கணிமொழியன், நிலுபமா திருமண வரவேற்பு கோலாகலமாக அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அனுபமா மற்றும் இனியன் தனிக் குடித்தனம் சென்ற உடனே வடிவேல் நிலுபமாவுக்கும் கணிக்கும் திருமண வரவேற்பை வைக்கவில்லை. திருமணம் தான் யாருக்கும் சொல்லாமல் நிகழ்ந்து விட்டது. சொந்தபந்தத்தை அழைத்து ஊரைக்கூட்டி சிறப்பாக செய்ய வேண்டுமென்று ஒரு மாதம் பொறுமையாக நேரமெடுத்துதான் ஏற்பாடு செய்திருந்தார்.
“இனியன தனிக் குடித்தனம் அனுப்பியாச்சே. இன்னும் எதுக்கு நிலுவை வீட்டுக்கு அனுப்பாமல் இருக்கிறார். என்ன? ஏது? என்று கேட்க மாட்டீங்களா?” அன்னையிடம் எரிந்து விழுந்தான் கணிமொழியன்.
“ஏன் டா நீ அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா. அதுக்காக எல்லாத்தையும் அவசரமாக பண்ண முடியுமா? நல்ல நேரம் பார்க்க வேண்டாம்?” சின்ன மகனை கடிந்தாள் அன்னம்.
கணிக்கு அவன் பிரச்சினை. தினமும் நிலுபமாவின் கல்லூரி வாசலுக்கு சென்று அவளை சந்திக்க முயன்றால் அவளோ இவனை கண்டு கொள்ளவேயில்லை.
கேஸ் விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று முன்பு போல் உள்ளே நுழையவும் முடியவில்லை. அவனுக்கும், அவளுக்கும் திருமணமான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியதால் மாணவர்கள் அவனை அடையாளம் கண்டு சிப்பதும், இரகசியமாக பேசவும் ஆரம்பித்தனர்.
வள்ளி வேறு அவன் வேலை செய்யும் ஸ்டேஷனுக்கு அவனுக்காக சமைத்துக் கொண்டு வந்து உரிமைக் கொண்டாட, அவளை துரத்தவும் முடியாமல் முழிபிதுங்கி நிற்பவன் ராஜகோபால அழைத்து வள்ளி வந்திருப்பதாக கூறியது மட்டுமல்லாது, அன்னத்திடம் சென்று “வள்ளியை கூப்பிட்டு பேசி அதட்டி வை. இனியன் அறைய மட்டும்தான் செஞ்சான். நான் கொலையே செய்வேன். அப்பொறம் என்ன ஏது என்று என்ன கேக்காதே” என்று கத்தினான்.
அன்னம் சென்று வள்ளியிடம் பேசினாளோ, திட்டினாளோ, வள்ளி வீட்டுப்பக்கமும் வரவில்லை. காவல்நிலையத்துக்கும் வரவில்லை.
அவள் தொல்லை ஓய்ந்தது. நிலுபமாவை எவ்வாறு வழிக்கு கொண்டுவருவது? என்ன செய்வது என்று கணி யோசிக்க அவன் முன்னால் வந்து நின்றார் வடிவேல். “என்ன மாப்புள. என்ன பிரச்சினை? எதுக்கு காலேஜ் வாசல்ல வந்து நிக்குறீங்க?” என்று கேட்டார்.
நிலுபமாவை பார்த்த கணி “இது உன் வேலையா?” என்று கண்களையே கேட்க அவளோ முறைத்தாள்.
அவள் தான் வடிவேலிடம் சென்று கணி தினமும் காலேஜ் வாசலில் வந்து நிற்கின்றான். காலேஜில் அனைவரும் என்னை கேலி செய்கிறார்கள். இனிமேல் நான் காலேஜுக்கே போகல. என்னை ஊருக்கு அனுப்பி வைங்க. நான் ஊருளையே போய் படிக்கிறேன்” என்று கண்ணை கசக்கினாள்.
