Advertisement

அத்தியாயம் 4

விபத்து நிகழ்ந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. சென்னை வழமையான பரபரப்பான நாட்களை போன்று இயங்க ஆரம்பித்திருந்தது. விமான நிலையமும் விபத்து நிகழ்ந்ததற்கான எந்த ஒரு தடயமுமின்றி இயங்கிக் கொண்டிருந்தது.

பாக்யஸ்ரீயை அடக்கம் செய்து விட்டு வந்த வான்முகிலனின் நாட்கள் தான் நகராமல் அவளோடு நின்றிருந்தது. அவன் அறையை விட்டு வரவே இல்லை.

“ஸ்ரீ… ஸ்ரீ” என்று புலம்பியவாறு அவள் நினைவாகவே இருந்தான். ராமின் அழைப்புகளை கூட எடுக்கவில்லை. உயிரற்று அவன் அலைபேசி கூட தூங்கிப் போய் இருக்க, வீடு தேடி வந்த ராமை துரத்தியடித்தான்.

இப்படியே சென்றால் குடும்பத் தொழிலை இழுத்து மூட நேரிடும் இழவு நடந்த வீட்டில் உடனடியாக ஒரு சுபகாரியம் நடந்தாக வேண்டும். வான்முகிலனுக்கும், மாளவிகாக்கும் உடனடியாக திருமணத்தை நடாத்தி விடலாமென்று காஞ்சனாதேவிடம் பேசி தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அடிபோடலானாள் சாருமதி.

காஞ்சனாதேவிக்கு மகனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பது தான் சரியென்று தோன்றினாலும், முதலில் அவன் அவனையே துயரத்திலிருந்து மீட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் திருமணம் செய்தால் திருமணம் செய்யும் பெண்ணை கண்டு கொள்ளாது அவன் பாட்டில் ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பான்.

ஒருவேளை அக்கா பெண்ணை திருமணம் செய்தால் குடும்பத்துக்காக தன்னையே மீட்டுக்கொள்ளவும் கூடும். இதுதான் நடக்க வேண்டும் என்றிருந்தால் அதுவாகவே நடக்கும் எதையுமே நாம் தடுத்து நிறுத்த முடியாதே. மகனுக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டவள் “கொஞ்சம் நாள் போகட்டும்” என்று மகளையும் சமாதானப்படுத்தினாள். 

அழுது அழுது ஓய்ந்தாலும் கனத்த இதயத்தை ஆற்ற வான்முகிலனுக்கு மதுவின் உதவி தேவைப்பட்டது. மதுவை நாடியவன் இரவு, பகல் என்று பாராமல் குடிக்க ஆரம்பித்தான்.

அன்னையாக காஞ்சனாதேவிக்கு மகனின் இந்த நிலைமையை பார்த்திருக்க முடியுமா? “முகிலா வா வந்து சாமி கும்பிடு” என்று அவனை வலுக்கட்டாயமாக குளிக்க வைத்து பூஜையறையில் தன்னோடு அமர்த்திக்கொள்வாள்.

அன்னைக்காக கடவுளின் முன் அமைதியாக கண்மூடி அமர்ந்திருப்பவன் மீண்டும் அறைக்குள் சென்று மதுபாட்டிலோடு ஐக்கியமாகி விடுவான்.

அதை பார்த்த காஞ்சனாதேவி “இந்தநேரத்துல நீங்க இருந்திருந்தா பேசியே அவனை மீட்டெடுத்திருப்பீங்களே. நீங்க இல்லாம போய்ட்டிங்களே. நீங்கதான் கடவுளா இருந்து அவனுக்கு நல்லவழி காட்டணும்” தனது மனக்குமுறலை புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் கணவனிடம் கூறி மனதை தேற்றிக் கொள்வாள்.

காஞ்சனாதேவி கணவன் இல்லையே என்று கலங்கியதற்கு காரணம் இருந்தது.

வான்முகிலனின் தந்தை வஜ்ரவேல் முகிலனுக்கு தந்தை மட்டுமல்ல நல்ல தோழனாகவும் இருந்தவர். 

காலேஜ் சேர்ந்து மூன்று மாதங்கள் கூட சென்றிருக்கவில்லை ஒருநாள் வான்முகிலன் குடித்து விட்டு வந்திருந்தான்.

