Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 14

ஒரு வாரம் இருந்திருப்பாளா மாமியார் வீட்டில். அதற்குள் அங்கே என்னவோ இவள் மட்டுமே வெட்டி முறித்தது போல…. அவள் அம்மா வீட்டுக்கு வந்ததும் வர்ஷா படுத்துக் கொண்டாள்.

அவள் அம்மா வீட்டில் ஒரு வேலையும் பார்க்க மாட்டாள். வீட்டு வேலைக்கு எல்லாம் ஆள் இருக்கிறது தேவையும் இல்லைதான். ஆனால் குடிப்பது உண்பது கூட அவளது அறைக்கு யாராவது கொண்டு சென்று கொடுக்க வேண்டும். கணவன் வந்திருக்கும் போதாவது அவனுக்குச் செய்ய வேண்டும் அல்லவா… வர்ஷாவின் அம்மா சகுந்தலா தான் பார்த்துக் கொடுக்க வேண்டும்.

இவர்கள் சென்ற போது, வர்ஷாவின் அண்ணியும் பிரசவத்திற்குத் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தவள், இப்போது குழந்தைக்கு ஐந்து மாதமானதால் இங்கே மாமியார் வீட்டிற்கு வந்திருந்தாள்.

வர்ஷாவுக்கும் அவள் அண்ணி பிரியாவுக்கும் ஒத்தே போகாது. வர்ஷா, தான் அந்த வீட்டின் இளவரசி, மற்றவர்கள் எல்லாம் அவளுக்கு எதோ சேவகம் செய்யப் பிறப்பு எடுத்தது போலவே பார்ப்பாள். அவள் அண்ணி வீட்டில் இவளைப் போலத்தானே அவளையும் வளர்த்திருப்பார்கள். அதனால் அவள் அண்ணியும் இவளுக்கு வளைந்து கொடுக்க மாட்டாள்.

இவளைப் பார்த்து அவளும் தங்கள் அறைக்குள்ளேயே இருந்து கொள்ள… இருவரும் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருந்தால் சரி என்று சகுந்தலாவும் மகளுக்கு நேரத்திற்கு உண்ண குடிக்க அனுப்புவது போல… மருமகளுக்கும் அனுப்புவார். இருவரையும் வைத்துக் கொண்டு அவர்தான் திண்டாடிக் கொண்டிருந்தார்.

இப்போது வர்ஷா மாமியார் வீட்டுக்குச் சென்றிருக்கும் சமயம், அவரது மகன் வருண் தெளிவாகச் சொல்லி விட்டான்.

வர்ஷாவை ஒன்னு அவ புருஷனோட வெளிநாட்டுக்கு அனுப்புங்க… இல்லைனா அவ மாமியார் வீட்டுக்கு அனுப்ப பாருங்க. இவ என் பொண்டாட்டிகிட்ட வெட்டி அதிகாரம் பண்ணா… என் பொண்டாட்டி நானும் உங்க தங்கச்சி மாதிரி எங்க வீட்ல போய் இருந்துக்கிறேன்னு சொல்றா. இல்லை தனி வீடாவது பார்த்திட்டு போகலாம்னு சொல்றா.” என்றான்.

வர்ஷாவுக்குத் திருமணமான புதிதில்… அவள் புகுந்த வீட்டினரைப் பற்றியும், ஆருஷியின் பிறந்த வீட்டை பற்றியும் தப்பும் தவறுமாக மகளுக்குச் சொல்லிக் கொடுத்தது சகுந்தலா தான். இப்போது மகளை இங்கிருந்து அனுப்பவும் மனம் இல்லை. அதனால் வர்ஷாவை அவர் தட்டி வைக்க… வர்ஷாவுக்கு அது கோபத்தைக் கொடுத்தது.

விஜயன் இவளை இங்கே கொண்டு வந்து விட்டவன், அன்று இரவு மட்டுமே அங்கே தங்கினான். மறுநாள் காலை அவன் கல்லூரி நண்பர்களுடன் இரண்டு நாட்கள் கேரளா சென்று விட்டான். அவன் சுற்றுலா செல்கிறான் என்றதும் தான், வர்ஷாவும் அதுவரையில் நான் எங்கள் வீட்டில் இருக்கிறேன் எனக் கிளம்பி வந்திருந்தாள்.

