Advertisement

அத்தியாயம் 8

“உங்கள சுத்தி இருக்குறத நீங்க இன்னும் கண்ண தொறந்து பார்க்கணும் மிஸ்டர் வான்முகிலன்” நிலஞ்சனா எந்த அர்த்தத்தில் கூறினாளென்று வான்முகிலனுக்கு சுத்தமாக புரியவில்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் பார்க்கும் விதமும், கோணமும் மாறுபடும்.

“பிரச்சினை” பிறருக்கு வரும் பொழுது பார்க்கும் கோணமும், தனக்கு வரும் பொழுது பார்க்கும் கோணமுமே வேறுபாடும்.

அடுத்தவன் பிரச்சினையில் ஆயிரம் கருத்துக்கள் சொல்லலாம். நம் பிரச்சினைக்கு நமக்கே தீர்வு தெரியாமல் பிரச்சினைக்குள்ளேயே சிக்கி சின்னாபின்னமாகிடும் சூழ்நிலைதான் அதிகம்.

யாராவது கைதூக்கிவிட மாட்டார்களா என்று மனம் ஏங்கும்.

பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் மூளை மங்கிப் போய் இருக்கும் பொழுது மனம் விழித்திருக்குமா?

நிலஞ்சனா சொல்ல வருவது அதுதான். வான்முகிலனுக்கு புரிந்தாலும் பாக்யஸ்ரீயை இழந்த அவன் மனம் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் தள்ளாடிக் கொண்டுதான் இருக்கிறது. அவனுக்கு கைகொடுத்து தூக்கிவிட நிலஞ்சனா வந்து விட்டாள்.

அவள் கூறிய பின் விழித்துக்கொண்டவன் ஆதிசேஷனிடம் அடங்கிப் போகப் பிடிக்காமல் அவர் முடிவுக்காக காத்திருக்க, அவன் நினைத்தைத்தான் ஆதிரியனும் கூறியிருந்தான்.

சுபலக்ஷ்மி தனக்கு திடீரென்று வீட்டில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்யப் போவதாக கூறியதும் அதிர்ந்தவள் “எனக்கு ஒன்னும் அவசரமில்லை” என்று முணுமுணுத்தாள்.

“நீ யாரையாச்சும் லவ் பண்ணுறியா?” இந்தக் கேள்வியை கேட்கும் பொழுது வீட்டில் அனைவரும் அங்குதான் கூடியிருந்தனர்.

“லவ்வா? நோ… நோ… நெவெர்” பட்டென்று பதில் சொன்னாள்.

“அதுக்கெல்லாம் இவள் சரிப்பட்டு வர மாட்டா மாமா” சஷிகாந்த் கிண்டலடிக்க,

“அப்போ நீ லவ் பண்ணுறியா?” என்று அக்கா மகனை கேட்டான் வான்முகிலன்.

“ஐயையோ ஆள விடுங்க. நானும் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்” மாமனின் அடுத்த கேள்வியிலிருந்து ஒதுங்கிக் கொண்டான்.

“தெரியாத யார் கூடயாவது நீ ஏதாவது ஹோட்டல் ரூம்ல இருந்தியா?” சுபியை வான்முகிலன் கேட்க, திருதிருவென முழித்தாள்.

மளவிகாவுக்கு நடந்தது போல் இவளுக்கும் ஏதாவது நிகழ்ந்திருக்குமோ? நிச்சயதார்த்தத்தின் பொழுது இன்னொரு காணொளி ஒளிபரப்பப்பட்டால் எவ்வாறு சமாளிப்பது என்றுதான் வான்முகிலன் கேட்டான்.

“டேய் முகிலா என்னடா இது?” பெண் பிள்ளையிடம் இவ்வாறா கேட்பது என்று காஞ்சனாதேவி மகனை அதட்டினாள்.     

தன்னை சுற்றி என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்று வீட்டில் கூற முடியாமல் தவிப்பவன். வேறு எவ்வாறுதான் கேட்பான்?

அன்னையை கண்டுகொள்ளாது “உன்னைத்தான் கேக்குறேன்” வான்முகிலன் அதட்டியதும் பலமாக தலையசைத்து மறுத்த சுபி உள்ளே சென்று விட்டாள்.

காரணமில்லாமல் மகன் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டானே என்று உணர்ந்து “என்னப்பா ஏதாவது பிரச்சினையா?” காஞ்சனாதேவி கலங்கியவாறு வான்முகிலனிடம் வந்து நின்றாள்.

