Advertisement

அத்தியாயம் 14 
இனியனை மிரட்டித்தான் இந்த திருமணம் நடந்தது என்று தீர விசாரித்த வடிவேலுக்கு இனியனின் மேல் எந்தக் கோபமும் இல்லை. எல்லா தவறும் வரதராஜன் மீது என்றும் புரிந்தது. அனுபமாவை அழைத்து இனியன் உன்னிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டானா? தரக்குறைவாக பேசினானா என்று வடிவேல் கேட்டிருக்க, தங்களுக்குள் நடந்த எல்லாவற்றையும் கூறினால் தந்தையின் மனம் கஷ்டப்படும் என்று இனியன் நல்ல முறையில் தான் நடந்துகொண்டான் என்றாள்.
வடிவேல் ஏன் அவ்வாறு கேட்டாரென்று அவளுக்கு புரியவில்லை. மகள் தன்னிடம் பொய் கூற மாட்டாள் என்று நினைத்தவர் அவள் வாழ்க்கையை சீர் செய்ய என்ன செய்யலாமென்று யோசித்தார்.
வரதராஜன் இனியனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காலமெல்லாம் அவன் தன் மகளை சந்தோசமாக வைத்திருக்க யோசிக்க மாட்டானென்று வடிவேலுக்கு தோன்றியது.
“அவர்களை தனிக் குடித்தனம் வைத்தால் ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ள சந்தர்ப்பம் அமையும். வரதராஜனும், இனியனும் இதற்கு சம்மதிக்க வேண்டும். நிலூவை வேறு இங்கு வர சொல்லியாகிற்று வேறு வீடு பார்க்க வேண்டி வரும்” என்று கலைவாணியிடம் கூறினார். அதையே தான் ஹரியும் ஆலோசனையாக கூறியிருந்தான்.
“மாப்பிள வரட்டும் வந்த பிறகு பேசி முடிவு செய்யலாம்” என்று கலைவாணி கணவனை சமாதானப்படுத்தி வைத்திருந்தாள்.
இனியனும் லண்டனிலிருந்து வந்து சேர்ந்தான். நாளை வரதராஜனை அழைத்து பேசி முடிவு செய்யலாமென்று வடிவேல் நினைக்க, கணி இப்படியொரு காரியத்தை செய்திருந்தான்.
“நடந்தது நடந்து முடிஞ்சிருச்சு. மேற்கொண்டு பேசலாமா?” வரதராஜன் தான் ஆரம்பித்தார்.
“என்ன நடந்தது என்று நீங்க கேட்டு கிட்டு தானே இருந்தீங்க, நம்ம குடும்ப விஷயம் நாம மட்டும் உக்காந்து பேசலாமா?” வடிவேல் ராஜகோபாலை பார்த்தவாறே கேட்டார்.
“அப்போ என்ன வெளிய போக சொல்லுறீங்களா? நானும் இந்த குடும்பம் தான். மாமா நான் இல்லாம எந்த முடிவும் எடுக்க மாட்டாரு” என்றார் ராஜகோபால்.
“இருக்கலாம். ஆனா இது என் பொண்ணுங்களோட வாழ்க்கை பிரச்சினை. என்னை பொறுத்தவரைக்கும் நீங்க மூன்றாவது மனிசன் தான். அதுவும் உங்க பொண்ண இந்த குடும்பத்துல கட்டிக் கொடுக்கணும் என்று ஆசைப்பட்டீங்க, அவளும் இந்த குடும்பத்துல மருமகளா வாழனும் என்று ஆசைப்பட்டா. அது நடக்கல. நீங்க ரெண்டு பேரும் இருக்குற இடத்துல நான் எப்படி என் பொண்ணுங்க வாழ்க்கையை பத்தி மனநிம்மதியோடு பேச முடியும்?”
