அத்தியாயம் 15
இனியன் ஆபிசிலிருந்து வரும் பொழுது அனுபமா மட்டும் தான் வீட்டில் இருந்தாள். அவள் தான் இனியனுக்கு கதவையும் திறந்து விட்டாள்.
“உள்ள வாங்க” என்றோ டீ அல்லது காபி சாப்பிடுறீங்களா? என்றோ அனுபமாமா கணவனை கேளாமல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
வீடு அமைதியாக இருக்கவும் “எல்லாரும் போய்ட்டாங்களா?” கண்களாளேயே வீட்டை அளந்தவன் அனுபமாவிடம் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. “ஆமா நம்ம ரூம் எது? காலைல ஆபீஸ் போற அவசரத்துல வீட்டை  கூட சுத்தி பார்க்கல. அம்மா இருந்தா இந்நேரத்துக்கு பொன்னிகிட்ட சொல்லி டீ போட்டு கொண்டு வந்து தந்திருப்பாங்க. பிடிக்காத பொண்டாட்டி கிட்ட அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?” தலையை உலுக்கிக் கொண்டு வீட்டை பார்த்தவனுக்கு இரண்டு அறைகள் தென்பட அவன் துணிப்பைகள் இரண்டும் ஒரு அறையின் வாயிலில் இருந்தது. “அப்பாடா தனியா தூங்கலாம். இவ கூட தூங்க வேண்டிய அவசியமில்ல” முணுமுணுத்தவாறே சமயலறைக்குள் நுழைந்து டீ போட முனைந்தான்.
இனியனுக்கு டீ என்ன சுடுதண்ணீரே வைக்கத் தெரியாது. சினிமாவில் இவ்வாறுதான் செய்வார்கள் என்று யோசித்து யோசித்து செய்யலானான். 
சமயலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டு அங்கே வந்த அனுபமா “என்னவென்று இனியனை கேட்க, டீ போட வந்ததாக அவளை பாராமலையே கூறினான் இனியன்.
“பிளாஸ்க்ல இருக்கு” என்று இவள் கூற 
“நமக்காக இவள் டீ போட்டாளா?” இனியன் அனுபமாவை சந்தேகமாக பார்த்தான்.
திருமணமான நாளிலிருந்து அனுபமா இனியனுக்காக எந்த ஒரு வேலையும் பார்த்ததில்லை. பார்க்க வேண்டிய சூழ்நிலையும் அந்த வீட்டில் இல்லை. அவளும் உடம்பு முடியாமல் இருந்தாள். கல்லூரி செல்ல ஆரம்பித்த பின் படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டு இனியனை நெருங்க நினைத்தால் அவனோ வார்த்தைகளால் வதைக்க, எட்ட நின்று அவன் மனதை கவர்வது எப்படியென்று சிந்தித்தவள் விட்டுப் பிடிக்கலாமென்று விட்டு விட்டாள். அதற்குள் தான் எல்லாமே நிகந்து விட்டதே!
“ரொம்ப எல்லாம் எதிர்பார்க்காதீங்க, அம்மா தான் டீ போட்டு வச்சிட்டு, நைட்டுக்கும் சமைச்சி வச்சிட்டு போனாங்க” என்றவாறே டீயை கப்பில் ஊறி அவன் புறம் தள்ளியவள் தனக்கும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டு “வாங்க உக்காந்து பேசலாம்” அவன் பதிலையும் எதிர்பார்க்காமல் வாசலுக்கு சென்று சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
“பேசவா? என்ன பேசணும்? என்ன பேச வேண்டியிருக்கு?” இனியனுக்கு சுத்தமாக புரியவில்லை. “திரும்ப டிவோர்ஸ் பத்தி பேசப் போறாளோ?” என்ற சந்தேகத்தோடு அவள் எதிரே அமர்ந்தான் இனியன்.
“என்ன சார் தனிக் குடித்தனம் வந்தாச்சு. வீட்டுல இருக்குறத போல ஜாலியா இருக்கலாம் என்று நினைப்போ?” கோபமாகவே ஆரம்பித்தாள் அனுபமா.
“இப்போ எதுக்கு கோபப்படுற? கோபப்பட்டா பி.பி. எகிறும். அது குழந்தைக்கு நல்லதில்ல” டீயை உறிஞ்சியவாறு அமைதியாகவே பதில் சொன்னான் இனியன்.
அவன் அமைதியும், பேச்சும் அனுபமாவின் கோபத்தை இன்னும் தூண்டத்தான் செய்ததே ஒழிய குறைக்கவில்லை.
