Advertisement

அத்தியாயம் 9

நிச்சயதார்த்தம் முடிந்து அனைவரும் கிளம்பிய பின் பொறுமையாக மலர்விழி அவள் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு வந்தாள்.

வீடு என்றாலே அவளை பொறுத்த வரையில் கல்லும் மண்ணும் தான். காலையில் வெளியேறி செல்பவள் இரவில் தான் வீட்டுக்கே வருவாள். நேரங்காலத்தோடு அவள் வீட்டுக்கு வர வேண்டும் என்று அவளுக்காக யார் வீட்டு வாசலில் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்?

சொந்தமென்று அத்தனை பேர் இருந்தாலும், சொல்லிக்கொள்ளத்தான் முடியவில்லை. சொல்லிக்கொள்ளும் எண்ணமும் மலர்விழிக்கு இல்லை.

“ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டியது தானே! எதற்காக தனியாக இருக்க வேண்டும்?” என்று அவள் மனம் அவளை கேளாமல் இல்லை.

அது முடியாது. அவள் வாழ்க்கையில் காதல் என்ற வலியை அனுபவித்து விட்டாள். அவள் உருகி உருகி காதலித்த வான்முகிலன் அவளை ஒரே நொடியில் நிராகரித்தும் விட்டான். இனி அவள் வாழ்க்கையில் யாருக்கும் இடமே இல்லை.

துணி மாற்றி குளிக்கும் வரையில் வான்முகிலனை சந்தித்தது காதல் வயப்பட்டது அவன் அவளை எவ்வாறு நிராகரித்தான் என்பதையும் அசைபோடலானாள் மலர்விழி.

அன்னை இறந்த பின் எங்கே செல்வது என்ற குழப்பமெல்லாம் மலர்விழிக்கு இருக்கவில்லை. சென்னையிலுள்ள பிரபல கல்லூரியில் சீட் கிடைத்திருந்தது. அங்கு சென்று படிக்கலாம். வீட்டையும் விற்று விடலாம். கிடைக்கும் பணத்தை கொண்டு படிக்கலாமென்று முடிவு செய்தாள்.

ஒருவழியாக கல்லூரிக்கும் வந்து சேர்ந்தாள். விடுதியிலும் இடம் கிடைத்தது.

அடுத்தநாள் காலை கல்லூரிக்கு சென்றால் சீனியர்ஸ் புதிதாக வருபவர்களை ராகிங் செய்து கொண்டிருந்தார்கள்.

இவர்களிடமிருந்து எப்படி தப்புவது என்று யோசித்தவாறே மலர்விழி உள்ளே சென்றால் அவளையும் வரிசையில் நிற்க வைத்து விட, மலர்விழிக்குள் கோபம் கனன்றது.

பெயரையோ ஊரையே கேளாமல் தோற்றத்தையும், ஆடையும் வைத்து சிலரை விடுவதும், சிலருக்கு கஷ்டமான டாஸ்க்கை கொடுப்பதும், சிலரை கேவலமாகவும் நடாத்திக் கொண்டிருந்தனர்.

“ஏய் நீ வா… பார்க்க சுமாரா தான் தெரியிற. பாட்டு பாடுவியா? இல்ல டான்ஸ் ஆடுவியா? ஏதாச்சும் பண்ணிட்டு போ…” என்றது மட்டுமில்லாமல் மலர்விழியின் ஒல்லியான தோற்றத்தை பற்றியும், அவள் ஆடையை பற்றியும் கண்டபடி பேசலாயினர்.

ஏற்கனவே ராகிங் செய்கிறார்களே என்று கோபத்தில் இருந்த மலர்விழி அவர்கள் தங்களை மட்டம் தட்டியதில் கோபத்தை அடக்க முடியாமல் “எதுவும் பண்ண முடியாது” என்று சண்டை போட ஆரம்பித்தாள்.

“ஏய் என்ன திமிரா? சீனியர் சொன்னா கேட்கணும்” என்று அவர்களும் பதிலுக்கு இவளோடு மல்லுக்கு நிற்க, புதிதாக வந்த யாருமே அவளுக்கு துணையாக நிற்கவில்லை.

