இனியன் கோபக்காரன் மட்டுமல்ல பிடிவாதக்காரனும் கூட. அனுபமாவை அவன் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. அவன் மனம் என்றும் ஜான்சிக்குத்தான் அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.
அதற்கு முதல் காரணம் அவன் காதலித்த ஜான்சியை கொடுமை படுத்தி தன்னை கட்டாயப்படுத்தி அனுபமாவை திருமணம் செய்து வைத்த பெற்றோர். இரண்டாவது காரணம் திருமணத்தை நிறுத்துமாறு தான் அலைபேசி அழைப்பு விடுத்து கூறியும் நிறுத்தாத அனுபமா.
அப்படிப்பட்ட அனுபமாவை தனது அன்னை அடித்து வீட்டை விட்டு துரத்தினால் இவன் சென்று அழைத்து வருவானா? ஒருகாலமும் மாட்டான்.
அவன் குழந்தைக்காக செல்வானா? அவன் குழந்தை அவனுக்கு முக்கியம் தான். அதற்காக அனுபமாவிடம் கெஞ்சிக் கொண்டு நிற்க அவன் மனம் முரண்டு பிடிக்கலானது. கூடவே அவன் லண்டன் செல்ல வேண்டிய அவசியம் வேறு.
அவன் பிடிவாதக் குணம் வேறு தலை தூக்கி அவளை வீட்டை விட்டு அனுப்பியது அவன் பெற்றோர்கள் தானே, அவளை திருமணம் செய்து வைத்தவர்கள் அவளை அனுப்பி வைத்து விட்டார்கள். என்னோடு அவள் வாழ வேண்டும் என்று நினைத்தால் அவர்களே அவளை அழைத்து வரட்டும் என்று இனியன் அவன் பாட்டுக்கு லண்டன் கிளம்பி சென்று விட்டான்.
“நாலு வார்த்தைய சொல்லி திட்டினத்துக்கு இப்படித்தான் வீட்டை விட்டு போவாளா ஒருத்தி. தன்னோட வாழ்க்கை. புருஷன், குழந்தையை பத்தி நினைக்க மாட்டாளா? அதுசரி இந்த காலத்து பொண்ணுங்களுக்கு மாமியார் ஒரு வார்த்த சொன்னா போதும் மூட்டை முடிச்ச கட்டிக்கிட்டு அம்மா வீட்டுக்கு ஓடிவிடுவாளுக, சுயநலம் புடிச்சவ. அவளுக்கு அவ படிப்பு முக்கியம் வேறென்ன” அன்னம் வீடே அதிரும்படி கத்திக் கொண்டிருந்தாள்.
“மனசாட்ச்சிய தொட்டு சொல்லு. நீ ஒரு வார்த்தை சொன்னியா? நாலு வார்த்த சொன்னியா? நாக்கை புடுங்கிகிட்டு சாகுற மாதிரி பேசிட்டு ஒரு வார்த்த ரெண்டு வார்த்த என்று எண்ணாத. அண்ணி சுயநலம் புடிச்சவங்களா? மூட்ட முடிச்ச கட்டி வெளிய அனுப்பினதே நீதான். அவங்க மட்டும் கம்ப்ளைன் கொடுத்திருக்கணும், சென்ஸேஷன் நியூஸாகி இருக்கும். அண்ணி கொடுத்த கம்ப்ளைன்ட்டால் அம்மாவை உள்ளே வைத்த சப்பின்ஸ்பெக்டர் என்று” கணி நக்கலாக கூற, அன்னம் மகனை முறைத்தாள்.
“இவன் ஒருத்தன் என்ன உள்ள வைக்கிறதுலையே குறியா இருக்கான். அவன் என்னடான்னா கட்டின பொண்டாட்டிய கண்டுக்காம வெளிநாடு போய்ட்டான். நீங்க என்ன பண்ண போறீங்க? இப்படியே இருந்தா அவன் அந்த பொண்ண தேடி போயிடுவான்” அன்னையாக அச்சம் அன்னத்துக்குள் இருக்க வாய் விட்டே கூறி விட்டாள்.
