Advertisement

அத்தியாயம் 27

ஆதிசேஷனும் அவரது குடும்பத்தாரும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட காட்ச்சிகளும், விமான விபத்தை பற்றியும் தான் ஊடகங்களில் பிரதான செய்தியாக வளம் வந்து கொண்டிருந்தன.

மலர்விழியை விசாரணைக்காக காவல்துறை அழைத்து சென்றிருக்கிறார்கள் என்று தெரிந்த உடனே தனம் தான் பெற்ற மகன்களை அழைத்து பேசினாள்.

“உங்கப்பா மேல உங்களுக்கு எவ்வளவு பாசம் இருக்கு?”

“என்னமா கேள்வி இது?”

“சில விஷயங்களை நான் இது வரைக்கும் உங்க கிட்ட சொன்னதே இல்ல. அதெல்லேம்மாம் என்னோட போகட்டும் என்று இருந்துட்டேன். ஆனா உங்க அப்பா பண்ணுற எல்லாமே நம்ம குடும்பத்தை தான் பாதிக்குது” என்ற தனம் ஆதிசேஷனாலும், ஆதிசிவனாலும் தன் குடும்பத்துக்கு என்ன ஆனது, மலர்விழி ஏன் ஆதிசேஷனையும் தங்களுடைய குடும்பத்தையும் பழிவாங்க துடிக்கின்றாள் என்பதையும் கூறினாள்.

தாங்கள் முன்மாதிரியாக நினைக்கும் தந்தையா இவ்வளவு பெரிய அநியாயத்தை செய்தார் என்று அன்னையை கட்டிக் கொண்டவர்கள் தேன்மொழிக்காகவும் வருந்தினார்கள்.

“மலர்விழிய போலீஸ் விசாரணைக்காக கூட்டிட்டு போய் இருக்காங்க. அவ வெளிய இருந்தா என்னவெல்லாம் செய்வாளோ என்று பயம் இருந்தது. அப்பாவியா முகத்தை வச்சிக்கிட்டு நம்ம குடும்பத்தை காவு வாங்க போலீஸ் கிட்ட என்ன வேணாலும் சொல்லுவா. அவ மாட்டிகிட்டான்னு தெரிஞ்சா நம்ம குடும்பத்தோட கூண்டுலேத்த பார்ப்பா. அப்படி அவ என்ன செய்யக் கூடும் உங்களுக்கு ஏதாவது தோணுதா?” 

அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது வான்முகிலன் தனத்தை அழைத்து, நடந்த விமான விபத்து முழுக்க முழுக்க சதியென்றும் அதை எவ்வாறு மலர்விழி நிகழ்த்தினாலென்றும் அடுத்து அவள் என்ன செய்யக் கூடுமென்று கூறினான்.

வான்முகிலன் பேசியதை அங்கிருந்த அனைவருமே கேட்டுக் கொண்டுதான் இருந்தனர்.

வான்முகிலனுக்கு நன்றி சொல்லி அலைபேசியை துண்டித்த தனம் “இப்போ சொல்லுங்க. உங்க அப்பாவ காப்பாத்த போறீங்களா? இல்ல அவரோட சேர்ந்து நீங்களும் ஜெயிலுக்கு போகப்போறீங்களா? இல்ல உங்கள நீங்களே காப்பாத்திக்க போறீங்களா?”

“அவரை காப்பாத்துறதும், அவரோட சேர்ந்து ஜெயிலுக்கு போறதும் ஒன்றுதான்” என்றான் ஆதிதேவ்.

தந்தையென்ற பாசத்தையும் தாண்டி தங்களது குருவாகத்தான் ஆதிசேஷனை மூவரும் பார்த்தனர். மலர்விழியை என்று வீட்டுக்கு ஆதிசேஷன் அழைத்து வந்து தன்னுடைய மகள் என்று கூறினாரோ, இந்த வயதில் இப்படியொரு காரியத்தை செய்து விட்டாரே என்ற கோபம் இருந்தது. எந்த காரணத்துக்காக தேன்மொழியை மணந்தார் என்று அறிந்துகொண்டார்களோ ஆதிசேஷனை வெறுக்கவே ஆரம்பித்து விட்டார்கள்.

