வடிவரசிக்கு குழந்தை பிறந்து நாட்கள் கடந்திருந்தது. சங்கரபாண்டி ஒரு மாதம் முடிந்ததுமே அழைத்து செல்கிறேன் என்று அடம்பிடித்து அழைத்துச் சென்று விட்டான். 

வேலைக்கு ஆள் போட்டு இருந்தான்.

“உடம்பு சுகமானதும்  நீ தான் அரசி வேலையைப் பார்த்துக்கிடனும். பிள்ளையை அவக ஆச்சி பார்த்துக்குவாங்கல, எனக்கு ஆக்கிப் போடுறது நீ தான்…  என்ன வேணுமோ கேளு எல்லாம் வாங்கித் தரேன். ஆனா அந்த  செங்கல்லை எடுத்து மூஞ்சியை காட்டி போட்டோ எடுக்க கூடாது புரியுதால,  நீ எப்படி நடந்துக்குறியோ அப்படி தான் நானும் நடந்துக்குவேன். அதுக்காவ அடிச்சு ஒதைப்பேன் னு நினைக்காதல. அந்த பய அவன் பேரு என்ன கௌதமோ ,கௌதாரியோ அந்தப்பயலை தூக்கி போட்டு மிதிச்சு கடல்ல வீசிப்புடுவேன் புரிஞ்சுதால “என்றான்.

“நான் அவனைப் பேசாதடா னு தான் சொன்னேன் அவன் தான்… ” என்று இழுத்தாள் வடிவரசி.

“நீ சொல்றது நெசந்தானே…  சரி விடு அவனை இனிமேட்டுக்கு நான் பார்த்துக்கிறேன்… ” என்றவனோ ,”புரிஞ்சுக்கோல அரசி  அக்கம் பக்கத்தில் உள்ளவளுக எல்லாம் ஒரு மாதிரியா பேசுவாளுக…  என் பொண்டாட்டியை பேசுனா எனக்கு ரோஷம் வரும் அப்புறம் இழுத்துப் போட்டு கழுத்தறுத்துப்புடுவேன்… அப்புறம் போலீஸ் காரன் புடிச்சுட்டு போயிடுவான்” என சொல்ல ,

வடிவரசி அமைதியாக சரி என்று தலையாட்டியவள் ,”அப்புறம் ஏன் மலரக்காவை மட்டும் அன்னைக்கு கையைப் பிடித்து இழுத்திங்களாம் , அதுவும் வேறொருத்தர் பொண்டாட்டி தானே..?  உங்க பொண்டாட்டி கூட ஒருத்தன் பேசுனா வம்பு பண்ணா கோவம் வருது தானே , அப்புறம் நீங்க மட்டும் அப்படி செய்யலாமா …?”என்று முதன் முறையாக மிகச் சரியாக பேசினாள் வடிவு.

சங்கரபாண்டி சிரித்தான். 

“தப்பு தான்ல நான் தான் உணர்ந்துட்டேனே. உங்க அக்கா அந்த சண்டிராணி தான் பொட்டுல அடிச்சா மாதிரி சொன்னுச்சே பொட்டை பிள்ளையை வளர்த்து பாரு அதோட கஷ்டம் என்னண்டு( என்னவென்று ) தெரியும் னு  நெசத்தை சொல்லவா…?? “என்று பீடிகை போட்டான்.

அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“நான் கரடு முரடா இருந்தாலும்  பொம்பளை பிள்ளைகளை வளைச்சுப்புடுவேன்” என்றதும் முறைத்தாள் .

சங்கரபாண்டி சிரிப்புடன் “ஒங்கிட்டக்க சொல்றதுக்கு என்னல, கல்யாணத்துக்கு முந்தி பொளிகாளையாட்டம் சுத்தி வந்தேன். காசு குடுத்தா வருவாக நானும் போயிடுவேன்…  ஒரு நா (நாள்) ஓ அக்கா பஸ் ஸ்டாண்டில் நின்னா…  அம்புட்டு அழகு,   குடி போதையில் போய் வழக்கம் போல கூப்பிட அவ அடிச்சு துவைச்சு போலீஸ் ல புடிச்சு கொடுத்துட்டா, அன்னையில இருந்து அவ மேல ஒரு கண்ணு …ஆனால் பார்க்கிற அப்பல்லாம் என்னை நாயை துரத்துற மாதிரி தொரத்துவா . அதனால ஒரு கோவம் எப்படியாச்சும் அவளை அடையனும் னு வெறி,” என்று மலரின் வீட்டிற்குள் புகுந்தது  தவறாக நடக்க முயன்றது என அனைத்தையும் கூறி முடித்தான்.

