Advertisement

அத்தியாயம் 11
இனியன் லண்டனில் இருக்கும் வரை வீட்டார் யாரையுமே அழைத்து பேசவில்லை. நினைக்கும் பொழுதே தன்னை இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்திய பெற்றோரிடம் பேச அவனுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. வெறுப்பும் கோபமும் ஒன்று சேர்ந்தே வரும். இதில் எங்கே அழைத்து பேச, செல்லம் கொஞ்ச. நலம் விசாரிக்கத் தோன்றும்? 
கணி… அவனிடம் பேசினால் வீட்டுக்கு வா, வா என்பான். அண்ணியோடு சேர்ந்து வாழு என்பான். “நான் அவனுக்கு அண்ணனா? அவன் எனக்கு அண்ணனா? என்று சில நேரம் நானே குழம்பிப் போய் நின்றிருக்கிறேன். அவனிடம் பேசி ஜெயிக்க முடியாது. பேசினால் எரிச்சல் தான் வரும்” அதனாலயே அவன் அழைத்தாலும் பேசவில்லை. கடுப்பான கணி வாய்ஸ் மெஸேஜில் இனியனை கண்டபடி திட்டித் தீர்த்திருந்தான்.
பதிலுக்கு இனியனோ நேர வித்தியாசத்தை குறிப்பிட்டு, தான் இன்னும் லண்டன் காலநிலைக்கு, நேர வித்தியாசத்துக்கும் பொருந்தவில்லை என்று சமாளித்ததோடு, அலைபேசி அழைப்பு வரும் பொழுது தூங்கிக் கொண்டிருப்பதாகவும் கூறி வாய்ஸ் மெஸேஜ் வைக்க, கணி உடம்பை பார்த்துக்கொள்ளுமாறு அக்கறையாக வாய்ஸ் மெஸேஜ் வைத்திருந்தான்.
அனுபமா… அவளை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. பேசிய திருமணம் நிகழா விட்டால் தனது தந்தையின் மானம் போய் விடும் என்று என்னை திருமணம் செய்து கொண்டாலோ?  அல்லது வேறு காரணம் ஏதாவது இருக்குமோ? எதுவானாலும் அவள் என் மனைவி என்பதை விட என் குழந்தைக்கு தாய்.
கொஞ்சிப் பேச முடியாவிட்டாலும், அவள் நலம் விசாரிக்கவாவது அழைத்திருக்கலாம். வீட்டுக்கு அழைத்தும் நான் வந்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் பிடிப்பவளை அழைத்துப் பேச பிடிக்கவில்லை. அலைபேசியில் கோபமாக ஏதாவது பேசிவிடுவேனோ என்ற அச்சம் வேறு. அதனாலயே அவளிடம் பேசவில்லை.
இவ்வாறு யாரிடமும் பேசாதவன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் லண்டனிலிருந்து சென்னை திரும்பினான். அதிகாலை வந்து சேர்ந்தவன் வீட்டுக்கு செல்ல விரும்பாமல் ஹோட்டலில் அறையெடுத்து தங்கி இருந்தான்.
அதன் பின் காரியாலயம் சென்று சமர்ப்பிக்க வேண்டியவற்றை சமர்ப்பித்து விட்டு வேண்டா வெறுப்பாக வீடு திரும்பும் பொழுது தம்பியை சந்திக்கலாம், அவனோடு வீடு செல்லலாம் என்று எண்ணம் தோன்ற அவனை காண வந்தான்.
“போலீஸ் வேலைல இருக்கேன். எந்த நேரத்துல எங்க இருப்பேன்னு எனக்கே தெரியாது. நீ போன்ல லொகேஷன் ட்ராக்கர் போட்டுக்க. என் உசுருக்கு ஆபத்து என்றாலும் உதவுமில்ல” கிண்டலாக கணி கூறியிருக்க, அது இன்று இனியனுக்கு உதவியிருந்தது.
காவல் நிலையம் செல்லுமாறு டாக்சி டிரைவருக்கு கூறியவன் அலைபேசியில் கணி எங்கே இருக்கிறான் என்று பார்த்து விட்டு அங்கே செல்லுமாறு கூறினான். அப்பொழுது கணி வழக்கு விஷயமாக சென்ற இடத்தில் இருந்தான்.
கணியின் வண்டி கிளம்பவும் இனியன் அலைபேசியில் பார்த்து பாதையை மாற்றியிருந்தான்.