சகுந்தலாவுக்கு உடல்நலமில்லாமல் போக… அப்போதும் வர்ஷா அவள் அம்மாவை கவனிக்கவில்லை. தனக்கு எதுவும் நேரத்திற்கு வரவில்லை என்று குறை தான் பாடிக் கொண்டிருந்தாள். அதே ப்ரியா கைகுழந்தையை வைத்திருந்தாலும், மாமியாருக்கு நேரத்திற்குப் பார்த்து செய்தாள்.

சில பெண்கள் பிறந்து வீடு என்றாலே… ஒரு வேலையும் பார்க்க கூடாது. இங்க தான் நாம ப்ரீயாக இருக்க முடியும் என்றே மனதில் பதிய வைத்துக் கொள்கிறார்கள்.

அம்மாவும் சக மனுஷி தான். அவருக்குச் செய்ய வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது என்று சிலர் உணர்வதே இல்லை. அம்மாதான் நமக்குச் செய்ய வேண்டும் என்பது இல்லை. நாமும் அவருக்குச் செய்யலாம்.

வர்ஷாவின் அம்மா வாய் விட்டு புலம்பவே செய்து விட்டார்.

ஏன் டி மத்த நாள்தான் நான் செய்யுறேன். எனக்கு முடியாத போதாவது நீ செய்யக் கூடாதா?” என்றதற்கு,

நான் ஏன் செய்யணும்? அதுவும் உங்க மருமகள் இருக்கும் போது, நான் ஏன் பண்ணனும்.” என வர்ஷா விவரமாகக் கேட்க… அப்போது தான் வர்ஷாவின் அம்மா விழித்துக் கொண்டார்.

கடமைக்காகவாவது பார்க்கும் மருமகளை அவர் இழக்க தயாராக இல்லை.

இரண்டு நாட்கள் சென்று விஜயன் வந்து விட்டான். “உன் புருஷனுக்காவது நீ பாரு. அதையெல்லாம் உங்க அண்ணியைப் பண்ணுன்னு சொல்ல முடியாது.” என சகுந்தலா சொல்லி விட்டார்.

வேலையால் போட்டு வைத்திருந்த காப்பியை கொண்டு வந்த மனைவியைப் பார்த்து விஜயனுக்கு ஆச்சர்யமே…

அந்நேரம் துர்கா அழைக்க… விஜயன் வெளியே சென்று அவரிடம் பேசிவிட்டு வந்தான். அவன் முகம் மகிழ்ச்சியை வெளிபடுத்த, வருண் காரணம் கேட்க…

அம்மா தான் போன் பண்ணாங்க. அண்ணி இனிமே இங்கயே இருந்துக்கிறேன்னு சொல்லிட்டாங்களாம். என் பேரன் இருக்கான் இனிமே… எனக்கு என்ன கவலைன்னு சொல்றாங்க. அண்ணியும் அமைதியான டைப் தான். அதனால அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகும்.” என்றான் மகிழ்ச்சியாக.

வருண் குறிப்பாகத் தனது அம்மாவை பார்க்க…. “உங்களோடவே வர்ஷாவை கூட்டிட்டு போக முடியாதா… யூ. எஸ் இல்ல கனடால எதுவும் வேலை பார்த்திட்டு குடும்பமா இருக்கலாமே…” என சகுந்தலா மருமகனிடம் கேட்டார்.

மகள் இங்கே இருந்தால்… மாமியார் வீட்டுக்கு செல்ல வேண்டியது வருமே… அதனால் மகள் வெளிநாடு போய்… சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்தார்.

இவர் எவ்வளவு விவரம். அவரைப் போலத்தானே வர்ஷா இருப்பாள்.

இப்போ போயிட்டு இருக்க ப்ராஜக்ட் முடிய எவ்வளவு நாள் ஆகும்னு தெரியலை… அது முடிஞ்சு தான் வேற இடம் கேட்டுப் பார்க்கணும்.” என்றான் விஜயன்.

மகள் மருமகனோடு சேர்ந்திருக்கும் வாய்ப்பு இப்போது இல்லை என சகுந்தலா புரிந்து கொண்டார்.

அவங்க அண்ணி இங்கயே இருக்கப் போறாங்கன்னு உன் புருஷன் சொல்றாரு… அவ தானே பார்க்கிறான்னு… அவ்வளவு பெரிய வீட்டையும், தோப்பையும் மூத்த மகனுக்கே உன் மாமனார் மாமியார் எழுதி கொடுத்திடப் போறாங்க.” என மகளை வேறு தூண்டி விட….