“இம்புட்டு நடந்த பிறகு அவ வேற யாருக்கும் பொஞ்சாதி ஆகிடக் கூடாது னு தான் என் வீட்டு வேலைக்காரியாவது ஆக்கிக்க நினைச்சு பொண்ணு கேட்டேன் .உங்கப்பனும் பதவிக்கு ஆசைப்பட்டு கட்டி வைக்க சம்மதிச்சாரு,  அப்புறம் அந்த சிவா எலும்பு மாதிரி இருந்துக்கிட்டு அவ புருஷன் ஆனா எவ்வளவு கோவம் வரும் எனக்கு. அதுக்கு தான் அவளை நாசம் பண்ண வந்தேன் உங்க வீட்டிற்கு விருந்துக்கு ” என சொல்ல வடிவரசி முறைத்தாள்.

“முறைக்காத ல நான் தான் அப்ப மனுஷனாவே இல்லையே… !! அப்பவும் தப்பிச்சுட்டா , உன் வளைகாப்புக்கு வந்து சிவா அடிச்சுப்புட்டான் உன்னை அடிக்கிறேன் , கொடுமைபடுத்துறேன் னு தான் அந்த கோவத்தை தான் உன் கிட்ட காட்டிட்டேன்…  பொறவு நடந்தது தான் ஒனக்கேத் தெரியுமே  “என்றான்.

“அப்புறம் எப்படி இந்த ஞானதோயம் மலரக்காவை கையெடுத்துக் கும்பிட்ட?”

“நான் ஒண்ணும் பொறப்புலையே ( பிறப்பிலேயே ) கொடுமைக்காரன் இல்லல…  என் ஆத்தா, அக்கா ,அண்ணி கிட்ட எல்லாம் தவறா பேசி நடந்திருப்பேனான்னு கேளு, நிமுந்து( நிமிர்ந்து) கூட பார்க்க மாட்டேன்…  ஏன் னா அவக ஏ வீட்டு பொண்ணுக இல்ல…  அதே எண்ணத்தை நான் வெளியே உள்ள பொண்ணுக கிட்ட வைக்கனும்னு தெரியலை எனக்கு.  ஒரு உசுரை பெத்து தரது எம்புட்டு பெரிய விஷயம் அந்த உசுரு போவாம காப்பாத்துறது அதை விட எவ்வளவு பெரிய செயல்…  அன்னைக்கு அவ மட்டும் சாமி மாதிரி வரலைனா நான் இப்ப என் பொண்டாட்டி பிள்ளைனு இருந்திருக்க முடியுமா சொல்லு…  சாமிக்கு சமமானவளை தப்பா பார்க்கிறது எம்புட்டு பெரிய பாவம்…  நான் செஞ்ச தப்பை மறந்து நொடியில வந்து உதவ எல்லாம் எவ்வளவு பெரிய மனசு வேணும்…  அப்படிப்பட்டவங்களை நான் காலத்துக்கும் மறப்பேனா…  அப்புறம் தான் தெரிஞ்சது உங்க அம்மா பண்ண கொடுமையால தான் தூத்துக்குடியில இருந்திருக்கு மலருன்னு சிவா சொன்னாப்ள.  எம்புட்டு கஷ்டம் அந்தப் பிள்ளைக்கு …?” என்று பெருமூச்சு விட்டான்.

“ஆமா எங்க அம்மா தான் என்னை மலரக்கா கூட பேசக் கூடாது னு சொல்லும். பேசுனா என்னையும், என் அம்மாவையும் வீட்டை விட்டு துரத்திடுவா, என் அப்பாவையும் கூட்டிட்டு போயிடுவானு சொன்னதால தான் நான் மலரக்கா கூட பேச மாட்டேன் அது வந்து ஒருக்க எனக்கு புத்திமதி சொல்லுச்சு நான் தான் கேட்கலை…  ஆனா நான் திட்டினதை எல்லாம் மனசுல வச்சுக்காம வந்து உதவுச்சு அப்புறம் சூர்யா ஒரு நாள் வந்து பேசுனா அப்ப தான் நான் தப்புனு தெரிஞ்சது “என்றாள்.

