Advertisement

அத்தியாயம் 18
தன்னை இறக்கி விட்டு இனியன் அவனது வீட்டுக்கு செல்வானென்று அனுபமா எதிர்பார்க்க, அவனோ அவளோடு மின்தூக்கியில் நுழைந்திருந்தான்.
நடுசியாகி விட்டது. அதனால் கூடவே வந்திருப்பான் என்று எண்ணியவள் எதுவும் கேளாமல் அமைதியாக இருந்தாள்.
வீட்டுக்கு வந்த அனுபமா இனியன் துணி மாற்றுவதைக் கண்டு “நீ உன் வீட்டுக்கு போகலையா?’ என்று கேட்க
“எதுக்கு” என்று இவன் அவளை புரியாது பார்த்தான்.
“பங்க்ஷன் முடிஞ்சி நாம அங்க வருவோம் என்று உங்கம்மா எதிர்பார்ப்பாங்க. நான் இல்லைனாலும் உன்ன எதிர்பார்ப்பாங்க” என்றவள் மேற்கொண்டு பேசவில்லை.
நிலுபமாவுக்காக அவளும்தான் செல்ல வேண்டும். அந்த வீட்டில் நடந்த சம்பவங்களால் அவளால் அந்த வீட்டுக்கு செல்ல மனம் வரவில்லை. தான் அந்த வீட்டு மூத்த மருமகள். அங்கிருப்பவர்கள் தன்னை பற்றி கேட்கக் கூடும் தன்னை பற்றி கேட்பவர்கள் மூத்த மகனான இனியனை பற்றிக் கேளாமல் இருப்பார்களா? இனியனை தான் தான் அனுப்பவில்லையென்று அன்னம் குற்றம் சொல்வாள் என்று அனுபமா நினைத்தாள். தான் நினைத்ததை கணவனிடம் கூறத் தயங்கினாள்.
தான் நினைத்ததை கூறினால் இனியன் என்ன நினைப்பானோ என்று அனுபமா தயங்கவில்லை. மனதில் நினைத்தைக் கூறுமளவுக்கு இருவருக்கிடையில் நெருக்கமுமில்லை. பேச்சுவார்த்தையுமில்லை என்பதே உண்மை.
அனுபமா என்ன கூற விளைகிறாள் என்றோ,   அவளின் தயக்கமோ இனியனுக்கு புரியவில்லை. “நான் அங்க போய் கணிக்கு பர்ஸ்ட் நைட்டுக்கு டிப்ஸ் கொடுக்கவா? நானே டயட்ல இருக்கேன். பேசாம தூங்கு” என்றான்.
“என்ன இவன் புரிந்துக்கொள்ளாமல் கிண்டலாக பேசுகிறான்” என்று அனுபமா இனியனை முறைத்தாலும் அவனிடம் விலாவரியாக பேசாமல் “வரும் போது உங்கம்மா கிட்ட சொல்லிட்டாச்சும் வந்தியா? போன போட்டு சொல்லிடு. இல்லனா திட்ட போறாங்க” என்றாள்.
தனக்கு உடம்பு படுத்துவதால் வந்து விட்டதாக கூறினால் மாமியார் ஏற்றுக்கொள்வாளா? நிச்சயமாக மாட்டாள். உண்மையை கூறினாள் பிரச்சினை சிறிது என்று தான் இனியனுக்கு அலைபேசி அழைப்பாவது விடுக்குமாறு கூறினாள்.
“என்னயெல்லாம் தேட மாட்டாங்க. தேடினா கணி இல்ல அப்பா சமாளிப்பாரு. போன் பண்ணா உன்னையும் சேர்த்து திட்டுவாங்க. நீ அவங்கள பத்தி யோசிச்சு டென்ஷனாகாம அமைதியா தூங்கு” என்றவன் அவளுக்குண்டான மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தான்.