முதல் பாடவேளை ஆரம்பமாகி விட்டது என்று என்று சிலர் ஓட, ஒருசிலர் மலர்விழியோடு இன்னுமே வாக்குவாதம் செய்யலாயினர்.

அங்கு வந்த வான்முகிலனும் தோழர்களும் “என்ன பிரச்சினை” என்று கேட்டனர்.

“சரி சரி கிளம்புங்க அப்பொறம் பாத்துக்கலாம்” என்று அனைவரையும் அங்கிருந்து அனுப்பி விட்டான்.

மலர்விழி வான்முகிலனை முறைத்துப் பார்க்க, அவன் சிரித்து விட்டு சென்றான்.

வகுப்பறைக்கு வந்த மலர்விழிக்கு அங்கே தன்னோடு ராகிங்கில் இருந்த பலர் இருப்பதை கண்டு, ஒருவார்த்தை சீனியரை எதிர்த்து பேசாத இவர்களை மீது கோபம் கோபமாக வந்தது. அதனால் யாரிடமும் அவளால் ஒட்ட முடியவில்லை. இவளாகவே அவர்களிடமிருந்தும் விலகியிருந்தாள்.

ஒருநாள் நூலகத்துக்கு சென்று தனக்கு தேவையான புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தாள். அந்த நேரம் வான்முகிலன் அவன் தோழர்களோடு அங்கு வந்திருந்தான்.

யார் யார் தங்கள் சீனியர் என்றும் மதிப்பதில்லை. தாங்கள் சொல்வதை கேட்பதில்லை என்று வகுப்பு வாரியாக பெயர்களை கூறிக்கொண்டிருந்தனர்.

“டேய் லூசுங்களா? பாஸ்ட் டே தான்…டா ராகிங். அதையேன் பெர்சனலா பாக்குறீங்க? அதுவும் பொம்பள புள்ளைங்க பேர லிஸ்ட்டுல வேற சேர்த்து வச்சிருக்குறீங்க? இன்னமும் நீங்க சிங்கில்ஸ்ஸா இருக்குறது யேன்னு இப்போதான் புரியுது. நீங்களும் சிங்கில்ஸ்ஸா இருந்து என்னையும் கமிட்டாக விடாம கடுப்பேத்துறீங்க. போங்கடா போங்க லவ் பண்ண தெரியலனா… படிச்சி வேலைக்கு போற வழியாவாச்சும் பாருங்க” கையிலிருந்த புத்தகத்தாளையே அவர்களை அடித்துத் துரத்தினான் வான்முகிலன்.

அதை பார்த்து மலர்விழிக்கு சிரிப்பாக இருந்தாலும் வான்முகிலன் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது.

அடுத்து வந்த நாட்களிலும் மலர்விழி வான்முகிலனை எதேச்சையாக சந்தித்தாள். அவன் மற்றவர்களோடு நடந்துகொள்ளும் முறை அவளை பெரிதும் ஈர்த்தது. புன்னகைத்தவாறே கடந்து விடுவாள்.

ஒருநாள் அவனே நேரில் வந்து இவளிடம் பேசினான். “ஹேய் கல்ச்சர் டேல என் கூட ஜோடியா ஆடுறியா?”

மலர்விழிக்கு ஆடத் தெரியுமா? தெரியாதா? என்றெல்லாம் கேட்காமல் நேரடியாக கூட ஆடுறியா என்று கேட்டு விட்டான். மலர்விழியும் சரியென்று விட்டாள்.

இருவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட வான்முகிலன் மலர்விழியை பாராட்டித் தள்ளினான்.

“ஆமா எனக்கு ஆடத் தெரியும் என்று உங்களு எப்படித் தெரியும்?”

“டான்ஸரூம்ல நீ தனியா ப்ராக்டிஸ் பண்ணுறது எதேச்சையா பார்த்தேன். டான்ஸ் காஸ்டியும்ல வேற இருந்தியா. மாஸ்டராவே இருப்பான்னு நினச்சேன்” கிண்டல் செய்வது போல் சமாளித்தான். இவன் தான் அவளை ஒரு சில தடவை பின் தொடர்ந்து இவள் யார் என்ன என்று அறிந்து கொண்டிருந்தான்.

