்தா கூட குனிஞ்சி எடுக்க மாட்ட. அதை எடுத்து மடிச்சு வைக்க இன்னொருத்தங்க வரணும். அதை விட படிக்கிற புத்தகத்தையே மூடி வைக்காத சோம்பேறி நீ. நீ என்னய சொல்லுறியா?”  தம்பியை இனியன் வம்பிழுக்க, நிலுபமா இனியன் சொல்வதை ஆமோதிக்க, கணி அவளை முறைக்க,  அக்காவும் தங்கையும் அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
கணி வந்தால் தான் தன்னிலை மறந்து இனியனின் மனநிலை மாறி சிரித்துப் பேசுவான்.
நிலுபமாவும் தங்களுடைய சின்ன வயதில் நடந்தவைகளை பகிர்ந்துகொள்ள கேலி கிண்டலோடு அன்றைய பொழுது செல்லும்.
கொஞ்சம் கொஞ்சமாக நிலுபமா இனியனோடு ஒன்றிவிட இன்று அழைப்புமணி அடித்த உடனே “ஐ… மாமா வந்தாச்சு” என்று ஓடிச்சென்று கதவை திறந்தவள் வழமையாக அவன் டீ சாப்பிடுவது அறிந்திருந்தமையால் யார் போடும் டீ வேண்டும் என்று கேட்டாள்.
நிலுபமா இருக்கும் நாட்களில் மட்டும்தான் அனுபமா இனியனுக்கு டீ பட்டுக் கொடுப்பாள். அதுவும் வாய் டீ வேண்டுமா என்று கேட்டாலும் வேண்டாமென்று கூறுமாறு கண்களால் முறைப்பாள்.
“நான் போடுறேன் டீ” என்று சிலநேரம் நிலுபமா போட்டுக் கொடுப்பாள். அவள் இல்லையென்றால் இனியன் அவனாகவே போட்டுக் குடிக்க வேண்டியதுதான்.
அனுபமாவின் கைப்பக்குவத்துக்கு இனியன் அடிமைதான். “அனு என்ன பண்ணுறா? சமைக்கிறாளா? அப்போ நீயே போடு”
“ஓஹ்… ஒஹ் அக்கா பிரீயாக இருந்தா அவங்க கையாள தான் டீ சாப்பிடுவீங்க. ஒருவேளை அக்காவுக்கும் சேர்த்து நீங்கதான் டீ போட்டு கொடுப்பீங்களோ? எனக்கு அப்படித்தான் தோணுது” கேலி செய்தாள் நிலு.
அவன் போட்டுக் கொடுக்க தயார் தான். அவன் போடும் டீயை குடிக்க அவள் தயாரா? புன்னகைத்தவன் அறைக்குள் நுழைந்து துணியை மாற்றிக் கொண்டு வந்தான்.
இந்த மூன்று மாதத்தில் நடந்த அடுத்த மிக முக்கியமாக விஷயம் வள்ளியின் திருமணம்.
வரதராஜன் கூறியது போல் வள்ளிக்கு அமேரிக்கா மாப்பிள்ளையை தான் பார்த்திருந்தார். திருமணத்தைக் கூட எந்த குறையுமில்லாமல் நிறைய செலவு செய்து சொந்தபந்தங்களை அழைத்து சிறப்பாகவே செய்திருந்தார்.
ராஜகோபால் ஒரு அரச அதிகாரி. அவருக்கு ஒரே பொண்ணு இவ்வளவு செலவு செய்து கல்யாணம் பண்ணுறார் என்றால் லஞ்சம் வாங்கி இருப்பாரோ என்றெல்லாம் கல்யாணத்துக்கு வந்தவர்கள் முணுமுணுக்க ஆரம்பிக்க, திருமணத்தை நடத்துவதே வரதராஜன் என்ற சேதி அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
“அதுசரி சொந்த மருமகளாக்கிக்கணும் என்று ஆசைப்பட்டார் அது முடியாம போனதால அவரே செலவு செய்யிறாரா?” யாரோ ஒருவர் பேச
“ராஜகோபாலுக்கு குடும்ப சொத்து வேற இருக்குதப்பா. ஒத்தப்பொண்ணு தனியாவே எல்லாம் செஞ்சிருக்க முடியும். அன்னம் வீட்டுக்காரர் பேச்ச தட்டாததினால அவரை செலவு செய்ய விட்டு மனிசன் ஒதுங்கி இருக்காரு” என்றார் ஒருவர்.
