Advertisement

அத்தியாயம் 19
கம்பனி ஹெட் ஆபீஸ் லண்டன்ல இருந்து ஒரு இன்ஜினியர் இங்கு வந்து இந்தியாவில் உள்ள பழைய அரண்மனைகளை வாங்கி அதையெல்லாம் ஹோட்டலா மாற்றிக் கொண்டு வரும் ப்ரொஜெக்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் தான் இனியன் வேலைக்கு சேர்ந்தான்.
அரண்மனை மட்டுமல்ல. பழைய ஜமீன் வீடா இருந்தாலும் ஓகே என்று அப்படி ஒரு வீட்டைப் பார்க்க அந்த ப்ரெக்னன்ட் இன்ஜினியரோட இனியனும் போய் இருந்தான்.
“அந்த இன்ஜினியரிங் பெயர் கிளன். கிளன் அன்ட்ரசன். ஆறு மாசத்துக்கே மேலாக அவங்க இங்கதான் இருக்காங்க. ப்ரொஜெக்ட்டை முடிச்சிட்டு பிரசவத்துக்கு ஊருக்கு போகலாம் என்று நினைச்ச இப்படி இழுத்துகிட்டு இருக்கு என்று அலுத்துக்கொண்டே சொன்னாங்க.
நைடாகிருச்சு அங்கேயே தங்கிட்டு வரலாமென்று நான் சொல்லியும், அவங்க இல்ல நைட்டோடு நைட் நகரத்துக்கு போய்டலாம் என்று சொன்னாங்க.
அவங்க அப்படி சொன்னதுக்கு காரணம் அது ஒரு காட்டு பங்களா. எமெர்ஜன்சி என்றா எம்பியுலன்ஸ் வர ரொம்ப லேட் ஆகும்.
சரியென்று ஒருமணி வாக்குல கம்பனி டைவரோட நாங்க ரெண்டு பேரும் கிளம்பினோம்.
பாதை வேற குன்றும் குழியுமா இருந்தது. என்னதான் ட்ரைவர் மெதுவாக, பக்குவமாக ஓட்டினாலும் குழிகளில் ஏறி இறங்கத்தான் செய்தது.
அதே நேரம் இன்ஜினியர் கிளன் அன்ட்ரசனுக்கு பிரசவ வலி வர ஆரம்பித்தது” அன்று நடந்ததை அனுபமாவுக்கு விலாவரியாக கூறலானான் இனியன்.
ஓட்டுனரோ வயதானவர் “தம்பி இங்க ஹாஸ்பிடல் எங்க இருக்கு என்றே தெரியல. எந்த பக்கம் போறது?” கவலையாகக் கேட்டார்.
“கால் ட்ரிபிள் நைன் அண்ட் ஸ்டாப் தா வேகிகள்” என்றாள் கிளன்.
ஓட்டுனருக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. இனியனுக்கு அவள் சொல்வதன் அர்த்தம் புரிந்தது. ஆனால் எதற்கு வண்டியை நிறுத்தத் சொல்கின்றாள் என்றுதான் புரியவில்லை.
ஏதாவது தேவையா என்று இனியன் கேட்க, வண்டியை நிறுத்துமாறு கத்தினாள் கிளன்.
வண்டியும் நிறுத்தப்பட, பரபரவென தான் அணிந்திருந்த கால்ச்சட்டையை கழட்டியவாறே இந்தியாவின் எமெர்ஜன்சி எண்னை அழைத்து தாங்கள் இருக்கும் இடத்தை கூறுமாறு கூறியவள் தான் கொண்டு வந்த பையை துலாவலானாள்.
“அண்ணா நூத்தியெட்டுக்கு போன் பண்ணி நாங்க இருக்குற இடத்தை சொல்லுங்க” என்ற இனியன் இந்த பெண் வலியோடு என்ன செய்ய முனைகிறாள் என்று புரியாது குழம்பினான்.
“மிஸ்டர் இனியன் ஹெல்ப் மீ” என்று இனியனின் உதவியோடு தனக்குத் தானே பிரசவம் பார்க்கலானாள் கிளன்.