“ஓஹ்… உன் கவலை உனக்கு. உன் பையன் சந்தோஷமாக இல்லைனாலும் பரவால்ல, உன் ஜாதி பொண்ணோட குடித்தனம் நடத்தணும் இல்ல” பொறுமியவாறே வெளியேறினான் கணி.
“அன்னம் எத்தனை தடவ சொல்லுறது உன் ஆதங்கத்தை பசங்க முன்னாடி கொட்டித் தீர்க்காதே என்று. அன்னைக்கு அவசரப்பட்டு இனியன் பொஞ்சாதிய கை நீட்டிட்ட, இப்போ பார்த்தியா என்ன மாதிரியான பிரச்சினைகள் உருவாக்கி இருக்கு? தப்பே பண்ணி இருந்தாலும் சில விஷயங்களை பொறுமையாதான் கையாலனும். இனியன் விசயத்துல அவசப்பட்டு அவனை அடிச்சிருந்தா இன்னைக்கி அவன் எங்க கூட இருந்திருப்பானா? எங்க பேச்ச கேட்டிருப்பானா? அடிக்க வேண்டிய இடத்துல அடிச்சதுனால அடங்கி அனுபமாவ கல்யாணம் கட்டிக்கிட்டான்” வரதராஜன் பொறுமையாக மனைவிக்கு புரியவைக்க முயன்றார்.
“கட்டி வச்சி என்ன பிரயோஜனம்? அவ அத்து கிட்டு போய்ட்டா. உங்க மகன் வெளிநாடு போய்ட்டான். அவன் நேசிச்ச பொண்ணையும் அங்க கூட்டிகிட்டு போய் குடும்பம் நடத்துறானோ என்னவோ. நீங்க இப்படி அமைதியா பேசிகிட்டு இருங்க” என்னதான் அனுபமாவை கண்டபடி பேசியிருந்தாலும் பெத்த மகனின் வாழ்க்கை என்றது அன்னம் பதறத்தான் செய்தாள்.
“இங்க பாரு. உனக்கு நீ பெத்த பசங்கள பத்தி இன்னும் சரியா தெரியல. இனியன் கோபத்துலதான் இப்போ பண்ணிக்கிட்டு இருக்கான். அவன் அனுபமாவ ஏத்துக்கிட்டா ஒழுங்கா குடித்தனம் நடாத்துவான். அவங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சி குழந்தையும் வர போகுதே. இனியும் உன் பையன் அந்த பொண்ண தேடி போவான்னு நினைக்கிறியா? நிச்சயமாக அவன் போக மாட்டான்” வரதராஜன் உறுதியாக கூறினார்.
“எனக்கு நம்பிக்கையில்லை. போனவன் ஒரு போனாவது போட்டு பேசினானா? அவன் பொண்டாட்டிக்காவது போன் பண்ணினானா? கல்யாணம் பண்ணி வச்சா மட்டும் எல்லாம் முடிஞ்சிடுமா? அந்த மாத்து மதத்துக்காரி மயக்கி கூட்டிகிட்டுதான் போக போறா” கணவன் கூறிய கூற்றில் சற்றும் நம்பிக்கையில்லாமல் கூறினாள் அன்னம்.
“அவளும் அவ அப்பாவும் அமேரிக்கா போக போறாங்க. அமெரிக்காதான் போக போறாங்களா? ரூட்டு மாறி லண்டன் போக போறாங்களானு கூடவே போக ஆள் ஏற்பாடு பண்ணி இருக்கேன். அமேரிக்கா போகாம லண்டன் மட்டும் போனாங்க, உசுர விட்டுட வேண்டியதுதான்” கண்களில் அனல் பறக்க கூறினார் வரதராஜன்.
“என்னங்க” அஞ்சியவாறே பதறினாள் அன்னம்.
“எனக்கு என் ஜாதியும் முக்கியம், என் பையனும் முக்கியம். கடைசி தீர்வுதான் கொலை. நீ பயப்படாத. முதல்ல போய் அனுபமாவ அழைத்துக் கொண்டு வரும் வழிய பாப்போம். இனியன் வரும் பொழுது அவ இங்க இருக்கணும்” என்று வரதராஜன் கூறி விட்டு சென்றாலும் அன்னத்தின் மனம் அடித்துக் கொண்டே இருந்தது.
