Advertisement

அத்தியாயம் 23

வளமையாக கதிரவன் ஆதி குரூப்புக்கு செல்லும் முன் ஆதி மருத்துவமனைக்கு செல்வான். ஆதிசங்கர் மருத்துவமனைக்கு வரும் பொழுது கதிரவன் அவனுக்காக காத்திருந்து அங்கு ஆதிசங்கரோடு வேலைகளை பார்த்த பின் ஆதிசங்கர அவன் வண்டியில் கிளம்ப, கதிரவன் அவன் வண்டியில் கிளம்புவான்.

வேலை செய்பவர்களை தங்களது வண்டியில் மறந்தும் அழைத்து செல்லாத குணமுடையவர்கள் ஆதிசேஷனின் புத்திரர்கள்.

அது கதிரவனுக்கு சாதகமாகத்தான் அமைந்தது. பவானியை கடத்தி ஆதி மருத்துவமனையில் அனுமதித்து பவானியின் மயக்கம் தெளிய விடாதபடி தினமும் மருந்து செலுத்திக் கொண்டிருக்கின்றான்.

ஆதிசேஷனுக்கு தொழிலில் குடைச்சல் கொடுப்போரை இவ்வாறும் பழிதீர்ப்பதால் மருத்துவமனை அதிபர் கூட கண்டு கொள்வதில்லை. ஆதிசேஷனோடு கதிரவனும் வருவதால் கதிரவன் பவானியை கொண்டு வந்து சேர்த்ததை அவர் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

ஆதி மருத்துவமனையில் வேலைகளை முடித்து விட்டு ஆதி குரூப்புக்கு வருவதால் கதிரவன் நேரம் சென்று வந்தாலும் யாரும் அவனை சந்தேகப்படவுமில்லை. கோள்விக் கேட்கவுமில்லை.

வேலை விஷயமாக மலர்விழியும் கதிரவனும் சந்தித்துக்கொள்வார்கள், அலைபேசியில் உரையாடுவார்கள் அதனால் அவர்களுக்குள் இருக்கும் உறவு, நெருக்கம் பற்றி யாருக்கும் எந்த சந்தேகமும் இதுவரையில் வரவே இல்லை.

மலர்விழிக்கு உதவி செய்வது கதிரவன் என்று வான்முகிலன் அறிந்து கொண்டு பவானிக்காக பொறுமையாக கதிரவனை பின் தொடர்ந்தான்.

ஆனால் தனத்திற்கு அவ்வாறு பொறுமை காக்க வேண்டிய அவசியம் இல்லையே. ஆதிரயன் ஏற்பாடு செய்த துப்பறிவாளர் பிரதீபன் கதிரவன் தான் மலர்விழிக்கு உதவி செய்கிறான் என்று கண்டு பிடித்ததும் கதிரவனை கடத்தினாள் தனம்.

அந்த குடோனில் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் தலை கீழாக தொங்க விடப்பட்டிருந்தான் மேனேஜர் கதிரவன்.

ஆதி குரூப்புக்கு தனது வண்டியில் வந்து கொண்டிருக்கையில் இரண்டு கருப்பு நிற வேன்கள் இரண்டு பக்கமாக வந்து நின்றது தான் தெரியும். கதிரவன் சுதாரிக்கும் முன்பாகவே கட்டையால் கதிரவனின் தலையில் ஒருவன் அடிக்க, அடுத்த வேனிலிருந்த இருவர் கதிரவனை உள்ளே இழுத்து போட்டு கொண்டு பறந்திருந்தனர். 

கதிரவனை அவர்கள் மயக்கமடைய செய்யவில்லை. கை, கால்களை கட்டிப் போட்டு அவர்களின் காலுக்கு அடியில் குப்புற படுக்க வைத்து அழைத்து வந்து இந்த குடோனில் தொங்க விட்டிருந்தனர்.

குடோன் ஆதிசேஷனுக்கு சொந்தமானது என்றதும், எதற்காக செய்திருப்பார்கள் என்று கதிரவனால் கணிக்க முடிந்தாலும் யாராக இருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை.