நிலுபமாவை ஏமாற்றி கணி திருமணம் செய்தான் என்றதும் வள்ளி பிரச்சினை செய்யக் கூடும். சில விஷயங்களை பேசும் பொழுது அவள் இங்கிருக்கலாகாது என்றுதான் வடிவேல் ராஜகோபால மூன்றாவது மனிதர் என்று வெளியேறும்படி கூறினார்.
“அவன் என் தம்பி அவன் இங்கதான் இருப்பான். அவனுக்குத் தெரியாம பேச ரகசியம் ஒன்றுமில்லை” என்றாள் அன்னம்.
வடிவேல் வரதராஜனை தான் பார்த்தார்.
வடிவேலின் பார்வையின் அர்த்தம் வரதாராஜனுக்கு புரியாமலில்லையே. கணி செய்தது அவளுக்கு தெரிந்தால் கணியை விரும்பாத நிலுபமாவோடு அவன் வாழ்வதை விட தன்னோடு வாழ்ந்தால் தான் அவன் வாழ்க்கை சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்குமென்று பிரச்சினை செய்வாள். கணி செய்தது அவளுக்கு தெரியவும் கூடாது. அதே சமயம் அவர்களை கஷ்டப்படுத்தாமல் இங்கிருந்து அனுப்பவம் வேண்டும்
“அன்னம் கொஞ்சம் அமைதியாக இரு. வள்ளிய இந்த குடும்பத்து மூத்த மருமகளாக்கிக்கணும் என்று ஆசைப்பட்ட. அவ ஆசை முக்கியம் என்று கணியோட ஆசைய பத்தி கேட்காம விட்டது என் தப்புதான். அதன் விளைவு அவன் இஷ்டத்துக்கு ஏதேதோ பண்ணிட்டான். இப்போ அவரோட ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கை கேள்விக்குறியா நிக்குது இப்போ நாம அவர் சொல்லுறத கேட்டுத்தான் ஆகணும்” வழக்கம் போல் அமைதியாக பேசினார் வரதராஜன்.
“எல்லாம் இவளாலத்தான். நான் நினைச்சது போல இவ இனியன கட்டியிருந்தா இந்த பிரச்சினை வந்திருக்குமா?” அன்னம் வள்ளியை அடிக்க,
“அப்பா பாருபா…” தந்தையிடம் சரணடைந்தவாறே முறையிட்டாள் வள்ளி.
“அன்னம் எதுக்கு அவளை அடிக்கிற? அவளும் நம்ம பொண்ணுதான். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க வேண்டியது நம்ம பொறுப்பு. கணி பண்ணது தப்புதான் அதுக்காக நடந்த கல்யாணம் இல்லையென்று ஆகிடுமா? ராஜு நீ இப்போவே வள்ளிக்கு மாப்புள பாக்குற, உடனே அவளுக்கு கல்யாணம் பண்ணுறோம். என் பசங்கள விட படிச்ச பையன, நம்மளவிட வசத்தில கூடிய குடும்பமா” என்றார் வரதராஜன்.
இதை வரதராஜன் வள்ளியின் மீதிருந்த பாசத்தால் கூறவில்லை. இவ்வாறு பேசினால் தான் ராஜகோபால் சமாதானமடைவார். வரதராஜன் நினைத்துதான் நிகழ்ந்தது.
கணியின் மனதில் என்ன இருக்கிறது என்று அறியாமல், தாங்கள் எதை சொன்னாலும் அக்கா பசங்கள் செய்வார்கள் என்று நினைத்தது முட்டாள்தனம் என்பதை கொஞ்சம் தாமதமாகத்தான் உணர்ந்தார் ராஜகோபால்.
வடிவேல் கூறுவதை போல் இது அவர் குடும்ப பிரச்சினை. தனக்கு இங்கு என்ன வேலை? வள்ளி மறுக்க, மறுக்க, இழுத்துக் கொண்டு சென்று விட்டார்.
