“ஐயோ ஐயோ ஐயோ இந்த அநியாயத்தை நான் எங்க போய் சொல்லுவேன்? என் தம்பி பொண்ண என் மூத்த மருமகளாக்கிக்கணும் என்று நினச்சேன். அவ ஆசைப்பட்டா என்று அவளை என் சின்ன பையனுக்கு கட்டி வைக்க நினைச்சேனே. அவன் என்னடான்னா சொல்லாம கொள்ளாம இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கானே. என் தம்பிக்கு நான் என்ன பதில் சொல்லப் போறேனோ” அன்னம் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
விஷயம் கேள்விப்பட்டு வள்ளி அழுதவாறே வந்து சேர்ந்தவள் “என்ன அத்தான் இப்படி பண்ணிடீங்க? நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன்? நான் உங்களைத்தான் நேசிச்சேன். உங்களைத்தான் கல்யாணம் பண்ணனும் என்று இருந்தேன். இடையில இவ யாரு? இவள எதுக்காக கல்யாணம் பண்ணி கிட்டீங்க? காதல் கத்தரிக்காய் என்று சொல்லாதீங்க?”
வள்ளி ஒரு பக்கம் புலம்ப, அன்னம் ஒரு பக்கம் புலம்ப? “என்னடா பண்ணி வச்சிருக்க?” எனும் விதமாக தம்பியை முறைத்தவாறே நின்றிருந்தான் இனியன்.
வரதராஜன் கோபமாக வந்திறங்க, ராஜகோபால் காக்கிச் சட்டையிலையே வந்து சேர்ந்தார்.
யார் வந்தாலென்ன எனும் விதமாக நிலுபமாவின் கையை பிடித்தவாறு அமர்ந்திருந்தான் கணிமொழியான்.
வரதராஜன் வந்த உடனே கணிமொழியனை அடிக்க கையோங்க இனியன் தான் பாய்ந்து தந்தையை தடுத்திருந்தான்.
அப்பொழுது கூட கணி நிலுபமாவின் கையை விடவேயில்லை. அச்சத்தில் நிலுபமாவும் கணியின் கையை இறுக பிடித்திருந்தாள்.
“நான் இருக்கேனுல்ல. டோன்ட் ஒர்ரி” கணி நிலுபமாவை மெல்லிய குரலில் சமாதானப்படுத்திக் கொண்டிருக்க,
“நீ தான் இவனுக்கு உடந்தையா? நீ விரும்பின பொண்ணு உனக்கு கிடைக்கலைனு. என் பொண்ணு ஆசைப்பட்ட வாழ்க்கையை கிடைக்காம பண்ணிட்டியே பாவி. உன்ன…” இனியனை அடிக்க முனைந்தார் ராஜகோபால்.
ராஜகோபாலை இனியன் தடுக்கும் முன் வரதராஜன் தடுத்து தள்ளியும் விட்டிருந்தார்.
“என் பையன் மேலையா கை வைக்கிற? கொன்னுடுவேன்”
இதை ராஜகோபால் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. “என்ன மாமா? நான் தூக்கி வளர்த்த பையன் அவன் என் பொண்ண அடிப்பான். அவன நான் அடிக்கக் கூடாதா?”
வரதராஜன் மேல் ராஜகோபாலுக்கு மரியாதையும் பாசமும் அதிகமாகவே இருக்கும். வரதராஜனும் எந்த இடத்திலும், யார் முன்னிலையிலும் கொழந்தனாரை விட்டுக் கொடுத்து பேசியதில்லை. ஆனால் இன்று இந்த பொடிப்பயலுக்காக தள்ளி விட்டார் என்பதே ராஜகோபாலுக்கு அதிர்ச்சிதான்.
“ஐயோ ஐயோ ஒத்துமையா இருந்த குடும்பத்தை இப்படி பிரிச்சி விட்டாளுகளே” நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினாள் அன்னம்.