சொன்னபடியே வரதராஜன் அன்னத்தை அழைத்துக் கொண்டு வடிவேலின் வீட்டுக்கு சென்றார்.
வடிவேல் ஊருக்கு வரவில்லையென்று வரதராஜன் தனது சொந்தபந்தங்கள் மூலம் அறிந்து கொண்டவர் வடிவேல் எங்கே இருப்பாரென்று விசாரிக்க, வடிவேல் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியது தெரிய வந்தது.
“கல்யாணத்துக்கு பிறகு வீடு வாங்கி இருக்காரு. சம்பந்தி நாங்க எங்க கிட்ட சொல்லணும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்ல. ஆமா பொண்ணு வாழ்க்கையை பற்றியே கவலை படாதவர் இல்ல” அன்னம் பொரிய,
“வீடு வாங்கினது நேருல சொல்லலாம் என்றுதான் வீட்டுக்கு வந்திருப்பார். நடந்த பிரச்சினையால் சொல்ல முடியாம போய் இருக்கும். இதை ஒரு பிரச்சினையாகி நீ வேற பேசி வைக்காத” வரதராஜன் மனைவியை கண்டித்தார்.
அந்த வீட்டில் தான் இருப்பாரென்று பூ, பழங்கள், ஸ்வீட், காரம் என்று அனைத்தையும் அள்ளிக் கொண்டு சென்றவர்கள் அனுபமாவைக் கண்ட உடன் எதுவுமே நடவாதது போல் நலம் விசாரித்து, மருத்துவரிடம் செக்கப்புக்கு சென்றாளா? என்ன கூறினார் என்றெல்லாம் கேக்கலாயினர்.
தனது மாமனாரும், மாமியாரும் தன்னை பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்த்திராத அனுபமாவுக்கு அவர்களின் அக்கறையான பேச்சு ஆச்சரியத்தோடு அதிர்ச்சியையும் கொடுத்தது. அன்று அவ்வளவு பேசியவர்கள் இன்று எதற்காக வந்திருக்கிறார்கள் என்ற அச்சம் வேறு. அவர்களின் பேச்சில் இனியன் இது என் குழந்தை என்று ஒத்துக் கொண்டானென்று அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது.
இனியன் இது தன்னுடைய குழந்தை என்று கூறியிருக்காவிட்டால் இவர்கள் இவ்வாறு இன்முகமாக பேச மாட்டார்கள். தன்னை பார்க்க வந்த நோக்கம்தான் புரியாமல் குழம்பினாள் அனுபமா.
இனியன் வேலை விஷயமாக லண்டன் சென்றிருப்பதாகவும், வர ஒரு மாதமாகும் என்று கூறிய வரதராஜன் அனுபமாவை எல்லாவற்றையும் மறந்து இனியனோடு வந்து வாழுமாறு கூறி வீட்டுக்கு அழைத்தார்.
“அவர் இன்னும் அந்த பொண்ண மறக்கல. அவங்க கூடத்தான் லண்டன் போய் இருக்காரு என்று நினைக்கிறன். அப்படித்தான் அன்னைக்கி சந்திச்சிக்கிட்டு பேசிக்கிட்டாங்க. இடையில நான்தான் போய் பேசி…” என்றவள் “அதெல்லாம் இப்போ எதுக்கு” என்றதோடு நிறுத்திக் கொண்டாள்.
வடிவேலும் கலைவாணியும் அங்கிருந்தாலும் அனுபமா பேசட்டும் என்று அமைதியாகத்தான் நின்றிருந்தனர்.