“ஓஹ்” என்றவள் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

அன்றிலிருந்து அவர்களது நட்பும் அழகாக தொடர்ந்தது. ஆனால் வான்முகிலனுக்கு அவளை பிடிக்கும் என்பதை அவளிடம் சொல்லாமலே மறைத்து விட்டான்.

நாளாக நாளாக மலர்விழியின் மனதிலும் வான்முகிலன் மேல் காதல் அரும்ப ஆரம்பித்திருக்க, அவளும் அவனிடம் சொல்லாமல் மறைக்கலானாள்.

நட்பு என்ற போர்வையில் இருவரும் காதலித்துக் கொண்டிருக்க, அது ஈர்ப்பா? காதலா? என்று இருவருமே உணர்ந்து கொள்ளும் நாளும் வந்தது.

அன்று காலை மலர்விழியை சந்தித்த வான்முகிலன் “நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை எங்க போகலாம்?” என்று கேட்டான்.

கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து விடுதியில் தஞ்சமடைந்த மலர்விழி எங்குமே செல்லவில்லை. வான்முகிலனோடு பழகிய பின் தான் அவனோடு சென்னையை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள். இன்றும் அப்படித்தான் வான்முகிலன் மலர்விழியை கேட்டான்.

“பீச் போலாமா?” ஏற்கனவே போய் இருந்தாள். திரும்பவும் போக வேண்டும் போல் இருக்கவே புருவங்களை உயர்த்தி, உதட்டை சுருக்கி அவனை பார்த்தாள்.

“போலாமே. பீச் ஈவ்னிங் தானே. காலைல எங்க போறது? படம் பார்க்க போலாமா?”

அவனோடு நேரம் செலவிட கசக்குமா? புன்னகையோடு தலையசைத்தாள்.

ஞாயிற்றுக்கிழமை காலையிலையே விடுதியிலிருந்து கிளம்பி வான்முகிலன் கூறிய இடத்துக்கு செல்ல பேரூந்தில் ஏறினாள்.

வான்முகிலன் சொன்ன இடத்துக்கு இன்னும் ஒரு ஸ்டாப் இருக்கவே இருக்கையிலிருந்து எழுந்து நின்று கொண்டவள் மெதுவாக பின்னாடி கதவின் அருகே நகர்ந்தாள்.

அந்த ஸ்டாப்பில் நின்றிருந்த பேருந்து மெதுவாக நகர ஆரம்பிக்கவும் வான்முகிலன் ஒரு கடையின் அருகே நின்றிருப்பதைக் கண்டவள் “முகிலன்” என்று அழைத்தவாறே படிகளில் இறங்க பேருந்து வேகமெடுத்தது.

மலர்விழியின் குரல் கேட்டு வான்முகிலனும் திரும்பிப் பார்க்க, பேருந்திலிருந்து இறங்கி விடலாமென்று நினைத்த மலர்விழி பேருந்து வேகமெடுத்ததில் பேருந்திலிருந்து விழுந்திருந்தாள்.

“விழி…” என்று கத்தியாவரே வான்முகிலன் மலர்விழியின் அருகில் ஓடி வந்திருக்க, பேரூந்திலிருந்தவர்கள் போட்ட கூச்சலில் பேருந்தும் நின்றிருந்தது.

பேருந்து வேகமெடுத்ததால் மலர்விழி தூக்கி எறியப்பட்டிருந்தாள். இல்லையென்றால் பேரூந்தின் சக்கரத்தில் தான் சிக்கியிருப்பாள்.

தூக்கி எறியப்பட்ட மலர்விழி பாதையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்து இருவரும் சைக்கிள் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் மேல் விழுந்திருந்தனர்.

விழுந்த வேகத்தில் இருவருக்குமே நல்ல காயம்.

“ஐயோ அம்மா…” என்று விழுந்தவர் கதறிக் கொண்டிருக்க, மலர்விழி வலியோடு வான்முகிலனை தேடினாள்.

எவ்வளவு வேகமாக ஓடி வர முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி வந்தவன் “விழி உனக்கு ஒண்ணுமில்லையே” கலங்கிய கண்களோடு அவளை மெதுவாக தூக்கி அணைத்துக் கொண்டான்.

