Advertisement

அத்தியாயம் 5

“என்னது நடந்தது விபத்தே இல்ல திட்டமிட்ட சதியென்று டுவிட் பண்ணியிருக்காங்களா? யார் இப்படி பண்ணாங்க? இது தாத்தாவுக்குத் தெரியுமா?” ஆதிரயன் அதிர்ச்சியில் எழுந்தே விட்டான்.

நடந்த விபத்தில் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு, காயம்பட்டவர்களுக்கு மருத்துவ செலவு என்று கோடிக்கணக்கில் செலவாகி விட்டது. இந்த நிலையில் இப்படி ஒரு வதந்தி கிளம்பினால் வேறு மாதிரியான பிரச்சினைகள் உருவாகும் என்ற எண்ணங்கள் அவனுள் ஓட ஆரம்பித்தன.

“அது… அது வந்து சார் அந்த பைலட் தான் சார் டுவிட் பண்ணியிருக்காரு. அதனால…” என்று மேனேஜர் கதிரவன் மேற்கொண்டு பேச ஆரம்பிக்கும் பொழுது கண்ணாடியிலான அந்த கட்டிடத்துக்கு கற்கள் சரமாரியாக வந்து மோத ஆதிரியன் எட்டிப் பார்த்தான். கட்டிடத்தை சுற்றி மக்கள் கூட்டமாக நின்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர்.

தனக்குத்தான் இந்த தகவல் இறுதியாக அறியக் கிடைத்திருக்கிறது என்று அறிந்துக் கொண்டவன் “வீட்டுல எல்லாரும் சேப் தானே” இந்நேரத்துக்கு போலீசுக்கு தகவல் சென்றிருக்கும். போலீசார் வந்து விடுவார்கள். காரியாலயம் பாதுப்பாகிடும். வீட்டில் உள்ளவர்களின் நிலையை நினைத்துதான் கவலையடைந்தான் ஆதிரியன்.

“சேப் சார். ஆதிசேஷன் சார் அவசரமா ஒரு மீட்டிங்க ஏற்பாடு பண்ணியிருக்காரு உங்கள கூட்டிட்டு வரச் சொன்னாரு” தான் இதற்காகத்தான் வந்தே என்பதை கூறிய மேனேஜர் கதிரவன் வெளியேற ஆதிரியனும் அவசர, அவசரமாக கூட்டம் நடைபெறும் இடத்துக்கு விரைந்தான்.

அங்கே சென்றால் வளமை போல் தந்தையும் சித்தப்பா இருவரும் மலர்வழியை தூற்றிக் கொண்டிருக்க, தாத்தா ஆதிசேஷன் தலையில் கையை வைத்து அமர்ந்திருப்பதை பார்த்தான்.

“என்ன ஒரே சத்தமாக இருக்கு? மீட்டிங்க கூட்டினா முக்கியமான விஷத்தை மட்டும் பேசணும். கண்டதையும் பேசணும்னா நீங்க மூணு பேரும் வேற எங்கயாச்சும் போய் பேச வேண்டியது தானே” என்றவாறே தனது இருக்கையில் அமர்ந்த ஆதிரியன் “வெளிய என்ன நடக்குது என்று பார்த்தீங்கள்ல. அதுக்கு ஒரு முடிவை சொல்லுங்க” என்றான்.

ஆதிரியன் இவ்வாறு பெரியவர்களின் முன் கோபப்பட்டு அவர்களும் பார்த்ததில்லை.

“எவனோ ஒருத்தன் என்னமோ எதிலையோ போட்டான்னா மக்கள் இப்படி நம்பிட்டு வந்து போராட்டம் பண்ணுவாங்களா? நன்றி கெட்ட மனிசனுங்க” பொறுமையிழந்த ஆதிசேஷன் கோபத்தில் கத்தியவாறே மேசையில் ஓங்கியடித்தார்.

“இன்னக்கி உலகம் ரொம்பவே சுருங்கியிருச்சு. இன்டர்நெட் உலகம். ஒரு மொபைல் கைல இருந்தா போதும் எங்க எது நடந்தாலும் உடனே வீடியோ எடுத்து போட்டுடுவானுங்க. பிளைட்ட ஓட்டின பைலட்டே நடந்த விபத்து திட்டமிட்ட சதியென்று ரூமர கிளப்பினா மக்கள் நம்பத்தான் செய்வாங்க. சொந்தங்கள இழந்த வலில இருக்குறவங்க பொறுமையா இருக்க மாட்டாங்க. அவங்கள அமைதிப்படுத்த வேண்டியது நம்மளளோட கடமை” என்றாள் மலர்விழி.  