“என் குழந்தையை பத்தி எனக்கில்லாத அக்கறையா?” கோபமாக முணுமுணுத்தவள் “சரிங்க சார் நாளை காலை சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க? அடுத்த வாரம் என்ன பண்ண போறீங்க? ஏதாவது ஏற்பாடு பண்ணி வச்சிருக்குறீங்களா? அட்லீஸ்ட் யோசிக்கவாவது செஞ்சீங்களா? மளிகை சாமான் யார் வாங்குவாங்க? எங்க போய் வாங்குவீங்க? காய்கறி? மீன்? ஈபி, தண்ணி பில்லு, லொட்டு லொசுக்கு?” நீண்ட பட்டியலை வரிசையாக அனுபமா எடுத்து விட முழி பிதுங்கி நின்றான் இனிமொழியன்.
அனுபமாவின் வீட்டில் மளிகை சாமான் வாங்க கடைக்கோ, காய்கறிகளை வாங்க சந்தைக்கோ அனுபமா சென்றதில்லை. வாங்கி வரும் பொருட்களை கலைவாணியோடு பக்குவமாக எடுத்து வைப்பாள். அனுபமாவின் வீட்டில் சமையலுக்கு ஆளெல்லாம் கிடையாது. கலைவாணிதான் சமைப்பாள். உதவிக்கு ஊரிலுள்ள யாரையாவது அழைத்துக்கொள்வாள். அனுபமா இருந்தால் அவள் தான் உதவுவாள். நிலுபமாவும் இருந்தால் அக்கா தங்கை இருவரும் சேர்ந்து உதவுவார்கள், அம்மாவை ஓய்வெடுக்க வைத்து சமைக்கவும் செய்வார்கள். செலுத்த வேண்டிய பில்களை வடிவேலின் கண்ணில் படும் இடத்தில் வைப்பாள் அனுபமா. அவர் செலுத்திய பின் இவள் கையில் தான் கொடுப்பார், அதை ஒரு கோப்பில் பொருத்துவாள். இதனால் அனுபமாவுக்கு வீட்டில் நடப்பவைகள் அத்துப்படி.
இனியனின் வீட்டில் ஓட்டுநர் தான் மார்க்கட் சென்று மீனும், காய்கறிகளையும் வாங்கிக் கொண்டு வருவார். தள்ளு வண்டியில் வருவதைக் கூட சமையல் செய்யும் பொன்னி தான் வாங்குவாள். பில்களை யார் கட்டுகிறார்கள், யார் பொறுப்பு என்று கூட அனுபமாவுக்கு தெரியவில்லை. திருமணமாகி வந்ததிலிருந்து உடம்பு முடியாமல் இருந்தவளால் அதை கவனிக்கவும் முடியவில்லை. அவள் அவளது படிப்பில் கவனம் செலுத்த மாமியார் பார்த்துக் கொள்வாளாக இருக்கும் என்று எண்ணி  இருந்தாள்.
இனியனை பொறுத்தவரையில் வீட்டு வேலையென்று அவன் எந்த வேலையையும் பார்த்ததில்லை. அவன் போன் பில்லை கூட ஆன்லைனில் கட்டி விடுகிறான். அலைய வேண்டிய தேவை வந்ததில்லை. அவ்வாறிருக்க இவள் என்ன சொல்கிறாள் என்று பார்த்தவன் சத்தமாக சிரித்தான்.
“இதுதான் உன் பிரச்சினையா? இதுக்கு எதுக்கு டென்ஷனாக்குற? சமையலுக்கு ஒரு ஆள் ஏற்பாடு பண்ணிடலாம். அவங்களே மார்க்கட் போய் காய்கறி, மளிகைசாமான், மீன் எல்லாம் வாங்கிட்டு வரட்டும். பில்ஸ் மாசத்துக்கு ஒருக்கா தானே அதையும் அவங்களையே போய் கட்டிட்டு வரச் சொல்லலாம். அதுக்கு நாம தனியா கொடுத்திடலாம்” இன்முகமாக சொன்னான் இனியன்.
