Advertisement

அத்தியாயம் 22

சில நாட்கள் கடந்திருக்க, பைலட் ராஜேஷை மிரட்டிய அலைபேசி எண் ஆகாஷின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாகவும், ஆதி குரூப்பிலிருந்து தான் அந்த அலைபேசி இயக்கப்பட்டிருப்பதாகவும், ஆகாஷின் காரியாலய அறையை பரிசோத்தித்ததில் அலைபேசியும் கிடைத்திருக்க, ஆகாஷ் தான் குற்றவாளி என்று காவல்துறை வழக்கு தொடர்வதாக தகவல்.

“அப்போ ஆகாஷ் தான் குற்றவாளியா?” வான்முகிலனால் நம்பவே முடியவில்லை.

“ஆகாஷ் பேர்ல சிம் வாங்குறது, மொபைல ஆகாஷோட ஆபீஸ்ல வைக்கிறதோ மலர்விழிக்கும், மலர்விழியோட கூட்டாளிக்கும் பெரிய விஷயமே இல்ல. ஆகாஷ வசமா சிக்க வச்சிருக்காங்க” என்றாள் நிலஞ்சனா.

வண்டியில் வைத்து வான்முகிலன் பேசியது கோபத்தை தூண்டினாலும் நிலஞ்சனாவின் காதல் கொண்ட மனமோ அவன் நிலையை அறிந்து அவனுக்காக வாதிட்டு அவளையே சமாதானப்படுத்தி அமைதியாக்கியிருந்தது.

அதனாலயே அவள் அவனிடம் முகம் திருப்பாமல் அவனோடு சேர்ந்து வேலைகளை பார்கலானாள்.

ஆனால் வான்முகிலனோ “அதான் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சே. மனசுல ஆசைய வளர்த்துக்கிட்டானா அது அவ தப்பு. என் தப்பு ஒன்றுமில்ல” நிலஞ்சனா இறங்கி வந்ததும் முறுக்கிக் கொண்டு திரிந்தான்.

அதை பார்த்தே அவனை சீண்ட நிலஞ்சனா “ஹபி ஹபி” என்று அவனை அழைத்து வெறுப்பேற்றலானாள்.

ஆரம்பத்தில் முறைத்தவன் பின்னர் கண்டு கொள்ளாது இருக்க, இப்பொழுதெல்லாம் அவள் “ஹபி” என்று அழைத்தால் “என்ன நிலு, சொல்லு,  என்ன விஷயம்” என்று சாதாரணமாகவே பதில் கூறுவான். வேலை விஷயமாக பிறரை சந்திக்க நேர்ந்தாலும் நிலஞ்சனாவை அறிமுகப்படுத்தும் பொழுது. கம்பனி வக்கீல் என்றில்லாமல் என் மனைவி என்றுதான் அனைவரிடமும் அறிமுகப்படுத்தலானான். வான்முகிலன் தன்னை மனதளவில் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டான் என்று நிலஞ்சனாவுக்கு புரிந்தது. ஆனால் அவன் தான் அதை உணரவில்லை.

பொதுவாக நிலஞ்சனா தான் வாய் ஓயாமல் அவனிடம் பேச்சுக் கொடுப்பாள். இப்பொழுதெல்லாம் வான்முகிலன் தான் அதிகமாக பேசினான். நிலஞ்சனா அவனை ஆச்சரியமாக பார்த்தாலும் எதுவும் கேட்பதில்லை. 

வான்முகிலனின் இந்த மாற்றம் அவனுக்குத்தான் புரியவில்லை. அவனை சுற்றியிருப்போருக்கு அவனது மாற்றம் நன்றாகவே புலப்பட்டது. இவர்களை பார்த்து ஆனந்தப்பட்டு இன்னொரு ஜீவன் ராம் தான்.   

“பெர்பெக்ட்டான கிரைம் என்று ஒன்று இல்லவே இல்லையே. இந்த மலர்விழி மட்டும் எப்படி சிக்காம இதெல்லாம் பண்ணுறாங்க” ராம் புரியாமல் கேட்டான்.