“என்ன இருந்தாலும் பெத்தமகன் பெத்தமகன் தானே” அதை சட்டென்று புரிந்து கொண்டு “அக்கா அமைதியா இரு” காவல்துறை அதிகாரியாக அவதாரமெடுத்த ராஜகோபால் கணியின் புறம் திரும்பி “எதுக்கு இப்படி பண்ண? ஏற்கனவே உன் அண்ணன் வாழ்க கேள்விக்குறியா இருக்கு. நீ அந்த வீட்டு பொண்ணையே திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணி இருக்குற. அதுவும் நீ ஒரு போலீஸ். வெக்கமா இல்ல”
தன் ஒரே மகள். செல்ல மகள். தாயில்லா பிள்ளை. அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியாமல் போன கோபம் ராஜகோபாலின் உள்ளுக்குள் கனன்றாலும் பொறுமை ரொம்பவும் அவசியம் என்று உணர்ந்தே பேசினார்.
“இதுல வெட்கப்பட என்ன இருக்கு? மனசுக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ண வெக்கப்படணுமா என்ன? உங்க கிட்ட சொன்னா மட்டும் கல்யாணம் பண்ணி வைக்கவா போறீங்க? இதோ இவன் வாழ்க்கையை மதம் என்ற போர்வைய கொண்டு போர்த்தி மூடிட்டீங்க. எனக்கென்ன? குடும்ப சென்டிமெண்டா? அதான் நான் முந்திகிட்டேன்” என்றான் கணி.
கணி தன் மனதில் உள்ளதை தான் கூறினான். கூறிய பின் தான் நிலுபமாவின் முகத்தை பார்த்தான். அவன் அவளிடம் அவ்வாறு கூறவில்லையே.
“சரியாதான் பேசுறீங்க” என்ற நிலுபமாவோ அவன் பேசியதை சரியாக கவனித்திருக்கவில்லை.
“சபாஷ் அப்படி போடு” என்று தம்பியை கண்களாளேயே கொஞ்சினாலும். வாய் திறந்து இனியன் எதுவும் பேசிடவில்லை. தம்பி செய்த காரியத்தால் அவன் அனுபமாவோடு சேருவது பிரச்சினையில் வந்து நின்றிருக்கிறது.
அன்று கேட்ட பொழுது நிலுபமாவை விரும்பவில்லையென்றவன் இந்த சில மாதங்களில் விரும்பியிருக்கவும் கூடும். நிலுபமா அவள் எவ்வாறு இவனை சந்தித்தாள்? விரும்ப ஆரம்பித்தாள்? இதெல்லாம் அனுபமாவுக்குத் தெரியுமா? நிச்சயமாக தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டாள். அதனால் தானே இருவரும் இரு வீட்டாரையும் நம்பாமல் திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கின்றனர்.
அனுபமாவை சந்தித்து விட்டு வந்த அன்றுதான் இனியன் தம்பியிடம் அனுபமா டைவோர்ஸ் கேக்கிறாள். அவளை எப்படி சமாதானப்படுத்த போகிறேனோ தெரியவில்லை என்று புலம்பினான். இனியன் பேசும் பொழுது அமைதியாக கேட்டுக்க கொண்டிருந்தவன், இன்று இப்படியொரு காரியத்தை செய்திருக்கிறான். இருக்கும் பிரச்சினையால் இனியனால் தம்பிக்கு சப்போர்ட் செய்து பேசவும் முடியவில்லை. அவன் செய்த காரியம் சரி என்று கூறவும் முடியவில்லை.
கணி வள்ளியை திருமணம் செய்யக் கூடாதென்று இதே நிலுபமாவை திருமணம் செய்தால் நல்லது என்று எண்ணியவன் அனுபமாவை விட்டுச் செல்வதால் இது நடக்கவும் கூடாது என்று எண்ணியதும் உண்மைதான்.
தான் விரும்பிய ஜான்சியை தன்னால் தான் திருமணம் செய்ய இயலவில்லை. தன்னுடைய தம்பி விரும்பிய பெண்ணை அவன் திருமணம் செய்வதில் என்ன தவறு?
இனியனுக்கு இப்பொழுது இருக்கும் பிரச்சினை ஏற்கனவே தன்னிடம் டைவோர்ஸ் கேட்ட அனுபமா கணி மாற்று நிலுபமாவின் காதல் திருமணத்தால் புதிதாக ஏதாவது பிரச்சினை செய்வாளோ என்பதுதான்.