மானசீகமாக தலையில் கைவைத்த அனுபமாவோ “சமையலுக்கு ஏற்பாடு செய்றவங்க ஆணா? பெண்ணா? வீட்டுலையே தங்க வைக்க போறீங்களா? இல்ல தினம் தினம் வந்துட்டு போனா போதுமா? வீட்டுல தங்க வைக்கிறீங்கன்னா? உங்க ரூமை கொடுத்துட்டு நீங்க ஹால்ல தூங்குவீங்களா? டேலி வருவதாக இருந்தா, உடம்பு முடியல, குழந்தைக்கு, பெத்தவங்களுக்கு உடம்பு முடியலன்னு காச முன் கூட்டியே வாங்குவாங்க, இல்ல அடிக்கடி லீவ் போடுவாங்க அப்போ நீங்க சமைப்பீங்களா?
சமையலுக்கு ஆள் ஏற்பாடு செஞ்சிட்டீங்க? வீட்டு வேலைக்கு எப்படி சார்? ஆமா  உங்க சம்பளம் எவ்வளவு? வீட்டு வாடகை மட்டும் இல்ல. ஆனா அபார்ட்மெண்ட் மென்டைன்ஸ்கு காசு கட்டணும்.
இதுல வெளிய இருந்து வரும் சமையல்காரரை நம்பி காசு கொடுத்து பொருள் வாங்க சொல்ல முடியாது. அவங்க வீட்டுல என்ன கஷ்டமோ, அவங்க அவங்க வீட்டுக்கும் சேர்த்து பொருள் வாங்குவாங்க. என்னதான் நம்பிக்கையானவங்களாக இருந்தாலும், இந்த மாதிரி நடக்க வாய்ப்பிருக்கு, அது களவு என்று எடுத்துக்கிட்டா களவு, இயலாமை, வறுமை சம்பளம் பத்தல இப்படி எதோ ஒரு காரணம். அதுக்காக உங்க சம்பல பணத்துல ரெண்டு குடும்பம் நடாத்த முடியாதில்லையா?” இவ்வாறெல்லாம் நடைபெறக் கூடும் என்று எங்கெங்கோ கேட்ட கதைகளைக் கொண்டு பொறுமையாகத்தான் புரிய வைத்தாள் அனுபமா.
“சமையலுக்கு ஆள் ஏற்பாடு செய்றதுல இவ்வளவு அக்கப்போறா?” என்று அவளை பார்த்தான் இனியன்.
அவன் பார்வை அவளுக்கு என்ன அர்த்தம் சொல்லியதோ! “உடனே எங்க வீட்டுலையும் சமையலுக்கு ஆள் இருக்கு, ட்ரவர் இருக்காரு, அது இது என்று ஆரம்பிச்சிடாதீங்க.
உங்க அப்பா என்ன வேலை பார்த்தாரு? அவருக்கு குடும்ப சொத்தும் வருமானம் இருந்தது? அதை தவிர உங்கம்மா பணக்கார வீட்டு பொண்ணு. அவங்க கல்யாணம் பண்ணி வரும் போதே பொன்னிய கையோட கூட்டிகிட்டு வந்தாங்க.
நீங்க அப்படியா? வரதராஜனோட பையன்தான், ஆனா நீங்க பாக்குற வேலை மட்டும்தான் வேற வருமானம் ஏதாவது வருதா உங்களுக்கு? வீடு கூட எங்க அப்பா வாங்கினது” கடைசி வாக்கியத்தை இனியனின் காதில் விழ வேண்டுமென்றே சத்தமாக முணுமுணுத்தாள்.
அனுபமா பேசும் பொழுது நிதர்சனம் உணர்ந்த இனியன் அமைதியாகத்தான் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் இத்தனை வருடங்கள் சம்பாதித்த மொத்தமும் சேவிங்ஸ்சாக வங்கியில்தான் உறங்கிக் கொண்டிருக்கிறது. சொந்த செலவென்று பெரிதாக செலவும் இல்லை. அதை எடுத்து செலவு செய்யலாமே என்று தான் அவன் நினைத்தான். கடைசியாக அவள் பேசியதை கேட்டு அவளை நன்றாகவே முறைத்தவன்
“நானா சொன்னேனா தனிக் குடித்தனம் வரச் சொல்லி?” ஏற்கனவே  வீட்டோடு மாப்பிள்ளையாக என்னை அனுப்புகிறீர்களா? என்று குத்தித்தவன் தான் அனுபமாவின் பேச்சில் சீண்டப்பட்டு, “வாடகைக்கு ஒரு வீடு பாக்குறேன் என்று நான் சொன்னேன். நான் சொல்லுறத எங்கப்பா எப்போ கேட்டிருக்குறாரு? எல்லாம் அவர் இஷ்டம். இப்போ சம்பந்தி சொல்லுற படியெல்லாம் ஆட ஆரம்பிச்சிட்டாரு. பொண்ண எடுத்தாரா? பையன கொடுத்தாரா? புரியல” இவனும் முணுமுணுத்தான். 