“சரி…  நான் என்னை பத்தின எல்லாத்தையும் சொல்லிட்டேன்… உனக்கு எம்மேல கோவமா வரும் என்னைப் புடிக்கலை தானே உனக்கு…”

“பிடிக்கலைனு சொன்னா விட்டுடுவிங்களாக்கும்…  அப்படி பார்த்தா நானும் தான் நல்ல பொண்ணு இல்ல…  எனக்கு ஒருத்தன் நல்லா பேசுறானா, இல்ல தப்பான நோக்கத்துடன் பேசுறானானு கூட தெரியாது… இனிமேல ஒழுங்கா இருக்க வேண்டியது தான்” என்றாள்.

“என் பொஞ்சாதிக்கு அறிவு இருக்கு “என்று சிரித்தபடி அணைத்துக் கொள்ள, “ஸ்ஸ்ஸ்” என்று முனகினாள்.

“அச்சோ மன்னிச்சிடுல மறந்து போயிட்டேன்” எனும் போதே கதவு தட்டப்பட்டது.

“ஏன் டா அந்தப் புள்ள அறைக்கு வரக் கூடாது னு சொல்லி இருக்கேனா இல்லையா… போடா போய் கூடத்துல படுக்கையை விரி… ” என்று அவனது தாய் மிரட்டினார் மகனின் முரட்டுதனம் அறிந்தவராய்.

“எம்மோ எம்மவளை தான் பார்க்க வந்தேன். நீ பாட்டுக்கு கத்தாத, ஏன்ல உன்னைய அடிச்சேனா நானு…  சொல்லுல உன் மாமியா கிட்ட “என்றவனோ மகளை வாங்கிக் கொண்டு கூடத்திற்கு சென்றான்.

வடிவரசி சிரித்தபடி படுத்துக் கொண்டாள்.

மகளை உறங்க வைத்து மனைவியின் அருகில் கிடத்தியவனோ,  மென்மையான முத்தமொன்றை இருவருக்கும் கொடுத்து விட்டு, அந்த கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டே உறங்கிப் போனான்.

**********

மலர் செங்காந்தள் மலரை வருடியபடி நடந்தவள், பன்னீர் ரோஜாக்களை ரசித்து கொண்டிருந்தாள். முகத்தில் பளீரென்று புன்னகையுடன்  சிவா அங்கே வந்தான்.

“பனி வீட்டுக்கு போகலாமா??” என கேட்டிட , அவளும் சரி என்று கிளம்பினாள். வண்டியில் ஏறியவள் அவனது இடையை பிடித்து கொண்டு செல்ல அவனுக்கு அது புதிதாக இருந்தது. வீட்டிற்கு வந்ததும் அவளை அருகில் அமர்த்தி கொண்டான்.

          
“என்ன டீச்சரம்மா ஒரே குதூகலமா இருக்கீங்க என்ன விஷயம்…?? பெரியம்மா ஆகிட்ட சந்தோஷமா ???”என்றவனை இழுத்து அணைத்து விட்டு, அவன் இதழோடு இதழ் கோர்த்தவள் சிறிது நேரம் கழித்து விடுவித்து.,

“பெரியம்மா ஆன சந்தோஷமும் தான்.அதோட சேர்த்து இந்த சமூக சேவகரை… அப்பா ,சித்தப்பா , ரெண்டும் ஆக்கின சந்தோஷமும் சேர்த்து தான். குட்டி சிவசக்தியா இல்லை குட்டி பனிமலரா னு தெரியலை… இன்னும் எட்டு மாசத்துல தெரிஞ்சிடும் “என்றாள் அவன் தோள் மீது கையைப் போட்டபடி…

“பனி… நெஜமாவா… ஹேய் விளையாடதடி…. நிஜமா தானே… ஹாஸ்பிடல் போனிங்களா என்ன..??”. மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவன் .,”சித்தப்பான்னா அப்போ அந்த சோளத்தட்டையும் …”என்று குரலில் குதூகலத்தை காட்டியவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“ஹேய் ஹேய் மெதுவா… பாப்பா டா… “என்று சொல்ல அவனோ புன்னகையுடன் “ஆமா ஆமா பாப்பா இருக்கு வலிக்கும்”என்று விலகி கொண்டு .,”ஆமா அம்மா கிட்ட சொல்லிட்டியா …!!”என்றான்.