“ஆமா… அவர காப்பாத்த முயற்சி செஞ்சா அவர் செஞ்ச எல்லாத்துக்கும் நாங்களும் உடந்தை என்று தான் அர்த்தம். அவர் பண்ணதுக்கு அவர் தண்டனை அனுபவிக்கனும் என்றா மலர்விழி பண்ண எல்லாத்தையும் அவர் பண்ணதா சொல்லி நாம தப்பிக்கும்” என்றாள் தனம்.

அவ்வாறு தான் காவல் நிலையத்திலும் கூறிக் கொண்டிருந்தாள். 

“இங்க பாருங்க இன்ஸ்பெக்டர் சொத்து முழுக்க என் பெயர்ல தான் இருக்கு. ஆனா தொழிலை கவனிக்கிறது என் புருஷன். அவர் ஏகப்பட்ட தொழில் செய்யிறாரு. எங்க சைன் பண்ண சொல்லுறாரு அங்க எல்லாம் சைன் பண்ணி கொடுப்பேன். தொழில் விசயத்துல நான் மூக்கை நுழைக்க மாட்டேன். ஒரு வருஷமா நான் ஸ்ட்ரோக் வந்து கை, கால் விளங்காம கட்டில்ல கிடந்தேன். இப்போதான் தேறி வரேன். அவசரத்துக்கு உதவும் என்று நான் வெத்து பேப்பர்ல வேற சைன் பண்ணி கொடுத்திருக்கேன். அதுல அவர் என்னத்த நிரப்பி, என்ன பண்ணாரு. நீங்க தான் விசாரிக்கணும்” என்றாள்.

“ஜோசியத்தை நம்புற ஆதிசேஷன் பொண்டாட்டிய தான் தொட்டதெல்லாம் துலங்கும் தேவதையா பாக்குறாரு அதனால அவர் என்ன தொழில் செய்ய போனாலும் அவங்க கிட்ட கேட்டுட்டு தான் செய்வாராம். எந்த டீல் போட்டாலும் சொல்வாராம். அவ்வளவு மரியாதை, அன்பு, பக்தி” என்று நிறுவனத்துக்குள்ளே ஆதிசேஷன் உருவாக்கிய விம்பத்தை தனம் கண்டு கொள்ளாமல் இருந்தமைக்கான காரணம் இப்படியொரு கணக்கு போட்டு வைத்திருந்தமையால் தான்.

போலீசார் விசாரித்ததில் சொத்து தனத்தின் பெயரில் இருந்தாலும் ஆளும் அதிகாரம் ஆதிசேஷனுக்கு இருந்ததால் தனத்தை விடுவித்தனர்.

“இங்க பாருங்க இன்ஸ்பெக்டர் ஏர்கிராப்ட் மனுபாக்ச்சரிங் பெரிய ப்ரொஜெக்ட் அதனால நாம எல்லாரும் சேர்ந்து வேலை பார்த்தோம் என்று என் தங்கச்சி, அதான் என் அப்பாவோட பி.ஏ மலர்விழி சொன்னது உண்மை தான்.

எங்க கெமிக்கல் பாக்டரில அரசாங்க அனுமதியோடு தான் கெமிக்கல்ஸ் தயாரிக்கிறோம். தயாரிக்கிற எங்களுக்குத் தெரியாதா? அத எப்படி வெளிய கொண்டு போகணும் என்று? நீங்க சொல்லுற கெமிக்கலை தரைவழியா கொண்டு போக முடியும். சொந்தமா பிளைட்டு வச்சிருக்குறவங்கதான் கெமிக்கல் தயாரிக்கணும் என்று சொல்லுவீங்க போலயே

பாக்டரி அப்பா பேர்ல இருந்தாலும் அந்த கெமிக்கல் என் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணி இருக்குறதுக்கு உண்மை தான். ஆனாலும் அப்பா தான் எல்லாத்தையும் ஹாண்டல் பண்ணுவாரு” என்றான் ஆதிசங்கர்.

