Advertisement

அத்தியாயம் 6

“சே சே எல்லாம் போச்சு. அந்த முகிலன் ஆதாரத்தோட அவன் பொருள் தரமானது என்று நிரூபிச்சிட்டான். வீணா அவனை சீண்டிட்டானே இந்த ஆதிரியன். அவன் கூட தொழில் பண்ணுறதோட சரி. வேற எந்த கொடுக்கல் வாங்கலும் வச்சிக்கக் கூடாது. ஆள் ஒரு மாதிரி” ஆதித்யன் அண்ணன் மகனை திட்டித் தீர்க்கலானான்.

“எதுக்கு இப்போ சும்மா என்ன திட்டுறீங்க? அந்த பைலட் போட்ட டுவிட்டும், அவன் போலீசுக்கும், மீடியாக்கும் கொடுத்த வாக்குமூலமும்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்” ஆதிரியன் கொதித்தான்.

அமைதியாக அமர்ந்திருந்த ஆதிசேஷன் “நடந்த விபத்த வச்சி யாரோ விளையாடனுமென்று நினைக்கிறாங்க. எங்களுக்கும் அந்த வான்முகிலனுக்கும் ஆகாது என்று தெரிஞ்சே எங்க ரெண்டு பேருக்கிடையிலையும் பிரச்சினைய உண்டு பண்ண அந்த பைலட்ட பகடை காயாய் உபயோகிச்சிருக்காங்க. இது தெரியாம நாம வான்முகிலன சீண்டிட்டோம். அவன் அமைதியா இருக்க மாட்டான். மலர்விழி வான்முகிலனுக்கு போன் போட்டு அவனை தனியா சந்திச்சு பேசணும் என்று ஒரு எபொய்மன்ட் கேளு. இடத்தை அவனையே சூஸ் பண்ண சொல்லு. அப்போதான் அவன் என்ன நம்புவான்” என்றார் ஆதிசேஷன்.

வான்முகிலனின் பொருட்கள் தரமானது என்றால் நடந்தது விபத்தாகாதே. யாரோ இயற்கை அனார்த்தத்தை விபத்தாக மாற்ற முயற்சி செய்து தனக்கும், வான்முகிலனுக்குமிடையில் பிரச்சினையை உண்டு பண்ண முயல்வதாக உறுதியாக நம்பினார் ஆதிசேஷன். 

“சார் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. பிஸ்னஸ்னா நம்பிக்கை இருக்கணும். மிஸ்டர் வான்முகிலனுக்கு உங்க மேல நம்பிக்கையே இல்லனு சொல்லுறீங்க. நீங்க எதுக்கு அவர் கூட பிஸ்னஸ் பண்ணனும்” தனது சந்தேகத்தை தந்தையிடம் மகளாக மலர்விழி கேட்டாலும், உதவியாளர் என்ற தொனியில் தான் கேட்டிருந்தாள்.

“ஏய் நீ செக்கடரி தானே. சொன்ன வேலைய மட்டும் செய். கேள்வி கேக்குற வேல வச்சிக்காதே. போ…” ஆதித்யன் கடுப்பின் உச்சத்தில் கத்தினான்.

அதை பார்த்து மலர்விழி கொஞ்சம் கூட அஞ்சாமல் நிமிர்வாகவே நின்றிருந்தாள்.

இந்த பேச்செல்லாம் எனக்கு பழகிருச்சு என்று நின்றிருந்தாளா? அல்லது நீ என்ன சொல்லுறது, நான் என்ன கேக்குறது என்று நின்றிருந்தாளா தெரியவில்லை.

“டேய் உலகத்துக்குத்தான் அவ என்னோட பி.ஏ. எனக்கு அவ பொண்ணு. குடும்ப விஷயங்களை அவ தெரிஞ்சிக்கிறதுல எந்த தப்புமில்ல” என்று மகனை முறைத்த ஆதிசேஷன் மலர்விழியை பார்த்து “அது ஒண்ணுமில்லமா. நம்ம ஆதித்திக்கு நான் முதல்ல பார்த்த மாப்புளத்தான் வான்முகிலன். நம்ம குடும்ப அந்தஸ்துக்கும், ஆதிதிக்கும் ஏத்த பையனா வான்முகிலன் இருந்தான்.

பொண்ண பெத்து வச்சிருக்கோம் என்று கொஞ்சம் கூட யோசிக்காம அவன் வீட்டு படியேறி நானே போய் மாப்புள கேட்டேன்.