மலர்விழிக்கு தான் உதவி செய்வதை அறிந்து தான் கடத்தியிருப்பார்கள். ஆதிசேஷன் என்றால் கொலை செய்திருப்பார். ஆதிசேஷனின் எந்த மகன் என்று புரியாமல் தான் கதிரவன் யோசித்தான்.

“என்ன கதிரவன் இங்க என்ன எதிர்பார்த்திருக்க மாட்டியே” சக்கர நாட்காலியை தள்ளியவாறு வந்தாள் தனம்.

உண்மை தான். கதிரவன் சத்தியமாக தனத்தை அங்கு எதிர்பார்க்கவில்லை.

“நீங்க எதுக்காக என்ன கடத்துனீங்க?” கதிரவன் அறிந்தவரையில் தனம் சாதாரண இல்லத்தரசி. நிறுவனத்திற்கு அவள் அடிக்கடி வருவாள். ஆதிசேஷன் அவளை அமர்த்தி தனியாக பேசுவதை பார்த்திருக்கின்றான்.

“ஜோசியத்தை நம்புற ஆதிசேஷன் பொண்டாட்டிய தான் தொட்டதெல்லாம் துலங்கும் தேவதையா பாக்குறாரு அதனால அவர் என்ன தொழில் செய்ய போனாலும் அவங்க கிட்ட கேட்டுட்டு தான் செய்வாராம். எந்த டீல் போட்டாலும் சொல்வாராம். அவ்வளவு மரியாதை, அன்பு, பக்தி” என்றுதான் நிறுவனத்துக்குள்ளே பேசிக்கொள்வார்கள். அந்த விம்பத்தை தான் ஆதிசேஷன் உருவாக்கியிருந்தாரே ஒழிய, தான் தனத்தின் அடிமை என்று எங்குமே காட்டிக் கொண்டதில்லை.

இது தனத்துக்கு தெரிந்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

ஆதிசேஷனோ, ஆதிசேஷனின் புத்திரர்களோ தன்னை கடத்தியிருந்தால் மலர்விழி எதற்காக இவர்களிடம் வந்தாள் என்று அறிந்து கொண்டார்கள், தனக்கும் மலர்விழிக்கும் என்ன சம்பந்தம் என்றும் அறிந்து கொண்டார்கள் என்று கூறலாம்.

“இந்தம்மாவை தான் ஆதிசேஷன் இருட்டிலையே வைத்திருக்கிறாரே இவங்க ஏன் என்ன கடத்தினாங்க? அன்று மலர் இந்தம்மா மிரட்டியதாக எதோ சொன்னாலே. சக்கரநாட்காலியில் இருக்கும் இந்தம்மா என்ன செய்து விட முடியும் என்று விட்டது தப்போ?” என்று யோசித்தான்.

“ஒருத்தங்க பாதிக்கப்பட்டிருந்தா நியாயம் கேட்டு போராடுறது, கோட்டு, கேசு என்று அலையிறது ஒரு ரகம். பழி வாங்கி ஆளையே காலி பண்ணுறது இன்னொரு ரகம். என்ன பொறுத்தவரையிலே பழி வாங்குறது கூட தப்பில்ல. சட்டத்தால தண்டனை கொடுக்க முடியாது. நியாயம் கேட்டு போனா நம்மளையே பைத்தியம் என்று முத்திரை குத்தி காப்பகத்துல அடைச்சிடுவாங்க என்று அச்சம் இருந்தா பழி வாங்குறதுல தப்பே இல்ல.

ஆனா தப்பு பண்ணவனை விட்டுட்டு அவன் குடும்பத்துல உள்ள அத்தனை பேரையும் பழிவாங்குறது மகா தப்பில்ல கதிரவன்” தனம் நிதானமாக, பொறுமையாகத்தான் பேசினாள்.

“ஆதிசேஷன் மட்டுமில்ல ஆதிசேஷனோட பரம்பரையில் கூட யாரும் உயிரோட இருக்கக் கூடாது” ஆவேசத்தில் கத்தினான் கதிரவன். 

“அப்போ முதல்ல மலர்விழி கொன்னுடலாமா? அவளும் ஆதிசேஷன் பொண்ணு தானே” எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தனம் கூற திகைத்தான் கதிரவன்.