அவ்வாறு இனியன் வந்திறங்கிய பொழுது கணி இளநீர் வாங்கிக் கொண்டு பாதையை கடந்துக் கொண்டிருந்தான். அந்தப்பக்கம் நின்றிருந்த வள்ளியை இனியன் கவனிக்கவில்லை.
“ஓஹ்… இங்கதான் இருக்கானா?” டாக்சியை அனுப்பி விட்டு தன்னுடைய லக்கேஜோடு இறங்கியவன் கண்டது கணி அனுபமாவுக்கு இளநீர் கொடுப்பதைத்தான்.
“இவ இங்க என்ன பண்ணுறா?” என்றவனின் பார்வை அனுபமாவின் கொஞ்சமே கொஞ்சம் மேடிட்ட வயிற்றின் மேல் விழ, “அதுக்குள்ளே வயிறு தெரிய ஆரம்பிச்சிருச்சா? ஆமா எத்தனை மாசம்?” என்று யோசிக்கும் பொழுது வள்ளி அங்கே வந்து பிரச்சினை செய்ய ஆரம்பித்தாள்.
வள்ளி பேசியதுதான் அங்கிருந்த அனைவரின் காதிலும் விழுந்ததே. இனியனின் காதிலும் விழுந்து கோபமாக அவளை நெருங்கும் பொழுதே வள்ளி இழுத்ததில் அனுபமா விழப்போக அவளை தாங்கிப் பிடித்து நிறுத்தியவன் வள்ளியை அறைந்திருந்தான்.
இனியனை இந்த இடத்தில் அனுபமா எதிர்பார்க்கவேயில்லை. லண்டன் சென்றவன் ஜான்சியோடு செட்டிலாகி இருப்பானென்றுதான் நினைத்தாள். அவனை பார்த்ததும் அவளையறியாமலே மனதில் தைரியமும் இதமும் பரவுவதை அவள் அறியவில்லை.
ஆட்டோகாரன் மோதியதில் வண்டி சமநிலை தவறி விழும் பொழுது அனிச்சையாக அனுபமாவின் இடது கை நான்கு மாதம் நிறைவடைந்த வயிற்றை தாங்கிப் பிடித்திருக்க, அவளும் இடது புறமாகத்தான் விழுந்திருந்தாள். வயிற்றில் கைவைத்ததால் வயிற்றில் எந்த அடியும் படவில்லை. ஆனால் இடது கையில் பலமான அடி. அதுவும் தோள்பட்டையில் சுர்ரென்ற வலி இருந்து கொண்டே இருந்தது.
இடது கையில் வலி இருந்ததாலும், வயிற்றில் அடி பட்டிருக்குமோ என்ற அச்சத்தினாலும் கையை வயிற்றிலையே வைத்திருந்தாள்.
வள்ளி இடது தோள்பட்டையைத்தான் பிடித்து இழுத்திருந்தாள். வலி பொறுக்க முடியவில்லை. அவளை ஒரு கையால் தடுக்கவும் முடியாமல் தான் விழப் போனாள். நல்ல வேலை இனியன் வந்து தாங்கிப் பிடித்து நிறுத்தியிருந்தான்.
பிடிக்கும் பொழுது ஒரு கை வயிற்றிலும் ஒரு கை மார்பிலும் பதிந்திருந்தது. அந்த கணம் அனுபமாவின் வயிற்றில் இருந்த சிசு முதன் முறையாக அவளை உதைத்திருக்க, அதை இனியன் உணர்ந்தானா தெரியவில்லை வயிற்றிலிருந்த கையை அவனும் எடுக்கவில்லை. ஆனால் அனுபமா உணர்ந்தாள்.
ஆனந்த அதிர்ச்சியில் அவள் இரண்டு கைகளையும் வயிற்றில் வைத்திருந்தாள். அது இனியனின் கைக்கு மேல் அவன் கைகை பற்றியது போல் தான் இருந்தது.
இனியன் அனுபமாபின் முகத்தை பார்த்திருக்கவில்லை. அவளோ அவன் முதுகுக்குப் பின்னால் நின்றிருக்க, அவன் இடது கை அவள் வயிற்றில் இருந்தபடியால், அனுபமா அவள் இரு கையையும் வயிற்றில் வைத்த நொடி வலிப்பதால்தான் அனுபமா வயிற்றில் கைவைத்திருக்கிறாள் என்று நினைத்த இனியனுக்கு வள்ளியின் மீது கட்டுக்கடங்காத கோபம் தலைக்கேறியது.