இதற்கு மேல தான் என்ன சொல்ல?  அவன் அன்னை அவனைத்தான் கேட்பாள். தன்னிடம் கேட்க மாட்டாள். அவனை கேட்டால் அவனே பார்த்துக்கொள்ளட்டும். அமைதியாக தூங்களானாள் அனுபமா.
இனியன் போன்ற சிலர் எந்த ஒரு விஷயத்தையும் பாரதூரமாக சிந்திக்கவும் மாட்டார்கள். கவலைக் கொள்ளவும் மாட்டார்கள்.
பிரச்சினை வரும் பொழுதுதான் சிந்திக்கவே ஆரம்பிப்பார்கள்.
அனுபமா போன்றவர்கள் இவ்வாறெல்லாம் நடக்கக் கூடும் என்று எச்சரிக்கை உணர்வோடு இருப்பதினால் பிரச்சினைகளிலிருந்து தப்பிவிடுவார்கள். பிரச்சினையில் சிக்கினாலும் சமாளித்து வந்து விடுவார்கள். அதற்கு தெளிவான மனநிலையும், மனதைரியம் ரொம்பவும் அவசியம்.
இரு துருவங்களாக இருக்கும் இவர்கள் இருவருக்குள்ளும் பேசி கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டாலே ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ள வாய்ப்பு அமைந்திருக்கும். 
இனியனுக்கும் அனுபமாவுக்கும் நடுவில் குழந்தையை பற்றிய பேச்சிருக்கும். மாத்திரை போட்டியா? என்ன சாப்பிட தோணுது? ஏதாச்சும் வேணுமா? என்று இனியன் கேட்பான். பசிக்கும் பொழுது பிடிவாதத்தையும், கோபத்தையும் இழுத்துப் பிடித்துக் கொண்டு இருக்க முடியுமா என்ன? இத சாப்பிடணும் போல இருக்கு வாங்கிட்டு வாங்க என்று அனுபமாவும் சொல்வாள்.
இன்றுதான் குழந்தையை தவிர்த்து அன்னத்தை பற்றி பேசியிருக்கின்றார்கள். இவர்களை பற்றி என்று பேசுவார்களோ?
இனியனும் தூக்கத்தை தொலைத்து விழாவில் நடந்ததை பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
தான் லண்டன் சென்ற பின் அனுபமா ஜான்சியை சந்தித்து பேசியிருக்கிறாளென்றால் என்ன காரணமாக இருக்கும். இனியனுக்கு புரியவில்லை.
“தன்னை விட்டு விலகுமாறு கூறி சண்டை போட சென்றாலோ?”
“இருக்காது. அப்படியாயின் விவாகரத்து கேட்டிருக்க மாட்டாளே”
“என்னிடமே குழந்தையை கொடுக்க முடியாதென்று கூறியவள் குழந்தையை ஜான்சியிடம் கொடுப்பதாக கூற சென்றிருக்கவும் வாய்ப்பில்லை” எவ்வாறு கண்டுபிடிப்பது என்று சிந்தித்தவனுக்கு ஹரி பேசியதும் நியாபகத்தில் வந்தது.
“என் பேரக் கேட்டே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாளா?” என்றவாறே அனுபமாவை பார்க்க, அவள் தூங்கியிருந்தாள்.
“அப்பா மேல பாசத்துல ஓகே சொல்லியிருப்பாள். என் பொண்ணையும் இவள போலயே அப்பா மேல பாசக்காரியாகத்தான் வளர்க்கணும்” என்றெண்ணிக் கொண்டான்.
“பொறக்கப் போறது பொம்பள புள்ளத்தானென்று முடிவு பண்ணிட்டியா?” அவன் மனம் கேட்க,
“சின்ன வயசுல ஒரு தங்கச்சி இருந்தா நல்லா இருக்குமென்று நினைச்சி இருந்திருக்கேன். வள்ளிய தங்கச்சியா பார்த்தா அம்மா காத திருகி விட்டா. அதனாலயே சின்ன வயசுல இருந்து வள்ளியை பிடிக்காம போச்சு. அது மட்டுமா? அவ பேச்சும் தான்”
“அப்போ அனுபமா போல பொண்ணு இருந்தா ஓகே தான்” என்றது அவன் மனம்.