“ஐயோ அப்பா வர்ற நேரம் அப்பா பார்த்தா…” என்று பதறினாள் காஞ்சனாதேவி.

“என்ன முகில் பிரென்ஸோட படத்துக்கு போய் இருக்க போல. புது பிரென்ஸுக்கு பார்ட்டி வேற கொடுத்தியா? என்ன குடிச்ச?”

தான் காலேஜ் கட்டடித்து விட்டு ஊர் சுற்றியது தந்தைக்கு தெரிந்து விட்டது என்பதே அதிர்ச்சி இதில் குடித்ததை வேறு அறிந்து கொண்டு கேட்கின்றார் என்று தடுமாறிய வான்முகிலன் “ஜஸ்ட் பியர் தான் ப்பா…” என்று சமாளித்தான்.

“எங்கப்பா கராச் வச்சிருந்தாரு. அதனால நான் உழைச்சு முன்னுக்கு வரணும் என்று நினச்சேன். உன் அப்பா தொழிலதிபர் அதனால நீ அப்பா பணத்தை எப்படியெல்லாம் செலவழிக்கணும் என்று யோசிக்கிறது தப்பில்ல.

இன்னக்கி இருக்குற பணம் கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சி காணாம போய்டும். நாம சம்பாதிக்க வேண்டியது நல்ல நண்பர்கள. நல்ல மனிதர்கள.

எந்த ஒரு விஷயத்துக்கும் நாம அடிமையாகக் கூடாது. நம்மள அடிமையாக்குற எந்த ஒரு விஷயமும் நமக்கு நல்லதில்லன்னு நாம புரிஞ்சிக்கணும். நல்லது எது? கெட்டது எது? என்று நான் உனக்கு சொல்லித்தர வேண்டிய வயசுல நீ இல்ல.

இன்னக்கி ப்ரெண்ட்ஸ் சொன்னாங்க என்று தம்மு அடிக்கிறதும், தண்ணி அடிக்கிறதும் சகஜமாக்கிருச்சு. நான் உன் ப்ரெண்ட்ஸ்ஸ எந்த குத்தமும் சொல்ல மாட்டேன். ப்ரெண்ட்ஸ் சொன்னாங்க என்று பாய்சன யாரும் குடிக்கவும் மாட்டாங்க, தண்டவாளத்துல தலையை வைக்கவும் மாட்டாங்க. ஏன்னா செத்துடுவோம்னு தெரியும்.

நமக்கு இது தேவையா? வேணுமா? அவசியமா? என்று முடிவெடுக்குற நிலமைல நாம இருக்கோம்னா, வேணாம்னு சொல்லுற தைரியமும் இருக்கணும். உண்மையான ப்ரெண்ட்ஸ்னா கேட்டுப்பாங்க. புரிஞ்சிப்பாங்க.

உன் வாழ்க எப்படி இருக்கணும் என்று தீர்மானிக்க வேண்டியது நீ ஒருத்தன் தான். இல்ல நான் இப்படித்தான் குடிப்பேன் என்று இருந்தேன்னா வீட்டுலே கொண்டு வந்து தாராளமா குடி. வெளிய குடிச்சி விழுந்தீனா என் மகன் என்று ஊர் பேசி எனக்கிருக்குற கொஞ்சம்நஞ்ச மானம் மரியாதையும் போய்டும் பாரு” என்று உள்ளே செல்ல காஞ்சனாதேவி பின்னாலையே வந்தாள்.

“இனிமேல் குடிக்காதே என்று கன்னத்துல ஒரு அப்பு அப்பாம. அட்வைசு. பத்தாததுக்கு வீட்டுல குடிக்க வேற சொல்லுவீங்களோ” மகனிடம் கோபப்பட முடியாமல் கணவனிடம் கோபத்தை காட்டலானாள்.

“தோளுக்கு மேல வளர்ந்த பையன அடிக்க சொல்லுறியா? இந்த வயசுல எப்படி சொல்லணுமோ அப்படித்தான் சொல்லியிருக்கேன். நீ வீணா கோபப்படாதே. உன் கோபம்தான் சாருகிட்ட இருக்கு” என்று மனைவியை கிண்டல் செய்ய ஆரம்பித்தார்.

