Advertisement

அத்தியாயம் 20
இனியனை இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்தி தான் வரதராஜன் தனக்கும் இனியனுக்கும் திருமணத்தையே நிகழ்த்தினாரென்று அனுபமாவுக்கு இன்றுதான் தெரியும். அதேபோல் ஜான்சி தற்கொலை செய்துகொள்ள போனதும் அன்று இனியன் ஜான்சியை சந்திக்க சென்ற பொழுது கூறிய பின்புதான் தெரிய வந்தது.
தான் திருமணத்தை நிறுத்தாததால் தான் ஜான்சி தற்கொலை செய்துகொள்ள முயன்றாள் என்று இனியன் குற்றம் சொன்னாலும். திருமணத்தை நிறுத்த அலைபேசி அழைப்பை தான் செவிமடுக்கவில்லையென்று காரணம் கூறி தப்பிக்க முடியாது. ஜான்சியின் உயிர் பிரிந்திருந்தால் அதற்கு தான் நேரடியாக காரணமாகாவிட்டாலும், தானும் ஒரு காரணம் என்ற எண்ணம் அனுபமாவின் மதில் பாரமாக ஏறிக் கொண்டு நிம்மதியை இழந்தாள்.
கடவுள் புண்ணியத்தில் ஜான்சிக்கு எதுவும் நேரவில்லை. ஏதாவது ஆகியிருந்தால் தன்னாலையே தன்னை மன்னிக்க முடியாமல் போய் இருக்கும்.
ஜான்சியை சந்தித்து மனம் விட்டு பேசினால் தான் தனக்கு நிம்மதி, மன்னிப்புக் கேட்டால் தான் அலைக்கழிக்கும் எண்ணங்களிலிருந்து தன்னால் மீண்டு வர முடியும் என்று நினைத்தவள் ஜான்சியின் வீட்டை தேடி சென்றாள். 
அனுபமா செல்லும் பொழுது ஜான்சியின் வீட்டுக் கதவு திறந்துதான் இருந்தது. திறந்து இருந்ததற்காக உள்ளே செல்ல முடியுமா? அழைப்பு மணியை அழுத்தியவள் காத்திருந்தாள்.
ஜான்சியின் தந்தை விக்டர் எட்டிப் பார்த்து “யார்மா நீ” என்று கேட்க என்ன சொல்வது என்று முழித்தாள் அனுபமா.
ஒருவாறு தட்டுத் தடுமாறி ஜான்சி இல்லையா என்று கேட்க, “ஜான்சி ப்ரெண்டா. உள்ளதான் இருக்கா போம்மா” என்றார் விக்டர். 
வீடு முழுக்க பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு இருந்ததோடு, வீட்டை பார்க்க யாரோ வந்திருந்தார்கள். வீட்டை விற்று தந்தையும், மகளும் அமெரிக்க செல்ல போகிறார்கள் என்று அறியாமல் அனுபமா ஜான்சியின் அறைக்குள் நுழைந்தாள்.
அனுபமாவைக் கண்டு அதிர்ந்த ஜான்சி கத்தவில்லை. “இங்க எதுக்காக வந்தீங்க? இனியன விட்டுக் கொடுக்க சொல்லி கேட்க வந்தீங்களா? எனக்கும் இனியனுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீங்க வந்த வழிய பார்த்துப் போகலாம்” என்றாள்.
அவள் பேச்சில் கோபமா? விரக்தியா? அனுபமாவுக்குப் புரியவில்லை. அதை ஆராச்சி செய்யவா அவள் வந்தாள். ஜான்சிக்கு ஆறுதல் சொல்லும் மனநிலையிலும் அனுபமா இல்லை. அவளுக்கே நாலு பேர் ஆறுதல் சொல்ல வேண்டிய நிலைமையில் அவள் இருக்கின்றாள்.
குற்ற உணர்ச்சியில் தவிக்கும் மனதை மீட்டெடுக்க ஜான்சி கடுமையாக பேசினால் கூட பொறுத்துப் போக வேண்டும் என்றெண்ணியவாறு தானே வந்தாள்.   
அவள் பேச்சை பொருட்படுத்தாது. “நான் இனியனை பற்றி பேச வரல. உங்க கிட்ட மன்னிப்புக் கேட்கத்தான் வந்தேன்” என்றாள் அனுபமா.