“அவளும் வாயாடி தான். தனியா இருக்கும் பொழுது ஒருமைல லெப்ட் அண்ட் ரைட் வாங்குறவ அவங்கப்பா முன்னாடி என்னமா மரியாதையா பேசுறா. ரொம்ப தைரியமானவைதான்” தனக்குள் சிரித்துக் கொண்டவனின் பார்வை அவள் வயிற்றின் மீது விழ மெதுவாக கையை அவள் வயிற்றின் மீது வைத்தவன் குழந்தையோடு பேச ஆரம்பித்தான்.
அனுபமா விழித்திருந்தால் அவனால் இவ்வாறு கையை வைத்திருக்கத்தான் முடியுமா?
ஒருநாள் இனியனுக்கு காரியாலயத்தில் வேலை அதிகமாக இருக்கவே அனுபமாவை அழைத்து இன்று மட்டும் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு செல்லுமாறு கூற, அவனை அலைபேசியிலே வசைபாட ஆரம்பித்தாள் அனுபமா.
கடுப்பான இனியன் அலைபேசியை துண்டித்திருந்தான். வேலையை முடித்து அவன் வீடு செல்ல ஆயத்தமாகும் தருவாயில் தான் இந்த வேலை வந்தது. முடியாது என்று கூற முடியவில்லை. ஒருநாள் தானே என்றுதான் அனுபமாவை அழைத்துக் கூறியிருந்தான். நேரங்ககாலத்தோடு தெரிய வந்திருந்தால் வடிவேலை அல்லது கணியை அழைத்து அனுபமாவை வீட்டில் விடும்படி கூறியிருப்பான்.  
“இதுக்குதான் நான் அப்பா கூடவே போகிறேன் என்று சொன்னேன். பெரிய இவன் போல கூட்டிகிட்டு போறேன், கூட்டிகிட்டு வரேன் என்றான். எந்த வேலையையும் பொறுப்பாக செய்ய மாட்டான்” கோபமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் அனுபமா.
களைப்பாக வீடு வந்த இனியனை பிடி பிடியென்று அனுபமா பிடிக்க, இனியனும் எவ்வளவுதான் பொறுத்துப் போவான் அவனும் பதிலுக்கு கத்த ஆரம்பித்தான்.
“இதுதான் உன் சுயரூபம். இதோ இப்போ வந்திருச்சு” என்றாள் அனுபமா.
“ஆமான்டி என் குழந்தைக்காகத்தான் பொறுமையாக இருக்கேன்” என்றான் இனியனும்.
“அதானே…” என்றவள் சட்டென்று வயிற்றில் கையை வைத்துக் கொண்டாள்.
“என்னாச்சு?” இனியன் பதற
“உன்ன பேசினா உன் குழந்தைக்கும் பிடிக்கல. இந்த உதை உதைக்கிறான்” என்றாள்.
இனியனின் முகத்தில் சட்டென்று புன்னகை மலர்ந்ததோடு “என்ன உதைக்கிறான் என்று சொல்லுற? உதைக்கிறா என்று சொல்லு பொண்ணுதான் பொறுப்பா எனக்கு பொண்ணுதான் வேணும்” என்று அவள் வயிற்றில் கை வைத்திருந்தான். 
“சீ கையெடு. பொண்ணு வேணுமா? பொண்ணு? எதுக்கு? பொண்ணு பொறந்தா உன் எக்ஸ் லவர் பேர வைச்சி, தினமும் கூப்பிட்டு கொஞ்சவா?” என்றவள் இனியனின் கையை தட்டிவிட்டு முறைத்தவாறே அகன்றாள்.