“எல்லாருக்கும் தெரியும்… சார் தான் பிஸியா இருக்கீங்க வேலைக்கு போறீங்க அதான் “என்று மலர் சொல்ல,

சிவா ஹாஸ்யமாக சிரித்து விட்டு .,”அப்புறம் என் பொண்டாட்டிக்கு பொறுப்பா இருந்தா தான் பிடிக்குமாம் அதனால தான் பொறுப்பா இருக்கேன் டீச்சர் பாப்பா”என்றான் நெற்றியில் இதழ் பதித்து விட்டு..

இங்கே சூர்யாவை தட்டாமாலை சுற்றாத குறையாக தூக்கி வைத்திருந்தான் தனஞ்செயன்.

காதலித்து திருமணம் செய்து அதனை வெற்றிகரமாக வாழ்வது பெரிய சாதனை அல்லவா… அந்த மகிழ்ச்சி தான் காரணம்.

“ரெண்டு பேரும் சூதானமா இருக்கணும்…. சரியா “என்றபடி தன் மருமகள்களுக்கு சுற்றி போட்டார் சித்திரை செல்வி .

“திருச்சி ஆஸ்பத்திரியில் காட்டுவோமா…? மணப்பாறையில் காட்டுவோமா… ? நல்ல டாக்டரா விசாரிக்கணும்…! அப்புறம் தம்பி திருச்சி போய் குங்குமப்பூ வாங்கிக்க… அன்னாசி, பப்பாளி தவிர ஆப்பிள் ஆரஞ்சு மாதுளைபழம் எல்லாம் வாங்கிக்க … அப்புறம் மருமவளுக கிட்ட இப்ப என்ன சாப்பிட ஆசைப்படுறாங்கனு…. அப்புறம் மார்க்கெட் போய் ஆல்பகோடா பழம் னு கேட்டு வாங்கிட்டு வாங்க… இந்த வாந்தி மயக்கம் வந்தா அது சாப்பிட்டா கொஞ்சம் கட்டுப்படும்… “என்று வரிசையாக சொல்லிக் கொண்டிருந்தார் செல்வி.

“யம்மா நீ போடுற லிஸ்டை பார்த்தா நான் டெம்போவை எடுத்துக்கிட்டு போய் தான் வாங்கிட்டு வரணும்”என்று சிரித்தான் தனஞ்செயன்.

“ம்ம்ம் பிள்ளை பெத்து தர்றதுனா சும்மானு நினைச்சியோ… இப்ப குடுக்கிற ஆகாரம் தான் ஆயுசுக்கும் அவங்களை தெம்பா வச்சுக்கும்… இல்லாட்டி கஷ்டம் தான் சரி சரி வாய் பேசாம போய் வாங்கியாங்க…. அடுத்த தெருவுல இருக்க பர்வதத்தை பார்த்துட்டு இந்த விஷயத்தை சொல்லிட்டு வரேன்…. போன கடுத்தம் வடிவு புள்ள மாசமா இருக்கா உன் மருமவளுவ நல்ல சேதி சொல்வாகளா மாட்டாகளானு எக்காளமா பேசுனா… அவ மொகரையை ஒடைச்சுட்டு வரேன் “என கிளம்பி செல்ல, சூர்யா தான் தடுத்தாள்.

“நீங்க பேசாம இருங்கத்த அந்த அம்மாவை அப்புறம் பார்த்துக்கலாம்.. .. அதுக்கு வாய் ஜாஸ்தி தான்… பிள்ளையை பெத்துட்டு வச்சுக்கிறேன் கச்சேரி… “என்க .,

“செல்விக்கு செராக்ஸ் காப்பி (ஜெராக்ஸ் காப்பி) இல்லையேனு நினைச்சேன் சூரியா அந்த எடத்தை நிரப்பிடும் “என்று மனைவியை வாரினார் கருப்பசாமி.

“என்னை சொல்லலைனா உங்களுக்கு தூக்கம் வராதே!!”வம்பளந்தார் சித்திரை செல்வி.

மூன்றாம் மாதத்தில் மலருக்கு மசக்கை துவங்கியதென்றால் சூரியாவிற்கோ இரண்டாம் மாதத்திலிருந்தே மசக்கை படுத்தி எடுத்தது. அவள் சோர்ந்து விழுந்தாளோ என்னவோ தனஞ்செயன் தான் அவளை கவனித்தே சோர்ந்து போனான்.