பிஸ்னன்ஸ் விஷயம் மட்டும் பேசலாம். அதைத்தாண்டி நமக்குள்ள எந்த உறவும் வேண்டாம் என்று வீட்டுக்கு போன என்ன உக்கார கூட சொல்லாம வெளிய அனுப்பிட்டான்”

“அப்போ மிஸ்டர் வான்முகிலனுக்கு உங்க மேல எதோ கோபம் இருக்குனு சொல்ல வாரீங்களா? அப்படிப்பட்டவரோட நீங்க இன்னும் பிஸ்னஸ் பண்ணுறது ஆச்சரியமாகத்தான் இருக்கு” யோசனையாக கேட்டாள் மலர்விழி.

“இப்போ இது ரொம்ப முக்கியமா? முதல்ல இருக்குற பிரச்சினைய சமாளிப்போம்” என்றான் ஆதிரியன். குடும்பத்தில் இருக்கும் குறைகளை மலர்விழி அறிந்துகொள்வதில் ஆதிரியனுக்கு சுத்தமாக விருப்பமில்லை. இந்த பேச்சு வேண்டாமே என்று தாத்தாவிடம் சொல்ல முடியாமல் பிரச்சினையை பற்றி மட்டும் பேசலாமா? என்று கேட்டான். 

தான் உண்மையை தெரிந்துகொள்ளவது ஆதிரியனுக்கு விருப்பமில்லை என்று மலர்விழிக்கு புரிந்து போக “என்னால என்ன உதவி செய்ய முடியும் என்று பார்க்கத்தான் கேட்குறேன்” என்றவள் ஆதிசேஷனை ஏறிட்டாள்.

“நானும் ஆரம்பத்துல அப்படித்தான் நினச்சேன். சொல்ல போனா வான்முகிலன் மேல வன்மமே வந்துருச்சு. ஆனா அவன் அம்மா என்ன வந்து பார்த்து பேசினாங்க. அப்பொறம் தான் ஏன் அவன் அப்படி பேசி என்ன அனுப்பினான்னு புரிஞ்சது. மாப்புள கேட்டு போனேன். ஆனா எங்க பொண்ண ஒழுங்கா வளர்கல”

“என்ன சொல்லுறீங்க?” புரியாமல் புருவங்களை உயர்த்தினாள் மலர்விழி.

“பொண்ணா பொறந்தாலும் சுதந்திரமா இருக்கணும், நல்லா படிக்கணும் என்று ஆதித்திய பாரினிக்கு அனுப்பி படிக்க வச்சேன். ஆனா அவ அந்த கலாச்சாரத்தையும், குடி பழக்கத்தையும் நல்லாவே கத்துக்கிட்டு வந்துட்டா. இது தெரியாம அவளுக்கு நான் வான்முகிலன பேசலாமென்று வீட்டுல பேசி முடிவெடுத்துட்டேன்.

அத தெரிஞ்சிகிட்ட அவ வான்முகிலன் கிட்டயே போய் பேசியிருக்கா. அதுவும் போதைல” அன்று என்ன நடந்தது என்று காஞ்சனாதேவி தன்னிடம் கூறியதை தான் ஆதிசேஷன் மலர்விழியிடம் கூறினார்.

வான்முகிலன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்னையிலுள்ள பிரபல ஐந்து நட்ச்சத்திர ஹோட்டலுக்கு சென்றிருந்தான்.

உணவுண்டு பின் சுபியும், சஷிகாந்த்தும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, வான்முகிலன் அன்னையோடு அமர்ந்து வேடிக்கை பார்த்திருந்தான்.

உணவகத்தை தாண்டி தான் ஹோட்டலில் உள்ள பாருக்கு செல்ல வேண்டும். பாரிலிருந்து வெளியே வந்த ஆதிதி வான்முகிலனை பார்த்து விட்டு நேராக அவனிடம் வந்து நின்றான்.

“ஹேய் நான் இங்க இருக்கேன்னு தெரிஞ்சிதான் நீ இங்க வந்தியா? அப்போ நீ என்ன பாலோ பண்ணுற” என்று ஆதிதி சத்தமாக சிரித்தாள்.

