‘சிவாவை அடிக்க வேண்டும்’ என்று எண்ணியபடி மணப்பாறைக்கு கிளம்பி விட்டான் சங்கரபாண்டி. 

முத்துலெட்சுமி சங்கரனோடு பக்கத்து ஊரில் ஒரு திருமணத்திற்காக கிளம்பி இருந்தனர். 

“அரசி போயிட்டு சுருக்குனு வந்திடுவோம். சரசா சாப்பாடு எல்லாம் தருவா மாத்திரையை மறக்காம போடு வரும் போது ஏதாவது வாங்கிட்டு வரவா ?” என முத்துலெட்சுமி கிளம்பியபடி கேட்டுக் கொண்டிருந்தார். 

“எம்மா அப்பா மட்டும் போயிட்டு வரட்டும் நீ இங்கன என் கூட இருவேன் எனக்கு ஏதோ மாதிரி இருக்கு” என்றாள். 

“ஏன் டி வயிறு எதுவும் வலிக்குதா டாக்டர் தேதி தாமதமா தானே சொல்லி இருக்காரு “பதட்டத்துடன் கேட்க,” அதெல்லாம் இல்ல மா ஆனா எனக்கு எப்படியோ இருக்கு நீ இரேன்..”என்று கெஞ்சினாள்.

“ப்ப்ச் இல்லடி ரொம்ப முக்கியமான கல்யாணம் போயிட்டு எம்புட்டு சீக்கிரம் வர முடியுமோ வந்திடுறேன்” என்று சமாதானம் செய்து விட்டு கிளம்பினர் இருவரும். 

வடிவரசி அமைதியாக படுத்துக் கொண்டாள். 

அவர்கள் கிளம்பியதும் சரசா சாப்பாட்டை கொண்டு வந்து கொடுத்து விட்டு,”வடிவு என் தங்கச்சிக்கு குழந்தை பிறந்து இருக்கு நான் போய் ஒரு எட்டு சாப்பாடு தந்துட்டு வரேன்” என்றதும் வடிவரசி மறுப்பேதும் தெரிவித்திடாது அனுப்பி வைத்தாள். 

சரசாவோ வேக எட்டில் நடந்தவர் மலர் வீட்டிற்கு சென்று அவளை வீட்டுக்கு செல்லும் படி கூற அவளோ கேள்வியாக நோக்கினாள். 

“மலரு உன் சித்திகாரி கல்யாணத்துக்கு போயிட்டா வீட்ல வடிவு மட்டும் தனியா இருக்கு அந்தப் புள்ள முன்ன மாதிரி இருந்தா கண்டுக்க மாட்டேன் நான் ஆஸ்பத்திரிக்கு போறேன் னு சொன்னதும் எதுவும் சொல்லாம அனுப்பி வச்சிடுச்சு நிறைமாசக்காரி செத்தோடம் அங்கன இரு மலரு நான் சுருக்கா வந்திடுறேன்” என்று சொல்ல மலர் சரி என்று சம்மதித்தாள். 

“அத்தை போகவா?” என்று செல்வியிடம் கேட்க,” போயிட்டு வா பொருவே அவளும் பாவம் என்ன பண்ணுவா?” என்று அனுப்பி வைத்தார். 

“உங்க பையன் வந்தா சொல்லிடுங்க இல்லை கோவம் வந்திடும்” என்றபடி கிளம்பினாள்.

இங்கே வடிவரசி மட்டும் வீட்டில் இருக்க, சங்கரபாண்டி வீட்டிற்குள் வந்ததும் என்ன ஏதென்று கூறாமல் அவளை அடித்து விட்டான். 

“இப்ப ஏன் வந்ததும் வராததுமா அடிக்கிறிங்க ??? ” என்று மெல்ல எழுந்தவளுக்கு அடி வயிற்றில் வலி சுருக்கென்று வலித்தது. 

“ஏன் டி ஆள் விட்டு என் வீட்டுலையே என்னை மிரட்டி வைக்கிறியா ?, அவ்வளவு திமிர் ஆகிப் போச்சா..? இப்ப உன் வீட்டிலேயே உன்னை அடிக்கிறேன் எவனை வேணுன்னாலும் வரச் சொல்லு ல . அவனையும் சேர்த்து வச்சு கொல்லுறேன் ” என்று கோபத்தில் கத்த வடிவரசியோ வலியில் துடித்தாள். 

“என்னல ஒரு அடிக்கே அழுது ஊரை கூட்டுதியா..? ம்ம்ம் அப்படியே செவுள்ளையே ஒண்ணு விட்டேன்னா தெரியும் ” என்று மீண்டும் கையை ஓங்கியவனின் கையை இறுக்கமாக பிடித்தவள் வலியோடு கத்த., சங்கரபாண்டிக்கு பயம் பிடித்துக் கொண்டது.  