சினிமாவில் இலைமறைகாயாக பிரசவம் பார்க்கும் காட்ச்சிகளை இனியன் பார்த்திருக்கின்றான். இன்றுதான் முதன் முறையாக நேரடியாக பார்க்கின்றான். அவனுக்கு திருமணமாகி அவன் மனைவிக்கு பிரசவம் நேரும் பொழுது கூட இவ்வாறு அருகில் இருக்க வாய்ப்பு அமையாது. அந்த நேரத்தில் அவன் அன்னை அவனை பெற்றெடுக்க எவ்வளவு துன்பப்பட்டிருப்பாள் என்று எண்ணுகையில் கண்கள் கலங்கின.
கிளன் ஒரு இன்ஜினியர் அவளுக்கு பிரசவத்தை பற்றி என்ன தெரியும்?  “மேடம் கொஞ்சம் பொறுமையாக இருங்க இப்பொழுது எம்பியுலன்ஸ் வந்துடும் என்று இனியன் அதிர்ச்சியும் அச்சத்தோடும் கூற, அதையெல்லாம் கண்டு கொள்ளவேயில்லை அந்த வெள்ளை பெண்மணி.
சாதாரண ஒரு பெண்ணாக இருந்தால் வலியிலும், அச்சத்திலும் மயங்கியே இருப்பாள். இவள் ஒரு இரும்புப் பெண்மணி. இனியனுக்குத்தான் கைகால் உதற ஆரம்பித்திருந்தது.
அவன் கையில் ஒரு துவாலையை கொடுத்தவள் என் குழந்தை வரும் பொழுது பத்திரமாக பிடித்துக் கொள் கைவிட்டு விடாதே என்றாள்.
இது அவளது சொந்த நாடும் கிடையாது. சொந்தமென்று சொல்லிக்கொள்ள அருகில் யாரும் கிடையாது. கத்தி கூச்சலிடவில்லை. வலியில் முனகினாள் தான். எல்லாம்  குழந்தை பிறக்கும் வரைதான். அதன் பின் எதுவுமே நடவாதது போல் ஆடையை சரி செய்து கொண்டு இனியனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்தாள்.
ரோஜா நிறத்தில் மலர்க்குவியலால் தனது கையில் வந்து விழுந்து பெண்குழந்தையை பார்த்ததும் சிலிர்த்து நின்றான் இனியன்.
தாய்மை எவ்வளவு அழகானது. அவ்வளவு வலியையும் வேதனையையும் ஒருநொடியில், ஒரே நொடியில் மறக்க செய்ததே.
இரண்டு ஆண்கள் தன்னை பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற கவலை கொஞ்சம் கூட இல்லாமல் கிளன் தனது குட்டி தேவதைக்கு பாலூட்ட ஆரம்பித்தாள்.
திறந்த மார்பகங்களோடு அவள் பாலூட்டுவது கூட இனியனுக்கு கூச்சத்தை உண்டு பண்ணவில்லை. தாய்மை என்ற அழகான ஓவியமாக பிரதிபலிக்கும் அவர்களையே பார்த்திருந்தான்.
ஓட்டுனர்தான் அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்து வண்டியை விட்டு தள்ளி அழைத்து சென்றார்.
ஓட்டுநர் கூட இனியனை தப்பாக எண்ணவில்லை. “நம்மவூர் பொம்பளைங்கனா கத்தியே மயக்கம் போட்டிருப்பாங்க. இந்தம்மா என்னத்தம்பி இப்படி இருக்காங்க? அதுசரி காட்டுல சிங்கம், புலி, கரடி இருந்தாலும் டென்ட்டு போட்டு நைட்டுல தங்குறவங்க குழந்தை பெத்துகிறது பெரிய விஷயமா நினைப்பாங்களா?” தான் பார்த்த டிஸ்கவரி சேனலில் எதோ ஒரு நிகழ்ச்சியை பற்றி பேச ஆரம்பித்தவர் மேற்கத்திய பெண்களே வித்தியாசமானவர்கள் என்று பேச ஆரம்பித்தார்.
அதை ஆமோத்தித்த இனியன் “நம்ம நாட்டுலையும் வரலாறுல சுதந்திரத்துக்காக போராடிய வீர மங்கைகள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க எல்லாரும் குதிரைல ஏறி, வாளேந்தி சண்டை போட்டத கதைகளை கேட்கும் பொழுது இப்பொழுதும் மெய்சிலிர்க்குது”
“உண்மைதான். புராணக் கதைகளிலும் எவ்வளவு பெண்களை பார்க்கிறோம். நாட்டுல பெண்களுக்கு நடக்கும் ஒவ்வொரு அசம்பாவிதங்களை   பாக்குறப்போ நாங்க எங்க தப்பு பண்ணோம் என்றுதான் புரியல” என்றார்.