தூக்கி கொண்டையிட்ட முகத்துக்கு பொருத்தமே இல்லாத கழுத்து வரை தொங்கும் பெரிய காதணிகளை அணிந்திருந்தது மட்டுமல்லாது, குளித்து விட்டு துண்டை சுற்றிக் கொண்டு வந்தது போல் ஒரு ஆடை. அதில் பொருத்தியிருந்த ஜிகினா கற்கள் கண்ணை பறித்ததோடு குதிகால் காலணியும் ஆடைக்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருந்தது. ஆடைக்கு மட்டுமல்ல, அவள் உயரத்துக்கும் அது பொருந்தவில்லை.

போதாததற்கு அவள் பேசும் பொழுது வீசிய மதுவின் வாடை வான்முகிலனை மட்டுமன்றி குடும்பத்தாரின் முகங்களையும் சுளிக்க வைத்தது.

“யார் இந்த ஒட்டகச்சிவிங்கி” சாருமதி சந்த்ரமதியின் காதை கடித்தாள்.

“என்ன ஹீரோ நீ அம்மா கொண்டா… அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி வச்சுக்கணும் கல்யாணத்துக்கு பிறகு நீ என் கால சுத்தின நாய்க்குட்டியா தான் இருக்கணும் புரியுதா” போதையில் இருந்ததால் உளறுகின்றாளா அல்லது அவள் மனதில் இருந்ததை வெளிப்படையாக கூறினாளா தெரியவில்லை.

“யாரப்பா இந்த பொண்ணு என்ன பேசிகிட்டு இருக்கா?” அசௌகரியமாக உணர்ந்த காஞ்சனாதேவி மகனிடம் கேட்டாள்.

வான்முகிலனுக்கு ஆதிதி யார் என்று தெரியவில்லை. ஆதிசேஷன் வீட்டில் பேசி வீட்டாருக்கு வான்முகிலனின் புகைப்படத்தை காட்டியிருந்தார். புகைப்படத்தை பார்த்து வான்முகிலனை அறிந்து கொண்ட ஆதிதி ஹோட்டலில் பார்த்ததும் தான் திருமணம் செய்ய போகிறவன் என்று தான் பேசினாள்.

ஆதிசேஷன் வீட்டில் பேசியதும் வான்முகிலனுக்கு தெரியாது. ஆதிதி யார் என்றும் தெரியாதே.

“எக்ஸ்கியூஸ் மீ. நீங்க யார் என்று எனக்கு தெரியாது. நான் என் பாமிலியோட வந்திருக்கேன். எங்க ப்ரைவஸில இடைஞ்சல் பண்ணாம இங்க இருந்து கிளம்பினீங்கனா நல்லது” கோபத்தை அடக்கியவாறு பொறுமையாக ஆதிதியை அங்கிருந்து அனுப்ப முயன்றான்.

போதையிலிருந்தவளுக்கு வான்முகிலன் சொல்லவிளைவது புரியுமா?

காஞ்சனாதேவியை பார்த்து “ஏய் கிழவி பையன பெத்துட்டோம் என்ற திமிறுல ஆடாத. உன் பையன் எனக்கு தாலி மட்டும் தான் கட்டுவான். அவனை அடக்கி ஆளப்போறது நான்தான். உன் வீட்டுக்கெல்லாம் வந்து அடக்க ஒடுக்கமா இருப்பேன்னு கனவு காணாத. உன் பையன் என் வீட்டுல பெட்டிப்பாம்பாதான் இருக்கணும். நான் ஆதிசேஷன் பேத்திடி” குளறியவாறே வான்முகிலனின் மேல் சாய, அவன் ஒதுங்கிக் கொண்டான்.

சுவரில் சாய்ந்து உளரிக் கொண்டிருந்தவளை அவளது ஓட்டுநர் வந்து அழைத்து சென்ற பின்னும், ஆதிதியின் பேச்சின் தாக்கம் காஞ்சனாதேவியியை அசைத்திருந்தது.

“அப்பா முகிலா வீட்டுக்கு கிளம்பலாம். மனசே ஒரு மாதிரியா இருக்கு” என்று அனைவரும் வீட்டுக்கு கிளம்பி வந்தாலும் காஞ்சனாதேவி யோசனையாகவே இருந்தாள்.

“பொண்ணா அது பிசாசு. அவளை மட்டும் தம்பி கட்டிக்கிட்டு வந்தான் வீடு சுடுகாடாகிடும்”

“நெருப்பில்லாம புகையுமா?”