“மன்னிப்பா… எதுக்கு? நீங்க என்ன தப்பு பண்ணீங்க? நான்தான் இனியனை காதலிச்சு பெரிய தபோப்பு பண்ணிட்டேன்” என்றாள் ஜான்சி. கூறும் பொழுதே விசும்பினாள். காதலின் வலி அவளுள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. சட்டென்று தன்னை கட்டுக்குள்ளும் கொண்டு வந்தாள்.
ஜான்சியை பார்க்கையில் அனுபமாவுக்கு பாவமாக இருந்தது. இனியன் ஜான்சியோடு சென்று வாழ்வதும், வாழாததும் அவன் கையில் உள்ளது. அனுபமா அதில் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவள் அதை பற்றி பேசவும் வரவில்லையே.
“நான் இங்க வந்தது. உங்க ரெண்டு பேர் காதலை பத்தியோ நடந்ததை பத்தியோ பேச அல்ல. நீங்க தற்கொலை பண்ணிக்க போனது நாங்க மூணு பேரும் சந்திச்சிக்கிட்ட அன்னைக்குதான் எனக்கு தெரிய வந்தது. அன்னைக்கி அவர் போன் பண்ணி கல்யாணத்த நிறுத்த சொன்னப்போ என்னால அத சரியாக கேட்க முடியல” என்றவள் நடந்ததை தெளிவாக கூறினாள்.
“நேரடியாக நான் காரணம் இல்லாட்டியும், நானும் ஒரு காரணமாகிட்டேன். உங்களுக்கு ஏதாவது ஆகி இருந்தா என்னாலையே என்ன மன்னிக்க முடியாம போய் இருக்கும். அதற்குத்தான் மன்னிப்பு கேட்க வந்தேன்” என்றாள் அனுபமா.
அனுபமா யாரோ, எவளோ. தன்னிடம் மன்னிப்புக் கேட்க அவசியமே இல்லை. தன் கணவனை காதலித்தவள். தன் கணவன் காதலித்தவள் என்று ஜான்சியிடம் சண்டை போடாமல் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டதில்லையே அனுபமாவின் நல்ல குணம் ஜான்சிக்கு புரிந்தது.
“இதுல உங்க தப்பு ஒண்ணுமில்ல. எல்லாம் விதி. நானும் இனியனும் ரொம்பத் தெளிவாத்தான் முடிவு பண்ணி காதலிக்க ஆரம்பிச்சோம். அதுல நாம யாரையும் குற்றம் சொல்ல முடியாது.
நான் எதையும் எங்கப்பா கிட்ட மறைக்க மாட்டேன். இனியன் ப்ரொபோஸ் பண்ணது, நான் ஓகே சொன்னது எல்லாமே அப்பாக்கு தெரியும்.
எதுக்கும் அந்த பையன் வீட்டுல ஒருதடவை கேட்டுக்க சொல்லுமா… என்று அப்பா சொன்னாரு. நான் இனியன் கிட்ட சொன்னேன். எங்க வீட்டுல எதுவும் சொல்ல மாட்டாங்க என்று உறுதியாக சொன்னான்.
திடிரென்று ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம். வீட்டுல என்னை கேட்காம நிச்சயம் பண்ணிட்டாங்க. இப்போ போய் காதலிக்கிறேன் என்று சொல்ல முடியாது என்றான். அப்போ காதல் மயக்கத்துல நானும் அதுதான் சரி என்று முடிவு பண்ணிட்டேன். அந்த முடிவால் நானும், எங்கப்பாவும் ரொம்ப பட்டுட்டோம்” என்ற ஜான்சி அனுபமாவிடம் தாங்கள் லாக்கப்பில் அடிவாங்கியதை கூறவில்லை.
எங்களையே இவ்வளவு பாடுபடுத்திய இனியனோட அப்பா அவனை எப்படி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருப்பார் என்று என்னக்கு புரியுது. இது எதுவுமே தெரியாத நீங்க என்ன பண்ண முடியும்? நீங்களும், இனியனும் கல்யாணம் பண்ணிக்கணும் என்கிறது விதி. அது அதன்படி நடந்திருச்சு. இனியன் வீட்டுல சம்மதிக்க மாட்டாங்க என்று தெரிஞ்சிருந்தா நான் ஒருநாளும் இனியனோடு ப்ரோபோசள ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன். என்னால உங்க ரெண்டு பேர் நடுவுளையும் எந்த பிரச்சினையும் வராது. நீங்க கிளம்புங்க” இதற்கு மேல் பேச ஒன்றுமில்லையென்பதை போல் கதவின் பக்கம் கைகாட்டியிருந்தாள் ஜான்சி.