“அடிப்படையிலையே தப்பு செய்யிறோம். ஒரு வீட்டுல ஆம்புள புள்ள, பொம்பள புள்ள இருந்தா… அன்னைக்கி எதோ காயும், சாதமும் வச்சிருந்தாலும், ஆம்பள புள்ளைன்னு ஒரு ஆம்ளைட்டையாவது அம்மா போட்டுக் கொடுப்பாங்க.
ஏன் பொம்பள பசங்களுக்கு முட்ட பிடிக்காதா? ருசி தெரியாதா? போஷாக்கு தேவை படாதா? அவங்க தானே எதிர்காலத்துல இன்னொரு சந்ததியையே உருவாக்க போறாங்க? அப்போ அவங்க தானே நல்லா சாப்பிட்டு தெம்பா இருக்கணும்”
“ஆமா தம்பி நிறைய வீடுகள்ல பெத்த அம்மாவே இந்த வேறுபாடு பாக்குறதால, நான் ஆம்பள என்ற எண்ணம் நிறைய ஆண்களுக்குள்ள இருக்கு பொம்பளைங்கள மதிக்கவே மாட்டாங்க. அடிப்படையிலதான் தப்பு இருக்கு அங்க இருந்துதான் எல்லாம் மாறனும்”
“ஆம்பளைங்க செய்யிற எல்லா வேலையையும் இந்த காலத்துல பொம்பளைங்க செய்யிறாங்க. எங்க பொம்பளைங்களும் சலிச்சவங்களில்ல. என்ன அவங்க நம்மள தாண்டிப் போகக் கூடாது என்று நாமளே முட்டுக்கு கட்டையாக இருக்கிறோம். அதுதான் உண்மை”
பிணியூர்தி வந்த உடன் கிளன் அன்ரசனை ஏற்றிய இனியன் ஓட்டுனரை அழைத்து பின்னால் வருமாறு கூறி தானும் கூடவே சென்றான்.
கிளனோ அவள் கணவனை அழைத்து குழந்தை நல்ல முறையில் பிறந்து விட்டதாக அலைபேசியில் உரையாடியவாறே வந்தாள்.
மருத்துவமனைக்கு சென்று மருத்துவர் பரிசோத்தித்து தாயும், சேயும் நலமென்று கூறும் வரையில் நிம்மதியை தொலைத்தது இனியன் ஒருவன் தான்.
“அன்னைக்கி அந்த குட்டிய என் கைல தூக்கினப்போ… எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? அத உனக்கு சொன்னாலும் புரியாது” அனுபமாவை பார்த்து கூறியவன் அவள் முறைப்பையும் பெற்றுக் கொண்டான்.
 “யாரோ பெத்த குழந்தைக்கே அப்படி ஒரு உணர்வுனா… என் குழந்தை என் இரத்தம் என்றால் எப்படி இருக்கும்? நினைக்கும் பொழுதே உள்ளுக்குள்ள சிலிர்க்குது”
மெய்சிலிர்த்து அவன் கூறுகையில் பெறாத பிள்ளையின் மீது அவனுக்கு இருக்கும் பாசத்தை அனுபமாவல் உணர முடிந்தது.
அவள் சிந்தனை முழுக்க இனியன் கூறியதில்லையே இருந்தது. யாருக்கு, எப்பொழுது எப்படியான அனுபவம் வாழ்க்கையில் கிடைக்குமென்று யாராலயும் சொல்லிட முடியாது.
அவ்வாறான சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தனக்கு அமைந்தால் தன்னால் அப்பெண்மணிக்கு உதவியிருக்க முடியுமா? ஒரு பிள்ளையை சுமந்து பெற்றிருந்தால் மனதில் கொஞ்சம் தைரியம் பிறந்திருக்கும். என்ன நிகழுமென்று அறியாவிட்டால் மயக்கம் போட்டு விழுந்தாலும் விழுந்திருப்பேன் என்றெண்ணியவளின் வலது கை தானாக தனது வயிற்றை தடவிக் கொடுத்தது.
ஒரு பெண் குழந்தையை சுமப்பதும், பெற்றெடுப்பதும் வரம். ஆணுக்கு அந்த வரம் கிட்டினால் பெண்களின் வலியையும், வேதனையையும் புரிந்துக் கொண்டு அவர்களை சரிசமமாக நடாத்தி மரியாதையும் கொடுப்பார்களென்று அனுபமா அடிக்கடி நினைத்துப் பார்த்திருக்கின்றாள். 