“ஆதிசேஷன் பேத்தி. பெரிய கொம்பு பணத்துக்காகவே தம்பி அவள கட்டிக்குவான் போல. அம்மா உனக்கு அடுப்பங்கரைதான். சோறாவது போடுவாளோ என்னவோ. நல்லா யோசிச்சுக்க, என் பொண்ண கட்டி வச்சா நீயும் நல்லா இருப்ப, நானும் நல்லா இருப்பேன். தம்பியும் நல்லா இருப்பான்” கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சாருமதி வேறு பேசியே பீதியை கிளம்பினாள்.

“என்னம்மா இப்படி யோசிக்கிறீங்க? இன்னக்கி ரொம்ப நேரம் சாமிய வேண்டிகிட்டீங்க போல” வான்முகிலன் அன்னையை வம்பிழுத்தான்.

“முகிலா உனக்கு பிஸினஸ்ல எந்த பிரச்சினையும் இல்லையே. பிஸினஸ்ல பிரச்சினை என்று நீ ஒன்னும் அந்த பொண்ண கல்யாணம் பண்ண முடிவெடுக்களையே” குடும்பத்துக்காக, தொழிலுக்காக என்று எடுக்கும் ஒரு சில தவறான முடிவால் எங்கே மகனின் வாழ்க்கையே பறிபோய் விடுமோ என்று அஞ்சினாள் காஞ்சனாதேவி.

புன்னகைத்த வான்முகிலன் “நம்ம தொழில்ல எந்த பிரச்சினையும் இல்லமா. அப்பா இறந்தப்போ காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ எவ்வளவு பிரச்சினைகள் இருந்தது. அப்போவே தனியா சமாளிச்சேனே. இப்போ சமாளிக்க மாட்டேனா. நீங்க பயப்படுற மாதிரி ஒண்ணுமில்ல. சரி நான் உங்களுக்கு வாக்கு கொடுக்குறேன். நான் நீங்க பாக்குற பொண்ணைதான் கல்யாணம் பண்ணிப்பேன் சரியா” அன்னைக்கு வாக்கு கொடுத்தான்.

அடுத்த நாள் காலையில் தான் ஆதிசேஷன் வீடு தேடி வந்திருந்தார். அவர் பேச ஆரம்பித்ததும், கடுமையாக பேசி அவரை வெளியே அனுப்பியிருந்தான் வான்முகிலன்.

ஆனாலும் அன்னையான காஞ்சனாதேவிக்கு மனம் கேட்கவில்லை. ஆதிசேஷன் சமுகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர். மகனை நிம்மதியாக தொழில் பார்க்க விடாமல் செய்து விடுவாரோ என்றஞ்சி தான் அவரை சென்று சந்தித்து ஆதிதி ஹோட்டலில் வந்து பேசியது, நடந்து கொண்ட முறை என்று எல்லாவற்றையும் கூறி தங்களுக்கு இந்த திருமணத்தில் ஏன் விருப்பமில்லை என்று தெளிவாக கூறிச் சென்றிருந்தாள்.

“அப்போ மிஸ்டர் வான்முகிலனுக்கு உங்க மேல தனிப்பட்ட பகை எதுவுமில்லை” புன்னகைத்தாள் மலர்விழி.

“வான்முகிலனோட அம்மா பேசிட்டு போன பிறகு எனக்கும் வான்முகிலன் மேல இருந்த கோபம் போச்சு. அவன் கல்யாணத்துக்கு போன பிறகுதான் அந்தம்மா எப்படிப்பட்ட மருமகளை எதிர்பார்த்தங்க என்று புரிஞ்சது. ஆதிதி அந்த குடும்பத்துக்கு ஏத்த மருமகள் கிடையாது.

வேற வழியில்லாம ஆதிதிக்கு ஏத்தது போல, அவளை புரிஞ்சிக்கக் கூடிய ஒரு பையன பார்த்தேன். ஆகாஷ் கிடைச்சான். உடனே கட்டி வச்சேன்” என்றார் ஆதிசேஷன்.

என்னமோ ஆகாஷ் ஆதித்திக்காகவே பிறந்தவன் என்றும்,  ஆகாஷும் ஆதிதியை போல் என்று தான் கூறினார். ஆனால் உண்மையில் தந்தைக்கு பலகோடி சொத்திருந்தும் அதை சரிவர நிர்வாகம் செய்யத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்த ஆகாஷை ஆதிதிக்கு திருமணம் செய்து வைத்து அவன் சொத்துக்களை அபகரித்து அவனை ஆதிதியின் அடிமையாக்கியது மட்டுமல்லாது ஆதிசேஷன் தன்னுடைய அடிமையாகவும் வைத்துக் கொண்டிருக்கின்றார்.

