Advertisement

அத்தியாயம் 2
ஜான்சியை லாக்கப்பில் வைத்து அடித்த கோபத்தில் தந்தையோடு இனியன் முகம் கொடுத்தே பேச மாட்டான்.  எங்கே மகன் திருமணத்தை நிறுத்த ஏதாவது செய்து விடுவானோ என்று அவர் ஜான்சியின் பெயரை கூறி மிரட்டுவதும், இவன் அதற்கு பதில் கூறுவதும் வாடிக்கையாகத்தான் இருந்தது.
இன்றும் அது போல் பேசி விட்டு கோவிலுக்கு சென்றால் வெள்ளிக்கிழமை என்பதால் எதிர்பார்த்தது போல் கூட்டம் அலைமோதத்தான் செய்தது. இனியனின் கண்கள் வயதுப் பெண்களை வட்டமிட, அன்னலட்சுமியை அடையாளம் கண்டுக்கொண்டு சிலர் நலம் விசாரித்து இனியன் தான் மாப்பிள்ளையென்றும் அறிந்துக்கொண்டனர்.
அவன் பார்வை பெண்கள் மீது இருக்க “என்ன மாப்புள கல்யாண பொண்ண தேடுறீங்களா? கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாளில்ல இருக்கு கல்யாணமாகும் வரைக்கும் இனி எங்கயும் போக மாட்டா” என்றான் ஒருவன்.
வயசுப்பையன், ஊருக்குப் புதுசு என்ன இவன் பெண் பிள்ளைக்களை பார்க்கின்றான் என்று நாலு அடி விழ வேண்டியது. இவன் தான் மாப்பிள்ளையென்றதும் மணப்பெண்ணைதான் தேடுகிறான் என்று கணித்து ஒரு ஆணின் மனதை ஒரு ஆண் தான் அறிந்திருக்க முடியும் என்பதை உணர்த்த பெருந்தன்மையாக அவனுக்குத் தேவையான தகவலை கூறினான் அந்த வாலிபன்.
கல்யாண மாப்பிள்ளையாக இனியன் மணப்பெண்ணை தேடியது உண்மைதான். ஆனால் அது ஆசையாக அவளை பார்க்க வேண்டுமென்றோ, ஆர்வமாக அவளிடம் பேச வேண்டுமென்றோ இல்லை. திருமணத்தை நிறுத்தவென்று பாவம் அந்த வாலிபனுக்குத்தான் தெரியவில்லை.
“நீ அனுபமாவோட பெரியப்பா பையன் ஹரியில்ல” பெண் பார்க்க வந்த பொழுது அவனை பார்த்த நியாபகத்தில் அன்னம் கேட்க,  தன்னை இனியனுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டான் அவன்.  
கோவிலுக்கு வந்ததே மணப்பெண்ணை சந்தித்துப் பேசத்தான். அது நடக்கப் போவதில்லையென்றதும் இனியனின் முகம் யோசனைக்குள்ளாக அவனை சந்தேகமாக பார்த்தாள் அன்னலட்சுமி.
இந்த திருமணத்தில் இனியனுக்கு கொஞ்சம் கூட சம்மதமில்லை. திருமணம் நடந்தால் அவன் அனுபமாவை ஏற்றுக்கொள்வான். அதுவரை அவனை நன்கு கண்காணிக்க வேண்டும் என்பதுதான் கணவனின் கட்டளை.
ஊரில் இருக்கிறோம், கோவிலுக்குத்தானே என்றுதான் மகனை அழைத்து வந்தாள். நிச்சயமாக இவன் அனுபமாவை தேடியிருக்க மாட்டான் என்று அவள் பார்க்க,
“கோவிலை பார்த்தேன்” என்றவன் அன்னையின் புறம் திரும்பாமல் கலைநயம்மிக்க கோவிலை ரசிப்பது போல் பார்வையை வைத்துக் கொண்டான். மகனுக்கு இந்த விஷயத்தில் தானே விருப்பம் அவனெங்கே பெண்களை பார்த்திருப்பான் அதுவும் மனதில் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு கல்யாண பெண்ணை பற்றியே கேட்காதவன்” மனதுக்குள் பொருமினாள் அன்னை.
ஹரி வளவளவென்று பேசியவாறு இருக்க, ஒருவாறு அவனிடமிருந்து விடுபட்டு வீடு வந்து சேர்ந்தான் இனியன்.
