Advertisement

அத்தியாயம் 26

கண் விழித்த நிலஞ்சனா தான் வீட்டில் இருப்பதை பார்த்து புன்னகைத்தாள். வான்முகிலனை தேடி கீழே வந்தவள் ராம் அமர்ந்திருப்பதை பார்த்த பின் பவானியின் ஞாபகம் வரவே பவானி எங்கே என்று கேட்டாள். 

“உள்ள தான் இருக்கா. டாக்டர் வந்து பார்த்துட்டு போனாரு. ரொம்ப வீக்கா இருக்கா” மருத்துவர் என்னவெல்லாம் சொன்னார், என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார் என்று ராம் கூறக் கூற எல்லாவற்றையும் கேட்டவாறு நிலஞ்சனா பவானி இருந்த அறைக்குள் நுழைந்தாள். 

பவானி தூங்கிக் கொண்டு தான் இருந்தாள்.

“என்ன இவ தூங்கி கிட்டே இருக்கா?” நிலஞ்சனாவுக்கு அச்சமாக இருந்தது.

“கண்முழிப்பா. பயப்பட வேணாமென்று டாக்டர் சொன்னாரு” ராம் தெளிவாகவும், தைரியமாகவும் தான் பேசினான். பவானியை பார்த்து விட்ட சந்தோஷமும், நிம்மதியும் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பவானி கண்விழித்து இவர்களை பார்த்து புன்னகைத்தாள்.

“பவி எப்படி இருக்க? என்ன பண்ணுது?” சட்டென்று அவள் கையை பற்றி அவளருகில் அமர்ந்து கொண்டான் ராம்.

ராம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் “ஹேய் நிலு. நீ எப்போ வந்த? இங்க என்ன பண்ணுற?” தோழியை பார்த்த ஆனந்தத்தில் எழுந்து அமர முயன்றாள் பவானி. குளறியவாறு தெளிவில்லாமல் தான் பேசினாள்.

“ஹேய் பார்த்து. ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காத. டிரீட்மென்ட் எடுத்தா கொஞ்சம் நாள்ல சரியாகும் என்று டாக்டர் சொன்னாரு” ராம் அவளை தூக்கி அமர வைக்க முயல, அவனை முறைக்க முடியாமல் முறைத்த பவானியோ “எதுக்கு நீ இப்போ என்ன தொல்லை பண்ணுற? முதல்ல எந்திரிச்சு வெளிய போ. எனக்கு நிலு கிட்ட பேசணும். அவ தானே என்ன கண்டு பிடிச்சா” சோர்வாக கூறினாள்

“அடிப்பாவி உசுரக் கொடுத்து காப்பாத்தினா என்ன பேசுற?”

“ஹலோ ஹலோ அவ உசுர காப்பாத்த போய், என் உசுர காவு வாங்க பார்த்தாங்க. அத சொல்லுங்க” என்றாள் நிலஞ்சனா 

“அடப்பாவி பலி கொடுத்து தான் உசுர காப்பாத்துவியா?” சிரமத்தோடு ராமின் தோளில் அடித்து அவனை வெளியே துரத்தினாள் பவானி.

பவானி தான் எங்கே இருக்கிறேன். என்ன நிலைமையில் இருக்கிறேன் என்று கொஞ்சம் கூட கவலையில்லாமல் நிலஞ்சனாவை பார்த்த ஆனந்தத்தில் நிலஞ்சனா பேச வேண்டாம் என்று கூறினாலும் திணறியவாறே பேசிக் கொண்டே இருந்தாள்.

வான்முகிலனின் வண்டி உள்ளே வரவும் ராம் வெளியே சென்றான்.

“என்ன ராம்? பவானி கண் முழிச்சிட்டாளா? எப்படி இருக்கா?”

“நான் ஒருத்தன் பைத்தியம் பிடிக்காத குறையாக அவளை தேடிகிட்டு இருந்தேன். அவ கண்ணு முழிச்சதும், அவ பிரெண்டோட சேர்ந்து கூத்தடிக்கிறா” கடுப்பாகத்தான் சொன்னான் ராம்.

அவனை ஏற இறங்க பார்த்த வான்முகிலன் சிரித்தான்.