“ஜான்சிக்கு கல்யாண வீடியோவை அனுப்பி வைத்ததே அதை பார்த்தவள் இனியனை விட்டு விலகி சென்று விட வேண்டும் என்றுதான். தற்கொலை செய்ய முனைந்தவள் செத்து தொலைந்திருக்கலாம். கண்காணிப்பதை நிறுத்திய உடனே இனியன் அவளை சென்று சந்தித்திருக்கானா?” வரதராஜன் அதிர்ச்சியடைந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தார். அனுபமா அன்றுதான் தன் கர்ப்பம் உறுதியானதும் இனியனிடம் பேச சென்றதை கூற, “என் பையன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான். என் மேல இருக்குற கோபத்துல எதோ பண்ணிக்கிட்டு இருக்கான். குழந்தை என்றதும் உன்ன வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரச் சொல்லிட்டுதான் லண்டன் போனான். நிச்சயமாக அவன் எந்த ஒரு தப்பான முடிவையும் எடுக்க மாட்டான்” ஆணித்தரமாக கூறினார் வரதராஜன்.
“சரி அவர் வரட்டும். வந்த பிறகு வரேன்” என்றாள் அனுபமா. அவ்வாறு அவள் கூறும் பொழுது யார் முகத்தையும் பார்க்கவில்லை. வரதராஜன் அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போக போவதில்லைதான். எங்கே தனது பெற்றோர்கள் தன்னை அனுப்பி விடுவார்களோ என்று அவர்கள் முத்தை பார்ப்பதையும் தவித்திருந்தாள்.
இனியன் வந்து அழைக்காமல் அந்த வீட்டுக்கு செல்ல அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. இனியன் வந்து அழைக்கப் போவதுமில்லையென்று அவளுக்கு யார் சொல்லுவார்கள்?
இனியன் மீது அவளுக்கு இருந்த நம்பிக்கை முற்றாக உடைந்திருந்தது. அவன் ஒரு காலமும் வர மாட்டான் என்று அனுபமா முடிவே செய்திருந்தாள். தன்னை அழைக்க வந்தவர்கள், அவனையும் வற்புறுத்தி அனுப்பி வைப்பார்கள் என்று எண்ணினாள். அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? எந்த மாதிரியெல்லாம் பேசுவார்கள் என்று அனுபமா நேரிலையே பார்த்து விட்டாளே.
இனியன் வரட்டும் என்றதன் அர்த்தமும் அவன் வந்தால் விவாகரத்து கேட்பான். அவன் கேட்கா விட்டால் என்ன? தனியாக அவனோடு பேச நேர்ந்தால் அவனிடம் தானே கேட்டு விட வேண்டியது தான் என்று முடிவு செய்திருந்தாள். இனியனிடமிருந்து விவாகரத்து கிடைத்தால் நிம்மதி என்றுதான் நினைத்தாள். ஆனால் அதை அவள் வாயால் எவ்வாறு பெற்றவர்களிடம் கூறுவது என்று தயங்கி நின்றாள்.
இனியன் அந்த ஜான்சியோடு வந்திறங்கினாள் இவர்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள் என்று நினைக்கையில் சிரிப்பாகவும் இருந்தது.
“அவன் ஒரு தொடை நடுங்கி. தன்னுடைய தந்தைக்கு பயந்து தான் காதலித்த பெண்ணை மணக்க, திருமணம் செய்யும் என்னிடமே திருமணத்தை நிறுத்த சொன்னவன். ஜான்சியோடு வீட்டுக்கு வரும் அளவுக்கு அவனுக்கு தைரியமில்லை. ஜான்சியோடு லண்டனிலையே செட்டில் ஆகி இங்கே வராமலே இருந்து விடுவான்” என்றது அவள் மனம்
“அதான் அவன் வரட்டும் என்று சொன்னேன்” முணுமுணுக்க வேறு செய்தாள். அனுபமா இனியனை பற்றி கணித்தது சரிதான். அவ்வாறுதான் அவன் திட்டமிட்டிருந்தான். குழந்தையின் வரவால் அவன் திட்டம் சரிந்து, எண்ணமும் மாறியிருந்ததை அவள் அறிந்திருக்கவில்லை.