“ஏன் பனி உனக்கு வாந்தி வரலை, தலை சுத்தலை ??”என்று கேள்வியாய் கேட்டு பினாத்தி விட்டான் சிவா.

“அய்யய்யோ உன் கூட ரோதனை டா… வராத வாந்தி மயக்கத்தை வா வான்னா எப்படி வரும்…. கையை விட்டு குமட்டி எடுத்தா தான் உண்டு…. காலங்காத்தால மட்டும் தான் அப்படி இருக்கும் அதுக்கப்புறம் அப்படி இருக்காது உனக்கு எத்தனை தடவை தான் சொல்றதோ… “பொய்யாக சலித்து கொண்டாள் மலர்.

“அடி போடி நான் இந்த சினிமா பார்த்து என்னென்னவோ எல்லாம் கற்பனை செஞ்சுட்டேன்…”என சலித்தவன் ,”சரி ஏதாவது புதுசா சாப்பிட ஆசை இருந்தால் சொல்லு வாங்கி தரேன்… “என்றான் ஆர்வமாக.

“ம்ம்ம் கேட்டா திட்ட கூடாது… “

“நீ என்ன கேட்டாலும் வாங்கிட்டு வரேன் சொல்லு”என்றான்.

“ம்ம்ம்…. தூத்துக்குடி மக்ரூன் ,அப்புறம் முந்திரிகொத்தும் வேணும்…. வாங்கித் தர்றியா.. ??”ஆவலாய் கேட்டாள்.

“அவ்வளவு தானே. கண்டிப்பா வாங்கி தரேன்… வெற்றியை காரை எடுக்க சொல்வோம் “என்று வெற்றிக்கு அழைக்க அவனும் வருவதாய் கூறி விட்டான்.

சங்கரபாண்டி வெளியே நின்றபடி தடுமாறிக் கொண்டிருக்க வெளியே வந்த சிவாவோ… “ஹேய் சகல என்ன வெளியே நின்னுட்டு, வா வா உள்ள வா… ஏன் உள்ள வராம முழிச்சுக்கிட்டு நிற்கிற….??” என்று அவன் தோள் மீது கையைப் போட்டபடி உள்ளே அழைத்து வந்தான்.

“ம்மா காபி போடு…” என்றபடி ,”பனி உன்னை பார்க்க விருந்தாளி வந்திருக்காங்க “என்று சத்தமிட அவளும் வெளியே வந்தாள்.

சங்கரபாண்டி தடுமாறிப் போனான்.

வியர்த்து வழிந்தவனை”வாங்க”என்று வரவேற்க.,”அது அது… அரசி நீ… நீ… நீங்க முழுகாம இருக்கிறதா சொல்லுச்சு…. அதான்… இதை குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்… “என மக்ரூனையும் முந்திரிகொத்தையும் நீட்டினான்.

மலர் சிவாவை பார்க்க அவனோ சிரித்தபடியே .,”பார்றா… இப்ப தான் மலர் இது வேணும் னு கேட்டுச்சு உடனே வாங்கிட்டு வந்துட்ட”என்று வாங்கி அவளிடம் கொடுத்தான்.
“அது அது வந்து…. தூத்துகுடியில் இருக்கையில உன் பொஞ்சாதி இதையே தான் வாங்கும் பார்த்திருக்கேன் அதான் வாங்கிட்டு வந்தேன்”என்று சொல்லி முடிப்பதற்குள் படாத பாடுபட்டு போனான்.

“அதுக்கு எதுக்கு இவ்வளவு தயக்கம் சகல.விடு பழசை எல்லாம் மனசுல போட்டு குழம்பாம நீ நீயா இரு…. நான் தப்பா எதுவுமே நினைக்கலை “என்றபடி செல்வி கொண்டு வந்த காபியை கொடுத்தான்.

சற்று நேரம் பேசி விட்டு கிளம்பினான் சங்கரபாண்டி.

*********

அண்ணன் தம்பி இருவரும் போட்டி போட்டு கொண்டு தத்தம் மனைவியை கவனித்து கொண்டிருக்க, வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்தனர். 

பொன்னுசாமியே இருவருக்கும் வளைகாப்பு நடத்திட முற்பட சங்கரன் சிவாவிடம் பேசினார்.