நல்லதோ கெட்டதோ நாள் பேர் நாலு விதமாக பேசத்தான் செய்வார்கள். எதை காதல் வாங்க வேண்டும், எதை விட்டு விட வேண்டும் என்பது நம் கையில்தான் உள்ளது.  
திருமணமான கையேடு வள்ளி அமெரிக்க சென்று விட்டாள் சென்றவள் அன்னத்தின் குடும்பத்தாரோடு அலைபேசியிலாவது தொடர்பில் இருக்கவில்லை. ராஜகோபாலிடம் மட்டும் அடிக்கடி பேசுவதாக தகவல்.
அன்னம் தான் இந்த தகவலை இனியனிடம் கூறியிருந்தாள். அதுவும் அவசரமாக வீட்டுக்கு வருமாறு அலைபேசி அழைப்பு விடுத்து.
வாரம் ஒரு நாள் வீட்டுக்கு செல்லா விட்டாலும் பத்து நாட்களுக்கு ஒரு தடவை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒருதடவையாவது சென்று வருவான்.
அப்படியிருக்கும் பொழுது அலைபேசியில் கூறாமல் எதற்கு அவசரமாக வீட்டுக்கு வரும்படி கூறினாள் என்ற குழப்பத்திலையே வீட்டுக்கு சென்றான் இனியன்.
“ஏன்டா உன் பொண்டாட்டிக்கு ஒம்பதாவது மாசமும் ஆரம்பிச்சிருச்சு. சீமந்தம் பண்ணி அவளை ஊருக்கு கூட்டிகிட்டு போகணும் என்ற எண்ணம் அவ வீட்டாளுங்களுக்கு கிடையாதா? பிரசவ செலவையும் உன்ன ஏத்துக்க சொல்லுறாங்களா? என்ன?” கடுமையாகவே கேட்டாள்.
“இதுக்குத்தான் வர சொன்னியா? இத நீ போன்லேயே கேட்டிருக்கலாம்” என்றான் இனியன்.
“ஆமா போன்ல கேட்டா மட்டும் தெளிவா சொல்லிடப் போற. அவ ஆத்தாக்காரிக்கு அறிவு வேணாம். பொண்ணு படிக்கிறான்னு இங்கயே விட்டு வச்சிருக்கா” கலைவாணியையும் திட்ட ஆரம்பித்தாள்.
அந்த நேரம் நிலுபமா மாடியில் தான் இருந்தாள். சாப்பாட்டு மேசையில் தாயும் மகனும் பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு தெளிவாகவே கேட்டது.
அனுபமாவுக்கு வளைகாப்பு செய்வதை பற்றி அன்னை கூட அவளிடம் எதுவும் கூறியிருக்காததால் இனியன் என்ன சொல்வான் என்று கூர்ந்து கவனிக்கலானாள்.  
“ஏழாம் மாசமே வளைகாப்பு பண்ணி ஊருக்கு கூட்டிட்டு போகலாம் என்றுதான் அத்த என் கிட்ட கேட்டாங்க. அப்படி பண்ணா அனுவோட படிப்பு கெட்டிடும். அதுவும் எட்டாம் மாசம் அவளுக்கு எக்ஸாம் வேற இருக்கு. ஒம்பதாம் மாசம் ஆகிட்டா காலேஜும் லீவ் விட்டுடுவாங்க. வளைகாப்பையும் சிறப்பா பண்ணிடலாம். அனுவும் நிம்மதியா ஊருல இருக்கலாம் என்று நான் தான் சொன்னேன்” என்றான்.