அப்படியென்றால் இந்தம்மாவுக்கு மலர்விழியை பற்றியும், தேன்மொழியை பற்றியும் தெரியும். கணவன் செய்ததற்கும், செய்யும் அனைத்துக்கும் இந்தம்மாவும் உடந்தை என்று தனத்தை கோபமாக முறைத்தான் கதிரவன். 

“எதுக்காக முறைக்குற? மிஸ்டர் ஆதிசேஷனுக்கு பொண்ணு இருக்குறது எனக்கு அவர் மலர்விழி கூட்டிட்டு வந்தப்போ தான் தெரியும். மலர்விழியோட அம்மா அவ பேரென்ன தேன்மொழி. அவளை எப்படி கல்யாணம் பண்ணானு தெரியல. ஆனா அது திட்டமிட்ட சதியாதான் இருக்கும். அத தெரிஞ்சி தானே நீங்க ரெண்டு பேரும் எங்க குடும்பத்தையே பழிவாங்க துடிக்கிறீங்க?

தப்பு பண்ணது ஆதிசேஷன் அவனை விட்டுட்டு என் பசங்களையும், பேரபாசங்களையும் பழிவாங்க துடிச்சா விட்டுடுவேனா?

மலர்விழிக்கு உதவி செய்யிற உன்ன கண்டு பிடிச்சேன். உனக்கும் தேன்மொழிக்கும் என்ன சம்பந்தம் என்றும் கண்டு பிடிச்சேன். அது மட்டுமில்ல. உன் குடும்பத்தை பத்தியும் விசாரிச்சு வச்சிருக்கேன். மலர்விழிக்காக இவ்வளவு செய்யிற நீ பெத்த பொண்ண மறந்துட்டல்ல”

“மலர்விழி மட்டும் தான் என் பொண்ணு. வேற யாரும் எனக்கு பொண்ணில்ல” கத்தினான் கதிரவன்.

“புரியுது, புரியுது. என் குடும்பத்து மேல கை வைச்சா உன் குடும்பத்து மேல நான் கை வைக்க வேண்டி வரும் என்று சொன்னா உன் குடும்பமே மலர்விழி தான்னு சொல்லுற. அப்போ அவளை கொன்னுடுறேன்” அமைதியாக மிரட்டினாள் தனம்

“ஏய்…” கத்தினான் கதிரவன்.

“சரி சொல்லு அடுத்து மலர்விழி என்ன செய்ய காத்துகிட்டு இருக்கா? உன் திட்டமென்ன என்று நீயே சொல்லு? இல்ல உன்ன இங்க கட்டி போட்டு வச்சிருக்கேன்னு சொன்னா அவளே வருவா இல்ல. வந்தா கொன்னுடுறேன்” என்றாள் தனம்.

“சபாஷ். என்ன இந்தம்மா இந்த போடு போடுது. மறைந்திருந்து பார்த்திருந்த துப்பறிவாளர் ரங்கநாதன் வியந்தார்.

கதிரவனை பின் தொடர்ந்ததால் சந்தேகப்படும்படியான எந்த தடயமும் கிடைக்கவில்லையென்று கதிரவனை பின் தொடர்வதை துப்பறிவாளர் ரங்கநாதன் நிறுத்தவில்லை.

நிலஞ்சனாவும் ராமும் ஆதி மருத்துவமைக்கு சென்றதும் கதிரவன் இப்பொழுது எங்கே இருக்கின்றான் என்று வான்முகிலன் ரங்கநாதனிடம் கேட்க, கதிரவன் ஆதி மருத்துவமனையிலிருந்து கிளம்பி ஆதி குரூப்புக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினார் ரங்கநாதன்.

“மலர்விழியும் ஆதி குரூப்லயா இருக்கான்னு பார்த்து சொல்லுங்க” என்ற வான்முகிலனுக்கு இருப்புகொள்ளவில்லை.

சற்று நேரத்தில் வான்முகிலனை அழைத்த ரங்கநாதன் “சார் மேனேஜர் கதிரவனை ஒரு குரூப் தூக்கிட்டாங்க. அவங்கள தான் நான் பாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன். அங்க போய் என்ன நிலவரம் என்று நானே உங்களுக்கு போன் பண்ணுறேன். தப்பித்தவறி நீங்க போன் பண்ணிடாதீங்க” ஸ்மார்ட் போனை ஒழுங்காக பாவிக்கத் தெரியாத அவரோ ஆபத்தான இடத்தில் அலைபேசியால் மாட்டிக்கொள்ளக் கூடாதென்று முன்னெச்சரிக்கையாக கூறினார்.