அவள் வீட்டுக்குச் சென்று அவளை நேரடியாக சந்தித்து விடவும் முடியாது. “சுவரேறி குதித்து சந்தித்து பேசு” என்றது மனசாட்ச்சி. அதற்கு அவளது வீடு எங்கே இருக்கிறது என்று தெரிய வேண்டுமல்லவா? அது கூட தெரியாதே. அப்படியே சுவரேறி குதித்தாலும் மணப்பெண்ணுக்கு பதிலாக அவளுடைய அம்மாவோடுதான் பேச வேண்டும். அது காட்ச்சியாக வேறு கண்ணுக்குள் விரிய அவன் முகத்தில் புன்னகை ஒரு நொடி மலர்ந்தது அதை உணரும் மனநிலையில் தான் அவன் இல்லையே முகமே தெரியாத அவளை எவ்வாறு சந்திப்பது என சிந்தனையில் இருந்தான்.
நிச்சயமாக அவளை நேரில் சந்திக்க முடியாது. தந்தை அறிந்தால் ஜான்சிக்கு பிரச்சினை தான். எந்த பிரச்சினையுமில்லாமல் இந்த திருமணம் நிற்கவும் வேண்டும் அதை நிறுத்துவது மணப்பெண்ணின் வீட்டாராகவும் இருக்க வேண்டும் என்றெண்ணியவன் அனுபமாவோடு அலைபேசியில் உரையாடி உண்மைகளை சொல்லி விடுவதென்று முடிவெடுத்தான்.
இன்னொரு பெண்ணை மனதில் வைத்துக் கொண்டு தன் கழுத்தில் தாலி கட்டுபவனோடு தன் வாழ்கை எப்படி இருக்கும் என்று அவள் சிந்தித்துப் பார்க்க மாட்டாளா? வடிவேலிடம் உண்மையை கூறுவதை விட அவளிடம் உண்மையை கூறுவதில் அவனுக்கு சாதகங்கள் அதிகம். வடிவேல் வீடு தேடி வந்து இவன் சட்டையை பிடிக்கலாம். அப்படி ஏதாவது நடந்தால் தந்தை ஜான்சியை ஏதாவது செய்து விடுவார்.
ஆனால் அவளிடம் உண்மையை கூறினால் தன்னால் இந்த திருமணத்தை செய்துகொள்ள முடியாது என்று உண்மையை கூறாமல் அடம்பிடிக்கவும் கூடும். பெண்கள் அவ்வாறுதான். தான் பார்த்த ஒரு சிலரை மனதில் நிறுத்தியவன் எண்ணினான். 
காரணத்தைக் கேட்டு அவளுடைய வீட்டு மனிதர்கள் குடைய மாட்டார்களா? குடைந்தால்? என்னுடைய காதல்தான் காரணம் என்று அவள் கூறினால், அதை யார் கூறியது என்று அவளிடம் கேட்டால் ஒருவேளை அவள் என்னை கைகாட்டி விடக் கூடும். அது பிரச்சினையில்லை. திருமணம் செய்துகொள்ள போகும் பெண்ணிடம் உண்மையை கூறி விட்டுத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன் இல்லையென்றால் அவளை ஏமாற்றியது போல் ஆகாதா? அதனால் தான் உண்மையை கூறினேன் என்று சபையில் கூறினால் போதும். உண்மையை கூறிய ஆண் மகன் நல்லவனாகி விடுவான் அவளை சபையோர் தப்பாக பேசி திருமணத்துக்கு சம்மதிக்குமாறு வற்புறுத்துவார்கள். தந்தை முறைத்தாலும் பொய் சொல்லி ஒரு பெண்ணை திருமணம் செய்ய இயலாது என் மனதில் இன்னும் நான் காதலிக்கும் பெண்தான் இருக்கிறாள் அவளை மறக்க நாளாகும் அதுவரைக்கும் காத்திருக்கும்படி அவளிடம் கூறி விடுவேன். அந்த காண்டில் கூட திருமணத்தை நிறுத்தி விடுவாள். எப்படிப் பார்த்தாலும் லாபம் எனக்குத்தான்.
தனக்குள் பேசியவாறு அலைபேசியிலிருந்த கல்யாண பத்திரிகையின் புகைப்படத்தை நாடியவன் அனுபமா என்ற அவளது பெயரையும் பார்த்தவாறே அவளது வீட்டு எண்ணுக்கு அழைத்தான்.
