மலரிடம் சங்கரன் வீட்டிற்கு செல்லும்படி வேலுத்தம்பி கூறியதும் சங்கரன் ‘தன் மகள் என்ன சொல்லப் போகிறாளோ ..?’என்று தவிப்பாய் பார்த்தார். 

“சரிங்க தாத்தா நான் போயிட்டு வரேன் “என மலர் சொல்லவும் சங்கரனுக்கு அளவில்லா மகிழ்ச்சி.  

“ஏட்டி மலரு… நெசமா தான் சொல்றியா அங்க போறியா ல “என்று செண்பகவல்லி ஆச்சி கேட்க 

“ஆமா ஆச்சி நீயும் வா…”என்று விட்டு அறைக்குள் சென்றவள் சக்தியை அழைக்க அவனும் உள்ளே வந்தான். 

நிறைமாத வயிறுடன் அமர்ந்திருந்தவள் அருகில் அழைக்க அவளருகில் மண்டியிட்டு அமர்ந்தவன்… “போயிட்டு பத்திரமா இருக்கனும்… ஒழுங்காக சாப்பிடணும். முத்துலெட்சுமி அத்தை ஏதாவது சொல்லுச்சுனா சொல்லு நான் வந்து இங்க கூட்டிட்டு வரேன்… சரியா…?!  நான் அடிக்கடி வந்து பார்க்கிறேன். இல்லாட்டி கூட வந்து தங்கிக்கிறேன் ம்ம்ம்… வயலை பத்தின நெனப்பெல்லாம் வேணாம் ,நானும் , அம்மாவும் பார்த்துக்கிறோம் என்ன…?” என்று சொல்ல 

மலர் “ம்ம்ம்” கொட்டியவள்.,”ஆள் இல்லை னு சேட்டை பண்ணிட்டு இருக்க கூடாது …ரெண்டு தெரு தள்ளி தான் இருக்கேன்…. வந்து அடிப்பேன்… புரியுதா…? என்ன வேலை எப்படி இருந்தாலும் ராத்திரி அங்க வந்திடணும்…. சரியா” என்றவள் சில பல அறிவுரைகளை கூறி விட்டு கிளம்பினாள். 

மலருக்கு அங்கே இருக்க விருப்பம் இல்லை என்றாலும் தன் பாட்டனின் சொல்லுக்கிணங்க இருக்கிறேன் என்று சம்மதித்தாள். 

இங்கே சூர்யாவிற்கு தான் தனஞ்செயன் அறிவுரை நிறைய தேவைப்பட்டது.

“படிப்பாளி… சும்மா காலை நீட்டி போட்டு புத்தகத்திலையே தலையை விட்டுட்டு இருக்க கூடாது. அத்தை செஞ்சு தர்ற கசாயம் எல்லாம் ஒழுங்காக குடிக்கணும். அம்மா கிட்ட மொரண்டு பிடிச்ச மாதிரி அங்கேயும் பிடிக்க கூடாது சரியா…” என்றான். 

“மாமா நான் ஒழுங்கா தான் இருப்பேன்… போங்க… “என்று சிணுங்கிட வெளியே பொன்னரின் சத்தம் கேட்டது.

“அடேய் பேராண்டிகளா நல்ல நேரம் முடியப் போகுது. அதுக்குள்ள உங்க பொண்டாட்டிகளை வெளியே அனுப்புங்க. இங்க இருக்கிற வீட்டுக்கு ஒரு எட்டு ல வந்து போகலாம்…. விட மாட்டேன் னு பிடிச்சு வைக்கிறானுக…. “என்றதும் இருவரையும் அனுப்பி வைத்தனர். 

முத்துலெட்சுமி மலரோடு ஒட்டி உறவாடவும் இல்லை, வெட்டி விலக்கிடவும் இல்லை… அவர் வேலையை அவர் பார்த்துக் கொண்டார். மலருக்கு தேவையானதை எல்லாம் செண்பகவல்லி செய்திட ,துணைக்கு வடிவரசியும் இருந்து கொண்டாள் .

சங்கரபாண்டி தான் இங்கேயே இருக்கும்படி கூறினான். 

“பிள்ளை பத்திரம் அரசி… சுடுதண்ணி வச்சு குளிப்பாட்டு… அப்புறம் பச்ச தண்ணி குடுத்திடாத சேராது… “என ஆயிரம் பத்திரம் சொல்ல அவனின் தாயோ, “போதும்டா ரொம்ப தான்… ஊர் ல இல்லாத புள்ளை வளர்க்குற “என்று சொல்ல அவனோ.,”உனக்கென்ன பிள்ளைக்கு காய்ச்சல் வந்தா தாங்காம அழுவறது எனக்கு தான் தெரியும்… “என்றவன் கிளம்பிட,  வடிவரசி அமைதியாக இருந்தாள்.