“நீ தான் இவனுக்கு ஐடியா கொடுத்தியா?” வரதராஜன் மூத்தமகனின் மேல் பாய
“நான் என்ன குழந்தையா?” என்று கணி கேட்கும் பொழுதே
“நானே செம்ம காண்டுல இருக்கேன். லவ் பண்ண பொண்ண கல்யாணம் பண்ண விடல. கட்டிக்கிட்டவ உண்டானதும். அது என் குழந்தையா? இல்லையானு சந்தேகப்பட்டு வீட்டை விட்டு துரத்திட்டீங்க. அவளை கூட்டிக்கிட்டு வந்து என் கூட குடும்பம் நடாத்த வைக்க துப்பில்லை. இதுல இன்னொரு பிரச்சினை?
நானே என் பொண்டாட்டி கூட சேருவேனா? மாட்டேனா? என் குழந்தையை பார்ப்பானா? என்று இருக்கேன். இதுல இவனுக்கு கல்யாணத்த பண்ணி வச்சி. இருக்குற பிரச்சினையை பெருசு பண்ணி. என் பொண்டாட்டிய நிரந்தரமா பிரியணுமா? நான் என்ன முட்டாளா?” இனியன் கோபமாக கத்தி முடிக்க, அவன் சொல்வதில் தர்க்கம் இருப்பதாக அனைவரும் ஆமோதித்தனர்.
இனியன் பேசிய பின் “என்ன மாமா என்னென்னமோ சொல்லுறாரு? அக்காவ சந்தேகப்பட்டங்களா? லவ் பண்ணதாக வேற சொல்லுறாரு. இந்த போலீஸ் நம்மகிட்ட அத பத்தி எதுவுமே சொல்லலையே. ஒருவேளை மாமா வள்ளியை லவ் பண்ணி, வள்ளி இவரை லவ் பண்ணி… நினைக்கும் பொழுதே மண்டை வெடிக்கும் போல் இருந்தது. எதையும் முழுதாக அறிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமோ?” என்ற முகபாவனையிலையே நின்றிருந்தாள் நிலுபமா. அவள் கைகளும் மெதுவாக கணியின் கையிலிருந்து விடுவித்துக் கொண்டன.
இனியன் அனுபமாவிடம் கூறியதை போல் வள்ளி நேராக அன்னத்திடம் வந்து இனியன் அத்தனை பேரின் முன் அடித்ததை கூறி, “என்னமோ உங்க பையன் வாழ்க இப்படியே வெளிநாட்டுல கழியும் என்று கவலை பட்டீங்க?. அவர் என்னடான்னா பொண்டாட்டிய அப்படி தாங்குறா. ஒரு வார்த்த சொல்ல விடுறாரா? நான் என்னமோ தப்பா சொல்லிட்டா மாதிரி. கெட்டு போனவ தானே”
“என்னடி பேசுற? அப்போ என் பையன் தப்பானவன் என்று சொல்லுறியா?” அனுபமா இனியனின் மனைவி, சொந்த மருமகள் அவளை பேசியது தப்பில்லை. வள்ளி பேசியதன் அர்த்தம் மகனை வந்து சேரும் என்றதும் வெகுண்டாள் அன்னம்.
என்னமோ அம்மா செல்லம் என்று சொன்னீங்க? இப்போ பாருங்க வந்த உடனே பொண்டாட்டிய பார்க்க கிளம்பிட்டாரு. லண்டன் போனப்போ ஒரு தடவையாவது உங்களுக்கு போன் போட்டாரா? அதெல்லாம் கல்யாணமாகும் வரைக்கும் தான். அதான் கல்யாணமாகி பொண்டாட்டி என்று ஒருத்தி வந்திருக்காளே. அதுவும் யாரு? மேனாமினிக்கி இந்த கணி அத்தான் என்னடான்னா அவளுக்கு இளநீர் வாங்கி கொடுக்குறாரு? இவரு எதுக்கு அவளுக்கு சேவகம் செய்யணும்? இத கேட்டதுக்கு அண்ணனும் தம்பியும் என் மேல பாய்யிறாங்க” எதை எவ்வாறு சொல்ல வேண்டுமோ, அதை அவ்வாறு அழகாக சொல்லி முடித்தாள் வள்ளி.
“என்னடி சொல்லுற? கணியா? அவன… வரட்டும் இருக்கு இவனுகளுக்கு” இருவரும் வீடு வந்த உடன் ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பித்தாள் அன்னம்.