“இவ்வளவு பிரச்சினை நடந்த பிறகு என் பொண்ணு அந்த வீட்டுல இருக்கணுமா? கர்ப்பமாக இருப்பதை தெரிந்தும் இந்தம்மா கைநீட்டி இருக்காங்க. இந்தம்மா இருக்குற வீட்டுல என் பொண்ணு இருக்க மாட்டா. என்னங்க மாப்பிளை வந்தா ரெண்டு பேரையும் தனிக் குடித்தனம் வைங்க” அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்ததே பெரிது என்றெண்ணினாலோ வாய் திறந்தாள் கலைவாணி.
அன்னத்தை காணும் பொழுதெல்லாம் பொங்கும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அமர்ந்திருந்தவள், நடந்தவைகளுக்கு மன்னிப்பு கேளாமல் இருக்கிறாளே என்ற கோபம் வேறு கனற அடக்க முடியாமல் பேசி விட்டாள்.
“யாரை தனிக் குடித்தனம் அனுப்ப பார்க்குற? என் பையன என் கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்கிறியா?” அன்னம் சண்டைக்கு வரிஞ்சிக்க கட்டிக் கொண்டு நிற்க,
“ஆமா வேற மதத்து பொண்ண கட்டி நிரந்தரமா போக வேண்டிய பையன என் பொண்ணு தலைல கட்டி வச்சிட்டு தனிக் குடித்தனம் போறதுதான் இப்போ பெரிய பிரச்சினை போல சொல்லுற?” வாணியும் விடாது பேச,
லண்டன் சென்ற இனியனுக்கு முதல் வாரம் வேலை இழுத்துக் கொண்டது. அவனுக்கு அனுபமா என்ன? ஜான்சியின் நினைவுகள் கூட வரவில்லை. எப்பொழுது சாப்பிட்டான்? எப்பொழுது தூங்கினான்? என்று கேட்டால் “தெரியாது” என்ற பதிலைத்தான் கூறுவான்.
வேலைப்பளு குறைந்த நொடி காதலும், காதலியும், கல்யாணமும், கண்ணாட்டியும் ஞாபகம் வந்து தொல்லை செய்யலாயினர்.
ஜான்சியை மனதில் சுமந்து கொண்டு தன்னால் அனுபமாவோடு ஒருகாலமும் ஒன்றாக வாழ முடியாது. பேசாமல் குழந்தையை அவளிடமிருந்து பெற்றுக் கொண்டு ஜான்சியோடு சென்று விடலாமா என்று கூட எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்திருந்தன.
“இல்ல. என்று அனுபமாவை தொட்டேனோ அன்றே ஜான்சிக்கு துரோகம் இழைத்து விட்டேன். அவளை அவள் வழியில் விட்டு விடுவதுதான் சரி” என்றது அவன் மனம்.
“ஏன் உலகில் யாரும் இரண்டாவது திருமணமே செய்து கொள்வதில்லையா? குழந்தைக்காக இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் பொழுது உன் குழந்தைக்காக நீ காதலித்த ஜான்சியை திருமணம் செய்வதில் என்ன தவறு?” என்று கேட்டது அவன் மூளை.
“இல்லை குழந்தையை பெற்ற தாயிடமிருந்து பிரிப்பது மகா தவறு. குழந்தை அனுபமாவோடுதான் இருக்க வேண்டும். குழந்தைக்காக நான் அவளோடு இருக்க வேண்டும்” அவன் மனம் வாதிட
“அனுபமாவை மணந்து ஜான்சியை ஏமாற்றிய உன்னை ஜான்சி மன்னிக்கவே மாட்டாள். இதில் அனுபமாவை தொட்டு பிள்ளையையும் கொடுத்து அந்த குழந்தைக்கே ஜான்சியை அன்னையாக இருக்கச் சொன்னால் ஒத்துக்கொள்வாளா? இந்த ஜென்மத்தில் அவள் அதற்கு சம்மதிக்க மாட்டாள். அதனால் உன் மனம் சப்பை காரணங்களை தேடி அலைகிறது. அவளும் உன்னை கழற்றி விட சந்தர்ப்பம் பார்த்திருந்தாள். அனுபமா கர்ப்பமான சேதி கிட்டியதும் அமேரிக்கா பறந்து விட்டாள்” என்று அவன் மூளை அவனை தூற்றியது.