பிரசவவலி ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பு என்கின்றனர். கண்டிப்பாக மனைவியின் பிரசவத்தின் பொழுது கணவன் அருகில் இருந்தாலாவது மனைவியை மதிக்கவும், புரிந்துக்கொள்ளவும் முனைவார்கள். அவள் படும் வேதனையை கண்கூடாக பார்த்தாலாவது பல ஆண்களின் கோபம் தணிந்து பாசம் அதிகரிக்கும்.
அனுபமா தனது சிந்தனையில் உழன்றுக் கொண்டிருக்க, சந்தோசமான மனநிலையோடு இனியன் வண்டியை ஒரு ரெஸ்டூரண்ட்டின் முன் நிறுத்தினான்.
காலை உணவை உட்கொள்ளாமல் தான் இருவரும் பரிசோதனைக்காக வந்திருந்தனர். வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு அனுபமாவை காலேஜில் விட்டு இனியன் திரும்ப காரியாலயம் செல்ல நேரமாகுமென்று வெளியே சாப்பிடலாமென்று முன் கூட்டியே பேசியிருந்தமையால் இனியன் வண்டியை நிறுத்தவும் அனுபமா அவனை கேள்வியெதுவும் கேட்கவில்லை.
இனியன் வண்டியை விட்டு இறங்க, அந்த சத்தத்தில் அனுபமாவும் சிந்தனையிலிருந்து மீண்டு இறங்கிக் கொண்டாள். இனியன் வண்டியை பூட்டும் பொழுது ஒரு சிறுவன் வந்து “பூ வாங்கிக்க அக்கா” என்றான்.
அனுபமா வேண்டாமென்று வாய் திறக்கும் முன்பாக “ஸ்கூல் போகாம இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுற?” என்று கேட்டான் இனியன்.
“இவரு பெரிய தெறி விஜய். ஏன் ஸ்கூல் போகலானு கேட்டு ரௌடிகள வெளுக்கப் போறாரு. என் கூட வந்தப்போ உனக்கு இந்த கேள்வியெல்லாம் அவசியமா?” சுற்றிலும் பார்த்தவாறுதான் கேட்டாள் அனுபமா.
சினிமாவில் வன்முறையான காட்ச்சிகளை பார்க்கும் பொழுது “என்ன ஹீரோ அடிச்சா மட்டும் பத்து பேர் ஒரே நேரத்தில் பறக்குறாங்க” என்று கிண்டல் செய்பவள்தான் அதன் பின்னணிக் காரணத்தையும் கொஞ்சம் மனதில் ஏற்றிக்கொள்வாள்.
இவ்வாறெல்லாம் சமூகத்தில் நடக்கிறதா? தட்டிக் கேட்கக் கூடியவர்களே இவ்வாறு இருந்தால் சாமானிய மக்கள் நாங்கள் என்ன செய்வது? ஒதுங்கி இருப்பதுதான் சரி என்றெண்ணுவாள்.
இனியனின் சினிமா அறிவை கொண்டு அனுபமா இனியனை கிண்டல் செய்திருந்தாலும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு விடுமா என்றுதான் அஞ்சி பார்வையை நாலாபுறமும் சுழல விட்டவள் அவனை அங்கிருந்து அழைத்து செல்ல முற்பட்டாள்.
“நீ தளபதி பேனாக்கா நானும் தான்” என்ற சிறுவன் “அம்மாக்கு உடம்பு முடியல அதான் இன்னக்கி ஸ்கூல் போகல” என்று இனியனுக்கு பதிலும் கூறியவன் அவனது அக்காவும் கடையில் அமர்ந்திருப்பதாக கூறினான்.
“அம்மா மருந்து வாங்கினங்களா?” என்று இனியன் பணத்தை கொடுக்க,
“காலையிலையே அப்பா ஆசுபத்ரிக்கு கூட்டிகிட்டு போனாரு” என்றவன் பூவை அனுபமாவின் கையில் கொடுத்து மீதி காசையும் இனியனின் கையில் கொடுத்தான்.
“சில்லறை வேணாம்டா வச்சிக்க”
“அக்கா திட்டும். நீ வேணும்னா படிக்க நோட்டு வாங்கிக் கொடு வாங்கிக்கிறேன்” என்றவாறே அடுத்த வண்டியை பார்த்து சென்றான்.