“எந்த பிரச்சினையுமில்லமா. எந்த பிரச்சினையும் வந்துடக் கூடாது என்றுதான் முன்னெச்சரிக்கையாக சுபிக்கிட்ட கேட்டேன். கண்டவங்க கண்டபடி பேசுவாங்க. அதையெல்லாம் போட்டு குழப்பிக்காம ஸ்ரோங்கா நில்லுங்க. நிச்சயதார்த்தத்தில் எல்லாரையும் விட நீங்க தான் அழகா இருக்கணும் புரியுதா?” அன்னையின் கன்னம் கிள்ளி சமாதானப்படுத்தினான்.

ஆதிசேஷனின் இரு பேரன்களோடும் அக்கா பெண்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திடும். அந்த எதிரி நிச்சயதார்த்தத்தை நடாத்த விட்டுடுவானா? அவனை கண்டு பிடிக்கத்தான் முடியுமா என்ற சிந்தனையிலையே நிச்சயதார்த்த நாளும் விடிந்தது. 

அழைத்திருந்த அனைவருமே வருகை தந்திருந்தனர். காலையில் தான் மணமகன் மற்றும் மணமகள் யார்? யாருக்கு யார் ஜோடி என்று பெயர் பலகையையே வைக்கச் சொன்னான் வான்முகிலன்.

நிச்சயதார்த்தமன்று காலை வரை எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். நாம் எதை செய்தாலும் அதற்க்கு எதிராக ஒன்றை செய்ய ஒருவன் காத்திருக்கின்றானே. நிச்சயதார்த்தம் நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்திலையே இருக்கட்டும் என்றிருந்தான். 

ஆதிசேஷனுக்கும் அதுதான் சரியென்று தோன்ற மகன்கள் கேட்டும் மௌனமாகவே இருந்தார். அவர் வீட்டில் அவர் சொல்வது தானே சட்டம்.

“என்ன பாத்துகிட்டு இருக்கிறீங்க பக்ஷன் நடக்குற ஹோட்டலுக்கு கிளம்புங்க” என்ற பின்தான் வீட்டாருக்கு நிச்சயதார்த்தம் நடப்பதே தெரிந்தது.

சென்னையிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பெரிய மண்டபத்தை ஏற்பாடு செய்திருந்தார் ஆதிசேஷன்.

ஆதிசேஷனின் மனைவி தனத்தை வேலையாட்களிடம் ஒப்படைத்து விட்டு இவர்கள் ஹோட்டலுக்கு வந்து மண்டபத்தின் வாயிலில் இருந்த பெயர் பலகையை பார்த்துதான் யாருக்கு, யாரோடு நிச்சயமாகப் போகிறது என்று அறிந்து கொண்டனர்.

ஒருவழியாக பிரச்சினை ஓய்ந்ததே என்று ஆதிசேஷனின் புதல்வர்களான ஆதிசங்கர், ஆதித்யன், ஆதிதேவ் மூவரும் எந்தக் கேள்வியுமே கேட்கவில்லை.

ஆளாளுக்கு ஏதாவதை ஒன்றை பேசும் முன் ஆதித்தும் மாளவிகாவும் காதலிப்பதாகவும் ஆதிரியனுக்கும் சுபலக்ஷ்மிக்கும் நிச்சயதார்த்தம் செய்த பின்னர் அவர்களுக்கு செய்யலாமென்று இருந்ததாகவும் அதற்குள் அவர்கள் அவசரப்பட்டதால் இன்றே அவசர அவசரமாக நிச்சயம் செய்ய வேண்டியிருக்கிறது என்று ஆதிசேஷன் பேசினார்.

“ரெண்டு ஜோடிக்கும் ஒண்ணா பத்திரிக்கை அடிக்க கொடுத்த இடத்துல பேர் மாறிப் போச்சான்னு கேட்காதீங்க. மாளவிகா எங்க வீட்டு பொண்ணாவே மாறிட்டா அவ பேர் தான் அடிக்கடி என் வாயில வருது. நான் தான் பொண்ணு பேர தப்பா கொடுத்துட்டேன். மாடல் பத்திரிக்கைல பேர் சரியா இருந்ததுல யாருமே பகிர்ந்து கொடுத்த பத்திரிக்கையை சரிபார்க்காம விட்டுட்டாங்க.

