Advertisement

அத்தியாயம் 24

கோபம், ஆத்திரம், விரோதம், வன்மம், பகை எல்லாமே ஒன்றா? ஒருவர் மீது ஏற்பட்டால் பழி தீர்க்க எந்த எல்லைக்கும் செல்லலாமா?  

பகையாளியோடு நேருக்கு நேர் மோதுவது ஒரு ரகம் என்றால் உறவாடி கெடுப்பது இன்னொரு ரகம். அதை தான் மலர்விழி கையாளுகின்றாள்.

அவள் அன்னை தேன்மொழியை ஆதிசேஷன் எவ்வாறு ஏமாற்றினாரோ அந்த வழியிலையே அவரை ஏமாற்ற முடிவு செய்திருந்தாள்.

தேன்மொழியும் கொஞ்சம் வசதியான வீட்டுப் பெண்தான். அதனால் தூரத்து உறவில் ஆதி குரூப்பில் கைநிறைய சம்பளம் வாங்கும் கதிரவனை பேசி முடித்து நிச்சயமும் செய்திருந்தனர்.

உறவினர்கள் என்பதால் கதிரவனும், தேன்மொழியும் கல்யாணம், கோவில் திருவிழா என்று முக்கியமா நிகழ்வுகளில் சந்தித்துக் கொண்டிருந்தமையால் ஏற்கனவே பேசிப் பழகியிருந்தனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தது. திருமணம் பேசவும் காதலிக்கவே ஆரம்பித்திருந்தனர்.

ஆதிசேஷன் தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு குறிப்பிட்ட நாள் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை தேடிக் கொண்டிருந்த நேரமது.

காரியாலயத்தில் வேலை பார்க்கும் யாருக்கு திருமணம் என்றாலும் சரி, யாருடைய பெண்ணுக்கு திருமணம் என்றாலும், பையன் என்றாலும் அத பையன் திருமணம் செய்யப் போகும் பெண்ணுடைய ஜாதகம் எத்தகையது என்று அறிந்துகொள்ள, தன்னுடைய ஜோசியரை அணுகி நல்ல நாள் நல்ல நேரம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி, நகை வாங்கிக் கொடுப்பதோடு, கல்யாணத்துக்கான செலவு, தம்பதியர்கள் தேனிலவுக்கு செல்ல சொந்த செலவில் பணம் கொடுப்பார் ஆதிசேஷன். அந்த பொறுப்பை இளமையோடும், துடிப்போடும் இருந்த கதிரவனுக்குத்தான் கொடுத்துமிருந்தார் ஆதிசேஷன்.

இறந்து போன ஜோசியரின் சிஷ்யர் ஒருவர் தான் ஆதிசேஷனுக்கு இப்பொழுது ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார். குரு என்ன சொன்னார் என்று சிஷ்யனுக்குத் தெரியாதா? அதை வைத்தே வந்த வரைக்கும் லாபமென்று ஆதிசேஷன் மூலம் சம்பாதிக்கலானார்.

கதிரவனுக்கு திருமணமாகப் போகிறது என்றதும், ஆதிசேஷன் அறிந்து கொண்டால் திருமணத்திற்கு பணம் கொடுப்பார். செலவில் பாதி குறைந்து விடும் என்று எண்ணினான் கதிரவன். சந்தோசமாக முதலாளியிடம் தனக்கு திருமணமாகப் போவதை பகிர்ந்து கொண்டான்.

வளமை போலவே ஆதிசேஷன் கதிரவன் மற்றும் கதிரவன் திருமணம் செய்யப் போகும் தேன்மொழியின் ஜாதகத்தையும் ஜோசியரிடம் காட்டுமாறு கூறினார்.

முதலாளியின் மீதுள்ள விசுவாசத்தால் கதிரவனும் கண்மூடித்தனமாக ஆதிசேஷன் சொல்வதையெல்லாம் செய்தான்.

ஜோசியரின் மூலம் தான் தேடும் பெண் தேன்மொழிதான் என்று அறிந்து கொண்டதும் கதிரவனிடம் காதல் திருமணமா? வீட்டார் பார்த்து நிச்சம் செய்தார்களா? என்று கேலி போல் கேட்க, வீட்டார் பார்த்த பெண் தான் தூரத்து உறவினரும் கூட என்று மட்டும் தான் கதிரவன் கூறியிருந்தான்.