மலர்விழி பேச ஆரம்பிக்கும் பொழுது ஆதிசங்கர், ஆதித்யன், ஆதிதேவ் மூவரும் முறைக்க ஆரம்பிக்க ஆதிரியன் கண்களாளேயே அவர்களை அமைதிப்படுத்தினான்.

“சரிம்மா… என்ன பண்ணலாமென்று உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?” ஆதிசேஷன் மலர்விழியை ஏறிட்டார். ஆதிசேஷனுக்கு இப்பொழுதெல்லாம் மலர்விழி சொல்வதுதான் வேதம்.  

“முதல்ல மக்களை அமைதி படுத்தனும். நாம இப்படி உள்ள இருந்தா நம்ம மேல தான் தப்பு என்று மக்கள் முடிவே பண்ணிடுவாங்க. நம்ம சார்பா உடனே அவங்க முன்னிலைல ஒருத்தர் போய் உடனே பேசணும். பேசி அவங்கள கன்வின்ஸ் பண்ணனும்”

மலர்விழியை பிடிக்கவில்லையென்றாலும் இப்போதைக்கு அவள் சொல்வதுதான் சரியென்று தோன்ற “யார் போறது போனாவே கல்லால அடிச்சி கொன்னுடுவாங்க” என்றான் ஆதிசங்கர்.

கொஞ்சம் நேரம் யோசுத்தவள் “நான் வேணா போறேன். பொண்ணு எங்குறதால அடிக்க கொஞ்சம் யோசிப்பாங்க” என்றவள் சதி என்று அந்த பைலட் ராஜேஷ் சொன்னாரே தவிர என்ன? ஏது? என்று எந்த விளக்கமும் சொல்லல. எப்படியாவது அவரை பிடிச்சி ஏன் அப்படி சொன்னார் என்று காரணத்தையும் கண்டு பிடிச்சி அவரோட டுவிட்டுக்கு அவரையே மறுப்பு தெரிவிக்க வைக்கணும்” என்றாள்.

“சபாஷ். எரியிறத அனச்சாலே போதும் கொதிக்கிறது தானாகவே அடங்கிடும் என்று சொல்லுற” மகளை மெச்சினார் ஆதிசேஷன்.

“அந்த பைலட் நம்ம ஹாஸ்பிடல்ல தானே அட்மிட் ஆகியிருக்கான்” என்ற ஆதிரியன் “அவனை விசாரிக்கிற விதத்துல விசாரிச்சா, இதுக்கு பின்னால யார் இருக்காங்க எங்குறதும் தெரிய வரும்” என்று மலர்விழியை பார்த்தான்.

இதற்கு பின்னால் நீதான் இருக்கிறாய் என்று சந்தேகத்தில் பார்த்தானா? அல்லது என் வேலையை நான் கண கச்சிதமாய் முடித்து விடுவேன். உன் வேலையை நீ ஒழுங்காக பார்க்க வேண்டும் என்று பார்த்தானா? தெரியவில்லை. ஆனால் மலர்விழி அவனை கண்டு கொள்ளாது மக்களை சந்திக்க வெளியே சென்றாள்.

போலீசார் அந்த கட்டிடத்தையே சுற்றி வளைத்து பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்க, வெளியே வந்த மலர்விழி அங்கே இருந்த காவலாளியின் கையிலிருந்த ஒலிபெருக்கியை வாங்கி பேச ஆரம்பித்தாள். 

“நீங்க எல்லாரும் கொஞ்சம்நேரம் அமைதியா இருந்தா தான் நான் பேசுறது உங்களுக்கு கேட்கும். அமைதியா இருக்கிறீங்களா?” நான்கு, ஐந்து தடவைகள் கூறிய பின்தான் கூட்டமே அவளை திரும்பிப் பார்த்தனர்.