அவள் முடிவில் அவள் தெளிவாகத்தான் இருக்கின்றாள். அதே போல் அனுபமா மன்னிப்புக் கேட்க வந்தவள் கேட்டு விட்டாள். அதன்பின் அங்கிருக்க வேண்டிய அவசியமில்லையே ஜான்சியின் வீட்டை விட்டு வெளியேறும் பொழுதுதான் நிர்மலா அனுபமாவை பார்த்தாள்.
அனுபமாவுக்குத்தான் அவள் யாரென்று தெரியாதே. அமைதியாக கடந்து சென்றாள்.
“இவங்கள எங்க பார்த்தேன் என்ற நிர்மலாவுக்கு கல்யாண வீடியோவில் அனுபமாவை பார்த்தது சட்டென்று ஞாபகத்தில் வரவில்லை.
பின்னொரு நாளில் பார்த்தீபனின் அலைபேசியில் இனியன் மற்றும் அனுபமாவின் கல்யாண புகைப்படங்களை பார்த்த போதுதான் அனுபமாவை அடையாளம் கண்டு கொண்டவள் அனுபமா ஜான்சியை பார்க்க வந்ததை பார்த்தீபனிடம் கூறினாள்.
அனுபமா கூறியதைக் கேட்டு யோசனையாக அமர்ந்திருந்தான் இனியன்.
ஜான்சி கூறியதை போல் தாங்கள் ஒன்றும் விடலை பருவத்தில் ஆர்வக் கோளாறில் காதல் என்று பிதற்றி இந்த நிலைக்கு ஆளாக வில்லையே. தனக்கு ஜான்சியை பிடித்த கணமே வீட்டில் கூறியிருந்தால் அக்கணமே தந்தையின் எதிர்ப்பும் தெரியவந்திருக்கும். தான் பிடிவாதம் பிடித்திருந்தால் தந்தையின்  உண்மையான முகத்தையும் காட்டியிருப்பார். ஜான்சிக்கும், ஜான்சியின் தந்தைக்கும் இவ்வளவு இன்னல்கள் நேர்ந்திருக்காது.
 “நான் ஏன் அப்பாவிடம் எதையுமே மறைக்க மாட்டேன். உன்னை பற்றி கூறி விட்டேன். நீ உன் வீட்டில் என்னை பற்றி கூறினாயா” என்று ஜான்சி கேட்டாலே அப்பொழுது கூட “என் விருப்பம் தான் அவர்களின் விருப்பம்” என்று பெருமையாக அவளிடம் கூறினேன். 
என் பெற்றோரை பற்றி நான் சரியாக அறிந்திக்காதது என் தவறு. அவர்களை புரிந்துகொள்ளாமல் நடந்தது என் தவறு. வள்ளியை சிறுவயதிலிருந்தே எனக்கு பேசி வைத்திருக்கின்றார்கள் என்று தெரிந்தும் நான் ஜான்சியிடம் என் மனதை இழந்தது மாக தவறு.
வள்ளி மட்டும் கணியை விரும்பியிருக்கா விட்டால் இன்று அனுபமா இருக்குமிடத்தில் வள்ளி இருந்திருப்பாள். தன் வாழ்க்கை இதை விட சிக்கலாக இருந்திருக்கும்.
ஜான்சிக்கு நடந்த அனைத்தும் எல்லாம் தன்னால் மட்டும்தான். தான் ஒருவனின் சுயநலத்தால் மட்டும்தான். இதில் அனுபமாவை குற்றம் சொல்லி என்ன பிரயோஜனம் என்று அவளை பார்த்தான்.
அவளோ சாப்பிட்டு முடித்து கைகழுவ எழுந்து சென்று விட்டாள். ஆனால் இனியனுக்கு அனுபமா தான் அலைபேசி அழைப்பு விடுத்த பொழுது அனுபமா செவிமடுக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.   
“அது எப்படி சரியாக அந்த நேரத்துல மட்டும் கேட்காம போகும்? அவங்க வீட்டு டெலிபோன்ல கோளாறா? இவ பொய் சொல்லுறா. ஜான்சி தற்கொலை செய்து கொள்ள போனாள் என்றதும் பயந்து விட்டாள் போலும். குற்ற உணர்ச்சியில் தவிப்பவள் மன்னிப்பு கேட்க சென்றிருப்பாள்.