“இல்லை என் ஜான்சி அப்படிப்பட்டவளில்லை. திருமணத்தை மதிப்பவள் அனுபமாவின் கழுத்தில் தாலி ஏறாவிட்டால் நிச்சயமாக அவள் எனக்காக காத்துக் கொண்டிருப்பாள். தாலி ஏறியதும் தற்கொலை செய்துகொள்ள முனைந்தவள் அவள். அந்த ஏமாற்றத்திலிருந்து அவள் வெளியே வந்ததே அதிசயம். அவள் நன்றாக இருக்க வேண்டும். இனியும் அவளை தொந்தரவு செய்ய முடியாது. அனுபமாவை விட்டு பிரிந்தாலும் ஜான்சியை தேடி செல்லும் எண்ணமில்லை. அனுபமாவை மன்னிக்கவும் தயாராக இல்லை. அவளோடு இருப்பது என் குழந்தைக்காக மட்டுமே” மனதோடும், மூளையோடும் போராடலானான் இனியன்.
கணிமொழியன் ஒரு வழக்கு விஷயமாக வெளியே சென்றிருந்தவன் காவல் நிலையம் திரும்பிக் கொண்டிருந்தான். வரும் வழியில் தான் அனுபமாவின் காலேஜ் இருந்தது. அவள் வீட்டை விட்டு சென்ற பின் கணிமொழியன் அவளை சந்திக்கவேயில்லை.
இனியனுக்கும், அனுபமாவுக்கும் திருமணமான பின்பு அண்ணி என்று மரியாதையா இவன் அவளோடு பேசி இருக்கின்றான். அவனுக்கு தெரிந்தவரையில் இனியன் அவளை நல்ல முறையில் தான் நடாத்தியும் இருந்தான்.
என்று இனியனின் காதல் விவகாரம் தெரிய வந்ததோ அன்று கணியின் பார்வையின் கோணமும் மாறியிருந்தது. ஒரு போலீஸாக அவன் காவல் நிலையத்தில் சேர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்து இரண்டு மாதங்கள் கூட இல்லை தான்.
ஆனால் அவன் இந்த வேலைக்காக எத்தனை வழக்கை பார்த்திருக்கின்றான். இனியனே தான் அனுபமாவை கற்பழித்ததாக கூறுகையில் ஒரு போலீஸாக அவன் உள்ளம் கொதித்தது. அனுபவித்த அனுபமா தாலி என்ற ஒன்றை கட்டியதால் அவன் வீட்டில் அவனோடு அவன் அறையில் ஒன்றாக இருக்க வேண்டிய அவலநிலையில் அவன் குடும்பத்தாரோடு இன்முகமாக வேறு பேச வேண்டும், சுமூகமாக நடந்து கொள்ள வேண்டும். கேட்டால் இதுதான் பெண்ணுக்குண்டான வாழ்க்கை என்பார்கள்.
அனுபமாவை அணுகி வழக்கு தொடரச் சொல்லி இனியனை உள்ளே வைப்பது ஒன்றும் கணிமொழியனுக்கு கஷ்டமான வேலையில்லை. இனியன் கூறியதை போல் ராஜகோபாலை வைத்து இனியனின் மேல் கேஸ் போட்டல் எப்.ஐ.ஆரையே தந்தை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்.
“வரதராஜன் கெத்துனா வடிவேல் மட்டும் தக்காளி தொக்கா என்ன? அண்ணன் பையன் வக்கீல் டா மடையா?” என்றது கணியின் மைண்ட் வாய்ஸ்.
என்ன இருந்தாலும் இனியன் சொந்த அண்ணன். கோபத்தில் கூட சொல்லி இருப்பான். அவனும், அனுபமாவும் பொறுமையாக அமர்ந்து பேசினாலே அவர்களின் பிரச்சினைக்கு முடிவை காணலாம் என்று கணியும் அமைதியாக இருந்தான். லண்டன் சென்றவன் வராமல் இருந்து விடுவானோ என்ற எண்ணம் வேறு கணிக்கும் தோன்ற ஆரம்பித்திருந்தது.