“உசார்த்தான்” என்று அனுபமா சொல்ல,
“அக்கா கடைலதான் இருக்கான்னு சொன்னவன் அவனோட கடை எது என்று கூட சொல்ல. திரும்ப நாம இங்க வருவோமா என்று கூட அவனுக்கு தெரியாது. வரும் பொழுது அவனை ஞாபகம் வச்சி புத்தகம் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்போமா? எதுக்கு அவன் சொல்லுறான்னு உனக்கு புரியலையா?” புன்னகைத்தான் இனியன்.
“பணம் வாங்கக் கூடாது. அது புரியுது” அனுபமா இனியனின் முகம் பார்க்க,
“நாம நாலு பேருக்கு நல்லது பண்ணனும் என்று சொல்லாம சொல்லுறான்” சிரித்தான்.
“அதுசரி. கட்டின பொண்டாட்டியையே கண்டுக்குறதில்ல. இதுல நாலு பேருக்குத்தான் நீ நல்லது பண்ண போற” முகத்தை சுளித்த அனுபமா பூவை அவன் கையில் கொடுத்து விட்டு ரெஸ்டூரண்ட்டின் உள்ளே சென்றாள்.   
“என்ன சொன்னாலும் அங்க  சுத்தி, இங்க சுத்தி  என்ன பேச சந்தர்ப்பம் மட்டும் பாரு” முணுமுணுத்தவன் அவன் பின்னால் சென்றான்.  
உள்ளே அமர்ந்து பொறுமையாக ஆடர் செய்து சாப்பிட அனுபமா முயலவில்லை. பசி தாங்க முடியவில்லை என்றவள் ஏதாவது ஆடர் செய்ய கூறினாள்.
“எத ஆடர் பண்ணாலும் கொண்டு வர அரை மணித்தியாளமாகும். உனக்கு என்ன வேணுமோ, என்ன பிடிக்குதோ அதையே ஆடர் செய்யேன். இப்படி தினமுமா வெளியே வந்து சாப்பிடுகிறோம்” சிரித்தவாறே கூறினான்.
“ஏன் நான் சமைக்கிறது நல்லா இல்லையா? இத்தனை நாளா நான் சமைக்கிறத தானே முழுங்கின” கோபம் கணக்க கேட்டாள்.
இனியன் ஒன்றும் அவளை கிண்டல் செய்ய எண்ணி கூறவில்லை. உண்மையைத்தான் கூறினான். சிரித்தவாறு கூறியதுதான் அனுபமாவின் கோபத்துக்கு காரணம். அதுவும் சற்று நேரத்துக்கு முன்பாக இனியன் சொன்ன விஷயத்தில் தன்னை விட தன் குழந்தையின் மீது அவனுக்கு பாசம் அதிகம் என்ற பொறாமை வேறு. அதை இவ்வாறுதான் அவன் மீது காட்ட முடியும். 
“நீ சமைக்க நானும் தான் காய்கறி நறுக்கித் தரேன்.  உன் பாதி வேலைய நான் செஞ்சி கொடுக்குறேன். நீ சமைக்குறதுல காரம் அதிகமா இருக்கு, உப்பு பத்தல எல்லாம் பாக்குறது நானு. அப்படிப் பார்த்தா நீ தான் சமைக்கிற என்று பெருமை பேசக் கூடாது” அனுபமா முறைக்க முறைக்க கூறி முடித்தவன்.
“எப்போவாச்சும் தான் வெளிய வந்து சாப்பிடுறோம். இங்க சமைக்கிறத வீட்டுல சமைச்சி சாப்பிட முடியாது. சமைச்சாலும் அந்த டெஸ்ட் வராது. அதுதான் உண்மை. அதனாலதான் சொன்னேன். பிடிச்சதை சொல்லுன்னு. அதுக்கு இந்தப் பேச்சு பேசுற. அமைதியாக இருந்தா ரொம்பதான் பேசுற”
“வீட்டுல நான் என்ன பேசினாலும் அமைதியா கடந்து போவ. வந்த இடத்துல பேசினா எதிர்த்து பேச மாட்டா என்ற தைரியமா?” அனுபமா அதற்கும் முறைக்க, இனியன் யாருக்கோ கையசைத்தான்.