“உனக்கு அன்னைக்கு கொடுத்தது பத்தாதா? இன்னைக்கும் பேசி வைக்கிற? நீ திருந்த மாட்ட. உன்ன…” மீண்டும் வள்ளியை அடிக்க இனியன் கையை ஓங்க அவனை தடுத்தான் கணி.
இது அவர்களின் குடும்பப் பிரச்சினைதான். பார்க்கிறவர்களுக்கு போலீஸ்காரன் பார்த்திருக்கும் பொழுது ஒரு ஆண் ஒரு பெண்ணை அடிப்பதை போலல்லவா தோன்றும்.
நடுவீதிக்கு வந்தால் பிரச்சினை என்னவென்று அறியாதவர்கள் நாலு விதமாக பேசத்தான் செய்வார்கள். சிலர் அலைபேசியோடு வீடியோ எடுக்க ஆயத்தமாக எத்தனை பேரை கணியால் தடுக்க முடியும்? பார்ப்பவர்களுக்கு கேலிப்பொருளாக வேண்டுமா? வீடியோவாக பகிரப்பட்டால் அவனிருந்த இடத்தில் நடந்த நிகழ்வு என்பதினால் காவல்துறை கேட்கும் கேள்விகளுக்கு பதில் தான் சொல்ல முடியுமா?
“ண்ணா… சுத்தியும் கேமராவோட ரெடியாகிட்டாங்க. இத வச்சி இவ வேற ஸீன் காட்டுவா. முதல்ல வீட்டுக்கு போலாம்” என்று கணி கூறியதும் சுற்றிலும் பார்வையை ஓட்டிய இனியன் அடங்கினான். சமூக ஊடகங்களில் வருவதை அவனும் பார்ப்பவன் தானே.
“பிரேக்னன்ட்டா இருக்கா என்று கொஞ்சம் கூட இரக்கமில்லாம தள்ளி விடுறா…” சத்தமாக கூறி விட்டே அனுபமாவின் புறம் திரும்பினான்.
நடந்தவற்றை பார்த்திருந்தவள் “நல்லா நடிக்கிறான்” என்றதோடு வண்டியில் ஏற முட்பட,
“உனக்கு வேற தனியா சொல்லனுமா?” மனைவியை அதட்டியவன் கணியை பார்த்து என்  லக்கேஜ் எல்லாம் வீட்டுக்கு கொண்டு போ. இவ வண்டிய இவ வீட்டுல கொண்டு வந்து விடு” என்றவாறே பாதையில் செல்லும் ஆட்டோவை நிறுத்தி அனுபமாவை ஏறச் சொன்னான்.
இனியனின் அந்த பேச்சிலையே அவன் அவளைக் கண்டு இங்கு வரவில்லை என்று அனுபமாவுக்கு புரிந்து போனது. அவளோடு சேர்ந்து வாழவும் அவனுக்கு எண்ணமில்லை. இருந்திருந்தால் அவளை வீட்டுக்கு அழைத்திருப்பான். அல்லது அவளது வண்டியையும் அவன் வீட்டிலல்லவா விடச் சொல்வான். அவன் பொருட்களை அவன் வீட்டிலும் அவள் வண்டியை அவள் வீட்டிலும் விடுமாறு கூறியதன் அர்த்தமென்னவென்று அறியாத அளவுக்கு அனுபமா ஒன்றும் குழந்தையில்லையே!
“நான் தனியா போகிறேன். அப்பா வந்துகிட்டு இருப்பாரு”
“அமைதியா வா” என்றவன் அவளை திரும்பிக் கூட பாராமல் பிடிவாதமாக ஆட்டோவில் ஏற்ற முனைய, அங்கே வந்து சேர்ந்தார் வடிவேல்.
வள்ளி கோபமாக நின்றிருக்க, “உன்ன கூட்டிட்டு போய் வீட்டுல விட எனக்கு நேரமில்ல. எப்படி வந்தியோ அப்படியே வீட்டுக்கு போய் சேரு” வள்ளியை திரும்பிய பாராமல் “நான் என்ன போலீசா? இவன் வேலைக்காரனா?” அண்ணனையும் திட்டியவாறு இனியனின் லக்கேஜை காவல்நிலையத்தின் வண்டியில் ஏற்றலானான் கணி.