காலேஜை கடக்கும் பொழுது தோன்றிய சிந்தனையில் கடந்தவன் ஒரு இடத்தில் கூட்டமாக நிற்பதைக் கண்டு வண்டியை நிறுத்தினான்.
“என்ன இங்க கூட்டம்?” கூட்டத்தை விலக்கியவாறு கணி உள்ளே நுழைய
“புள்ளத்தாச்சி பொண்ணு சார். வண்டிய மெதுவா தான் ஓட்டிக்கிட்டு வந்துச்சு. இதோ இந்த ஆட்டோகாரன் பின்னால வந்து மோதிட்டான். வண்டியோட விழுந்ததுல கைல கால்ல அடி. தண்ணி கொடுத்து உக்கார வச்சிருக்கேன்” என்றார் ஒரு பூக்காரம்மா.
“எக்சிடண்ட் கேஸா”
“ஐயோ இல்ல சார். லேசா தான் இடிச்சேன். இவங்க வண்டி பேலன்ஸ் இல்லாம போய் விழுந்திருச்சு” என்றான் ஆட்டோகாரன்.
“ஏன்டா நீ வேகமா வந்து இடிச்சிட்டு கதவிடுறியா?” அவனை அடிக்க சிலர் முனைய, தடுத்தான் கணி.
“இந்தாம்மா ஹாஸ்பிடல் போகணுமா? யாராவது ஆட்டோ நிப்பாட்டுங்க”
“நானும் அதைத்தான் சொன்னேன். வேணாம்னு சொல்லிருச்சு” பூக்காரம்மா சொல்லும் பொழுதே.
அனுபமாவின் குரலைக் கேட்ட பின் தான் வண்டியிலிருந்து விழுந்தது அவள் என்று அறிந்து கொண்டான் கணி.
பூக்காரம்மாவின் இருக்கையில் அமர்ந்திருந்தவள் கணி பார்க்கும் பொழுது துப்பட்டாவால் முகத்தை துடைக்க, குனிந்திருந்த அவளை கணி கவனித்திருக்கவில்லை.
“அண்ணி நீங்களா?”
“போலீஸ்காரன் வீட்டு பொண்ணா செத்தான் சேகர்” என்றனர் சிலர்.
“ஐயோ சார் நான் வண்டியோட்டினது என்னவோ உண்மைதான். இதோ இந்தாளுதான் அவசரமாக போகணும் என்று பின்னால இருந்து கூவிக்கிட்டு இருந்தான்” என்றான் ஆட்டோகாரன்.
“என்ன அண்ணி இந்த மாதிரி டைம்ல வண்டி ஓட்டலாமா?” அவளின் நலம் முன் நிற்க, அனுபமாவின் மேல் கோபப்பட முடியாமல் ஆட்டோக்காரனை அறைந்தான்.
“ஐயோ அவரை விடுங்க. அவர் மேல தப்பில்ல. நான் தான் எதோ சிந்தனையில் வந்துட்டேன். அவரை அனுப்புங்க” என்றதும் அவள் மனநிலையை அறிந்தவனாக கூட்டத்தை களைத்தான் கணி.
“வாங்க ஹாஸ்பிடல் போலாம். முதல்ல போய் செக்கப் பண்ணிடலாம்”
“எனக்கு ஒண்ணுமில்ல. அப்பா வருவாரு. நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றவள் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்து இல்லை என்றதும் சோர்வானாள்.
அதை பார்த்த கணி அவனே பாதையை தாண்டி ஓடிச் சென்று இரண்டு இளநீர் வெட்டி எடுத்து வந்தவன் அனுபமாவுக்கு ஒன்றைக் கொடுத்து, வண்டியில் சாய்ந்தவாறு அவன் ஒன்றை பருக ஆரம்பித்தான்.
இனியனை பற்றி பேசலாமா? வேண்டாமா? எவ்வாறு ஆரம்பிப்பது? எந்த நம்பிக்கையில் ஆரம்பிப்பது? முதலில் பேசி அனுபமாவின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளமாம் என்று நினைத்தான் கணி.