“ஐயோ ஐயோ ஐயோ என் குடும்பம் இப்படி நாசமா போச்சே…” புலம்பலானாள் அன்னம்.
மனைவியை சமாதானப்படுத்த நினைக்காமல் “சொல்லுங்க வடிவேல். என் சின்ன பையன் உங்க சின்ன மகளை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டான். இப்போ என்ன பண்ண போறீங்க?” அதான் கல்யாணம் நடந்து முடிஞ்சிருச்சே உன்னால் என்ன செய்து விட முடியும் என்பது போல் தான் இருந்தது வரதராஜனின் பேச்சும், பார்வையும்.
“என்னது? ஏமாத்தி கல்யாணம் பண்ணானா? ஏண்டா லவ் பண்ணுறேன்னுதானே சொன்ன?” இனியன் தம்பியின் சட்டையை பிடித்திருக்க,
“ஒஹ்… கொழந்தியா மேல அம்புட்டு பாசமா?” என்று அவனை உதறிய கணி “லவ் பண்ணுறதாலத்தான் பொய் சொல்லி கல்யாணம் பண்ணேன். உண்மைய சொன்னா இவ ஒத்துக்கொண்டு இருக்க மாட்டாளே” நிலுபமாவை பார்த்தவாறே கூற,
“என்னடா என்னென்னமோ சொல்லுறீங்க?” என்ற அன்னத்திடம் அண்ணன் தம்பி இருவரையும் முறைத்தவாறே நிலுபமா அனைத்தையும் கூறி முடித்தாள். இனியன் அனுபமாவோடு எந்த பிரச்சினையுமில்லாமல் குடும்பம் நடாத்தினால் கணிமொழியான் அவளிடம் எந்த ஒரு பொய்யையும் கூறிக்கொண்டு வந்திருக்க மாட்டான். 
“ஏன்மா இவன்தான் சொல்லுறானேயென்று அப்படியே நம்புறதா? என் கிட்ட ஒரு போன் போட்டு கேட்டிருக்கலாமே” என்றான் இனியன்.
“ஆமா அப்படியே போன் பண்ணாலும் எடுத்து அன்ப புழிஞ்சி பேசிட போறீங்க பாருங்க. லண்டன்ல இருக்குறப்போ எத்தனை தடவ போன் போட்டேன். மெஸேஜ் கூட பண்ணேன். ரெஸ்பான்ஸ் பண்ணீங்களா?” நிலுபமா கோபமாக முறைக்க,
அன்றிருந்த மனநிலையில் அவன் தான் யாரிடமும் பேசக் கூடிய நிலையில் இருக்கவில்லையே. தன்னையே நொந்துகொண்டான் இனியன்.  
“எல்லாரும் கொஞ்சம் அமைதியாக இருந்தா நான் என் முடிவை சொல்லிடுறேன்” என்று வடிவேல் கூறியது அனைவரும் அவரைத்தான் பார்த்தனர்.
“நடந்த கல்யாணம் இல்லையென்று ஆகாது. என் சின்ன மகள் இந்த வீட்டுலதான் வாழ்வா. ஆனா என் மூத்த மகள் இந்த வீட்டுக்கு வர மாட்டா. அவளை மாப்பிள்ளையோட தனிக் குடித்தனம் வைக்கணும். இதுக்கு நீங்க சம்மதிச்சீங்கன்னா முறைப்படி என் ரெண்டாவது பொண்ணு உங்க வீட்டுக்கு வாழ வந்துடுவா. இல்லனா உங்க சின்ன மகன் கோட், கேஸ் என்று அலைய நேரிடும்” மிரட்டினார் வடிவேல்.
அவர் மிரட்டலுக்கெல்லாம் வரதராஜனோ, கணியோ அசரவில்லை. ஆனால் இனியனையும், அனுபமாவையும் ஒன்று சேர்க்க இதுதான் நல்ல சந்தர்ப்பமென்று கணிக்கு புரிந்தது.