“பல நாள் யோசிச்சு, பக்காவா திட்டம் போட்டு பண்ணா ஒரு சில க்ரைம் பெர்பெக்ட் ஆகலாம். ஆனா அவங்களுக்குத் தெரியாமலேயே ஏதாவது க்ளூவ விட்டுட்டு போனா அது அவங்களுக்கே சிக்கல் தான். மலர்விழி ஒன்னும் க்ரைம் டிபார்ட்மெண்ட்ட சேர்ந்தவங்களோ, இன்டலிஜெண்ட் ஆபீசரோ இல்ல.

பல கேஸ பார்த்தவங்களே தப்பு பண்ணி மாட்டிக்கிறப்போ மலர்விழி எம்மாத்திரம், கண்டிப்பா சிக்குவா” என்ற நிலஞ்சனா “ஆதித்த ஆதிரியன ஆக்சிடன்ட் பண்ணதாக சிக்க வைக்க பார்த்து முடியாம ஆகாஷ சிக்க வச்சிருக்கா. மலர்விழியோட கேஸ்லயும் அவ பேர்ல சிம் வாங்கியிருக்காங்க ஆனா போன் சிக்கல” யோசனையில் ஆழ்ந்தாள் நிலஞ்சனா.

“ராம் அவளுக்கு உன் மேல சந்தேகம் வரலையே. நீ சொல்லுறத அப்படியே நம்புறாளா? பவானியை பார்க்கணும் என்று கோரிக்கை வச்சியா? என்ன சொல்லுறா?” வான்முகிலன் யோசனையாக கேட்டான்.

ஆம் மலர்விழி வான்முகிலனுக்கு வலை விரிப்பதாக நினைத்து ராமை அழைத்து பேசி வான்முகிலனை பற்றி அனைத்து விடயங்களையும் தனக்கு அறியத்தருமாறு கூறியிருக்க, அவளிடம் பேசி முடித்த உடனே ராம் வந்தது வான்முகிலனையும், நிலஞ்சனாவையும் தேடித்தான்.

“மேடம். நீங்க சொன்னது போலவே பவியோட வீடியோவை அனுப்பி சார பத்தின தகவல்களை கேட்டாங்க” என்று மலர்விழி தன்னிடம் என்னவெல்லாம் பேசினாள் என்று ரெக்காட் செய்ததை போட்டுக் காட்டினான் ராம். 

என்று நிலஞ்சனா ராமும் பவானியும் காதலிக்கிறார்கள் என்று கண்டு பிடித்தாலோ அன்று ராமையும், வான்முகிலனையும் அமர்த்தி பேசினாள்.

“எனக்கென்னமோ பவானி உயிரோட இருக்கிறதாக தோணுது. பவானி செத்திருந்தா டெட் பாடி கிடைச்சிருக்கு, இல்ல காணா பிணமா அவள அடக்கம் செஞ்சிருந்தாலும் ஏதாவது துப்பு கிடைச்சிருக்கு. என் உள்மனசு அவ உயிரோட இருக்கானு சொல்லுது”

“ஒரு வக்கீலா இருந்து கிட்டு உள்மனசு, ஆழ்மனசு என்று பேசுறது சரியா இல்ல” நிலஞ்சனாவை மட்டம் தட்டவென்றே அன்று வான்முகிலன் பேசினான். 

“நீங்களும், பவானியும் காதலிக்கிறது மலர்விழிக்கு தெரிஞ்சிருந்தா நிச்சயமாக அவள வச்சி கேம் ஆட நினைப்பா. அதுக்கு நீங்க தயாராகுங்க” என்று ராமிடம் கூறியிருக்க, அதற்கேத்தது போல் தான் ராமும் பேசியிருந்தான். பேசியதை ரெக்காடும் செய்திருந்தான்.