திரும்பிப் பார்த்த அனுபமா பார்த்தீபனோடு நிர்மலா இருப்பதைக் கண்டு யோசனையாக புருவம் சுருக்கினாள்.
“இந்த பொண்ண நான் எங்கயோ பார்த்திருக்கேன் எங்க? எங்கன்னு சட்டுனு ஞாபகத்துல வர மாட்டேங்குதே” வாய்விட்டே அனுபமா கூறிவிட இனியன் அவளை யோசனையாக பார்த்தான்.
ஜான்சியை சந்திக்க சென்றவள் நிர்மலாவை எதேற்சையாக பார்த்திருப்பாள். பேசியிருக்க வாய்ப்பில்லை. நிர்மலாவை பார்த்த உடனே எங்கே பார்த்தாலென்று ஞாபகம் இல்லாததால் வாய் விட்டே கூறியதால் அனுபமா ஜான்சியை பார்க்க சென்றது உறுதியானது. ஞாபகம் வந்தால் ஜான்சியை பார்க்க சென்றதை ஒத்துக்கொள்வாளா? எதற்காக ஜான்சியை சந்தித்தாளென்று கூறுவாளா? இதுதான் இனியனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
உண்மையில் பார்த்தீபன் அனுபமா ஜான்சியை சந்திக்க சென்றதாக கூறிய உடனே நாளை ஸ்கேன் எடுக்க போகிறோம். நீ நிர்மலாவோடு எதேர்ச்சையாக வருவது போல் வந்து விடு என்று கூறியிருந்தான்.
மருத்துவமனையிலிருக்கும் பொழுதே பார்த்தீபனாவுக்கு குறுஞ்செய்தியை தட்டி விட்டிருக்க, என்ன நடக்கப் போகுதோ என்று இனியனை வசைப் பாடியவாறு அவனும் நிர்மலாவை அழைத்துக் கொண்டு வந்து விட்டான். 
“என்னடா ஆபீசுக்கு கட்டடிச்சுட்டு கட்டிக்க போற பொண்ணோட ஊரு சுத்துறியா?” இனியன் ஆரம்பிக்க,
“ஆமாடா…” அவனை முறைத்த பார்த்தீபன் அனுபமாவுக்கு தலையசைத்து புன்னகைத்து நிர்மலாவை அறிமுகம் செய்து வைத்தான்.
நிர்மலா புன்னகைக்கவுமில்லை. அமரவுமில்லை. பார்த்தீபனிடம் கிளம்பலாமா என்று கேட்டாள்.
“உங்கள எங்கயோ பார்த்திருக்கேன். எங்க பார்த்தேன்னுதான் ஞாபகம் இல்ல” என்றாள் அனுபமா.
நிர்மலாவுக்கு அனுபமாவை பார்த்த உடன் பிடிக்கவில்லை என்று அனுபமா புரிந்துக் கொண்டிருந்தால் பேசியிருக்க மாட்டாள். இனியன் மீது கோபமாக இருக்கிறாள் என்று அறிந்திருந்தால் பார்த்தீபனே அழைத்து வந்திருக்க மாட்டான். 
கணவன் மனைவி தனியாக வந்திருக்கிறார்கள் அவர்களின் தனிமை தங்களால் கெடக் கூடும் என்று அவள் நினைத்து பார்த்தீபனை கிளப்புவது போல்தான் தெரிந்தது.
அனுபமா பேசியதால் அடக்கப்ப கோபத்தில் இருந்தவள் வாய் திறந்தாள். “நீங்க ஜான்சி அக்கா வீட்டுக்கு வந்திருந்தீங்கள்ல. அப்போ என்ன பார்த்தீங்க. ஆனா உங்களுக்கு நான் யார் என்று தெரியாதே”
ஜான்சி மற்றும் இனியனின் காதலுக்கு தூது போனவர்களில் நிர்மலாவும் ஒருத்தி. ஜான்சியின் காதல் கைகூடாததற்கு காரணம் அனுபமா மற்றும் வரதராஜன் என்ற கோபம் நிர்மலாவுக்குள் இருக்க நிர்மலா கொஞ்சம் முறைப்போடுதான் அனுபமாவுக்கு பதிலும் கூறியிருந்தாள்.