“உங்களுக்கும் மிஸ்டர் வான்முகிலனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லனா. மீட்டிங்க ஏற்பாடு பண்ணிடலாம். அவரால உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. இப்போதான் எனக்கு நிம்மதியாக இருக்கு” என்று மகளாக கூறி இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்ய சென்றாள்.

தந்தையின் பாதுகாப்பை கருதிதான் இவள் இத்தனையையும் கேட்டாளா? என்று ஆதித்யன் செல்லும் மலர்விழியை கொஞ்சம் ஆச்சரியமாக பார்த்தாலும் அவளை தங்கையாக ஏற்றுக்கொள்ள மனம் முரண்டவே அமைதியாக அமர்ந்திருந்தான்.

“தாத்தா மீட்டிங்கு நீங்க மட்டுமா போகப்போறீங்க?” தனியாக செல்ல வேண்டாம் என்று ஆதிரியன் எச்சரித்தான்.

“நான் என் பொண்ணு கூடத்தான் போறேன்” என்று ஆதிசேஷன் கூற,

“கூட நானும் வரேன். நீங்க ரெண்டு பேரும் என்ன பேசினாலும் அதுக்கு சாட்ச்சியா ஒருத்தர் இருக்குறது நல்லது” என்ற ஆதிரியன் வலுக்கட்டாயமாக ஆதிசேஷனோடு கிளம்பினான்.

ஆதிசேஷன், வான்முகிலன் சந்திப்பு ஒன்றும் இரகசியமான சந்திப்பு கிடையாது. ஆனாலும் எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது என்று இருவரும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் சந்தித்துக் கொண்டனர்.

ஆதிசேஷன் மலர்விழி மற்றும் ஆதிரியனோடு வரும் பொழுது வான்முகிலன் அறையிலிருந்த சோபாவில் அமர்ந்திருக்க, ராம் அவன் அருகில் நின்றிருந்தான்.

ஆதிசேஷனை பார்த்ததும் எழுந்து வரவேற்றவன் அமரும்படி சைகை செய்து, ஆதிரியனுக்கு ஒரு புன்னகையை மட்டும் சிந்தினான்.

ஆனால் மலர்விழியை பார்த்து “எப்படி இருக்க மலர்? சார் கிட்ட ஜாப் எல்லாம் எப்படி போய் கிட்டு இருக்கு? சம்பளம் எல்லாம் ஒழுங்கா கொடுக்குறாரா?” இவன் சினேகமாக கேட்க,

இவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்களா? என்று ஆதிசேஷன் யோசனையாக பார்த்தார்.

“வான்முகிலன தெரிஞ்சிக்கிட்டு எதுக்கு அந்த கேள்வி கேட்டா? தாத்தா மேல அக்கறை இருக்குறது போல நடிக்கிறாளா?” மலர்விழியை சந்தேகமாக பார்த்தான் ஆதிரியன்.

ஆனால் மலர்விழி வான்முகிலன் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் “மீட்டிங்கு நேரம் ஆச்சு மிஸ்டர் வான்முகிலன்” என்றாள்.

மலர்விழியின் அந்த பதில் ஆதிஷேனை ஒருவாறு யோசிக்க வைத்தது என்றால், ஆதிரியனை வேறு மாதிரி யோசிக்க வைத்தது.

வேலை செய்யும் நேரத்தில் சொந்த விஷயங்களை பேசுவதையோ, தெரிந்தவர்களோடு அரட்டை அடிப்பது கூடாது என்பது ஆதி குரூப்பின் சட்டம். ஆதலால் மலர்விழி அவ்வாறு பதில் கூறியிருப்பாள் என்று ஆதிசேஷன் எண்ணினார். 

மலர்விழியை சந்தேக்கண் கொண்டு சதா பார்க்கும் ஆதிரியன் அவ்வாறு நினைக்கவில்லை. வான்முகிலனை தவிர்க்கத்தான் மலர்விழி அவ்வாறான பதிலை கூறினாள் என்றுதான் எண்ணினான்.

அதற்கு காரணம் வான்முகிலனை மலர்விழிக்கு ஏற்கனவே தெரிந்திருந்தமையால் தான் வான்முகிலன் பேசினான். ஆனால் அவள் முகத்தில் கிஞ்சத்துக்கும் புன்னகையில்லை.