“அன்னக்கி மலர்விழி இங்க வந்துட்டு போன உடனே இங்க நடந்தத போன் போட்டு சொல்லிட்டேன். அதனாலே அவங்களுக்கு என் மேல நம்பிக்கை வந்திருச்சு. மலர்விழிய நாம சந்தேகப்படுறோம் எங்குறதே அவங்களுக்குத் தெரியல. வேற யார்கிட்டயோ பேசுறது போலத்தான் நானும் பேசினேன். பவிய பார்க்கணும், பார்க்கணும் என்று சொல்லிகிட்டே இருக்கேன். அதான் உசுரோட இருக்காளே சந்தோஷ படு என்று சொல்லுறாங்க” என்றான் ராம்.

ராமுக்கு பவானியை காப்பாற்ற வேண்டும். அவள் அவனது காதலி. அதற்காக வான்முகிலனை சிக்கலில் மாட்டி விடுவானா? ராமுக்கும், வான்முகிலனுக்கும் எந்த மாதிரியான உறவு என்று அறியாமல் மலர்விழி பவானியை காட்டி ராமை பணிய வைக்க நினைத்தது அவளது முட்டாள்தனம்.

“பவானியோட வீடியோவை வச்சி அவ எங்க இருக்கான்னு கண்டு பிடிக்க முடிஞ்சதா?” நிலஞ்சனா தான் கேட்டாள்.

“ஹாஸ்பிடல் செட்டப் போலத்தான் இருக்கு. வீட்டுல வச்சிக்க மலர்விழி ஒன்னும் முட்டாளில்ல. அது அவளுக்கு உதவி செய்யிற நபரோட வீடாக கூட இருக்கலாம்” என்றான் வான்முகிலன்.

“மலர்விழிக்கு யார் உதவி செய்யிறாங்க என்று தெரிஞ்சா தான் பவானியை காப்பாத்தலாம், டிடெக்டிவ் கிட்ட இருந்து இன்னும் ஒரு பதிலும் வரல” அலைபேசி அழைப்பு கூட விடுக்க முடியாதே என்ற கடுப்பில் கூறினாள் நிலஞ்சனா.

“அவருக்கு கொஞ்சம் டைம் கொடுத்தா பக்காவா டீடைல்ஸ் கொடுப்பாரு. நம்ம அவசரத்துக்கு அவர் வேலை பார்க்க மாட்டாரு” என்ற வான்முகிலன் “கண்டிப்பா மலர்விழி ரம்யா ஹஸ்பன் ஜவஹர கடத்தியிருக்க மாட்டா. அவ பண்ணியிருந்தா வேற யாரையாச்சும் சிக்க வைக்கத்தான் பார்ப்பா. அத யார் பண்ணியிருப்பாங்க என்று கண்டு பிடிக்கணும்” என்றான்.

அதை ராமும், நிலஞ்சனாவும் கூட ஏற்றுக் கொண்டதாக தலையசைத்தனர்.

அடுத்து மலர்விழி என்ன செய்வாள்? யாரை சிக்க வைக்க முயற்சி செய்வாள்? என்றும் சிந்திக்கலாயினர். அதற்குள் மலர்விழிக்கு உதவி செய்யும் நபரை கண்டு பிடித்து மலர்விழி எதற்காக இதையெல்லாம் செய்கிறாள் என்று அறிய வேண்டும். அது தான் இதற்கான ஒரே தீர்வு என்றும் பேசலாயினர்.  

ஆகாஷ் தான் பைலட் ராஜேஷை கடத்தியதாக போலீஸ் தரப்பில் ஆதாரத்தோடு நிரூபித்ததும் ஆதிசேஷன் வீட்டில் அனைவருமே ஆளாளுக்கு வாக்குவாதம் செய்யலாயினர்.  

ஆகாஷுக்கு நோக்கம் இருந்தாலும், இந்தளவுக்கு திட்டம் போட்டு தனியாளாக செய்திருக்க முடியாது என்றாள் தனம். 

“எத வச்சி அப்படி சொல்லுறீங்க? அவனுக்குத்தான் நம்ம குடும்பத்தை பழிவாங்க மோட்டிவ் இருக்கே” என்றான் ஆதித்யன்.

“ஆதிரியனோட ஆக்சிடனுக்கும் அவன் தான் காரணமாக இருப்பான்” என்றான் ஆதிசங்கர்.