“அவர் உன் புருஷன் டி…” என்று கலைவாணி ஆரம்பிக்க,
“ரிசப்ஷனுக்கு பிறகு நீ அவர் கூடத்தான் காலேஜ் போகணும், வரணும். அப்பா வர மாட்டேன். நீ சொல்லுறதுக்காக என்னனு கேக்குறேன்” என்றவர்தான் கணியின் முன் வந்து நின்றார்.
“என்ன இது சின்னப்புள்ளத்தனமாக இருக்கு?” என்று நிலுபமாவை முறைத்தாலும் “பன்க்ஷனுக்கு புடவை வாங்கணுமில்லையா மாமா. அதான் நிலுவுக்கு என்ன கலர் பிடிக்குமென்று கேட்கலாமென்று வந்தேன். இவ பேசவே மாட்டேங்குறா” என்றான் கணி. மாமனாரை சமாளித்து விட்டதாக மனதுக்குள் மார்தட்டிக்கொள்ள வேறு செய்தான்.
“இன்னும் பன்க்ஷனுக்கு நாளே குறிக்கல” நீ சொல்லுறது நம்புறது போல இல்லையே என்று வடிவேலின் தோரணை இருந்தாலும் “எதுவானாலும் வீட்டுக்கு வந்தே பேசுங்க மாப்புள. இப்படி ரோட்டுல நின்னு பேசினா நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க. அது என் பொண்ணுக்கு நல்லதில்லை. அவ அத விரும்பல” நாலாபுறமும் பார்த்தவாறே கூறினார் வடிவேல். அப்பக்கமாக செல்பவர்கள் இவர்களைத்தான் பார்த்தவாறு சென்று கொண்டிருந்தனர்.
“அப்பா…” நிலுபமா அதிர்ச்சியடைய,
“சரிங்க மாமா. நான் நாளைக்கு வீட்டுக்கு வரேன்” அவளை பார்த்து கண் சிடிமிட்டியவாறே சென்றான் கணிமொழியன்.
கணியும் சளைக்காமல் தினமும் வீட்டுக்கு செல்லும் முன் நிலுபமாவை வந்து பார்த்து விட்டு அரைமணி நேரம் பேசி விட்டுத்தான் செல்கின்றான்.
அவள் தான் முகம் கொடுத்து பேச மாட்டாள். இவன் பேசும் பொழுது காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்பாள்.
அல்லது தேநீர் கொண்டு வரேன், ஸ்னேக்ஸ் கொண்டு வரேன் என்று எழுந்து செல்வாள்.
“நான் என்ன பலநாள் பட்டினி கிடக்கிறேன் பாரு வந்த உடனே நீ எனக்கு சாப்பாடு போட. உன்ன பார்த்து பேசலாம்மென்று வந்தா ரொம்பதான் பண்ணுற. கல்யாணம் ஆனா என் கூட, என் ரூம்லதான் தங்கணும். மறந்துடாத” கடுப்பானவன் மிரட்டவும் செய்வான்.
“அத அப்போ பார்த்துக்கலாம்” இவளும் அசால்ட்டாக பதில் சொல்வாள்.
வடிவேலிடம் வந்து நின்ற கணி. தானே நிலுபமாவை கல்லூரிக்கு அழைத்து சென்று அழைத்து வரவா என்று கேட்டான்.
ஒரு தந்தையின் நியாயமான ஆசைத்தானே. புன்னகைத்த கணியும் சரியென்றான்.
திருமண வரவேற்புக்கு துணி வாங்க கணி வந்து நின்றதும், “அக்கா வரல?” அனுபமா வரவில்லையாயின் தான் வர மாட்டேன் என்று கூற முனைந்த்தாள்
“அக்காவை கூட்டிட்டு வர அப்பா போய் இருக்காரு. நம்மள வரச் சொன்னாரு வா போலாம்” மகளை அதட்டி அழைத்து சென்றாள் கலைவாணி.
நிலுபமா கணியை முறைத்தவாறே தனக்கு பிடித்தமான புடவையை தேர்வு செய்திருக்க, இதோ இன்று வரவேற்பில் அணிந்து அவனோடு நின்றிருந்தாள்.