“உண்மைய உரக்க சொன்னா தெளிவு பிறக்கும். அதுவே வதந்திய பலவாட்டி சொன்னா உண்மையாகிடும். உங்க இழப்புக்கு எதக் கொடுத்தாலும் ஈடுகட்ட முடியாது என்று எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் எங்களால முடிஞ்சத நாம செஞ்சிக்கிட்டுதான் இருக்கோம். இந்த நேரத்துல இப்படி ஒரு வதந்தி எழுந்தா உங்க மனசுல எந்த மாதிரியான சந்தேகங்கள் உருவாகும் என்று எங்களால நல்லாவே புரிஞ்சிக்க முடியுது.

பைலட் ராஜேஷ் ஏன் அப்படியொரு ட்விட் போட்டாரு. அது அவரா போட்டாரா? அல்லது மக்களை தூண்ட யாராவது அவரை மிரட்டி போட வச்சாங்களா என்று போலீஸ் விசாரணைல தெரியவரும். அது வரைக்கும் நீங்க பொறுமையா இருக்கணும்.

நடந்த விபத்த பயன்படுத்திகிட்டு ஆதிசேஷன் ஐயா மேல சேத்த வாரி அடிக்க ஒரு கூட்டமே காத்துகிட்டு இருக்காங்க. அவங்க நோக்கம் உங்க மூலமாக நிறைவேறிடக் கூடாது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று ஏன் சட்டம் சொல்லுது? தப்பு செய்யாத யாரும் தண்டனை பெற கூடாது என்று தானே. பாதிக்கப்பட்ட நீங்களே சட்டத்தை கைல எடுத்து ஒரு அப்பாவிய தண்டிச்சா இழந்த உயிர்கள் கூட உங்கள மன்னிக்காது.

உங்க மனநிம்மதிக்காக போலீஸ் விசாரணையை துரிதப்படுத்துபடி ஆதிசேஷன் ஐயாவே தனிப்பட்ட முறையில் காவல்துறையிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

நீங்க பொறுமையாக இருந்து உண்மையை கண்டறிய காவல்துறைக்கு ஒத்துழைக்கணும்” என்று தனது பேச்சை முடித்துக் கொண்டாள் மலர்விழி.

ஊடகங்கள் அவள் பேசியதை நேரலையில் ஒளிபரப்பு செய்துகொண்டிருக்க, கூடியிருந்த கூட்டமும் தங்களுக்குள் கிசுகிசுத்தவாறே மெல்ல கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

கட்டிடத்துக்குள்ளேயே இருந்து மலர்விழியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிசேஷன் “என் பொண்ணு இல்ல” என்று மெச்சிக் கொண்டார். அதை பார்த்து அவர் பெற்ற மூன்று புதல்வர்களும் முகம் சுளித்தனர்.     

கூட்டம் கலைந்த மறுகணமே ஆதிரியன் பைலட் ராஜசேஷை தேடிச் சென்றான்.   

மலர்விழி பேசிய காணொளி முக்கிய செய்தியாக ஊடகங்களில் வெளியாகியிருக்க அலைபேசியில் அதை பார்த்துக் கொண்டிருந்த வான்முகிலன் ராமை ஏறிட்டு இதன் உண்மை தன்மையை அறியும்படி ஏவினான்.

கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த நிலஞ்சனா “ஒருவேள நடந்தது திட்டமிட்ட சதியாக இருக்கலாம். இல்லனா யாராவது மிரட்டி அந்த பைலட்டை அப்படியொரு டுவிட் போட சொல்லியிருக்கலாம்” என்றாள். 

பவானியை தான் எங்கும் அனுப்பவில்லை என்று ஆதாரத்தோடு வான்முகிலன் நிலஞ்சனாவிடம் நிரூபித்துவிட்டாலும் தன்னிடம் வேலை பார்த்த பெண் காணாமல் போனதால் அவளை தேட வேண்டியது தன்னுடைய பொறுப்பு என்று காவத்துறையிடம் பவானியை கண்டு பிடிக்குமாறு நிலஞ்சனா முன்னிலையில் தான் கேட்டுக் கொண்டான்.

இதன் பின் இவளது தொல்லை இருக்காது என்று காரியாலயம் வந்தால், நிறுவனத்தின் சட்ட சிக்கல்களை தீர்த்து வைக்க புதிதாக அமர்த்தப்பட்ட வக்கீல் என்று மேனேஜர் நிலஞ்சனாவை வான்முகிலனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

“கருப்பு கோட் போட்ட விடாத கருப்பு” தனக்குள் கூறிக் கொண்டவன் அன்று அவள் தன்னை லாயர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டது நியாபகம் வரவே “என் கம்பனில வேலைக்கு சேர்ந்த தைரியம்தான் அன்னக்கி என் கிட்டயே விளையாடி இருக்கா” மென்னகை செய்தான்.