“ஏ என்னல ஒரு மாதிரியா கத்துத என்ன? ஏ என்னல பண்ணுது ” எனும் போதே அவளுக்கு பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறியது.

“வலிக்குது, அம்மா அம்மா ” என்று கத்தியவளை முதல் முறையாக மென்மையாக பிடித்து கொண்டான். சங்கரபாண்டிக்கு வியர்த்து கொட்டியது பயத்தில். முதல் முறையாக அவள் இப்படி அழுவதை காண்கிறான் நா உலர்ந்து அவளது வெளிறிய முகம் கண்டு திகைத்து போனான். 

“ஏ அழுவாதல ரொம்ப வலிக்குதா நான் நான் யாரையாவது கூட்டிட்டு வரேன் அது வந்து இல்ல இல்ல நீ வா நீ . அழுவாத ல எனக்கு ஒரு மாதிரியா இருக்கு அச்சோ இல்லம்மா இல்ல தெரியாம தெரியாமல் அடிச்சுட்டேன். அரசி இல்ல இல்ல அழாத ” என அவளை அணைத்து கொள்ள, அவளால் அந்த அணைப்பை கூட உணர முடியவில்லை. அவளை விட்டு விட்டு வெளியே ஓடி வந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க, மலர் தான் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

எதையும் யோசிக்காமல் அவளிடம் ஓடியவன் . ” சண்டிராணி ச்சே மலரு அவளுக்கு வலி வந்திடுச்சு போல கத்துறா வூட்ல யாரும் இல்லை நீ செத்த வால பயமா இருக்கு” என்றிட மலரோ அவனை சந்தேகமாக பார்த்தாள். 

அவளது பார்வையை உணர்ந்தவன் ” இல்ல இல்ல நெசமா நான் பொய் சொல்லலை உன் கால்ல வேணுன்னாலும் விழறேன் வந்து பாருல ” என்றவன் முகம் வியர்த்திருக்க, மலர் வேறெதுவும் கூறிடாமல் வீட்டிற்குள் ஓடினாள். அங்கே வடிவரசி வலியில் கதறிக் கொண்டிருந்தாள். 

“அச்சச்சோ என்ன பார்க்கிற தூக்கு பிள்ள இன்னும் கொஞ்ச நேரத்தில் பிறந்திடும். நிறைமாசக் காரியை வீட்டுல விட்டுட்டு எங்கேப் போய் தொலைஞ்சதுங்க” என்று கத்தியதும் சங்கரபாண்டி வடிவரசியை தூக்கி காரில் உட்கார வைத்தான்.  

மலர் வடிவரசியோடு அமர்ந்து கொள்ள,வடிவரசியோ நா வறண்டு,”அக்கா ரொம்ப வலிக்குது க்கா நான் செத்துப் போயிடுவேனா ??” என்று புலம்பினாள். 

“ஏல அப்படி எல்லாம் பேசாத ல பயந்து வருதுல” என்றான் சங்கரபாண்டி வேகமாக வண்டியை ஓட்டியபடி 

“ப்ப்ச் அதெல்லாம் ஒன்றும் ஆகாது. எல்லாம் நல்லாயிரும் ” என்று சமாதானம் செய்தவள், தன் கண்ணீரை அவளறியாமல் துடைத்துக் கொண்டாள். 

அரசு மருத்துவமனையில் நிறுத்த கூறிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றாள். 

சங்கரபாண்டி பொங்கி வந்த கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் லேபர் வார்டையே பார்த்துக் கொண்டிருந்தான். 

சித்திரை செல்விக்கு விஷயத்தை கூறி தேவையான பொருட்களை எடுத்து வரும் படி கூறினாள்.

அடுத்த பத்து நிமிடத்தில் பெண் குழந்தை வீல் என்ற சத்தத்துடன் பிறந்தது. அதற்குள் செல்வியும் மரகதத்தை அழைத்துக் கொண்டு வந்து விட்டார். செவிலியப் பெண் குழந்தைக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு செல்ல வடிவரசியை உடனே பெட்டிற்கு மாற்றினர். கத்தி கத்தி சோர்ந்து போய் வாடி வதங்கிய கொடியாய் கிடந்தாள் வடிவரசி. கன்னத்தில் சங்கரபாண்டியின் விரல்கள் ஐந்தும் அப்படியே பதிந்திருந்தது.  