“என்ன நாம யோசிக்காததை கூட பேசுறா” சிரிப்பு எட்டிப் பார்க்க இனியனின் சோர்வு பறந்து குழந்தையின் எண்ணம் தொற்றிக்கொள்ள வயிற்றில் கை வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.
“என் கையையா தட்டி விடுற… உன்ன…” என்றவன் அனுபமா தூங்கிய பின் இவ்வாறுதான் குழந்தையோடு பேசுவான்.
சாந்திமுகூர்த்தத்துக்காக நிலுபமாவை அன்னத்தின் சொந்தக்கார பெண்கள் தயார் செய்து கொண்டிருந்தனர். கலைவாணியும் அங்கேயேதான் அமர்ந்திருந்தாள். அன்னம் வந்து பார்த்து விட்டு கழுத்தை திருப்பிக் கொண்டு சென்று விட்டாள்.
அனுபமா வருவாளென்று எதிர்பார்த்தாளா தெரியவில்லை. கலைவாணியிடம் கேட்கவும் முடியாது. சொந்தக்கார பெண்களின் முன்னிலையில் கோபத்தைக் காட்டவும் முடியாமல் தான் சென்றாள். 
அலங்காரம் செய்த பெண்கள் வெளியேறி உடனே கலைவாணி சின்ன மகளுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தாள்.
“இங்க பாரு நிலு, நீ ஒன்னும் சின்னக் குழந்தை கிடையாது. முறைச்சிகிட்டே திரியாம மாப்பிளை கூட ஒழுங்கா குடும்பம் நடத்துற வழியப்பாரு. புரியுதா?”
“போதும்மா… எத்தனை நாளைக்கு இதையே சொல்லிக்கிட்டு இருப்ப?” கடுப்பானாலும் சிரித்து வைத்தாள்.   
அனுபமா அனுசரித்து போவாள். நிலுபமா அடம்பிடிப்பவள். கணியோடு சண்டை போடுவாள். அதனால் அன்னத்துக்கும் அவளுக்குமிடையில் பிரச்சினை உருவாக்க கூடும் என்று அஞ்சியே சின்ன மகளின் காதை குடைந்து கொண்டிருந்தாள்.
அது மட்டுமல்லவே கணியோடு சண்டை பிடித்தால், அதை அவன் இனியனிடம் எதோ ஒரு தருவாயில் கூறாமல் இருப்பானா? அப்படி கூறும் பொழுது அது அனுவுக்கு தெரிந்து விட்டால் அவள் எவ்வளவு துன்பப்படுவாளென்று அன்னையாக கலைவாணி அறிவாள். அதனாலே சின்ன மகளுக்கு புத்திமதியை வாரி வழங்கினாள்.   
“சிரிச்சு சமாளிக்கலாமென்று பார்க்காத. உன்ன பத்தி எனக்குத் தெரியும். உன்னால அக்கா வாழ்க்கைல ஏதாவது பிரச்சினை ஆகிருச்சு அப்பொறம் நான் பேச மாட்டேன். என் கைதான் பேசும்” என்று மிரட்டினாள்.
அனுபமாவின் வாழ்கை என்றதும் நிலுபமா அன்னையை முறைக்க கூட இல்லை. “நான் பாத்துக்கிறேன்மா… டென்ஷனாகாதே” என்றவள் அன்னையை சீண்டவேன்றே “சரி சரி போய் என் அத்தைய வரச் சொல்லுறியா?”
“எதுக்கு?” கலைவாணியின் வாய் கேள்வி கேட்டாலும் நான் போய் அவளை அழைக்கணுமா? என்ற கேள்விதான் தேங்கி இருந்தது.
“மருமகள் மகனோடு வாழ்க்கையை நடத்த போறா, ஆ… தொடங்க போறா… சாந்திமுகூர்த்தத்துக்கு போக… ஆசிர்வாதம் வாங்க வேணாம். போ… போ… போய் கூட்டிகிட்டு வா” சிரிக்காமல் அன்னையை விரட்டினாள்.