“செவனேன்னு போன என்ன கொல்ல பாத்தியே” என்று விழுந்தவர் மலர்விழியை தூற்றியவரே எழுந்து நின்று வான்முகிலனோடு சண்டை போட ஆரம்பித்தார்.

பேருந்தில் இருந்த பயணிகளும் தப்பு மலர்விழியினுடையது என்று பேச, கண் கலங்கி உதடு கடிக்கலானாள் மலர்விழி.

வலியில் துடிக்கும் அவளை அங்கிருந்து அழைத்து செல்ல விடமாட்டார்கள் என்று தோன்ற பணப்பையிலிருந்து சில நோட்டாக்களை எடுத்து விழுந்தவரிடம் கொடுத்தான். “இத முதல்லயே கொடுக்க மாட்டியா?” என்று அவர் இடத்தை விட்டு கிளம்ப, மலர்விழியை அழைத்துக் கொண்டு பாதையில் செல்லும் ஆட்டோவை நிறுத்தி ஏறி இருந்தான் வான்முகிலன்.

மருத்துவமனைக்கு சென்று சேரும் வரையில் இருவருமே பேசவில்லை.

உடம்பில் சிராய்ப்புகளோடும், வலியோடு மெளனமாக கண்ணீர் சிந்தும் மலர்விழியின் கையை தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தியவன் தாதி மருந்து போடும் வரையில் காத்திருந்தான்.

“இங்கயே இரு நான் போய் மருந்து வாங்கிட்டு வரேன்” மருத்துவர் கொடுத்த சீட்டை பார்த்தவாறே கூறினான் வான்முகிலன்.

அவன் கையை பிடித்து தடுத்த மலர்விழி “இங்கயே இருக்க முடியாதா?” ஏக்கமாக அவனை பார்த்தாள்.

“உடம்பு ரொம்ப வலிக்குதா?” சட்டென்று அவளருகில் அமர்ந்து ஆறுதலாக அவள் கையை பற்றினான் வான்முகிலன்.

“பஸ்ஸுல இருந்து விழும் பொழுது உன்ன பார்க்காமலே செத்துடுவேனோ என்று பயம் வந்துருச்சு” என்றவள் விசும்பலானாள். அவள் காதலை தான் அச்சமென்று சொன்னாள். அதை உணர்ந்து சொன்னாளா? அவனை பிரிய முடியாமல் சொன்னாளா தெரியவில்லை.

“விழுற உன்ன பார்த்து நான் செத்துட்டேன். ஓடி வரேன் வரேன் வந்துகிட்டே இருக்கேன். கால்கள் ரெண்டும் அங்கேயே நின்னது போல ஒரு பிரம்ம. உனக்கும் எனக்கும் இருந்த இடைவெளி ரொம்ப தூரமா தெரிஞ்சது. ரொம்ப உடம்பு வலிக்குதுனா நாம ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிடலாம்” என்றான்.

அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற அவன் துடித்த துடிப்புதான் அவன் அவள் மேல் வைத்த காதல் அதை தான் இவ்வாறு கூறிக் கொண்டிருந்தான். அவள் கூறியதை உணராமல் தான் கூறியதையும் உணராமல் விழுந்ததில் ரொம்ப உடம்பு வலியில் இருக்கிறாள் போலும் என்றுதான் மருத்துவமனையில் இருந்திடலாம் என்றான்.

“இல்ல எனக்கு உன் கூட இருக்கணும் போல இருக்கு. மருந்து எடுத்துக்கிட்டு நான் ஹாஸ்டலுக்கு தானே போகணும்” என்ற மலர்விழி வான்முகிலனை பாவமாய் பார்த்தாள்.

அவள் மனநிலையை புரிந்து கொண்ட வான்முகிலன் “இல்ல நாம ஹாஸ்டல் போகல” என்று புன்னகைத்தவன் அவளை அழைத்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு சென்றான்.