“ஆமா சார் கெமிக்கலை கொண்டு போக சைன் போட்டது நான் தான். நான் இல்லனு சொல்ல மாட்டேன். ஆனா யார் எங்க கொண்டு போகணும், எப்படி கொண்டு போகணும் என்று முடிவு பண்ணுறது அப்பா. அது அவரோட பி.ஏகு தான் தெரியும்” ஆதிசேஷனை மட்டுமன்றி மலர்விழியையும் சேர்த்து கோர்த்து விட்டான் ஆதித்யன்.

“ஏன் சார் இது உங்களுக்கே அநியாயமா தெரியலையா? பிளைட் 477 மட்டும் தான் என் பேர்ல இருக்கா? இல்ல அந்த பிளைட்ட மட்டும் கண்காணிக்கிறது தான் என் வேலையா?

   

பிளைட்ல வேல பார்த்தவங்களுக்கே கெமிக்கல் உள்ள வந்தது தெரியல. சீசீடிவில சிக்கல. மலர்விழி சொன்னா. அது கூட பொய்யாகலாம். ப்ளாக் பாக்ஸ் ரிப்போர்ட் சொல்லுது என்று சொல்லுறீங்க அது பொய்யாகாதே. முதல்ல கெமிக்கல் எப்படி உள்ள வந்தது? யார் கொண்டு வந்தாங்க என்று கண்டுபிடிங்க. காத்துல பட்ட உடனே தீ பாத்துறதால விஷயம் தெரியாத யாரும் இத உள்ள கொண்டு வந்திருக்க முடியாது. அதுவும் எங்க அப்பா அனுமதி இல்லாம கொண்டு வந்திருக்கவே முடியாது. இந்த மாதிரியான ஒரு கெமிக்கலை அவர் சாதாரண ஒருத்தங்க கைல கொடுத்து விடுவாரா? மிக முக்கியமான, தன்னோட நம்பிக்கையானவங்களோட கைலாயதாதான்  கொடுத்து விடுவார்” அது மலர்விழி தான் என்று சொல்லாமல் சொன்னவன்

“இவ்வளவு பிரச்சினை இருக்க நான் எப்படி பொறுப்பாக முடியும்? எங்கப்பா பணம் கொடுத்து என்னத்தையோ பண்ணி இருக்காரு என்று தெளிவா தெரியுது” புலம்பலாவது போல் கூறினான் ஆதிதேவ்.

“பிளைட்ட இன்சூரன்ஸ் பண்ணது உங்க பையன் ஆதிரியன்” என்று இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆரம்பிக்க,

“இங்க பாருங்க இன்ஸ்பெக்டர் எங்க அப்பா என்ன சொல்லுறாரோ அதை தான் நாங்க செய்யிறோம். நாங்களே கேள்வி கேட்க முடியாது. இதுல எங்க பசங்க என்ன பண்ணுவாங்க?” கொஞ்சம் கோபப்பட்டான் ஆதிசங்கர். 

“விபத்து நடந்துருச்சு. மக்களுக்கு உதவி செய்யணும் என்று மனசார உதவி செஞ்சோம். ஆனா எங்கப்பா அதுலயும் ஆதாயம் பார்த்திருக்காரு என்று நினச்சா அசிங்கமா இருக்கு” என்று மூவருமே ஒரே மாதிரி பேசி நடந்த விமான விபத்துக்கு தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று வாதாடினர்.

அவர்கள் வாதாடினால் மட்டும் பத்தாதே ஆதாரத்தை அழிக்க வேண்டும். மலர்விழி என்னவெல்லாம் திட்டமிட்டிருப்பாள் என்று யோசித்த தனம் ஆதிசேஷனை சந்திக்க வந்தாள்.

ஆதிசேஷன் காவல்துறை பாதுகாப்பில் தான் இருந்தார். ஊடகங்களில் வரும் செய்திகளால் மக்கள் கூட்டம் கூட்டமாக காவல் நிலையத்து முன் வந்து நின்று போராட்டம் செய்யலாயினர்.