அதற்கேற்ப தேன்மொழியை எவ்வாறு தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆதிசேஷன் திட்டம் தீட்டலானார்.

மணப்பெண் தேன்மொழி யார் என்று தெரியாதே? என்று சிந்தித்த ஆதிசேஷன் திருமண பத்திரிகையில் மணமகன் கதிரவன் மற்றும் மணமகள் தேன்மொழியின் புகைப்படங்களை அச்சிடலாம் செலவை தானே பார்த்துக்கொள்வதாக கூற, கதிரவன் சந்தோசமாக சம்மதித்தான்.

என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் தேன்மொழியின் தந்தையும் கதிரவனிடம் தேன்மொழியின் புகைப்படத்தை கொடுத்து விட்டிருந்தார்.

திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது. ஆதிசேஷன் பார்த்து பார்த்து எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தார். கதிரவனுக்கு ஆதிசேஷன் மேல் முதலாளி என்ற விசுவாசம் ஏற்கனவே இருந்தது, உரிமையாக எல்லாவற்றையும் செய்வதால் ஆதிசேஷனின் அடிமையாகவே மாறியிருந்தான் கதிரவன்.

தேன்மொழியை கடத்துவது ஒன்றும் ஆதிசேஷனுக்கு பெரிய விஷயமே இல்லை. தொழிலில் பிரச்சினை செய்வோரை தட்டி வைக்கவென அவரிடம் தான் ஆள் பலம் இருக்கிறதே. தாத்தாவும், தந்தையும் காட்டிய வழியில் சமுக விரோதிகளின் சகவாசமும் இருக்கிறது.

தேன்மொழியின் புகைப்படம் கிடைத்த பின் சந்தர்ப்பம் கிடைத்த உடன் கடத்துமாறு தான் ஏற்பாடு செய்திருந்த ஆட்களுக்கு உத்தரவிட்டிருக்க, தேன்மொழியின் ஊரில் சுற்றுலா சென்ற குடும்பம் போல் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் தேன்மொழி குலதெய்வ புஜைக்காக காட்டுக்கு கோவிலுக்கு சென்ற பொழுது கடத்தியிருந்தனர்.

வெளியாட்கள் யாரும் அங்கு வருவதில்லை. கடத்த வந்தவர்களும் சந்தேகப்படும்படியாக நடந்துகொள்ளாமல் சுற்றுலா வந்த குடும்பம் போல் சுற்றிக் கொண்டிருந்ததால் அவர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

தேன்மொழி காதலனுடன் ஓடிப் போய் விட்டாள் என்று கதையை கட்டி விட்டு அவளை கடத்திக் கொண்டு வந்து விட்டனர்.

தேன்மொழியை கட்டாய திருமணம் செய்து குழந்தையை பெற்றுக்கொள்வதில் ஆதிசேஷனுக்கு இஷ்டமில்லை. அவ்வாறு செய்தால் தேன்மொழி ஆதிசேஷனிடமிருந்து தப்பியோடத்தான் எப்பொழுதுமே வழி பார்த்திருப்பாள்.

அவள் சம்மதத்தோடு திருமணம் நடந்தால் மட்டும் தான் அவள் கூடவே இருப்பாள். சந்தோசமாக குழந்தையையும் பெற்றுக் கொடுப்பாள். அதற்காக ஆதிசேஷன் கையாண்ட வழி மிகவும் கொடியது.

மயக்கத்திலிருந்து கண்விழித்த தேன்மொழிக்கு தலை வின் வின் என்று வலித்தது. பூஜைக்காக கிணற்றில் நீர் எடுக்க சென்றது ஞாபகம். காட்டுப்பாதை என்பதால் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்கள் இருக்கக் கூடும் என்று அன்னை பார்த்து போகும்படி கூறினாள்.

கோவிலிலிருந்து கிணறு பார்க்கும் தொலைவில் தான் இருந்தது. செடிகளும், கொடிகளும் வளர்ந்ததால் ஆட்கள் இருப்பது தெளிவில்லாமல் தெரிந்தாலும், யார் அது என்று அடையாளம் காண முடியாது. இவள் கிணறை நெருங்கியதும் அறிமுகமில்லாத அவர்களை பார்த்து புன்னகைத்தாள்.  அவர்கள் தான் தன்னை இறுகி பிடித்து மூக்கில் எதையோ வைத்து அழுத்தினார்கள்.