மேனேஜர் கதிரவனை யார் கடத்தினார்கள் என்று தெரியாது. மேனேஜர் கதிரவனை காணவில்லையென்றால் மலர்விழி அமைதியாக இருக்க மாட்டாள். பவானியை வைத்து எங்களை மிரட்டக் கூடும். பவானியை தேடித் சென்ற ராமுக்கும் நிலஞ்சனாவுக்கும் கூட ஆபத்து வரலாமென்று வான்முகிலன் உடனே ஆதி மருத்துவமனைக்கு கிளம்பியிருந்தான்.

வான்முகிலனின் வண்டி வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு வரும் பொழுது தான் ராம் அழைத்து தன்னோடு வந்த நிலஞ்சனாவை காணவில்லையென்று பதறினான்.

மலர்விழி அவளுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாள் என்று நினைத்த வான்முகிலன் பவானியை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டுக்கு செல்லுமாறும் தங்களுடைய குடும்ப மருத்துவரை அழைத்து பவானியை பார்க்குமாறும் ராமுக்கு உத்தரவிட்டவாறே நிலஞ்சனாவின் அலைபேசிக்கு அழைத்தவாறு மின் தூக்கிக்குள் நுழைந்தான். நிலஞ்சனாவின் அலைபேசியோ அனைத்து வைக்கப்பட்டிருந்தது. கதிரவனை யாரோ கடத்தி விட்டார்கள். தான் அங்கு தான் வந்து கொண்டு இருக்கிறேன். பத்திரமாக இருக்கும்படி சற்று முன்தான் வான்முகிலன் நிலஞ்சனாவிடம் பேசியிருந்தான். எது நடந்தாலும் ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது என்பது வான்முகிலனின் கணிப்பு. 

பவானியை காப்பாற்றியது தெரியாது என்பதால் பவானியை வைத்திருக்கும் இடத்தில் தான் மலர்விழி நிலஞ்சனாவையும் வைத்திருப்பாள் என்று நினைத்தவன் மீண்டும் ராமை அழைத்து எந்த தளத்தில் பவானி இருந்தாள். எந்த பக்கம் என்று தெளிவாக கேட்டுக் கொண்டு அந்த தளத்துக்கு சென்றான்.

ராம் கூறியது போல் வி.ஐ.பிகளுக்காக மட்டுமே இருந்த அந்த தளத்தில் மதிய உணவு  நேரம் என்பதால் ஒரே ஒரு தாதி தான் இருந்தாள். அவளும் வெளியே பார்த்தவாறு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள். இவன் மின் தூக்கியில் இறங்கியதை அவள் கவனிக்கவில்லை.

மலர்விழியை அங்கு காணவில்லையென்றதும் அவளை தேடியவாறே பவானியை வைத்திருந்த வி.ஐ.பி அறைகள் இருக்கும் பக்கம் சென்றான்.

ஸ்ட்ரெச்சரில் நிலஞ்சனாவை கிடத்தி முகக்கவசம் அணிந்து ஒரு பெண் தள்ளிச் செல்வதை பார்த்ததும் ஒரு கணம் பாக்யஸ்ரீ ஸ்ட்ரெச்சரில் படுத்துக் கிடந்தது தான் வான்முகிலனின் கண்களுக்குள் வந்து போனது.

சற்று நேரம் தாமதிக்காமல் வேகமாக ஓடியவன் அந்த பெண்ணை இழுத்து தள்ளினான்.

கீழே விழுந்தவள் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்கும் பொழுதே “ஆதிதி நீயா?” அதிர்ந்த வான்முகிலன் அவளை கன்னம் கன்னமாக அறைந்தான்.

ஆதிதி அதிர்ந்து விழிக்க “சொல்லு என் நிலஞ்சனாவ என்ன பண்ண? சொல்லு” கோபத்தின் உச்சியில் இருந்தவன் நிலஞ்சனாவை தன்னுடையவள் என்று கூறியதை உணரவில்லை.