ஆதிரியனின் விபத்தை பற்றி பேசாமல் “உங்க அப்பா பெத்த மகளுக்கும் தான் மோட்டிவ் இருக்கு. ஆனா அவ உங்கப்பா மேல பாசமழைய கொட்டுறாளே. அதுக்காக நான் அவள சந்தேகப்படுறேனா என்ன?” என்று ஆதிசேஷனை பார்த்த தனம் “பைலட் ராஜேஷ் டுவிட் போட்டது தெரிஞ்ச உடனே ஆதிரியன் விசாரிக்க போனானே அப்போ அங்க போலீஸ் இருந்தாங்க. ராஜேஷ மிரட்டி டுவிட் போட வச்சிருந்தா கண்டிப்பா ராஜேஷ் போலீசை கூப்பிட்டிருக்க மாட்டாரு. போட சொன்னவன் தான் போலீஸ அனுப்பியிருக்கணும்.

ஆகாஸுக்கு இப்படி பக்காவா திட்டம் போட தெரிஞ்சிருந்தா அவன் சொத்த உங்கப்பாக்கு கொடுத்துட்டு அவர்கிட்டயே செலவுக்கு காசு கேட்டுகிட்டு நின்னிருப்பானா?”

தனம் கேட்ட கேள்வி அனைவரையும் யோசிக்க வைத்தது.

மலர்விழி ஒரு பெண் அவளால் இதையெல்லாம் செய்ய முடியுமா? என்ற சந்தேகமெல்லாம் தனத்திற்கு இல்லை. அவளும் பெண்தான். அவள் குடும்பத்தை அழித்த ஆதிசேஷனின் குடும்பத்தை எப்படி பழிதீர்க்க வேண்டும் என்று திட்டம் போட்டு காய் நகர்த்தியவள் தானே தனம். அன்று அவளுக்கு உதவி செய்ய அவள் தந்தை இருந்தார். மலர்விழிக்கும் உதவி செய்ய யாராவது இருப்பார்கள்.

அதை பற்றியெல்லாம் தனத்திற்கு கவலையில்லை. மலர்விழிக்கு ஏற்கனவே தன் குடும்பத்தின் மீது கை வைக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்திருந்தாள். அதை அவள் கண்டு கொண்டது போல் தெரியவில்லை.

ஆதிரியனின் விபத்துக்கு பின்னால் இருப்பதும் மலர்விழியாகத்தான் இருக்க வேண்டும். அவள் ஆட்டத்தை அவள் சரியாகத்தான் ஆடுகிறாள். என்ன ஒன்று அதில் பலியாவது என் குடும்பமென்றால் அதை பார்த்துக் கொண்டு நான் அமைதியாக இருக்க மாட்டேன்.

அடுத்து அவள் என்ன செய்யக் கூடும்? யாரை அடித்தால் குடும்பத்துக்கே மரண அடி விழும்? ஆதிசேஷன் வீழ்வார் என்று தான் சிந்திப்பாள்.

ஆதிசேஷனின் மூன்று புதல்வர்களை விட ஆதிரியன் தான் இந்த குடும்பத்தின் அடுத்த ஆணிவேர். திடீரென்று திட்டமிட்டு தான் அவனை விபத்துக்குள்ளாகி இருக்க வேண்டும். பக்காவாக திட்டம் போட்டிருந்தால் ஆதிரியன் உயிரோடு இருந்திருக்க மாட்டான். ஆதிரியனுக்கு தக்க பாதுகாப்பு கொடுத்திருப்பதால் அவனை நெருங்க யோசிப்பாள். அடுத்து யார்?

பெண்களின் மானத்தை பற்றி கூட யோசிக்காதவள் ஆதிதி, ஆதிரா இவர்களை நெருங்குவார்களா? அல்லது கடைக்குட்டி ஆதிநாத்தை நெருங்குவாளா?

அனைவரையும் யோசனையாக பார்த்தாள் தனம்.