வரதராஜனின் சொந்தபந்தங்களும், வடிவேலின் சொந்தபந்தங்களும் மற்றும் காவல்துறையை சார்ந்த சிலரும் இன்னும் சிலரும் வருகை தந்திருந்தனர். அவர்களில் இனியனோடு வேலை பார்க்கும் பார்த்தீபனும், அமைச்சர் மாணிக்கவேலின் தொண்டர்கள் சிலரும் அடங்கும்.
“வள்ளியை மூத்த மருமகளாக்கிக்கணும் என்று சொல்லிக்கிட்டு இருந்த அன்னம் மூத்த மருமகளாக வடிவேலோட பொண்ண கொண்டு வரும் போதே நினச்சேன் இப்படியேதாவது நடக்குமென்று” உறவுக்கார ஒருத்தி பேச
“எப்படி” என்று ஆர்வமானாள் இன்னொருத்தி.
“ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்பினங்களாமே” குரலை தாழ்த்தி கூறினாள் முதலில் பேசினவள்.
“அப்படியா?” இரண்டாமவள் வாயில் கை வைக்க,
அவர்களுக்கு பின்னாலிருந்து ஒரு பெண் “அப்படித்தான் நானும் நினச்சேன். ஜாதகம் பார்த்ததுல மூத்தவனுக்கும் வள்ளிக்கும் ஏழாம் பொருத்தமாம். அதான் அவனுக்கு வடிவேலோட பொண்ண பேசி முடிச்சிட்டாங்க. சரி சின்னவன் தான் வேலையில சேர்ந்துட்டானே வள்ளிக்கும் அவனுக்கும் கல்யாணத்த பண்ணலாம் என்று பார்த்தா சின்னவன் இருக்கிறதோ போலீஸ்ல. அவனுக்கு ஜாதகத்துல கண்டமாம், வள்ளியோட ஜாதகம் பொருந்தவே இல்லையாம். கண்டம் நீங்க உடனே திருமணம் செய்யணுமாம். அவசரமாக எங்க போய் பொண்ணு தேடுறது? மருமகளுக்கு ஒரு தங்கச்சி இருக்கும் பொழுது முதல்ல அந்த பொண்ண கேட்டுப் பார்க்கத்தானே தோணும். கேட்டாங்க, ஜாதகமும் பொருந்திச்சு. ஊரக் கூட்டி கல்யாணம் பண்ண நேரம் பத்தலன்னு உடனே ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணத்த முடிச்சிட்டாங்க. அத அவனோட நண்பர்கள் வலைத்தளத்துல போட்டு, அது வேற மாதிரி போச்சு”
“ஓஹ்… அப்படியா…”
“பின்ன காதல் திருமணம் என்றா வடிவேல் கூட ஒத்துப்பாரு. வரதராஜன் ஒத்துப்பாரா? வெட்டி வீசிடமாட்டாரா?”
“ஆமா, ஆமா” என்று அருகில் அமர்ந்திருந்த பெண்கள் ஆமோதிக்க,
“ஜாதக கோளாறுலதான் மூத்தவனை தனிக் குடித்தனம் வச்சிருக்காளா அன்னம்” என்றாள் ஒரு கிழவி.
இதுதான் நடந்த உண்மை என்பது போல் அந்த பெண்மணி பேச என்ன எது என்று கேளாமல் இவர்களும் அதற்கேத்தது போல் கதையை திரித்து புறணி பேசலாயினர்.
தன்னுடைய குடும்பத்தில் யார் புறணி பேசுவார்கள் என்னவெல்லாம் பேசுவார்கள் என்று அன்னத்துக்கு தெரியாதா? கணவனிடம் புலம்பியிருந்தாள்.
தன்னுடைய அரசியல் பயணத்துக்கு எந்த களங்கமும் இல்லாத குடும்பமும், குடும்ப சூழ்நிலையும் வேண்டும். அதற்காக வேண்டியே பேசக் கூடியவர்கள் மத்தியில் சிலரை அமர்த்தி பேச வைத்திருந்தார் வரதராஜன். அவர் நினைத்தது சரியாக வேலை செய்திருந்தது.