சொந்த ஊரில் சொந்தபந்தங்கள் இருக்கும் இடத்தில் யார் தன்னை கடத்தியது? அங்கே இருந்த மூவருமே பெண்கள் அல்லவா.

தான் எங்கே இருக்கிறோம் என்று சுற்றி, முற்றி பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அது ஒரு பழைய அறை. படுக்க கட்டில் மெத்தையோடு இருந்தது. படுக்கை விரிப்பு கூட இல்லை. போர்வை. தலையணை இல்லை. வேறெந்த பொருட்களுமே அறையிலில்லை. குடிக்க நீர் கூட இல்லை. தாகம் தொண்டையை அடைத்தது.

மெதுவாக சென்று கதவை திறக்க முயன்றால் அறை வெளியால் பூட்டியிருந்தது. தட்டலாமா? வேண்டாமா? தான் கண் விழிப்பேனென்று நினைத்து யாராவது வருவார்களா? காத்திருப்போமா? வருபவர்களை தள்ளி விட்டு வெளியே ஓடிவிடலாமா? என்று யோசித்தாள்.

தேன்மொழியை ஆளை வைத்து கடத்தவே குடும்பம் போல் ஆட்களை ஏற்பாடு செய்த ஆதிசேஷன் தேன்மொழியை கடத்தி கொண்டு போய் அடைத்து வைத்தது பாலியல் தொழில் நடாத்தும் ஒரு விடுதியில்.

“மூணு நாளைக்கு அவளுக்கு சோறு, தண்ணி எதுவும் கொடுக்காத, கதவ தட்டினாலும், சரி, கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாலும் சரி. வெளில இருந்து யாரும் அவ கூட பேசக் கூடாது. அது எந்த மாதிரியான இடம், அவ எந்த மாதிரியான இடத்து வந்து மாட்டியிருக்கானு அவளே புரிஞ்சிக்கணும்.

முக்கியமா தற்கொலை பண்ணிகவோ, தப்பிக்கவோ அவ யோசிக்கவே கூடாது. புரிஞ்சுதா?” அலைபேசி வழியாக விடுதியை நடாத்தும் சாந்தி என்ற பெண்ணுக்கு ஆதிசேஷன் உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.

நேரம் சென்றதே ஒழிய யாரும் வருவது போல் தெரியவில்லை. ஜன்னல் கூட இல்லாத அந்த அறையில் புழுக்கமாக இருந்தது. பொறுமையை இழந்த தேன்மொழி கதவை தட்ட ஆரம்பித்தாள். எவ்வளவு தட்டியும் அந்த பக்கமிருந்து யாரும் பதில் சொல்லவில்லை.

பெண்களின் சிரிப்பு சத்தமும், வளையல் சத்தமும், கொலுசொலியும், பாட்டு சத்தமும், விடிய விடிய கேட்டுக் கொண்டே இருந்தது.

தேன்மொழிக்கு இது எந்த மாதிரியான இடம், தான் எங்கு வந்து மாட்டிக் கொண்டோம் என்று புரிய அச்சம் இதயத்தை தாண்டி உடல் முழுவதும் பரவி உடல் நடுங்கி ஜூரமே வந்து விட்டிருந்தது.

பசி வேறு உயிரை எடுக்க, ஜுரம் வந்து படுக்கையிலையே விழுந்திருந்தாள்.

கிணற்றில் நீர் எடுத்து வருகிறேன் என்று சென்றவள் கிணற்றை தாண்டி சென்றதாகவும், அங்கு நின்றிருந்த வண்டியில் ஏறிச்சென்றதை பார்த்ததாகவும் ஒரு குடும்பமே சாட்ச்சி சொன்னது.

திருமணத்திற்கு ஒரு சில நாட்கள் இருக்க, மணப்பெண் காணாமல் போனால் காதலித்தவனோடு ஓடிப் போய் விட்டாள் என்று தான் நினைப்பார்கள். காலம் காலமாக பெண்களை காணாமல் போனால் வீட்டாரே இவ்வாறு தானே முடிவு செய்கிறார்கள். தேன்மொழி ஓடிப்போய் விட்டாள் என்று அவள் வீட்டாரே நம்ப, திருமணம் செய்ய இருக்கும் கதிரவன் பேசிப் பழகி, காதலிக்கவே ஆரம்பித்திருந்ததால் நம்ப மறுத்து, கதிரவன் மட்டும் அவளை தேட கிளம்பினான்.