“ஏன்டா பத்து மாசம் சுமந்து பெத்து உன்ன கஷ்டப்பட்டு வளர்த்தது நான். நீ லண்டன் போவ. போய் நல்ல இருக்கியான்னு கூட சொல்ல ஒரு போன் பண்ண மாட்ட. லண்டன்ல இருக்குற வரைக்கும் அவ கூட போல கொஞ்சினது பத்தாது என்று வந்த உடனே பொண்டாட்டிய பார்க்கப் போவ? நீ வீட்டுக்கு வந்தா உனக்கு நான் ஆரத்தியெடுக்கணுமா?”
வீட்டுக்குள் நுழையும் பொழுதே அன்னம் ஆரம்பிக்கவும் “நாங்க உள்ளே போகவா? இல்ல இப்படியே வெளிய போகவா?” என்று கேட்டான் கணி.
“இருக்குற பிரச்சினைல இவன் வேற கொஞ்ச நேரம் சும்மா இரெண்டா” என்ற பார்வையோடு தம்பியை முறைத்த இனியன் “நான் லண்டன்ல இருக்கும் பொழுது அனுபமா கூட போன்ல பேசினேன்னு உன் கிட்ட யார் சொன்னா? அனுபமா சொன்னாளா? இல்ல நீயா கற்பனை பண்ணி பேசுறியா?” தீவிரமான முகபாவனையில் கேட்ட இனியன் வள்ளியை முறைக்க தவறவில்லை.
“இவளா? இருக்காதுடா… நேருல பார்த்தா மாதிரி அம்மா சொல்லுறாங்களே அதான் சந்தேகமா இருக்கு. ஆமா நான் லண்டன்ல இருக்கும் பொழுது அனுபமாவோடு கொஞ்சிப் பேசினதாக உன் கிட்ட யார் சொன்னா? அனுபமா சொன்னாளா? அவ அப்படியெல்லாம் சொல்லுற ஆள் இல்லையே. அப்படியே நான் கொஞ்சிப் பேசி இருந்தாலும் அவ என் பொண்டாட்டி. யாரு வயிறெஞ்சி உன் கிட்ட சொல்லி இருப்பா?” நாடியை தடவி யோசனை செய்வது போல் பாசாங்கு செய்தான் இனியன்.
“என்ன ரெண்டு பேரும் கலாய்க்கிரீங்களா? பாருங்க அத்த” கோபத்தின் உச்சியில் இருந்தாள் வள்ளி.
“என்னங்கடா நான் கேள்வி கேட்டா அவளை வம்பிழுத்துக்கிட்டு நிக்குறீங்க? உங்க ரெண்டு பேருக்கும் உங்கப்பா தான் சரி” பெற்றெடுத்த அன்றிலிருந்து இவர்களை ஆளாக்க தான் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பதை மூக்கை புடவை முந்தியால் துடைத்தவாறே கூற ஆரம்பித்தாள் அன்னம்
“எங்கம்மா திட்டினா கூட தங்கிக்கலாம். இப்படி சென்டிமென்ட்டை புழிஞ்சாத்தான் சத்தியமா என்னால தாங்க முடியல” என்றான் கணி
“இல்ல நானே அனுபமாவுக்கு இப்படி ஒரு அநியாத்த பண்ணிட்டேனே, ஜான்சியோட முகத்துல எப்படி முழிக்க போறேன், குழந்தைக்காக அனுப்பமாவ ஏத்துக்கணுமே, ஜான்சியை மறக்க முடியாம தவிச்சிக்கிட்டு இருந்தேன். இந்த மாதிரியொரு மனநிலைல அனுபமாவோட கொஞ்சிப் பேசி இருக்கேனே. நானெல்லாம் மனிசப் பிறவியே இல்ல தெரியுமா?” தன்னை தானே காலாயிப்பது போல் உண்மையை எடுத்துக் கூறினான் இனியன்.
அது சற்று அன்னத்தின் காதில் விழுந்து சிந்திக்க ஆரம்பித்தாளோ என்னவோ “அப்போ எதுக்கு லண்டனிலிருந்து வந்ததும் வராததுமா உன் பொண்டாட்டிய பார்க்கப் போன?” என்று கேட்டாள்.
“கேளுங்க அத்த. நல்லா கேளுங்க” வள்ளி ஏத்தி விட.