அன்று வஜ்ரவேல் பேசிய பின் வான்முகிலன் மதுபானத்தை நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. தன்னால் தந்தைக்கும், தன் குடும்பத்தாருக்கும் எந்தவிதமான தலைகுனிவும் வந்துவிடக் கூடாது. அது போல் தான் நடந்துகொள்ளக் கூடாது என்று அவன் புரிந்து கொண்டிருந்தான்.

ஆனால் இன்று அவன் மனைவியை இழந்த சோகத்தால் மதுபானத்தை நாடியிருக்கின்றான். புத்திமதி சொல்லும் வயதிலும் அவனில்லை. அவனை அவன் போக்கிலையே சென்றுதான் மீட்டெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தாள் காஞ்சனாதேவி. 

காஞ்சனாதேவி “குடிக்காதே” என்று கூறாமல் “வெறும் வயித்துல இப்படி குடிச்சிட்டு படுக்காம சாப்பிட்டு படு” என்று அறைக்கே சென்று ஊட்டி விடுவாள்.

“அம்மா நான் அப்பொறமா சாப்பிடுறேன்மா…” என்று முகிலன் தட்டிக்கழிப்பான்.

“நான் இன்னும் சாப்பிடலடா. உனக்கு ஊட்டி விட்டுதான் நான் சாப்பிடணும்” என்று கூற,

“உன்ன போலவேதான் என் ஸ்ரீயும். என்ன சரியா புரிஞ்சி வச்சிருந்தா” காஞ்சனாதேவியை கட்டிக் கொண்டு அழுது கரைபவன் பாக்யஸ்ரீயை பற்றியும், பிறக்க இருந்த குழந்தையை பற்றியும் பேசிப் பேசியே அவள் ஊட்டுவதை உண்டு முடிப்பான்.

தனது மகனுக்கு இப்பொழுது தேவை இன்னொரு திருமணமல்ல. மன ஆறுதல். அதற்க்கு அவனை தனியாக விடாது. பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று உணர்ந்த காஞ்சனாதேவி. மகனை தனியே விடாமல் கூடவே இருக்கலானாள்.

இந்த மூன்று நாட்களுக்குள் நடந்த மிக முக்கியமான நிகழ்வு, ஆதி க்ரூப் அதிபர் ஆதிசேஷன் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு தான்.

விபத்து நடந்த மறுநாள் காலை பதினொரு மணி  தாண்டியிருந்தது பிரபல தொலைக்காட்ச்சிகள் மற்றும் பத்திரிகைகள் அனைத்துமே ஆதி க்ரூப்பின் கட்டிடத்தில் ஒன்று கூடியிருக்க, ஆதி க்ரூப்பின் குடுப்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் அவர்களுக்கு முன்னால் அமர்ந்திருந்தனர்.

தொலைக்காட்ச்சிகளும் பத்திரிக்கையாளர்களும் மாறி மாறி கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தன. எந்தக் கேள்விக்குமே பதில் சொல்லாது அமைதியாக அமர்த்திருந்தார் ஆதிசேஷன்.

“இப்படி மீடியாவை கூப்பிட்டு வச்சி எதுவுமே பேசாம உக்காந்திருந்தா அது நமக்கே பாக்பயர் ஆகிடும். என்ன அப்பா இப்படி பண்ணுறாரு?” ஆதிசங்கர் கோபத்தை அடக்கியவாறு அருகிலிருந்த ஆதித்யனிடம் பொருமினான்.

“ஆமா பையனுக்கு கல்யாண வயசாகிருச்சு, நாம இன்னும் அப்பா பேச்சு கேட்டுகிட்டு அவர் பேச சொல்லுற வரைக்கும் காத்துகிட்டு இருக்கோம்” என்றான் ஆதித்யன்.

“ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க எல்லாரும் நம்மளதான் பாக்குறாங்க” கூடியிருந்த கூட்டத்தை பார்த்து புன்னகைத்தான் ஆதிதேவ்.

“எல்லாரும் அமைதியா, பொறுமையா ஒவ்வொரு கேள்வியா கேளுங்க அப்போதான் உங்களுக்குத் தேவையான பதில் கிடைக்கும்” ஆதிரியன் பேச அங்கே பேச்சுக் குரல்களுக்கிடையே மெதுவாக அமைதி நிலவியது.

