Advertisement

அத்தியாயம் 25

தேன்மொழியை ஆதிசேஷன் எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார் என்று அறிந்து வான்முகிலனும், தனமும் பேச்சற்று நின்றிருந்தனர்.

தனத்திற்கு பெரிதாக அதிர்ச்சியெல்லாம் இல்லை. ஆதிசேஷன் ஒரு கொடூரன். அவரிடம் இப்படியொரு செயலை தான் எதிர்பார்க்க முடியும். ஒரு பெண்ணாக தேன்மொழிக்காக வருந்தினாள்.

இதையெல்லாம் அறிந்து மலர்விழி எப்படி துடித்திருப்பாள் என்று எண்ணுகையில் வான்முகிலனுக்கு அவள் மீது பரிதாபம் வந்தது.       

“ஒரு மனுஷன் எத்தனை நாளைக்கு நடிக்க முடியும்? ஆதிசேஷனோட சுயரூபம் மலர்விழி பிறந்த பிறகுதான் தேன்மொழிக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பிச்சது.

தினமும் வந்து பார்த்துட்டு போறவரு போன் மட்டும் பேசியிருக்காரு. பொண் கொழந்தைதான் வேணும் என்று சொல்லிகிட்டே இருந்தவரு அந்த பொண்ணு பொறந்ததும் கண்டுக்கவே இல்ல. இன்னைக்கு வரைக்கும் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் பொண்ணு பொறந்ததும் தேன்மொழி வேண்டாதவளாக போய்ட்டான்னு தான் நினைச்சுகிட்டு இருந்தேன். உண்மையான காரணத்தை நீங்க தான் சொன்னீங்க” தனத்தை பார்த்து கூறினான் கதிரவன்.

“நான் விசாரிச்ச வரைக்கும் மலர்விழி பொறந்து நான்காவது மாசம் தேன்மொழி குழந்தையை தூக்கிகிட்டு ஊருக்கு வந்துட்டாங்க என்று சொன்னாங்க” என்றான் வான்முகிலன்.

“ஆமா…. வேலைக்கார அம்மா கூட தனியா சென்னைல இருக்குறதுக்கு பதிலா ஊருல சொந்தபந்தங்களோட இருந்துடுறேன்னு தேன் சொல்ல, ஆதிசேஷன் ஐயாவும் சரியென்று வீடு வாங்கி, மாசா மாசம் பணம் போட்டிருக்காரு.

இதுல கொடும என்னனா பணம் போட்டதே நான் தான். மாசா மாசம் எத்தனை பேருக்கு, எத்தனை கம்பனிக்கு பணம் போடுறோம். அதனால கூட பெருசா எடுத்துக்காம இருந்திருக்கலாம். ஆனா தேன்மொழி என்ற பேர பார்த்தும் கண்டுக்காம இருந்துட்டேன். யாருக்கு போடுறோம் என்று தெரியாமலே போட்டிருக்கேன். முதலாளி மேல அவ்வளவு நம்பிக்கை” தன் மீதே காரி உமிழ்ந்தது கொண்டான் கதிரவன்.

“ஊருக்கு போனா அவ குடும்பம், சொந்தபந்தம் என்று யாருமே தேன ஏத்துக்கல. அவளுக்கு என்ன நடந்தது என்று கேட்கக் கூட அவங்க விரும்பல. சரி பரவால்ல தனக்கு தன்னோட பொண்ணு இருக்காளே என்ற நிம்மதில மலருக்காக வாழ்ந்தா.

ஆனா தேன்மொழிய ஊரே பேசுன பேச்சுக்களால் அவளோட பொண்ணே அவள தப்பா நினைச்சி, பெத்த அம்மாவையே வெறுத்து, ஒதுங்கி இருந்திருக்கா. மலர்விழி சின்ன பொண்ணு. தேனுக்கிட்ட என்ன நடந்தது என்று கேட்கவும் புரியல. கேட்டாலும் தேன் சொல்லியிருக்க போறதுமில்ல.