ஆனால் மணப்பெண்ணான நிலுபமாத்தான் கணிமொழியனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
“கொஞ்சம் சிரிச்சா மாதிரி மூஞ்ச வச்சிக்க சிட்டுக்குருவி. பாக்குறவங்க நீ எனக்கு பொருத்தமே இல்லனு சொல்லிடப் போறாங்க” கணி நிலுபமாவை பாராமல் சிரித்தவாறே கூற,
அவன் புறம் திரும்பியவள் “தெரிஞ்சிக்கட்டுமே. உன்ன எனக்கு பிடிகலனு தெரியட்டும்”
“யாருக்கு உங்கக்காகா? கொஞ்சம் அங்க பாரு. உன்னதான் பார்த்துக் கொண்டு நிக்கிறாங்க” என்றான்.
சட்டென்று நிலுபமா அனுபமாவின் புறம் திரும்பிப் பார்த்தாள். ஆறு மாத வயிற்றை பிடித்துக்குக் கொண்டு மேடையேறினாள் அனுபமா.
“என்னக்கா? கஷ்டப்பட்டு ஏறி வரணுமா? மாமா எங்க? உன்ன பார்க்காம அவர் என்ன செய்யிறாரு?” நிலுபமா இனியனை கண்களால் தேடியவாறு கேட்டாள்.
“இது என்ன வீடா? என்னையே கவனிக்க? வந்தவங்கள கவனிக்க வேண்டாமா? ஆமா நீ என்ன மூஞ்ச உம்மென்று வச்சிருக்க, கொஞ்சம் சிரிச்சா மாதிரி வச்சிக்க” என்றதும் கணி குபீருன்று சிரித்தான்.
அவனை முறைத்த நிலுபமா “கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்டீங்களா? எப்ப பார்த்தாலும் கடுப்படிக்கிறீங்க” என்றாள்.
கணி கிண்டல் செய்திருக்கிறான் அதனால் தான் நிலுபமா முறைத்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தாள் அனுபமா.
“இப்படி சண்டை போட்டு சண்டை போட்டே தான் காதலிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? வந்திருக்குறவங்க உங்களைத்தான் பாக்குறாங்க. விளையாடாம நில்லுங்க” என்று விட்டு இறங்கிச் சென்றாள் அனுபமா.
தன் அக்கா யோசிக்க ஆரம்பித்து கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டால் பிரச்சினையாகுமென்று அதன்பின் தான் நிலுபமா சிரித்த முகமாக நின்றிருந்தாள்.
தங்கை கணியை காதலித்தாள் என்பது அனுபமாவால் நம்ப முடியாமல் இருக்க, நிலுபமாவிடம் இதெல்லாம் என்று எப்படி நடந்தது? கணிக்குத்தான் வள்ளியை பேசி வைத்திருந்தார்களே. எல்லாம் தெரிந்து தான் காதலித்தாயா? என்று கேட்டாள்.
இந்த திருமணமே அக்காவையும், மாமாவையும் ஒன்று சேர்க்க நடந்த திருமணம் உண்மையை கூறி அவளை கலவரப்படுத்தலாகாது என்றெண்ணியவள்.
“காதலிச்சு கல்யாணம் பண்ணி இருக்க, சந்தோசமாக இரு” என்ற அக்காவை கட்டிக் கொண்டு அழுதாள் நிலுபமா.
“என்ன” என்று கேட்ட அனுபமாவுக்கு என்னவென்று பதில் சொல்வாள். அக்காவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று அவள் இன்று மௌனமாகிறாள்.
நிலுபமா துரு துருவென்றிருக்கும் வாயாடிதான். யார் கூட வேண்டுமானாலும் பேசுவாள். அக்காவுக்காக சண்டை போடுவாள். அதனால்தான் இனியன், அனுபமா இருவருக்கிடையில் பிரச்சினை இருப்பதை அறிந்த நொடி இனியனை காணவும் சென்றாள். கணி கூறியதை சந்தேகம் கொள்ளாமல் நம்பி அவனை திருமணமும் செய்து கொண்டாள்.