“அனுபமா யாரு? உறவு முறையில் இவளுக்கு அக்கா. நடு ரோட்டில் அவளை அசிங்கப்படுத்தி பேசி விட்டாள். அதுவும் தான் திருமணம் செய்ய நினைப்பவனோடு. இருவரும் காதலிப்பார்களோ என்று சந்தேகம் கொண்டு பொறாமையில் பேசினால் மன்னித்து விடலாம். அனுபமா அவன் அண்ணி. அவளை சம்பந்தப்படுத்தி இன்று பேசும் இவளை திருமணம் செய்து கொண்டு தினம் தினம் தீக்குளிக்க வேண்டுமா?” மனதுக்குள் பொருமலானான்.  
அண்ணனையும் தம்பியையும் தீப்பார்வை பார்த்தவாறே தான் வந்த ஆட்டோவை நோக்கி ஓடினாள் வள்ளி. 
“என்னம்மா பிரச்சினை?” என்ற வடிவேல் இனியனைக் கண்டு நலம் விசாரிக்க ஆரம்பித்தார்.
அதை பார்த்து அனுபமாவுக்கு எரிச்சலாக இருந்தது. “அப்பா என் கை ரொம்ப வலிக்குது வீட்டுக்கு போலாமா?”
“என்னம்மா சொல்லுற?” வடிவேல் பதற,
“இந்த கைய வச்சிகிட்டுதான் உன் வண்டிய ஓட்டிக்கிட்டு வீட்டுக்கு போக போனியா?” அடிக்குரலில் சீறினான் இனியன்.
கைவலி வண்டியோட்ட முடியாததால்தான் அனுபமா தந்தை வரும் வரையில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அங்கே கணி வந்து அவளுக்கு இளநீர் வாங்கிக் கொடுத்திருந்தான்.  அதை பார்த்து வள்ளி பேச ஆரம்பிக்கவும், கைவலியை பொறுத்துக் கொண்டு இங்கிருந்து சென்றால் போதும் என்று வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல முயன்றாள்.
அதை பார்த்தவன் பேசுகிறானா? அல்லது அவனோடு ஆட்டோவில் ஏறாமல் வண்டியை கிளப்ப முனைந்ததை சொல்கிறானோ அவனை முறைத்தவள் பதில் பேசவில்லை.
“முதல்ல வா ஹாஸ்பிடல் போலாம்” அனுபமாவை அழைத்தான் இனியன்.
“எனக்கு ஒண்ணுமில்ல” இனியனை பாராமல் பதில் கூறினாள் அனுபமா.
“நான் வண்டிய எடுத்துக்கிட்டு வீட்டுக்கு போறேன். நீ மாப்பிளையோடு ஹாஸ்பிடல் போயிட்டு வா” என்ற வடிவேல் சாவிக்காக மகளிடம் கையை நீட்டினார். லண்டன் சென்ற இனியன் அலைபேசி அழைப்பு கூட விடுக்கவில்லையே என்று யோசனையாகத்தான் இருந்தார் வடிவேல். கணி இனியனைன் துணிப்பையை வண்டியில் ஏற்றுவதை பார்த்தவர் அவன் அனுபமாவை பார்க்கத்தான் வந்தானென்று தவறாக கணித்ததோடு அவனின் பேச்சில் அனுபமாவின் மீது அக்கறை இருப்பதாகவும் நினைத்தார். 
“அப்பா…” பல்லைக் கடித்த அனுபமா “அதான் எனக்கு ஒண்ணுமில்லன்னு சொல்லுறேனே”
“உனக்கு ஒண்ணுமில்லைதான். வயித்துல இருக்குற என் குழந்தைக்கு ஏதாவது ஆகிட்டா?” வார்த்தையை கடித்துத் துப்பினான் இனியன்.
“உன் குழந்தையா? அது இப்பொழுதுதான் உனக்கு ஞாபகம் வந்ததா?” கண்களாளேயே அவனை எரிக்கலானாள்.
அது இனியனுக்கு புரிந்தால் தானே. “ஆட்டோல ஏறு”
மகள் மறுப்பதால் அவ்வாறு பேசுகிறான் என்று எண்ணி “ஏறுமா…” இனியன் வந்து விட்டான். இனி மகளின் வாழ்க்கை சிறக்குமென்று அனுபமாவை அவனோடு வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார் வடிவேல்.