“அவளெல்லாம் ஒரு பெரிய மனிசி. அவ வாழ்த்தித்தான் நீ சீரும் சிறப்புமா வாழ்ந்திடப் போற பாரு. அவளை பார்த்தாலே எரிச்சலா இருக்கு. அவளெல்லாம் ஒரு பொம்பளையா? மூதேவி. நல்லவங்களெல்லாம் திடீரென்று மாரடைப்பு வந்து செத்து போறாங்க. கேன்சர் என்று சொல்லுறாங்க. இவளை மாதிரி இருக்கும் ஜந்துக்களுக்கு ஒன்னும் ஆகுறதுல்ல. இதெல்லாம் பாக்கும் போது கடவுள் மேலதான் கோபம் கோபமா வருது” அடக்கப்பட்ட கோபத்தோடு பேசினாள் கலைவாணி.
“என்ன பண்ணுறது கலை இப்படியெம் நடக்கணும் எங்குறது விதி. கடவுளை திட்டி என்ன பிரயோஜனம். நாமதான் பார்த்து சூதானமா நடந்துகிட்டு இருந்திருக்கணும். ஏமாந்துட்டோம்” சிரித்தாள் நிலுபமா.
“சேத்துல மலர்ந்த செந்தாமரையா கணி மாப்புள இருக்கான். நீ ஒழுங்கா இரு” அப்பொழுதும் சின்ன மகளுக்கு குட்டு வைத்தாள். 
“எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். உன் பாசத்தை கொள்ளையடிச்ச உன் சின்ன மருமகன் இருக்கானே. அக்காகிட்ட மாமியாருக்கு எதிரா, அதன் அவன்காத்தாளுக்கு எதிரா போலீஸ் கம்பளைண்ட் கொடுக்க சொன்னானா?”
“ஆமாம், ஆமாம், உன் அத்தையையே தூக்கி உள்ள வைப்பேன்னு சொன்னான்டி அப்படி நடக்குறது போல என் கனவுல கூட வந்தது. ஆத்தா மாரியாத்தா என் கனவு பலிக்கனும் என்று வேண்டிகிட்டேன்” கையை வாயின் அருகில் கொண்டு வந்து கலைவாணி நிலுபமாவுக்கு இரகசியமாக கூறிச் சிரித்தாள்.
அப்படியாயின் கணி பொய்யுரைக்கவில்லை. ஆனாலும் தன்னை ஏமாற்றி திருமணம் செய்தவனை மன்னிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ நிலுபமாவின் பிடிவாத குணம் கொணட மனம் தயாராக இல்லை.
கணியின் அறைக்குள் நுழைந்தவளோ அவன் எங்கே என்று கூட பார்க்கவில்லை. அணிந்திருந்த நகைகளை கழட்டி வைக்கலானாள். தலையில் சூடியிருந்த மல்லிகையையும் கழட்டி வைத்தவள் மாற்று துணியோடு குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
பால்கனியில் கேஸ் விஷயமாக அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த கணிக்கு நிலுபமா அறைக்கு வந்தது தெரியவில்லை. உரையாடலை முடித்துக் கொண்டு அறைக்கு வந்தவன் நிலுபமா வரும்வரை கதவை பார்த்தவாறு அமர்ந்து கொண்டான்.
நிலுபமாவோ குளியலறைக்கு கதவை திறந்து கொண்டு வந்து கட்டிலில் ஏறி தூங்கலானாள்.
“இவ எப்போ வந்தா? வாஷ் ரூம்லயா இருந்தா? சத்தமே கேட்கலையே” யோசித்தவனின் மனசாட்ச்சியோ “திருடனோ, கொலையாளியோ புகுந்திருந்தாலும் அவ்வளவுதான்” என்று கேலி செய்தது.