“இந்த பொம்பளைங்களே இப்படித்தான். நாம அவங்க கேயார் எடுத்து பார்த்துகிறோம். ஆனா அவங்க நம்மள கண்டுகிறதே இல்ல” மேலும் பேசி ராமை வெறுப்பேற்றியவாறு பவானி இருந்த அறை கதவை தட்டினான்.

நிலஞ்சனா அறை கதவை திறக்க, “ரெஸ்ட் எடுக்காம நீ இங்க என்ன பண்ணுற? நீ ரெஸ்ட் எடுக்காம இவளையும் ரெஸ்ட் எடுக்க விடாம தொண, தொணன்னு பேசிகிட்டு இருக்கியா?” வான்முகிலன் முறைக்க வில்லை. கண்களாளேயே அவள் நலமாக இருக்கிறாளா? என்று ஆராய்ந்தான்.

“என்னடா நடக்குது இங்க?” என்று புரியாமல் ராமை பார்த்தாள் பவானி.

விமான விபத்து நடந்ததா என்றும் பவானிக்குத் தெரியாது. விபத்தில் பாக்யஸ்ரீ இறந்ததும் தெரியாது. வான்முகிலன் நிலஞ்சனாவை திருமணம் செய்ததும் தெரியாதே.

“இங்க நான் நல்லா தான் இருக்கேன். இவளைத்தான் காப்பாத்தி கூட்டிட்டு வந்தோம். நீங்க இவளத்தான் நலம் விசாரிக்கணும்” கணவன் தன் மீது வைத்திருக்கும் அக்கறையை கண்டு கொண்ட நிலஞ்சனா இதழ்களில் புன்னகையை தவழவிட்டவாறே கூறினாள்.

“ஏய் என்னடி நடக்குது இங்க?” பவானி வாய்விட்டே கேட்டு விட்டாள்.

“ஆடு, மாடு எதுவும் நடக்கல. நீ ரெஸ்ட் எடு” ராம் தான் பதில் சொன்னான்.

அவனை முறைத்த பவானி நிலஞ்சனாவை ஏறிட்டாள்.

  

தோழியிடம் கூற நிலஞ்சனாவுக்கு ஏகப்பட்ட விடயம் இருந்தது. அதெல்லாம் இந்த நேரத்துல பேசவும் முடியாது. வான்முகிலனின் முன் பேசவும் முடியாதே சிரித்து வைத்தாள்.

சட்டென்று நிலஞ்சனாவை தோளோடு சேர்த்தணைத்த வான்முகிலன் “உன் பிரெண்டு இப்போ என் வைப். ரொம்ப யோசிக்காம ரெஸ்ட் எடு. நிலு நீ வா” வான்முகிலன் நிலஞ்சனாவை கையேடு அழைத்து செல்ல

“டேய் எப்படிடா?” என்று ராமிடம் கையாலையும், கண்களாலையும் கேட்டாள் பவானி.

வான்முகிலன் தன்னை முழுமனதாக ஏற்றுக் கொண்டு விட்டானா? புரியாமல் குழம்பியவாறே அவனோடு நடந்தாள் நிலஞ்சனா.

அறைக்கு வந்தவனோ தனம் கதிரவனை கடத்தியதையும், கதிரவன் கூறியவைகளையும், ரம்யா கதிரவனின் மகள் என்பதையும் கடகடவென நிலஞ்சனாவிடம் ஒப்பித்து விட்டு “கதிரவனை காணலைனதும் மலர்விழி என்ன செய்வான்னு தெரியல. கதிரவனை பிரைன் வாஷ் பண்ண ட்ரை பண்ணேன். இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்ல” 

“எல்லாரும் பழிவாங்குற மோட்டிவ்லயே சுத்திகிட்டு இருக்காங்க. அந்த ஆதிதி எதுக்கு என்ன கடத்த பார்த்தா…” நிலஞ்சனாவுக்கு பதில் வேண்டியிருந்தது.

“அதுவா அந்த லூசத்தான் ஆதிசேஷன் எனக்கு ஆரம்பத்துல பேசி வந்தாரு. நான் வேணாம் என்று சொல்லிட்டேன். ஆகாஷ கல்யாணம் பண்ணியும் அவன் கூட ஒழுங்கா குடும்பம் நடாத்தாம என்ன பாக்குற போதெல்லாம் பினாத்திக்கிட்டு திரியுறா.