தந்தை தன் பேச்சை எப்பொழுது கேட்டார் என்றதில் அவனது காதலை எதிர்த்தான் என்றதை தான் கூறுகிறான் என்றுதான் நினைத்தாள் அனுபமா. அதை தான் இவன் எப்பொழுதுமே பேசுவான் அது அவளுக்கு அவசியமில்லை. இவளும் இஷ்டப்பட்டா தனிக் குடித்தம் வந்தாள்? “பின்ன நானா சொன்னேன்” கோபமானாள் அனுபமா.
டைவோர்ஸ் கேட்டவள் கணி மற்றும், நிலுபமாவின் திருமணத்தால் அந்த எண்ணத்தை கை விட்டு தனிக் குடித்தனம் செல்ல சரியென்று ஒத்துக்கொண்டிருப்பாளென்று அவள் கோபத்தில் புரிகிறது.  
“ஆமா கணி நிலுபமாவை ஏமாற்றி திருமணம் செய்தது இவளுக்குத் தெரியுமா? தெரியாதா?” தலையை உலுக்கியவன் “நிச்சயமாக தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் ஒரு காலமும் தனிக் குடித்தனத்துக்கு சம்மதித்திருக்க மாட்டாள்” தெரியாததும் நல்லததுக்குத்தான் என்று நினைத்த இனியன்.
“சரி விடு நாம நினைக்கிறது எல்லாம் நடந்து விடுமா என்ன?” இனியன் அதை ஜான்சியை கொண்டு சொன்னானா? அல்லது அனுபமா டைவோர்ஸ் கேட்டதை சொன்னா தெரியவில்லை. அனுபமாவுக்கு அது அவன் காதல் விவகாரத்தைத்தான் ஞாபகமூட்டியது.
அன்று தான் மட்டும் இவன் அலைபேசியில் கூறியதை கேட்டிருந்தால் இன்று இவனோடு இந்த வீட்டில் ஒன்றாக இருக்க வேண்டிய தேவை வந்திருக்காது என்று அனுபமாவால் எண்ணாமல் இருக்க இயலவில்லை.
“சரி நீ கோபப்பட்டு என்னைய பேசியோ, நான் கோபப்பட்டு உன்னைய பேசியோ பிரயோஜனமில்ல. இப்போ சொல்லு என்ன பண்ணலாம்?” குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு சட்டென்று இறங்கி வந்தவன் அனுபமாவிடமே வினவினான்.
இனியன் இவ்வாறு இறங்கி வருவானென்று எதிர்பாராதவளோ அவனை விசித்திரமாக பார்த்து விட்டு “எல்லா வேலைகளையும் ரெண்டு பேருமே பங்கு போட்டுக் கொண்டு செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் வீட்டை க்ளீன் பண்ண ஆள ஏற்பாடு பண்ணலாம். நீங்க வெளிய போறதாக இருந்தா போகலாம். நான் அம்மா, அப்பாவை பார்க்க போயிடுறேன்” என்றாள்.
“ஆமா மாமாவும், அத்தையும் நமக்கு வீட்டைக் கொடுத்துட்டு அவங்க எங்க இருக்காங்க?” நிலுபமா வேறு கூட இருக்காளே, வேறு வீடு பார்த்துக் கொடுத்திருக்க வேண்டுமோ? என்ற சிந்தனையில் தான் கேட்டான்.
“உங்க தம்பிக்கும், நிலுக்கும் ரிஷப்ஷன் வச்ச பிறகு அம்மாவும், அப்பாவும் ஊருக்கே போய்டுறதாக சொன்னாங்க. பிரசவம் நெருங்கின பிறகு வராங்களாம்” சொல்லும் பொழுதே அனுபமாவின் குரலில் சோகம் இழையோடியிருந்தது.
“அதுவரைக்கும்?…”
“அதுவரைக்கும் உங்க தம்பி வாடகைக்கு ஒரு வீடு பார்த்து கொடுத்திருக்காரு” நீ மூத்த மருமகனாக இருந்து இதை செய்திருக்க வேண்டியவன். இப்பொழுதான் விசாரிக்கவே செய்கிறாய் என்ற கண்டனம் அனுபமாவின் பார்வையில் இருந்தது.