அவர்களுக்கு முன்னால் வந்து நின்ற மலர்விழி ஊடகங்களை எதற்காக அழைத்தார்கள் என்ற காரணத்தை சுருக்கமாக கூறி முடித்தாள்.

மீண்டும் குரல்கள் எழும்ப “நான் பேசலாமா? வேண்டாமா? வேண்டாம் என்றால் இப்படியே கிளம்பிடுறேன்” கர்ஜனையோடு ஆதிசேஷன் பேச சட்டென்று அங்கே அமைதி நிலவியது. 

சில கணங்கள் நிலவிய அமைதிக்குப் பின் தொண்டையை கனைத்து விட்டு ஆதிசேஷன் பேச ஆரம்பிக்கவும் அனைவரது கவனமும் அவர் மீது மட்டும் தான் இருந்தது.

“இயற்கையோட சீற்றத்தால் நடந்த இந்த மாபெரும் விபத்துனால பல உயிர்கள் பலியாகியிருக்குறது ரொம்பவே வருத்தத்துக்குரிய விஷயம். என்னதான் நாம பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இயற்கையோட போட்டி போட முடியாது என்று இயற்கை நமக்கு அடிக்கடி புரிய வைச்சிகிட்டுதான் இருக்கு.

ஆதி க்ரூப்போட 477 விமானத்துல பயணம் செஞ்ச எல்லாரோட பாதுகாப்புக்கும் நாங்க பொறுப்பு. எங்க மீதிருக்கும் நம்பிக்கைலதான் பயணமே மேற்கொண்டிருந்தாங்க. நடந்தது விபத்தாகவே இருந்தாலும் சொந்தபந்தங்கள இழந்து தவிக்கும் அனைவரிடமும் மனசார நானும் என் குடும்பத்தாரும் மன்னிப்பு கேட்கிறேன்” ஆதிசேஷன் தலை வணங்கி மன்னிப்பு கேட்க, அங்கே அமர்ந்திருந்த அவர் குடும்பத்தாரும் எழுந்து தலை வணங்கி மன்னிப்பு கேட்டதோடு இறந்தவர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

மௌனத்தை கலைத்த ஆதிசேஷன் “இறந்த ஒவ்வொருவருக்காகவும் தலா இரண்டு லட்சம் நஷ்ட ஈடு ஆதி க்ரூப்பிலிருந்து வழங்கப்படும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்போரை உடனடியாக எங்களுடைய ஆதி மருத்துவமனைக்கு மாற்றி முற்றாக குணமாகும் வரை சிகிச்சை அளிக்கப்படும்” என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.

ஆதி கருப்பின் அதிபர் ஆதிசேஷன் மக்களிடம் மன்னிப்பு கோரும் காணொளிதான் நாடெங்கும் பேசும் பொருளானது.

“அவங்களுக்கென்னப்பா… பணம் கொட்டிக் கெடுக்குது அள்ளிக் கொடுக்குறாங்க”

“நடந்தது விபத்தா? திட்டமிட்ட சதியா? எதை மறைக்க பணம் கொடுக்குறாங்களோ?”

“இயற்கை அனர்த்தம் என்றாலும் எங்களுக்கென்ன என்று ஒதுங்கி வேடிக்கை பார்க்காம, தன்னோடு விமானத்துல பயணம் செஞ்சவங்களென்று நஷ்ட ஈடும் கொடுத்து சிகிச்சையும் பார்க்கிறார் எவ்வளவு பெரிய மனசு. பெரிய மனிசன் பெரிய மனிசன் தான்பா…”

“அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கும் போல அதான் இதெல்லாம் பண்ணுறாங்கப்பா…”

“மக்களுக்கு நல்லது நடந்தா சரி”

“அரசாங்கம் செய்ய வேண்டியத இவங்க எதுக்கு செய்யிறாங்க?”

“இந்த மாதிரி தனியாருக்கு எல்லாத்தையும் கொடுக்குறதாலதான் விபத்தே நடக்குது”

வீடுகளிலும், பொது இடங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஆளாளுக்கு ஒவ்வொருவிதமாக பேசலாயினர்.