ஹாஸ்பிடல் சென்று சேரும் வரையில் இருவருக்கிடையில் எந்த பேச்சு வார்த்தையும் நிகழவில்லை.
வயிற்றில் வலி எதுவுமில்லாததால் மருத்துவரிடம் செல்ல வேண்டுமென்று அனுபமா எண்ணவில்லை. தந்தை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்ததால் வந்து விட்டாள். முதன் முறையாக இனியனோடு பயணிப்பது அவளுக்கு சந்தோசத்தை கொடுப்பதற்கு பதிலாக அசோகாரியத்தைத்தான் கொடுத்தது.
இனியனுக்கு அவ்வாறு இல்லை போலும் அவளின் மேடிட்ட வயிற்றை பார்ப்பதும், பாதையை பார்ப்பதுமாக அவளோடு பயணிக்கலானான்.
சொல்லாமல் கொள்ளாமல் ஏன் லண்டன் சென்றாய் என்று அனுபமா சண்டை போடவுமில்லை. தான் வேலையின் காரணமாகத்தான் சென்றேன் என்று சொல்லும் எண்ணம் இனியனுக்குமில்லை.
டாக்டரை அணுகிய இனியன் அனுபமா விழுந்து விட்டதாக கூறி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆகி இருக்குமா? என்று கேட்டதோடு கையும் வலிப்பதாக கூறினான்.
கை வீங்கி இருக்கிறதா? என்று பார்த்த மருத்துவர் வலிநிவாரணியோடு வயிற்றறையும் பரிசோதித்து குழந்தைக்கு ஒன்றுமில்லை என்று இருவரையும் அனுப்பி வைத்தார். 
வீட்டுக்கு செல்லும் வழியில் ஆட்டோ டிரைவரிடம் “அண்ணா வண்டிய அதோ அந்த காபி சாப்ல நிறுத்துங்க?” என்றாள் அனுபமா.
“தலைவலிக்குதா என்ன? வீட்டுக்கு போயி காபி சாப்பிட்டு ரெஸ்ட் எடு. கை வலிக்குதில்ல” சாதாரணமாகத்தான் கூறினான் இனியன்.
அனுபமா கூறும் பொழுதே ஆட்டோகாரன் வண்டியை நிறுத்தியிருக்க, இனியனின் பேச்சை காதில் வாங்காமல் இறங்கி நடந்தாள்.
“பிரேக்னன்ட்டா இருந்தா கண்டத சாப்பிட தோணும் தம்பி. வாங்கிக் கொடுங்க” என்றார் ஆட்டோ ட்ரைவர்.
“வாயத் தொறந்து கேக்குறா பாரு” அதற்கும் அவளை திட்டியவாறு ஆட்டோவுக்கு பணம் கொடுத்தவன் அனுபமாவின் பின்னால் ஓடினான்.
காபி ஷாப்பின் உள்ளே சென்று அமர்ந்தவளோ மெனு கார்டை திரும்பியும் பாராமல் வைடரிடம் “ஒரு வாட்டர் பாட்டில்” என்றாள்.
“தண்ணி குடிக்கவா இங்க வந்த?” எனும் விதமாக இனியன் அவளை முறைத்தான்.
“சார் நீங்க”
“டீ, காபி”
“இல்ல சார்”
“பேரு காபி ஷாப். முதல்ல பேர மாத்தயா. ஹாட்டா என்ன இருக்கு?”
“நெஸ்கபே”
“எனக்கு ஒரு நெஸ்கபே” என்றவன் “இப்போதைக்கு தலைவலி இல்ல. இனிமேல் வந்துடும்” என்று முணுமுணுக்க வேறு செய்தான்.
   
பணியாள் நகர்ந்த உடனே “எனக்கு டைவோர்ஸ் வேணும்” இனியனை தனிமையில் சந்தித்தால் பேச வேண்டும் என்று அனுபமா முடிவு செய்திருந்தது தான். மருத்துவமனைக்கு செல்லும் பொழுது அந்த எண்ணம் வரவில்லை. வீட்டுக்கு செல்லும் பொழுது கைவலி மட்டுப்பட்டிருக்க, மூளை விழித்துக் கொண்டிருந்தது. தாமதிக்காமல் கேட்டு விட வேண்டும் என்று கேட்டு விட்டாள்.