ஆகாஷ அரெஸ்ட் பண்ணப்போ அவன் கூட வாழ முடியாது. நான் தான் வேணும் என்று சொல்லி ஆதிசேஷன் அடிக்கவே போய்ட்டாரு என்று தனம் மேடம் சொன்னாங்க”

“பார்டா…” வான்முகிலனை கிண்டல் செய்ய வார்த்தைகள் கொட்டிக் கிடந்தாலும் நிலஞ்சனா வேறு எதுவுமே கூறவில்லை. விரக்தியோடு பேசுபவனை எவ்வாறு கிண்டல் செய்வதாம்?

“அந்த கோபத்துல தான் உன்ன கடத்தியிருப்பா. உன்ன ஸ்டெச்சர்ல பார்த்ததும் அவளை நாலு சத்து சாத்திட்டு வந்துட்டேன். என்ன ஆச்சோ தெரியல என்று தனம் மேடம் கிட்ட விசயத்த சொன்னேன். அதுக்கு அவங்க ஆதிசேஷனோட ரத்தமில்ல, அடிபட்டு சரி திருந்தினா நல்லது என்று ஹாஸ்பிடல் போன் பண்ணாங்க” வான்முகிலன் பேசிக் கொண்டே துணி மாத்த நிலஞ்சனா யோசனையாக அமர்ந்திருந்தாள்.

வான்முகிலன் துணி மாற்றும் பொழுது நிலஞ்சனாவை வெளியே போ என்று சொல்வதில்லை. இது என்னுடைய அறை. என் அறையில் என்ன செய்யவும் எனக்கு உரிமையுண்டு. இவளிடம் அனுமதி கேட்டுக் கொண்டு இருக்க வேண்டுமா? அவள் தான் புரிந்து கொண்டு வெளியே செல்ல வேண்டும். என்ற எண்ணம் தான் முகிலனுக்கு.

ஆனால் நிலஞ்சனா எந்தத் தயக்கமுமின்றி அவனை வெளியே செல்லுமாறு கூறி விடுவாள்.

ஆரம்பத்தில் “இது என் ரூம். நான் இங்க தான் இருப்பேன்” வம்புக்கென்றே வீம்பு பிடித்தான்.

“ஓகே இருங்க” என்ற நிலஞ்சனா அவனை கண்டு கொள்ளாது புடவை அணிய “ராட்சசி” அவளை திட்டியவாறே இவன் வெளியேறுவான்.

இன்று பேச்சு சுவாரஸ்யத்தில் வான்முகிலன் துணியையும் மாற்றியிருந்தான். இல்லை இல்லை இனிமேல் நிலஞ்சனா வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை என்று இருந்தானா தெரியவில்லை. நிலஞ்சனா அவனை கவனிக்காமல் யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

“என்ன யோசிக்கிற?”

“இல்ல. ஒரு யூகம் தான். ஆகாஷ் தான் ஜவஹர ஆதி குரூப்புக்கு கூட்டிட்டு வந்ததாக சொன்னீங்க. மலர்விழிக்கும் ரம்யாக்கும் ஆகாது. இத தெரிஞ்சிகிட்ட ஆதிதி ஏன் மலர்விழிக்கும், உங்களுக்கும் நடக்க இருந்த கல்யாணத்த நிறுத்த ஜவகர கடத்தியிருக்கக் கூடாது”

“நீ என்ன சொல்ல வர? ஜவஹர கடத்தி ரம்யா மூலம் மலர்விழி மேல கம்பளைண்ட் கொடுக்க வச்சி அவளை உள்ள தள்ள பார்த்தது ஆதிதி என்று சொல்ல வரியா? ஜவஹர கொலை பண்ணிட்டதாக வேற சொல்லுறாங்க. ஆதித்தியால தனியா இத பண்ண முடியுமா?” என்ற வான்முகிலன் “உன்னையே கடத்த பார்த்தவ பண்ணியிருப்பா” என்றான். 

“நீங்க ஏதாவது சாப்பிடுறீங்களா? பவானி கண்ணு முழிச்சா கொஞ்சம் கொஞ்சமா ஜூஸ் கொடுக்க சொன்னாங்க”

“பவானியை ராம் பார்த்துப்பான். நீ சாப்டியா?” என்றவாறே வீட்டு எண்ணுக்கு அழைத்து சந்த்ரமதியிடம் உண்ண ஏதாவது அனுப்பும்படி கூறினான்.  