மலர்விழி ஊருக்கு வந்திருக்கா என்று தெரிஞ்சி நான் அவளை போய் பார்க்கலாம் என்று நினச்சதுக்கே என் அம்மாவும், அப்பாவும் தற்கொலை செய்ய போறதாக மிரட்டினாங்க. சரி அவ நல்லா இருக்காளே என்று நானும் அவள விட்டுட்டேன்.

பல வருஷம் கழிச்சி தேன் கிட்ட இருந்து எனக்கு போன் வந்தது. ஆபிசுக்கு தான் போன் பண்ணி என் பேர சொல்லி கேட்டிருக்கா. என்ன பார்க்கணும் என்று சொன்னா. யார் கிட்டயும் சொல்லாம நான் அவ வீட்டுக்கு போனேன்.

நான் போன நேரம் தேன் படுத்த படுக்கைல இருந்தா. அது அவளோட கடைசி நேரம்” என்ற கதிரவன் இன்று நடந்தது போல் விம்மி விம்மி அழுதான்.

இதுநாள் வரையில் வராத ஆடவர் ஒருவர் வீடு தேடி வந்திருக்க, “நீங்க தான் என் அப்பாவா?” என்று மலர்விழி அவரை பார்த்து கோபமாக முறைத்தாள். அவளை சொல்லி குற்றமில்லை. தேன்மொழிக்கு இருந்த பட்டங்களும், பேச்சுகளும் தான் மலர்விழியை கோபமாக பேசத் தூண்டியது.

“நான் தான் உன்ன பெத்த அப்பாவாக இருந்திருக்கணும். என் விதி தேனை விட்டுட்டேன்” மலர்விழியின் கையை பற்றி அழுது தீர்த்த கதிரவன் தேன்மொழியை காண சென்றான்.

“வந்துட்டீங்களா? எங்க உங்கள பார்காமலையே செத்துடுவேன்னு நினச்சேன்” கண்களில் நீர் வழிய படுத்திருந்தாள் தேன்மொழி.

“என்ன ஆச்சு தேன். நீ என்ன கல்யாணம் பண்ண பிடிக்காம ஓடிப் போய்ட்டதாக ஊரே பேசுச்சு. உன்ன தேடி போலாம்னு கிளம்பினா எங்கம்மா மயக்கம் போட்டு விழுந்து…”

“எல்லாம் எனக்குத் தெரியும்” கதிரவன் மேல் எந்தத் தப்புமே இல்லையென்பதால் அவனை பேச விடாது, தனக்கு நடந்த அனைத்தையுமே ஒன்று விடாமல் கூறினாள்.

“இதெல்லாம் திட்டம் போட்டு செஞ்சதே ஆதிசேஷன் ஐயா தான்” கேவிக் கேவி அழுதாள் தேன்மொழி.

“என்ன சொல்லுற? இல்ல. அவர் அப்படி பண்ண மாட்டார்” கதிரவனால் நம்பவே முடியவில்லை. கதிரவனுக்கு தேன்மொழியை எவ்வாறு சமாதானப்படுத்துவதென்று புரியவில்லை.

“என்ன கடத்தின மூணு பொம்பளைல ஒரு பொம்பளைய பார்த்தேன். அவங்க தான் சொன்னாங்க. இல்ல இல்ல உளறிட்டாங்க”

தேன்மொழிக்கு அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் காய்கறி கூட யாரும் விற்பதில்லை. அப்படியே யாராவது ஆண்கள் அவளை நெருங்குகிறார்களென்றால் தப்பான எண்ணத்தில் தான் நெருங்குகிறார்கள். இதை பற்றி ஆதிசேஷனிடம் பல தடவை கூறி விட்டாள். 