சிவா தனா இருவரும் வந்து விட சங்கரபாண்டியோ மலரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு.,” சாமி மாதிரி நீ மட்டும் வரலைனா என் புள்ளைய இப்ப நான் பார்த்திருக்க முடியாது.நான் செஞ்சதுக்கு எல்லாம் மன்னிச்சிடுல. “என்றான் கண்ணீருடன். 

“என்னாச்சு பனி மா ஏதாவது பிரச்சினையா ??” என்று வந்த சிவாவிடம் .,”ஒண்ணும் இல்ல சக்தி மக பிறந்திருக்கா நீ பெரியப்பா ஆகிட்ட போய் சாக்லேட் வாங்கிட்டு வா . சாரு ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு இருக்காரு ” என்றபடி,’ போய் வா’ என்று கண் காட்டினாள். 

அதற்குள் குழந்தையை கொண்டு வர “இவர் தான் அப்பா இவர் கிட்ட கொடுங்க “என்றாள். 

நர்ஸ் குழந்தையை சங்கரபாண்டியிடம் கொடுக்கவும் கைகள் நடுங்க வாங்கி கொண்டான்.  

“அது வந்து . பயமா இருக்கு நீ வாங்கிக்கிறியா? ” என்றவனை ” இதுக்கே பயந்தா எப்படி ஒரு பொண்ணை வளர்த்து எடு அப்போ புரியும் பொண்ணுங்களோட வலி, வேதனை, சந்தோஷம் ,எல்லாம் என்னனு இப்ப உனக்கும் ஒரு பொண்ணு இருக்கா இவளை கட்டினவன் அடிச்சா பெத்தவங்களுக்கு எப்படி வலிக்கும் னு யோசிச்சு பாரு” என சொல்லும் போதே சிவா வந்தவன் “வீட்டுக்கு மகாலெட்சுமி பிறந்திருக்கா சாக்லேட்டை சாப்பிடு சகலை” என்று அவன் வாயில் திணித்தான். 

அதற்குள் சங்கரன் முத்துலெட்சுமியுடன் வந்து விட்டார். 

“வயித்து பிள்ளதாச்சியை வீட்டில தனியா விட்டுட்டு அப்படி வேலை பார்க்க போனீங்க அவ வீட்டுக்காரர் வந்ததால சரியா போச்சு இல்லைனா தனியா கத்திட்டு கெடந்திருப்பா அவ .” என்று இருவரையும் மலர் திட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

சங்கரபாண்டி எதுவும் பேசிடவில்லை மகளையும் மனைவியையும் கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான். 

கண் விழித்த வடிவரசி அவனைப் பார்த்து நடுங்க, உடனே தள்ளிப் போய் விட்டான். 

மூன்று நாட்கள் கழித்து வடிவரசியை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர். சங்கரபாண்டி அந்த மூன்று நாட்களும் மருத்துவமனையே கதியென்று கிடந்தான். குழந்தையை தொட்டு தொட்டுப் பார்ப்பான் வடிவரசியின் பக்கம் கூட திரும்ப மாட்டான். அவனது வீட்டிலிருந்து வந்து பார்த்து விட்டு சென்றனர். 

“பரவாயில்லை என்னை மாதிரியே பொம்பளை பிள்ளை பெத்திருக்க ராசாத்தியாட்டமிருக்கா ” என்று சங்கரபாண்டியின் அம்மா தன் கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் சங்கிலியை குழந்தைக்கு போட்டு விட்டார்.  

அவனது தந்தையோ “ஏலேய் இனியாவது . பொறுப்பா இருல இல்ல பேத்தி கையில வாரியலை கொடுத்து வெளாச சொல்லிடுவேன் இனி எங்கனடி ஊர் வம்பு பண்ணிட்டு திரியிறது இனிமே தான்ல இருக்கு உனக்கு வீட்டுக்கு லேட்டா வந்தா உன் பொண்டாட்டி கேட்டா திட்டுவ இல்ல இனிமே வாயை திறக்க முடியாத அளவுக்கு பேச கத்து கொடுத்திடுறேன் ” என்றார். 

“இனிமே போனா தானே !!”என்று தன் மகளின் விரலை மென்மையாக பிடித்து கொண்டே கூறினான். 

மருமகளுக்கு தேவையான எல்லாம் வாங்கி கொண்டு வந்து கொடுத்து விட்டு கிளம்பினர். வித விதமாக கருவாடு வந்திறங்கியிருந்தது தூத்துகுடியில் இருந்து  

அவர்கள் கிளம்பியதும் வடிவரசி அவளறையில் இருக்க குழந்தைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வந்திருந்தான். வடிவரசி அமைதியாக படுத்திருந்தாள்.  