இப்போ பத்திரிக்கையா முக்கியம்? நாங்க கூப்பிட்ட நீங்க எல்லாரும் வந்திருக்குறீங்க. ஒண்ணுக்கு ரெண்டு ஜோடிக்கு நிச்சயமாகப்போகுது. ரெண்டு ஜோடியையும் ஆசிர்வாதம் பண்ணுங்க. வயிறார சாப்பிடுங்க” கம்பீரமான குரலில் மிரட்டும் தொனியிலையே வளமை போல் பேசினார்.  

அவர் பேசியதை அங்கிருந்தவர்கள் ஏற்றுக் கொண்டது போல் தான் தெரிந்தது. அப்படியே நம்ப மறுத்தாலும் அவரை எதிர்த்து குரல் கொடுப்பார்களா என்ன?

கண்ணுக்குத் தெரியாத எதிரிக்காக உறவினர்களாக வேண்டும் என்று முடிவு செய்தவர்கள் நேரடியாகவே நிச்சயதார்த்த விழாவை ஏற்பாடு செய்திருக்க, சொந்தபந்தத்தில் யாருமே மணப்பெண்ணை பார்த்திருக்கவில்லை.

பூ வைக்கும் சடங்கு, அது, இது என்று சொந்தபந்தங்களில் உள்ள பெண்களை அழைத்து சென்று அவர்கள் மாளவிகாவை பார்த்திருந்தால் எப்படியெல்லாம் பேசியிருப்பார்கள் என்று வான்முகிலன் யோசித்துப் பார்த்து தலையை உலுக்கிக் கொள்ள, மணமக்களை மேடைக்கு அழைத்தார் ஆதிசேஷன்.

நிச்சயதார்த்த சடங்குகள் முடிந்த பின் மணமக்களிடம் மோதிரம் கொடுத்து மாற்றிக்கொள்ள சொன்ன பின்தான் ஆதிரியன் சுபலக்ஷ்மியை நெருங்கி வந்திருந்தான்.

சுபலக்ஷ்மி தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள் என்றதோடு சரி யார் மாப்பிள்ளை, அவன் பெயர் என்ன என்று கூட கேட்கவில்லை. மாளவிகாவின் காணொளி விஷயம் தெரியும் ஆனால் ஆதித்தை தெரியவில்லை. இவ்வளவு நேரமும் தனக்கு பார்த்த மாப்பிள்ளை ஆதித்தா? ஆதிரியனா? என்று குழம்பிய முகபாவனையில் நின்றிருந்தவள் அவனை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.

அவள் முகபாவனையை படித்த ஆதிரியனுக்கு சிரிப்பாக இருந்தது கூடவே அவளை தனியாக சந்தித்த நாளையும் எண்ணிப் பார்த்தான்.

மாப்பிள்ளை கேட்டு வான்முகிலனின் வீடு தேடி சென்ற ஆதிசேஷனை வான்முகிலன் அவமதித்து விட்டான், தன்னுடைய தங்கை ஆதிதியை வேண்டாம் என்று விட்டான் என்றதும் ஆதிரியனுக்கு கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

ஆதிசேஷன் அமைதியாக இருக்கும்படி கூறியும் வான்முகிலனை ஏதாவது செய்ய வேண்டும் என்று வான்முகிலனின் குடும்பத்தை பற்றி விசாரிக்கும்படி மேனேஜர் கதிரவனிடம் கூறி இருக்க, சுபலக்ஷ்மியை ஒரு ரெஸ்டூரண்ட்டில் வைத்து மேனேஜர் கதிரவன் ஆதிரியனுக்கு காட்டியிருந்தான்.

அவளை பார்த்தாலும் அப்பொழுது அமைதியாக அங்கிருந்து கிளம்பி விட்டான் ஆதிரியன்.

வான்முகிலன் பேசியதற்கு குடும்பப் பெண்கள் மீது கைவைக்க வேண்டுமா என்றெண்ணியவன் அதன் பின்னும் சில தடவை சுபலக்ஷ்மியை சில இடங்களில் எதேச்சையாக பார்த்தான். பெரிதாக அவளை கண்டு கொள்ளாது கடந்து சென்று விட்டான்.

ஒருநாள் ஒருவரை ஒரு ஹோட்டல் அறையில் சந்திக்க வேண்டியிருந்தது. ஆதிரியன் உள்ளே நுழைந்து அமர்ந்து அவருக்காக காத்திருக்கையில் சுபலக்ஷ்மி வாஷ்ரூமிலிருந்து வெளியே வந்தாள்.

“யார் நீங்க? நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?” நடுநடுங்கிப் போனாள் சுபி.