இப்படித்தான் நடக்குமென்று அறிந்திருந்த ஆதிசேஷன் கதிரவனின் அன்னைக்கு ஆறுதல் சொல்வது போல் குடிக்க குளிர்பானம் கொடுக்க சொல்லி அதில் எதோ ஒரு மாத்திரையை கலந்து கதிரவனின் அன்னையை மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தார்.

கதிரவனுக்கு ஒரு திருமணத்தை உடனடியாக செய்து வைத்தால் அவன் வாழ்க்கையை அவன் பார்ப்பான். தேன்மொழியை பற்றி அவன் தேடவே கூடாது. தேடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று, கதிரவனின் திருமணம் நின்றதால் தான் கதிரவனின் அன்னைக்கு இந்த நிலைமை என்று ஆதிசேஷன் ஆணித்தரமாக பேச, அதையே அவன் குடும்பத்தாரும், சொந்தபந்தங்களும் பேச, அன்னைக்கு ஒன்றென்றதும் பதறிய கதிரவன் தந்தையின் சொல்லுக்கிணங்கி குறித்த முகூர்த்தத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டிருந்தான்.

கதிரவனின் பிரச்சினை ஓய்ந்ததும் விடுதியை நடத்தும் சாந்தியை அழைத்தார் ஆதிசேஷன்.      

“தேன்மொழி எப்படி இருக்கா?”

“ஐயா ஜுரம் வந்து படுத்த படுக்கையா இருக்கா. மாத்துர, மருந்து எதுவும் கொடுக்கல. டாக்டர் கிட்ட கூட்டிட்டு போக முடியாதில்லையா கசாயம் வச்சி கொடுத்தோம். ஊசி போட்டா தேவலாம்”  

“எத்தனை நாளா ஜுரம்?”

“ரெண்டு நாளாத்தான் ஐயா…”

“இன்னும் ரெண்டு நாள் கசாயம் கொடு. குடிக்க கஞ்சி கொடு. வேற சாப்பிட ஒன்னும் கொடுக்காத. நீ மட்டும் உள்ள போ. வேற யாரையும் உள்ள விடாத. அவ நான் கட்டிக்க போற பொண்ணு. பார்த்து சூதானமா இரு. ஏடாகூடமாக ஏதாவது நடந்துச்சு. நீ உசுரோட இருக்க மாட்ட” மிரட்டலெல்லாம் வார்த்தையில் மட்டும் தான் குரலில் கொஞ்சம் கூட இருக்கவில்லை.

“நான் பாத்துக்கிறேன் ஐயா. நான் பாத்துக்கிறேன்” ஆதிசேஷனின் பணம் அவ்வளவு பேசியிருந்தது போலும் பவ்வியமாக பதில் சொன்னாள் சாந்தி.

இரண்டு நாள் ஓடியிருக்க ஜுரம் குறைந்து தேன்மொழி கண் விழித்திருந்தாள். அணிந்திருந்த புடவை காணாமல் போய் உள்ளாடைகள் கூட இல்லாமல் வெற்று மேனியாக இருந்தாள். தன்னை மூடிக்கொள்ளக் கூட எதுவுமில்லாமல் திணறினாள்.

படுக்கை விரிப்பு கூட இல்லாததன் காரணம் புரிய கண்ணீர் முட்டிக்கு கொண்டு வந்தது.

கதவு திறக்கும் சத்தம் கேட்கவே ஓடிச் சென்று கட்டிலுக்கு பக்கமாக அமர்ந்து கொண்டாள். 

உள்ளே வந்தது சாந்தி.

“என்ன கண்ணு. பயந்துட்டியா? ஜுரம் அதிகமானதால புடவையிலையே அசிங்கம் பண்ணிட, அதான் கழட்டி துவைச்சு போட்டேன்.

நீயும் தான் நல்ல சாப்பாடு சாப்பிட்டு எத்தனை நாளாச்சு. என்ன வேணும் சொல்லு வாங்கிட்டு வரேன்” ஆசை வார்த்தை தான் காட்டினாள்.