“நீ எதுக்கு கடைக்கெல்லாம் போற? அதான் வேலைக்கு ஒரு அம்மா இருக்காங்களே அவங்கள அனுப்பு. என் பொண்ண பத்திரமா பாத்துக்க” என்று கூறுவாரே தவிர ஒருநாளும் சென்னைக்கு வந்து விடு என்று கூறவே இல்லை. மலர்விழியை பார்க்க வருவதுமில்லை.

சமுகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கிறார். தனக்கு இன்னொரு குடும்பம் இருப்பது வெளியுலகத்துக்கு தெரிந்தால் அவமானமாக போய் விடும் என்று வர மறுக்கிறார் போலும் என்று தேன்மொழி தன்னை தானே சமாதானப் படுத்திக்கொள்வாள்.

மலர்விழி தந்தை எங்கே என்று போய் தந்தை யார் என்று கேட்கும் அளவுக்கு வந்து விட்டாள். வளர்ந்தும் விட்டாள்.

“உன் அப்பாவே உன்ன வந்து பார்ப்பார். அதுவரைக்கும் அமைதியா இரு” ஆதிசேஷன் வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தாள் தேன்மொழி.

அதனால் தான் கதிரவன் வந்ததும் மலர்விழில் “நீங்க தான் என் அப்பாவா” என்று கேட்டிருந்தாள்.

“யார் இவர்? எதற்காக அம்மாவை பார்க்க வந்திருக்கிறார்” சந்தேகத்தில் கதிரவனிடம் தேன்மொழி என்ன பேசுகிறாளென்று மலர்விழி ஒட்டுக்கு கேட்டுக் கொண்டிருந்தாள். தேன்மொழி சொல்பவற்றை கேட்டு அங்கேயே அமர்ந்து வாய்பொத்தி கதறி அழுதாள் மலர்விழி. 

“காய்கறி வாங்க பக்கத்து ஊருக்கு பஸ்ல போய் இருந்தேன். அப்போ தான் அந்த பொம்பளைய பார்த்தேன். என்ன பார்த்ததும் என்ன ஐயா உன்ன கைவிட்டுட்டாரா? தொழில்ல இறங்கிட்டியான்னு கேட்டா? அந்த வார்த்தையை கேட்டதும் என் உடம்பே ஆடிப்போச்சு. பழைய ஞாபங்கள் வந்து தலையே சுத்துச்சு. ஆனாலும் என்ன யார் கடத்தினாங்க என்று தெரிஞ்சிக்க நெஞ்ச இறுக்கி பிடிச்சி கிட்டு எந்த ஐயா என்ன சொல்லுறீங்க? என்று கேட்டேன். ஆரம்பத்துல அந்த பொம்பள தான் என்ன கடத்தினாங்க என்றே எனக்கு ஞாபகம் வரல. பழசெல்லாம் ஞாபகப்படுத்தியதும் தான் அந்த பொம்பளைய தான் காட்டுக்கு கோவில் கிணத்தடியில பார்த்தேன் என்று ஞாபகம் வந்தது.

“ஆதிசேஷன் ஐயா தான். அவர் தான் உன்ன கடத்த சொன்னாரு. பகையாளி பொண்ணு அதான் சாந்தியோட விடுதில தொழில் பண்ண விடச் சொன்னாரு என்று நினச்சேன். உனக்கு ராஜ யோகம் தான் அவருக்கு பிடிச்சி போய் தான் உன்ன கடத்தவே சொல்லியிருக்காராமே. இப்போ தொழில் தானே பண்ணுற? தனியா பண்ணுறியா?” அந்த பெண் பேசிக் கொண்டே போக ஓடும் பஸ்ஸை விட்டு இறங்கிய தேன்மொழி வாந்தியெடுக்கலானாள்.

வேகமாக ஒரு கடையை அடைந்தவள் சோடா வாங்கிக் குடித்த பின் தான் பதைபதைப்பு நின்றது.