“அத நான் கேட்கணும். நான் புக் பண்ண ரூம்ல நீ என்ன பண்ணுற?”

“நீங்க புக் பண்ண ரூமா? இல்லையே இது என் பிரெண்டோட ரூம். அவ கல்யாணத்துக்காக வந்தோம். ஜீன்ஸ் பாண்ட்டுலயா கல்யாணத்துக்கு போக முடியும் சாரி கட்டிக்கலாம் என்று ரூமுக்கு வந்தேன்” என்றாள்.

அவள் சாரியில் இருப்பதை பார்த்தவன் அவள் பொய் சொல்லவில்லை என்று புரிந்து கொண்டு தான் தான் அறை மாறி வந்து விட்டோமோ என்று வெளியேற முனைந்தான். ஆனால் கதவோ வெளியால் பூட்டப்பட்டிருந்தது.

ரிசப்ஷனுக்கு அழைத்து தகவல் சொல்லலாமென்று பார்த்தால் அறையிலிருந்த தொலைபேசி வேலை செய்யவில்லை. அலைபேசியில் தெரிந்தவர்களை அழைக்கலாமென்று பார்த்தால் டவர் சுத்தமாக இல்லை.

நடப்பது தவறாக தோன்ற அறையை பரிசோத்தித்த ஆதிரியனுக்கு கட்டிலுக்கு நேரிதிரே இருந்த பூச்சாடியிலும், கட்டிலுக்கு பக்கவாட்டியில் சுவரில் இருந்த பெயிண்டிங்கிலும் கேமரா பொறிக்கப்பட்டிருப்பதை கண்டெடுத்து உடைத்தெறிந்தான்.

கேமராவை பார்த்ததும் அழ ஆரம்பித்து விட்டாள் சுபி.

“அதான் ஒண்ணுமே நடக்கலையே. எதுக்கு ஸீன் கிரியேட் பண்ணுற?” 

“நான் வீட்டுக்கு போகணும்” குழந்தை போல் மீண்டும் அழுதாள்.

“நான் மட்டும் இங்கேயேவா இருக்கப் போறேன்? நானும் தான் வீட்டுக்குப் போகணும். கொஞ்சம் அமைதியா இரு” அவளை எட்ட நின்றே சமாதானப்படுத்தியவன் கதவை திறக்க முயற்சி செய்தவாறே, யாரை எவ்வாறு தொடர்புகொள்வது என்று யோசித்தான்.

அரைமணி நேரம் கடந்த நிலையில் அறைக்கதவு தானாகவே திறக்கப்பட அங்கே மேனேஜர் கதிரவனோடு ஹோட்டல் ஸ்டாப்ஸ் சிலரும் நின்றிருந்தனர்.

இருவரையும் அதிர்ச்சியாக பார்த்த கதிரவன் எதுவும் கேட்கவில்லை.

“நான் இந்த ரூம்ல இருக்குறது உங்களுக்கு எப்படித் தெரியும்?” ஆதிரியன் சந்தேகமாகக் கதிரவனை விசாரிக்கும் பொழுதே சுபலக்ஷ்மி அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.

“உங்க க்ளைன்ட் ரொம்ப நேரமா உங்களுக்காக வைட் பண்ணிட்டு, உங்க போனுக்கும் கூப்பிட்டு பார்த்து நீங்க ரெஸ்பான்ஸ் பண்ணலைன்னதும் என்ன கூப்பிட்டாரு. உங்க போன் வேல செய்யலனதும் ஹோட்டலுக்கு வந்த உங்களுக்கு என்ன ஆச்சோ என்று சீசீடிவியை செக் பண்ணேன். நீங்க இந்த ரூமுக்கு வரத பார்த்து இங்க வந்தேன்” என்றான் கதிரவன்.

“ரிஷப்ஷன்ல தான் ரூமுக்காண கீய வாங்கினேன். அவங்க மாத்திக் கொடுத்தாங்களா? இல்ல வேற யாராச்சும் மாத்திட்டாங்களா? ரூம்ல கேமரா வேற இருந்தது. கூடவே வான்முகிலன் வீட்டுப் பொண்ணு. நான் ஸ்கெட்ச் போட முன்னதாகவே யாரோ எனக்காக ஸ்கெட்ச் போட்டு கொடுத்திருக்காங்க” பேசியவாறே நடந்தான் ஆதிரியன்.