“ஐயோ அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க மாமா. அண்ணா அண்ணியோட வந்து வாழ்வான்” என்றான்.
“டேய் அத நான் முடிவு பண்ணனும்டா…” இனியன் தம்பியை முறைக்க,
“நான் சந்தோசமாக இருக்க, நீ உன் பொண்டாட்டி கூட சந்தோசமாக இருக்க மாட்டியா?” என்று கேட்டு அவனை லாக் செய்தான் கணி.
“ஐயோ, ஐயோ, ஐயோ இந்த வீட்டுல என்னைக்கும் இல்லாத அநியாயமெல்லாம் நடக்குதே. இதெல்லாம் பார்த்து என் உடம்புல உயிர் இன்னும் இருக்குதே. என் பையன என் கிட்ட இருந்து பிரிக்க பாக்குறாளுகளே” அன்னம் மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள்.
“தனிக் குடித்தனமெல்லாம் சரிவாராதுங்க” வரதராஜன் ஒரேயடியாக மறுத்து விட,
“என் பொண்ணுக்கு இந்த வீட்டுல என்னெல்லாம் நடந்தது என்று நானே என் கண்ணால பார்த்தேன். அத பார்த்த பிறகும் அமைதியா உங்க பையன் கூட என் பொண்ண வாழ வைக்கணும் என்று நினைக்கிறன் என்றா உங்க குடும்ப வாரிசுக்காகத்தான். எனக்கு என் பொண்ணுங்க பாரமில்ல. விவாகரத்து வாங்கி இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கிறதும் எனக்கு பெரிய விஷயமில்லை. ஏற்கனவே நிறைய பண்ணிட்டேன். என் குடும்பத்துலயே பண்ணி வச்சிருக்கேன். மூத்த பெண்ணுக்கே அப்படினா, நிலு வாழ்க்கையை பத்தி யோசிக்கவே வேணாம். உங்க பையன் ஏமாத்தி கல்யாணம் பண்ணி இருக்கான். என்னோட முடிவை நான் சொல்லிட்டேன். உங்க முடிவையே, சம்மத்தையோ நான் கேட்கல. என் மாப்பிளை கிட்ட பேசி அவரை அனுப்பி வைங்க” என்றவர் கலைவாணி மற்றும் நிலுபமாவை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்.
“ரெண்டு பொட்ட பசங்கள பெத்து வச்சிக்கிட்டு அந்தாளுக்கு என்னொரு எகத்தாளம்? மாமியார் மருமகளை அடிக்கிறது ஊரு உலகத்துல நடக்காததா என்ன? அதுக்காக என் பையன தனிக் குடித்தனம் வைக்க சொல்வானா? அந்தாளு பொண்ணுங்க இல்லனா என் பசங்களுக்கு பொண்ணு கிடைக்காதா? தங்கரதம் போல பெண்களா பார்த்து என் பசங்களுக்கு கட்டி வைக்கிறேன்” புடவை முந்தியை உதறி இடுப்பில் சொருகியவாறு சபதமிட்டாள் அன்னம். 
“ஆமா ஆமா தங்கசிலை, தங்க விக்ரகம் போல பொண்ணுங்கள கொண்டு வந்து பூஜையறையில் வச்சி பூஜை பண்ணு” இனியன் கடுப்பாக,
“இங்க பாரு எனக்கு என் நிலுபமா தான் வேணும். அவ மட்டும் எனக்கு இல்லனு ஆகிருச்சு. அப்பொறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்குத் தெரியாது. முட்டாள்தனமா பேசி நேரத்தை வீணடிக்காம, பசங்கள மருமகள்களோடு சேர்த்து வைக்கிற வழியப்பாரு” என்று விட்டு சென்றான் கணி.