“ஜவஹர கொலை செய்ய முதல்ல கடத்தி ரம்யாவ பிளக்கமெயில் பண்ணதாக சொன்னாங்களே, பணமும் கிடைச்சது போல ஆச்சு. மலர்விழி சிக்க வச்சதுல கல்யாணமும் நின்னிருச்சு. மலர்விழிய அப்புறப்படுத்தினா குடும்பத்துலயும் பிரச்சினை இல்ல. ஒரே கல்லுல மூணு மாங்கா” என்றாள் நிலஞ்சனா.

“ஜவஹர கொன்னிருந்தா இந்நேரத்துக்கு டெட்பாடி கிடைச்சிருக்கணும். எனக்கும் உனக்கும் கல்யாணம் நடந்ததுல கொல்லாம விட்டுட்டாலோ என்னமோ” என்றான் வான்முகிலன்.

“அந்த ஆதிதி என்ன எங்க கொண்டு போனா? அங்க தான் ஜவஹரும் இருக்கணும்”

சட்டென்று அலைபேசியை கையில் எடுத்து இன்ஸ்பெக்டர் மதியழகனை அழைத்தான் வான்முகிலன்.

“பவானியை கண்டு பிடிச்சி காப்பாத்திட்டோம் சார். ஆதி குரூப்புக்கு சொந்தமான ஆதி ஹாஸ்பிடல் வி.ஐ.பி. ரூம்ல தான் அடச்சீ வச்சிருந்தாங்க”

“ஆமா சார் உங்க வை கம்பளைண்ட் கொடுத்தாங்க. மிஸ் பவானி கன்பெக்ஷன் பண்ணத வச்சி நான் இப்போ மலர்விழி விசாரிக்கத்தான் போய் கிட்டு இருக்கேன்” என்றார் இன்ஸ்பெக்டர் மதியழகன்.

நிலஞ்சனாவை புன்னகையோடு பார்த்தவாறே “எனக்கென்னமோ ஜவஹரும் ஆதி ஹாஸ்பிடல்ல தான் இருப்பார் என்று தோணுது” என்றவன் சரியாக எங்கு இருப்பான் என்பதையும் கூறினான்.

“ஓகே சார் நான் பாத்துக்கிறேன்”

வான்முகிலனின் அலைபேசி துண்டிக்கப்பட்டதும் “ஏன் ஜவஹர ஆதிதி கடத்தியதாக சொல்லல”

“உன்ன ஆதிதி கடத்த பார்த்ததை சொன்னியா?” தனத்திடம் இதை பெரிதுபடுத்த மாட்டேன் என்று விட்டு தானே வான்முகிலன் வந்திருந்தான்.

“உங்க கிட்ட கேட்காம சொல்ல வேணாம் னு விட்டுட்டேன்” நிலஞ்சனா சாதாரணமாகத்தான் சொன்னாள். அதில் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருந்தது.

பொதுவாக வேலை விஷயங்களை அவனிடம் கேளாமல் இவள் எந்த முடிவையும் தனியாக எடுக்க மாட்டாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். இது அவள் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் அவன் வேண்டாம் என்றாலும் அவள் கேட்க வேண்டிய அவசியமில்லை.

அவன் மீது வைத்திருக்கும் காதலால் தான் அவன் வரும் வரையில் காத்திருந்தாள். அதை வான்முகிலன் புரிந்துகொண்டாலே போதும்.

அவளை பார்த்து புன்னகைத்தவன் “இன்ஸ்பெக்டருக்கு நாமளே எல்லா க்ளூவையும் கொடுத்தா அவர் என்னத்த கண்டு பிடிப்பாரு? அவரே கண்டு பிடிக்கட்டும்” என்றான்.

“உங்க கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும். நடந்த விமான விபத்து முழுக்க முழுக்க திட்டமிட்ட சதி” மலர்விழி பேசியதை கேட்டதால் தான் பவானியை கடத்தினார்கள் என்பதை நிலஞ்சனா கூற, அதிர்ந்து நின்றான் வான்முகிலன்.

இன்பெக்டர் மதியழகன் மலர்விழியின் முன் சென்று நின்ற பின் தான் பவானியை வான்முகிலன் காப்பாற்றி விட்டான் என்பதையே அறிந்து கொண்டாள் மலர்விழி.

“கதிரவன் அங்கிள் எங்க போனாரோ? தெரியவில்லையே” அவருக்கு அழைத்தவாறு நின்றவள் மதியழகனால் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டாள்.