வடிவேலின் எண்ணுக்கு அழைத்தால் தான் யார் என்ற உண்மையை கூறி விட்டுத்தான் அனுபமாவிடம் பேச முடியும். ஆதலால்தான் வீட்டு எண்ணுக்கு அழைத்திருந்தான்.
தொலைபேசி அடிக்க ஆரம்பித்ததும் இனியனின் இதயமும் அடிக்க ஆரம்பித்தது. யார் எடுப்பார்கள்?  ஒரு ஆண் மகன் அனுபாமாவோடு பேச வேண்டும் என்று கேட்டால் கொடுப்பார்களா? என்ற கேள்வியெல்லாம் அவனுள் எழுந்து அவனை நிலைகுலைய செய்தது.
“ஹலோ” என்றது ஒரு பெண் குரல்.
“ஹலோ அனுபமாவா?” அவளாக இருந்தால் நல்லது என்று சட்டென்று கேட்டு விட்டான்.
“ஆமாங்க. நீங்க யாரு பேசுறது?”
“நான் இனிமொழியன்” என்று இவன் கூறும் பொழுதே
“இனியா இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று வந்து நின்றாள் அன்னம். 
அன்னை வந்ததும் அலைபேசியை பின்னாடி மறைத்து வைத்தவன் “சும்மாதான் நின்னு கிட்டு இருக்கேன்” என்றான்.
“என்னதான் பண்ணுறியோ” என்று விட்டு அன்னம் அகல, அலைபேசியை காதில் வைத்தவன் “ஹலோ அனுபமா இருக்கியா?” என்று கேட்டான்.
“இருக்கா இருக்கா சொல்லுங்க” என்றது மற்றுமொரு பெண் குரல்.
கல்யாண வீடு என்பதால் வீட்டை அலகாரம் செய்ய ஆட்கள் வந்திருக்க, வாசலை அலங்காரம் செய்து முடித்தவர்கள் உள்ளறைகளை அலங்காரம் செய்து கொண்டிருக்க, அனுபமாவும், அவள் தங்கை நிலுபமாவும் வாசலில் தான் அமர்ந்திருந்தனர்.
தொலைபேசி அடிக்கவும் சட்டென்று எடுத்து விட்டாள் அனுபமா. இனியன் பேசுவான் என்று எதிர்பார்காதவள் அதிர்ச்சியிலும், ஆனந்தத்திலும் பேச்சற்று திகைத்து நிற்க, நிலுபமா தொலைபேசியை வாங்கும் பொழுதே “அவர் தான் பேசுறாரு” என்றிருந்தாள் அனுபமா.
இனியனின் உரிமைக்கு குரலில் நிலுபமாவும் உரிமையாக பேச
“யாருடா இது” என்று இனியன் யோசிக்கும் பொழுதே “என்ன மாமா அக்காவோட பேசணுமா? இத்தனை நாள் இல்லாம கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கைல என்ன பேச்சு” அதட்டுவது போல் கிண்டல் செய்தாள் அவள்.
இனியனுக்கு எரிச்சலாக இருந்தது. அவனுக்கு இருக்கும் ஒரே சந்தர்ப்பம் இதுதான். இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியாது. இவன் பல்லைக் கடிக்க,
“கோபப்படாதீங்க மாமா அக்கா கிட்ட கொடுக்கிறேன்” என்றவள் அனுபமாவிடம் கொடுத்து விட்டு யாராவது வருகிறார்களா என்று காவல் காக்கலானாள்.
அனுபமா “ஹலோ” என்றதும் “நான் உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” என்றான்.
அவளை பற்றி அவன் பேசாதது, நலம் விசாரிக்காததோ கூட அனுபமாவின் கவனத்தில் இல்லை. முதன் முறையாக அவனிடத்தில் பேசுகிறாள். அவளை பொறுத்தவரையில் எல்லாமே முக்கியமான விஷயமாக இருக்க,
“ஆ சொல்லுங்க” என்ற அனுபமா வடிவேல் உள்ளே வருவதைக் கண்டு தொலைபேசியின் ரிசீவரை கீழே வைத்து விட்டு அங்கிருந்த மாதாந்த இதழை கையில் எடுத்துக் கொண்டாள்.
இதையறியாத இனியனோ “நான் ஒரு பொண்ண லவ் பண்ணுறேன். அப்பா அந்த பொண்ண டாச்சர் பண்ணி என்ன உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாரு. நானா கல்யாணத்த நிறுத்தினா அவளுக்கு இன்னும் பிரச்சினையை கொடுப்பாரு. நீதான் இந்த கல்யாணத்த நிறுத்தணும். நான் சொல்லுறது உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்” என்றான்.