“என்ன சார் சொல்லுறீங்க?” கதிரவன் புரியாமல் கேட்க

“போன் வேல செய்யாததற்கும் ஏதாவது காரணம் இருக்கும். அதனாலதான் சொல்லுறேன். யாரோ திட்டம் போட்டு செஞ்சிருக்காங்கனு. என்னனு விசாரிங்க” என்றான்.

தரவாக விசாரித்து விட்டு வந்த கதிரவன் “சார் யாரோ நீங்க போன் பேசும் பொழுது கீய மாத்திட்டாங்க. ஆனா மூணு நாளா சீசீடிவி வர்க் ஆகாததுனால ரூம்ல கேமரா வச்சது யார் என்று தெரியாது. போன் வயரை வேற கட் பண்ணியிருக்காங்க. மொபைல் வர்க் ஆகாம இருக்க ஜாமர் வேற வச்சிருக்காங்க சார்” என்றான் கதிரவன்.

“பக்காவா பிளான் பண்ணிருக்காங்க. சரி இது தாத்தாக்கு தெரிய வேணாம்” என்ற ஆதிரியன் அந்த சம்பவத்தையே மறந்துதான் போனான்.

ஆதித், மாளவிகா காணொளி வெளியே வந்ததும் தான்… வான்முகிலன் மீது இருக்கும் கோபத்தில் சுபலக்ஷ்மியிடம் தவறாக நடந்துகொள்ளக் கூடுமென்று தனக்காக வலைவிரித்திருக்கின்றான். சுபலக்ஷ்மி வருவது தெரிந்தே தான் திட்டமிருக்கிறான் அந்த எதிராளி என்று புரிந்துகொண்டான். அவன் தங்களை மிக அருகில் இருந்து கண்காணிப்பதும் தெளிவாக புரிந்தது.  

அன்று கோபப்பட்டு ஏதாவது தவறிழைத்திருந்தால் இவள் மானமும், என் குடும்ப மானமும் சேர்ந்து அம்பலம் ஏறியிருக்கும் என்றெண்ணியவாறே சுபலக்ஷ்மியின் கையை பிடித்து மோதிரத்தை அணிவித்தான் ஆதிரியன்.

சுபலக்ஷ்மிக்கு திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா? என்று கேட்டால் தெரியவில்லை ஆனால் ஏற்கனவே அறிந்திருந்த ஆதிரியன் நல்லவனாகத் தெரிந்தமையால் தயக்கமின்றி அவன் விரலில் மோதிரத்தை அணிவித்தாள்.

இந்தப்பக்கம் ஆதித் “என்னது காதலா? அதுக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. வேலில போற ஓணானை வெட்டிக்குள்ள விட்டுட்டேன்” என்ற முகபாவனையிலையே மாளவிகாவின் விரலில் மோதிரத்தை அணிவித்தான்.

மாளவிகாவுக்கு நடந்தது எல்லாமே கனவாகத்தான் இருந்தது. தனக்கு பார்த்த மாப்பிள்ளை ஆதித் என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு ஆதித்தை சந்தித்தது விதி. அவன் தான் தனது வாழ்க்கையாக இருக்கும் என்று எண்ணினாள். 

மாப்பிள்ளை மாறி போனதால் தான் காணொளி வெளியே வந்து இருவரையும் ஒன்றாக சேர்த்து வைத்து விட்டது என்று உறுதியாக நம்பினாள்.

நிலஞ்சனாவும் விழாவுக்கு வந்திருந்தாள். வான்முகிலனின் குடும்பத்தாரை சந்திக்கவோ, தன்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ளவோ முயற்சி செய்யாமல் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்திருந்தாள்.

“அண்ணனுக்கு தங்கச்சிய பேசிட்டு, தம்பிக்கு அக்காவ பேசி இருக்கிறீங்க? கட்டிக்கிட்டு போன இடத்துல அக்காவ தங்கச்சி அதிகாரம் பண்ண மாட்டாளா?” சாருமதியிடம் ஒரு பெண் விசாரித்தாள். 

“காதல் திருமணமில்ல. மனசு பொருத்தம் தானே முக்கியம்” சாருமதி எதுவும் பேசும் முன் சந்திரமதி பேசினாள்.

“எது எப்படியோ ஆதிரியனுக்கு தாத்தா சொத்து போக, அவன் தனியா சம்பாதிக்கிறதும் இருக்கு. ஆனா ஆதித் அப்படி இல்லனு சொல்லுறாங்க. பொண்ணு வாழ்க்க பார்த்து” போறபோக்கில் சாருமதியின் நெஞ்சில் தீயை வைத்து விட்டு சென்றாள் அந்த பெண்.