“ஹா.. ஹா.. செத்துடுவா. கொன்னுடுவேன்” திமிராக பதில் சொன்னாள் ஆதிதி.

சரமாரியாக ஆதிதியின் கன்னத்தில் அடிகளை கொடுத்த வான்முகிலன் “நிலஞ்சனாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு நீ உயிரோட இருக்க மாட்ட” வான்முகிலன் அடித்த அடியில் ஆதிதி அங்கேயே மயங்கி விழுந்து விட்டாள். அவளை திரும்பியும் பாராமல் நிலாஞ்சனாவை பார்க்க கண்கள் சொருகும் நிலையில் இருந்தவள் வான்முகிலனை அடையாளம் கண்டு புன்னகைத்தாள்.

“உன்ன இப்படி பார்த்ததும் என் உசுரே போச்சு” என்றான் வான்முகிலன். அவன் அதை என் அர்த்தத்தில் சொன்னான் என்று அவனுக்கே தெரியவில்லை.

“எனக்கு ஒண்ணுமில்ல. அந்த லூசு சேடடிவ் இன்ஜெக்ஷன் தான் போட்டா என்று சொன்னா. பவானிய காப்பாத்திட்டோம். அவ சேப். நான் தூங்க போறேன்” என்ற நிலஞ்சனா ஆழ்ந்த தூக்கத்துக்கு சென்றாள்.

அவளை தூக்கிக் கொண்டு வான்முகிலன் வெளியே வர “ஏய் மிஸ்டர் யார் நீங்க? இங்க என்ன பண்ணுறீங்க? இங்கெல்லாம் வரக் கூடாது” வி.ஐ.பி அறையிலிருந்து அவன் யாரையோ கடத்திக் கொண்டு போவதாக எண்ணி அவனை தடுக்க முயன்றாள் அந்த தாதி.

“போர்த் போலோ போறதுக்கு பதிலா என் வைப்ப கூட்டிகிட்டு பிப்த்து ப்ளோ வந்துட்டேன். அதான் திரும்ப போறேன்” என்றான்.

நிலஞ்சனா நோயாளிகள் அணிந்திருக்கும் ஆடை அணிந்திருக்கவில்லை என்பதால் அவன் சொல்வது உண்மையென்று அவனை செல்ல அனுமதித்தாள் தாதி.

மின்தூக்கியில் கீழே வந்த வான்முகிலன் வண்டியில் நிலஞ்சனாவை கிடத்தி வீட்டுக்கு செல்லலாமென்று கிளம்ப ரங்கநாதன் அழைத்தார்.

“சார்…. இங்க பெரிய டுவிஸ்ட் இருக்கு சீக்கிரம் வாங்க. கதிரவனை கடத்தினது ஆதிசேஷனோட மனைவி” என்றார்.

வான்முகிலனுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. வான்முகிலன் தனத்தை பொது இடங்களில் பார்த்திருக்கிறான். சாதுவான பெண்மணி. ஆதிசேஷனுக்கு அடங்கி இருக்கும் குடும்பப் பெண் போல் தான் தெரிந்தாள். யார் என்ன முகமூடியை அணிந்திருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும் என்றவாறே ரங்கநாதன் சொன்ன குடோனை அடைந்தான்.

வான்முகிலன் ரகசியமாக ஒன்றும் அங்கு செல்லவில்லை வண்டியை மட்டும் மறைவான இடத்தில் நிறுத்தினான். காரணம் நிலஞ்சனா வண்டியில் இருந்தது தான். ரங்கநாதனிடம் நிலஞ்சனாவை வீட்டுக்கு அழைத்து சென்று ஒப்படைக்கும்படியும் தான் அரைமணி நேரத்தில் அலைபேசி அழைப்பு விடுக்கவில்லையானால் போலீசுக்கு தகவல் கொடுக்கும்படியும் உத்தரவிட்டுத்தான் உள்ளேயே நுழைந்தான்.

உள்ளே வந்த வான்முகிலனை பார்த்து தனம் அதிர்ச்சியடையவைல்லை. “என்ன மேனேஜர் கதிரவனை காப்பாத்த வந்தியா? உனக்கும் இவனுக்கும் என்ன உறவு? தப்பா கேட்டுடேனா? உனக்கும் மலர்விழிக்கும் என்ன உறவு?” திட்டமிட்டு தான் வான்முகிலன் தான் குடும்பத்தில் சம்பந்தம் செய்தானோ என்று கோபமாகத்தான் கேட்டாள்.