வேலையில் குற்றம் கண்டு பிடித்து அவளை திட்டலாமென்று இவன் காத்திருக்க, அவள் அணுகு முறைகளை கண்டு கொஞ்சம் வியக்கத்தான் செய்தான்.

இதோ இப்பொழுது கூட சம்பந்தமே இல்லாமல் ஆஜராகிறாளே என்று தான் வான்முகிலன் பார்த்தான்.

“என்ன பாக்குறீங்க? உண்மையிலயே அவங்க மேல தப்பிருந்தா அத யார் மேல திருப்பி விட்டுடலாம் என்றுதான் ஆதி க்ரூப் யோசிப்பாங்க. அப்படி அவங்க யார் யார் மேல குத்தம் சொல்வாங்க என்று ஒரு லிஸ்ட் எடுத்தேன். அதுல உங்க மாமா மிஸ்டர் ராஜ்காந் பெயரும் இருக்கு. அவர் மட்டுமில்ல உங்க பேரும் இருக்கு. நீங்க தானே பொருள் சப்லை பண்ணது” என்றாள்.

“என்ன உளறுற? என் மாமா மட்டுமா இன்ஜினியர். எத்தனை பேர் வேலை பாக்குறாங்க? நடந்தது விபத்தாகவே இருந்தாலும் எத்தனை பேர் மேல குத்தம் சொல்வாங்க?” தன்னையே குற்றம் சொல்கிறாளே! கற்பனை பண்ணாதே என்பதை போல நிலஞ்சனாவை பார்த்தவன் முறைக்க முடியாமல் அமர்ந்திருந்தான்.

“சார் இத்தனை நாள் கழிச்சு அந்த பைலட் எதுக்கு இப்படியொரு ட்விட் பண்ணனும்? எனக்கு என்னமோ சரியா தோணல” என்றான் ராம்.

“இப்போ நீ என்ன சொல்ல வர?”

“உண்மையிலயே நடந்தது விபத்தா இருந்தா ட்வீட் பண்ணது அந்த பைலட். ஆதி குரூப்பை பழி வாங்க யாராச்சும் பைலட்டை மிரட்டியோ, பணம் கொடுத்தோ இப்படியொரு ட்வீட்டை போட்டிருந்தா எதிர்பார்க்காத பிரச்சினைக்கில உருவாகும்” என்றாள் நிலஞ்சனா.

“அப்படியே வந்தா அது ஆதி குரூப்போட தலைவலி தானே நாம எதுக்கு இப்போ தேவையில்லாம இத பத்தி டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம்?” நிலஞ்சனாவை முறைக்க முடியாமல் ராமை முறைத்தவன் “நிறைய வேலைகள் பெண்டிங் இருக்கு எங்க அந்த பைல்” என்று கையை நீட்ட ராம் அவன் அருகில் வந்தான்.

அதை பார்த்த நிலஞ்சனா அமைதியாக வெளியேறினாள்.

ஒரு மணித்தியாலயம் கழிந்திருக்கும். மக்கள் கூட்டம் வான்முகிலனின் வீட்டை சுற்றிவளைத்து ராஜ்காந்த்தை வெளியே அனுப்புமாறு கத்தி, கூச்சலிட ஆரம்பித்தனர்.

வீட்டிலிருந்து சாருமதி அழைத்து விமான விபத்துக்கு காரணமே ராஜ்காந் என்பது போல் பேச வான்முகிலன் நிலஞ்சனாவை தான் பார்த்தான்.

“யார் நீ? நீ சொன்னது போலவே நடக்குது” என்று தொலைக்காட்ச்சியை உயிர்பித்தவன் தனது வீட்டை சுற்றி வளைத்திருக்கும் கூட்டத்தையும், அவர்களை தடுக்கும் காவல்துறையினரையும் பார்த்து என்ன செய்வது என்று யோசித்தான்.

“உங்க மாமா கூட எத்தனை பேர் வேல பாக்குறாங்க உங்க வீட்டை மட்டும்தான் சுத்தி வளச்சிருக்காங்க. உங்க மாமாவோட ஐடென்டி மட்டும் எப்படி லீக் ஆச்சு? உங்க மாமாதான் டார்கட்டா? இல்ல நீங்களா?”