சாருமதி எதுவும் பேசவுமில்லை. சந்திரமதி அக்காவை சமாதானப்படுத்த முயலவுமில்லை.

“யாரோ எதுவோ பேசுகிறார்கள்” என்று இருவரும் சாப்பிட சென்றார்கள்.

அவர்கள் பேசியதை காதில் வாங்கியவாறே ராமிடம் கூறிக் கொண்டு அதே ஹோட்டலில் வான்முகிலனுக்காக ஏற்பாடு செய்திருந்த அறைக்கு சென்றாள் நிலஞ்சனா.

மலர்விழியும் அழகு பதுமை போல் விழாவில் கலந்து கொண்டிருந்தாள். சொந்த குடும்பத்தின் விழா என்றாலும் யாருமே அவளை கண்டு கொள்ளவில்லை. புகைப்படம் எடுக்கக் கூட அழைக்கவில்லை.

குடும்பமாக அனைவரும் நின்று புகைப்படம் எடுக்கும் பொழுது ஆதிசேஷன் மலர்விழியை அழைக்க “நான் எதுக்கு சார் வேணாமே” என்று மறுத்தாள்.

“எனக்கு ஒரு பொண்ணு இருந்தா உன்ன போலத்தான் இருப்பா. நீ வேற பார்க்க என் அம்மா சாயல்லயே இருக்க” என்று அவளை புகைப்படத்தில் இணைத்துக் கொண்டார்.

அவர் பெற்ற மூன்று புதல்வர்களுக்கு அவரின் செயல் பிடிக்காவிட்டாலும் வந்திருக்கும் சொந்தபந்தங்கள் முன்னிலையில் காட்ட முடியாமல் புகைப்படத்துக்காக புன்னகைக்கலாயினர்.

மலர்விழி யார் என்று தெரியாதவர்களும் அவளை பற்றி விசாரிக்க,  மலர்விழி ஆதிசேஷன் அன்னையின் சாயலில் இருக்கிறாளென்றும் அதனால் ஆதிசேஷனுக்கு அவள் மீது பாசம் இருக்கிறது போலும் என்றும் பேச, அதுதான் அவருக்கும் வேண்டியிருந்தது. மலர்விழியின் மீது இருக்கும் பாசத்தை வெளிப்படையாக காட்டவும் முடியாது. அவள் தன்னுடைய மகளென்று யாருக்கும் அறிமுகம் செய்து வைக்கவும் முடியாது. சந்தர்ப்பத்தை இவ்வாறுதான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்.

எந்த பிரச்சினையுமில்லாமல் நிச்சயதார்த்தம் நடக்கிறதே என்று எண்ணினால் ஆதிதி வான்முகிலனிடம் வந்து “என்ன ஹீரோ எப்படி இருக்க? என்ன வேணாம்னு சொன்ன நீ எப்படி இருப்ப? விளங்காமத்தான் போவ. ஆமா உன் பொண்டாட்டி செத்து போய்ட்டாளாமே உண்மையா? அச்சோ அல்பாயுசுல போவான்னு தெரிஞ்சா நான் கல்யாணம் பண்ணாம உனக்காக காத்துகிட்டு இருந்திருப்பேன். இப்போ கூட நீ ஓகே னு சொன்னா என் தலையாட்டி பொம்மை புருஷன டிவோர்ஸ் பண்ணிட்டு வரேன்” என்னென்னமோ பேசினாள்.

கடுப்பாக இருந்தாலும் பல்லைக் கடித்து பொறுமை காத்தவன் “என்ன குடிச்சிருக்கியா? மூடிட்டு போ” புன்னகைத்தவாறே அவளை துரத்தினான்

“உனக்கென்ன பொண்டாட்டி செத்தாலும் இன்னொரு கல்யாணம் பண்ணிப்ப. அழுது சீன போடுறவனா நீ? ஆமா பொம்பள சுகத்துக்கு பொண்டாட்டிதான் தேவையா? எவளா இருந்தா என்ன? நீ காச விசினாலே வருவாளுங்க”

“ஏய் ஆதிசேஷன் பேத்தி என்று கூட பார்க்க மாட்டேன். அறஞ்சி பல்ல ஒடச்சிடுவேன். ஓடிப்போய்டு” எவ்வளவு நேரம் கோபத்தை அடக்குவான் முகம் சிவக்க கோபத்தை அடக்கியவாறு சீறினான்.