“என் ரூமுக்குள்ள என்ன மீறி யாரு வருவாங்க என்ற எண்ணம். அதுவும் வீட்டுல இத்தனை பேர் இன்னைக்கி இருக்கும் பொழுது” மனசாட்ச்சியை அடக்கியவன் அவளையே பார்த்திருந்தான்.      
அவள் கட்டிலில் ஏறி படுத்துக் கொள்ளவும் “இங்க புருஷன் என்று ஒருத்தன் வெட்டியா வைட்டிங்ல இருக்குறதறது தெரிஞ்சும் கண்டுக்காம போய் தூங்குறாளா… இவளுக்கு என்ன ஒரு திமிரு” கோபமாய் வேட்டியை மடித்துக் கட்டியவன் பாய்ந்து சென்று அவள் மேல் விழுந்தான்.
“டேய் எரும மாடே. கண்ணு தெரியலையா? அந்த பக்கம் வந்து தூங்கு” என்று அவனை தள்ளி விட முயன்றாள் நிலுபமா.  
ஆனால் அவனோ அவள் விலகி விடாதபடி இறுக அணைத்துக் கொண்டு “வெக்கப்பட்டு கதவை சாத்தினோமா? பால் செம்ம கைல கொடுத்து புருஷன் கால் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோமா என்று டைம் வேஸ்ட் பண்ணாம, டிரஸ் சென்ஞ் பண்ணி என் வேலைய லேசாகிட்டியே” என்றவாறே அவள் கழுத்தில் முத்தம் வைத்தான்.
“என்ன?” என்று அதிர்ந்தவள். சிரமப்பட்டு அவன் புறம் திரும்பி “இது உனக்கே ஓவரா தெரியலையா? எனக்குத்தான் உன்ன பிடிக்காதே, அத தெரிஞ்சும் இப்படி பண்ணுற? உனக்கு வெக்கமே இல்லையா? அதுவும் என்ன ஏமாத்திட்டோம் என்ற கில்டி கொஞ்சம் கூட இல்லாம” நிலுபமா கத்தவுமில்லை. அவனை தள்ளி விடவுமில்லை. மனதளவில் அவனை காயப்படுத்த முயன்றாள்.
“கில்டியா? எதுக்கு? நான் உன்ன லவ் பண்ணுறேன். கொஞ்சம் சுயநலமே யோசிச்சு எனக்காகவும் என் அண்ணனுக்காகவும் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உன் அக்காகாக நீயும் இந்த கல்யாணத்துல இருந்து எஸ்கேப்பாக முடியாது”
“ஓஹ்… அப்போ நீ என் கூட பலவந்தமாக குடும்பம் நடாத்தி கொழந்த பெத்துக்க போற. உன் அண்ணன் என் அக்காக்கு பண்ணது போல” அவ்வார்த்தைகள் அவன் இதயத்தை தாக்க கணியின் கைகள் நிலுபமாவின் மேனியிலிருந்து கொஞ்சம் தளர்ந்தாலும் விட்டு விலகவில்லை.
“உன்ன கட்டாயப்படுத்தி கஷ்டப்படுத்த மாட்டேன். அதுக்காக உன்ன தொடாமலும் இருக்க மாட்டேன். வீணா மனச போட்டு குழப்பிக்காம தூங்கு” என்றவன் அவள் இதழ்களில் மெதுவாக முத்தமிட்டு விட்டு அவள் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டான்.
இதழ் தீண்டிச் சென்ற முதல் முத்தம் நிலுபமாவுக்கு மேனி முழுவதும் மின்சாரம் தாக்கிய உணர்வுதான்.
    
அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல். “கொஞ்சம் அங்கிட்டு போய் தூங்குறியா? யாராவது கால, கைய போட்ட என்னக்கு தூக்கம் வராது” என்றாள் நிலுபமா.
“நீ ஒரு இம்ச டி. தினமும் என் கனவிலும், நினைவிலும் வந்து இம்ச பண்ணிகிட்டே இருந்த. இப்போ பாரு. என் ரூம்லயே இருந்து என்ன நிம்மதியா தூங்கக் கூட விடாம இம்ச பண்ணுற. பேசாம தூங்கு டி” என்றவன் அவளை விலக விடவே இல்லை.