இனியனின் கல்யாண வீடியோவை நிர்மலா பார்த்திருக்கின்றாள். அது தவிர பார்த்தீபனைன் அலைபேசியில் இனியனின் திருமணம் புகைப்படங்களை பார்த்திருக்கின்றாள் அதனால் அவளுக்கு அனுபமாவைத் தெரியும். அதனால்தான் அவள் பார்த்தீபனிடம் அனுபமா ஜான்சியை பார்க்க வந்ததாக கூறியிருந்தாள்.
“ஓஹ்… அப்படியா…” என்று அனுபமா பதில் கூறினாலும் நிர்மலா கோபமாக இருப்பது ஏன் என்று புரியாமல் அவர்களுக்குள் ஏதாவது பிரச்சினையோ என்று பார்த்தீபனை பார்த்தாள். 
அவர்களின் பேச்சிலையே அனுபமா ஜான்சியை சந்தித்துப் பேசியது இனியனுக்கு தெளிவாக புரிந்தது. இதை பற்றி அனுபமாவிடம் பிறகு பேச வேண்டும் என்று எண்ணினான்.
ஆனால் நிர்மலா பொறுமையை இழந்து “எப்படியோ ஜான்சி அக்காவை மிரட்டி அமெரிக்காவுக்கு அனுப்பிட்டீங்க. உங்க புருஷன் உங்களுக்கு கிடைச்சிட்டாரு. குழந்தை வேற வரப்போகுது. ரொம்ப சந்தோஷமாக இருக்கீங்க போல. அடுத்தவங்க வாழ்க்கையை பறிச்சி எப்படித்தான் சந்தோசமா வாழுறீங்களோ” குத்தலாக கூறினாள் நிர்மலா.
“நான் ஜான்சியை மிரட்டினேனா? எப்போ? அத நீ பார்த்தியா?” சற்று முன் சினேகமாக புன்னகைத்தவள் தான் நிர்மலா வைத்த குற்றச்சாட்டில் கோபம் கணக்க கேட்டாள் அனுபமா.
“நிர்மலா என்ன பேசுற? அமைதியாக இரு” பார்த்தீபன் அதட்ட,
“என்ன என்னய அமைதியா இருக்க சொல்லுற? காதலிக்கிறது என்ன அவ்வளவு பெரிய குத்தம்மா? இவங்கப்பா என்னடான்னனா இவரு கல்யாணத்துக்கு சம்மதிக்கணும் என்று ஜான்சி அக்காவையும், அவங்கப்பாவையும் லாக்கப்ப வச்சி அந்த அடி அடிச்சாங்க.
அவ்வளவு அடியையும் தாங்கிக்கிட்டு உங்க ப்ரெண்டுக்காக காத்துகிட்டு நின்னாங்க. ஆனா இவரு இந்தம்மாகிட்ட கல்யாணத்த நிறுத்த சொல்லிட்டு கையகட்டிக்கிட்டு நின்னிருக்காரு. இவங்க இவர்தான் வேணும் என்று சுயநலமா இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இவரும் கல்யாணம் பண்ண பொண்ணோட சந்தோசமா குடும்பம் நடாத்தி புள்ளைய வேற பெத்துக்க போறாரு. இவரெல்லாம் உங்களுக்கு ப்ரெண்ட்டு. வாங்க போகலாம்.
இல்ல. ப்ரெண்டுதான் முக்கியம் என்றா இங்கயே இருங்க” என்றவள் விறுவிறுவென கிளம்பி வெளியே சென்று விட்டாள்.  
“சாரி சிஸ்டர் அவ எதோ கோபத்துல பேசுறா மனசுல வச்சிக்காதீங்க” என்ற பார்த்தீபன் இனியனிடம் விடைபெறாமலையே நிர்மலாவின் பின்னால் ஓடியிருந்தான்.
நிர்மலா பார்தீபனோடு வாக்குவாதம் செய்வதும், பார்த்தீபன் அவளை சமாதானப்படுத்துவதும் கண்ணாடித்தடுப்பினூடாக தெரிந்தது.
குழந்தையின் வரவால் மறந்து போயிருந்த நினைவுகள் நிர்மலா பேசியதால் இனியனை தாக்க இறுக்கி நின்றான். 
முதலிரவில் இனியன் அவ்வாறு நடந்துக்க கொண்டதற்கு காரணமும், அவன் கோபமும் இப்பொழுது அவளுக்கு புரிய இனியனை ஏறிட்டு “சாரி உங்கப்பா இப்படியெல்லாம் செய்துதான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சரென்று எனக்குத் தெரியாது” என்றாள் அனுபமா.