அக்கா ஒருவகையில் ஏமார்ந்தாள் என்றால் தான் ஒருவகையில் ஏமார்ந்து விட்டோம் என்று அழுகிறாளா? நகமும் சதையுமாக ஒற்றுமையாக இருந்த அக்காவிடம் பொய் சொல்ல நேர்ந்ததை எண்ணி அழுகிறாளா? குலுங்கிக் குலுங்கி அழுதாள் நிலுபமா.
தன்னிடம் எதையும் மறைக்காத தங்கை தன்னுடைய காதலை மறைத்து விட்டதால் தான் அழுகிறாள் என்றெண்ணிய அனுபமா தங்கையை சமாதானப்படுத்தினாள். அவளுக்காகவே இனியனை விவாகரத்து செய்யும் எண்ணத்தை கைவிட்டிருந்தாள். தங்கைக்காக தனிக் குடித்தனம் செல்ல முடிவு செய்தவள் பெற்றோர் தன்னோடு இருக்கப் போவதில்லை என்பதை எண்ணித்தான் கவலையடைந்தாள்.
திருமண வரவேற்புக்காக அனுபமா மும்முரமாக தயாரானாள். எந்த பட்டு சேலையை அணிவது? மேட்சிங் பிளவ்ஸ் அளவு சரியாக இருக்க? என்பது வரை சரி பார்கலானாள்.
“என்ன பண்ணுறா இவ?” பட்டு சாரியை அப்படியே போட்டு வைத்தால் அணியவே முடியாது என்று அன்னமும் அடிக்கடி இவ்வாறு வெளியே எடுத்து காயப்படுவதும், மடிப்பதையும் இனியன் கண்டிருக்கிறான். அதைத்தான் அனுபமாவும் செய்கிறாள் என்று எண்ணினான்.
“என்ன அப்படி பாத்து கிட்டு நிக்குற? பன்க்ஷனுக்கு என்ன துணி போட போற? பட்டு வேட்டி சட்டையா? கோட் சூட்டா?”
“ஓஹ்… பன்க்ஷனுக்கு தான் ரெடியாகுறாளா?” என்று அவளை பார்த்தவன் “நம்ம பன்க்ஷனா என்ன கோட் சூட் போட? போர்மல் போதும். நீ என்ன கலர் சாரி போடுறேன்னு சொல்லு அதுக்கேத்தா போல சார்ட் மட்டும் வாங்கிக்கிறேன்” என்றான்.
அவனை விசித்தரமாக பார்த்தவள் எதுவும் கேட்காமல் தான் தேர்ந்தெடுத்த புடவையை காட்டினாள்.
“ரொம்ப எதிர்பார்க்காதே. நாம தனிக் குடித்தனம் வந்ததையே நாலு பேர் நாலு விதமாக பேசுவாங்க. இதுல பொருத்தமே இல்லாம துணி போட்டா இன்னும் பேசுவாங்க. மேட்சிங்கா துணிய போட்டு அவனுங்க வாய அடைக்கலாமே என்றுதான்”
நான் கேட்டேனா? என்பதை போல் அவனை பார்த்தவள் “உன் கிட்ட எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல” முகத்தில் அடித்தது போல் கூறி விட்டு சென்றாள் அனுபமா.
“இவ சொன்னதை தானே நான் திருப்பி சொன்னேன்?” என்றான் இனியன்.
இவ்வாறுதான் ஒவ்வொருவரும் உறவுகளின் வாயில் விழுந்து விடக் கூடாது என்று கவனமாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து, அனைவரும் பார்த்து பார்த்து நடந்தும் கொண்டனர்.
ஹரி தனது மனைவி குழந்தையுடன் வந்திருத்தவன் அவர்களை தன் கண்பார்வையிலையே வைத்திருந்தான்.
“என்ன இவன் கூடப் பொறக்கலைனாலும் சித்தப்பா பொண்ணுங்க தங்கச்சிங்க தானே. பங்க்ஷன்ல கூட, மாட ஒத்தாசையாக இருக்காம இப்படி பொண்டாட்டி முந்தானைய பிடிச்சி கிட்டு திரியிறான்” பார்த்தீபனிடம் பொருமினான் இனியன்.