“காபி ஷாப்ல டைவோர்ஸ் கூட கிடைக்குமா? எனக்குத் தெரியாதே. இரு வெயிட்டர் கிட்டு கேக்குறேன்” என்றவன் அவளை கண்டு கொள்ளாமல் பணியாளை அங்கும் இங்கும் தேடுவதை போல் பாசாங்கு செய்ய பல்லைக் கடித்தாள் அனுபமா. 
“சிரிப்பு வரல. எனக்கு சிரிப்பு வரல. காமடி என்று நீங்க பண்ணுறது நிறுத்துங்க” முறைத்தவாறே இவள் கூற,
“ஓஹ்… உனக்கு நான் காமடி பண்ணுறது போல தெரியுதா? நான் சீரியஸ்ஸா பேசிகிட்டு இருக்கேன். திடிரென்று ஆட்டோல இருந்து இறங்கின. ஆட்டோகாரன் என்னடான்னா புள்ளத்தாச்சி பொண்ணு கண்ட நேரத்துல, கண்டதையும் சாப்பிடுவா, வாங்கிக் கொடுங்க என்று சொல்லுறான். உள்ள வந்த நீ தண்ணி பாட்டுல ஆடர் பண்ணிட்டு டைவர்ஸ் கேட்டா புது டிஷ் என்று தானே நினைக்கத் தோன்றும்” என்றான் இவனும்.
“உங்க கூட வெட்டியா நேரத்தை போக்க இங்க வரல. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசத்தான் வந்தேன்”
“ஓஹ்… அப்போ காபி சாப்பிட கூட வரல. அதான் தண்ணி பாட்டில் ஆடர் பண்ணியா? இது தெரியாம நான் பாட்டுக்கு நெஸ்கேபே ஆடர் பண்ணிட்டேன் பாரேன். அது சரி பேசுறத வீட்டுலயே பேசி இருக்கலாமே. இங்கதான் பேசணுமா? சினிமாக்காரங்க ஸீன் ஸீனா எடுத்து வச்சி கெடுத்து வச்சிருக்கானுங்க” சத்தமாக முணுமுணுக்க அனுபமா அவனை நன்றாகவே முறைத்தாள்.
வீட்டில் பேசினால் அனைவருக்கும் தெரிந்து விடுமே. அதனால் தானே கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவனை இங்கே அழைத்து வந்தாள். அவள் எங்கே அழைத்து வந்தாள்? இவள் பாட்டுக்கு இறங்கி வர, அவன் இவள் பின்னாலல்லவா வந்தான். இதையெல்லாம் இவனிடம் விலாவரியாக கூற முடியாமல்தான் முறைக்க வேறு செய்தாள்.  
“இங்க பாருங்க. எங்க பேசி இருந்தாலும் இதை தான் பேசி இருப்பேன். எனக்கு டிவோர்ஸ் வேணும்” கொடுக்கப் போறியா? இல்லையா? என்பதை போல் கையை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் அனுபமா.
பணியாள் வந்து இனியனின் நெஸ்கபேயையும், அனுபமாவுக்கு வாட்டர் பாட்டிலையும் கொடுக்க, அவன் காபியை மெதுவாக அருந்தலானான்.
“ரொம்ப சூடா இருக்க, தண்ணிய குடி. கல்யாணத்த நிறுத்த சொன்னப்போவே நிறுத்தியிருந்தா இப்போ டிவோர்ஸ் கேக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது” என்றவனின் வார்த்தைகளில் கொஞ்சம் கூட கோபமில்லை.
லண்டனில் இருக்கும் வரை ஒரு தடவைக்கு பல தடவை நிதானமாக யோசித்து முடிவெடுத்தவன் தானே. குழந்தைக்காக அனுபமாவை அவன் இந்த ஜென்மத்தில் பிரிய போவதில்லை. அவள் டைவோர்ஸ் கேட்ட உடனே கொடுத்து விடுவானா?  
வீட்டில் நடந்த பிரச்சினையாலும்,  தான் ஜான்சியை சந்தித்து பேசியதையும் கேட்ட அனுபமா எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கக் கூடும் என்று இனியன் சிந்தித்துப் பார்க்காமலா இருப்பான்.