இருவரும் காலை உணவையும் வெளியே சாப்பிடலாம் என்றுதான் முடிவு செய்திருந்தனர். அறைக்கு வரும் பொழுதே உணவு வாங்கி வந்திருந்த வான்முகிலன் மலர்விழியை சாப்பிட வைத்து வாங்கி வந்த மாத்திரைகளையும் கொடுத்து ஓய்வெடுக்க கூறினான்.

“என்ன ஓய்வெடுக்க சொல்லிட்டு நீ பாட்டுக்கு வெளிய கிளம்பிடாத” முறைக்க முடியாமல் முகத்தை திருப்பினாள்.

“நான் எங்கயும் போகல. இங்கதான் இருப்பேன். இதோ டிவி பார்க்க போறேன் நீ தூங்கு” போர்வையை போர்த்தி விட்டு தொலைக்காட்சியின் முன் சென்று அமர்ந்து கொண்டான்.

கண்களை மூடிக் கொண்ட மலர்விழியின் கண்களுக்கு வான்முகிலன் பேசியதுதான் வந்து நின்றது. அவனுடைய பதட்டம், பரிதவிப்பு, அக்கறை அணைப்பு என்று எல்லாவற்றிலும் காதலை பார்த்து விட்டாள். அவன் அவளை காதலிப்பதை புரிந்து கொண்டவள் மென்னகை செய்து. அவன் அவளிடம் நடந்து கொண்ட முறையை பற்றி அசைபோட்டவாறே வான்முகிலனே வந்து காதலை சொல்லட்டும் என்று புன்னகைத்தவள் தொலைக்காட்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவனை ரசித்தவாறு மருந்தின் வீரியத்திலையே தூங்கியும் போனாள்.

தொலைக்காட்ச்சியின் முன் அமர்ந்திருந்த வான்முகிலனின் கண்கள் தான் தொலைக்காட்ச்சியின் மீது இருந்ததே ஒழிய எண்ணமெல்லாம் மலர்விழி பேசியதில் தான் இருந்தது.

மலர்விழிக்கு யாருமில்லை என்று தெரியும். அவளை விடுதியில் விடும் எண்ணமும் இல்லை. வீட்டுக்கு அழைத்து செல்லவும் முடியாது. சரி ஹோட்டலுக்கு செல்லலாம் என்று நினைக்கும் பொழுது அவளே கேட்டது வான்முகிலனின் நெஞ்சத்தை உருக வைத்தது.

மலர்விழி உன்ன பார்க்காமலே செத்துடுவேனோ என்று பயம் வந்திருச்சு என்று சொன்னதுலையே அவளுக்கு தன் மீது காதல் இருப்பதை உணர்ந்து கொண்டான் வான்முகிலன்.

தனக்கு மட்டும் தான் அவள் மீது விருப்பம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த நேரம் அவளும் தன்னை விரும்புவதை அறிந்து கொண்டவனுக்கு எல்லையில்லா சந்தோசம்.

மலர்விழி தூங்கி எழுந்த பொழுது மதியம் தாண்டியிருந்தது.

“முகம் கழுவிட்டு வா சாப்பிடலாம்”

தலையசைத்து புன்னகைத்தவள் முகம் கழுவி விட்டு வர இருவரும் உணவுண்டு விட்டு கிளம்பினர்.

மலர்விழியை விடுதியில் இறக்கி விட்டவன் “இன்னக்கி ஓய்வெடு. அடுத்தவாரம் பீச் போலாம்” என்று விடைபெற்றான்.

காதலை உணர்ந்தவன் அதை கடைசிவரை அவளிடம் சொல்ல முடியாமல் போவான் என்று தெரிந்திருந்தால் ஒருவேளை அன்றே மலர்விழியிடம் கூறியிருப்பானோ என்னவோ.

மலர்விழி தான் தன்னை காதலிப்பது தெரிந்து விட்டதே என்று இவன் அவளோடு கண்ணாமூச்சி ஆட ஆரம்பித்தான்.

காதலை சொல்வதை விட புரிய வைப்பது தானே சுகம். அதை செயலில் காட்டிக் கொண்டிருந்தான் வான்முகிலன். அதை மலர்விழி வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தாள்.