“எல்லாம் உங்க இஷ்டம் ஆகிருச்சு. ஒன்னத்தையும் கலந்தாலோசிக்கிறது இல்ல. பாசத்தைக் கொட்டி சொந்த பொண்ணா அவளைத்தான் வளர்த்தேன். போனாச்சும் பண்ணுறாளா? ராஜூகிட்ட மட்டும் கொஞ்சிக் குலாவுறாளாம்” இனியனை திட்ட ஆரம்பித்து, வள்ளியையும் சேர்த்து திட்டித் தீர்த்தாள் அன்னம்.
உண்மையில் வளைகாப்பு என்று ஒன்றை பற்றி இனியனுக்கு ஞாபகம் வரவில்லை. வடிவேல் அழைத்து இவ்வாறு செய்யலாமா? என்று கேட்டிருக்க சரியென்றான். அன்னத்திடம் கூறும் பொழுது மாற்றிக் கூறினான். இல்லாவிடில் அனுபமாவின் குடும்பத்தை அவள் எவ்வாறெல்லாம் பேசுவாள் என்று இனியனுக்குத் தெரியாதா? 
இனியனுக்கு அன்னையின் பாசமும் தெரியும், கோபமும் புரியும். அதனால்தான் அன்னம் என்ன பேசினாலும் பொறுமையாக இருந்தான். அதே நேரம் அன்னத்தோடு சுமூகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அனுபமாவோடும் பேசவில்லை.
தான் அனுபமாவுக்கு இழைத்த கொடுமைகளை போலவேதான் அன்னமும் இழைத்திருக்கிறாள். அதற்கும் தான்தான் காரணம். அன்று அன்னம் அழைத்த பொழுது தான் பேசியிருந்தால் அனுபமாவை அன்னம் அடித்திருக்கவும் மாட்டாள் கண்டபடி பேசி வீட்டை விட்டு அனுப்பியிருக்கவும் மாட்டாள்.
அன்னத்தை மன்னிக்கவும், நடந்ததை ஏற்றுக்கொள்ளவும் அனுபமாவுக்கு காலவகாசம் தேவை. எல்லாவற்றுக்கும் காரணம் தான் தான் என்று அனுபமாவிடம் மண்டியிட்டால் அன்னையை கூட மன்னித்து விடுவாள் தன்னை மன்னிப்பாளா?
இனியனும் அன்னமும் பேசிக் கொண்டதை பற்றி நிலுபமா அக்காவிடம் பெருமையாக கூற, தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் இனியன் பேசினானா? ஆச்சரியமானவள் அதை தங்கையிடம் வெளிகாட்டிக்கொள்ளவில்லை.
கணியும் இரவுணவுக்கு வந்து சேர வளமை போல் அரட்டையடித்ததவாறு அனைவரும் உன்ன ஆரம்பித்தனர்.
“என்ன வர வர சரியா சாப்பிட மாட்டேங்குற? நீ ஒழுங்கா சாப்பிடலைனா என் பொண்ணு பசில இருப்பாளே. ஆ… வாய தொற”
ஆறு மாதம் வரைக்கும் அனுபமாவுக்கு உணவு உட்கொள்வதில் பிரச்சினை இருக்கத்தான் செய்தது. மூன்று வேலை உணவை ஆறு வேலை உணவாக கொஞ்சம் கொஞ்சமாக உட்கொள்ளுமாறு மருத்துவர் ஆலோசனை கூறியிருக்க, அதன்படி உணவருந்தியத்தில் அனுபமாவுக்கு வாந்தி முற்றாக நின்றிருந்தது.
ஆனாலும் இனியனுக்கு அவள் சரியாக உணவு உட்கொள்வதில்லையோ என்ற கவலை இருந்தது. அதற்கு காரணம் அனுபமாவின் எடை கருவோடு சேர்த்து அதிகாரிக்காததுதான். 