அவனை காயப்படுத்த நினைத்தவளோ இவனை எவ்வாறு கையாளுவது என்ற சிந்தனையிலையே தூங்கிப் போனாள்.
தூங்கும் அவளை ரசித்துப் பார்த்திருந்த கணியோ “எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். அத உனக்கு எப்படி புரிய வைக்கிறது என்றுதான் தெரியல” என்று புலம்பப்பலானான்.
அடுத்த நாள் காலை ஸ்கேன் பரிசோதனைக்காக அனுபமாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்திருந்தான் இனியன்.
மூன்றாம் மாதம் பரிசோதனையின் பொழுது அவன் அருகில் இருக்கவில்லை. மருத்துவ கோப்பில் கருவாக இருந்த தன் குழந்தையை பார்த்து சிலிர்த்தான்.
இன்று தன் குழந்தையின் அசைவை காண ஆவலாக வந்திருந்தான். அன்னம் அலைபேசி அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்க, அலைபேசியை அமைதி படுத்தி வைத்தான்.
“யாரு கூப்பிடுறாங்க பேச வேண்டியது தானே” நாநுனியில் வந்ததை அனுபமா கூறாமல் அவனை பார்த்து விட்டு அமைதியானாள்.
அவள் பார்வையின் அர்த்தம் இனியனுக்கு புரிந்தாலும் “அம்மா தான் கூப்டுகிட்டே இருக்காங்க” என்று கூறிடவில்லை. அன்னம் என்ன நலம் விசாரிக்கவா அழைத்தாள்? நேற்று ஏன் வீட்டுக்கு வரவில்லை என்று கேட்டு திட்டுவாள். அலைபேசியில் அன்னையை சமாளிக்கவும் முடியாது. அதுவும் மருத்துவமனையில் என்று அலைபேசியை அமைதியாக வைத்தான்.  
ஸ்கேன் பரிசோதனைக்காக அனுபமாவை தாதி அழகாவும் இனியனும் கூடவே எழுந்து கொள்ள இவன் முன்னால் துணியை விலக்கி படுத்திருக்க வேண்டுமா?  “நீ எங்க வர?” என்று கேட்டு முறைத்தாள் அனுபமா.
“நான் என் பாப்பாவை பார்க்கணும். நர்ஸ் ஒன்னும் சொல்லல. நீ என்ன குறுக்க வாடி…” அவள் முறைக்க முறைக்க உள்ளே அழைத்து சென்றான்.
அனுபமா நினைத்ததற்கு மாறாக இனியனின் கண்களை ஸ்கேன் திரையை தவிர வேறெங்கும் அகலவில்லை. குழந்தையின் அசைவை பார்த்தவாறு மருத்துவர் கூறுவதையே கேட்டுக் கொண்டிருந்தவன் தனக்குண்டான சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளலானான்.
அனுபமாவுக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான். இவனுக்குள் இவ்வளவு பிள்ளை பாசமா? என்ன காரணம்? அதை தெரிந்துக்கொள்ளாமல் மண்டையே வெடித்து விடும் போலிருந்தது.
ஸ்கேனுக்காக நீர் அதிகம் குடித்ததில் இனியனிடம் கேள்வி கேட்கும் முன்பாக கழிவறையை நோக்கி ஓடினாள்.
அதே நேரம் அன்னம் அழைக்க, “என்னம்மா… அனுவ கூட்டிகிட்டு டாக்டர் கிட்ட வந்திருக்கேன் என்ன விஷயம்? போன் பண்ணிக்கிட்டே இருக்க” அன்னம் ஆரம்பிக்கும் முன் இவன் முக்கியமான வேலையில் இருப்பதாக கூற வீட்டுக்கு வருமாறு கூறினாள் அன்னம்.