தவறு செய்பவன் மனிதன் தானே. அலைபேசி அழைப்பு விடுத்ததே நான். என்னையே கன்வின்ஸ் பண்ண என்னெவெல்லாம் சொல்கின்றாள். இவ்வாறெல்லாம் பேசினால் நான் நம்பிவிடுவேனா?  என்னை நம்ப வைக்கத்தான் ஜான்சியைக் கூட சந்திக்க சென்றாளோ?
இருக்காது நிர்மலா கூறாவிட்டால் அனுபமா ஜான்சியை சந்திக்க சென்றது தெரிய வந்திருக்காதே.
ஒருவேளை ஜான்சி என்னோடு தொடர்பில் இருப்பாள். அவளே என்னிடம் கூறுவாளென்று எதிர்பார்த்திருந்தாளோ. எனக்கும் ஜான்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாத நிலையில் நிர்மலாவின் மூலம் இவள் ஜான்சியை சந்தித்தது தெரிய வந்தது.
என்னை எதற்காக நம்ப வைக்க வேண்டும்?
ஏன்?
“உங்க பேரக் கேட்டதுமே அவ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னா” ஹரி கூறியது ஞாபகத்தில் வர “பேர மட்டும் கேட்டு ஓகே சொன்னாளா? இல்ல என்ன ஏற்கனவே பார்த்திருக்காளோ? பார்த்து ஒன் சைடா லவ் பண்ண ஆரம்பிச்சாளா?  தன்னோட ஒருதலைக் காதல் கைகூட வேண்டு என்று போன் வந்தப்போ தன்னால கேட்க முடியல என்று சாதிக்கிறாளா? அப்படி ஏதாவது தான் இருக்கக் கூடும்” தான் பார்த்த சினிமாக்களை கொண்டு அனுபமா இவ்வாறுதான் இருப்பாள் என்று முடிவே செய்தான் இனியன். 
அனுபமா வந்து கிளம்பலா என்று அழைக்க, எதுவும் பேசாமல் கைகழுவ எழுந்து சென்றான்.
அனுபமாவை கல்லூரியில் இறக்கி விட்டவன் “நான் ஈவ்னிங் வீட்டுக்கு போறேன். நீ ஆட்டோ பிடித்து வீட்டுக்கு கிளம்பு இல்லனா உங்கப்பாவை வரச்சொல்லி வீட்டுக்கு போ” என்றவன் அவளின் பதிலையும் எதிர்பாராமல் வண்டியை கிளப்பியிருந்தான்.
“என்னாச்சு இவனுக்கு? முகத்தை ஊர் என்றே வச்சிருக்கான்” என்று அனுபமா யோசித்தாலும் வேலைக்கு செல்ல நேரமானதால் இருக்கும் என்றெண்ணிக் கொண்டாள். 
அனுபமா என்றொருத்தியின் ஒருதலைக் காதலால் தன் வாழ்க்கை இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டதே என்று இனியன் அவளை வசைபாட, அவன் மனமோ “அவளால் தான் உன் வாழ்க்கை இந்த நிலைமைக்கு ஆளானதா? நீ அவளை தொட்டதால் தான் குழந்தை உண்டானது. குழந்தை வந்ததால் தான் நீ ஜான்சியோடு சேர்ந்து வாழ்வதை கை விட்டு விட்டு அனுபமாவோடு சேர்ந்து வாழ முடிவு செய்தாய்” உன் கோபமும், செயலும் தான் காரணம் என்று கேலி செய்தது.
“அன்று நான் கோபப்பட்டதற்கு காரணம் ஜான்சி தற்கொலை செய்ய முயன்றது தான். ஜான்சி தற்கொலை செய்ய முயன்றதற்கு காரணம் எனக்கும், அனுபமாவுக்கும் நடந்த திருமண வீடியோ. அதை யார் ஜான்சிக்கு அனுப்பி வைத்தது? என் கோபம் அறிந்து முதலிரவில் இவ்வாறெல்லாம் நடக்குமென்று அனுபமா தான் ஜான்சிக்கு கல்யாண வீடியோவை அனுப்பி வைத்தாளோ?” எங்கோ சுற்றி இனியனின் மனம் அனுபமாவையே குற்றம் சொல்ல காரணங்களை தேடி அலைந்தது.