அன்னைக்கு பிறகு தனக்கு கிடைத்த ஒரே சொந்தம் வான்முகிலன் மட்டும் தான். தான் எப்படி இருந்தாலும், யாருக்கு பிறந்தாலும் தன்னை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரே நல்ல மனிதன் வான்முகிலன் மட்டும் தான் என்று முழு மனதாக நம்பினாள்.

இறுதியாண்டில் இருந்த வான்முகிலன் பரீட்ச்சைக்கு பின்னே மலர்விழியிடம் பேசலாம் என்றிருந்தான். அந்த நேரத்தில் தான் அவன் தந்தை வஜ்ரவேல் திடிரென்று மாரடைப்பால் இறந்து விட குடும்ப சுமை அவன் தோள் மேல் ஏறியிருந்தது.

காதலா? குடும்பமா? என்று யோசிக்கையில் குடும்பம் தான் தனக்கு முக்கியம் என்று உணர்ந்தவன் மலர்விழியிடம் சொல்லாத காதலை சொல்லாமலே இருந்து விட முடிவு செய்தான்.

“ஓகே மலர் ஐம் லீவிங் காலேஜ். திரும்ப எப்ப பார்ப்பேன்னு தெரியாது. திரும்ப சந்திச்சா ஹாய், ஹலோ என்று நம்ம நட்பு தொடரட்டும்” என்று கைகுலுக்கி விடைபெற அவள் முன் கையை நீட்டினான் வான்முகிலன்.

“நான் உன்னை காதலிக்கிறேன். எனக்காக காத்திரு” என்று தன்னுடைய பிரச்சனைகளை அவள் தோள் மேல் இறக்கி வைப்பதில் வான்முகிலனுக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை.

தனக்கிருக்கும் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வர எத்தனை வருடங்களாகுமென்பதே தெரியாது. இதில் சந்தோசமாக இருக்க வேண்டியவளை தன்னோடு சேர்ந்து இன்னல்களை அனுபவிக்க சொல்வதா? என்றுதான் அவளை விட்டு விலக எண்ணினான்.

“என்ன முகிலன் என்னாச்சு?” தன்னை காதலித்துக் கொண்டிருந்தவன் ஏன் திடிரென்று காதலை கூறாமல் விலகி செல்ல முனைகிறானென்று புரியாமல் குழம்பினாள் மலர்விழி.

“நீ எனக்கு நல்ல பிரென்ட் மலர்விழி. அதை தாண்டி நமக்குள்ள என்ன இருக்கு?”

“ப்ரெண்டா?” என்று அதிர்ந்தவள் “இல்ல முகிலா நான் உன்ன லவ் பண்ணுறேன். நீயும் என்ன லவ் பண்ணுற. ஏன் மறைக்கிற?” மலர்விழியால் தாங்கவே முடியவில்லை. மனதில் உள்ளதை கூறி விட்டாள்.

“லவ்வா? என்ன சொல்லுற? அழகான பொண்ண காதலிக்கனும்னா உன்ன விட அழகான பொண்ணுங்க இந்த காலேஜ்ல இருக்காங்க. பணக்கார பொண்ணைத்தான் காதலிக்கனும்னா குடும்பமே இல்லாத உனக்கு சொத்தே கிடையாது. படிப்பும் சுமார் தானே. எதோ நல்ல பொண்ணா இருக்காளேன்னு நல்ல விதமா நடந்துக்கிட்டா காதல்னு சொல்லுற. நான் என்னைக்காவது உன்கிட்ட லவ் பண்ணுறேன்னு சொன்னேனா? இல்ல அட்வான்டேஜ் எடுத்துகிட்டேனா?” என்றவன் நிற்காமல் கிளம்பி விட்டான்.

இன்னும் அங்கு இருந்தால் மலர்விழி அழுது விடுவாள். அழும் அவளை சமாதானப்படுத்தி உண்மையை உளறி விடக் கூடும் என்றுதான் கிளம்பி வந்து விட்டான் வான்முகிலன்.

அழுது அழுது ஓய்ந்த மலர்விழி தன்னை தேற்றிக்கொள்ள பல மாதங்கள் எடுத்திருக்க, படிப்பில் கவனம் செலுத்தினாள். தன்னிடம் குடும்பம் இல்லாமல் இருக்கலாம். சொத்து இல்லாமல் இருக்கலாம். படிப்பு இல்லாமல் போனால் அதற்க்கு தான் மட்டுமே காரணமென்று முழுமூச்சாக படிக்கலானாள்.