“ஆமா ஆகாஷ் மாமா அவர் இத பண்ணவே இல்லனு அழுகுறாரு. எப்படியாச்சும் அவரை காப்பாத்த சொல்லி கெஞ்சினாரு” ஆகாஷை சென்று பார்த்து விட்டு வந்த ஆதித் கவலையாக கூறினான்.

“நீ எதுக்கு இப்போ அவனை போய் பார்த்த, உன்ன வேற போலீஸ் தூக்கி உள்ள வைக்க காத்துகிட்டு நிக்குறாங்க” என்றாள் ஆதிதி.    

“உனக்கு உன் தாத்தா ஆகாஷ மாப்பிள்ளையா பார்த்தது அவனோட சொத்துக்காக மட்டும் தான். ஆனா அவன் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல பையன் என்று தான் அவனை உனக்கு கட்டி வைக்க நான் சம்மதிச்சேன்.

உன் புருஷன உன் தாத்தாவும், அப்பா, சித்தப்பா என்று மட்டம் தட்டும் போது அமைதியா இருந்த. ஒரு நல்லவன் கூட வாழ வக்கில்லாத நீ உன் தாத்தா ரெத்தம் தான். உன்ன திருத்த முடியாது” நேரடியாகவே ஆதிசேஷனை தாக்கினாள் தனம்.

“எனக்கு ஆகாஷ பிடிக்கல. எனக்கு வான்முகிலனைத்தான் பிடிச்சிருக்கு” கத்தினாள் ஆதிதி.

“என்ன பேசுற?” கோபத்தில் ஆதிசேஷன் அடிக்கவே பாய்ந்தார்.

“ஆமா நீ போய் பேசின பேச்சுக்கு, அவனும், அவன் அம்மாவும் உன்ன வேணாம்னு சொல்லிட்டாங்க. நான் கூட நீ அவனை கல்யாணம் பண்ணா உன்ன திருத்தி நல்ல வழிக்கு கொண்டு வருவான்னு நினைச்சி அவன் கிட்ட போய் பேசினேன்.

அவன் தான் தெளிவா சொல்லித்தானே. அடங்காபிடாரியெல்லாம் கட்டிக்கிட்டு தினம் தினம் என்னால யுத்தம் செய்ய முடியாது. எனக்கு வேல இருக்கு” என்று. எந்த அம்மாதான் தன்னோட பையனுக்கு உன்ன போல பொண்ண பார்ப்பாங்க. நீ ஒழுங்கா? என்னமோ ரெண்டு பேரும் பலநாள் காதலிச்சது போல அவன் தான் வேணும் என்று சொல்லுற? அவனுக்கு ரெண்டாவதா கல்யாணம் ஆச்சு. நீ தான் புருஷன ஜெயிலுக்கு அனுப்பிட்டு பொறந்த வீட்டுல வாழாவெட்டியா வந்து உக்காந்துகிட்டு இருக்க”

“பாட்டி…”

“ஷூ… என்ன கத்துற? புருஷன் சொத்த கட்டி காக்க வக்கில்ல. புள்ள பெக்க வக்கில்ல. பொண்ணா பொறந்து என்ன நீ சாதிச்ச? குடிச்சிட்டு பாப்புல போய் ஆடாத்தான் லாயக்கு என்றா அதயே தொழிலா பண்ணி நாலு காசு சம்பாதி” தனம் கோபமாக ஒன்றும் பேசவில்லை. இவ்வாறு பேசினாலாவது ஆதிதியின் புத்தியில் உரைக்குமா என்று தான் பேசினாள். 

“ஆமா எனக்கு வீடு இருக்க நான் இங்க இருக்குறது தான் தப்பு” என்று ஆதிதி வெளியே கிளம்பினாள். கனகவள்ளி அவள் பின்னால் சென்றாள். 

“வீடா இது? நிம்மதியா ஒரு வாய் சாப்பிட கூட முடியுதா?” ஆதிசேஷனும் கோபமாக எழுந்து சென்றார்.  