“அவர்களுக்கிடையில் நல்ல முறையில் உறவு இல்லையென்றால் வான்முகிலனும் மலர்விழியோடு பேசியிருக்க மாட்டானே.

ஒருவேளை மலர்விழிக்கு வான்முகிலன் மீது ஏதாவது கோபம் இருக்குமோ? அப்படி இருந்தாலும் அவளுக்கு வான்முகிலனை தெரியவே தெரியாது என்பதை போல் எதற்காக தாத்தாவிடம் கேட்க வேண்டும்” என்ற சிந்தனையில் இருந்தான் ஆதிரியன்.

மலர்விழி “மிஸ்டர்” என்றதில் பழைய விஷயங்களை பேசுவது அவளுக்கு இஷ்டமில்லை என்று புரிய புருவம் உயர்த்தி உதட்டை சுளித்த வான்முகிலன் ஆதிசேஷனின் எதிரே அமர்ந்துகொள்ள, அவன் அருகில் வந்து நிலஞ்சனா அமர்ந்து கொண்டாள்.

இவர்கள் வரும் பொழுது நிலஞ்சனா வாஷ்ரூமில் இருந்தாள். சட்டென்று ஒரு பெண் வந்து அமர்ந்ததும் ஆதிசேஷனும் ஆதிரியனும் கேள்வியாக வான்முகிலனை ஏறிட்டனர்.

“இவங்க நிலஞ்சனா. என்னோட லாயர். சொல்லுங்க என்ன விஷயமா என் கிட்ட பேசணும்” நேரடியாகவே விசயத்துக்கு வந்தான் வான்முகிலன்.

வான்முகிலன் நேரடியாக பேசியதும் ஆதிசேஷனும் சட்டென்று விஷயத்தை கூறினார். “நடந்த விபத்த வச்சி யாரோ நமக்குள்ள கேம் ஆடுறாங்க என்று எனக்கு சந்தேகமாக இருக்கு.

பைலட் ராஜேஷ் போட்ட ட்டுவிட்டாலதான் எல்லா பிரச்சினையும் வந்தது, அவனை புடிச்சா எல்லாம் சரியாகும் என்று நினச்சேன். ஆனா அவன் ஹாஸ்பிடல்ல இருந்து காணாம போய்ட்டான்”

ஆதிசேஷன் பேச ஆரம்பிக்கும் பொழுதே ராம் அனைவருக்கும் தேநீர் கொடுக்க, மலர்விழிக்கு கொடுக்கப்படாததால் நிலஞ்சனா தன்னுடையதை நீட்டினாள்.

“சாரி. மத்தவங்க உபயோகிச்சத நான் உபயோகிக்க மாட்டேன்” என்றாள் மலர்விழி.

“தான் தான் இன்னும் தேனீரை அருந்தவே இல்லையே எதற்கு இவள் இவ்வாறு கூறினாள்?” என்று மலர்விழியை யோசனையாக பார்த்த நிலஞ்சனா மலர்விழி அவ்வாறு கூறியதற்கு வேறு அருத்தம் இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டதோடு காரணம் தெரியாமல் பதில்  சொல்லக் கூடாது என்று அமைதியாக தேநீரை அருந்தலானாள்.  

மலர்விழி கூறியதை ஆதிசேஷன் யோசனையாக பார்க்க, காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாது வான்முகிலன் “அப்போ பைலட் ராஜேஷ யாரோ மிரட்டி அந்த டுவிட்ட போட வச்சாங்க என்று சொல்ல வாரீங்களா?” என்று கேட்டான். 

“பைலட் ராஜேஷ் காணாமல் போய்ட்டாரா? இல்ல கடத்தப்பட்டாரா” யோசனையாக கேட்டாள் நிலஞ்சனா.

அனைவரும் அவளை பார்க்க, “வாட் யு மீன்?” வான்முகிலன் தான் கேட்டான். 

“நீங்க சொல்லுறது போல உங்க ரெண்டு பேருக்கிடையிலும் பிரச்சினை உருவாகணும் என்று அந்த பைலட் அந்த டுவிட்ட போட்டிருந்தா உங்கள எதிர்த்து நின்னிருப்பாரு. காணாம போய் இருக்க மாட்டாரு. யாரோ மிரட்டி போட்டதனாலதான் காணாம போய்ட்டாரு. ஐ மீன். நீங்க அவரை தொடர்புகொள்ளக் கூடாது என்று கடத்திட்டங்க” என்றாள் நிலஞ்சனா.