ஆதிதி வான்முகிலனை நெருங்குவதை தூர இருந்து பார்த்து பதறிய அவள் கணவன் ஆகாஷ் ஓடி வந்து அவளை இழுத்து சென்றான். அவனோடு சண்டை போட்டவாறே இவள் அவன் இழுத்த இழுப்புக்கு சென்றாள்.

வெளியே எங்கு வான்முகிலனை பார்த்தாலும் ஆதிதி வந்து பேசுவதும் அவள் கணவன் அவளை இழுத்து செல்வதும் வழமையான ஒன்றுதான்.      

ஆதிதி பேசியதில் பாக்யஸ்ரீயின் ஞாபகம் சட்டென்று மனதை ஆட்கொள்ள, அதை தொடர்ந்து அவள் இழப்பு வான்முகிலனின் நெஞ்சை இறுக்க ஆரம்பித்து அந்த இடத்திலையே இருக்க பிடிக்காமல் திண்டாத்தினான்.

ஒருவழியாக விழா முடிய, ஆதிசேஷனின் குடும்பத்தாரிடம் விடைபெற்று, வீட்டாரை வழியனுப்பி வைத்து விட்டு வான்முகிலனும் ஹோட்டலறைக்கு வந்து சேர்ந்தான்.

நடந்த ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தவாறு உள்ளே வந்தவன் அரை இருளில் நின்றிருந்த பெண்ணை பார்த்து அவளருகில் ஓடியிருந்தான்.

“ஸ்ரீ” என்றவாறே அவளை அவன் புறம் திருப்பி இறுக அணைத்துக் கொண்டு அவள் விலக விடாது மேலும் தன்னுள் இறுக்கிக் கொண்டான்.

அதிர்ந்த நிலஞ்சனா அவனை விட்டு விலக முயல அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன் அவள் இதழ் நோக்கி குனிய நிலஞ்சனா வான்முகிலனை தள்ளி விட்டாள்.

“ஸ்ரீ…” என்ன பிரச்சினை என்பதை போல் நிலஞ்சனாவை பார்த்தவன் அவள் முறைக்கவும் “நீ…” நிலஞ்சனாவை அடையாளம் கண்டு கொண்டு அதிர்ந்து நின்றான்.  

“நான் நிலஞ்சனா. உங்க வைப் ஸ்ரீ இல்ல” வான்முகிலன் மீது கோபம் பொங்க அவள் குரலும் உயர்ந்தது.  

“இல்ல ஸ்ரீ இங்க தான் நின்னுகிட்டு இருந்தா” ஒருகணம் பாக்யஸ்ரீ இறந்து விட்டாள் என்பதையே மறந்து பிதற்றினான் வான்முகிலன்.

நிலஞ்சனா அறைக்குள் வரும் பொழுது அறை வெளிச்சமாகத்தான் இருந்தது. இருட்ட ஆரம்பிக்கவே திரைசீலைகளை பூட்டியவள் மின்குமிழ்களை ஏரியாவிடலாமென்று நினைக்கையில் தான் வான்முகிலன் அவளை இழுத்து அணைத்திருந்தான்.    

வான்முகிலனின் நிலைமை புரிய மேசை மீதிருந்த தண்ணீர் குவளையை கையில் எடுத்து அவன் முகத்தில் அடித்தவள் “உங்க ஸ்ரீ செத்துட்டாங்க. நான் நிலஞ்சனா” என்றாள்.

அவனால் நம்ப முடியவில்லை. அவன் பார்த்தது பொய்யாக இருக்கலாம். தொட்டது, உணர்ந்தது எல்லாம் பொய்யா? முகத்தில் வழியும் தண்ணீரை துடைத்தவன் “சாரி இனிமேல் இப்படி நடக்காது” என்று கூற,

அதற்கு எந்த பதிலும் கூறாமல், கபோடிலிருந்து முகம் துடைக்கும் துண்டை எடுத்துக் கொடுத்தவள் “எதுக்காக என்ன இங்க வைட் பண்ண சொன்னீங்க? என்ன பேசணும்” என்றவாறே மின் குமிழ்களை எரிய விட்டு சோபாவில் சென்று அமர்ந்தாள். அவள் கோபம் கூட மறைந்திருந்தது.

தான் தான் இங்கு வரச் சொன்னோமே, வந்தவளிடம் இப்படி தவறாக நடந்து கொண்டு விட்டோமே என்று நொந்து கொண்டவன் அவள் எதிரே சென்று அமர்ந்து “பங்க்ஷன்ல சந்தேகப்படும்படியான யாராவது பார்த்தீங்களா?” என்று கேட்டான்.