அது எப்படி அவங்களுக்கு மட்டும் கொடுப்பாங்க.” என வர்ஷா அலட்சியமாகத்தான் கேட்டாள். பிறகு கணவனிடம் கேட்டுப் பார்க்க… “அண்ணன் அப்பா அம்மாவோட இருந்து பார்த்தா…. அவனே அந்த வீட்டை வச்சுகட்டும். நமக்கு ஒன்னு வேணா தனியா கட்டிக்கலாம். இல்லைனா நாம வரும் போது, போகும் போது.. அண்ணன் வீட்லயே தங்கிக்கலாம்.” என்றான் விஜயன் சாதாரணமாக.

அது எப்படி அவ்வளவு பெரிய வீட்டையும் தோப்பையும் உங்க அண்ணனுக்கு மட்டும் கொடுப்பாங்களா? நல்லா இருக்கு நீங்க சொல்ற நியாயம்.” என வர்ஷா சண்டைக்கு வர…

அப்போ நீயும் போய் அவங்களோட இரு. நீ எங்க அப்பா அம்மாவோட இருக்க மாட்டா… ஆனா உனக்குச் சொத்து மட்டும் கொடுப்பாங்களா? அது எங்க அப்பா சம்பாதிச்சது. அவர் யாருக்கு வேணாலும் கொடுப்பார். அதையெல்லாம் ஏன்னு கேட்க யாருக்கும் உரிமை இல்லை.” என்றான் விஜயன் கோபமாக.

அவங்க கொடுத்தாலும், இவரே வேண்டாம்னு சொல்லிடுவார் போல… என வர்ஷா நினைத்துக் கொண்டாள்.

விஜயன் அன்றே மனைவியை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்கு வந்து விட்டான். யஸ்வந்தும் தர்ஷனும் ஒருவரையொருவர் பார்த்ததும் குஷியாகி இருவரும் சேர்ந்து ஒரே ஆட்டம். அவர்கள் இருவரையும் சமாளிப்பது தான் பெரிய வேலையாக இருந்தது.

அந்த வார இறுதியில் இரண்டு நாட்கள் மொத்த குடும்பமும் திருவனந்தபுரத்திற்குச் சுற்றுலா சென்றனர்.

ஒரே பெரிய வாகனமாக வாடகைக்கு எடுத்து, அதை இவர்களே ஆள் மாற்றி ஆள் ஓட்டிக் கொண்டு சென்றனர்.

வினோத் வாகனத்தை ஓட்ட… அவன் அருகில் ஸ்ரீதர் உட்கார்ந்து பேசிக் கொண்டு வந்தான்.

பிள்ளைகள் எல்லாம் முன்புற இருக்கையில் விளையாடிக் கொண்டு வந்தனர். பெரியவர்கள் எல்லாம் பின்னால் பேசிக் கொண்டு சென்றனர்.

வர்ஷா விவரமாகத் தன் மகனை பிரமிலாவிடம் கொடுத்து விட்டு ப்ரீயாக உட்கார்ந்து கொண்டு வந்தாள். ஆருஷி யஸ்வந்தை வைத்திருந்தாள்.

சிறிது நேரத்தில் யஸ்வந்தும் தர்ஷனும் உறங்கி விட…. இவர்கள் எல்லாம் சேர்ந்து பேசிக் கொண்டு வந்தனர்.

முதலில் அங்கிருந்த உயிரியில் பூங்காவுக்கு சென்றனர். திருவனந்தபுரம் உயிரியில் பூங்கா மிகப் பெரிதும் கூட… அங்கயே மதியம் வரை சென்று விட…. பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

ஆதவன் யஸ்வந்தை வைத்திருக்க… ஆருஷி தர்ஷனை வைத்திருக்க… இருவரும் பிள்ளைகளுக்கு யானை, குதிரை, காண்டா மிருகம் எனக் காட்ட…. யஸ்வந்துக்கும் தர்ஷனுக்கும் எல்லாவற்றையும் பார்த்து ஆச்சர்யம் தான். இருவரும் உற்சாகமாகக் கத்திக் கொண்டு வந்தனர்.