கண்டிப்பாக விவாகரத்து என்ற ஆயுதத்தை அவள் முன் வைப்பாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் அதை பற்றி பேசுவாளென்று தான் எதிர்பார்க்கவில்லை. முன் கூட்டியே சிந்தித்தவன் அவளை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்றும் யோசிக்காமலா இருந்திருப்பான்.
“உனக்கு டிவோர்ஸ் தான் வேணும் என்றா கண்டிப்பா தரேன். ஆனா எனக்கு என் குழந்தை வேணும். என் குழந்தையை என் கிட்ட ஒப்படைக்கிறேன் என்று எழுதிக் கொடு. டிவோர்ஸ் கொடுக்குறேன்” என்றான்.
எதோ தொழில் பேச்சு வார்த்தை பேசுவது போல் தான் இனியன் அனுபமாவோடு பேசினான். அவளோடு தோழமையாக பேசி நண்பனாக உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு தோன்றவில்லை. அவளை புரிந்துகொள்ள வேண்டும் என்ற சிந்தனை இருந்தால் தானே அவள் நண்பனாக மாற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். தன் காதல் கைகூடாமல் போனதற்கு இவளும் ஒரு காரணம். தான் இழைத்த தவறால் உண்டான குழந்தை. அதனால் இவளோடு வாழ வேண்டிய கட்டாயம் என்று எண்ணுபவன் வேறு எவ்வாறு பேசுவான்? எரிந்து விழாமல், அமைதியாக பேசுவதே அதிசயம் தான்.
“என்ன விளையாடுறீங்களா? சுமக்கிறது நான். நீங்க கேட்ட உடனே தூக்கிக் கொடுக்கணுமா?” கண்களால் இவள் அனலைக் கக்க,
“நான் இல்லாம தான் குழந்தை வந்திருச்சோ?” இடக்காகவே கேட்டான் இனியன்.
“விதண்டாவாதமெல்லாம் பேச வேணாம். எனக்கு டைவோர்ஸ் வேணும். குழந்தையும் வேணும். சுமூகமான பேசி தீர்த்துக்கத்தான் உங்க கிட்ட நேரடியாக கேக்குறேன். இல்லனா ஹரிண்ணா கிட்ட சொல்லி கேஸ் போட்டிருப்பேன்”
“யாரு ஹரி… அவன் ப்ரோபர்டி லாயராச்சே. அவன் எப்போ டிவோர்ஸ் கேஸெல்லாம் வாதாட ஆரம்பிச்சான். உன் டிவோர்ஸ் கேஸ அவன் வாதாடினா கோவிந்தாதான்” அவளை வெறுப்பேத்தக் கூறியவன் வெற்றி எனக்கு என்று கூறினானா? அல்லது நமக்கு என்று கூறினானா? அறிந்து கூறினா? புரிந்துதான் கூறினானா? அவனுக்கே தெரியாது.
“இங்க பாரு குழந்தை வேணும்னா குழந்தையோட அப்பா நானும் உன் கூட இருப்பேன். இல்லையா குழந்தையை என் கிட்ட கொடுத்துட்டு டைவோர்ஸ் வாங்கிட்டு போ. இதுதான் என் முடிவு” இதற்கு மேலும் பேச ஒன்றுமில்லை என்பதை போல் காபிக்குண்டான பணத்தை மேசையின் மீது வைத்தவன் எழுந்து கொண்டான்.
அனுபமாவுக்கு கோபம் அடங்கவில்லை. “உங்கம்மா இது உங்க குழந்தையே இல்ல என்று சொன்னாங்க” என்று ஆரம்பிக்க
“இங்க பாரு… அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க கதையெல்லாம் வேணாம். நமக்குள்ள என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். அது என் குழந்தை என்று நானே சொல்லுறேன். மத்தவங்க பத்தி எனக்கு கவலையில்லை. குழந்தையை பத்தி கவலைப்பட வேண்டியது நீ. நீ ஒருத்தி மட்டும்தான். டிவோர்ஸ் வேணுமா? குழந்தை வேணுமா? என்பதை நீயே முடிவு செய்”  இவ்வளவு நேரமும் அமைதியாக பேசிக் கொண்டிருந்தவன் இதை கொஞ்சம் அழுத்தமாகவும், குரலில் கடுமையை கொண்டு வந்துமே கூறினான்.   