“அவ்வாறு அவள் செய்திருந்தால் நான் அவளை விட்டுப் பிரியக் கூடாதென்று கணியிடம் பேசியிருப்பாள். அதனால்தான் கணி நிலுபமாவை ஏமாற்றி திருமணம் செய்திருப்பான். இல்லையென்றால் கணியும் நிலுபமாவும் சந்தித்துக்கொள்ள வாய்ப்பே இல்லை. சந்தித்துக்கொள்ளவே வாய்ப்பில்லாதவர்கள் காதலிக்க தான் முடியுமா?”
அடிப்படையில் அனுபமா நல்லவள். நல்ல குணமுடையவள் என்று அவளோடு இருந்த இந்த கொஞ்சம் நாட்களிலையே இனியனின் ஆழ்மனம் ஏற்றுக்கொண்டிருக்க, ஜான்சியை சந்தித்து மன்னிப்பு கேட்டதில்லையே அது உறுதியானது.
ஆனால் தன் காதல் கைகூடாததற்கு காரணமானவர்களில் அனுபமாவும் ஒருத்தி என்பது இனியனின் ஆழ் மனதில் பதிந்து போனதால் அனுபமா தவறு செய்யவில்லை என்பதை இனியனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அனுபமா குற்றமிழைத்தாள் என்று நிரூபிக்க போராடலானான். 
குழந்தை உண்டாகி இருப்பதால் அனுபமாவிடம் பேசி சண்டை போட முடியாது. கணியை சந்தித்து பேசியே ஆகா வேண்டும் என்று முடிவெடுத்தவன் காரியாலயத்துக்கும் செல்லாமல் வீட்டுக்கு விரைந்தான்.  
“என்னடா ஈவ்னிங் வரேன்னு சொன்ன இப்போ வந்திருக்க?” வீட்டுக்கு வந்த இனியனை அதிசயமாக பார்த்தாள் அன்னம்.
“நீ தான் போன் போட்டு உசுர எடுக்குறியே அதான் வந்தேன். கணி எங்க?” சாதாரணமாக விசாரிப்பது போல் கேட்டான்.
“இப்போதான் சாப்பிட்டு ரூமுக்கு போனான். அவன் பொண்டாட்டி அவங்கம்மாவோட பின்னாடி இருக்கா” அன்னம் பதில் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே தம்பியின் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியிருந்தான் இனியன்.
நிலுபமா அறைக்குள்தான் முறைத்துக் கொண்டிருந்தாலே ஒழிய வெளியே சகஜமாகத்தான் கணியோடு பேசிக் சிரித்தாள்.
அதற்கு முக்கிய காரணம் கலைவாணி அங்கிருந்துதான். அன்னத்தின் குணம் அறிந்தமையால் சட்டென்று மகளை தனியாக விட்டு விட முடியாதென்று காலையிலையே வந்து விட்டாள். 
அது கணிக்கு சாதகமாகிப் போக தேனிலவுக்கு எங்கே செல்லலாமென்று பேச்செடுத்து ஒருவாறு நிலுபமாவை சம்மதிக்க வைத்திருந்தவன் சீட்டியடித்தவாறு அறைக்கு வந்து அலைபேசியில் எங்கே செல்லலாமென்று அலைபேசியை குடைந்துக் கொண்டிருந்தான்.
அக்கணம் இனியன் வந்து கதவை சாத்த வந்தது நிலுபமா என்று நினைத்து “என்னடி ஹனிமூன் போகலாம் என்று சொன்ன உடனே புள் போர்மல் இருக்க போல” என்றவன் இனியனைக் கண்டு அசடு வழிந்தான். 
தம்பியின் அப்பேச்சிலையே அவன் நிலுபமாவை இஷ்டமில்லாமல் மணந்ததாக தெரியவில்லை. யோசனையாக புருவம் சுருக்கினான் இனியன்.
“என்ன பிரதர் என்ன பிரச்சினை? வள்ளி ஏதாச்சும் பிரச்சினை செய்கிறாளோ? இல்ல வேற ஏதாச்சும் பிரச்சினையா?” நிதானமாகத்தான் கேட்டான் கணி.
“உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும் என்று வந்தேன். ஆனா இப்போ அதற்கு அவசியமே இல்ல போல தெரியுது” புன்னகைத்தான் இனியன்.