இது எதையுமே கண்டுகொள்ளாமல் ஆதிசேஷன் தான் என்ன செய்ய நினைத்தாரோ அதை செய்யும்படி வாரிசுகளுக்கு ஏவினார். ஆதிசேஷனை மறுத்து பேசும் தைரியம் இல்லாத அவர்களும் அமைதியாக அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சி செய்யலாயினர்.

“ஆன்டி பவானி எங்க போறான்னு சொன்னாளா? நேத்து ஈவ்னிங்க இருந்து அவ போன் வேல செய்ய மாட்டேங்குதே. போன ஆப் பண்ணி வைக்க மாட்டாளே” குளித்து விட்டு தலை துவட்டியவாறே நிலஞ்சனா வீட்டு உரிமையாளரான நித்தியகல்யாணியை கேட்டாள்.

“எனக்கென்னமா தெரியும்? நான் தனியாக இருக்கேன்னுதான் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டிருக்கேன். வேலைக்கு போனோமா நேரங்காலத்தோட வீட்டுக்கு வந்தோமான்னு இருக்கோணும். இந்த பொம்பள பசங்க ஊரு மேஞ்சிட்டு நடுராத்திரியில் இல்ல வருதுங்க” ஆதிசேஷன் பேசும் காணொளி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்க அதை அனைத்து விட்டு பதில் சொன்னாள் நித்யகல்யாணி.

கணவனை இழந்த நித்யகல்யாணிக்கு ஒரு மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றான். தனியாக இருக்காதே என்னோடு வந்து விடு என்று மகன் அழைத்தால் நீ திருமணம் செய்து கொள் வருகிறேன் என்று மகனை மிரட்டுபவள் தனியாக இருக்க அச்சப்பட்டுக் கொண்டு வேலைக்கு செல்லும் நான்கு பெண்களுக்கு சில பல நிபந்தனைகளோடு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறாள். பவானி இந்த வீட்டில் தான் தங்கியிருக்கின்றாள்.  நிலஞ்சனாவை தங்க ஏற்பாடு செய்திருந்ததால் அவள் இங்கு வந்து விட்டாள் பவானியை காணவில்லை.    

“பவானி லேட் நைட் வர மாட்டாளே” தனது தோழியை பற்றி தன்னை தவிர யாருக்குத் தெரியும்? என்ற முகபாவனையை கொடுத்தாள் நிலஞ்சனா.

“நான் பொதுவாகச் சொன்னேன். பவானி நைட் எங்கயும் போக மாட்டா. ஆனா ஆபீஸ் வேலையா அடிக்கடி வெளியூர் போவா. எங்க போறா? யார் கூட போறான்னு யாருக்குத் தெரியும்? போற இடத்தை என் கிட்ட சொல்லிட்டா போறா? போனா நைட் தங்கிட்டு காலைல வந்துடுவா. இல்ல ரெண்டு மூணு நாள் கூட ஆகும்” என்றாள் நித்யகல்யாணி.

ஒருவேளை பவானி வெளியூர் கூட சென்றிருக்கலாம். ஆனால் அலைபேசியை அனைத்து வைக்க வேண்டிய அவசியமில்லையே. இன்று  ஒருநாள் அவள் வருவாளா என்று பார்க்கலாம் வரவில்லையென்றால் பவானி வேலை செய்யுமிடத்துக்கு சென்று என்ன? ஏது என்று விசாரிக்கலாமென்று முடிவு செய்தாள் நிலஞ்சனா.

பவானி வீட்டுக்கும் வரவில்லை. அலைபேசி எண்ணுக்கும் தொடர்புகொள்ள முடியவில்லையென்றதும் மூன்று நாட்களாக நிலஞ்சனா பவானி வேலை செய்யும் வி.எம் நிறுவனத்துக்கு வந்து நின்றாலும் உள்ளே கூட விடாமல் காவலாளி துரத்தியடித்தார்.

“விசாரிக்கக் கூட உள்ள விடமாட்டேங்குறாங்களே என்ன கம்பனி இது?” பொறுமியவள் போலீசில் ஒரு கம்பிளைன் கொடுக்கலாமென்று முடிவு செய்து காவல் நிலையம் சென்றாள்.

பவானியை கண்டு பிடித்து தருமாறு கேட்டால் சென்னைக்கு புதிதான இவளிடம் ஏகப்பட்ட கேள்விகளை கேட்க இவள் முழிபிதுங்கி நின்றாள்.