இறுதியாண்டில் காலடி எடுத்து வைத்தவளுக்கு படிப்பு முடிந்து வேலை கிடைத்தால் தான் யார் என்று சாதித்தே காட்ட வேண்டும் என்ற வெறி வந்தது.

அந்த வருடம் முதலாமாண்டில் மலர்விழியின் ஊரிலிருந்து ரம்யா கல்லூரியில் சேர்ந்திருக்க. மலர்விழியை பார்த்து கேலியாக சிரித்தவள் மலர்விழியை பற்றிம் அவள் அன்னை தேன்மொழியை பற்றியும் மாணவர்களிடம் புரளி பேச ஆரம்பித்தாள்.

ஏற்கனவே சக வகுப்பு மாணவர்களோடு ஒட்டாத மலர்விழி அவர்களோடு அன்னைக்காக வாக்குவாதம் செய்யவும், சண்டை போடவும் வேண்டியதாயிற்று.

அவளிடம் கராத்தே அடி வாங்க முடியாமல் ஒருவன் “உன் ஜாதகமே தெரிஞ்சிதான் வான்முகிலன் உன்ன நல்லா யூஸ் பண்ணிக்கிட்டு கழட்டி விட்டான்” என்று அவளை வெறுப்பேற்றினான்.

இதுநாள் வரையில் தன்னை பற்றிய உண்மை யாருக்கும் தெரியாது என்று எண்ணிக் கொண்டிருந்தவள் ஒருவேளை அப்பா பெயர் தெரியாதவள் என்று தானோ வான்முகிலன் தன்னை காதலித்தும் தன்னிடம் காதலை சொல்லாமல் சென்றான்? தான் இவ்வளவு நம்பியவன் தனக்கு துரோகம் இளைத்து விட்டானே என்று அவன் மேல் கடும் கோபம் கொண்டாள்.

குளித்து விட்டு வந்த மலர்விழி துண்டிலிருந்து நைட்டிக்கு மாறி இரவுணவுக்கு என்ன சமைக்கலாம் என்று யோசிக்க அவள் அலைபேசி அடித்தது. புன்னகையோடு அலைபேசியை இயக்கி காதில் வைத்தாள்.

“ஹலோ என்ன இப்படி சொதப்பிருச்சு? இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. ஆதிசேஷன் குடும்பத்தோடு தலைகுனிவான்னு சொன்ன. ஒண்ணுக்கு ரெண்டு பேரன்களுக்கு நிச்சயதார்த்தத்தை நடாத்திட்டான்” கோபத்தில் கொதித்தது அந்த ஆண் குரல்.

“எல்லாம் நான் திட்டமிட்டபடிதான் நடந்துகிட்டு இருந்தது. நீங்க தான் அவசரப்பட்டு அந்த வீடியோவ வெளியிட்டீங்க. உங்கள கொஞ்சம் பொறுமையாக இருக்க சொன்னேனே. ஏன் தான் நான் சொல்லுறத நீங்க கேட்காம இருக்குறீங்களோ. தெரியல” மலர்விழி தான் நினைத்தது நடக்கவில்லையே என்ற கோபம் இருந்தாலும் பொறுமையாக பேசினாள்.

“என்ன மன்னிச்சுடு. ஆதிசேஷன் மேல இருக்குற கோபத்தை கட்டுப்படுத்த முடியாம உன் பேச்சையும் மீறி, அந்த வீடியோவ நெட்டுல விட்டுட்டேன். வீடியோவ ஒருநாள் முன்னாடி விட்டா என்ன ரெண்டு நாள் முன்னாடி விட்டா என்ன? நிச்சயதார்த்தம் நின்னா போதும் என்று யோசிக்காம பண்ணிட்டேன். அவனுங்க வேற பிளான் பண்ணிட்டானுங்க. அத வேற ரகசியமா வச்சிருந்தானுங்க. இல்லனா ஏதாவது பண்ணியிருக்கலாம்”