“மாப்ள நான் தப்பு செஞ்சுட்டேன் தான், அதுக்காக எந்த விஷேஷத்திற்கும் நான் செய்ய கூடாது னு மலரு சொல்லுதுய்யா… மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு… நீ ஒரு வார்த்தை சொல்லுப்பா… என் கையால இந்த ஒரு விஷேஷத்தையாவது நடத்திக்கிறேன்… நான் வேணும்னு மலரை ஒதுக்கி வைக்கலைய்யா… சித்தி கொடுமையில சிக்கிட கூடாதுனு தான் யா அவங்க ஆச்சி கிட்ட விட்டேன். அதுவே என் மேல வெறுப்பா மாறும் னு நினைக்கலை…. நீ சொல்லுய்யா மலரு கேட்டுக்கும் “என சங்கரன் கெஞ்ச சிவாவிற்கே ஒரு மாதிரி ஆகி விட்டது.

“நீங்களே வளைகாப்பை நடத்துங்க பனி எதுவும் சொல்லாம நான் பார்த்துக்கிறேன்”என்றதும் மகிழ்வாய் கிளம்பினார் சங்கரன்.

மலரிடம் பேசி ஒரு வழியாக சம்மதிக்க வைத்தான்.

செண்பகவல்லி ஆச்சிக்கு மகிழ்ச்சி தாளவில்லை வேப்பிலை காப்பை பாந்தமாக பின்னி எடுத்து வைத்தார் பேத்திகளுக்கு…

“ஏலேய் வீரமலை உனக்கெப்படா கல்யாணம்… இது மாதிரி விஷேஷம் எல்லாம் எப்ப நடத்துவ “என்று கிண்டல் செய்ய… “ஆச்சி என் வூட்ல எனக்கு பொண்ணு பார்க்கிற மாதிரியே தெரியலை… பேசாம நீ என்னை கட்டிக்கிடு….” என்றான்.

“ஏலேய் என்னடே நக்கல் பண்ணுதியோ… இங்கன தான் இத்தனை குட்டிக அலையுதாகளே பேசாத்துல ஒண்ணை கட்டிக்கிடு… “என்றவரிடம்

“அடப் போ ஆச்சி எல்லாம் அண்ணன் தங்கச்சி மொறைப் புள்ளைகளாவே இருக்கு… “என்று சலித்து கொண்டான் வீரமலை.

“அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பனை வேணும் டா என் பேரனுக்கு தான் போட்டி போட்டு முறைப்பொண்ணுக இருந்தாவ”என்றார் சிரித்துக் கொண்டே..

“உன் பேரனுக்கு இல்லைனா தான் ஆச்சரியம். ஆனா இத்தனை பொண்ணு இருந்தும் டீச்சரம்மா தான் வேணும்னு அடம் பிடித்து இல்ல கட்டி இருக்கான்..”. என்று சொல்லி விட்டு சிரித்தான் வெற்றி.

“என் பேத்தி கொணம் (குணம்) அப்படி டா… ராசாத்தி”என்றவரிடம் சிறிது நேரம் வம்பு செய்து விட்டே நகர்ந்தனர் தோழர்கள் இருவரும்.

வளைகாப்பு சிறப்பாய் நடந்து முடிய வெற்றியும்,  வீரமலையும் நண்பனோடு இணைந்து பந்தியை கவனித்தனர். மலரோடு பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியைகளும் வந்திருந்தனர்.

தினகரன் வீடியோ காலில் தங்கைகளின் விஷேஷத்தை பார்த்து ரசித்து கொண்டான்.

 
“வெற்றி உட்கார வை இந்தா வந்திடுறேன்…”என தட்டில் ஒன்பது வகை சாதங்களையும் வைத்து கூட்டு அப்பளம் வத்தல் எடுத்து வைத்தான்

“பனிக்கு இந்த சேர்ல எல்லாம் உட்கார முடியாது மாப்ள நான் போய் குடுத்துட்டு வரேன்”என்று ஓடினான் சிவா.

இங்கே சங்கரபாண்டி மகளை தூக்கி வைத்து கொண்டு… “இந்தா அங்கப் பாருங்க பாருங்க காக்கா பாருங்க..”. என்று சர்க்கரை பொங்கலை ஊட்டி விட்டு கொண்டிருந்தான். 