வடிவேல் அவசரமாக உள்ளே வந்ததால் அனுபமா அமர்ந்திருந்ததைக் கவனிக்காமல் சின்னமகளிடம் பேசியவாறு உள்ளே சென்று விட, தங்கையை முறைத்தவாறே மீண்டும் தொலைபேசி ரிசீவரை அனுபமா காதில் வைத்து “ஹலோ” என்றாள்.
“நான் சொன்னது புரிஞ்சுதா?” என்று இனியன் கேட்க,
“என்ன சொல்லி இருப்பாரு?” என்று முழித்தாள் அனுபமா. 
“என்ன சொன்னீங்க?” என்று இவள் கேட்டும் பொழுதே
“யார் கிட்ட போன்ல பேசிட்டு இருக்க? இனியா” என்ற வரதராஜனின் கட்டைக் குரலில் அனுப்பமாவே தொலைபேசியை துண்டித்திருந்தாள்.
அவனிடமிருந்து அலைபேசியை வாங்கிய வரதராஜனோ “ஹலோ ஹலோ” என்று கத்தி விட்டு மகனை முறைத்தவாறு அலைபேசியோடு அங்கிருந்து செல்ல அனுபமாவிடம் பேசி விட்ட மகிழ்ச்சியில் இருந்தான் இனியன்.
தன்னுடைய பெற்றோர்கள் நினைத்தது நடக்காது. இந்த திருமணம் நின்று விடும் என்ற மகிழ்ச்சியில் அவனிருக்க, அது அவன் முகத்தில் பிரதிபலிக்கவும் செய்திருந்தது. 
இங்கே அனுபமாவோ இனியன் என்ன கூறியிருப்பானென்று யோசனையில் ஆழ்ந்திருக்க, கல்யாண நாளே விடிந்து விட்டது.   
அனுபமா கல்யாணத்தை நிறுத்தாமல் என்ன செய்கிறாள்? கடுப்போடு காத்திருந்தான் இனியன்.
மாப்பிள்ளையாக மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருந்தவனின் பார்வை அனுபமா வரும் திசையில் இருக்க, இதயக் கூடு வெறுமையாகிக் கொண்டிருந்தது.
அவள் வருவாள் இப்பொழுது திருமணத்தை நிறுத்துவாள் என்று காத்திருந்தால் மணப்பெண்ணுக்குண்டான சர்வலங்காரத்திலும் திகழ்ந்து தலை கவிழ்ந்தவாறே மெதுவாக அடியெடுத்து வந்தவள் இனியனை ஒட்டியமர, இனியனின் இரத்தம் கொதித்தது.
அனுபமாவின் அடக்கமான அழகு கூட இனியனின் கண்களுக்கு தெரியவில்லை. அவளை பார்த்த முதல் பார்வையே முறைத்துத்தான் பார்த்தான். வெறுப்போடுதான் பார்த்தன்.   
“இவளிடம் அவ்வளவு புரியும்படி கூறியும் ஜம்மென்று உடுத்திக்கொண்டு பக்கத்தில் வந்து உக்காத்திருக்கிறாளென்றால் இவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும். இவள…” பெற்றோரின் மீதிருந்த மொத்தக் கோபமும் அனுபமாவின் மேல் திரும்ப அவளை பார்வையாலையே எரித்தவன் அமைதியாக அவள் கழுத்தில் தாலியை கட்டி முடித்தான்.
திருமணத்தை தடுக்க தனக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் போச்சு. இவளை சும்மா விடக் கூடாது. தாலி கட்டினால் மட்டும் இவளோடு நான் வாழ்ந்து விடுவேனா? உள்ளுக்குள் கனன்றுக் கொண்டிருந்தவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சட்டென்று முடிவெடுத்தான்.
அடுத்து சடங்கு செய்ய வேண்டும் என்று இனியனின் அன்னை அன்னலட்சுமி அவனை சோதித்தாள். அவளை முறைக்க முடியாது. முறைப்பதை தந்தை பார்த்து விட்டால் தன்னுடைய திட்டத்தில் கைவைத்து விடுவார். அமைதியாகவே அனைத்தையும் செய்தான் இனியன்.  