நிலஞ்சனா விளிக்கவும் பவானியை பற்றி தப்பாக பேச ஆரம்பித்தார் அந்த சப் இன்ஸ்பெக்டர்.

“சார் அவ ஓடிபோய்ட்டா, அது, இது என்று பேசுறத நிறுத்துங்க. நான் அவளோட பெஸ்ட் பிரென்ட் என்கிட்டே கூட சொல்லாததை அவ போன் காட்டிக் கொடுக்கும். நான் அத உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே. மாடன் டிரஸ் போட்டா தப்பா பேசுறது, டாட்டூ குத்தினா தப்பா பேசுறது. பசங்க ப்ரெண்டா இருந்தா தப்பா பேசுறது. எல்லா தப்பும் பொண்ணுங்கதான் பண்ணுறாங்க. பொண்ணுகளாலத்தான் தப்பே நடக்குது என்று பேசாதீங்க.

என் ப்ரெண்ட தப்பா பேசினத்துக்கே நான் உங்க மேல கேஸ் கொடுக்கலாம். பொறுப்பான பதவியில இருக்குற நீங்களே இப்படி பொறுப்பில்லாம பேசினா குற்றம் எப்படி குறையும்?

அவ காணாம போய் மூணு நாளாச்சு. இந்நேரத்துக்கு உசுரோட இருக்கலான்னே தெரியல. அவ வேல பார்த்த வி.எம் கம்பனிக்கு  விசாரிக்கலாம்னு போனா உள்ளேயே விடமாட்டேங்குறாங்க” நிலஞ்சனா சப் இன்ஸ்பெக்டரை வாங்கு வாங்கு என்று வாங்கிக் கொண்டிருக்க,

“எந்த கம்பனி?” என்று தலையிலிருந்த தொப்பியை கழற்றியவாறே உள்ளே வந்தார் இன்ஸ்பெக்டர் மதியழகன்.

“வி.எம்” என்றாள் நிலஞ்சனா.

“காணாம போன பொண்ணு பவானி. வயசு 24”

“ஆமா சார்” இன்ஸ்பெக்டரின் பின்னால் நிலஞ்சனா அவர் அறைக்குள் நடந்தாள்.

“பவானிக்கு உங்களுக்கும் என்ன உறவு?” அமர்ந்தவாறே அவர் இருக்கைக்கு முன்னால் இருக்கும் இருக்கையை காட்டி அமர சொன்னார் இன்ஸ்பெக்டர்.

தான் ஒரு வக்கீல் என்று இன்ஸ்பெக்டர் மதியழகனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தானும் பவானியும் எப்படி தோழிகளானோம் என்ற கதையை சுருக்கமாக கூறி முடித்த நிலஞ்சனா “பவானி எங்க சார்?” என்று கேட்டாள்.

“வி.எம் கம்பனி எம்.டி மிஸ்டர் வான்முகிலனோட பி.ஏ ராம் பவானியை மூணு நாளா காணல. வேலைக்கு வரல னு கம்பளைண்ட் கொடுத்தாரு. அது விஷயமாகத்தான் போய் இருந்தேன்”

“அவ வேல விஷயமா அடிக்கடி வெளியூர் போறதா ஹவுஸ் ஓனர் சொன்னாங்க. கம்பனில தரவா விசாரிங்க” தனது அலைபேசி எண்ணை கொடுத்த நிலஞ்சனா யோசனையாக வீடு திரும்பினாள்.

“அம்மா உனக்கு என்ன பார்த்தா கோபம் வருதில்ல. அடிக்கணும் போல இருக்கா? திட்டனும் போல இருக்கா?” காஞ்சனாதேவியின் மடியில் படுத்தவாறு கேட்டான் வான்முகிலன்.

பாக்யஸ்ரீ இறந்து பத்து நாட்களுக்கு மேலாகிறது. தான் சதா குடித்துக் கொண்டு அறையில் அடைந்து கிடப்பதை பார்த்து அன்னை எதுவுமே சொல்லவில்லை. தன்னுடைய இந்தநிலையை பார்த்து அவள் நிச்சயமாக வருந்த மாட்டாளா? தான் இப்படியே இருந்தால் கோபப்பட மாட்டாளா? இந்த துயரத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என்ற எண்ணம் வான்முகிலனுக்குள் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்திருக்க, இவ்வாறான கேள்விகள் அவனிடமிருந்து வந்திருந்தது.