மெல்ல, மெல்ல தனக்கு நடந்த அனைத்துக்கும் ஆதிசேஷன் தான் காரணம் என்று புரிய, அவரையே நம்பி வாழ்ந்த தன்னையே வெறுத்தாள். அவர் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி ஒரு பெண் குழந்தையை வேறு பெற்று வைத்திருக்கிறோம் என்று எண்ணுகையில் தன்னை பற்றி என்ன சொல்ல?  மனதளவில் சோர்ந்து போனவளுக்கு வாழ பிடிக்கவில்லை. நெஞ்சடைக்க மயங்கி சரிந்தாள். யாரோ அவளை மருத்துவமனையில் சேர்த்திருந்தார். மாரடைப்பு என்றார் மருத்துவர். 

தன்னை எதற்காக ஆதிசேஷன் ஏமாற்றினார்? இந்த உடம்புக்காகவா? அப்படியென்றால் ஏன் தன்னை பார்க்க வராமல் கை விட்டு விட்டார் தேன்மொழிக்கு பதில் தெரிய வேண்டி ஆதிசேஷனை அலைபேசியில் அழைத்தாள்.  

    

“நீங்க தான் என்ன கடத்தினீங்களா?” தேன்மொழி நேரடியாகவே கேட்டாள்.

“யார் சொன்னா உன் கிட்ட? யாரை பார்த்த?”

“என்ன கடத்தினை பொம்பளைய பார்த்தேன் அவங்களே தான் சொன்னாங்க. பொய் சொல்லாதீங்க” தொண்டையடைக்க சீறினாள்.

“நீ என்ன பேரழகியா? உன்ன சுத்தி சுத்தி வர? உன் கிட்ட நான் என்ன எதிர்பார்த்தேனோ அது எனக்கு கிடைச்சது” சத்தமாக சிரித்தார் ஆதிசேஷன்.

ஆதிசேஷன் சொன்னது மலர்விழி கிடைத்தாள் என்றுதான். ஆனால் தேன்மொழி ஆதிசேஷன் தன்னுடைய உடலை பற்றி தான் கூறுகிறார் என்று எண்ணி அழுது கரைந்தாள்.

ஒருவேளை ஆதிசேஷன் மலர்விழியை பற்றி பேசியிருந்தால், தேன்மொழி மலர்விழியை வெறுத்திருக்கவும் கூடும்.

தேன்மொழி மருத்துவமனையில் இருந்தது கூட தெரியாமல் வீட்டுக்கு வந்த அன்னையை கண்டபடி பேசினாள் மலர்விழி. அது வேறு தேன்மொழியின் மனதை ரணமாக அறுத்தது.

தான் யாருக்காக உயிர் வாழ வேண்டும்? அவளுடைய உடலே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. செத்து விடலாம் என்று தோன்றினாலும் தற்கொலை செய்துகொள்ள தைரியம் வரவில்லை.

தற்கொலை செய்து கொண்டால் ஊரார் பேசிய பேச்சுக்கள் உண்மையாகி விடுமே. தன் மகள் நிம்மதியில்லாமல் தவிப்பாளே. அதை பற்றியே சிந்தித்து சிந்தித்து பிணியில் விழுந்தாள்.  

மரண தேவதையின் மடியில் தவழ எண்ணுபவள் மருந்து மாத்திரைகளை தொட்டுக் கூட பார்ப்பாளா? தனது இறுதி மூச்சு போகும் முன் மலர்விழியை பாதுகாக்க வேண்டும் என்று தனக்கிருந்த ஒரே நம்பிக்கையான கதிரவனை அழைத்தாள்.

அவனும் வரவில்லையென்றால் கடவுள் விட்ட வழியென்று கண்களை மூடியிருப்பாள்.

“அம்மா…. என்ன மன்னிச்சிடுமா… இந்த பாவிய மன்னிச்சிடுமா. உண்மை எதுவுமே தெரியாம நானும் உன்ன பேசிட்டேனேமா?” தேன்மொழியை கட்டிக் கொண்டு கதறியழுதாள் மலர்விழி.