பெண் வீட்டாரோடு இனியன் இன்முகமாக இனிக்க இனிக்க பேசினான். வரதராஜனுக்கு அது சந்தேகத்தைக் கொடுக்க, அன்னலட்சுமியோ “அதான் கல்யாணம் ஆனா அவனை பிடிச்ச பீடை அவனை விட்டு போகுமென்று ஜோஸ்யக்காரர் சொன்னாரே அதான் இந்த மாற்றம்” என்றாள்
இனியனின் தம்பி கணியன் போலீஸ் ட்ரைனிங்க்குக்காக டெல்லியிலிருந்தான். ட்ரைன் பிடித்து திருமணத்துக்காக அவன் வந்து சேர அதிகாலையாக நேராக மண்டபத்துக்கு வந்தவன், இனியன் மந்திரம் ஓதும் பொழுதுதான் அண்ணனைக் கண்டான்.
இனியனுக்கும், கணியனுக்கும் ஒரே ஒரு வருட வித்தியாசம் தான். அண்ணன் தம்பியாக இருவரும் பழகுவதை விட தோழர்களாகத்தான் பழகுவார்கள். இனியன் அவனிடம் கூறாத ஒரே விடயம் அவனுடைய காதல் விவகாரம் மட்டும்தான். கூறியிருந்தால் அண்ணனுக்காக வீட்டில் நிச்சயமாக கணி சண்டை போட்டிருப்பான்.
நடந்தது எதையுமே அறியாதவனோ அண்ணனைக் கட்டிக் கொண்டு வாழ்த்துக் கூற, “நீங்க இங்க என்ன மாமா பண்ணுறீங்க, வாங்க உங்க கூட பேசணும்” என்று ராஜகோபாலன் மகள் செம்பகவள்ளி அவனை இழுத்துக் கொண்டு செல்ல அவளை முறைத்துப் பார்த்தான் இனியன்.
“என் ஜான்சியை நான் கல்யாணம் செய்ய முடியாமல் போக உன் அப்பாவும் ஒரு காரணம். நீ ஆசைப்பட்ட என் தம்பி உனக்கு கிடைப்பானா? ஒருநாளும் நடக்காது” கருவிக் கொண்டான்.
“ஏன் மாமா கல்யாணத்துக்கு நேரங்காலத்தோட வர மாட்டியா? இப்படித்தான் நேரத்துக்கு வந்து நிப்பியா?” செம்பகவள்ளி அதட்ட,
கணிக்கு சின்ன வயதிலிருந்தே ராஜகோபால் அணியும் காக்கிச் சட்டையின் மீது ஒருவித மயக்கம் இருந்தது. அதனாலயே தான் போலீஸாக வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். ஆனால் மாமன் பெண்ணான செம்பகவள்ளி மீது எந்த ஈடுபாடும் இருந்ததில்லை. அதுவும் அவள் அண்ணனை திருமணம் செய்துகொள்ள இருக்கிறவள் என்று எண்ணியிருந்தால் திடிரென்று அண்ணனுக்கு வேறு பெண்ணை பார்த்திருப்பதாக அன்னை கூறியதுமில்லாமல் செம்பகவள்ளிக்கு தன்னைத்தான் பிடித்திருக்கிறதாம். என்று இனியனுக்கும் வள்ளிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வீட்டார் பேச ஆரம்பித்தார்களோ அண்ணியாக போகிறவள் என்று வள்ளி பேசும் பேச்சுக்களை பொறுத்துக்க கொண்டிருந்தான். அண்ணி என்று நினைத்தவளை தான் எவ்வாறு திருமணம் செய்வதாம். சட்டென்று கணியால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. மாமன்மகள் என்பதால் வள்ளியை ஒதுக்கவும் முடியவில்லை.
“இதப்பாரு நீலு… உள்ள உன் அக்காவுக்கு கல்யாணம் என்று சொன்னியே மணமேடைல ரொமான்ஸ் ஸீன்ஸ் பார்க்கலாம் என்று வந்தா அங்க ஒன்னும் தேறல. வெளிய ரொமான்ஸ் படம் ஓடுறத சொல்லவே இல்லையே” நிலுபமாவின் தோழிகளில் ஒருத்தி போலும் இவர்களை கண்டு கேலி செய்ய செம்பகவள்ளிக்கு கோபம் புசுபுசுவென ஏறியது.
நிலுபமாவுக்கு செம்பகவள்ளியை தெரியும். கணியை யார் என்று தெரியவில்லை.