“எனக்கும் மலர்விழிக்கும் என்ன உறவு என்று தெரிஞ்சிக்கிறதுலையே எல்லாரும் குறியா இருக்காங்க” முணுமுணுத்த வான்முகிலன் “இவங்க உங்கள மட்டும் பழி வாங்கல. உங்க குடும்பத்தோட என்னையும் சேர்த்திருக்காங்க. மாளவிகா, ஆதித் வீடியோ வந்தது மட்டும் தானே உங்களுக்குத் தெரியும், அதுக்கு முன்னாடியே ஆதிரியனையும் சுபியையும் டார்கட் பண்ணியிருக்காங்க. அவங்க மிஸ் ஆகிட்டாங்க, ஆதித்தும், மாளவிகாவும் சிக்கிட்டாங்க” என்றான்.

வான்முகிலன் அவ்வாறு கூறியதும் கதிரவன் சத்தமாக சிரித்தான்.

“சிரிக்கிற நீ. இதுக்கே உன்ன கொல்லலாம்” தனத்திற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“பவானிய எதுக்காக கடத்தி ஆதி ஹாஸ்பிடல்ல வி.ஐ.பி ரூம்ல வச்சிருந்த” அதான் பவானிய காப்பாற்றி விட்டாயிற்றே. இனிமேல் மலர்விழியை பார்த்தும், கதிரவனை பார்த்தும் அஞ்ச வேண்டிய அவசியமில்லையே என்று  வான்முகிலன் கேட்டான்.

பவானியை தாங்கள் தான் கடத்தினார்கள் என்று இவர்கள் கண்டு பிடித்து விட்டார்களா? கண்டு பிடித்து காப்பாற்றியும் விட்டார்களா என்று அதிர்ந்தான் கதிரவன்.

பவானி யார் என்று புரியாமல் தனம் வான்முகிலனை ஏறிட, வான்முகிலன் சுருக்கமாக தெளிவு படுத்தினான்.

“ராம வச்சி என்ன வீழ்த்தலாம் என்று நினைச்ச பாரு உங்க அறிவ கொளுத்தணும். அவன் என்கிட்டே வேலை செய்யிறவன் என்று நினைச்சியா? பழி வாங்குற எண்ணத்தோட அலையுற உன் கிட்ட எல்லாம் சொல்ல முடியாது. பவானிய காப்பாத்திட்டோம். அவ பத்திரமா இருக்கா. இப்போ நீ சொல்லுறத நாங்க கேக்குற டைம் போய், நாங்க சொல்லுறத நீ கேளு”

“இவன் கிட்ட நடந்தத பேசி என்னவாகப் போகுது தம்பி. அடுத்து இவனுங்க என்ன பண்ண போறாங்க என்று கேளுங்க” ஆதிரியன் இருந்தால் தனம் ஆதிரியனை தான் அழைத்து வந்திருப்பாள். வான்முகிலன் வந்ததில் கூடுதல் பலம் வந்தது போல் உணர்ந்தவள் அவனிடம் பொறுப்பை ஒப்படைத்தாள்.

“என்ன அடிக்க போறியா? சாகுற வரைக்கும் அடிச்சாலும் உன்னால எங்களை எதுவும் பண்ண முடியாது” தெனாவட்டாக கத்தினான் கதிரவன்.

“அடிச்சி, உதைச்சி கேட்க நான் என்ன ஆதிசேஷனா? அந்தாள் கூட இருந்து உங்க மூளையும் மங்கிப் போச்சு” என்ற வான்முகிலன் “நான் தான் மலர்விழி காதலிக்கவே இல்லையே. அப்போ எப்படி அவளை ஏமாத்தியிருக்க முடியும்? சம்பந்தமே இல்லாம உங்க பகைக்குள்ள என்ன இழுத்தீங்க”

“அப்பன் பெயர் தெரியாதவ என்று தானே மலர்விழி வேணாம்னு சொன்ன, உன்ன மாதிரி பணக்கார திமிரு புடிச்சவன பழி வாங்குறதுல தப்பே இல்ல”

“மலர்விழிக்கு யாருமில்ல என்று மட்டும் தான் எனக்கு தெரியும். அப்பன் பெயர் தெரியாது ஆத்தா பெயர் தெரியாது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அது எனக்கு அவசியமும் இல்லை. நீங்களாகவே ஒன்ன கற்பனை பண்ணி சும்மா இருந்தவன சீண்டிட்டீங்க. சரி சொல்லுங்க மலர்விழி அடுத்து என்ன செய்ய போறா?”