“ஈவ்னிங் வரேன்” என்றவனும் அலைபேசியை துண்டித்திருந்தான்.
இனியன் அவ்வாறு கூறா விட்டால் எங்கே இருக்கின்றான் என்று கூட கேளாமல் அவனை திட்டித்தீர்த்திருப்பாள் அன்னம். அவனை மட்டுமா? இனியன் திருமணத்துக்கு முன் தாய் பேச்சை தட்டவே தட்டாத மகன் போலவும் திருமணத்துக்கு பின் அனுபமாவின் பேச்சை கேட்டு நடப்பவன் போலவும் அனுபமாவையும் சேர்த்து திட்டுவாள்.
அன்னம் அலைபேசி அழைப்பு விடுத்தாளே இதைத்தான் சொல்லி ஆரம்பிப்பாள். வீட்டுக்கு வருவதில்லையென்ற குறை வேறு. இனியனுக்கு காரியாலயம் விட்டா வீடு. வீட்டு வேலைகள் என்று நேரம் செல்கிறது. இதில் எங்கே மாலை வீட்டுக்கு செல்வான்?
ஞாயிற்றுக்கிழமை தான் அன்னத்தை பார்க்க செல்வான். சென்றால், அன்பாக பேசி சமைத்துக் கொடுக்கிறாளா? அவன் சென்று அமர்ந்ததிலிருந்து அனுபமாவையும் அவள் குடும்பத்தையும் திட்ட ஆரம்பிப்பாள். இவ்வாறிருந்தால் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வருமா?
அதுவும் அனுபமா என்ன அவன் காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்தவளா? அன்னம் பார்த்த பெண் தானே. இத்தனைக்கும் அனுபமா மீது எந்த தவறும் இல்லாத பொழுது எதற்கு இந்த பேச்சு?
இதனாலயே இனியனால் வா வீட்டுக்கு சென்று வரலாமென்று அனுபமாவை அழைக்கவும் முடியவில்லை. அழைக்கத் தோன்றவுமில்லை. ஆனால் அன்னத்தை சமாளிக்க கற்றுக் கொண்டான்.
கோப்பை பெற்றுக்கொண்டு வண்டியில் ஏறிய அனுபமாவுக்கு பொறுமையில்லாமல் வாய் திறந்து கேட்டே விட்டாள்.
“நான் ஒரு விஷயம் கேக்கணும் கேக்கலாமா?”
“என்ன?” இனியன் அவள் புறம் திரும்பவில்லை வண்டியை இயக்குவதில் கவனமாக இருந்தான்.
“இல்ல நீ நினைச்சிருந்தா இது உன் குழந்தையே இல்லனு ஜான்ஸியோட போய் லண்டன்ல செட்டிலாகி இருந்திருக்க முடியும். அப்படி என்ன உனக்கு புள்ள பாசம்”
“ஜான்சி உனக்கு அவ்வளவு ஈஸியான பொண்ணா தெரியிறாளா?” அவளை பாராமலையே கேட்டான் இனியன்.
“இல்ல… ஆ.. அப்போ ஜான்சி உன்ன வேணாம்னு சொன்னதால வேற வழியில்லாம…” என்றவளுக்கு அதுவே அபத்தம் என்று பட “உனக்குள்ள இவ்வளவு பிள்ளை பாசத்துக்கு என்ன காரணம்?”
அவள் வேறு வழியில்லை என்றது இனியனின் காதில் தெளிவாகவே விழுந்திருந்தது. “ஆமா வேற வழியில்லை. என் குழந்தையை சுமக்கிறது நீதானே” என்றான்.
“அதான் யேன்னு கேக்குறேன்” பொறுமையை இழந்தாள் அனுபமா.
இனியன் அனுபமா கேட்ட கேள்விக்கு பதில் கூறலானான். வண்டி முன்னோக்கி பயணிக்க அவன் நினைவுகள் பின்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தன.

Advertisement