ஆதிசேஷன் சென்று விட்டார் என்று உறுதி செய்து கொண்ட தனம் புத்தவர்களை பார்த்து “இதுக்கு பின்னால நிச்சயமாக உங்க தங்கச்சி தான் இருக்கா. அவ உங்க அப்பாவை பழிவாங்க துடிச்சிகிட்டு இருக்கா”

“என்ன சொல்லுறீங்க? இருக்காது. அப்பாக்காக பார்த்து பார்த்து அவ ஒவ்வொரு விஷயத்தையும் பண்ணுறா” ஆதித்யன் தான் பேசினான்.

“என்னண்ணா தங்கச்சி பாசமா?” ஆதிதேவ் கோபமாக முறைத்தான்.

“இல்லடா அன்னக்கி வான்முகிலன சந்திக்க போகும் பொழுது அப்பா பாதுகாப்பை பத்தி அவ்வளவு கேட்டு உறுதி படுத்தினாளே” 

“மலர்விழி உங்கப்பாவை பழிவாங்க காரணம் இருக்கு. அதனால தான் இதெல்லாம் அவ பண்ணுறான்னு நான் உறுதியா சொல்லுறேன். உங்கப்பா பண்ணதுக்கு இது அவருக்கு தேவை தான். அவதான் பண்ணுறான்னு சொல்லிட்டா பண்ணுவா? நடிக்கத்தான் செய்வா” என்றாள் தனம்.

“அப்பா கிட்ட சொன்னாலும் நம்ப மாட்டாரு. நாங்க என்ன பண்ணனும்? பேசாம மலர்விழி கொன்னுடலாமா?” ஆதித்யான கோபத்தில் பேச

“எனக்கு பண்ணிக் கொடுத்த சத்தியத்தை மறந்திட்டீங்களா?” ஆதிசேஷனை போல் தன் புத்திரர்கள் மாறக் கூடாதென்று தனம் தாய்ப்பாசத்தால் அவர்களை கட்டிப் போட்டு தவறான பாதையில் செல்லாமல் தடுத்துக் கொண்டிருந்தாள்.

அன்னை தங்களது கைகளை கட்டிப் போட்டிருப்பதால் தான் இவர்கள் மலர்விழியை எதுவும் செய்யாமல் இருந்தார்களே ஒழிய, அவள் மீது கோபம் கொஞ்சம் கூட குறையவில்லையென்று இப்பொழுதே பேசியத்திலிருந்தே தெரிகிறதே.

“நான் எப்பவும் சொல்லுறது தான். கொலை தீரவில்லை. அதுவும் மலர்விழி பாதிக்கப்பட்டிருக்கா. அவ உங்கப்பாவ பழிவாங்க நினச்சா பரவால்ல. நம்ம குடும்பத்தையே பழிதீர்க்க நினைக்கிறா. அவளுக்கு யாரோ ஹெல்ப் பண்ணுறாங்க. அவனைத்தான் தேடிகிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் கண்டு பிடிப்பேன். நீங்க மூணு பேரும் எதையாவது செஞ்சி குட்டைய குழப்பமா இருந்தா சரி. அந்த மலர்விழி எதுவேனாலும் செய்வா. நீங்களும் பாதுகாப்பாக இருங்க. பசங்களையும் பாதுகாப்பா பாத்துக்கோங்க” என்றாள்.

தனம் மலர்விழிக்கு உதவி செய்யும் நபரை கண்டு பிடிக்க நினைக்கையில் வான்முகிலன் ஏற்பாடு செய்திருந்த துப்பறிவாளர் ரங்கநாதன் அது யார் என்று கண்டு பிடித்து வான்முகிலனின் முன் அமர்ந்திருந்தார்.

“என்ன சொல்லுறீங்க? மேனேஜர் கதிரவனா? கதிரவனுக்கு மலர்விழிக்கும் என்ன தொடர்பு?” வான்முகிலன் அதிர்ந்து நிற்க, நிலஞ்சனா அதிர்ச்சியை முகத்தில் காட்டாது அமர்ந்திருந்தாள்.

ஆம் மேனேஜர் கதிரவன் தான் மலர்விழிக்கு உதவி செய்யும் நபர்.