கணியின் முகம் கண்ணுக்குள் வர “காதலிச்சா, காதலிக்கிற பொண்ணு மேல மட்டுமில்ல, அவ குடும்பத்து மேலையும் தானாக அக்கறை, ஈடுபாடு வந்துடும்” என்றான் இனியன்.
அவன் அதை சாதாரணமாகத்தான் கூறினான். ஆனால் அனுபமாவுக்கு நெஞ்சம் முள்ளாய் தைத்தது.
தானும் காதலித்து திருமணம் செய்திருக்க வேண்டுமோ? தனது தந்தையே காதல் திருமணத்துக்கு பச்சை கொடி காட்ட காத்திருந்த வேளை தனக்குள் ஏன் காதல் தோன்றாமல் போனது? தந்தையின் மீது வைத்த அதீத பாசமா? குடும்பத்தின் மீது இருந்த மரியாதையா? அல்லது காதல் தோன்றுமளவுக்கு யாரையும் சந்திக்கவில்லையா? தெரியவில்லை.
காதலோடு புரிதலும் கூடிய வாழ்க்கை தனக்கு அமைந்திருந்தால் தன் கணவனோடு மனமொத்து வாழ்ந்திருக்கலாம். இப்படி இவனோடு விருப்பமே இல்லாமல் சேர்ந்து வாழ வேண்டிய தேவை வந்திருக்காது. குழந்தைக்காக இவனும் சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டிருந்திருக்க மாட்டான்” என்று வருந்தினாள்.
“என்ன யோசிக்கிற?” என்று இனியன் கேட்க, ஒன்றுமில்லையென்று தலையசைத்தாள் அனுபமா.
“எல்லா வேலையையும் பங்கு போட்டு செய்யலாமென்று சொல்லுற? நீ இருக்குற நிலமைல உன்னால வேலை செய்ய முடியுமா?” என்னமோ அவன் எல்லா வேலைகளையும் பார்த்து முடிப்பவன் போல் இவளைக் கேட்டான்.
“காதலிச்சு வீட்டை விட்டு ஓடிப் போறவங்க யார் தயவுமின்றி தனியாகத்தான் அவங்க வேலைகளை பார்த்துப்பாங்க, பிரசவ நேரத்துல கூட யாருமில்லாமல்தான் தவிப்பாங்க. அதுக்கு இது பரவாயில்ல” திருமணமான பின்னும் இனியன் ஜான்சியோடு வெளிநாட்டுக்கு செல்ல திட்டம் போட்டதை சொல்லாமல் சொல்லி குத்திக் பேசினாள் அனுபமா.
“நான் என்ன கேட்டா இவ என்ன பேசுறா?” குழந்தை மட்டும் இல்லா விட்டால் நிச்சயமாக இனியனின் வாழ்க்கை இவ்வாறுதான் இருந்திருக்கும் என்று கூட சொல்ல முடியாது. அன்று ஜான்சியை சந்தித்த பின் ஜான்சி இவனை சந்திக்க முயலவே இல்லை. இவனிருந்த மனநிலையில் இவனும் அவளை சந்திக்க முயலவில்லை.
தன்னை பற்றி நினைக்காமல் மனைவி, குழந்தையோடு சந்தோசமாக வாழும்படி பார்த்தீபனிடம் கூறிச் சென்றிருந்தாள் ஜான்சி. அனுபமா தன்னைத்தான் கூறுகிறாள் என்று அர்த்தம் புரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் இனியனின் மனம் முரண்டியது.
பேச்சை வளர்க்காமல் “எனக்கு சமையல் சுத்தமா தெரியாது. பொருள் வாங்குறது கூட பழக்கமில்ல. பில்லு கட்டுறது ஒன்னும் பிரச்சினையில்ல. ஆன்லைன்ல கட்டிடலாம். டாக்டர் செக்கப் எப்போ என்று ரெண்டு நாளைக்கு முன்னாடியே சொன்னா என் வேலைகளை அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன்” என்றவன் வேறென்ன என்பதை போல் பார்த்தான்.
“பொறக்கும் பொழுதே எல்லாரும், எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு பொறக்கலையே. நா சமையல் செய்ய நீங்க காய்கறிகளை கட் பண்ணிக்க கொடுங்க, பொருளெல்லாம் ரெண்டு பேரும் போய் வாங்கிட்டு வரலாம். அதான் உங்க வண்டியிருக்கே” பட்டும் படாமலும் கூறினாலும் இனியன் என்ன பேசினாலும் அவனை மட்டம் தட்டி பேசுவதில்லையே குறியாக இருந்தாள்.