“என்னமோ கேட்க வந்த, வந்த வேகத்துல பதில் கிடைச்சிருச்சா? எதுவானாலும் கேளு இன்னும் தெளிவு கிடைக்கும் இல்ல” என்றான் தம்பி.
“ம்ம்… நான் லண்டன்ல இருக்கும் பொழுது அனுபமா வந்து உன்ன சந்திச்சாளா?” நேரடியான கேள்விதான். நேரடியாகவே கேட்டு விட்டான்.
“அண்ணியா? இல்லையே. நானே அவங்கள மீட் பண்ணி பேசலாம் என்று இருந்தேன். அதுக்கு முன் உன் கிட்ட பேசி க்ளியர் பண்ணிக்கலாம் என்று இருந்தேன். அன்னைக்கி அண்ணி வண்டில இருந்து விழுந்தாங்கல்ல, அதான் நீ லண்டன்ல இருந்து வந்தியே அன்னைக்கிதான் அவங்கள எதேர்ச்சையா பார்த்தேன்.
பார்த்ததும் பார்த்துட்டோம் சரி பேசிடலாம் என்று ஆரம்பிச்ச நேரம் வள்ளி வந்து குட்டைய குழப்பிட்டாளே. அப்போ தானே நீயும் வந்த” என்றான்.
“அப்போ அனுபமா வந்து உன்ன பார்க்கல”
“அதை தானேடா இப்போ தெளிவா சொன்னேன். என்ன பிரச்சினை” புரியாது கேட்டான் கணி.
“போன்ல கூட பேசல” சந்தேகமாக தம்பியை இனியன் நோக்க
“டேய்” கடுப்பானான் கணி.  
“நீதானே விளக்கமா, விலாவரியாக கேட்கச் சொன்ன” சிரிக்காமல் கூறினான் இனியன்.
“அதுக்குன்னு இப்படியா. என்னதான் உனக்கு பிரச்சினை?” கணி யோசனையாக கேட்க, இனியன் தனக்குண்டான சந்தேகத்தைக் கூறினான்.
“டேய் இது உனக்கே ஓவரா தெரியலையா? நீ என்ன செல்லப்பிராட்டியா அண்ணி உன்ன டீவி, மீடியால பார்த்து ஒன் சைடா லவ் பண்ண. அவங்க கல்யாணத்துக்கு அப்பொறம் தான் சென்னைக்கே வந்தாங்க. அப்போ அதுக்கு முன்னால உன்ன பார்த்திருக்க வாய்ப்பில்லை தானே. குறைஞ்ச பட்சம் நாம சின்ன வயசுலயாவது திருவிழா, பங்க்ஷன் என்று ஊருக்கு போய் இருக்கோமா? இல்லையே. அப்போ எப்படி அண்ணி உன்ன பார்த்திருக்க முடியும்?
நெருங்கின சொந்தம்னா உன் சின்ன வயசு போட்டோவை பார்த்து லவ் பண்ணாங்க என்று சொல்லலாம். அதுக்கும் வாய்ப்பில்லை. நீ வீனா சந்தேகப்படுற. எனக்கென்னமோ ஜான்சிக்கு உன் கல்யாண வீடியோவை அனுப்பியது மிஸ்டர் வரதராஜன் என்றுதான் தோணுது. அவரை தவிர உன் காதலுக்கு பரம எதிரி யார் இருக்க முடியும்”
கணி பேசப் பேசத்தான் இனியன் இவ்வாறு யோசிக்கவே ஆரம்பித்தான். 
“சரிடா அப்பா தான் ஜான்சிக்கு வீடியோவை அனுப்பினதாகவே இருக்கட்டும் ஆனா அனுபமா நான் போன் பண்ணி கல்யாணத்த நிறுத்த சொன்னப்போ கேட்கவே இல்லனு சாதிக்கிறாளே அத என்னைய நம்ப சொல்லுறியா?” தான் நினைத்தது பொய்த்துப் போனதில் கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டான் இனியன்.
“இதுக்கு நான் என்ன பதில் சொல்லுறது? அண்ணி சொல்லுறத நீ நம்பலைனா. அன்னைக்கி என்ன நடந்தது என்று அங்கிருந்தவங்கதான் சொல்லணும்” என்றான் கணி.