“ரெண்டு பேரும் ஒண்ணா தான் டொமஸ்டிக் பிளைட் ப்ராஜக்ட் பண்ணாங்க. அப்போ கூட அளவா தான் பேசிக்கிட்டாங்க. கொஞ்சம் கூட சந்தேகம் வரல” என்றான் ராம்.

“மலர்விழியோட அம்மா தேன்மொழி திருமணம் செய்ய இருந்த மாப்பிளையே மேனேஜர் கதிரவன் தான். தேன்மொழியோட ஊர்ல விசாரிச்சப்போ தேன்மொழி கல்யாணத்துக்கு முன்னாடி ஓடிபோய்ட்டாங்க என்று சொன்னாங்க இல்லையா? மாப்புள யாரு என்று விசாரிச்சா தூரத்து சொந்தம், பக்கத்துக்கு ஊரு தான் பேரு, வேல பாக்குற இடம் வரைக்கும் சொன்னாங்க. ஆதி குரூப் புகழ் அப்படி.

கதிரவனோடு ஊருக்கு போய் விசாரிச்சேன். கல்யாண பொண்ணு ஓடிப்போனதுக்காக அவர் கல்யாணம் நிற்கல, அவர் வீட்டுல உடனே அவருக்கு ஒரு பொண்ண பார்த்து அதே முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. கல்யாணத்த பண்ணி வச்சதே ஆதிசேஷன்”

“என்ன?” வான்முகிலன் மீண்டும் அதிர்ந்தான்.

“என் ஊகம் என்னான்னா. கதிரவனோடு தேன்மொழிய பார்த்து ஆதிசேஷன் ஆசைப்பட்டிருப்பாரு. குலதெய்வ பூஜைக்கு போனப்போ கடத்தியிருப்பாரு. கதிரவன் தேன்மொழிய தேடக் கூடாது என்று அவசர அவசரமா கதிரவன் கல்யாணத்த முடிச்சிட்டாரு. தேன்மொழிக்கு ஆதி குரூப்ல இருந்து பணம் போட்டதும் கதிரவன் தான். அது மட்டுமில்ல. மலர்விழிக்கு சென்னை காலேஜ்ல சீட் வாங்கிக் கொடுத்து மலர்விழிய சென்னைல படிக்க வச்சதும் கதிரவன் தான். காடியன் என்று கதிரவன் தான் சைன் பண்ணியிருக்கார். ஆதி குரூப்ல மலர்விழிக்கு வேலைக்கு ஏற்பாடு செஞ்சிக் கொடுத்ததும் கதிரவன் தான்” என்றார் துப்பறிவாளர்.

“ஆமா ஆதிரியனுக்கு ஊட்டில ஆக்சிடன்ட் ஆனப்போ கூட இருந்தது, ஆகாஷும், மேனேஜர் கதிரவனும் தான். ஆதிரியன் ஏற்பாடு செஞ்ச டிடெக்டிவ் கிட்ட பேசும் பொழுது மேனேஜர் கதிரவன் கேட்டிருப்பார் அதனால பிரேக் வயர பிடுங்கி இருப்பாரு. ராஜேஷ் கேஸ்ல ஆகாஷ் உள்ள போனதுல ஆதிரியன கொலை செய்ய பார்த்ததும் ஆகாஷ் என்று ஆதிசேஷன் வீட்டுல முடிவு செய்வாங்க. ஆகாஷ சிக்க வைக்க முன்னாடி ஆகாஷுக்கு சரக்க ஊத்திக் கொடுத்து ஹோட்டல் ரூம்ல தங்க வச்சதும் கதிரவனாகத்தான் இருக்கணும். அதான் ஆகாஷுக்கு அவனை போலீஸ் தேடுறது தெரியல. தலைமறைவாகிட்டான்னு நிவ்ஸ் வந்தது” என்றான் வான்முகிலன். 

“தேன்மொழி இப்போ உயிரோட இல்ல. ஆதிசேஷன் உண்மைய சொல்லப் போறதுமில்ல. நமக்கு உண்மைய சொல்லக் கூடிய ஒரே ஆள் கதிரவன் தான்” என்றாள் நிலஞ்சனா.