“ஏய் பேசாம இருடி…” தோழியை அதட்டியவள் “சாரி நீங்க யார் என்று தெரியாம பேசிட்டா” என்று தன்மையாக கூறினாள்.
“அதானே தாராத்திரம் தெரிஞ்சி எங்க மாமா பொண்ணெடுத்திருந்தா இந்தப் பேச்செல்லாம் கேட்க நேர்த்திருக்குமா என்ன? இந்த கல்யாணமே எங்கப்பாவாலதான் நடக்குது அது தெரியாம நண்டு சிண்டெல்லாம் ஆளாளுக்கு பேச வந்துட்டாளுக” நிலுபமாவை முறைத்த செம்பகவள்ளி மறைமுகமாக இனியனின் காதல் விவகாரத்தைக் கூறினாள்.   
வடிவேலும் பணம் அந்தஸ்து என்று வரதராஜனுக்கு எந்த வகையிலும் குறைந்தவர் கிடையாது. அப்படி இருக்க செம்பகவள்ளி பேசியது நிலுபமாவின் கோபத்தை தூண்டியிருக்க,
“ஆமாக்கா, நாலு பேர் நம்மள பத்தி என்ன பேசுவாங்க என்று கொஞ்சம் கூட வெக்கம், கூச்சம் இல்லாம ஒரு ஆம்பளைய கூட்டிகிட்டு வந்து கைய பிடிச்சி கிட்டு தனியா பேசுற பொம்பளைங்க இருக்குற இந்த காலத்துல, என்னதான் எங்கப்பா சொத்து சேர்த்து வச்சிருந்தாலும் வேஸ்ட்டுதான். அந்த குடும்ப பொம்பளைங்க எப்படிப்பட்டவங்கனு தெரியாம பொண்ண கொடுத்துட்டாரே” என்றாள்.
செம்பகவள்ளிக்கு எப்பொழுதும் தன்னுடைய தந்தை ராஜகோபால் என்றாள் உயிர் தான். உசத்திதான். சட்டென்று மற்றவர்களை மட்டம் தட்டி பேசி விடுவாள். அறிந்தவர்கள் இது அவளுடைய குணம் என்று மெளனமாக கடந்து செல்ல, நிலுபமாவை போன்ற அறியாதவர்கள் அமைதியாக இருப்பார்களா?
செம்பகவள்ளியை அதட்ட முனைந்த கணிமொழியன் நிலுபமா பேசவும் அவளை சுவாரஸ்யமாக பார்த்தான்.
அவள் யாரென்று தெரியாது. ஆனால் செம்பகவள்ளியின் மூக்கை உடைத்தவளை அவனுக்கு பிடித்திருந்தது. அதற்கு காரணம் செம்பகவள்ளி அவன் வீட்டாரையும் அவ்வாறுதான் பேசுவாள்.
தம்பியின் ஒரே செல்லப் பொண்ணு, தாயில்லா பொண்ணு. இந்த வீட்டு மருமக தானே. அவ பேசாம வேற யாரு பேசுவா” என்று அன்னமே அவளை செல்லம் கெடுத்து கெடுத்து வைத்திருந்தாள்.
இத்தனை நாள் அண்ணியாக போகிறவள் என்று அமைதி காத்தான். அன்னை இவளை தன் தலையில் கட்ட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றாள் என்றறிந்ததும் அமைதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று உணர்ந்தான். அவன் வாய் திறக்கும் முன்தான் நிலுபமா பேசியிருந்தாளே.
செம்பகவள்ளியையே ஒருத்தி எதிர்த்து பேசினாள் என்றால் அவளது தோழமை கணிமொழியக்கு மிகவும் அவசியம் என்றெண்ணினான் அவன்.
எல்லா சடங்கும் முடிந்து மணமக்கள் மணமகனின் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகளையும் இனியன் அமைதியாக செய்யலானான். அதன்பின் கணியோடு அமர்ந்து நலம் விசாரிக்கலானான்.
கணியின் பார்வை நிலுபமாவை தொட்டு மீள்வதைக் கண்டு “அனுபமாவோட தங்கச்சிதான். பேர் நிலுபமா. நம்மள மாதிரியே பேர்லயும் ஒற்றுமை இல்லையா? நாம ஒரே குடும்பத்துல கல்யாணம் பண்ணினா நல்லா இருக்கும் என்று அடிக்கடி நினைப்பேன். பரவால்லையே அனுவுக்கு ஒரு தங்கச்சி இருக்கா” கணி வேறு யாரை திருமணம் செய்தாலும் பரவாயில்லை. அவன் செம்பகவள்ளியை திருமணம் செய்யக் கூடாது. செம்பகவள்ளியை பற்றிய எண்ணம் அவன் மனதில் இருந்தால் அதை துடைத்தெறிய வேண்டும் என்றே பேசினான் இனியன்.