“நிச்சயதார்த்தம் நடக்கும் பொழுது, அந்த ஹால்ல எல்லாரும் இருக்கும் பொழுது அந்த வீடியோ டெலிகாஸ்ட் ஆகியிருந்தா தான் அவனுங்க மானம், மரியாதை போய் குனிக்குறுகி நின்னிருப்பானுங்க. தப்பிச்சிட்டானுங்க. பிளான் B என்று அவனுங்க என்னமா திட்டம் போட்டுட்டாங்க. அதுக்கு இவனுங்களுக்கு நேர அவகாசம் கிடைச்சது. அதையும் ரகசியமா வச்சிருந்ததால நம்மளால ஒண்ணுமே பண்ண முடியல”

“எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லுற அப்பா உன் கிட்ட இத பத்தி வாய் திறக்கல பாத்தியா? ஆமா அவர் உன்ன முழுசா நம்புறாரா?”

“அவரோட குணத்த பத்தி தான் உங்களுக்கு தெரியுமே. அவர் சொல்லுறது தான் சட்டம். அத யாரும் மீற கூடாது என்று நினைப்பவராச்சே. என்ன முழுசா நம்பாம பொண்ணா ஏத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டாரு. சந்தேகப்படுறாரான்னு தெரியல. பார்க்கலாம்”

“ஏதாவது பண்ணியிருக்கணும் மலர். உன்ன பொண்ணு என்று சொல்லாம பொண்ணு மாதிரி என்று வாய் கூசாம சொல்லுறான் அந்த கிழவன். நீதான் அந்தாளோட ஒரே மகள் என்று சொல்லியிருந்தா வந்தவங்க காரி துப்பியிருந்திருப்பாங்க. நிச்சயதார்த்தமும் நின்னிருக்கும்”

“நான் தான் அவர் பொண்ணு என்று அவரே சொல்ல விரும்பல. சொல்லாம இருக்குறது குடும்பத்துக்கு நல்லது என்று அவர் நினைக்கிறார். அவரை பழிவாங்க நல்லது என்று நான் நினைக்கிறேன்”

ஆம் மலர்விழிதான் சொந்த அப்பாவையும், குடும்பத்தாரையும் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கின்றாள். இதில் வான்முகிலனையும் சேர்த்திருந்தாள்.

“அந்தாளு உன்ன முழுசா நம்பிட்டாரா?” மீண்டும் கேட்டது அந்தக் குரல். மலர்விழியின் மீது ஆதிசேஷன் கடுகளவேனும் சந்தேகம் கொண்டாரென்றால் சொந்த மகளென்றும் பார்க்காமல் கொலை செய்து புதைத்து விடுவார் என்பது தானே உண்மை.

“அவர் மகள் என்ற பாசத்துல மூழ்கி இருக்காரு. அந்த ஆதிரியன் தான் சந்தேகமாகவே பாக்குறான். அவனை ஒருவழி பண்ணனும்” என்றாள் மலர்விழி.

“அவனும் அந்த வான்முகிலன் போல பெர்பெக்ட்டா, கட் அண்ட் ரைட்டா இருக்கான். ஏதாவது ஒன்னுல சிக்க வைக்கலாம் என்று பார்த்தா சிக்கமாட்டேன் என்குறான்”

“ஆமா அவன் வீடியோதான் வைரலாக வேண்டியது. அந்த பிளேபாய் ஆதித் வாண்டடா வந்து சிக்கிட்டான்” சிரித்தாள் மலர்விழி.

“வான்முகிலேனோட பொருள் தரமானது என்று அவன் தப்பிச்சிட்டான். நடந்தது விபத்து என்று இவனுங்க முடிவு பண்ணிடுவானுங்க அதுக்குள்ள ஏதாவது பண்ணனும். அடுத்து என்ன பண்ண போற?”

“ப்ளாக் பாக்ஸ் ச மறந்துட்டீங்க அந்த ரிப்போர்ட் வந்தா ஆதிசேஷன் ஆடி போவாரு. அதுவரைக்கும் நாம சிறப்பா பண்ணலாம்” அலைபேசியை அனைத்தாள் மலர்விழி.

Advertisement