ஆதிசேஷனின் தலை தென்பட்டாலோ, அவரது குடும்பத்தார் தலை தென்பட்டாலோ போதும் கல்லடி தான்.

ஆதிசேஷனின் நிறுவனங்கள், குடோன், கடைகள், தொழிற்சாலைகள் என்று பல இடங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. எத்தனை இடங்களுக்கு போலீசார் பாதுகாப்பு போட முடியும்?   

“ஆதிசேஷன் குற்றத்தை ஒத்துக்கொண்டாளாவது மக்கள் அமைதியாவார்கள். செய்த குற்றத்தையே அவர் ஒத்துக்கொள்ள தயாராக இல்லாத போது, செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்வாரா?

ஊன்றுகோலின் உதவியோடு தனம் நடந்து வந்து ஆதிசேஷனின் முன் அமர தனத்தை ஏகத்துக்கும் முறைத்தார் ஆதிசேஷன்.

“என்ன எதுக்கு முறைக்குறீங்க? நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்களே உங்க பொண்ணு, மகா… லக்ஷ்மி அவளாலத்தான் இந்த எல்லா பிரச்சினையும்” மலர்விழி என்னவெல்லாம் செய்தாள். போலீசிடம் என்னவெல்லாம் சொன்னாள் என்று தனம் பொறுமையாக கூறினாள்.  

மலர்விழி போலீசாரிடம் கூறிய வாக்குமூலம் ஆதிசேஷனுக்கு தெரியாதா? தனம் மலர்விழியை பற்றி அறிந்தும் தன்னிடம் மறைத்தாள் என்று தான் முறைத்தார்.

“அம்பது வயசுல ஒரு பொண்ண பெத்தீங்க. அவளால நீங்க இந்த வயசுல ஜெயிலுக்கு போக போறீங்க. உங்களால உங்க பசங்களும் போகணுமா? அவ உங்கள மட்டுமல்ல நம்ம பசங்களையும் சேர்த்து கோர்த்து விட்டிருக்கா. பசங்கள மட்டுமா? படுத்த படுக்கையாக இருக்குற ஆதிரியன், ஆதித், ஆகாஷ் எல்லாரையும் தான்” என்றாள்.

ஆதிசேஷஷன் எதுவுமே பேசவில்லை.

“உங்களால இதுல இருந்து வெளியே வர முடியாது. பசங்கலயாச்சும் காப்பாத்துங்க” என்று தனம் கிளம்பினாள்.

ஆதிசிஷன் ஊரை அடிச்சு உலையில் போட்டு சொத்து சேர்த்தது தன் குடும்பத்துக்காகத்தானே அவர்களை ஜெயிலில் பார்க்க ஆசைப்படுவாரா? எல்லா குற்றத்தையும் தான் தான் செய்ததாகவும் தனக்கு உடந்தையாக இருந்தது மலர்விழி மட்டும் தான் என்றும் கூறினார். கதிரவனை பற்றி தான் அவருக்குத் தெரியாதே.

ரம்யாவின் கணவன் ஜவகர் தன்னை கடத்தியது ஆதிதி என்றதில் ஆதிதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டாள்.

கனகவள்ளி கதற, ஆதிதி ஜவஹரை மட்டுமல்ல, நிலஞ்சனாவையும் கடத்த முயன்றதாகவும் வான்முகிலனிடம் பேசி அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறி விட்டதாகவும், ஆனாலும் ஜவகரையை கடத்தியதால் ஆதிதி மாட்டிக் கொண்டு விட்டாள் அதற்கு அவள் தண்டனை அனுபவித்துத்தானாக வேண்டும் என்று கூறினாள் தனம். 