அதற்காக கணி தன்னை போல் காதல் என்று வேற்று மாதத்து பெண்ணையோ, வேற்று ஜாதி பெண்ணையோ அழைத்து வந்தால் தன்னுடைய நிலைமைதான் தம்பிக்கும். அவ்வாறும் நடக்கக் கூடாது. ராஜகோபாலன் மகளின் விருப்பத்தை மட்டும்தான் நிறைவேற்றி வைப்பார்களா? என் தம்பியின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க மாட்டார்களா? பார்க்கலாம். உள்ளுக்குள் கனன்றான் இனியன்.
“அண்ணியோட தங்கச்சியா? செம வாலா இருப்பா போலயே. நம்ம வள்ளியோட மூக்கை ஒடச்சா” என்று நடந்ததை கூறி சிரித்தான் கணி.
நிலுபமா வந்து இனியனிடம் குடிக்க ஏதாவது வேண்டுமா? என்று கேட்க, தண்ணி மட்டும் போதும் என்றான்.
“ஏன் எங்க கிட்ட எல்லாம் கேட்க மாட்டீங்களா?” கணி சிரிக்க, இனியன் குறுக்கே பேசாது அமைதியாக பார்த்திருந்தான்.
“ஆமா நீங்க யாரு?”
“பார்த்தா தெரியலையா?” கணிமொழியன் மீசையை முறுக்கி விட
“மாமாக்கு என்ன உறவு என்று கேட்டேன்” நிலுபமா முறைக்க,
“கூடப் பொறந்த தம்பிமா… அதுவும் ஒரே தம்பி” என்றான்.
“அப்போ அந்த செம்பகவள்ளிக்கு முறைப்பையனா?” என்று கேட்டதும்  
“ஆமா ஆமா இப்போ உனக்கும் தான் என்றான்” கணிமொழியான். அவன் விளையாடுகிறானா? தீவிரமாக சொல்கிறானா? இனியனுக்கோ புரியவில்லை.
நிலுபமாவுக்கு எங்கே புரிய போகிறது? “ஐயோ நீங்க வள்ளிக்காகு முறையா இருங்க இல்லனா அவங்க எங்களை முறைப்பாங்க. என் மாமாவை நானே கவனிச்சிக்கிறேன்னு உங்களுக்கு பிடிச்ச சர்பத் எடுத்துட்டு வரேன்னு போனாங்க. அதான் உங்க கிட்ட கேட்கல” என்றவள் நகர கணி சிரித்துக் கொண்டிருந்தான்.
இரவும் வந்தது. முதலிரவு அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்றுக்கொண்டிருந்தான் இனியன்.
இனியனுக்கு திருமணம் நிகழ இருப்பது ஜான்சிக்கு நன்றாகவே தெரியும். எப்படியாவது திருமணத்தை நிறுத்தி விட்டு வருகிறேன். நீ தந்தையோடு வெளிநாடு சென்று விடு. நானும் வேலையை காரணம் காட்டி வந்து விடுகிறேன். நாம் அங்கு சென்று திருமணம் செய்து கொண்டால் யார் என்ன செய்து விட முடியும்? என்று ஜான்சியை சமாதானப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தான்.
வேலை பார்க்குமிடத்திலுள்ள நண்பர்களின் மூலம்தான் எல்லா பேச்சு வார்த்தையும் ராஜகோபாலின் மூலம் இருவரினதும் அலைபேசி கண்காணிப்படுவதும் இனியன் அறிந்து வைத்திருந்தான். அன்னத்தின் அலைபேசியிலிருந்துதான் அனுபமாவையும், வடிவேலையும் அழைத்து பேசியிருந்தான்.    
திருமணம் நிகழ்ந்ததை அறிந்தால் ஜான்சி துடித்துப் போவாள். அவள் அறிந்துக்கொள்ளக் கூடாது. அனுபமாவின் கழுத்தில் தாலி கட்டிய கணமிருந்தே இனியனின் மனதில் உழன்றது இதுவொன்றுதான். அத்தனை பேர் இருக்குமிடத்தில் சடங்கு, சம்பிரதாயம் என்று அன்னம் அவனை படுத்தியதில் ஜான்சியை பற்றிய சிந்தனை கொஞ்சம் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்க, தனியறையில் அவளது எண்ணங்கள் மேலோங்கி இருந்தன. 