“சொல்லுங்க மிஸ் மலர்விழி எதுக்காக பவானியை கடத்துனீங்க? கடத்தி ஆதி ஹாஸ்பிடல்ல வச்சிருந்தீங்க?”

மலர்விழியை பேச வைக்க வேண்டி பவானி கூறிய எதையுமே கூறாமல் தான் இன்ஸ்பெக்டர் மதியழகன் கேட்டார்.

“பவானியை காப்பாத்திட்டாங்கல்ல. அதனால தானே நீங்க இங்க வந்திருக்குறீங்க. பவானி எந்த வாக்குமூலமும் கொடுக்கலையா?” கொஞ்சம் நக்கலாகத்தான் கேட்டாள்.

“கொடுத்தாங்க நடந்த விமான விபத்த பத்தியும் சொன்னாங்க. சொல்லுங்க எதுக்காக 477 விமானத்தை விபத்துக்குளாக்கினீங்க? உங்களுக்கு யார் உதவி செஞ்சாங்க?”

“என்னது? நான் விமானத்தை விபத்துக்குள்ளாக்கினேனா? யார் சொன்னா? பவானி சொன்னாளா? இங்க பாருங்க இன்ஸ்பெக்டர் நான் எங்க அப்பாக்கு கீழ வேலை பாக்குறேன். அவர் என்ன சொன்னாலும் செய்வேன். அதுவும் அவர் என்ன பொண்ணா ஏத்துக்க, நா நான் என்ன வேணாலும் செய்வேன். என் குடும்பம் என்ன ஏத்துக்க, அவங்களுக்காகவும் நான் என்ன வேணாலும் செய்வேன்” தான் செய்த விபத்தை ஆதிசேஷன் தான் நிகழ்த்தினார் என்று விம்பத்தை உருவாக்க முயன்றாள்.

“இங்க பாருங்க மிஸ் மலர்விழி உங்க அப்பா பாசம், மரியாதையை பத்தி விளக்கமா கேட்க நான் உங்கள இங்க உக்கார வைக்கல. நான் கேட்கிறது விமான விபத்துக்கு நீங்க காரணம். நீங்க போன்ல பேசினது பவானி கேட்டிருக்காங்க. பேசேஞ்சர்ஸ் போற பிளைட்டுல கெமிக்கல் கொண்டு போய் அதனால தீ விபத்து ஏற்பட்டிருக்கு. பிளாக் பாக்ஸ் ரிப்போர்ட் கூட வந்திருச்சு. நீங்க இல்லனு சொல்ல முடியாது” குரலை உயர்த்தினார் இன்ஸ்பெக்டர்.

“அதை தான் நானும் சொல்லுறேன் இன்ஸ்பெக்டர். கெமிக்கல பிளைட்டுல ஏத்த சொன்னதே எங்கப்பா தான். அது காத்துல கலந்தால் தீ பற்றும் வேண்டாம் என்று தான் நான் அவர் கிட்ட போன்ல சொல்லிக்கிட்டு இருந்தேன். அத அவர் கேட்கல. அத தான் அரைகுறையா பவானி கேட்டிருக்கா, அங்க வந்த ஆதிசேஷன் அதாவது என் அப்பா பவானியை பார்த்ததும் பவானியோட மண்டையிலையே அடிச்சிட்டாரு. அதனால பவானி மயங்கிட்டா. நான் பதறி துடிக்கும் பொழுதே என்ன வீட்டுக்கு போக சொன்னவரு பவானியை கார்ல தூக்கி போட்டுக்கிட்டு போய்ட்டாரு”

கதிரவனை தொடர்புகொள்ள முடியாது என்றதன் அர்த்தம் மலர்விழியை பற்றிய உண்மைகளை ஆதிசேஷன் அறிந்துகொண்டு விட்டார் என்பது தானே. கதிரவன் இல்லையென்றால் சூழ்நிலையை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதையும் அறிந்து தான் வைத்திருந்தாள். எந்த சந்தர்ப்பத்திலும் தாங்கள் சிக்கக் கூடாது. ஆதிசேஷனும் அவர் குடும்பத்தாரும் தான் சிக்க வேண்டும் என்று தான் திட்டமிட்டு வேலை பார்த்தாள்.