ஊரில் பார்த்த வேட்டிச் சட்டையில் இருந்த கிராமத்தான் ஹரியல்ல போர்மல் ட்ரெஸ்ஸில் வக்கீலுக்கே உண்டான தோரணையில் நின்றிருந்தான். “கிராமத்துல வேலாயுதம் விஜயா நின்னான். இங்க அல்டிமேட் அஜித்தா நிக்கிறன்டா” பார்த்தீபனிடம் கூறு இனியன் சிரித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் எதிரே வந்து நின்றான் ஹரி.
அவனை எதிர்பாராத இனியனின் சிரிப்பு சட்டென்று நின்றது. ரொம்ப நேரமாக இனியனை பார்த்திருந்தவன் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை காத்திருந்தான் போலும், பக்கா வக்கீலாக பேசினான்.
“மாப்புள காதலிக்கிறது தப்பு என்று நான் சொல்ல மாட்டேன். அம்மா எதிர்ப்பாங்க, அப்பா எதிர்ப்பாங்க என்று தெரிஞ்சா காதலிக்கவே கூடாது. தெரிஞ்சே காதலிச்சா எந்த சூழ்நிலையிலையும் காதலிச்ச பொண்ண கைவிடக் கூடாது. ஆனா உங்க சூழ்நிலையே அடுத்தவங்க உதவுற நிலமைல இருக்குறப்போ காதல் அவசியமா என்று யோசிக்கவும் செய்யணும்” பார்த்தீபனை பார்த்தவாறே கூறியவன் மேலும் தொடர்ந்தான்.
“நாம நம்புறவங்க நம்மள கைவிட்ட அந்த வேதனை ரொம்ப கொடுமை. அது ஆணுக்கும் தான். பெண்ணுக்கும் தான். உசுர விட காதல் ஒன்னும் முக்கியமில்லை.
அனுபமா கழுத்துல தாலி கட்டும் நொடி வரைக்கும் உங்களுக்கு நேரம் இருந்தது. அப்போ கூட எந்திரிச்சு கல்யாணத்துல சம்மதம் இல்லனு சொல்லி இருக்கலாம். நாலு பெரியவங்க உங்க அப்பாவ என்னனு கேட்டிருப்பாங்க. ஒரு பொண்ணு கழுத்துல தாலிய கட்டி கல்யாணம் என்று நடந்த பிறகு உங்க காதலுக்கு எண்டு கார்ட் போட்டே ஆகணும். இல்லனா பல பேரோட வாழ்க்கைல நிம்மதி இல்லாம போய்டும். பார்த்து…”
அவன் பேசும் பொழுதே அவன் கையை பிடித்த கல்யாணி “மாமா” என்று அவனை தடுக்க முனைந்தாள்.
“சில பேருக்கு பட்டா தான் புரியும். அப்போ ரொம்ப லேட். என்ன வயசு கோளாறுல தப்பான முடிவை எடுத்துடுவாங்க”
நித்யகலாயானி அழுகவே ஆரம்பித்தாள்.
“நான் உன்ன சொல்லல. பொதுவாக சொன்னேன். உன் பிரச்சினை வேற. கண்ணை துடை. அந்த பொம்பள முன்னாடி எந்த காரணத்துக்கும் நீ அழுக் கூடாது” மனைவியை அதட்டியவன். யாரும் தங்களை பார்க்கின்றார்களா என்று வேறு பார்த்துக்கொண்டான்.
“அனுவ புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க. உங்க பேர மட்டும் கேட்டே உங்கள கல்யாணம் பண்ண சம்மதிச்சவ அவ. நீங்க எப்படி இருந்தாலும் அனுசரிச்சு போவா”
“என்னடா புதுசு புதுசு புதுசா சொல்லுறான். காதல் கோட்டை படமா? பார்காமலையே லவ் பண்ணவும், கல்யாணம் பண்ணவும்” இனியன் கேலியாக நினைக்க, அவன் தோளில் தட்டிவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு நகர்ந்து விட்டான் ஹரி.