ஆனால் தேன்மொழிக்கு கழிவறைக்கு செல்ல வேண்டும் போல் இருந்தது, குளிக்க வேண்டும் தயக்கத்தை விட்டு கேட்டு விட்டாள்.

“அவ்வளவு தானா?” என்று வெளியே சென்று இரண்டு வாளியை எடுத்து வந்தாள். ஒரு வாளி நிறைய தண்ணீர் இருந்தது “இங்க தண்ணி பஞ்சம் இதுல குளிச்சிக்க, இந்தா இதுல, ஒண்ணுக்கும், ரெண்டுக்கும் போ, அபொறமா நான் வந்து எடுத்துட்டு போறேன்” என்று விட்டு வெளியேறினாள் சாந்தி.

தேன்மொழிக்கு அதிர்ச்சியில் மயக்கமே வரும் போல் இருந்தது. ஒரு வாளித் தண்ணீரில் எப்படி குளிப்பதாம்? குளிக்கக் கூட வேண்டாம் கழிவறைக்கு செல்ல நீர் வேண்டுமே. இன்னொரு வாளியை கழிவறையாக எவ்வாறு உபயோகிப்பதாம்?

சாப்பாடு போடாமல் பசியில் வாட்டுவது தான் மனிதனை செய்யும் கொடுமை என்று நினைத்திருந்தால் அதை விட கொடுமை கழிவறைக்கு செல்ல விடாமல் படுத்துவது.

நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்த கேவல் வெளியேற கதறிக் கதறி அழுதாள்.

அழுது அழுது ஓய்ந்தவளுக்கு ஒன்று தான் தோன்றியது. இங்கிருந்து தப்பிக்க வேண்டும். அதற்கு இந்த பெண் சொல்வதையெல்லாம் செய்வது போல் தலையாட்ட வேண்டும். வேறு வழியில்லை இரண்டு வாளியை வைத்து தான் எல்லாம் செய்துகொள்ள வேண்டும் என்று புரிய, அமைதியாக காலை கடனை அறைக்குள்ளேயே முடித்தாள்.

ஒரு வாரமாகியும் வாளிகள் உள்ளே வந்தன. ஆனால் வெளியே செல்லவில்லை. தன்னுடைய கழிவின் நாற்றம் தன்னாலையே பொறுக்க முடியாமல் கதவை தட்டிக் கொண்டே இருந்தாள் தேன்மொழி.

“எதுக்காக என்ன இப்படி அடச்சீ வச்சி சித்தரவதை செய்யிறீங்க? உங்களுக்கு என்ன தான் வேணும்? யார் நீங்க?”

உடுத்த ஆடையில். சாப்பிட கஞ்சி மட்டும் தான். அதுவும் ஒரு நேரம். இந்த வாடையில் அந்த கஞ்சி கூட தொண்டையில் இறங்கவில்லை. மறுகணம் உயிர் போகும் கோர பசி நாற்றத்தை கூட பொறுத்தப்படுத்தவில்லை. குடிக்க தண்ணீரை இல்லை. குளிக்க ஒரு வாளித்த தண்ணீரும் வாரத்துக்கு ஒரு முறை. தேன்மொழி குளிக்க நினைப்பாளா? தாகம் தீர நீரை அருந்துவாளா?

வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைக்க வைத்து விட்டார் ஆதிசேஷன். ஆனால் சாவதற்கும் வழியில்லை. அழுவதை தவிர தேன்மொழிக்கு வேறு வழியில்லை. அழுது அழுது கண்ணீரும் வற்றிப் போய் இருந்தது.

தன்னை யாரும் காப்பாற்ற மாட்டார்களா? இந்த நரகத்திலிருந்து தனக்கு விடுதலை கிடைக்காதா? என்று ஏங்க ஆரம்பித்தாள்.

“கதவ திறங்க. எதுக்காக என்ன இப்படி அடச்சீ வச்சி சித்தரவதை செய்யிறீங்க? உங்களுக்கு என்ன தான் வேணும்? யார் நீங்க?”

தினமும் இரவில் பெண்களின் பேச்சுக் குரலும், சிரிப்பொலியும் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் யாரும் தன்னிடம் பேசுவதில்லை. தன்னிடம் கடத்தியவர்களுக்கு என்ன தான் வேண்டும்? தன்னிடம் என்ன எதிர்பார்க்கின்றார்கள்? ஒன்றும் புரியாமல் அழுதாள் தேன்மொழி.