“நீ கல்யாணத்த நிறுத்தாததினால ஜான்சி தற்கொலை செய்யப் போனா. அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா அதுக்கு நீதான் காரணம். அப்பா பண்ணதுக்கு நீ எதுக்கு சாரி கேக்குற? நீ எதுக்கு ஜான்சியை பார்க்கப் போன?” அதை சொல்லு எனும் விதமாக இனியன் பார்க்க வைட்டர் வந்து என்ன வேண்டும் என்று கேட்டார்.
நடந்த கலவரத்தில் அனுபமாவின் பசி பறந்தோடியிருந்தது. இட்லி போதும் என்றாள். இனியனும் தனக்கும் இட்லியை வரவழைத்தவன் மீண்டும் அனுபமாவிடம் ஜான்சியை எதற்காக சந்தித்தாய் என்று கேட்டான்.
நிர்மலா கூறியது போல் அனுபமா ஜான்சியை மிரட்ட சென்றிருப்பாளென்று இனியனுக்கு தோன்றவில்லை. அனுப்பமாவே காரணத்தை சொன்னால் தான் உண்டு. அதனால் தான் இடத்தையும் பொருட்படுத்தாது, நிர்மலா பேசியதால் அவள் மனதில் என்ன தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கும் என்று எண்ணாமல் தனக்குண்டான பதில் கிடைக்கும் வரை அவளை கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை இனியன். 
அனுபமாவோ ஜான்சியை சந்தித்ததை பற்றி இனியனிடம் மறைக்க வேண்டும் என்று எண்ணியிருக்கவில்லை. அவசியமில்லை என்றுதான் நினைத்தாள். இன்று நிர்மலாவின் மூலம் அது தெரிய வந்து இனியன் ஏன் என்று கேட்கிறான் என்றுதான் நினைத்தாள். ஆனால் அன்று அவன் அலைபேசி அழைப்பு விடுத்த பொழுது தான் அதை செவி மடுக்கவில்லையென்பதை அவன் நம்பவில்லை. அதை அவனிடம் எவ்வாறு புரியவைப்பது என்றும் அவளுக்குத் தெரியவில்லை.  
இன்றாவது சொல்லலாம். புரிந்துக்கொள்ளும் மனமிருந்தால் புரிந்துகொள்வான் என்றெண்ணினாள் அனுபமா.
அவள் அவ்வாறு எண்ணவும் நிர்மலா மற்றும் இனியன் பேசியதன் தாக்கம்தான் காரணம். இல்லாவிடில் முறைத்து விட்டு சென்றிருப்பாள்.
“மன்னிப்பு கேட்க போனேன்” சாதாரணமாகத்தான் கூறினாள் அனுபமா.
“மன்னிப்பு கேட்க போனியா? ஓஹ்… கல்யாணத்த நிறுத்த சொன்னப்போ நிறுத்தல இல்ல அதுக்கா?” கொஞ்சம் கிண்டல் கலந்த குரலில் தான் கேட்டான் இனியன்.
என்னத்தான் குழந்தைக்காக அனுபமாவை அனுசரித்துக் கொண்டு அவளோடு வாழ வேண்டும் என்று இனியன் முடிவு செய்து பொறுமையாக போனாலும் தான் வாழ வேண்டிய வாழ்க்கையே வேறு. அது இவளால் தான் திசை மாறி விட்டது என்று எண்ணும் பொழுது இனியனால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவான்.
முன்பு போல் வார்த்தையால் கூட அனுபமாவை வதைக்க முடியவில்லை. கோபத்தை எத்தனை நாட்கள் எவ்வாறு அடக்குவான்? கிண்டலாக கூறி விட்டான்.   
“நீ போன் பண்ணப்போ அந்த போன் கால நான் எடுத்தது உண்மைதான். ஆனா நீ கல்யாணத்த நிறுத்த சொன்னதை நான் கேட்கவேயில்லை. அத நான் எத்தனை தடவை சொன்னாலும் நீ நம்பப் போறதுமில்லை. இப்போ உனக்கு நான் ஜான்சியை பார்க்கப் போனது எதுக்கு என்று தானே தெரியணும் சொல்லுறேன் கேளு” என்றாள். 
இட்லியும் வந்து சேர சாப்பிட்டவாறே இனியன் முறைக்க, முறைக்க, கூற ஆரம்பித்தாள் அனுபமா.

Advertisement