“பொறப்பு, இறப்பு, வலி, வேதனை, இன்பம், துன்பம் எல்லாமே மனிசனுக்குதான்ப்பா வரும். எல்லாத்தையும் நாம அனுபவிக்கனும், கடந்தும் வரணும். ஒரே இடத்துல தங்கிட முடியாது. நீ இப்படி இருக்குறது பாக்யாவுக்கு பிடிக்குமா? அவ இருந்தா என்ன சொல்லுவா? பதினாறாவது நாள் காரியம் பண்ணனும். நீ ரூம்ல இருந்தாலும் நடக்குறது எல்லாம் நடந்துக்கிட்டுதான் இருக்கு” பாக்யா இறந்துட்டா மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை பார் என்று சொன்னாள் காஞ்சனாதேவி.

கதவை திறந்துக் கொண்டு வந்த சந்திரமதி “ராம் வந்திருக்கான். டெலியும் வாரான். இத்தனை நாள் தனியா சமாளிச்சிட்டான் போல. இன்னக்கி எதோ பெரிய பிரச்சினை போல, உன்கிட்ட பேசியே ஆகணும் என்று வந்திருக்கான்” என்றாள்.

“சரி வைட் பண்ண சொல்லு வரேன்” தண்ணீரை அருந்தி விட்டு வான்முகிலன் எழ,

“சந்திரா… ராம ஆபீஸ் ரூம்ல வைட் பண்ண சொல்லு” என்ற காஞ்சனாதேவி “இப்படியா போகப்போற? வீட்லயானாலும் ஆபீஸ் விஷயம் பேசும் போது உன் அப்பா எப்படி இருப்பாரு? கொஞ்சம் நீயே உன்ன கண்ணாடில பாரு. போ போய் குளிச்சிட்டு வா. அதுவரைக்கும் ராம் ஏதாவது சாப்பிடட்டும்” என்று காஞ்சனாதேவி அறையை விட்டு சென்றாள். 

வான்முகிலன் குளித்து, தயாராகி வெளியே வர “இனி எல்லாமே நல்லதாக நடக்கட்டும்” என்று வேண்டிக் கொண்டு காஞ்சனாதேவி அவனுக்கு திருநீர் பூசிவிட்டாள்.

கொஞ்சமாக முளைத்திருந்த தாடியும், கலையிழந்த அவன் முகமும் அவன் சோகத்தை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டத்தான் செய்தது.

பத்து நாட்களாக கம்பனி பக்கமே செல்லவில்லை. ராம் இருந்ததால் பார்த்துக் கொண்டான் என்ற சிந்தனையிலையே காரியாலய அறைக்குள் வந்தவன் அங்கே நிலஞ்சனா அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ந்து நின்றான்.

அவனை பார்த்து சினேகமாக புன்னகைத்தவள் மறுநொடி “உங்க மனசுல நீங்க என்னதான் நினைச்சுகிட்டு இருக்கிறீங்க? இவ்வளவு பெரிய கம்பனிக்கு எம்.டி என்றா எவ்வளவு பொறுப்பா இருக்கணும். ஆனா நீங்க கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இப்படி கம்பனிக்கு லீவ் போட்டு வீட்டுல படுத்து தூங்கிகிட்டு இருக்கிறீங்க” வான்முகிலனை பார்த்த உடன் எழுந்து நின்ற நிலஞ்சனா பொரிந்து தள்ளினாள். 

   

“ராம்… ராம்… ராம்.. எங்கடா போய் தொலைஞ்ச” ராம் தானே வந்திருப்பதாக அக்கா சொன்னாள் இந்த பெண் எங்கே வந்தாள்? ராம் கூடத்தான் வந்திருப்பாள் என்று நொடியில் புரிந்து கொண்டவன் ராமை அழைத்தான்.

நிலஞ்சனா வான்முகிலன் தனக்கு விமானத்தில் உதவி செய்தவன் என்று அடையாளம் கண்டு கொண்டுதான் புன்னகைத்தாள் போலும் மறுநொடி வந்த விடயம் ஞாபகத்தில் வரவே திட்ட ஆரம்பித்தாள்.  