“நீதான் எல்லாத்தையும் பண்ணுறது போல பேசாத” கடுப்பாக அவளை பார்த்த வான்முகிலனை நிதானமாக பார்த்தாள் நிலஞ்சனா.

“உங்க மாமா இன்ஜினியர் தான். ஆனா ஆதி குரூப்புக்கு பொருள் சப்லை பண்ணது நீங்கதானே. தரமில்லாத பொருட்களை கொடுத்ததனால தான் இந்த விபத்து நடந்தது என்று உங்க கிட்ட வருவாங்க. அதுக்கு உங்க மாமாவும் உடந்தை என்று சொல்வாங்க. அதுக்குத் தயாராகுங்க”

“என்ன இவ எதிர்காலத்து இருந்து வந்தவ மாதிரியே பேசுறா?” என்று நிலஞ்சனாவை பார்த்தாலும் அவள் சொல்வது முற்றிலும் உண்மை என்பதனால் ராமை அழைத்து அதற்குண்டான வேலையை பார்க்கச் சொன்னவன் நிலஞ்சனாவை அழைத்துக் கொண்டு ஆணையர் அலுவலகம் கிளம்பினான்.

“என்ன ஆதிரயன் பிரச்சினையை முடிச்சிட்டு வரச் சொன்னா… நீ அந்த முகிலன சீண்டிட்டு வந்திருக்க. அவன் அமைதியா இருக்க மாட்டான்” ஆதிசேஷன் கோபமாக பேரனை முறைத்தார்.

“நான் ஒண்ணுமே பண்ணல. அந்த பைலட் போலீஸ் முன்னிலைல கொடுத்த வாக்கு மூலத்தைத்தான் வீடியோவா போட்டேன். இனி நமக்கு எந்த தலைவலியுமில்ல. இப்போ அது அவன் பிரச்சினை” என்றான் ஆதிரியன்.

“நீ என்ன போல என்று எல்லாரும் சொன்னாலும். உனக்கு அறிவு மட்டும் உன் அப்பன போல” என்று திட்டிய ஆதிசேஷன். “எதுக்கு நீ போலீசை கூட்டிட்டு போன?”

“நான் போகும் போதே போலீஸ் அங்கதான் இருந்தாங்க. பைலட் ராஜேஷ்  போலீசை கூப்பிட்டு வாக்கு மூலம் கொடுத்துக்கிட்டு இருந்தாரு”

“என்ன சொல்லுற? அப்போ நடந்த விபத்துக்கு காரணம் இயற்கை அனார்த்தமில்லையா?” கொஞ்சம் அதிர்ச்சியாகவே கேட்டார் ஆதிசேஷன்.

“அது தெரியாம எத்தனை கோடிய செலவழிச்சிட்டீங்க. ஆத்துல போட்ட கதை தான்” என்றவாறே வந்தான் ஆதிதேவ்.

“காலநிலை பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கும். முக்கிய காரணம் இஞ்ஜின்ல கோளாறு என்றுதான் பைலட் ராஜேஷ் சொல்லுறாரு. அதனாலதான் அப்படியொரு ட்வீட் போட்டாராம்”

“அப்படீன்னா அந்த முகிலன் சப்லை பண்ண பொருளெல்லாம் கேள்விக்குறியா இல்ல இருக்கு? அவன் மேல ஒரு கேஸ் பைல் பண்ணு. அவனால நமக்கு எத்தனை கோடி லாஸ். பிளைட்டும் போச்சு. நஷ்ட ஈடும் நாமதான் கொடுத்தோம். இன்னும் எத்தனை பிளைட் வெடிச்சு விழும் என்று பயந்து சாக வேண்டி இருக்கு” கோபத்தில் கொதித்தார் ஆதிசேஷன்.

அவரின் கோபத்தை பார்த்து “சார் இந்த க்ரீன் டீயை குடிங்க. இது உங்கள சாந்த படுத்தும். டென்ஷனானா அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க முடியாது. இத குடிச்சிட்டு. அமைதியா யோசீங்க” என்றாள் மலர்விழி.

அவளை பார்த்து புன்னகைத்த ஆதிசேஷன் அவள் நீட்டிய கப்பை பெற்றுக் கொண்டு அருந்த ஆரம்பித்தார்.