பவானியை கடத்தியது எதிர்பாராமல் நடந்த சம்பவம். மலர்விழியால் அதிலிருந்து தப்பிக்க முடியாது. அதனால் தான் மாட்டிக் கொண்டாலும் பரவாயில்லை. கதிரவனை காப்பாற்றி ஆதிசேஷனை சிக்க வைக்க முடிவு செய்தாள். ஆதிசேஷனை மட்டுமா சிக்க வைக்க முயல்வாள்?    

“அப்பா அவரோட தொழில்ல ஒவ்வொரு பொறுப்பையும் அவரோட ஒவ்வொரு பசங்களுக்கும், பேரபாசங்களுக்கும் கொடுத்திருக்கார். ஆனா டொமஸ்டிக் பிளைட் தயாரிக்கிற பொறுப்பும், வேலைகளும் எல்லாரும் தான் பாக்குறாங்க. பிளைட் சம்பந்தமா எது செஞ்சாலும் எல்லாருக்கும் தெரியும்” என்று அனைவரையுமே விபத்து நடந்தமைக்காக பொறுப்புதாரிகள் என்று கோர்த்து விட்டாள்.

“நீங்க என்ன சொல்லவாறீங்க?”

“ஐயோ இன்ஸ்பெக்டர். அந்த கெமிக்கல தரைவழியா டிரான்ஸ்போர்ட் பண்ணுறதே ஆபத்து. பிளைட்டுல கொண்டு போனா அவசரமா கொண்டு போகலாம் என்று எங்கப்பா அண்ணன்க கிட்ட சொன்னாரு. அதுக்கு அவங்களும் நல்ல ஐடியானு சொன்னாங்க.

விபத்து நடக்க முன்னாடி நாள். அதாவது பவானி காணாம போன நாள் மேனேஜர் கதிரவன் கிட்ட இத பத்தி சொன்னேன். அவர் தான் என்னமா சொல்லுற? அது டேஞ்சரெஸ்ஸான கெமிக்கல். காத்துல கலந்த நெருப்பு பிடிக்கும் என்றாரு.

தெரிஞ்சே எதுக்கு இந்த கெமிக்கலை பிளைட்டுல கொண்டு போறாங்க என்று அவர் கிட்ட கேட்டேன். சாதாரண வண்டி, கார், லாரிக்கே இன்சூரன்ஸ் பண்ணும் பொழுது பிளைட்டுக்கு பண்ண மாட்டாங்களா?  ஏதாவது நடந்தா இன்சூரன்ஸ் பணம் லம்பா ஒரு அமவுன்ட் கிடைக்கும் அதுக்காக கூட இருக்கலாம் என்று சொன்னாரு.

அத பத்தி பேசினது தான் பவானி கேட்டா. என்ன நான் வில்லியாகிட்டேன்” என்றாள்.

“என்னமா விளையாடுறீங்களா? முதல்ல உங்க அப்பாகிட்ட பேசினதா சொன்னீங்க, அப்பொறம் மேனேஜர் கிட்ட பேசினதா சொன்னீங்க. யார் கூட பேசினத பவானி கேட்டா”

“மேனேஜர் போன்ல தான் அப்பாவும், மேனேஜரும் பேசினாங்க. ரெண்டு பேரும் ஒண்ணா தானே வந்தாங்க. அப்பா தான் பவானியோட மண்டைல அடிச்சாரு. கதிரவன் சார் வெலவெலத்து நின்னிட்டாரு” தான் உளறி கதிரவனை சிக்க வைக்க போனவள் சமாளித்து நிச்சயமாக பவானி அவளை அடித்தவரை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாக நம்பியதால் இவ்வாறு கூறினாள் மலர்விழி.

கெமிக்கல் பாக்டரி ஆதிசேஷன் பெயரில் இருக்கிறது.

அனுமதி தனம் வழங்கியிருக்கின்றாள்.

கெமிக்கலை எடுத்து செல்ல கையொப்பமிட்டது ஆதிசேஷனின் புதல்வன் ஆதித்யன்.

477 விமானம் ஆதிதேவ்வின் பொறுப்பில் இருக்க, அவன் அறியாமல் எதையும் ஏற்ற முடியாது.

விமானத்தை காப்பீடு செய்திருப்பது ஆதிரியன்.

இன்னும் இதர பொறுப்புக்களை ஆதித்தும், ஆகாஷும் பார்த்துக் கொள்கிறார்கள்.