தினமும் சாந்தி வந்து கஞ்சிக் கொடுத்து விட்டு சென்றாலும் இவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை. ஆடைகள் இல்லாமல் அந்த அறையை விட்டு தேன்மொழியால் வெளியே ஓடவும் முடியவில்லை.  

ஒரு பெண்ணுக்கு முன்னால் கூட ஆடையில்லாமல் வர முடியாமல் கூனிக்குறுகி கட்டிலுக்கு பின்னால் அமர்ந்து கொள்பவள் “எதுக்காக என்ன இப்படி அடச்சீ வச்சி சித்தரவதை செய்யிறீங்க? உங்களுக்கு என்ன தான் வேணும்? யார் நீங்க” என்ற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டாள். சாப்பிடாமல் கொள்ளாமல் செத்துடாலாமென்று அவள் கொடுக்கும் கஞ்சியையும் புறக்கணித்தாள். ஆனால் மரணம் தான் அவளை நெருங்கவில்லை.

கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஓடியிருந்தது. நரக வாழ்க்கையையே அனுபவித்து விட்டாள் தேன்மொழி.

இதற்கு மேல் தன்னால் முடியாது தன்னை கொன்று விடும்படி கத்தி கதறினாள்.

“செத்தா தேவலாம் போல இருக்கா? என்ன சொல்லுற? தொழில்ல இறங்குரியா? சாவுறத விட நாலு பேருக்கு உடம்ப வித்து காசு பாப்பியா? பொழைக்கிற வழிய பாரு” உள்ளே வந்த சாந்தி மிரட்டினாள்.

“என்ன உடம்ப விக்கணுமா? என்னால முடியாது” தேன்மொழி உடனே மறுத்தாள்.

“ராத்திரில என்னெல்லாம் வெளிய நடக்குது என்று சத்தம் கேக்குதில்ல. தெரிஞ்சி தானே அமைதியா உக்காந்திருந்த. அடம்பிடிச்சீனா… நீ சம்மதிக்கும் வரைக்கும் இப்படியே கிடக்க வேண்டியது தான்” கதவை அறைந்து சாத்தி விட்டு வெளியேறினாள் சாந்தி.

“என்னங்க ஐயா பொண்ணு அது மசிய மாட்டேங்குது” ஆதிசேஷனிடம் குறைபட்டாள். 

“நான் என்ன தொழில்ல இறக்கவா அவள உன் கிட்ட அனுப்பி வச்சேன். ரத்தம் வராம சித்தரவதை பண்ணத்தான் அனுப்பி வச்சிருக்கேன் அத மட்டும் ஒழுங்கா பாரு” என்றார். 

ஒரு மாதம் கடந்திருந்தது தேன்மொழி இறங்கி வரவே இல்லை. கொலை பசியில் கஞ்சியை அவளாகவே அருந்தினாள்.

“ஐயா இப்படியே விட்டா அந்த பொண்ணுக்கு பைத்தியம் பிடிக்கும்”

ஆதிசேஷன் இத்தனை நாட்களாய் தேன்மொழி அந்த அறையில் எவ்வாறெல்லாம் சித்தரவதைகளை அனுபவித்தாள் என்று அறையில் பொருத்தியிருந்த கேமரா மூலம் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.

“அப்படிங்குற? சரி வரேன்” என்ற ஆதிசேஷன் போலீசோடு உள்ளே நுழைந்து தேன்மொழியை காப்பாற்றுவது போல் நாடகமாடினார்.

“எல்லா ரூம்லயும் தேடுங்க. ஒரு ரூமையும் விடாதீங்க” என்ற ஆதிசேஷன் தேன்மொழியிருந்த அறையை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைவது போல் நுழைந்தார்.

உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் இருந்த தேன்மொழி கதவு உடைக்கப்படவும் ஓடிச் சென்று கட்டிலுக்கு பின்னால் மறைந்து நின்று பக்கத்தில் வர வேண்டாமென்று கத்தினாள்.

அறை குப்பென்று வாடையடித்தது. ஆதிசேஷனுக்கு குடலை பிராட்டிக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். கையால் வாயையும், மூக்கையும் பொத்தியவாறே தேன்மொழியை நெருங்கினார்.