ஆதிசேஷன் க்ரீன்டீயை மெல்ல மெல்ல அருந்தவவும் “மிஸ்டர் வான்முகிலேனோட வைப் கூட அந்த விமான விபத்துல இல்ல இறந்தாங்க” என்று யோசனையாக மலர்விழி கூறினாள்.

“ஆமால்ல. அப்போ அவன் பொண்டாட்டிய கொல்ல திட்டம் போட்டுத்தான் இப்படி பண்ணிட்டானா?” ஆதிதேவ் கோபமாக வெளியேற,

கதவருகே அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஆதிசங்கர் தம்பியை நிறுத்தி “மக்களை அந்த வான்முகிலன் பக்கம் திருப்பணும் என்றா அவன் பொண்டாட்டிய கொல்லத்தான் திட்டம் போட்டு இந்த விபத்த பண்ணியிருக்கான் என்று மீடியால வரணும்” என்றான்.

“ம்ம்… எங்க ஆட்கள் அந்த வேலைய பார்ப்பாங்க” என்று ஆதிதேவ் மேனேஜர் கதிரவனை தேடிச் சென்றான்.

வான்முகிலனும், நிலஞ்சனாவும் ஆணையர் அலுவலகத்திலிருந்து வெளியே வரும் பொழுது அவர்களின் முன் வண்டியை கொண்டு வந்து நிறுத்தினான் ராம்.

ஆணையர் அலுவலகம் தாண்டியதும் வண்டியை ஓரமாக நிறுத்திய ராமை கேள்வியாக ஏறிட்டான் வான்முகிலன். 

“சார் இந்த நிவ்ச கொஞ்சம் பாருங்க. டென்ஷனாகாதீங்க” என்றவாறே அலைபேசியை கொடுத்தான் ராம்.

அதில் வான்முகிலன் தன் மனைவியை கொல்ல திட்டம் போட்டுத்தான் இந்த விபத்தையே நிகழ்த்தியிருக்கின்றான் என்று பேச கோபமாக கைகளை முறுக்கியவனின் கண்களிலிருந்து கண்ணீர் அவனையறியாமையே கன்னத்தில் வழிந்தோடியது.

“ஸ்ரீ நீ செத்தது விபத்தா? சதியா? என்று தெரியாம அல்லாட வச்சிட்டியேடி…” என்று புலம்பியவன் அருகில் அமர்ந்திருந்த நிலஞ்சனாவின் மடியில் சரிந்து கதற ஆரம்பித்தான்.

வான்முகிலன் இந்த கொஞ்ச நாட்களாகவே நெஞ்சை இறுக்கும் தாங்க முடியாத சோகத்தை அன்னை மடியில் தஞ்சம் புகுந்துதான் தீர்த்துக் கொண்டிருந்தான். நிலஞ்சனா அவன் கண்களுக்கு புலப்படவில்லை. அவன் தேடியதோ காஞ்சனாதேவையை.

முதலில் அதிர்ந்தாலும் அவன் நிலையை புரிந்து கொண்ட நிலஞ்சனாவும் வான்முகிலனின் முதுகை நீவிவிட்டவாறே சமாதானப்படுத்தலானாள்.

ராம் வண்டியை விட்டு இறங்கி நின்று கொண்டான்.

புலம்பியவாறே  நிலஞ்சனாவை நிமிர்ந்து பார்த்தவனுக்கு நிலஞ்சனா பாக்யஸ்ரீயாக கண்களுக்குத் தெரிந்தாள்.

“ஸ்ரீ… ஸ்ரீ… என்ன விட்டு போயிடாத ஸ்ரீ” என்று அவளை இறுக அணைத்துக் கொண்டு பிதற்றினான்.

“மிஸ்டர் முகிலன் கண்ட்ரோல் யுவர் செல்ப்” என்று அவனை தன்னிடமிருந்து பிரித்து “இப்போ நாம உங்க வீட்டுக்கு போகணும். அங்க இதைவிட பெரிய பிரச்சினை நமக்காக காத்திருக்கு” என்ற நிலஞ்சனா வண்டியை எடுக்குமாறு ராமை அழைத்தாள்.

நிலஞ்சனாவை பார்த்து குழம்பியவன் ராம் வரவும் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

வான்முகிலனின் வண்டி வீட்டின் அருகே வரும் பொழுதே, வண்டியை சூழ்ந்து கொண்ட மக்கள் கூட்டம் வண்டியை விட்டு இறங்குமாறு சத்தம் போடலாயினர்.