“என்னப்பா ஜான்சியை காரணமா கட்டி என்ன மிரட்டி பணிய வச்சது போல என் மாமனாரை பணிய வைக்க முடியலையா? அப்பனுக்கும் அப்பன் ஒருத்தன் இருப்பான் என்று சும்மாவா சொன்னாங்க, என் மாமனாரை சமாளிக்கிறதுலையே உங்க காலம் போகும் போலயே” தந்தை தன்னை ஒருகாலமும் தனிக் குடித்தனம் அனுப்ப மாட்டாரென்று பேசி விட்டு சென்றான் இனியன்.
“என்னங்க யோசிக்கிறீங்க?” அன்னம் கவலையாக கேட்டாள்.
“இல்ல… வடிவேலோட சொத்து மதிப்பை பார்த்துதான் இனியனுக்கு அனுப்பமாவ சம்பந்தம் பேசி முடிச்சேன் என்று நினைச்சியா? வடிவேலோட கொள்கைகளோ, எண்ணங்களோ எனக்கு சுத்தமாக பிடிக்காது. அப்படி இருக்கும் பொழுது எதுக்காக அவர் பொண்ண இனியனுக்கு பேசி முடிச்சேன். நம்ம ஜாதி எங்குறதால மட்டுமா? ஊருளையே செல்வாக்கான குடும்பம் வடிவேலுடைய குடும்பம். நான் அரசியல்ல இறங்கினா எனக்கு பக்கபலமாக இருக்க உதவும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் இனியனுக்கு அனுப்பமாவ கட்டி வச்சேன். கணியும் வடிவேல் பொண்ணையே கட்டிக்கிட்டான். பொண்ணுங்க மேல அந்தாளுக்கு எவ்வளவு பாசம் இருந்தா இப்படி பேசிட்டு போவாரு. நான் நினைச்சது தானா நடக்குது”
“என்னங்க என்னென்னமோ சொல்லுறீங்க?”
“சாதாரண கவ்ன்சிலர் பதவி என்றாலே யாரும் விட மாட்டாங்க, எம்.எல்.ஏ பதவி என்ன தானா தேடி வருது வேண்டாம் என்று சொல்ல சொல்லுறியா?”
“எங்க அரசியல்ல ரொம்ப ஈடுபாடா இறங்கக் கூடாது என்று அடிக்கடி சொல்லுவாங்களே, என்ன திடீரென்று” அச்சத்தோடு கேட்டாள் அன்னம்.
“பதவி, பவர் இருந்தாதான் நாமளே நமக்கான சில விஷயங்களை செஞ்சிக்கலாம். அதான். நீ என்ன பண்ணுற இனியன அனுபமாவோட தனிக் குடித்தனம் அனுப்ப ஏற்பாடு பண்ணுற, நிலுபமா வீட்டுக்கு வந்தா நல்லமுறையில் நடத்துற. புரியுதா?”
“சரிங்க” வரதராஜனுக்கே ஏத்த மனைவியாக பேசினாள் அன்னம்.
தான் கணவனிடம் பணிந்து போவதை போல் பிள்ளைகள் தனக்கு பணிந்து போவார்கள் என்று எண்ணுவது அன்னத்தின் முட்டாள்தனம். இனியனிடம் அன்னம் பேசினால் கடுமையாக எதிர்த்தான்.
“என்ன உன் புருஷனுக்கு என் மாமனாரை சமாளிக்க முடியாதாமா?” குழந்தைக்காகத்தானே அனுபமாவோடு சேர்ந்து வாழ முடிவு செய்தான். தனிக் குடித்தனம் சென்றால் அவளோடு தனியாக இருக்கும் நேரம் அதிகமாகவும். அதனாலயே கடுமையாக மறுத்தான்.