“அதான் தெரியாது பழகிக்கிறேன் என்று சொல்லுறேன்” கடுப்பாகத்தான் சொல்லி இருக்க வேண்டும் அவள் பேச்சின் அர்த்தம் இனியனுக்கு புரியவில்லை. அதனால் மிகவும் சாதாரணமாகக் கூறினான். 
“அப்பா வாங்கிப் போட்ட மளிகை சாமான் எல்லாம் ஒருவாரம், பத்து நாளைக்கு போதும், காய்கறியும், மீனும் வாங்கிக்கலாம்”
“ஆமா காய்கறியும், மீனும் அபார்ட்மெண்ட்டுக்கு கீழ தள்ளு வண்டில வராதா?” சந்தேகமாகக் கேட்டான்.
“டைலியும் வருவாங்க. ரெண்டு நாளைக்கு ஒருக்கா வாங்கிக்கலாம்”
“அதானே சினிமால எல்லாம் காட்டுவாங்களே” இனியன் முணுமுணுக்க
“சுத்தம்” என்றாள் அனுபமா.
அது காதில் விழுந்தாலும், தான் அசிங்கப்பட்டதை காட்டிக் கொள்ளாமல் எழுந்து அறைக்குள் செல்ல முயன்றவனின் கண்களில் அனுபமாவின் நெற்றிக் காயத்தின் தழும்பு விழுந்தது. வந்த அன்றே பார்த்தான் தான். கேட்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. இப்பொழுது கேட்டு விட்டான். அதுவும் எப்படி? நின்றவாறே அவன் நெற்றியை தடவி அவளிடம் என்னவென்று கையாலையே கேட்டான்.
நடந்ததை அவளே மறக்க முடியாமல் தினம் தினம் மனதில் போட்டு வதைத்துக் கொண்டிருக்கின்றாள். இவனோ வீட்டில் என்ன நடந்தது என்று கூட தெரியாமல் இருக்கிறானே என்று நினைக்கும் பொழுது தனது நெற்றிக் காயத்தை தடவிய அனுபமாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து.
“ஓஹ்… இதுவா பொறக்கும் பொழுதே இருந்தது” என்றாள்.
காயம் காய்ந்து ஒரு மாதமாகிறது வடு தெளிவாக தெரிந்ததை பார்த்தவன் “இல்லையே சமீபத்துல….” என்றவனுக்கு கணி வீட்டி நடந்த பிரச்சினையை சொன்னது ஞாபகம் வந்தது.
“அம்மா உன்ன இரத்தம் வரும் அளவுக்கு அடிச்சாங்களா?” தன்னையோ தம்பியையோ அடித்திராத அன்னை தன்னால் அனுபமாவை அடித்தாளா? என்ன சொல்லுவது என்று அவனுக்கு சத்தயமாக புரியவில்லை “சாரி.. இப்படி ஆகி இருக்குனு தெரியல” என்றான். 
வந்த அன்றே தன்னை பார்த்தான். காலையில் கூட வண்டியில் ஒன்றாக காலேஜ் வரை வந்தான் அப்பொழுது கவனிக்கவில்லையா? எதற்கு இப்பொழுது இதை பற்றி பேசி இன்னொரு சண்டையை போட வேண்டும் என்று மனம் வெம்பியவள் “எங்க போறீங்க? டீ சாப்பிட்டீங்கல்ல, கப்ப யாரு வாஷ் பண்ணுவாங்க? போங்க போய் கழுவி வைங்க”
“என்னது?” இனியன் அதிர்ச்சியாக அவளை பார்க்க,
“எல்லா வேலையையும் பங்கு போடணும் என்று கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தானே சொன்னேன். அதுக்குள்ள மறந்துட்டீங்களா?” கொஞ்சம் அதட்டும் குரல்தான். சிரிப்பே இல்லாத முகமாய் கூறினாள். 
“துணி கூட துவைக்கணுமா? வாஷிங் மெஷின் வாங்கிக்கலாம்” மறுக்காமல் கப்போடு சமயலறைக்குள் நுழைந்தான் இனியன்.