இறங்கவில்லையாயின் வண்டியை உடைக்க கற்களையும் கையில் ஏந்தி மிரட்ட வண்டியிலிருந்து முதலில் இறங்கியதோ நிலஞ்சனா அவளை தொடர்ந்து ராம் இறங்கினான்.

நிலஞ்சனாவை பார்த்ததும் அமைதியானவர்கள் ராமை பார்த்ததும்

“இவன் அவனில்லையே”

“நீ யார்டா?” 

“எங்க அவன்?”

“பொண்டாட்டிய கொல்ல திட்டம் போட்டு எத்தனை உயிரை எடுத்துட்டான் படுபாவி. இவனையெல்லாம் சும்மா விடக் கூடாது”

“நடுரோட்டுலையே கல்லால அடிச்சி கொல்லனும்”

“ஓடி ஒளிஞ்சிட்டானா?” என்ற குரல்களுக்கு மத்தியில் வண்டியை விட்டு வான்முகிலன் இறங்கினான்.

என்னதான் சத்தம் போட்டாலும் வான்முகிலனை பார்த்த உடன் மக்கள் கூட்டம் தானாகவே அமைதியடைந்தனர். அவன் தோற்றமும், கம்பீரமும் கூட அவர்களை அவனை நெருங்க விடாது தடுத்தது என்றால் காவல்துறையினரும் அவனுக்கு பாதுகாப்பாக நின்றுகொண்டனர். இருந்தாலும் ஒரு சிலர் காவலாளிகளை மீறி அடிக்க முனைந்தனர்.

அவர்களை பொருட்படுத்தாமல் காவலாளிகளை பார்த்து “கொஞ்சம் இருங்க சார். நான் இவங்க கிட்ட பேசணும்” என்று முன்னாடி வந்து நின்ற வான்முகிலன் அவன் வண்டியின் மீது ஏறி நின்றான்.

“இவர் அடங்கவே மாட்டாரா? கல்ல வீசி அடிச்சாங்கான்னா மண்ட பொளந்துடும். சொன்னாலும் கேட்கமாட்டார்” ராம்  நிலஞ்சனாவிடம் புலம்பினான்.   

 “நான் இப்போ கமிஷ்னர் ஆபீஸ் போய்ட்டுதான் வரேன். அந்த பைலட் சொல்லுறது போல நான் சப்லை பண்ண பொருளாலதான் விபத்து நடந்ததா? அல்லது இன்ஜினியரோட தப்பா என்று போலீஸ் விசாரணைல தெரியவரும்.

நான் ஆதி க்ரூப்புக்கு கொடுத்த பொருள்ல எந்த குறையுமில்லை. எல்லாம் தரமான பொருள். அதற்கான ஆதாரம் இதோ” என்று ஆவணங்களை காட்டியவன் “கமிஷ்னர் ஆபீஸ் போய் எல்லாம் ஒப்படைச்சிட்டுதான் வரேன். உங்களுக்கும் வேணும்னா பாத்துக்கலாம்” என்று எந்த நாட்டிலிருந்து எந்தெந்த பொருள் வாங்கினான். என்ற தகவல் அடங்கிய காகிதங்களை, அதுவும் வான்முகிலன் கையொப்பமிட்ட காகிதங்களை அவர்களுக்கு வாட்சாப் மூலம் அனுப்பி வைத்தான்.

காகிதங்களை பார்த்தாலும் அதை எந்த அளவுக்கு நம்புவது என்ற குழப்பம் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்தது. தரமான பொருட்களை தான் கொடுத்தேன் என்பதிலையே அவன் தன் மனைவியை கொல்ல திட்டமிடவில்லையென்று போலீஸ் விசாரணையில் தெரிந்து விடும். ஆனால் ராஜ்காந்த்தை வைத்து ஏதாவது திட்டமிட்டு இருப்பானோ என்ற சந்தேகம் தீருமா?

“உங்க பொண்டாட்டிய கொல்ல திட்டம் போட்டுத்தான் நீங்க இந்த விபத்தையே நிகழ்த்தியதாக சொல்லுறாங்க. நீங்க என்னனா இப்படி சொல்லுறீங்க. நாங்க யாரை நம்புறது? அனாமத்தா என் ஒரே பொண்ணு உசுரு போச்சே” ஒரு பெண்மணி நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினாள்.