அனைவரும் யோசனைக்குள்ளாக ஆதிரியன் பேசினான். பைலட் ராஜேஷ் ஏன் டுவிட் போட்டாரு என்று நான் விசாரிக்க போறதுக்கு முன்னவே போலீஸ் அங்க வந்து விசாரிச்சுக்கிட்டு இருந்தாங்க. நான் என்னவோ பைலட் ராஜேஷ் வான்முகிலன் மீது கேஸ் கொடுக்கத்தான் வரச் சொன்னதாக நினச்சேன்.

அடிபட்டு படுத்தப்படுக்கையா கிடந்தவனோட கை ரெண்டுமே கட்டுபோட்டிருந்த நிலைல அவன் சுயமா டுவிட் போட்டிருக்கவே முடியாது. அவனுக்காக வேற யாரோ போட்டிருந்தாலும் போலீஸ் வந்தப்போ அங்க யாருமே இருக்கல. அவரோட குடும்பத்தார் கூட இருக்கல” என்றான் ஆதிரியன்.

“ஆகா என் மேல குற்றம் சொன்னதும் உங்க தல தப்பிச்சது என்று என்ன? ஏது? என்று விசாரிக்காம அங்க இருந்து கிளம்பிட்டீங்க. அப்படித்தானே” நக்கலாக ஆதிரியனை பார்த்துக் கேட்டான் வான்முகிலன்.

அது தானே உண்மை. பைலட் ராஜேஷிடம் ஒரு வார்த்தை கூட பேசாது நடப்பதை வேடிக்கை பார்த்து விட்டு வந்து தானே வான்முகிலனின் தலை உருளட்டும் என்று இருந்தான் ஆதிரியன்.

“இப்போ இருக்குற பிரச்சினை இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரி உங்களுக்கு மட்டுமா, இல்ல உங்களுக்கு மட்டுமா? இல்ல ரெண்டு பேருக்கும் இருக்கும் பொது எதிரியா என்குறது தான். ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் அவனுக்கு உங்க ரெண்டு பேரையும் பத்தி நல்லாவே தெரிஞ்சிருக்கு” ஆதிசேஷனையும் வான்முகிலனையும் மாறிமாறி பார்த்தாள் நிலஞ்சனா.

“பொது எதிரியா? தனி எதிரியான்னு தெரியாம அவனை பிடிக்க முடியாதா?” ஆதிரியன் என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

“எனக்கு ஒரு யோசனை தோணுது” என்ற ஆதிசேஷன் வான்முகிலனை பார்த்து “நமக்குள்ள பிரச்சினை இருக்கு என்று எண்ணி தானே அவன் கேம் ஆடுறான். இல்ல பிரச்சினை உண்டு பண்ண கேம் ஆடுறான். நமக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லனு சொல்லிட்டா?”

“சொல்லுறது என்றா மீடியால சொல்லணும். எங்கப்பன் குதிருக்குள்ள இல்லனு சொல்லுறது போல ஆகிடாதா?” ஆதிசேஷன் என்ன சொல்ல விளைகிறார் என்று புரியாமல் வான்முகிலன் பேசினான்.

“உங்க ரெண்டு குடும்பம் சம்பந்தம் பண்ணிக்கிட்டா மட்டும்தான் ஊர், உலகம் உங்க ரெண்டு பேருக்குமிடையில எந்த பிரச்சினையுமில்ல என்று அவனும் நம்புவான் என்று சொல்லுறீங்க. அப்படித்தானே” என்றாள் நிலஞ்சனா.

“கற்பூரம்” என்றார் ஆதிசேஷன்.

இது நல்ல யோசனை என்று ஆதிசேஷனை வான்முகிலன் பார்த்தாலும் “இந்த தடவ யாருக்கு யார ஜோடி சேர்க்க போறீங்க?” என்று நக்கலடித்தான்.

அவன் பேச்சின் அர்த்தம் ஆதிசேஷனுக்கு நன்றாகவே புரிந்தது. அவர் வயதுக்கு பதிலுக்கு கிண்டலும் செய்ய முடியாது. விட்டுக் கொடுக்கவும் முடியாதே.