“சார் ஆகாஷ் ஒரு அப்பாவி நிச்சயமாக பைலட் ராஜேஷ ஆகாஷ் கடத்தியிருக்க மாட்டான். பைலட் ராஜேஷுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கா என்று கொஞ்சம் பாருங்க” என்று வான்முகிலன் இன்ஸ்பெக்டர் மதியழகனைடம் கோரிக்கை விடுத்திருக்க,

தனமும் தன் பங்குக்கு ஆகாஷால் தனியாக இந்த மாதிரியான வேலைகளை செய்ய முடியாது என்று கூறி விசாரணையை தீவீரமாக்கும்படி கேட்டுக் கொண்டாள்.

பைலட் ராஜேஷை மிரட்டியது அலைபேசி வழியாக அது ஆகாஷின் குரல் தான் என்று பைலட் ராஜேஷ் உறுதியாக சொல்லி விட்டார். ஆகாஷுக்கு எதிராக இருக்கும் ஒரே ஆதாரம் அவன் பைலட் ராஜேஷை மிரட்டியதாக சொல்லும் அலைபேசி அவன் காரியாலய அறையிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது தான்.

ஆனால் அதில் அவனது கைரேகையை இல்லாதது இன்ஸ்பெக்டர் மதியழகனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பைலட் ராஜேஷிடம் பேசிய ஆடியோ இருந்தாலாவது ஆகாஷின் குரலா? இல்லையா? என்று பரிசோத்தித்து ஆகாஷை வெளியே கொண்டு வந்திருக்கலாம். அதற்கும் வழியில்லாமல் போக பைலட் ராஜேஷையும் அவன் குடும்பத்தாரையும் கடத்திய குற்றத்துக்காக ஆகாஷ் சிறை செல்ல வேண்டியிருந்தது.

மிரட்டி டுவிட் போட சொன்னது நடந்து விபத்து திட்டமிட்ட சதியென்று தானே. அது பொய்யில்லையே உண்மையை வெளியே கொண்டு வர ஆகாஷ் இப்படி முயற்சி செய்திருக்கிறார் என்று ஆதி குரூப்பின் வக்கீல் பரமசிவம் வாதாடி ஆகாஷுக்கு குறைந்தபட்ச தண்டனையை பெற்றுக் கொடுத்திருந்தார்.

“என்ன மன்னிச்சிடுப்பா. பைலட் ராஜேஷ் கிட்ட பேசி கேஸ வாபஸ் வாங்க முடியுமான்னு பார்த்தேன். அவர் ஒத்துக்குவே இல்ல. ஆதிதி டைவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிட்டா. எங்க குடும்பத்துல இருந்து உனக்கு விடுதலை கிடைச்சிருச்சு. உன் சொத்துக்களையும் உன் பேரலையே எழுதிட்டேன். நீ வெளிய வந்ததும் நிம்மதியா, சுதந்திரமா இருக்கலாம்” ஆகாஷை பார்க்க வந்த தனம் கூறினாள்.

“ஆதிதிய பார்த்ததும் பிடிச்சதுனாலதான் தான் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளுக்கு வான்முகிலன பிடிக்கும் என்று தெரிஞ்சும் அவளுக்காக காத்திருந்தேன். அவ சொல்லுறதெல்லாம் செஞ்சேன். அந்த ஜவஹர அவ கூட சேர்ந்து நானும் தான் கடத்தினேன்.

மலர்விழி சிக்க வச்சி குடும்பத்துல இருந்து துரத்தணும் என்று சொன்னா. ஆனா அதுவும் வான்முகிலனுக்காக என்று அப்போ எனக்கு புரியல. பைலட் ராஜேஷ நான் கடத்தாடியும், ஜவஹர கடத்தியிருக்கேன். இந்த தண்டனை எனக்கு தேவை தான்” என்றவனை ஆயாசமாக பார்த்தாள் தனம்

“நீ வெளிய வந்தா என்ன வந்து பாரு. உனக்கு என்ன உதவி வேணும்னாலும் இந்த பாட்டி இருக்கேன்” என்று விடைபெறறாள்.