ஆதிசேஷனின் மொத்த குடும்பமும் சேர்ந்து தான் இந்த விபத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். வார்த்தைகளால் மட்டும் மலர்விழி உறுதி செய்யவில்லை தன்னிடம் ஆதாரமாக ஆவணங்களும் இருப்பதாக கூறி அலைபேசியில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்.

“விபத்த நிகழ்த்த போறதாக தெரிஞ்சே நீங்க அமைதியாக இருந்திருக்குறீங்க” 

“சார் நீங்க திரும்ப தப்பா சொல்லுறீங்க. விபத்த ஏற்படுத்தனும் என்று கெமிக்கலை கொண்டு போகல. கெமிக்கலை கொண்டு போனதால விபத்து நடந்தது அதனால இன்சூரன்ஸ் மணி க்ளைம் பண்ணி எடுத்துட்டாங்க. தரமான பொருளை மிஸ்டர் வான்முகிலன் கொடுத்திருந்தா இப்படி சட்டுன்னு தீ பற்றியிருக்குமா? முதல்ல அவரை விசாரிங்க சார்” அப்பாவியாக சிரித்தவாறே வான்முகிலனையும் கோர்த்துவிட பார்த்தாள். 

“குடும்பமே கிருமினலாக இல்ல இருக்கு. இன்சூரன்ஸ் பணத்துக்காக ஒரு விமானத்தையே விபத்துக்குள்ளாகியிருக்குறீங்க. அதுல போன பேசேஞ்சர்ஸ்ல அதிகமானவங்க உங்க ஆதி இன்சூரன்ஸ் கம்பனில தானே இன்சூரன்ஸ் போட்டிருக்காங்க. அங்கேயும் பல கோடி சம்பாதிச்சிட்டீங்க”

ஆதிசேஷன் திரும்ப முடியாதபடி எல்லா வழியிலும் இறுக்கி விட்டாள். மலர்விழி கொடுத்த வாக்குமூலத்தின்படி அவளுக்கு குறைந்தபட்ச தண்டனை தான் கிடைக்கும்.

அலைபேசியில் அவள் கதிரவனோடு தான் உரையாடினாள் என்று கூறி விட்டாள். அதை போலீசார் கண்டு பிடித்து விடுவார்கள் என்று அவளுக்குத் தெரியாதா? சீசீடிவி காட்சிகளை அப்புறப்படுத்தியதால் ஆதிசேஷன் வந்தாரா? இல்லையா? என்று ஆராய முடியாது. கதிரவன் பவானியை தூக்கி சென்ற பின் ஆதிசேஷன் அங்கு வந்ததால் சம்பவம் நடந்த பொழுது ஆதிசேஷன் அங்குதான் இருந்தார் என்று உறுதியாகிவிடும். பவானியை அடித்தது கூட ஆதிசேஷன் என்றாகிவிடும்.

என்னதான் கதிரவன் பவானியை ஆதி மருத்துவமனையில் அனுமதித்தாலும் ஆதிசேஷன் கூறாமல் கதிரவன் செய்ய மாட்டான் என்று மருத்துவமனை அதிபரே கூறிவிடுவார். கதிரவன் தப்பிப்பான்.

மதியழகன் மலர்விழியை விசாரணைக்காக அழைத்து வரும் பொழுதே கமிஷ்னரிடம் பேசி ஆதி மருத்துவமனையை திடீர்ச் சோதனை செய்ய அனுமதி வாங்கி ஒரு குழுவை அனுப்பி ஜவகரையும் இன்னும் சிலரையும் மீட்டிருந்தான். அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்திலும் சிக்கினார் ஆதிசேஷன்.      

வான்முகிலன் தான் அவனுடைய பொருட்கள் தரமானது என்று நிரூபித்து விட்டானே அவனை விசாரிக்க அவசியமில்லை என்று கமிஷனரே உத்தரவிட்டார்.

ஆதி மருத்துவமனையில் நடக்கும் அவலம் என்று ஆதிசேஷனின் ஒரு முகமூடி கிழிக்கப்பட்ட, நடந்த விமான விபத்து திட்டமிட்ட சதியென்று ஆதாரங்களோடு ஆதிசேஷனை கைது செய்ய கிளம்பினார் இன்ஸ்பெக்டர் மதியழகன். 

Advertisement