“ம்மா நீ வெளியே பேசிட்டு இரு,  இந்தா வரேன் “என அவரை அனுப்பி விட்டு தன் மனைவியை இழுத்தவன்… “என்னல உம்முனு இருக்க…. இங்க இருக்க பிடிக்கலையோ…!!”என்க

“அதெல்லாம் ஒன்றும் இல்லை… “என்று திரும்பி கொள்ள ,”பொறவு என்னவாம்…? “என்றான் அவளை தூக்கி மடியில் அமர்த்தியபடி. 

“விடுங்க யாராவது வந்திடப் போறாங்க “என்று இறங்க முயன்றவளை விடாது பிடித்து கொண்டவன்…”மகளுக்கு சொன்னது தான் உனக்கும் பார்த்து பத்திரமாக இரு… உங்க அக்காவுக்கு பிள்ளை பிறந்ததும் வந்து அழைச்சுட்டு போறேன்…உங்க ஆத்தா ஏதாவது சொல்லுச்சுனு கேள்வி பட்டேன் அம்புட்டு தான்,  ஹார்பர்ல வேலை இருக்கு…ஆள் இல்லை னா வேலை நடக்காது ல ” என்றான். 

மீண்டும் அவள் அமைதியாக பார்த்திட.,”நெசமா ஹார்பர் ல தூங்க மாட்டேன் டி வீட்டுக்கு வந்து தான் ஒறங்குவேன் போதுமா…?”என்று சொன்னதும் தான் சிரித்தாள். 

“சரி கிளம்புறேன்… பாப்பு குட்டி அப்பன் போய் வாரேன் “என மகளை முத்தமிட்டு கிளம்பி விட்டான். 

வெளியே வந்தவன் கண்ணில் சிவா பட.,”என்ன சகல ஒரே பாசமழையோ… வடிவரசியை விட்டுப் போக மனசில்லையோ???”என்று கிண்டல் செய்தான். 

“எல்லாம் உன் கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் சகல, போயிட்டு வரேன்… புள்ளை பிறந்தா தகவல் சொல்லு வந்திடுறேன்… என் மவளை பார்த்துக்க…”என்றபடி விடைபெற்றான். 

“எப்படி இருந்த மனுசன் இப்படி மாறிட்டான்… ஆனா சிலர் இருக்காங்க பா, என்ன பண்ணாலும் திருந்த மாட்டேன்னு… அது சரி அவங்களை எல்லாம் மாத்தனும்னா இந்த சிவா இன்னொரு பொறப்பு எடுத்துல்ல வரணும்… “என்றபடி சென்றான் முத்துலெட்சுமியை ஓரக் கண்ணில் பார்த்தபடி.

அவரோ கோபத்துடன் தன் கணவனிடம்.,”இந்தா பாருங்க நான் பாட்டுக்கு செவனேன்னு இருக்கேன் உங்க மாப்ள ஓவரா பேசுறான் சொல்லிபுட்டேன் “என்று சிடுசிடுக்க, சங்கரனோ .,”அவர் பொதுவா சொல்லிட்டு போறாரு…நீ ஏன் முத்து உனக்குன்னு எடுத்துக்கிற… ? போ போய் வேலையைப் பாரு…. “என்றார். 

“எல்லாம் பணம் வந்த திமிரு”என கடுப்புடன் பேசி விட்டு சென்றார் முத்துலெட்சுமி. 

சங்கரன் இதுவரை செய்யாமல் விட்ட அனைத்தையும் செய்தார் மலருக்கு. குழந்தை பிறக்கும் முன்பே கொலுசு வெள்ளி அரைஞாண் கயிறு தங்க சங்கிலி என அனைத்தும் செய்ய சொல்லி முன்பணம் கொடுத்து வந்திருந்தார். 

முத்துலெட்சுமி ஏதாவது சொல்ல நினைத்தாலும் வாயைத் திறக்காத அளவிற்கு திட்டி வைத்தார்.  

சங்கரனோ., “இந்தா பாரு முத்து, வடிவு மகளுக்கு என்ன செஞ்சேனோ அதை விட ஒரு பங்கு அதிகம் தான் செய்வேன்… அதை கேட்க உனக்கு உரிமை கிடையாது…  ஏன் அரசி உனக்கு ஏதாவது இதுல சொணக்கமா சொல்லு “என்றார்.

“அதெல்லாம் இல்லப்பா அவரு வளைக்காப்புக்கு வரும் போதே மவன் தான் பிறப்பான்னு சொல்லி செயின் செய்ய ஆர்டர் கொடுத்துட்டு வந்தார்… ” என்றதும் சங்கரனுக்கு பாண்டியின் மாறுதல் குழப்பத்தையே தந்தது. 