யோசனைக்குள்ளான இனியனோ “அன்னைக்கி நான் அனுபமாகிட்ட பேச முன்பாக நிலுபமா என் கிட்ட பேசினா” என்றான்.
“அப்படியா…” எனறவன் கதவை திறந்து “நிலு…” என்று சத்தமாக அழைத்தான்.
அப்பொழுதுதான் பின்வாசல் பக்கமாக இருந்து கலைவாணியோடு உள்ளே நுழைந்தாள் நிலுபமா.
“என்ன இவன் இப்படி கத்துறான்’ என்று நிலுபமா நினைக்க,
“மாப்புள எதுக்கு கூப்பிடுறாரு தெரியல போ.. போ.. என்று கலைவாணி விரட்ட, இனியன் வந்திருப்பதாக அன்னம் கூறினாள்.
இந்த நேரத்தில் அனுபமா காலேஜில் இருப்பாளென்று தெரியும். அண்ணனும் தம்பியும் பேசும் பொழுது இவளை எதற்கு அழைத்தான் என்று கலைவாணி யோசிக்க, “ஸ்கேன் எடுக்க போனாங்கள்ல் அந்த போட்டோ காட்ட கூப்ட்டிருப்பான்” என்றாள் அன்னம். தன்னிடம் தன் மகன் எதையுமே மறைக்க மாட்டான் என்று கூறிக்கொள்ளவே இதை கூறியிருந்தாள். 
கலைவாணிக்கு அனுபமா அலைபேசி வழியாக கூறியிருந்தால்தான். சின்னமகளை அன்னம் ஏதாவது பேசி விடுவாளோ என்ற பதட்டத்தில் இங்கு வந்த உடன் மறந்து விட்டாள். அன்னம் கூறிய பின்தான் ஞாபகம் வந்தது. மனதுக்குள் நொடித்தாலும், “போகும் போது சொல்லிட்டித்துதான் போனா” என்று விட்டு அகன்றாள் கலைவாணி.
“நான் பெத்ததுங்க சொல்லிட்டு போறானுங்களா? நானே போன் போட்டு கேக்க வேண்டியிருக்கு” முணுமுணுத்தவாறே கலைவாணி சென்ற திசைக்கு எதிர் திசையில் நகர்ந்தாள் அன்னம்.
அறைக்கு வந்த நிலுபமா இனியன் இருப்பதால் கணியை முறைக்க முடியாமல், என்னவென்று கேளாமல் அவன் முகம் பார்த்து நின்றாள்.
கணியும் அவளை சீண்டாமல் இனியன் அலைபேசி அழைப்பு விடுத்த அன்று என்ன நடந்தது என்று கேட்டான்.
“என்ன போலீஸ் இன்வெஸ்டிகேஷனா?” என்றவளும் சுருக்கமாக சொல்ல முனைய “ஒவ்வொரு விஷயத்தையும் டீட்டைலா சொல்லு” அதட்டினான். இனியன் நின்றிருந்த தோரணையில் அனுபமாவை பற்றிய விஷயம் என்றதும் யோசனைக்குள்ளானவாறே கூறலானாள்.
“கல்யாண வீடு. சொந்தபந்தங்கள் எல்லோரும் வீட்டுல நிறைஞ்சி இருந்தாங்க. கீழ டெக்கரேஷன் கம்ப்ளீட் பண்ணி, மேல டெக்கரேஷன் பண்ண ஆரம்பிச்சதும் நாங்க கீழ வந்துட்டோம்.
ஊஞ்சலாடலாமென்று நண்டு சிண்டுங்க கிளம்பியதும், மங்கா வாச்சும் பறிக்கலாமென்று கொஞ்சம் பேர் கிளம்பினாங்க. நானும் அக்காவும் எங்க அத்த பொண்ணு ஒருத்தியும்தான் இருந்தோம்.