“நீ கொஞ்ச நேரம் சும்மா இருடி. அதான் விசாரிக்கிறேன் இல்ல. நீயே இனியன கட்டியிருந்தா… இன்னைக்கி இப்படியெல்லாம் பிரச்சினை வந்திருக்குமா?” மருமகளை சிடுசிடுத்தாள் அன்னம்.
“ஆமா உனக்கு உன் பசங்க சந்தோஷத்தை விட தம்பி பொண்ணு சந்தோசம் முக்கியமில்லை. போ…ம்மா உனக்கு எங்க மேல பாசமே இல்ல. இவ ஒரு ஆளுன்னு இவ வந்து மூக்கை சிந்தினதும். எங்களை திட்டுற?. எல்லா பிரச்சினைக்கும் இவதான் காரணம். இவ மட்டும் அண்ணன் மனசுல இடம் பிடிச்சிருந்தா. அண்ணன் வேற பொண்ண காதலிச்சு இருந்திருப்பானா? வடிவேல் மாமாவோட மூத்தமகள உனக்கு மருமகளா கொண்டு வந்திருப்பியா? உன் மூத்தமருமக வள்ளி இருந்திருப்பா” ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் வள்ளிதான் காரணம் என்பதை போல் கணி பேச அன்னம் வள்ளியை முறைக்கலானாள்.
“இவனுக்களை ஒரு வழி பண்ணலாம் என்று வந்தா என் பக்கமே திருப்பி விடுறானுங்க. அத்தைகிட்ட சிக்கினா சிக்கன் சிக்ஸ்டிபை தான்” கலவரமானாள் வள்ளி.
“நான் போனது இவன பார்க்க, இவனோட வீட்டுக்கு வரலாமேன்னுதான். நான் லண்டன் போகும் போது என்ன சொல்லிட்டு போனேன். அனுப்பமாவ வீட்டுக்கு கூட்டிகிட்டு வர்ற வழிய பாருங்க என்று சொல்லிட்டு தானே போனேன். நாங்க போய் எதுக்கு அவளை பார்க்கப் போறேன். அதுவும் நடு ரோட்டுல. கொஞ்சமாச்சும் லாஜிக் வேணாம்?”
“காலேஜ் விட்டு வந்த அண்ணி மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க. எதேச்சையா நான் பார்த்தேன். ஹெல்ப் பண்ணேன். அத குத்தமா இவ பேசுறா. அத கண்டிச்சது தப்புனு நீ பேசுற” கணி கிண்டலாக முடிக்க,
“இதுல அப்பாகிட்ட சொல்லுவேன் னு மிரட்டல் வேற” இனியன் எடுத்துக் கொடுக்க,
“நாங்க அப்படியே பயந்துடுவோம் பாரு” கணி அண்ணனுக்கு ஹைப்பை கொடுக்கலானான்.
வீட்டில் பெரிய சண்டை நிகழும் என்று எதிர்பார்த்தால் சாமர்த்தியமாக பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர்.
அனுபமாவின் வண்டியை ஆட்டோகாரன் மோதியதை கூறியிருந்தால் இன்னொரு பிரச்சினையை அன்னம் கிளப்பியிருப்பாள். அவ்வாறு கூறாமல் மயங்கி விழுந்து விட்டதாக கூறவும் அனுபமாவுக்கு என்ன ஆச்சோ என்று பதறுவதற்கு பதிலாக, குழந்தைக்கு ஒன்றுமில்லையே என்று கேட்டவள் அனுபமாவுக்கு அவள் படிப்புதான் முக்கியம், குடும்பமோ, குழந்தையோ, புருஷனோ முக்கியமில்லை என்று திட்ட ஆரம்பிக்கவும். இனிமேல் இங்கு தனக்கு ஒன்றும் வேலையில்லையென்று வள்ளி கிளம்பி சென்று விட்டாள்.
அனுபமா என்ன முடிவெடுப்பாளோ? டிவோர்ஸ் தான் வேண்டுமென்று கூறுவாளோ? தனக்கு குழந்தைதான் முக்கியம். டிவோர்ஸ் கேட்டால் கொடுத்து விட வேண்டியதுதான். தாயில்லாமல் குழந்தையை வளர்ப்பது எப்படி? நானே ஜான்சியை விட என் குழந்தைதான் முக்கியமென்று வந்து விட்டேன். அவளுக்கென்ன? குழந்தைக்காக என்னோடு வந்து வாழ மாட்டாளா? குழப்பத்திலும் சிந்தனையிலும் இனியனின் அன்றைய நாள் சென்றது.