“என்னப்பா அவரு எப்படி இப்படி மாறினாருனு கொழப்பமா இருக்குதா…?”  என்றாள் தந்தையின் மனதைப் படித்தவளாய். 

“இல்ல கண்ணு, மலரு அவரை போலீஸ் ல எல்லாம் புடிச்சு குடுத்திருக்கு அதான் கேட்டேன் “என்றார். 

‘மகளைக் காப்பாற்றியவள் தெய்வத்திற்கு சமம் ‘என்று சங்கரபாண்டி கூறியதாக அவன் அன்று பேசியதைக் கூறினாள். 

சங்கரனுக்கு நிறைவாக இருந்தது சங்கரபாண்டியின் மாற்றம்.  முத்துலெட்சுமியோ உதடு பிதுக்கி தலையாட்டி விட்டுச் சென்றார். 

காலசக்கரம் தான் யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை என்ற ரீதியில் சுழன்றிட பனிமலரை மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.  

பனிமலர் நடந்து கொண்டிருக்க , சிவா கையைப் பிடித்து கொண்டு நடந்திருந்தான். 

“ஏதாவது பண்ணுதா டா வலிக்குதா…. ???” வாஞ்சையாக வருடி விட்டான் சிவா. 

“இல்ல இடுப்பு கடுக்குது… ஒரு மாதிரியா இருக்கு… வேற ஒண்ணும் இல்ல “என்றாள் இடுப்பை பிடித்தபடி நடந்தாள்.

“சரி உள்ள போய் படுத்துக்க.. டாக்டர் வந்ததும் அழைச்சுட்டு வரேன்… ம்ம்ம்… “என்றவன் மருத்துவரை தேடி ஓடினான். 

அங்கிருந்த செவிலியப் பெண்ணோ “அண்ணே , ஏன் ண்ணே கொஞ்சம் பொறுண்ணே… நல்லா வலி வந்ததும் நானே அழைச்சிட்டு போயிடுவேன்… இன்னும் நல்ல வலி வரலை… அக்கா ஒரு நிமிஷம் உள்ள வாங்க நான் பார்த்துட்டு சொல்றேன்…” என உள்ளே அழைத்துச் சென்றாள் அந்த பெண். 

சிறிது நேரத்தில் வெளியே வந்தவர்கள் .,”அண்ணே நான் லேபர் வார்டுக்கு கூட்டிட்டு போறேன் நீங்க போய் சோப் ,எண்ணை, நைட்டி பிள்ளைக்கு போட துணி , துண்டு எல்லாம் கொண்டு வந்து வாசல்ல நில்லுங்க “என்றாள். 

“ஏன் பாப்பா நானும் உள்ள வர முடியாதா???”என்றான் பாவமாக.. 

“இதென்ன சினிமாவா இல்ல வெளிநாடா… அதெல்லாம் டாக்டர் விட மாட்டாங்க ண்ணே… அவங்க வலியில கத்தும் போது உங்களுக்கு தான் கஷ்டமா இருக்கும்… அக்கா சீக்கிரம் வந்திடும். நீங்க ஓடிப்போய் வாங்கிட்டு வாங்க… “என்று அனுப்பி வைத்தாள் செவிலிப்பெண். 

சித்திரை செல்வி எல்லாவற்றையும் கொண்டு வர பிரசவ அறையை எட்டி எட்டிப் பார்த்து விட்டு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான் சிவா. 

சிவா இங்கே “ஏன் மா இவ்வளவு நேரமா ஆகும்…. என்னம்மா பனி குரலே வேற மாதிரி இருக்கு…”சித்திரை செல்வியை படாத பாடு படுத்தி விட்டான். 

“அட சின்னவனே கொஞ்சம் பேசாம இரு டா , அது அப்படி தான் வலிக்கும் கத்தி கத்தி தொண்டை கம்மி போச்சு புள்ளைக்கு…. அதான்”என்றார்.  

குழந்தையை கொண்டு வந்து கையில் கொடுத்தனர்.  

“ஆம்பளை பிள்ளை அண்ணா…. அக்கா மாதிரியே கலரு ஆனா உங்களை மாதிரி தான் மூக்கு, வாய் எல்லாம்… “என்றபடி பூத்துவாலையில் போர்த்தி இருந்த குழந்தையை மெதுவாக கொடுத்தாள் அந்த செவிலிப்பெண். 

“ம்மா நீ வாங்குமா…. நான் கீழ போட்டுட்டேன்னா ??”என்றான் சிவா. 

“அது சரி… குடுடா பாட்டன் கிட்ட காட்டிட்டு வரேன்”என தூக்கி கொண்டவர் .,”டேய் தம்பி உன்னை மாதிரியே இருக்கான் டா…” என்றபடி நகர,  மலரை அழைத்து வந்தனர்.  