“ஏன்டா… நான் பேசின பேச்சுக்கு உன் பொண்டாட்டி இந்த வீட்டுக்கு வருவாளா? உன்ன வீட்டோட மாப்பிள்ளையாகவா உன் மாமனார் வரச் சொன்னாரு? தனிக் குடித்தனம் தானே வைக்க சொன்னாரு. எனக்கு அவ வயித்து வளருற பேரனோ, பேத்தியோ முக்கியம். நானே உன்ன தாரைவார்க்க இறங்கி வந்துட்டேன். நீ என்ன உச்சாணி கொம்புள்ள போய் உக்காந்துட்ட? உனக்கு உன் புள்ள முக்கியமில்லையா?” இன்னும் ஏதேதோ பேச வீட்டில் இருப்பதை விட அனுபமாவோடு இருப்பதே மேல் என்று தீர்மானித்தான் இனியன்.  
இதை எதையுமே அறியாத அனுபமாவிடம் நிலுவின் திருமணம் காதல் திருமணம் என்றும், தனிக் குடித்தனத்தை பற்றியும் வடிவேல் பேச அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவள்
“அப்போ அம்மாவும் நீங்களும் கூட இருக்க மாட்டீங்களா அப்பா?” கேட்கும் பொழுதே அவள் தொண்டை கமறியது.
“பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது புருஷன் கூட சந்தோசமா வாழனும் என்று தானே. நடந்த சம்பவத்தால் உன்ன அந்த வீட்டுக்கு அனுப்ப எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்ல. அங்க போனா பழைய நியாபகங்கள் வந்து உன்னாலையும் நிம்மதியா இருக்க முடியாம போய்டும். நீ உன் குழந்தை, உன் புருஷன் என்று நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழனும் என்றா எனக்கு இதை தவிர வேற வழித் தெரியல.
நாங்க அடிக்கடி வந்து பார்த்துட்டு தான் போவோம். இப்போதான் வீடியோ கால் வேற இருக்கே முகம் பார்த்து பேசிக்கலாமே. நாம கூடவே இருந்தா அது பாக்குறவங்களுக்கு தப்பா தெரியும். நாலு பேர் நாலு விதமாக பேசும்படியும் நாம வாழ கூடாது பாப்பா. புரியுதா” வடிவேல் இவ்வாறெல்லாம் எண்ணுபவர் கிடையாது. அனுபமா இனியனோடு சந்தோசமாக வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையிலிருந்தவர் அதற்கு ஏத்தது போலும், நடந்த சம்பவத்தை மறந்து இனியனின் குடும்பத்தாரோடு ஒன்றவும் அனுபமாவுக்கு கால அவகாசம் தேவை அதை எண்ணியே வடிவேல் பேசினார். 
மகள் விவாகரத்து வேண்டும் என்று கேட்டது உண்மையா? பொய்யா? என்று அவர் குறுக்கு விசாரணை செய்ய முனையவில்லை. கோபத்தில் கூட அவள் அவ்வாறு கூறி இருக்கக் கூடும், அதை கேட்டு அவள் மனதை மேலும் கஷ்டப்படுத்த வேண்டுமா? என்று விட்டு விட்டார்.  
அதன் பின் அனுபமா தந்தையின் பேச்சை மறுக்கவில்லை.
வரதராஜனும் அழைத்து தன் சம்மதத்தை கூறியிருக்க, அனுபமாவையும், இனியனையும் தான் வாங்கிய வீட்டிலையே தங்க வைக்கலாமா? என்று வடிவேல் வரதராஜனை கேட்டார்.
அனுபமாவுக்கு காலேஜ் பக்கம், இனியனுக்கும் ஆபீஸ் பக்கம் அந்த வீடே சௌகரியமானது என்றார் வரதராஜன்.
இதையறிந்த இனியன் “என்ன என்ன வீட்டோட மாப்பிள்ளையாக அனுப்ப முடிவு பண்ணிட்டீங்களா?” என்று குதிக்க ஆரம்பித்தான்.