 

தேன்மொழி தனக்கு என்ன நடந்தது என்று கூறிய பின் மலர்விழியை கதிரவனிடம் ஒப்படைத்து விட்டு கண்மூடினாள்.

ஊரார் பேசியதை கேட்டு அன்னையை தானும் பேசி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி மலர்விழியை கொலையாய் கொல்ல ஆரம்பித்தது. கதிரவனின் உதவியோடு சென்னையில் கல்லூரியில் சேர்ந்தாள்.

ஆதிசேஷன்தான் தன்னுடைய தந்தை, அன்னையின் இந்த நிலைக்கு ஆதிசேஷன் தான் காரணம் என்று அறிந்த நொடியே ஆதிசேஷனை பழிவாங்க துடித்தவள், வான்முகிலனை சந்தித்த பின் பழிவாங்கும் எண்ணத்தை மறந்து தான் போயிருந்தாள்.

வான்முகிலன் அவளை நிராகரித்த பின் அவளது நோக்கமென்ன? தான் என்ன செய்ய வேண்டும் என்பது ஞாபகம் வந்து ஆதிசேஷன் மீது மட்டுமல்லாது, வான்முகிலன் மீதும் கோபத்தை வளர்த்துக் கொண்டாள். மொத்தமாக அவர்களை பழிதீர்க்க திட்டம் தீட்டினாள்.

மேனேஜர் கதிரவனின் உதவியோடு தான் மலர்விழி ஆதிசேஷனின் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள்.

மேனேஜர் கதிரவன் தனக்கும் மலர்விழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் நேர்காணல் மூலம் மலர்விழியின் திறமையால் அவள் வேலைக்கு சேர்ந்தாள் என்ற விம்பத்தை தான் உருவாக்கியிருந்தார்.

என்ன மாதிரியான கேள்விகள் கேட்பார்கள்? எப்படி தயாராக வேண்டும். என்ன எதிர்பார்ப்பார்கள் என்று கதிரவன் உதவி செய்ததால் தான் மலர்விழியால் நேர்காணலில் தடையில்லாமல் படிப்படியாக முன்னேறி ஆதிசேஷனின் செயலாளர் என்ற பதவியை அடைய முடிந்தது.

பல கட்ட பரிசோதனைகள், நம்பிக்கையானவளா? திறமையானவளா? அறிவானவளா? பணத்தாசை பிடித்தவளா? என்று கூட பரிசோதனை செய்து எல்லாவற்றிலும் வெற்றி பெற்று ஆதிசேஷனின் நிழல் என்றான பின் தான் மலர்விழி தான் ஆதிசேஷனின் மகள் என்றே வெளிக்காட்டினாள்.

ஆதிசேஷன் மலர்விழி தான் தன்னுடைய மகள் என்று அறிந்து கொண்ட பின் அவளை கண்காணித்தான் செய்தார். உடனே எல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அன்னையின் சாயலில் இருப்பதால் பாசம் கொஞ்சம் இருக்கலாம். சொந்த இரத்தமல்லவா. தனக்கு ஆதாயமில்லாமல் எதையும் செய்யாத ஆதிசேஷன் ஜோசியரை அணுகிய பொழுது “மகாலக்ஷ்மி உங்கள தேடி வந்திருக்கா. கெட்டியா பிடிச்சிக்கோங்க” என்றிருந்தார். அது மலர்விழி தான் என்று ஆதிசேஷன் முழுமனதாக நம்பினார். அதனால் தான் வீட்டுக்கு அழைத்து சென்று குடும்பத்தாருக்கு அறிமுகமே செய்து வைத்தார்.  