“டேய் யார்டா இவன்” பார்த்தீபன் ஹரியை தத்துவ ஞானிபோல் பார்க்க,
இவன் ஒருத்தன் கோமாளி… சம்பந்தமே இல்லாம பேசிகிட்டு இருப்பான். இல்ல இப்படி ஏதாவது லூசுத்தனமா பேசுவான்” ஹரி பேசியதை காதில் வாங்காமல் நின்றிருந்தான் இனியன்.
விழா முடிந்து மணமக்களை வரதராஜனின் வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும். அதற்கு முன்னால் அனுபமாவை அழைத்து வரதராஜனின் வீட்டுக்கு உன்னால் வர முடியுமா? அல்லது வீட்டுக்கு செல்கிறாயா என்று கேட்டார் வடிவேல்.
தனிக் குடித்தனம் வந்து ஒரு மாதம் தான் இருக்கும். நடந்த சம்பவத்தை சட்டென்று மறந்து இனியனின் வீட்டுக்கு வருவாளோ? இனியனுக்காகவாவது வருவாளோ? அதற்குள் இனியனை புரிந்து கொண்டிருப்பாளென்று சொல்ல முடியாது. அதனால் தான் மகளை அழைத்து டயடாக இருக்கா? ஓய்வெடுக்க வேண்டுமா? வீட்டுக்கு செல்கிறாயா? அல்லது நிலுபமாவை விட வருகிறாயா? என்று பொறுமையாக கேட்டார்.
“ஓஹ்… இப்படியொன்று இருக்கில்ல” தங்கைக்காக செல்லவும் வேண்டும். நடந்த சம்பவத்தால் செல்ல மனமும் வரவில்லை. தந்தைக்கு என்ன பதில் சொல்வது யோசனையாக பார்த்தாள்.
“என்ன மாமா?” என்று அங்கு வந்த இனியன் சோர்வான அனுபமாவின் முகத்தை பார்த்து நின்றான்.
“ரொம்ப டயடா இருக்கா. வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்க சொல்லிக்கிட்டு இருந்தேன்” என்றார் வடிவேல்.
ஆறு மாதம் முழுமையடையாத நிலையில் அனுபமாவுக்கு சில நேரம் வாந்தி மட்டும் இருந்தது. அவளால் சில உணவுகளை உட்கொள்ள முடியவில்லை. அதன் வாசனையை கூட நுகர முடியவில்லை.
விழாவில் பூப்பே முறையில் அத்தனை உணவுகளும் ஒரே இடத்தில் தான் இருந்தன. இவள் அங்கே சென்று சாப்பிடப் போய் வாந்தி எடுத்து சோர்வாகி விட்டாளோ என்றெண்ணியவன் “நான் வீட்டுக்கு கூட்டிகிட்டு போறேன் மாமா” என்று வடிவேலிடன் கூறியவன் “வா போகலாம்” என்று அனுபமாவை அழைத்தான்.
தந்தையிடம் ஒரு புன்னகையோடு விடைபெற “அம்மா கிட்ட நான் சொல்லிக்கிறேன்” என்றார் வடிவேல்.
“ரொம்ப முடியலைன்னா சொல்ல வேண்டியது தானே. வீட்டுக்கு கிளம்பி வந்திருக்கலாமே” வண்டியில் ஏறிய நொடி கூறினான் இனியன்.
அனுபமா எதுவும் பேசவில்லை. விழா ஆரம்பிக்கும் பொழுதுதான் அவள் இனியனோடு உள்ளே நுழைந்தாள். மாமியார் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இவளை கண்டு கொள்ளவேயில்லை. இனியனிடம் மட்டும் நலம் விசாரித்து விட்டு பிறக்கப் போகும் பேரக்குழந்தையை பற்றியும் விசாரித்து விட்டு நகர்ந்து விட்டாள்.
அம்மாவுக்கும், பையனுக்கும் நா வேணாம் என் குழந்தை மட்டும் வேண்டுமோ? மனதுக்குள் பொருமிய அனுபமாவுக்கு தங்கையை நினைத்து அச்சம் வந்தது.
தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய மாமியார் தங்கையை என்ன செய்வாளோ கவலையாக தங்கையை ஏறிட்டால் அன்னம் நிலுபமாவை மேடையில் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
அனுபமாவின் கண்களை அவளாலையே நம்ப முடியவில்லை. வள்ளி இதை பார்த்தால் செத்தே போவாள் என்ற எண்ணம் தோன்ற அவளை தேடினால் விழாவுக்கு வந்தது போல் தெரியவில்லை. வந்திருந்தாள் தானே விழா ரணகளமாகி இருந்திருக்கும். வள்ளி ஏன் வரவில்லை. யாரிடம் கேட்பது? இனியனுக்கு தெரியுமா? அவனிடமே கேட்க முடியாது. அவன் குடும்பத்தாரிடமும் கேட்க முடியாது. எந்த கலவரமும் நிகழாதவரைக்கும் நிம்மதி.
தங்கையை கொஞ்சும் மாமியாரை வெறித்துப் பார்த்தவள் “இனியன் தனிக் குடித்தனம் சென்றதால் அக்கா தங்கைக்குள் பிளவை உண்டு பண்ண திட்டம் போடுறாளோ?” என்று யோசித்தாள்.
தான் கூட மாமியாரின் வலையில் சிக்கலாம். ஆனால் நிலுபமா சிக்க மாட்டாள் என்று அனுபமாவுக்கே தோன்ற மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள்.
வண்டியை இயக்கிய இனியனுக்கு அனுபமாவின் சிந்தனை வந்து ஒட்டிக்கொண்டது. அவள் என்ன சாப்பிட்டாளோ? என்ன வேண்டும் என்று கேட்டு தானே கொண்டு வந்து கொடுத்திருக்க வேண்டுமோ?
பார்த்தீபனோடு சேர்ந்து வந்தவர்களை கவனிக்கவே இனியனுக்கு நேரம் பத்தவில்லை. இதில் அவன் எங்கே அனுபமாவை கவனித்தான். அவனே ஒழுங்காக சாப்பிடவில்லை. கணி இருந்திருந்தால் இருவரும் சேர்ந்துதான் எல்லாவற்றையும் செய்வார்கள். இது அவன் பங்க்ஷன் என்றாகிப்போக அவன் உதவி கூட கிட்டவில்லை. அத்தோடு பார்த்தீபன் அனுபமா ஜான்சியை சந்தித்ததாக வேறு சொன்னான். அனுபமா எதற்குப் போய் ஜான்சியை சந்தித்தாள். அவளை திரும்பிப் பார்த்தவனுக்கு அவளிடம் எவ்வாறு கேட்பது என்பதுதான் புரியவில்லை.
பார்த்திபனும் அனுபமா ஜான்சியை சந்தித்ததை நேரில் பார்க்கவில்லையே. அவன் திருமணம் செய்ய இருக்கும் நிர்மலா கூறியதாகத்தான் கூறினான். நிர்மலாவுக்கு அனுபமாவை தெரியுமா? அவள் சொல்வதை வைத்து அனுபமாவிடம் எவ்வாறு கேட்பது? இது ஒரு பிரச்சினை என்றால் தந்தை எதோ திட்டமிடுகிறார் என்று புரிகிறது.
வெள்ளை வேட்டி சட்டையில் தொண்டர்களின் அலும்பு ரொம்பவே அதிகமாக இருந்ததை நன்றாகவே கவனித்திருந்தான் இனியன். அவர்களின் பேச்சில் தந்தை அரசியலில் நுழைய போவது தெரிகிறது. “என்ன திடீரென்று இவருக்கு பதவி மோகம்? சும்மாவே ஆடுவார் பதவியும் வந்தால் சலங்கை கட்டி விட்டது போல் ஆகி விடுமே. கூடாதே. என்ன பண்ணலாம்?” எங்கெங்கோ அலைந்த எண்ணங்கள் வரதராஜனின் வந்து நிற்க வண்டியை நிறுத்தினான் இனியன்.