கைக்கடிகாரத்தை பார்த்தவன் “நீ என் கூட இருக்குறதால உன்ன உங்க வீட்டுல தேட மாட்டாங்க. ஆனா நான் வீட்டுக்கு கிளம்பனும். இந்நேரத்துக்கு என் மாமா பெத்த மரிக்கொழுந்து மண்ணெண்ணையை உத்தி திரிய ஏத்தி விட்டிருப்பா. எங்கம்மாக்கு அவங்க பெத்த பசங்க எங்க ரெண்டு பேரையும் விட தம்பி பொண்ணுன்னா உசுரு. உன் கூட மல்லு கட்டினது விட வீட்டுல பல மடங்கு சண்டை போடணும். நான் லேட் பண்ணுற ஒவ்வொரு நிமிஷமும் பிரச்சினை பெருசாகும். என்னால உனக்கு புரிய வைக்கவும் முடியாது. விலாவாரியா சொல்லிக்கிட்டு இருக்கவும் முடியாது. உன்ன வீட்டுல விட்டுடு நான் வீட்டுக்கு கிளம்பனும்” அடுத்த நொடி அதே அமைதியான குரலில் பேசினான்.
இனியன் இதை ரொம்ப ரொம்ப சாதாரண முகபாவனையில்தான் கூறினான். நடந்த சம்பவத்தில் அனுபமா சம்பந்தப்பட்டு இருக்காவிட்டாலோ, வள்ளி பேசியத்தைக் கேட்டிருக்காவிட்டாலோ, இனியன் பொய்யுரைக்கின்றான் என்று கூட எண்ணியிருப்பாள்.
நிச்சயமாக வள்ளி அமைதியாக இருக்க மாட்டாள். தனது மாமியாரும் எவ்வாறெல்லாம் பேசுவாள் என்று அனுபமா கண்கூடாக பார்த்தவள் தானே. எதுவும் பேசாமல் அமைதியாக இனியனோடு வீடு சென்றாள். 
இனியன் அனுபமாவின் வீட்டுக்குள் வர எண்ணவுமில்லை. வள்ளியால் வீட்டில் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கும் என்று கூறியதால் அவளும் அவனை அழைக்கவில்லை.
அவளை இறக்கி விட்டவன் “போய் வருகிறேன்” என்றும் கூறவில்லை. “நாளை வீட்டுக்கு வருகிறேன். இன்னொரு நாள் வீட்டுக்கு வருகிறேன். உன்னை அழைத்து செல்ல வருகிறேன்” என்ற வார்த்தைகளும் இல்லாமல் ஏன் ஒரு தலையசைப்பு கூட இல்லாமல் கிளம்பி சென்று விட்டான்.
வீட்டுக்கு வந்த அனுபமாவிடம் கலைவாணி மாப்பிள்ளை எங்கே எனக் கேட்க, அவன் வீட்டில் நடக்கும் பிரச்சினையை கூறினால் வள்ளி பேசியதையும் கூற நேரிடும் என்று இனியன் வேலை இருப்பதாக கிளம்பி சென்று விட்டதாக கூறினாள்.
“மாப்புள வந்துட்டாரு. இனி ஒரு பிரச்சினையுமில்ல என்று அப்பா சொல்லவும் நிம்மதியா குலதெய்வத்துக்கு வேண்டுதல் வச்சேன். இப்படி வீட்டுக்கு கூட வராம போய்ட்டாரே”
“அதான் வேலை இருக்கு என்று சொன்னேனே” அன்னையை கடிய முடியாமல் உள்ளே செல்ல முனைந்தாள் அனுபமா.
“நீ வேறமா. மாப்பிள்ளை வருவாரு என்று வடை செஞ்சி வச்சிருக்கா. அத சாப்பிடாம போனதாலதான் வருத்தப்படுறா” என்றார் வடிவேல்.
“இதான் உன் பிரச்சினையா? அதான் நான் இருக்கேனே” நிலுபமா சமயலறைக்குள் புகுந்து மொத்தவாடையையும் தட்டில் கொண்டு வந்தவள் “அக்கா நீயும் உக்காரு சாப்பிடலாம். அம்மா நீ டீ போடு” என்று உத்தவிட்டாள். 
“ஆமா எனக்கு பசிக்குது” என்று அனுபமா கூறியதில் நிலுபமாவை திட்ட வாய் திறந்த கலைவாணி அமைதியாக சமயலறைக்குள் நுழைந்தாள். 

Advertisement