“மலர்விழி நினைச்சிருந்தா ஆதிசேஷனோட மொத்த சொத்தையும் பறிச்சி அவர நிற்கதிய நடு ரோட்டுல நிக்க வச்சிருக்கலாம். அத விட்டுட்டு எதுக்காக அவர சுத்தியிருக்குறவங்கள கொல்ல துடிக்கிறா?” தேன்மொழிக்கு நடந்தது அநியாயம், அக்கிரமம். அதற்காக சம்பந்தமே இல்லாத எத்தனையோ பேர் பலியாகி விட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் கேட்டான் வான்முகிலன்.

“சொத்து, பதவி, அந்தஸ்து, கௌரவம் என்று பெருமை பீத்துற ஆதிசேஷனை ஒரே நொடில கொல்லுறதுல என்ன இருக்கு? அவருக்கு இருக்கு என்று நினைக்கிற எல்லாத்தையும் அழிக்கணும்” என்றான் கதிரவன்.

“அட லூசுங்களா… வெளியுலகத்துக்கு தான் அந்தாளு பிஸ்தா, உண்மையிலயே வெத்து வெட்டு” சிரித்தாள் தனம்.

“என்ன சொல்லுறீங்க?” வான்முகிலன் புரியாமல் கேட்க, தனது குடும்பத்துக்கு ஆதிசேஷன் செய்த அநியாயத்துக்கு தனம் ஆதிசேஷனுக்கு என்ன தண்டனை கொடுத்தாள் என்பதை கூற, வான்முகிலன் மட்டுமல்லாது கதிரவனும் அதிர்ந்தான்.

“இந்தம்மா கிட்ட உதவி கேட்டிருக்கணுமோ? நியாயம் கிடைச்சிருக்குமோ” என்று முதன்முறையாக எண்ணினான் கதிரவன்.

“நமக்கு அநியாயம் நடந்திருச்சு என்று ஒருத்தன நாம பழி வாங்க கிளம்பிட்டா அவன் குடும்பத்துல இருந்து ஒருத்தன் நம்ம குடும்பத்த பழி வாங்க கிளம்புங்க. இப்படியே மாறி மாறி நடக்கும். இல்லையா பழி வாங்குறோம் என்று நாம அப்பாவிகள தண்டிச்சா கடவுள் கூட பார்த்துகிட்டு இருக்க மாட்டாரு. அத தான் மலர்விழி பண்ணிக்கிட்டு இருக்கா” இது தவறான பாதை என்று கூறினான் வான்முகிலன்.

“எனக்கும் தெரியும். கோபத்துலையும், ஆத்திரத்துலையும் நாம எடுக்குற முடிவு தப்பு, ஆனா ஆதிசேஷன் போல திருந்தாத ஜென்மங்களுக்கு அது பொருந்தாது” தான் செய்தது சரியே என்று பேசினாள் தனம்.

“எல்லா நாட்டுலையும் சட்டம் என்ற ஒன்றிருக்கு. நாம அதன்படி தான் தண்டனை கொடுக்கணும்” வான்முகிலன் புரியவைக்க முனைய,

“அந்த சட்டத்தையே விலை பேசக் கூடியவனுக்கு சட்டத்தால் தண்டனை கொடுக்க முடியாது” என்றாள் தனம்.

“நீங்களே தண்டனை கொடுத்ததாலதான், உங்க குடும்பத்துல ஆதிரியன், ஆகாஷ், ஆதித் என்று எல்லாரும் பாதிப்படைஞ்சிருக்காங்க”

“சட்டத்தின் வழி போகணும் என்று நினைக்கிற நீயும் தான் பாதிப்படைஞ்சிருக்க, ஆதித் கூட உன் அக்கா மகளும் இருந்தாலே. விமான விபத்துல உன் பேர், உன் மாமா பேர் எல்லாம் அடி பட்டதே. அதுக்கு என்ன சொல்ல போற?” வான்முகிலனின் வாயை அடைத்து விட்டாள்.  