கதவை சாத்தி விட்டு வந்தவனைக் கண்டு.,” என்ன செய்ய போகிறானோ ???” என்று பயந்தவள் வெடவெடத்தபடி படுத்திருக்க முதன் முறையாக அவளின் நெற்றியை வருடி விட்டு . ” மன்னிச்சிடு ல அரசி உன்னை ரொம்ப அடிச்சு கொடுமை படுத்திட்டேன் இல்ல சத்தியமா உன்னை பிடிக்காம இல்ல அது வந்து எனக்கு திமிரு காசு பணம் இருக்குற திமிருல . ஆணவம் எல்லாம் சேர்ந்து அப்புறம் உங்க அக்கா மேல இருந்த கோபம் அதெல்லாம் சேர்ந்து தான் உன்னை பாடாப் படுத்திட்டேன் ல . நெசமா இனிமே உன்னை உன் அனுமதி இல்லாமல் தொட கூட மாட்டேன்ல.. இது நம்ம புள்ள மேல சத்தியம் இந்த கோட்டிக்காரனை மன்னிச்சிடுல . நான் அடிச்சா முன்ன எல்லாம் கொஞ்ச நேரம் அழுதுட்டு உன் வேலையை பார்ப்பியா . அன்னைக்கு நீ வலியில கத்தும் போது உசுரே போற மாதிரி இருந்துச்சு . எனக்கு என் தப்பு எல்லாம் புரிஞ்சதுல . நான் இனிமே ஒழுங்கா இருக்கேன் குடிக்க மாட்டேன் நல்லபடியாக குடும்பம் நடத்துதேன் என்னைய விட்டு மட்டும் இங்கேயே இருந்துக்கிடாதல ” என்றான் நடுநடுங்கும் குரலில். முத்துலெட்சுமி கதவை தட்ட திறந்து விட்டு வெளியே சென்றான்.

” என்னடி உன் புருஷன் என்ன சொல்றான் ரொம்ப பாசமா பேசிட்டு போறான் .. பாசமா பேசுறானேன்னு நம்பி போகாத . இவனும் வேணாம் இவன் குடும்பமும் வேணாம் . பிள்ளைய வளர்க்க நமக்கு தெரியாது உங்க அப்பா கிட்ட சொல்லி மொதல்ல வெட்டி விடனும் இவனை ” என்றார் கோபத்துடன். 

“ஏன் மா என் மகளும் அக்கா மாதிரி அப்பா இருந்தும் இல்லாதது போல வாழனுமா . வேணாம் மா அவர் தப்பு செஞ்சப்ப எல்லாம் கூட இருந்துட்டு இப்ப திருந்தி வரும் போது எட்டி விலக்கி வைக்கிறது நியாயம் இல்லை மா . எனக்கு அவர் அடிக்கிறது எல்லாம் பழகிப் போச்சு . ஆனா அவரோட அழுகையும் தவிப்பும் எனக்கு புதுசு மா . தப்பு செய்தவன் எல்லாம் திருந்தலையா என்ன . திருந்திட்டார் னு நம்புறேன் இல்ல பழையபடி தான் இருப்பேன்னு நினைச்சா அவர் அப்படியே இருக்கட்டும் நான் என்னை மாத்திக்கிறேன் . நீ இதுவரை என் வாழ்வை சீரமைச்ச வரைக்கும் போதும்மா விட்டுடு ” என்றாள் சோர்வாக . 

“அதான் டி அடிச்சாலும் புடிச்சாலும் அவன் தான் வேணும் னு நிக்கிறதால தான் அவன் அடங்காம திரியிறான் என்னவோ பண்ணு போ ” என்று நொடித்துக் கொண்டவரிடம்.,” ம்மா இனிமே அவரை அவன் இவன் னு சொல்லாத “என்றாள் அழுத்தமாக. 

“அது சரி இனிமே சொல்லலைடி மா !!”என்று விட்டு போய் விட்டார். 

சங்கரபாண்டி உள்ளே நுழைந்தவன் வேகமாக மனைவியை அணைத்துக் கொண்டு .,”சத்தியமா ல இந்த ஊரே மெச்சுற மாதிரி உன்னை பார்த்துக்கிடுவேன் . எம்புள்ளையை உங்க அக்காகாரி மாதிரி தைரியமா வளர்ப்பேன் “என்றதும் புன்னகைத்தாள் வடிவரசி. 

இனி வடிவரசியின் வாழ்வு சங்கரபாண்டியுடன் சிறப்பாக இருக்கும் என்று நம்புவோம்.

….. தொடரும்