“சரி முதல்ல மாமாக்கு போன் போட்டு அவரை வர வேணாம் என்று சொல்லுங்க. நான் உங்கள வீட்டுல விட்டுடுறேன். அப்படியே உங்க வீட்டை பார்த்தது போலவும் இருக்கும்” போகும் வழியில் பேசலாம் என்று இவன் திட்டமிட்டான்.
“ஓஹ்… அண்ணன் இல்லையென்றதும் தம்பிய வளச்சு போட்டு கிட்டாளா? அதானே பார்த்தேன். என் அத்தானுக்கு என் கிட்ட பேச நேரமில்லை. இந்த மேனாமினுக்கி கிட்ட பேச நேரமிருக்கு. பெரியத்தான் என்னடான்னா தான் காதலிச்ச பொண்ணையும் விட்டு இவ வேணும்னு சொல்லுறாரு. நீங்க எப்படி? வச்சிக்க போறீங்களா?” அங்கே ஆஜரானாள் வள்ளி.
அவளை இருவருமே அங்கே எதிர்பார்க்கவில்லை. ராஜகோபாலன் வீடும் அங்கில்லையே. இவள் இந்த இடத்தில், இந்த நேரத்தில் என்ன செய்கிறாள்? என்று கணி யோசிக்க,
“மாமியார் பேசியது பத்தாதென்று இவளுமா?” மனம் வெம்பினாள் அனுபமா.
“சீ வாய மூடு”
“என் வாய எதுக்கு மூடனும். எங்கடா புருஷன் வெளிநாடு போவான் என்று காத்து கிடந்த இவள என்ன பண்ணுறது”
வள்ளி தைக்க கொடுத்த துணியை வாங்கத்தான் அந்த இடத்துக்கு வந்திருந்தாள். காவல்நிலைய வண்டியை பார்த்ததும் கணிதான் வந்திருக்கிறானா என்று ஆசையாக பார்த்தால், அவன் இளநீர் எடுத்துக் கொண்டு செல்வதைக் கண்டாள்.
“அத்தான் யாருக்கு சேவகம் செய்யிறாரு? அப்பாகிட்ட சொல்லி வைக்கணும்” கோபமாக வந்தவள் அனுபமாவைக் கண்டதும் இனியன் அவளை அடித்ததுதான் நியாபகத்தில் வந்தது. இனியன் லண்டனிலிருந்து வந்த உடனே இருவரையும் சேர்த்து வைக்க பேச்சு வார்த்தை நடப்பதும் வள்ளிக்குத் தெரியும்.
“கூடாது. என்னை அடித்தவன் சந்தோசமாக இருக்கக் கூடாது” என்றுதான் அனுபமாவை வம்பிழுத்தாள்.
“நான் கிளம்புறேன்” என்று அனுபமா இங்கே இன்னொரு நாடகம் அரங்கேற வேண்டுமா? என்று கிளம்ப முயன்றாள்.
மாமியார் யாரென்று குறிப்பிடாமல் பேசினாள். மாமனாரோ குழந்தையை அழிக்கக் கூட தயங்கவில்லை. வள்ளி கணியை சம்பந்தப்படுத்தி பேசினால் இது இனியனின் குழந்தையா? கணியின் குழந்தையா? என்று மாமியார் மீண்டும் ஒரு பிரச்சினையை கிளப்பக் கூடும் என்று அஞ்சினாள் அனுபமா. தான் இங்கிருந்தால் தானே பிரச்சினை. எதற்கு வம்பு. இவர்களோடு பேசி ஜெயிக்கவும் முடியாது. புரிய வைக்கவும் முடியாது. விலகிச் செல்வதுதான் உசிதம் என்று வண்டியின் அருகில் சென்றாள்.
“எங்கடி போற?” என்று வள்ளி அனுபமாவை பிடித்து இழுக்க, சமநிலை தவறி விழப் போனவளை தாங்கிப் பிடித்திருந்தான் இனியன்.
பிடித்த அடுத்த கணமே அவளை நிலையாக நிறுத்தி வள்ளியை அறைந்திருந்தான்.