“ரொம்ப குடுக்காதீங்க நெய் சேராது “என்று வடிவரசியை கண்டு கொள்ளாமல் ஊட்டியவன், வேகமாக வந்து சர்க்கரை பொங்கலை அவள் வாயில் திணித்து விட்டு…”நீ செத்தோடம் செவனேன்னு இருல. புள்ள ஆசையா சாப்பிடையில தடுக்குறா…. நீ சாப்பிடு பாப்பு உங்க அம்மாவுக்கு பொறாமை… “என்று ஊட்டி விட சங்கரனுக்கு மனம் நிறைந்து போனது.

அவளை சாப்பிட விடாமல் கூட பாடாய் படுத்தி வைத்தவன் ,இன்று இவ்வளவு தூரம் பார்த்துக் கொள்வதே பெரும் நிம்மதியை தந்தது. 

சிவா தட்டுடன் வந்தவன் “ஹஹ்ஹ்ம்ம்ம்…. சகல என்ன… பப்ளிக் ,பப்ளிக் இப்படியா பொசுக்குனு ஊட்டி விடுறது… ஓடு ஓடு உள்ள ரூம்ல உட்கார வச்சு ஊட்டு உன் பொண்டாட்டிக்கு “என்றதும் வடிவரசிக்கு வெட்கம் வந்து விட்டது.

மலர் இருந்த அறைக்கு சென்றதும் அங்கே செண்பகவல்லி இருக்க…. “பனி மா நீ கீழே இறங்கி உட்காருவியாம் மாமன் ஊட்டி விடுவேனாம் வா வா “என்று அழைக்க… “மைனரே அக்கம் பக்கம் ஆளுக இருக்கிறது தெரியலையோ !!!”என்று கிண்டல் செய்ய… தட்டை வைத்து விட்டு வேகமாக அருகில் சென்றவன் அவரை அப்படியே அலேக்காக தூக்கி கொண்டு பக்கத்து அறையில் விட்டுவிட்டு…. “இங்கேயே சாப்பாடு வரும். நல்ல பிள்ளையா சாப்பிட்டு தூங்கணும்… சாயங்கலாமா எழுப்பி விட்டு… பஞ்சு மிட்டாய் வாங்கி தருவேன் “என்றவனை முறைத்து விட்டு .,”ஏன் ல என் புருஷன் கூட என்னை தூக்கினது இல்ல நீ தூக்குதியோ… “என்றதும் அவரது கன்னத்தை பிடித்து கிள்ளியவன் ,”தூக்கும் போது செவனேன்னு இருந்துட்டு கேள்வியை பாரு…. உன் கிட்ட பேச நேரம் இல்ல, நான் என் பொண்டாட்டி பிள்ளைக்கு சோறு ஊட்டணும் “என்று ஓடினான்.

“ஏலேய் மைனரு ஒரேடியா ஊட்டி விடாத.. நெஞ்சை கரிக்கும்”என்று சொல்ல.,”சரி சரி “என்றான்.

“இப்ப எதுக்கு அவங்களை வம்பு பண்ணிட்டு இருக்க நீ “என்று மலர் கேட்க .,”சும்மாடி…. சரி வா சாப்பிடலாம்… மொதல்ல சர்க்கரை பொங்கல்… ம்ம்ம் ஆ காட்டு… “என ஊட்டி விட்டான்.

தனஞ்செயனுக்கும் தட்டில் சாப்பாடு வைத்து சூர்யாவை கவனிக்கும்படி அனுப்பி வைத்தனர் வெற்றியும், வீரமலையும்.

சூர்யாவை பொன்னுசாமி அழைத்து செல்ல,  சங்கரன் தயங்கி தயங்கி,” ஒரு ரெண்டு நாளைக்கு மட்டுமாவது அந்த வீட்டில் வந்து தங்கும்மா… எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கிறேன்” என்க

வேலுத்தம்பியோ”அதென்னயா ரெண்டு நாளைக்கு ஒழுங்கா பிரசவத்தை பார்த்து பேரன் பேத்தியோட அனுப்பி வை… செய்ற சீரெல்லாம் சிறப்பா இருக்கணும்… ஆயா மலரு நான் வயசுல மூத்தவன் சொல்றேன், நீ உன் அப்பன் வீட்ல தான் பிரசவம் பார்த்துக்கிடுற தொணைக்கு செண்பா வந்து இருக்கும்… “என்றார்.