தனது அறைக்குள் வந்த அனுபமாவுக்கு தன்னை நினைத்தே ஆச்சரியம், ஆனந்தம். தான் தான் இனியனிடம் இவ்வாறெல்லாம் பேசினேனா? நம்ப முடியவில்லை. என்னதான் தந்தைக்காக தனிக் குடித்தனம் வர ஒத்துக்கொண்டாலும், இனியனோடு சேர்ந்து வாழ அவள் மனம் முரண்டியது. அதனால் தானே விவகாரத்து பற்றி அவனிடம் நேரடியாக பேசியிருந்தாள்.
இனியன் ஜான்சியின் கையை பிடித்துக் கொண்டு “நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லையென்பது அனுபமாவின் கண்களுக்குள் அடிக்கடி வந்து இம்சிக்க, வரதராஜனை ஏமாற்ற இனியன் அவளை எவ்வாறெல்லாம் கவனித்து பார்த்துக் கொண்டான் என்பது ஞாபகம் வரும் பொழுதெல்லாம் அவனை வசைபாடலானாள். மாமியார் பேசியதை விட, மாமனார் பேசியதை விட,  தான் குழந்தை உண்டான பொழுது அதை நம்பாமல் ஜான்சியிடம் இவள் பொய் சொல்கிறாள் என்று கூறியதுமில்லாமல் தன்னை நம்பாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்து வீட்டில் அவ்வளவு பெரிய பிரச்சினை நடக்க காரணமான இனியனை அனுபமா மன்னிக்க தயாராக இல்லை.     
அவனோடு ஒரே வீட்டில் வாழ வேண்டுமா? என்ற சங்கடமெல்லாம் அனுபமாவுக்கு வரவேயில்லை. தன்னை நடித்து ஏமாற்றிய இனியனை பழிவாங்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததாகத்தான் நினைத்தாள். அதன் ஆரம்பப்புள்ளியை இவ்வாறு பேசி தொடங்கி வைத்தாள்.
தான் குடித்த டீ கப்பை புலம்பியவாறே கழுவி வைத்த இனியன் தனது பைகளை தூக்கிக் கொண்டு தனக்கு ஒதுக்கிய அறைக்குள் நுழைய அறை வெறுமையாக இருப்பதைக் கண்டு “அனுபமா” என்று கத்தினான்.
அவன் கத்தினது அனுபமாவின் காதில் விழத்தான் செய்தது. ஆனாலும் கண்டு கொள்ளாமல் அமைதியாக புத்தகத்தோடு அமர்ந்திருந்தாள்.
கடுப்போடு அவளின் அறை வாசலில் வந்து நின்ற இனியன் “எனக்கு செபரேட் ரூம் கொடுத்திருக்க, தூங்க பெட் எங்க? எனக்குத்தான் பெட் இல்லாம தூக்கம் வராது என்று தெரியாதா?” என்றவன் அவளின் அறையை கண்களால் அளந்தான். அவன் அறையை விட பெரிய அறை. கட்டிலும் இருவர் தூங்கக் கூடிய கட்டில். அலுமாரி, முகம்பார்க்கும் கண்ணாடியோடு கூடிய கப்போர்ட. அவள் படிக்கவென மேசை கதிரை போடப்பட்டிருந்தது. அது போக குழந்தை பிறந்தால் தொட்டில் கூட போட்டாலும் இன்னும் இடம் இருக்கும். குளியலறை கூட அறையோடி ஒட்டி சொகுசான அறையாகத்தான் இருந்தது.
“குடித்தனம் வாரவாங்க தனக்கு தேவையான எல்லா பொருட்களோடும் வரணும்” அவனை பாராமலையே கூறினாள் அனுபமா. 
“என்ன இது சின்னபுள்ளத்தமாக இல்ல இருக்கு” என்பது போல் அவளை முறைத்தவன் “இருந்த பெட் எங்க?” கையை கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்தவரே கேட்டான்.
“எல்லாம் அப்பா வாங்கினது. வாடகைக்கு போறாங்க. திரும்பவும் பொருட்கள் வாங்கணுமா? நான் தான் இங்க இருக்குறத கொடுத்து விட்டேன்” என்றாள். அதை கூறும் பொழுதும் கூட அவனை பார்க்கவில்லை.
உண்மையில் இரண்டு அறை இருக்கும் பொழுது இருவரும் இரண்டு அறையில் தங்கி விடுவார்களோ என்று கலைவாணி கணவனிடம் புலம்ப, “வாடகை வீட்டுக்கு எதுக்கு வீணாக பொருட்கள் வாங்க வேண்டும்? ஊருக்கும் கொண்டு போக முடியாது. இங்க இருக்குறத கொண்டு போறோம். இந்த அறைய மாப்பிள்ளைக்கு ஆபீஸ் அறையாக யூஸ் பண்ணிக்கலாம் இல்ல” வடிவேல் அனுபமாவிடம் கூறி விட்டுத்தான் தளபாடகங்களை எடுத்து சென்றிருந்தார்.