ஹரிண்ணா குட்டிக்கு சாப்பாட்டு ஊட்ட அண்ணி தூக்கிட்டு போறத பார்த்த கவி அண்ணி கூட போய்ட்டா. அப்பொறம்தான் மாமாவோட போன் கால் வந்தது”
“அதெப்படி யாருமே இல்லாத நேரத்துல இவன் போன் பண்ணான்” கணி இனியனை கேலியாக பார்த்தவாறே கேட்க,
“அது எனக்கு எப்படித் தெரியும்? அக்கா போன் பக்கத்துலதான் இருந்தா. அவளும் சட்டுனு எடுத்துட்டா. மாமா பேசவும் எக்ஸைட் ஆகிட்டா. மாமா பேசுறதா என் கிட்ட சொன்னா. நான் போன பிடுங்கி பேசினேன். அப்பொறம் அவளுக்கு கொடுத்துட்டு யாராவது வர்றாங்களானு உள்ள பார்த்துகிட்டு இருந்தேன். ஆனா வெளிய இருந்து அப்பா வரவும் போன கீழ வச்சிட்டு மேகஸின கைல எடுக்கிட்டு உக்காந்துட்டா. அப்பா அவளை கவனிக்கல. இங்க என்னமா பண்ணுற என்று என்கிட்டே பேசிக்கிட்டே உள்ள போக நானும் அவர் அக்காவை கவனிக்காதபடி அவர் கூட பேசிகிட்டு உள்ள போய்ட்டேன்”
“இப்படி கூட நடக்குமா?” விதி தன் வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் விளையாடி இருக்கிறது என்று இனியன் பார்த்திருந்தான்.
“சரி அப்பா தானே வந்தாரு. அதுக்கு எதுக்கு போன கீழ வைக்கணும்? பேசியிருக்க வேண்டியது தானே. இனியன் கிட்டதான் பேசுறேன்னு சொன்னா மாமா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாரே” கணி தான் ஒரு போலீஸ் என்பதை சரியான கேள்வியில் நிரூபித்தான்.
“ஆமா ஆமா ஒன்னும் சொல்ல மாட்டார். அடிக்கடி பேசுறவங்களாக இருந்தா. அக்காவும் அப்பா முன்னாடி சாதாரணமாக பேசியிருப்பா. அன்னைக்கித்தான் மாமா போனே பண்ணினாரு. அந்த ஆனந்த அதிர்ச்சி ஒரு பக்கம். அப்பா பார்த்து என்ன சொல்லுவாரு என்ற அச்சம் ஒரு பக்கம் இருக்குறவ ரொம்ப தைரியமா நான் என் வருங்கால புருஷன் கூட போன்ல பேசுறேன்… யார் பார்த்தா எனக்கு என்னு பேசிக்கிட்டுதான் இருப்பா பாருங்க.
மாமா எதோ முக்கியமான விஷயம் சொன்னாரு அது என்னனு தெரியலடி. அவர் போன் நம்பர் இருந்தாலாவது போன் பண்ணி கேட்டிருக்கலாம். கல்யாண பத்திரிக்கைல கூட வரதராஜன் மாமா போன் நம்பர் மட்டும் இல்ல இருக்கு. ராத்திரி பகல் என்று பாராம அக்கா புலம்பிகிட்டு இருந்தவ கல்யாணம் முடிஞ்சி சாந்திமுகூர்த்தத்துக்கு அறைக்கு போறவரைக்கும் அதையேதான் சொல்லிக்கிட்டு இருந்தா. ஆனா அந்த முக்கியமான விஷயமே உங்க அண்ணனோட காதல் விவகாரம் என்று எங்கக்காவுக்கு தெரியாம போச்சே” கணியை கோபமாக முறைத்தவள் இனியனை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
இனியனுக்கு ஒன்று மட்டும் நன்றாகவே புரிந்தது. “அனுபமாவுக்கு தான் யார் என்பதே தெரியாது. ஹரி கூறியது போல் பெயரை மட்டும் கேட்டு அவள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. தனது தந்தையின் மீதிருந்த அளவில்லாத நம்பிக்கையில் தான் சம்மதம் தெரிவித்திருக்கின்றாள்.
நடந்த எதற்கும் அனுபமா காரணமுமில்லை. பொறுப்புமில்லை. திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு எதிர்பார்ப்பை தோற்று விக்கும். திருமண பத்திரிகையில் என் அலைபேசி என் இருந்திருந்தால் அவளே அழைத்து பேசியிருந்திருக்கக் கூடும். காத்திருந்தவளுக்கு என் அலைபேசி அழைப்பு ஆசையையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கும். காதல் என்ற உணர்வால் என் இதயம் ஜான்சியிடம் தொலைந்து விட்டது. ஜான்சியை காதலித்த என்னால் அவளுக்கு ஏமாற்றத்தை மட்டும்தான் கொடுக்க முடிந்தது” கணியும் நிலுபமாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்க, அமைதியாக வெளியேறினான் இனியன்

Advertisement