“ஆதிசேஷன் நச்சு மரம். ஒரேயடியா வெட்டினா சாயாது. கிளை கிளையா வெட்டணும்” ஆவேஷமானான் கதிரவன்.

“நீ கிளை என்று சொல்லுறது என் குடும்பத்த தானே. ஆதிசேஷனுக்கும் என் குடும்பத்துக்கு, என் குடும்ப சொத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.

‘அப்பா’ என்ற பாசம் கூட மலர்விழி வந்ததுல பசங்களுக்கு இல்லாம போச்சு, சொத்தும் அவங்க பேர்ல வந்துட்டா ஆதிசேஷன் செல்லா காசு. செத்த பாம்பை எத்தனை நாளைக்கு அடிப்பீங்க?”

“இவ்வளவு பண்ண நீங்க அந்தாள கொன்னு இருக்கலாம். தேன்மொழி தப்பிச்சிருப்பா. நீங்க அவனை விட்டு வச்சதனால என் தேன்மொழி எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சிட்டா. மலர் இன்னக்கி இப்படி வளர்ந்து நிக்கிறா” கவலையாக சொன்னான் கதிரவன்.

“மேடம் இவரை முதல்ல கீழ இருக்குங்க” வான்முகிலன் சொல்ல

“தல கீழ தொங்கினாவாவது மூளைக்கு இரத்தம் ஓடி மூளை வேலை செய்யுதான்னு பார்க்கலாம். இவன் இப்போ சொன்னானே. நான் ஆதிசேஷனை கொன்னிருந்தா இது எதுவுமே நடந்திருக்காது என்று. வாஸ்தவம் தான். எனக்கு புருஷன் வேணும் எங்குறத விட என் பசங்களுக்கு அப்பா வேணும் என்று நினைச்சது நான் பண்ண தப்பு தான்.

ஆதிசேஷன் தேன்மொழி கல்யாணம் பண்ணிக்க இந்த கதிரவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிருக்காரு. அந்த பொண்ண இவன் ஏத்துக்கவே இல்ல.

சென்னைல இருந்தவன் லீவுக்கு கூட ஊருக்கு போக மாட்டான். இவன் அப்பாவும் அம்மாவும் கெஞ்சி, கூத்தாடிதான் வர சொல்வாங்க,

     

ஒரு வழிய பொண்டாட்டி கூட வாழலாம் னு முடிவு பண்ணி சென்னைக்கு அழைச்சி கிட்டான். அந்த நேரத்துல தான் தேன்மொழி ஊருக்கு வந்தா.

எப்போ தேன்மொழி ஊருக்கு வந்தான்னு தெரிஞ்சதோ இவன பெத்தவங்க இவன ஊருக்கு கூப்பிடவே இல்ல.

பொண்டாட்டி கூட வாழ்ந்து ஒரு பொம்பள புள்ளையையையும் பெத்திருக்கான். எப்போ தேன்மொழி ஊருக்கு வந்தான்னு தெரிஞ்சி கிட்டானோ பொண்டாட்டிக்கு மூஞ்ச காட்ட ஆரம்பிச்சுட்டான்”

“என் வாழ்க்கைல நடந்ததா இப்போ எதுக்கு எனக்கே சொல்லுறீங்க?” கடுப்பானான் கதிரவன்.

வான்முகிலனுக்கு எதோ புரிவது போல் இருந்தது.

“ரம்யா புருஷன் ஜவஹர என்ன பண்ணீங்க?” சட்டென்று தனம் கதிரவனை பார்த்து கேட்டாள்.

“அந்த பொண்ணு யாரென்றே எனக்குத் தெரியாது. மலர சிக்க வைக்க யாரோ அந்த ஜவகர் கடத்தி கொலை பண்ணியிருக்காங்க” என்றான் கதிரவன்.

“பெத்த பொண்ண யாரென்றே தெரியாது. நல்ல அப்பா. உனக்கும் ஆதிசேஷனுக்கும் பெருஷா ஒன்னும் வித்தியாசமில்ல” என்றாள் தனம்.