“அண்ணா இனிமே கூடவே உட்கார்ந்துக்கங்க. அப்புறம் பால் வாங்கிட்டு வந்து குடுங்க , கொஞ்சம் வெதுவெதுப்பா இருக்கட்டும்… அக்கா தூக்கம் வந்தா தூங்குங்க “என்று வெளியே சென்றாள் அந்த பெண். 

கையை ஆதுரமாக பிடித்து கொண்டு “பால் வாங்கிட்டு வரேன்… ரொம்ப வலிக்குதா டா “நெகிழ்வான குரலில் கேட்க”இப்போ பரவாயில்லை… தம்பி எங்க…?”என்றாள் சற்று சோர்ந்த குரலில் . 

“அம்மா தூக்கிட்டு போயிருக்காங்க….” என்றவன் பால் வாங்க எழுந்து கொள்ள, வடிவரசி டம்ளரில் பால் கொண்டு வந்தாள். 

“மாமா இதைக் குடுங்க…கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பாடு கொண்டு வரேன்.. டயர்டா இருக்கா க்கா ‘”என்று கேட்டாள் தமக்கையிடம். 

“இல்ல பரவாயில்லை”என்றதும் வடிவரசி சென்று விட்டாள். 

எல்லோரும் மலரையும் குழந்தையையும் வந்து பார்த்து விட்டுச் செல்ல முத்துலெட்சுமி தள்ளி நின்று பார்த்து விட்டு , செல்ல முற்பட சங்கரன் பேரனை முன்னால் தூக்கி காட்டினார்.  

அச்சிசுவோ தூக்கத்தில் சிரித்தது. முத்துலெட்சுமிக்கு என்ன தோன்றியதோ கையில் வாங்கி கொண்டவர்.,”விடிய விடிய புருஷன் மூஞ்சியை பார்த்தியாக்கும் , அப்படியே உரிச்சு வச்சு பெறந்திருக்கான்”என்று விட்டு சர்க்கரை நீரை நாவில் தொட்டு வைத்தார். அது தூக்கத்திலேயே சப்பு கொட்டி ருசித்து விட்டு உறங்கியது. 

சிறிது நேரம் கையில் குழந்தையை வைத்திருந்தவர் பின்னர் கொடுத்து விட்டு கிளம்ப சங்கரபாண்டி உள்ளே நுழைந்தான். 

“வாப்பா… டேய் சித்தப்பா வந்துட்டார் டா , கண்ணை முழிச்சு பாரு “என்க 

அவனோ குழந்தையை தூக்கி கொண்டான். எல்லாம் மகளை தூக்கி வளர்த்த அனுபவம்… 

“அரசி வேகமாக எடுத்துட்டு வா …!!”என்றதும் அவள் ஒரு நகைப் பெட்டியுடன் வந்தாள். 

கனத்த சங்கிலி ஒன்று பளபளத்தது. எடுத்து குழந்தைக்கு போட்டு விட்டவன்,” தூத்துக்குடியையும்,  மணப்பாறையையும் ஆளப் பிறந்த சிங்க குட்டி” என்று சிரிக்க சிவாவோ .,”யோவ் எதுக்கு இதெல்லாம்…. இதை வாங்கிட்டு வந்தா தான் பாசமா…?” என்று கேட்டவனிடம்… “நீ சும்மா இரு சகல உனக்கு ஒண்ணும் தெரியாது…. இங்கப் பாரு அவனை நல்லா செயினை இறுக்கி பிடிச்சுக்கிட்டான்ல… நம்ம பிள்ளைக்கு நான் செய்றேன்ல எதுவும் சொல்லாதீய…”என்று சிரித்தான்.  

சங்கரபாண்டியின் மாற்றம் அனைவருக்கும் பூரிப்பையே தந்தது .

மலரை வீட்டுக்கு அழைத்து சென்ற ஐந்து நாட்களில் சூர்யாவிற்கு நீர் இல்லாத காரணத்தால் அறுவைசிகிச்சை செய்து ஆண் குழந்தை பிறந்தது.  

இரு குழந்தைகளுக்கும் சேர்த்தே புண்ணியாஞ்சனம் செய்து பெயர் சூட்டினர்.  

சிவசக்திபாலன் பனிமலர் குழந்தைக்கு ப்ருத்விராஜன்  என்றும் , 

சூர்யகாந்தி தனஞ்செயன் குழந்தைக்கு ஜெயச்சந்திரன் என்றும் பெயர் சூட்டினர். 

குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் எல்லாம் பாக்யா தினகரன் திருமணத்தை முடித்து இருந்தனர். 

தினகரன் இன்னும் சில காலம் அங்கேயே தங்கி வேலை பார்ப்பதாக சொல்ல, பாக்யாவையும் அவனுடனேயே அனுப்பி வைத்து விட்டனர்.