மதியம் வரை அங்கயே சென்று விட… மதிய உணவுக்கு மேல் அவர்களுக்கு எடுத்திருந்த கோவளம் கடற்கரை ஓட்டலுக்குச் சென்றவர்கள், ஓய்வுக்குப் பிறகு மாலை கடற்கரைக்குச் சென்றனர்.

வர்ஷா மகனை இவர்களிடம் விட்டுவிட்டு ஏற்கனவே கணவனுடன் தனியாக வேறு பக்கம் சென்றிருந்தாள்.

ஆருஷி யஸ்வந்தை வைத்துக் கொண்டு இருக்க… பிரமிளா அவளிடம் இருந்து யஸ்வந்தை வாங்கியவள், “நீயும் போய் உன் புருஷனோட தண்ணியில நின்னுட்டு வா.” என அனுப்பி வைத்தாள்.

ஆதவன் ஆருஷியை அழைத்துக் கொண்டு தள்ளி சென்றவன், மனைவியைக் கடலில் தள்ளி விட…

எப்போ நேரம் கிடைக்கும்னே காத்திட்டு இருந்தீங்களா…” என நீரில் இருந்து எழுந்தபடி ஆருஷி கணவனைப் பார்த்து சிரிக்க…

நானும் வாடின்னு எவ்வளவு நேரமா கூப்பிட்டேன், வந்தியா நீ.” என்றவன், இந்த முறை அலை வந்து மோதிய போது, மனைவியோடு சேர்ந்து அவனும் நீரில் விழுந்தான். இருவரும் சிறிது நேரம் நன்றாக ஆட்டம் போட்டு விட்டு வந்தனர்.

வினோத்தும் ஸ்ரீதரும் தங்கள் பிள்ளைகளுடன் கடலில் ஆட… ஈஸ்வர் கடற்கரையை ஒட்டி நடந்து கொண்டிருக்க… கடற்கரையில் போர்வை விரித்து துர்காவும்… அவரோடு பிரமிளாவும், மஞ்சுளாவும் யஸ்வந்த் மற்றும் தர்ஷனை வைத்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது தூரத்தில் வந்து கொண்டிருந்த ஆதவன் ஆருஷியை பார்த்து, “பாரு கொஞ்ச நேரம் போயிட்டு வந்துட்டாங்க. வர்ஷாவை ஆளையே காணோம். இவளுக்கு ஒரு பிள்ளை இருக்குன்னு நியாபகம் இருக்கா….” என மஞ்சுளா சொல்ல…

அம்மா, ஆருஷி அமைதியா இருக்கான்னு வர்ஷா எல்லா வேலையும் அவ தலையிலேயே கட்டிடப் போறா… நீங்க பார்த்துக்கோங்க.” பிரமிளா சொல்ல…

எனக்கு ரெண்டு பேரும் ஒண்ணு தான். ஆதவன் அவன் பொண்டாட்டியை என்னை நம்பி விட்டுட்டு போகும் போது… நானும் அவளை நல்லா பார்த்துக்கணும் தானே…” என்றார் துர்கா.

இவர்களிடம் வந்த ஆருஷி, “பசங்களை நான் பார்த்துக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் போய்த் தண்ணியில நில்லுங்க.” என்று நாத்தனார்களிடம் சொல்ல…

இருக்கட்டும் பரவாயில்லை.” என இரு நாத்தனார்களும் மறுக்க…

அண்ணன்களுக்கு ஆசை இருக்கும் தான… போயிட்டு வாங்க.” என ஆருஷி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தாள்.

யஸ்வந்துக்கும் தர்ஷனுக்கும் மணலைப் பார்த்ததும் வேறு எதுவும் தேவையில்லை. இருவரும் மணலில் விளையாடிக் கொண்டு இருந்தனர். ஆருஷி அவர்கள் அருகில் உட்கார… ஆதவனும் மனைவியின் அருகே உட்கார்ந்து கொண்டான்.

தர்ஷன் கண்ணில் மண் விழுந்து விட… அவன் ஒரே அழுகை… ஆதவனும் ஆருஷியும் அவன் கண்ணில் இருந்த மண்ணை மாறி மாறி ஊதி எடுக்க… ஆருஷி சுத்தமான கைகுட்டையில் தண்ணீரில் நனைத்து அவன் கண்ணைத் துடைத்து விட்டாள்.

Advertisement