அடுத்த நாள் இனியன் காரியாலயம் கூட செல்லவில்லை. விடுமுறையில் வீட்டில் தான் இருந்தான். அன்னம் கத்த ஆரம்பிக்கவும் தான் “சே இந்த வீட்டுல நிம்மதியாக தூங்க கூட முடியல” என்றவாறு வெளியே வந்தான்.
“இனியா அப்பாக்கு போன் பண்ணு. ஐயோ வள்ளிக்கு என்ன சொல்லுவேன். ராஜுக்கு என்ன சொல்லுவேன்” என்று பதறிய அன்னம் வரதராஜனுக்கு அலைபேசி வழியாக தகவல் கூறியிருக்க, அவர்களுக்கு முன்பு வள்ளி வந்து சேர்ந்திருந்தாள்.
“இவளுக்கு யார் தகவல் சொன்னாங்க” என்று இனியன் யோசிக்க வந்தவர்கள் இனியனை குற்றம் சொல்ல ஆரம்பித்திருந்தனர்.
அவன் கொடுத்த விளக்கத்தில் “ஆமா இவன் இன்னக்கி வீட்டுலதான் இருந்தான். எங்கேயுமே போகல. கணிதான் காலையிலையே கிளம்பிப் போனான். போனவன் இப்படியொரு காரியத்தை பண்ணிட்டு வந்திருக்கான்” என்றாள் அன்னம்.
“யேமா நீ பாட்டுக்கு இவன கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கியே, உன் வீட்டுல சொன்னியா? உங்கக்காவுக்குத் தெரியுமா?”
“வீட்டுல சொன்னா கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க என்று தானே நாங்களே கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தோம்” என்றான் கணி.
“அது உனக்கு. மாமா ஜாதி பார்க்க மாட்டாரு. காதல் திருமணத்துக்கு ஓகே சொல்வாரு என்று நிலுபமாவே ஒருநாள் சொன்னா. அதான் அவ கிட்ட கேக்குறேன்” என்றான் இனியன்.
இனியன் சொல்வது உண்மைதானே. என்ன பதில் சொல்வதென்று நிலுபமா திருதிருவென முழிக்கலானாள்.
“அவங்கப்பா சம்மதிப்பாரு. எங்க வீட்டுல சம்மதிக்க மாட்டாங்களே. அவர் கிட்ட சொன்னா. ஏற்கனவே ஒரு பொண்ணு வாழ்க்கை கேள்விக்குறியா இருக்கு என்று மறுத்துடுவாரு “கணி ஏற்கனவே யோசித்து வைத்திருந்த கருத்துக்களை எடுத்து விட குறிக்கிட்டாள் அன்னை.
“அப்படியெப்படி மறுப்பார்? மூத்த பொண்ணு வாழ வேணாமா?”
“அப்பா… இங்க என்ன நடக்குது? நடந்தது கல்யாணமே இல்லனு இவள அனுப்பி வச்சிட்டு எனக்கும், கணி அத்தானுக்கு கல்யாணம் பண்ணி வைங்க” என்றாள் வள்ளி.
“சின்ன குழந்தை போல பேசுறத நிறுத்து வள்ளி” அவளை அதட்டினாள் அன்னம்.
“ஆமா ஒருவேளை சம்பந்தம் பேச வரக் கூடும். வந்தா மரியாதையா நடத்துவீங்களா? வள்ளியை கல்யாணம் பண்ண போறவன் என்று அவரையும் அவமானப்படுத்தி, எனக்கு வள்ளி கட்டாய கல்யாணம் பண்ணி வைப்பீங்க, அதான் நான் முந்திகிட்டேன்” என்றான் கணி.
“அப்போ மாமாக்கு தெரியாது இல்ல” என்றான் இனியன். இதை இவர்களுக்கு புரிய வைக்கவே இந்தக் கேள்வியை கேட்டவன் வடிவேலை அழைத்து விசயத்தைக் கூறி வீட்டுக்கு வருமாறு கூறினான்.