அதேநேரம் பாக்யஸ்ரீயின் தந்தை சதாசிவத்தை தேடித் சென்று நேரலையில் பேட்டி காண ஆரம்பித்திருக்க, அதை பற்றி ராம் வான்முகிலனிடம் கூறினான்.

“அவரே ஒத்த பொண்ண இழந்து மனநிம்மதி இல்லாம இருக்காரு” என்றவாறே காணொளியை பார்த்தான்.

“என்னது என் மாப்புள என் பொண்ண கொல்ல திட்டம் போட்டாரா? சொன்னவன் நாக்கை அறுத்துப்புடுவேன். என் பொண்ணு எப்ப போன் பண்ணாலும் மாப்புளய பத்தி சந்தோசமா பேசுவா…” வான்முகிலனை பற்றி பெருமையாக பேசியவர் இறுதியாக வான்முகிலன் எனக்கு மருமகன் மட்டுமல்ல இன்னொரு மகன் என்று முடித்திருந்தார்.

நேரலையில் ஒளிபரப்பானதில் அங்கிருந்தவர்களும் அக்காணொளியை பார்த்திருக்க, உண்மை எது? பொய் எது? என்று புரியாமல் குழம்பி நின்றனர்.

 “நடந்தது விபத்தா? திட்டமிட்ட சதியா? என்று போலீஸ் விசாரணைல தெரிய வரும். என்ன பத்தி தெரிஞ்சவங்களுக்கு என் மனைவி பாக்யஸ்ரீ கூட என் வாழ்க எப்படி இருந்தது என்று தெரியும். நான் வாழ்ந்த வாழ்க்கையையே சந்தேகத்துக்கு உள்ளாகினவங்கள நானும் சும்மா விட மாட்டேன்.

நடந்தது விபத்து என்றுதான் நானும் இத்தனை நாட்களா நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா இது விபத்தல்ல, சதியென்றும் என் மனைவியை நானே கொல்ல திட்டம் போட்டதாக சொல்லி என்ன இதுல கோர்த்து விட பாக்குறதுலையே தெரியுது இதுக்கு பின்னால எவ்வளவு பெரிய கைகள் இருக்காங்க என்று. பார்க்கலாம். உண்மை ஒருநாள் வெளிய வரத்தானே செய்யும். அன்னக்கி சட்டத்துக்கு முன்னால அவங்கள நிற்பாட்டி தண்டனை வாங்கி கொடுப்பேன்” என்றான் வான்முகிலன்.

“பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறாங்க என்று சொல்லுறீங்களே. அவங்களுக்கு எப்படி தண்டனை வாங்கி கொடுப்பீங்க. சட்டம் தான் அவங்களுக்காக வலஞ்சி கொடுக்கும்” ஆளாளுக்கு தங்களது ஆதங்கத்தை முன் வைக்கலாயினர். 

“இத்தனை உயிர்கள் போய் இருக்கு. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்தா இருந்தா சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை நிச்சயமாக கிடைத்தேயாக வேண்டும். மக்கள் சக்திக்கு முன்னாடி எந்த சக்தி நிற்க முடியும். பார்க்கலாம். பாதிக்கப்பட்டவங்கள்ல நானும் ஒருத்தன் நானும் உங்க கூடவே இருப்பேன்” என்றவன் நிலஞ்சனாவை பார்த்து “இந்த கேஸ நீ தான் எடுக்கணும்” என்றான்.

சற்று முன்  குழந்தை போல் தன் மடியில் அழுதவன் இவன்தானா? என்று ஆச்சரியமாக அவனை பார்த்த நிலஞ்சனா அடுத்த கணம் “என்ன பெரிய ஹீரோ என்று நினைப்பா உங்களுக்கு. எவனாச்சும் கல்ல கொண்டு மண்டைய பொளந்தா ரத்தத்தை பார்த்திருப்பீங்க”

அவள் கோபத்திலும், பேச்சிலும் ஒருநொடி பாக்யஸ்ரீயை கண்டவன் தலையை உலுக்கிக் கொண்டான்.

அடுத்த சில நிமிடங்களில் வான்முகிலன் பேசியதுதான் ஊடகங்களில் வலம்வரலானது.

Advertisement