 கதவை யாரோ தட்ட அனுபமாவோ என்று நினைத்தவன் உள்ளுக்குள் எழுந்த எரிமலையோடு கதவை திறந்தால் கணி நின்றிருந்தான்
“என்ன?” என்று இனியன் பார்வையை வீச “என்ன அண்ணிக்காக வைட்டிங்கா? பாவம் நான்தான் வந்தேன். அவங்கள அலங்காரம் பண்ணுறாங்க. இன்னும் கொஞ்சம் லேட் ஆகும் போல” இனியனின் மனநிலையை அறியாமல் கணி கிண்டல் செய்ய
“நீ எதுக்கு வந்த?” தம்பியிடம் கடுமையை காட்ட முடியாமல் கேட்டான். நடந்த எதையுமே இப்பொழுது கணியிடம் கூறி பலனில்லை. திருமணத்துக்கு முன் கூறியிருந்தால் அவன் உதவியிருப்பான். இப்பொழுது நிச்சயமாக ஜான்சியை மறந்து விடும்படிதான் கூறுவான். தம்பியை நன்கு அறிந்த இனியன் அவனிடம் எதுவும் கூறக் கூடாது என்ற முடிவில் இருந்தான்.    
“உன்ன பார்த்ததும் வந்த வேலையும் மறந்துட்டேன்” என்றவன் அலைபேசியை கொடுத்தவாறே “ஆமா உன் போன் என்ன ஆச்சு. உன் கொலிக் பார்த்தீபன் எனக்கு போன் பண்ணி இருக்கிறான்” என்று சொல்ல பதறினான் இனியன்.
“போன் சார்ஜ் போட மறந்துட்டேன்” நீ போ பேசிட்டு தரேன்” என்றவன் கணியை வெளியே தள்ளி கதவை சாத்தியிருந்தான். 
பார்த்தீபன் அழைத்திருக்கின்றான் என்றால் நிச்சயமாக அது ஜான்சியை பற்றிக் கூறத்தான் என்று புரிந்துகொண்டுதான் தம்பியை வெளியே அனுப்பியிருந்தான்.
“என்ன பார்த்தீபன். ஜான்சிக்கு என்ன?” இனியனின் குரலில் பதட்டம் அப்பட்டமாக இருந்தது.
மறுமுனையில் மயான அமைதி நிலவ “ஹலோ ஹலோ என்ன ஆச்சு?”
“இனியா உன் கல்யாண வீடியோவை ஜான்சி பார்த்துட்டா”
“டேய் என்னடா சொல்லுற? கல்யாணத்த யார் வீடியோ எடுத்தாங்க? அத அவ எப்படி பார்த்தா?” இனியன் என்ன நடந்தது என்று அறியாமல் குழம்ப
“உன் கல்யாணம் நடக்காது. நீயும் ஜான்சியும் அமெரிக்கா போய் கல்யாணம் பண்ணிக்க போறதா சொல்லிக்கிட்டு இருந்தவதான். அவ போனுக்கு யாரோ உன் கல்யாண வீடியோவை அனுப்பி இருக்காங்க. அத பார்த்ததும் அத பார்த்ததும் சூசைட் பண்ணிக்க பார்த்தாடா”
“டேய் என்னடா சொல்லுற? ஜான்சி எங்க இப்போ?”
“ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்” என்று பார்த்தீபன் கூறிக்கொண்டிருக்கும் பொழுது அனுபமா அறைக்கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தாள். 
அவளை பார்த்ததும் இனியனின் மொத்த கோபமும் அவள் புறம் திரும்பியது. “இவளால் தான் இவளால் தான். இவள் ஒருத்தியால் தான். இவள் மட்டும் திருமணத்தை நிறுத்திருந்தால் என் ஜான்சிக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது”
இனியன் கோபமாக அவள் புறம் அடியெடுத்து வைக்க, அவன் கோபம் அறியாத அனுபமா கையில் பால் செம்போடு அவனை நெருங்கி காலில் விழப் போக அவளை இழுத்து நிறுத்தியவன் அவள் புடவையை உருவியிருந்தான். அது அவன் கையேடு வந்து விட அவளை கட்டிலில் தள்ளியவன் அவள் மேல் பாய்ந்தான்.

Advertisement