“என்ன? ரம்யா என் பொண்ணா?” அதிர்ந்தான் கதிரவன்.

“கதிரவன் தான் மலர்விழிக்கு உதவி செய்யிறாரு என்று தெரிஞ்சிக்கிட்டு அவர் பொண்ணுக்கு கஷ்டம் கொடுக்க உங்க வீட்டுல யாராவது ஜவகர் கொன்னிருக்க வாய்ப்பிருக்கா மேடம்” தனத்தை பார்த்து கேட்டான் வான்முகிலன்.

“என் பசங்க மூணு பேருமே என் பேச்ச மீற மாட்டாங்க. கதிரவன் தான் உதவி செய்யிறான்னு என்ன தவிர யாருக்கும் தெரியாது. ஆதிசேஷனுக்கு தெரிஞ்சிருந்தா மலர்விழியோட இவனையும் தான் கொன்னிருப்பாரு” என்றாள் தனம். 

“காலேஜ்ல வச்சி ராம்யாக்கும், மலர்விழிக்கும் முட்டிகிட்டதாக சொல்லுறாங்க. அதனால ரம்யாவ பழிவாங்க மலர்விழி ஜவஹர் கொன்னிருக்கலாம்ல” யோசனையாக கேட்டான் வான்முகிலன்.

“எனக்குத் தெரியாம மலர் எதுவும் பண்ண மாட்டா…” கத்தினான் கதிரவன்.

“யோவ் உனக்கு இன்னுமா புரியல. ரம்யா உன் பொண்ணு. உன் பொண்ண கொல்ல உன் கிட்டயே ஐடியா கேப்பாளா? அதான் உன் கிட்ட கேட்காம காரியத்துல இறங்கிட்டா” சிரித்தான் வான்முகிலன்.

உண்மையில் இப்படித்தான் நடந்திருக்குமென்று வான்முகிலனால் உறுதியாக சொல்ல முடியாது. இதை வைத்து கதிரவனையும், மலர்விழியையும் பிரிக்க முடிந்தால் மலர்விழியை காவல் துறையில் சிக்க வைக்க ஏதாவது ஆதாரம் கிடைக்குமென்று தான் எண்ணினான்.

“இல்ல இல்ல ரம்யா வீட்டுக்காரரை மலர் ஒன்னும் பண்ணல” ரம்யாவை தனக்கு பிடிக்காது, ஜவஹர் ரம்யா கணவன் என்று அறிந்திருந்தால் தானே ஏதாவது செய்திருப்பேன் என்று மலர்விழி கூறியதை ஞாபகத்தில் கொண்டு வந்தான் கதிரவன்.

கதிரவன் மறுத்த வித்திலையே மலர்விழி ஐவரை கடத்தவுமில்லை, கொலை செய்யவுமில்லையென்று வான்முகிலனுக்கு புரிந்தது. ஆனால் மலர்விழியை சிக்க வைக்க இதை விட வேறு சந்தர்ப்பம் அமையுமா?

“நான் அவள காதலிக்கவே இல்ல. லவ் பண்ணுறேன்னு சொன்னா, நான் முடியாது என்று சொன்னேன். அதுக்கே என்ன பழிவாங்க கிளம்பினவ, உங்க பொண்ணு ரம்யா உங்களாலையும் மலர்விழியாளையும் பாதிக்கப்பட்டிருக்கா, ரம்யா காலேஜ்ல வச்சி மலர்விழி என்னெல்லாம் பேசி இருப்பா? உங்க பொண்ண சும்மா விடுவாளா?

உங்க கிட்ட சொல்லாம எல்லாத்தையும் பண்ணிட்டு, உங்க கிட்ட நல்லாவே வேஷம் போட்டிருக்கா” என்றான் வான்முகிலன்.

கதிரவன் முற்றிலும் குழம்பிப் போனான்.

Advertisement