கலைவாணி இனியனின் துணிப்பைகளை அனுபமா இருக்கும் அறையினுள் தான் வைத்து விட்டு சென்றிருந்தாள். தனது பெற்றோர் வெளியேறி மறுகணம் அனுபமா செய்தது இனியனின் துணிப்பைகள் இரண்டையும் கொண்டு போய் வெறுமையாக இருந்த அறையின் முன் வைத்தது தான்.
அதை பார்த்துதான் இனியன் அவனுக்கு தனியறை இருப்பதாக ஏமாந்து போய் அனுபமாவிடம் கோபம் கூட பட முடியாமல் பொறுமையாக விசாரித்துக் கொண்டிருந்தான்.
அவனை பார்த்து பதில் கூறினால் தான் பொய் சொல்வது தெரிந்து விடும் என்று அனுபமாவும் இனியனை பாராமலையே பேசிக் கொண்டிருந்தாள்.
வடிவேல் எடுத்து சென்றார் என்று கூறி இருந்தால் இனியன் கொஞ்சமாவது சமாதானமடைந்திருப்பான். தான் கொடுத்து விட்டதாக அனுபமா கூறியதும் கடுப்பானவன் “ஓஹ்… அப்படியா? நீ என் அறையில தங்கியிருந்தல்ல நான் உன் அறையில தங்கிருக்குறதுல என்ன  தப்பு?” என்றவன் விறுவிறுவென  சென்று  தனது துணிப்பைகளை தூக்கிக் கொண்டு வந்து அனுபமாவின் அறையில் வைத்தவன் அதை திறந்து துண்டையும் எடுத்து அங்கேயே துணி மாத்தலானான்.
வெறுமையாக இருக்கும் அறையை பார்த்து கத்துவான் என்று அனுபமா எதிர்பார்த்தாலும் இப்படி அவளது அறையில் வந்து தங்குவானென்று எதிர்பார்க்கவில்லை. ஹாலில் சோபாவில் தூங்குவானென்றுதான் எதிர்பார்த்தாள்.
அமர்ந்திருந்தவள் எழுந்து அவன் புறம் திரும்பி “என் ரூம்ல எதுக்கு தூங்குறீங்க? போங்க போய் சோபால தூங்குங்க” என்றாள்.
துணியை மாத்தியவாறே “எதுக்கு கால குறுக்கி கிட்டு தூங்கி கால் வலி வரதுக்கா?. நான் தூங்கி கிட்டு இருக்கும் போது உன் அப்பா வந்து அவர் என்ன பார்த்து, உன் கிட்ட என்ன இது என்று கேட்டு, நாம பிரிஞ்சி வாழ்றத வேற அவர் கிட்ட சொல்ல சொல்லுறியா?” 
இதை அனுபமா சற்றும் யோசிக்கவில்லையே. “ஆமா அப்பா வரும் பொழுது இவன் எதுக்காக தூங்கி கிட்டு இருக்கணும்” என்று அனுபமா யோசிக்க,
“தள்ளு என்ன துண்டோடு பாக்குறது உனக்கு வேணா இன்ரெஸ்ட்டா இருக்கும். எனக்கு ஒன்னும் உன் முன்னாடி இப்படி இருக்க ஆசையில்ல” என்றவன் அவளை திருப்பி நிறுத்தி விட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
“ஆமா இவர் பெரிய ஆணழகன் இவர துண்டோடு பார்த்தா நாம அப்படியே மயங்கிடுவோம்” இனியனை வசைபாட ஆரம்பித்தாள் அனுபமா.
“நீ சொன்னாலும், சொல்லலைனாலும் நான் அழகன் தாண்டி. நம்ம குழந்தை உன்ன போல சிடுமூஞ்சியா இல்லாம என்ன போலத்தான் பொறக்கும். நீ வேணா பாரு” குளியலறையிலிருந்து கத்தினான் இனியன்.
“யார் சிடுமூஞ்சி? நீதான் சிடுமூஞ்சி. எப்ப பார்த்தாலும் எரிஞ்சி விழுற” கோபத்தில் இனியனை ஒருமையில் பேசியவள், இது கூட நல்லாத்தான் இருக்கு என்றெண்ணலானாள்.