அலைபேசி அழைப்பு வந்தததால் வெளியே சென்று பேசிக் கொண்டிருந்த ராம் ஓடி வந்திருந்தான்.

“ஆபீஸ் விஷயமாக வந்தியா? பெர்சனல் விஷயம் பேச வந்தியா? உன் லவ் மேட்டர் எல்லாம் நான் ஹாண்டல் பண்ண முடியாது. முதல்ல உன் லவ்ர கூட்டிகிட்டு வெளிய போ”

நிலஞ்சனா தான் யார் என்று அறிந்துதான் விமானத்தில் பேசினாள், வண்டியில் வந்தாள், இதோ இப்பொழுது ராமோடு வீட்டுக்கே வந்து சத்தம் போடுகிறாள் என்று எண்ணினான் வான்முகிலன்.

“என்னது லவ்ரா?” நிலஞ்சனாவும் ராமும் ஒரேநேரத்தில் அதிர்ந்து விழிக்க, தான் தான் தவறாக எண்ணி விட்டோம் என்று புரிந்து கொண்டான் வான்முகிலன்.

நிலஞ்சனா கோபமாக பேச ஆரம்பிக்க கை நீட்டி தடுத்தவன் “சரி என்ன விஷயமாக வந்திருக்குறீங்க என்று சொல்லுறீங்களா? எனக்கு நிறைய வேல இருக்கு” என்றான்.

வான்முகிலன் மீது கோபம் கோபமாக வந்தாலும் தான் வந்த காரியம் நிறைவேற வேண்டுமல்லவா. பொறுமையாக அவன் எதிரே அமர்ந்தாள்.

“என் பெயர் நிலஞ்சனா ராஜகோபால். நான் பவானியோட பிரென்ட். சாருக்கு பவானி யார் என்று தெரியுமா? இல்ல மறந்துட்டீங்களா?” என்று நிலஞ்சனா வான்முகிலனை கிண்டலாக கேட்டு வைக்க, அவன் ராமைதான் பார்த்தான்.

இப்போது அவன் இருக்கும் மனநிலையில் பவானி யார் என்று சத்தியமாக வான்முகிலனுக்கு ஞாபகத்தில் வரவில்லை. அதை நிலஞ்சனாவிடம் காட்டிக்கொள்ள முடியுமா? சமாளிக்கும்படி தான் ராமை பார்த்தான்.

“நம்ம அக்கவுண்டன் பவானி வெளியூர்ல இருக்குற நம்ம கம்பனிகளுக்கு விசிட் பண்ணுவாங்கல்ல. பத்துநாளா அவங்கள காணோம் சார். நாமதான் அவங்கள வெளியூருக்கு அனுப்பி வச்சோமா என்று இவங்க விசாரிக்க வந்திருக்காங்க”

“இதுக்காக வீட்டுக்கே கூட்டிட்டு வருவியா?” நிலஞ்சனாவை பார்க்காமல் ராமை முறைத்தான்.

“மிஸ்டர் ராம் பவானியை எங்கேயுமே அனுப்பலனு தான் சொன்னாரு. எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்லை”

“இல்லனா? போலீசுக்கு போய் கம்பிளைன் கொடு. என்ன என்ன வுமனைசர் என்று நினைச்சியா?” கோபத்தை அடக்கியவாறு அமர்ந்திருந்தான் வான்முகிலன்.

“அது எப்படி எனக்குத் தெரியும்? நான் உங்க கூடவா இருக்கேன்? எனக்கு உங்க கம்பனில வேல போட்டு கொடுங்க கூடவே இருந்து உங்கள பத்தியும் தெரிஞ்சிக்கிறேன். பவானியையும் கண்டு பிடிக்கிறேன். அதுக்கு முன்னாடி அன்னக்கி டாக்சிக்கு பாதி பணம் கொடுக்குறேன்னு சொன்னேனே அத வாங்காமலே போயிட்டீங்க. முதல்ல பணத்தை பிடிங்க. எனக்கு கடன் வைக்கிறது பிடிக்காது” என்று பணத்தை எடுத்து அவன் கையை இழுத்து கையிலையே வைத்தாள் நிலஞ்சனா.

“யார்டா இவ?” என்று அதிர்ந்து நின்றான் வான்முகிலன்.

Advertisement