“இல்ல. யாரையும் பார்க்கல. அழைப்பிதழோடு வந்தவர்களுக்கு மட்டும் தானே உள்ளே வர அனுமதியிருந்தது. அதனால் அவன் உள்ள வராமலும் இருந்திருப்பான்”

“போட்டோகிராபர் கூட தெரிஞ்ச இடத்துலதான் புக் பண்ணோம். அதனால எந்த அசம்பாவிதமும் நடக்கல” நடந்த அனைத்தையும் கோர்வையாக நினைத்துப்பும் பார்த்தவாறே தான் பேசினான் வான்முகிலன்.

“அவனோட அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீங்க?” குடும்பப் பெண்களின் மானத்தை பற்றிக் கூட சிந்திக்காதவன் எது வேண்டுமானாலும் செய்யக் கூடும். தான் சிந்திக்கும் விதமும், வான்முகிலன் சிந்திக்கும் விதமும் வேறுபடுவதால் கேட்டாள்.  

“அது தெரிஞ்சா அவனை ஈஸியா வீழ்த்தலாம். ஏன் அவனை கண்டும் பிடிச்சிருக்கலாம்” என்றான் வான்முகிலன். பாக்யஸ்ரீயின் தாக்கத்தில் இருந்தவனுக்கு ஒன்றும் தோணவில்லை.

“அதுசரி ராமும், உங்க பிரென்ட் பவானியும் லவ் பண்ணுறதாக சொன்னீங்களே. பவானி உங்ககிட்ட சொன்னாங்களா? இல்ல ராம் சொன்னானா? இல்ல நீங்களே கண்டு பிடிச்சீங்களா?”

அன்று பேச்சு திசை மாறியதால் இந்த விஷயத்தை மறந்து போய் இருக்க, இதை பற்றி பேசினால் ஏதாவது துப்பு கிடைக்குமா என்று தான் கேட்டான்.

“உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நீ சென்னை வந்தா சொல்லுறேன் என்று பவானி சொன்னா. அது அவ லவ் மேட்டரா கூட இருக்கலாம்.

பவானி காணாமல் போய் ரெண்டாவது நாளே ராம் போலீஸ் கம்பளைண்ட் கொடுத்திருக்குறாரு. சாதாரண ஸ்டாப் காணாம போனா எக்ஷன் எடுக்குறதுக்கும், மனசுக்கு நெருக்கமானவங்க காணாம போனா எக்ஷன் எடுக்குறதுக்கும் டிஃபரென்ட்ஸ் இருக்கு. ராமோட பதட்டம், அக்கறை, ப்ளஸ் நான் ஸ்டெப்ஸ் எடுக்க முன்னாடியே அவர் அங்க நிக்கிறாரு. இதெல்லாம் வச்சுதான் கண்போர்ம் பண்ணேன்” என்றாள் நிலஞ்சனா.  

அவள் கூறிய பின்தான் ராம் யாருடனோ அதிகநேரம் அலைபேசியில் உரையாடுவது ஞாபகத்தில் வந்தது. அவனுடைய சொந்தவிஷயத்தில் தலையிட வேண்டாமென்று கண்டு கொள்ளாமல் இருந்து விட்டான்.

அது கூட பரவாயில்லை. பவானி காணாமல் போய் விட்டாள். அவளுக்கு என்ன ஆச்சென்றே தெரியவில்லை. போலீசாரிடம் கண்டு பிடிக்கும்படி கூறியதோடு கடமை முடிந்து விட்டது என்று இருந்து விட்டேன். கிட்டத்தட்ட தன்னுடைய நிலைமைதான் ராமுக்கும். தன்னை பற்றி சிந்தித்து செயல்படும் அவன் மனநிலையை புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டேன் என்று நொந்துகொண்டான்.      

  

உடனே ராமை அலைபேசியில் அழைக்க, அவனே கதவை திறந்து கொண்டு அறைக்குள் நுளைந்தான்.

“ராம் ஏன்டா சொல்லாம விட்ட? உன்ன என் அண்ணன் போல தானே பார்த்தேன்” கடிந்தவாறே அவனை அணைத்துக் கொண்ட வான்முகிலன் விசாரிக்க, அவனின் செயலில் நெகிழ்ந்து போனான் ராம்.

நிலஞ்சனாவின் பார்வையிலும் வான்முகிலன் வேறு மாதிரி தெரிந்தான். 

Advertisement