“என் உசுரு போனாலும் நான் சொல்ல மாட்டேன்” ஆவேசமாக கத்தினான் கதிரவன்.

அரை மணித்தியாலம் நெருங்கியதால் வான்முகிலன் துப்பறிவாளர் ரங்கநாதனை அழைத்து தனக்கு ஒன்றுமில்லை என்று கூறி நிலஞ்சனாவை பற்றி விசாரித்தான்.

“மேடத்துக்கு சேடடிவ் இன்ஜெக்ஷன் தான் போட்டிருக்காங்க என்று டாக்டர் சொன்னாரு சார். நான் அங்கதான் வந்து கிட்டு இருக்கேன்”

“இல்ல நீங்க மலர்விழிய கண்கானிங்க. கதிரவனை காணலைனதும் அவ என்ன பண்ணுவானது தெரியல. பார்க்கலாம்” என்றான்.

“எனக்காக எல்லாம் மலர் அவ திட்டத்தை மாத்திக்க மாட்டா” கதிரவன் இறங்கி வரவே இல்லை.

“சொந்த குடும்பத்தை கவலை இல்ல. மலர்விழிக்கு ஐ. மீன் மலர்விழியோட அம்மாக்கு நியாயம் கிடைக்கணும் என்று எல்லாத்தையும் பண்ணுறீங்க. அப்படி என்னதான் ஆச்சு அவங்களுக்கு? ஆதிசேஷன் அவங்கள அவரோட வைப் என்று சொன்னாரு” என்றவாறே தனத்தை பார்த்தான் வான்முகிலன்.

ஆதிசேஷன் என்ன உத்தமரா? கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று தனம் அவர் செய்த அனைத்தையும் மறைக்க? தனது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் கூறியவள் தேன்மொழியை எந்த காரணத்துக்காக திருமணம் செய்தார் என்பதையும் கூறினாள்.

“மலர்விழி என் கிட்ட வந்து நின்னிருந்தாலே அவங்கப்பாவை பழி வாங்க நானே அவளுக்கு உறுதுணையாக இருந்திருப்பேன். ஆனா அவ என் குடும்பத்தையே கருவறுக்க பாக்குறா. அத பண்ண விட மாட்டேன்”

தனத்தை மீண்டும் ஒருமுறை ஆச்சரியமாக பார்த்தான் வான்முகிலன்.

ஆதிசேஷன் அப்படி என்னதான் செய்திருப்பார்? மலர்விழியும் கதிரவனும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்து பழி வாங்கும் அளவுக்கு?

மலர்விழி காரணமாக காட்டி கதிரவனை மிரட்ட முடியாது என்று புரிந்ததும் வேறு வழியை கையாண்டான் வான்முகிலன்.

“இல்லம்மா.. நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கிறீங்க. எனக்கென்னமோ அந்த தேன்மொழிதான் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த கதிரவனை தூக்கி எறிஞ்சி கிழவனாலும் பரவால்ல என்று ஆதிசேஷனை மயக்கி இருப்பா”

“ஏய் கொன்னுடுவேன்டா… என் தேன்மொழி பத்தி தப்பா பேசாதே” கதிரவன் கத்த கத்த வான்முகிலன் பேசிக் கொண்டே இருந்தான்.

“என் தேன்மொழி பத்தி உனக்கு என்னடா தெரியும்?” முடியாமல் கதிரவன் கதற

“சொன்னா தானே தெரியும். சொல்லாம தொங்கிகிட்டே இருந்தா எனக்கென்ன தெரியும்” கோபத்திலும் ஆத்திரத்திலுமே தேன்மொழிக்கு என்ன நடந்தது என்று கூறலானான் கதிரவன்.

Advertisement