“யார் நீங்க? பக்கத்துல வராதீங்க” தன்னை மறைக்க முயன்றவாறே கத்திக் கூப்பாடு போட்டாள். 

“நான் உன்ன காப்பாத்த தான் வந்திருக்கேன். கவலைப்படாதே” என்று அவளை தூக்கி நிறுத்தி தான் அணிந்திருந்த கோட்டை அவளுக்கு போர்த்தி விட்ட அதை அணிந்து கொள்ளுமாறு கூறினார்.

தேன்மொழிக்கு ஆதிசேஷன் யாரென்றே தெரியாது. தன்னை ஆதிசேஷன் நிர்வாணமாக பார்த்து விட்டாரே என்று கூனிக்குறுகி நின்றவள் அவர் போர்த்திவிட்டு கோட்டை அவர் எதிரேயே அணிந்து கொண்டாள்.

“வா முதல்ல இங்கிருந்து போகலாம்” என்று அவளை அணைத்தவாறு ஆதிசேஷன் வெளியே அழைத்து சென்றார். தேன்மொழியிடமிருந்து கெட்ட வாடை வீசியது. காரில் அமர்ந்தாள், காரே நாறியது. பொறுக்க முடியாமல் கண்ணாடிகளை இறக்கி விட்டார் ஆதிசேஷன்.

அங்கிருந்து அவளை கிழக்கு கடற்க்கரை சாலையிலுள்ள தனது விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்று குளிக்க சொன்னார்.

“எனக்கு பசிக்குது” அதிகம் பேசினால் அழுது விடுவாள் என்றுதான் இருந்தாள்.    

“எனக்கு புரியுது. இந்த ஜூசை குடிச்சிட்டு போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்” பொறுமையாகத்தான் அவளை அனுப்பி வைத்தார். தேன்மொழியும் மறுக்காமல் சென்று குளித்து விட்டு வந்தாள்.

தான் காண்பது கனவா? அந்த நரகத்திலிருந்து தனக்கு விடுதலை கிடைத்து விட்டதா? தேன்மொழியால் நம்பவே முடியவில்லை. சாப்பிட்டு முடித்த உடனே வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று தான் எண்ணினாள்.

தேன்மொழி குளித்து விட்டு வெளியே வர அவளுக்காக புடவை, நகைகள், வாசனை திரவியங்கள், செப்பல், கைக்கடிகாரம் என்று ஒரு பெண்ணுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் அவள் கேட்காமலே அங்கு இருந்தன.

ஆதிசேஷன் தன்னை நிர்வாணமாக பார்த்து விட்டாரே என்று எண்ணுகையில் அவற்றை பார்த்து சங்கடமாக இருந்தாலும், ஆதிசேஷன் மேல் தனி மரியாதையே வந்தது.

சாப்பிட மேசைக்கு வந்தால் வித,விதமான உணவு வகைகள் கடைபரப்பி இருக்க, ஆதிசேஷன் தேன்மொழியை அமரவைத்து பரிமாற அவரையும் அமர சொன்னவள் உண்ணலானாள்.

உண்டாள், உண்டாள் உண்டாள் கோரப்பசி, குளித்து விட்டு வந்ததால் உடல் நடுநடுங்க வெறியில் உண்டாள். இருமல் கூட வந்தது. அவள் தலையை தட்டி ஆதிசேஷன் நீர் புகட்ட தேன்மொழியின் கண்கள் கலங்கி கண்ணீரே வழிந்தது.

“பொறுமையா சாப்பிடு”

வயிறு நிறைந்ததும் “என்ன என் வீட்டுல விடுறீங்களா?” ஆதிசேஷனை பாவமாய் பார்த்தாள் தேன்மொழி.

“உன்ன கடத்தி இவ்வளவு வேலையும் பார்த்தது உன்ன வீட்டுல கூட்டிட்டு போய் விடத்தான் பாரு” மனதுக்குள் பொருமியவர் புன்னகைத்தவாறே “உனக்கு என்ன தெரியாது. ஆனா எனக்கு உன்ன நல்லாவே தெரியும்” என்று தேன்மொழியின் கல்யாண பத்திரிக்கையை அவளிடம் கொடுத்தார்.