“இதோ என் பேரன் ஆதிரியன் தான் மாப்புள. உங்க வீட்டுல தான் ஒண்ணுக்கு ரெண்டு பொண்ணு இருக்கே. எந்த பொண்ணு என்று நீங்க தான் முடிவு பண்ணும்”

ஆதிரியனின் சொந்த தங்கை ஆதிதியிடம் ஆயிரம் குறை இருந்தாலும், ஆதிரியனிடம் எந்தக் குறையும் காண முடியாது என்று கர்வமாகத்தான் கூறினார் ஆதிசேஷன்

இரண்டு பெண்களின் எந்த பெண்ணென்றாலும் ஆதிசேஷனுக்கு விருப்பம் தான். அவ்வாறு கூறினால் வான்முகிலனுக்கு தன்னுடைய குடும்பப் பெண்களை ஒழுங்காக வளர்த்து விட்டோம் என்ற கர்வம் தலைக்கேறாதா? அதனால் தான் முடிவை வான்முகிலனை எடுக்குமாறு கூறினார்.

“மூத்தஅக்கா பொண்ணு மாளவிகாவையே பேசலாம்” என்றவனுக்கு அக்காவின் தலைவலியும் தீரும் என்று எண்ணிக் கொண்டான்.

ஆதிரியனின் கண்களுக்குள் சுபலக்ஷ்மி வந்து நின்றாள். மாளவிகா டில்லியில் பிறந்து வளர்ந்ததால் அவளை தெரியவில்லை. எப்படி இருந்தாலும் தனது திருமணம் தாத்தா முடிவு செய்யும் பெண்ணோடு தானே என்று பெரிதாக எந்த ஆர்வமும் காட்டாமல் இருந்தான்.

“சரி அப்போ வீட்டுல பேசிட்டு சொல்லுங்க” என்ற ஆதிசேஷன் எழுந்து கைகுலுக்கி விட்டு வெளியேற, மலர்விழி ஆதிசேஷனை பின் தொடர்ந்தாள். ஆதிரியன் ஒரு தலையசைப்பில் வான்முகிலனிடமும், நிலஞ்சனாவிடமும் விடைபெற்றான்.

ராம் கதவை சாத்தியதும் “அவ கேட்டாளா? உன் கிட்ட டீ வேணும் என்று கேட்டாளா? அவளே ஜஸ்ட் செகடரி. நீ லாயர் தானே. உனக்குண்டான மரியாதை என்ன? அவகிட்ட போய் நோஸ்கட் வாங்கிட்டு இருக்க, என் கிட்ட மட்டும் தான் வாய் நீளுமா? லாயர் தானே. பாய்ண்ட் பாய்ண்டா பேசுவியே. ஏன் அவ கிட்ட பேசல. ஓஹ்… பொண்ணு னு இரக்கப்ட்டியோ” வான்முகிலன் நிலஞ்சனாவை வெளுத்து வாங்க,

என்ன பேசுகிறான் என்று நிலஞ்சனா புரியாது பார்த்திருந்தவள் மலர்விழியை பற்றித்தான் பேசுகிறான் என்றதும் கடுப்பானாள்.

“அவங்க உள்ளர்த்ததோட பேசினா… என்னனு தெரியாம நான் எப்படி பதில் சொல்லுறது? அறிவிருக்கா?” இவளும் பொரிந்தாள்.

இவர்களின் சண்டையை பார்த்த ராம் மெதுவாக கதவை திறந்து அறைக்கு வெளியே சென்று நின்று கொண்டான்.

“நீ டீ வேணுமான்னு கேட்கப் போய் தானே அவ பேசினா? உனக்கு எதுக்கு வேண்டாத வேல?” இவனும் விடாது பேச

“அவங்க வந்தது நம்ம இடத்துக்கு, வந்தவங்கள கவனிக்கணுமே என்று தான் கேட்டேன். இப்போ தானே புரியுது. அந்தம்மாக்கும் உங்களுக்கும் முன்ஜென்ம பகை இருக்கு னு” வான்முகிலனை நன்றாகவே முறைத்தாள் நிலஞ்சனா.

“எனக்கும் அவளுக்கும் எந்த பகையுமில்ல. அவளும் நானும் காலேஜ் மேட். அவ ரொம்ப போல்டான பொண்ணு. ஆதிசேஷன் கூட இருந்து அவரோட தலைக்கனம் இவளுக்கும் வந்திருக்கும் போல. பேசினாலும் தெரியாதது போலவே பேசுறா” என்றான் வான்முகிலன்.

“அவ ப்ரொபோஸ் பண்ணி நீங்க வேணாம்னு சொல்லி இருப்பீங்க” நிலஞ்சனா சாதாரணமாக சொல்ல அதிர்ந்து நின்றான் வான்முகிலன்.

Advertisement