“ஏண்டா இது உனக்கே நியாயமா இருக்கா? அவர் என்ன உன்ன வேலைய விட்டுட்டு ஊருக்கு வந்து அவர் வீட்டுலையா தங்க சொல்லுறாரு? அவர் மூத்த பொண்ண அடிக்கக்கடி பார்க்கவும், சின்ன பொண்ண படிக்க வைக்கவும் வீடு வாங்கினாரு, உன் அம்மா பேசின பேச்சுக்கும் உன் தம்பி பண்ண காரியத்துக்கு அவர் இப்படி இறங்கி வந்ததே பெரிய விஷயம். ஒழுங்கா போய் உன் பொண்டாட்டியோட குடும்பம் நடாத்து” வளமை போல் கட்டைக் குரலில் மகனை மிரட்டினார் வரதராஜன்.
“என்ன இவரு இப்படி அந்தர் பல்டி அடிக்கிறாரு? என்ன திட்டம் போடுறாரு? என்ன பண்ண காத்திருக்காரு ஒன்னும் புரியல. என்னைக்கி நான் நினைச்சது நடந்திருக்கு வளமை போல் இவரு சொல்லுறது தானே நடக்கும்” புலம்பினான் இனியன்.
கணிக்கும், நிலுபமாவுக்கும் ஒரு ரிஷப்ஷன் ஏற்பாடு செய்து அவர்களுக்கு திருமணமானதை உற்றார் உறவினர்களுக்கு தெரியப்படுத்தாலமென்று வரதராஜன் கூற, வடிவேலும் அதை ஆமோதித்தார்.
அதற்கு முன் இனியனும், அனுபமாவும் தனிக் குடித்தனம் செல்ல வேண்டும். தனித்தனியாக இருந்தால் உறவுகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.
ஏன் தனிக் குடித்தனம் போனார்கள் என்று கேட்டால் கொஞ்சம் நாட்களுக்குத்தான். தனியாக இருந்தால் தானே வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் தெரியும் என்று சமாளித்து விடலாம்.
ஆனாலும் அனுபமா கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் இது அவசியமா? என்று கேட்கத்தான் செய்வார்கள். எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தான் என்று பெரியவர்கள் பேசி முடிவு செய்ததோடு இனியனை அனுபமாவின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
அவசரமாக பால் காய்ச்சி குடியேறியாகிற்று. மகளோட வாழ்க்கைக்காக ஒரு பூஜை மட்டும் செய்யலாமென்று முடிவு செய்த வடிவேல் அதற்குண்டான ஏற்பாட்டை மட்டும் செய்திருந்தார். ஆனால் அதற்கு வரதராஜனின் குடும்பத்தாரை அழைக்கவில்லை.
தனது துணிமணிகளை அடங்கிய பெட்டியோடு இனியன் அனுபமாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். காலிங் பெல்லை அழுத்தியவன் கதவை திறக்கும் வரை காத்திருக்க, நடந்து முடிந்த நிகழ்வுகள் தான் அவன் கண்ணுக்குள் வந்து நின்றது.     
“இவள கூட்டிகிட்டு வந்து என் கூட குடும்பம் நடாத்த வைப்பாங்கனு பார்த்தா. என்ன இவளோட தனிக் குடித்தனம் அனுப்பி வச்சிருக்காங்க” என்ன நடக்குமோ என்ற பதட்டம் இனியனுள் வந்தது.
கதவை திறந்தது வடிவேல் தான். வீட்டில் பூஜை நடப்பதை பார்த்தவன் எதுவும் கேட்கவில்லை. தனக்கு காரியாலயம் செல்ல நேரமாவதாக மாமனாரை பார்த்து கூறினான்.
“கொஞ்சம் நேரத்துல பூஜை முடிஞ்சிடும், சாப்பிட்டே போகலாம்” என்றார் வடிவேல்.
“நான் வீட்டுல சாப்பிட்டுட்டு தான் மாமா வந்தேன்” என்றவன் கைக்கடிகாரத்தை பார்த்தான்.