மக்கள் பயணிக்கும் விமானத்தில் இரசாயனத்தை போக்குவரத்து செய்த குற்றத்துக்காகவும், அதனால் ஏற்பட்ட உயிர்களின் இழப்புக்காகவும் ஆதிசேஷனுக்கு ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்த மலர்விழிக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

மலர்விழியை காண வந்திருந்தான் வான்முகிலன் 

 “உன்னுடைய இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம். அதுக்காக நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன்” என்றான்.

“என்ன போலீஸ்ல மாட்டியும் விட்டு நல்லவன் போல வேஷம் போடுறியா?” வான்முகிலனை பார்த்ததும் கோபப்பட்டாள்.

“நீ பண்ண விஷயங்களால தான் இப்போ நீ உள்ள இருக்க. நீ நினைக்கிறது போல அப்பா பெயர் தெரியாதவ எங்குறதுக்காக நான் உன்ன வேணாம் என்று சொல்லல. அப்படி நினைச்சிருந்தா நான் உன் கூட பழகியிருக்கவே மாட்டேன்” தான் ஏன் மலர்விழியை புறக்கணித்தேன் என்பதை தெளிவாக கூறிய வான்முகிலன்

“என் சூழ்நிலை நல்லா இருந்திருந்தா ஒருவேளை நான் உன் காதலை ஏற்றுக்கொண்டிருப்பேனோ என்னவோ. அப்படி நடந்திருந்தா நீயும் உன் பழிவாங்குற எண்ணணத்த கைவிட்டு நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருப்ப”

வான்முகிலன் சொன்னது முற்றிலும் உண்மை. அவ்வாறு நடந்திருந்தால் ஒருவேளை மலர்விழி நல்லவளாக இருந்திருப்பாள். ஒருவேளை தன்னுடைய பிரச்சனைகளை வான்முகிலன் மலர்விழியிடம் கூறி புரியவைத்து இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்திருந்தால் மலர்விழியின் வாழ்க்கை சுபிட்சமாக இருந்திருக்கும்.

“நீ தான் என்ன காதலிக்கவே இல்லையே. இப்போ வந்து கத சொல்லுறியா? உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லுறேன். நீயும், உன் பொண்டாட்டியும் டில்லில இருந்து வர்றத தெரிஞ்சிதான் பிளைட் 477ன சூஸ் பண்ணேன். அப்போவே நீ சாக வேண்டியவன் தப்பிச்சிட்ட.  உள்ள இருக்கேன்னு நினைக்காத. சந்தர்ப்பம் கிடைச்ச உடனே உன்ன கொல்லுவேன்” சத்தமாக சிரித்தாள் மலர்விழி.

“என்னையும் என் ஸ்ரீயையும் கொல்ல நீ எத்தனை அப்பாவி உயிர்களை எடுத்துட்ட. உன் அப்பாக்கு நீ தப்பாம தான் பொறந்திருக்க. நீ எனக்கு ஒரு விஷயம் சொன்ன நான் உனக்கு ஒரு விஷயம் சொல்ல வேணாம்?” என்றவன்

“என்னமோ உங்கம்மா பேரழகி அதனால உங்கப்பா உங்கம்மாவை கடத்தி கல்யாணம் பண்ணதாக நீ நினைச்சுகிட்டு இருக்கிறியா? ஆதிசேஷன் இவ்வளவு நாடகமாடி எதுக்கு உங்கம்மாவ கல்யாணம் பண்ணனும்? தூக்கிட்டு வந்து அவர் நினைச்சதை செஞ்சிருக்க மாட்டாரா?

உங்கப்பா உங்கம்மாவ ஏமாத்தி கல்யாணம் பண்ணி கைவிட்டதுக்கே நீ பழிவாங்க கிளம்பிட்ட. உங்கப்பா உங்கம்மாவ கடத்தினத்துக்கும், கல்யாணம் பண்ணதுக்கும் காரணமே நீதான்” என்று ஆதிசேஷன் எதற்காக தேன்மொழியை திருமணம் செய்தான் என்று கூறினான்.