அதிர்ச்சியில் வடிவேல் மனைவியிடம் விஷயத்தை கூறி விட, “ஐயோ கடவுளே. இப்படி பண்ணிட்டாளே. நான் தான் சொன்னேனே. இவள நம்பாதீங்க. எவனயாச்சும் இழுத்துக்கு கிட்டு ஓடிப் போவான்னு. சொன்ன படியே பண்ணிட்டாளே. அனு வாழ்க இப்படியிருக்கு, இவ இப்படி பண்ணிட்டாளே. நான் என்ன பண்ணுவேன்? ஹரிக்கு போன போடுங்க. என்ன பண்ணலாம் என்று கேளுங்க” பதறினாள் கலைவாணி.
“என்ன சித்தப்பா இவ்வளவு நடந்திருக்கு. என் கிட்ட எதையுமே சொல்லாம விட்டீங்க” கடிந்து கொண்டவன், சில உபதேசங்களை சொல்லி விட்டே அலைபேசியை அனைத்தான்.
இனியனின் வீட்டுக்கு சென்றால் அமைதியாக இருக்கும்படியும், எந்த கலாட்டாவையும் செய்யக் கூடாது என்றும் கூறித்தான் கலைவாணியை வடிவேல் அழைத்து சென்றார்.
ஆனால் சின்னமகளை பார்த்த உடனே பொறுமை இழந்து அவளை அடிக்கலானாள் கலைவாணி. அவளை இனியனும், கணியும் தடுக்க, குட்டிக் கலவரத்தின் பின்னே அமைதியானாள் கலைவாணி.
நிலுபமாவை அடித்தே கொன்றால் என்ன? எனும் விதமாக வள்ளி முறைக்க, தன்னுடைய இரண்டு மகன்களின் வாழ்க்கை இப்படியாகி விட்டதே என்று புலம்பலானாள் அன்னம்.
“சொல்லு பாப்பா ஏன் இப்படி பண்ண?” மகளிடம் அமைதியாக விசாரித்தார் வடிவேல்.
“அப்பா நான்…” நிலுபமாவால் பேச வார்த்தை வரவில்லை.
“அத நான் சொல்லுறேன் மாமா. நானும் உங்க பொண்ணும் காதலிக்கிறோம். என் அண்ணன் வாழ்க்கைல இருக்குற பிரச்சினையால் எங்க நீங்க பொண்ணு கொடுக்க மாட்டீங்க என்று நா தான் நிலுவை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”
கணி இப்பொழுது சொன்னதுதான் உண்மை. அனுபமாவின் வாழ்க்கையை காரணமாக காட்டி அவளை கட்டாயப்படுத்தினான் எனபதுதான் உண்மை.
“நான் உங்க கிட்ட பேசல தம்பி. நான் என் பொண்ணு கிட்ட பேசிகிட்டு இருக்கேன். என் பொண்ணுகளை எப்படி வளர்த்திருக்கேன் தெரியுமா? எதுவானாலும் தைரியமா, மனச தொறந்து பேச சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கேன்.
ஒருத்தியென்னடாண்ணா இந்த வீட்டுல நடந்த எதையையும் எங்ககிட்ட சொல்லாம மறச்சிட்டா. அவ வாழ்க, குடும்ப மரியாதை, அது இது என்று நினைச்சிட்டா போல. எதுவானாலும் அவ அப்பா நான் உசுரோடத்தான் இருக்கேன். என் பொண்ணுகளுக்கு பிரச்சினைனா நான் முன்னாடி நிப்பேன்.
என்ன பிரச்சினை வந்திருந்தாலும் என் பொண்ணு என் கிட்ட சொல்லி இருப்பா. ஆனா இவ சொல்லல. என்ன பிரச்சினை? எங்க தப்பு நடந்தது என்று நான் தெரிஞ்சிக்க வேணாம்?”
வடிவேல் கூறி முடிக்கும் பொழுதே “அப்பா…” என்றவாறே வடிவேலை கட்டியணைத்து கதறியழுதாள் நிலுபமா.
“ஆஹா… இவ டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் போலயே. கிராமத்தான் போட்ட போடுல உண்மையெல்லாம் உளறி வச்சிடுவாளே. இப்போ என்ன பண்ண போறேனோ?” கணியின் உள்ளுக்குள் இதயம் இயந்திர வேகத்தில் துடித்தது.