“என்ன இவன் வந்தான். அனுபமாவை பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லையென்று வடிவேல் யோசிக்க,
“வாங்க மாப்பிள்ளை” என்று கலைவாணி வரவேற்க, அவள் பின்னால் காலேஜ் செல்ல தயாராகி வந்தாள் அனுபமா.
அவளைக் கண்ட பின்தான் குழந்தையின் நியாபகம் வந்தது. அவளிடம் வேகமா அடியெடுத்து வைத்தவன் “காலேஜ் எப்படி போவ? ஸ்கூட்டியிலையா? ஒன்னும் வேணாம் வா என் வடியிலையே விட்டுடுறேன்” என்றான். அதை பார்த்து வடிவேல் நிம்மதியாக புன்னகைத்தார்.
“என்ன இவனுக்கு திடீர் அக்கறை?”  அப்பா இருக்குறதால நடிக்கிறானா? என்று அனுபமா பார்த்தாலும் “குழந்தைக்காக” என்று அவளுக்கு நொடியில் புரிந்து போனது.
“இவன் குழந்தையின் மேல் இவனுக்கு அவ்வளவு பாசமா? நம்ப முடியல” உள்ளுக்குள் நொடித்தாலும் “இல்ல வரும் போது வண்டி இல்லனா சிரமம். நான் ஸ்கூட்டியிலையே போறேன்” என்றாள்.
ஆம் அழைத்து சென்று கல்லூரியில் விடுவான். அழைத்து வருவது அவனால் முடியாத காரியம். அவன் வேலை அப்படி இருக்கிறதே.
“அதுக்கென்ன நான் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்றார் வடிவேல்.
“இல்லப்பா அது சரி வராது. நீங்க ஊருக்கு போய்ட்டா யாரு பொறுப்பா என்ன கூட்டிட்டு வருவாங்க? நான் என் வண்டியிலையே போயிட்டு வரேன்”
“அதுக்குள்ள மாப்பிள்ளை வேற ஏதாவது ஏற்பாடு பண்ண மாட்டாரா? இப்போ நீ கிளம்பி மாப்பிள்ளை கூட போ” தந்தையின் பேச்சை மறுக்க முடியாமல் அனுபமா இனியனோடு கிளம்பிச் சென்றாள்.
தன்னோடு வர அனுபமா மறுத்த பொழுது இனியனுக்கு கோபம் தலைக்கேறியது. ஆனாலும் அவள் கூறியதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியதாக இருந்தது. அவன் பேச முன் வடிவேல் பேசியிருக்க, குழந்தைக்காக அவள் நலனில் அக்கறை செலுத்தியே ஆக வேண்டும் என்று எண்ணிய இனியன் தனது வேலைகளை கூடிய விரைவில் முடித்துக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு வீடு வர வேண்டும் என்று முடிவு செய்தான்.
இல்லையாயின் அன்று போல் விபத்து ஏதாவது நடந்து ஏடா கூடமாக அடிபட்டால் குழந்தைக்கு ஏதாவது நடந்து விட்டால்? தன்னை தன்னால் ஒருகாலமும் மன்னிக்க முடியாது என்றெண்ணினான்.
“டைவோர்ஸ் கேட்டியே பாத்தியா? இப்போ என்ன ஆச்சு என்று?” நா நுனியில் அவளை கிண்டல் செய்ய  மூளை துடித்தாலும் அவள் நிலையறிந்து இனியன் அமைதியாக இருந்தான்.
இவனோடு எனக்கென்ன பேச்சு என்று அனுபமா நினைத்தாளோ என்னவோ அனுபமா இனியனோடு ஒரு வார்த்தையேனும் பேச முயலவில்லை. 
கல்லூரி சென்று சேரும் வரை இருவரைடையிலும் பெரும் அமைதியே நிலவியது.  

Advertisement