“எல்லாரும் குழந்தை உண்டானா குண்டாவங்க. நீ என்ன அப்படியே இருக்க?’ பார்ப்பவர்கள் அவளிடம் கேட்கும் கேள்வியை அவளிடம் நேரடியாக கேட்க முடியாமல் பார்த்திருப்பான் இனியன்.
கணி மற்றும் நிலுபமா இருக்கும் நாளை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு அவளுக்கு ஊட்டி விடுவான். நிலுபமா இருப்பதால் அனுபமாவாலும் மறுக்க முடியாமல் அவன் கையால் உணவருந்துவாள்.
சமைப்பது பெண்கள் இருவருமென்றால் சுத்தம் செய்வது அண்ணன் தம்பியின் பொறுப்பென்றானது.
“என்னடா இது? தட்டு கழுவனுமா?” கணி அண்ணனை முறைக்க,
“நல்ல நக்கி நக்கி சாப்பிட்டல்ல. வா… வா… பொம்பளைங்க எப்படியெல்லாம் கஷ்டப்படுறாங்க. என்ன மாதிரியெல்லாம் வீட்டுல வேலையிருக்கு என்று தெரிஞ்சிக்க. கொஞ்சம் கூடமாட ஒத்தாசை பண்ணு” தம்பியை இழுத்து சென்றான்.
இன்று கணிக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சாப்பிட்டு முடித்த உடனே இனியனோடு சேர்ந்து சுத்தம் செய்யும் வேலையில் இறங்கினான். அது வீட்டில் கூட பிரதிபலிக்க, அன்னம் கூட வியந்து பார்க்கத்தான் செய்தாள்.
அண்ணனும் தம்பியும் தட்டுக்களை கழுவி அடுக்கி வைத்து, சமயலறையையும் சுத்தம் செய்து விட்டு வர, அனுபமா சோபாவில் காலை தூக்கி வைத்து அமர்ந்திருந்தாள்.
நிலுபமா அவள் காலை பிடித்து விட்டுக் கொண்டிருக்க, “என்னாச்சு என்று கேட்டான் கணி”
“கால் ரொம்ப வீங்கி இருக்கு” என்றாள் நிலுபமா.
“இவ கை ரொம்ப சாப்ட்டா இருக்கு. பிடிக்கிறது கூட தெரியல” அனுபமா சிரிக்க,
“நீ எந்திரி. நான் பிடிச்சி விடுறேன்” என்றான் இனியன்.
“இல்ல வேணாம்” உடனே மறுத்தாள் அனுபமா.
 “நாங்க இருக்குறதால வேணாம்னு சொல்லுறா” கிண்டலடித்தாள் நிலுபமா.
அவள் சொல்வதில் மறைமுக உண்மையும் இருந்தது. கால் வீக்கம் காரணமாக இரவில் அனுபமா தூக்கம் வராமல் அவஸ்தை படுவதை பார்த்து இனியன் காலை பிடித்து விடுவான். அனுபமா அரைத்தூக்கத்தில் இருப்பதாக இனியன் நினைக்க, அவளுக்கு தெரிந்தாலும் அந்த கணத்தில் அவளுக்கு காலை பிடித்து விட்டால் இதமாக இருக்கும் என்று அமைதியாக இருப்பாள்.
அதற்காக இனியனுக்கு நன்றியெல்லாம் கூற மாட்டாள். கூறியிருந்தாள் அவள் தூங்கவில்லையென்பதை இனியன் அறிந்துகொண்டிருப்பானே. தூக்கத்திலும் வலியில் முனகுவதாகத்தான் கருதி காலை பிடித்து விடுவான். அவள் நிம்மதியான உறக்கத்து சென்ற பின்தான் இனியனுக்கு தூக்கமே வரும்.
அவன் செய்த தவறுக்காக தினமும் அவள் காலை பிடித்து மன்னிப்பு கேட்பதாகவே எண்ணிக்கொள்வான் இனியன். 

Advertisement