“நீங்க யாரு? உங்களுக்கு என்ன எப்படித் தெரியும்?” ஒருவேளை தந்தை அறிந்தவரா? அல்லது கதிரவன் அறிந்தவரா என்று கேட்காமல் இவ்வாறு கேட்டாள்.

“கதிரவன் என் ஆபீஸ்லதான் வேலை பாக்குறான். நீ காதலிச்சவனோட ஓடிப் போய்ட்ட என்று உங்க வீட்டுலயே சொல்லிட்டதால, கதிரவனோட அம்மா மயங்கி விழுந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்க. கதிரவனுக்கு அதே முகூர்த்தத்துல கல்யாணமும் ஆச்சு”

“என்ன?” தன்னுடைய வீட்டாளுங்களே தன்னை நம்பவில்லை என்ற அதிர்ச்சி, காதலித்தவன் கைவிட்டுட்டான் என்ற அதிர்ச்சியில் தேன்மொழி மயங்கி விழுந்தாள்.

அவளை தூக்கிக் சென்று கட்டிலில் கிடத்தி கண் விழிக்கும் வரையில் கூடவே இருந்தார் ஆதிசேஷன்.

கண் விழித்த தேன்மொழி ஆதிசேஷனை கட்டிக் கொண்டு அழ ஆரம்பிக்க, ஆதிசேஷன் அவளை அணைத்து ஆறுதல் படுத்தியதோடு நெற்றி, கன்னமென்று முத்தமிடவும் செய்தார்.

தேன்மொழிக்கு அது தப்பாக தெரியவில்லை. சமாதானமடைந்தவள் தான் ஆதிசேஷனின் அணைப்பில் இருப்பதை பார்த்து மெதுவாக விலகி “நான் வீட்டுக்கு போனாலும் என்ன ஏத்துக்க மாட்டாங்க. அந்த நரகத்துல இருந்து என்ன காப்பாத்தினத்துக்கு நான் செத்தே இருக்கலாம்” என்றாள்.

“ஷூ சாவுறதுக்கா உன்ன இவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாத்தி கூட்டிட்டு வந்தேன். யாருமே உன்ன நம்பள. ஆனா எதோ தப்பா இருக்கு என்று நான் தனியா விசாரிக்க ஆரம்பிச்சேன். ஏன் விசாரிச்சேன்னு தெரியல. உன்ன காப்பாத்திட்டேன். நீ உயிரோட இருக்கிறதே போதும்” என்று தேன்மொழியின் அனுமதியே இல்லாம அவள் இதழ்களை கவ்வியிருந்தார்.

அதிர்ந்த தேன்மொழி திணற, அவளை விட்ட ஆதிசேஷன் “சாரி. செத்துடுவேன்னு சொன்னதுல பதறிட்டேன். உனக்கு யாருமில்லன்னு நினைக்காத. நான் இருக்கேன்” அவளை அழைத்துக் கொண்டு பூஜையறைக்கு சென்றவர் அங்கிருந்த தாலியை எடுத்து “இது என் அம்மாவோட தாலி” என்றவாறே தேன்மொழியின் கழுத்தில் கட்டியிருந்தார்.

தேன்மொழியால் எதையுமே யோசிக்க முடியவில்லை. யோசிக்கவிடாதபடி தாலியை கட்டி விட்டார்.

தன் கணவன் மட்டுமே தன்னை பார்க்க கூடிய கோலத்தில் ஆதிசேஷன் தன்னை பார்த்து விட்டார். இப்பொழுது அவரே தன் கணவராகி விட்டார். இனி எந்த கவலையுமில்லை. ஆதிசேஷன் தன்னை பார்த்துக்கொள்வார் என்று நிம்மதியடைந்தாள் தேன்மொழி.

ஆதிசேஷை பற்றி எதுவுமே தெரியாமல் ஆதிசேஷனோடு குடும்பம் நடத்த ஆரம்பித்தாள். ஆதிசேஷனும் தேன்மொழியின் மீது அன்பாகத்தான் இருந்தார். தேன்மொழி மலர்விழியை சுமந்த பொழுது அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். பாவம் தேன்மொழி எல்லாம் நாடகம், அது ஆதிசேஷனின் சுயநலம் என்று அவளுக்கு புரியவே இல்லை.

நாளடைவில் ஆதிசேஷனுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்பதையும் அறிந்து கொண்ட தேன்மொழி, அவர் வயதுக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லையே என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

Advertisement