ஆம் தேன்மொழி தன்னை ஆதிசேஷன் ஏமாற்றிய உண்மையான காரணம் அறியாமல் இருந்த பொழுது கதிரவனும், மலர்விழியும் கூட அறிந்திருக்கவில்லை.

தான் பிறக்க வேண்டும் என்று தான் அன்னைக்கு இந்த கொடுமையே நடந்ததா? என்று அறிந்த மலர்விழி அதிர்ந்து நின்றாள்.

“நீ உள்ள போனதும் கதிரவன் உன்ன வந்து பார்க்க முயற்சி செஞ்சாரு. ஆனா நீ அவரை பார்க்க மறுத்துட்ட. பார்த்திருந்தா அவர் இந்த உண்மைய சொல்லியிருப்பாரு. நீ அவரை காப்பாத்த நினைச்ச அவர் உன்ன மாட்டி விட்டுட்டாரு என்ற கோபத்துல தானே நீ அவரை பார்க்க மறுத்த” இத்தனை நாள் உதவி செய்தவரையே பழிவாங்க நினைக்கும் நீ எல்லாம் திருந்தவே மாட்ட என்று அவளை பார்த்தான் வான்முகிலன்.

என்னதான் மலர்விழியின் மீது பாசம் இருந்தாலும் பெற்ற மகள் மீது பாசம் எட்டிப் பார்க்காதா? வான்முகிலன் குழப்பி விட்டதில் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. மலர்விழி தான் ஆதிசேஷனின் செயலாளர் அவளிடம் தான் அவர் எல்லா பொறுப்பையும் கொடுப்பார் மலர்விழி தன்னை முழுதாக நம்புகிறாள் தன்னை காப்பாற்ற முயற்சிக்கிறாள் என்று அறியாமல் கதிரவன் கூறிவிட்டார்.

ஆ… இன்னொன்னு ரம்யா… சம்பந்தமே இல்லாம ஒருத்தி உன் மேல கோபத்தை காட்டுறாளே ஏன்? எதுக்கு என்று யோசிச்சிருக்கணும். ரம்யா கதிரவனோட பொண்ணு. நீ உன் அம்மாக்காக பழிவாங்க கிளம்பிட்ட. தன்னோட அப்பா தன் கிட்ட பாசத்தை காட்டாம, யாரோ ஒருத்தி மேல பாசத்தை காட்டினா எந்த பொண்ணுதான் அமைதியா இருப்பா? ரம்யா பேச மட்டும்தான் செஞ்சா உன்ன பழிவாங்க நினைக்கல.

ஆதிசேஷன் பண்ணதுக்கும் அவர் குடும்பத்துக்கு சம்பந்தமே இல்ல. ஆனா நீ அவங்களையும் விட்டு வைக்கல. உன் கூட பழகின பாவத்துக்காக பாக்யாவை கொன்ன. சம்பந்தமே இல்லாம அத்தனை உயிர்களையும் எடுத்துட்டு கொஞ்சம் கூட கவலை இல்லாம இருக்க. உன் அம்மா இருந்தா இத பார்த்து சந்தோசப்படுவாங்களா? என்று மட்டும் யோசி” என்று விட்டு சென்றான்.

வான்முகிலன் பேசியதை கேட்டு பிடிவாதமாக நின்றிருந்தவள் அவன் சென்ற பின் கதறிக், கதறி அழுதாள். மறுநொடி அன்னைக்காக தான் ஆதிசேஷனை பழிதீர்த்து விட்டதாக சிரித்தாள்.

நெஞ்சம் முழுக்க வஞ்சம் நிரம்பி வழியும் மலர்விழி தான் மட்டும் தான் பாதிக்கப்பட்டவள். தான் செய்வது தான் சரி என்ற எண்ணத்தில் தான் எல்லாவற்றையும் செய்தாள். செய்வாள். அவளுக்கு பிறரை பற்றி கவலையில்லை. கவலைப்படவும் மாட்டாள்.

மலர்விழி போன்றவர்கள் கொடிய விஷமுள்ள செங்காந்தள் மலர் தான்.

Advertisement