“இல்ல. கதிரவன தூக்கி விசாரிச்சாலும் உண்மைய சொல்ல மாட்டான். நம்ம கிட்ட தான் அவனை மிரட்ட ஒண்ணுமே இல்லையே. ஆனா பவானி அவங்க கிட்ட இல்ல இருக்காங்க. திருப்பி எங்களை மிரட்டுவான். பவானியை ஏன் கடத்தினாங்க என்றும் தெரியல. போலீஸோட போனா பவானியோட உசுருக்கு கூட ஆபாத்தாகலாம். முதல்ல பவானியை காப்பாத்தணும்” என்றான் வான்முகிலன். 

“ஏன் சார் நாம போலீஸ் கிட்ட போறது நல்லதில்லையா?” துப்பறிவாளர் தான் கேட்டார்.

“பவானியை இவனுங்க தான் கடத்தினாங்க என்ற எந்த ஆதாரமும் இல்ல. அப்படியே இருந்தாலும் வேற யாரையாவது மாட்டிவிடத்தான் திட்டம் போட்டிருப்பாங்க. அதனால பவானியை கண்டு பிடிச்சி காப்பாத்தணும்”

மலர்விழி எப்படியெல்லாம் காய் நகர்த்தி விளையாடுகிறாள் என்று நன்றாகவே புரிந்து வைத்திருப்பதால் கதிரவன் அவ்வளவு சீக்கிரத்தில் வாய் திறக்க மாட்டான் என்று உறுதியாகவே நம்பினான் வான்முகிலன். 

“டோன்ட் ஒர்ரி சார். அந்த கதிரவன நான் பாலோ பண்ணுறேன். சின்ன டீடைல் கிடைச்சாலும் உங்களுக்கு போன் பண்ணுறேன்” பவானியின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றதால், தான் பாவிக்காத அலைபேசியை உபயோகிக்க முடிவு செய்து விட்டார் துப்பறிவாளர் ரங்கநாதன்.

ராம் எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தான்.

அடுத்து வந்த நாட்களில் துப்பறிவாளர் ரங்கநாதன் மேனேஜர் கதிரவனை பின் தொடர்ந்து கதிரவன் வீட்டில் இல்லாத சமயம் வீடு புகுந்து பரிசோதித்து விட்டாராம். சந்தேகப்படும்படியான எந்த நடவடிக்கையும் இல்லையென்று வான்முகிலனிடம் கூறினார்.

“மலர்விழி ஆதி குரூப்ல வச்சி சந்திக்கிறாராக இருக்கும். போன்ல கூட பேசிக்கலாம் இல்ல” என்றாள் நிலஞ்சனா.

“மலர்விழி மீட் பண்ணுறது இல்ல பிரச்சின. பவானியை எங்க வச்சிருக்காங்க எங்குறது தான். இத்தனை நாளா எங்க எங்க போறான் வாரான் என்று என்று ரங்கநாதன் கொடுத்த லிஸ்ட்ல கதிரவன் தினமும் போனது ஆதி குரூப்புக்கும், ஆதி ஹாஸ்பிடலுக்கு தான்”

“ஆதிசேஷனோட ஒவ்வொரு தொழிலையும் ஒவ்வொருத்தங்களுக்கு பாத்துக்க சொல்லி பொறுப்பு கொடுத்திருக்காங்க. ஆதிசங்கருக்குத்தான் ஹாஸ்பிடல் பொறுப்பு. ஆதிரியன் அட்மிட்டாகி இருக்குறதால ஆதிசங்கர் வேற யாருக்கும் பொறுப்பை கொடுக்க விரும்பல. கதிரவன் ஆதிசங்கர் கூட தான் போயிட்டு வராரு” என்றான் ராம்.

“வீட்டிலையும் இல்லனா வேற எங்கேதான் பவானியை வச்சிருப்பானுங்க? ஒருவேளை ஆளா ஏற்பாடு செஞ்சி வேற வீடெடுத்து பார்த்துகிறாங்களோ” வான்முகிலனுக்கு குழப்பமாக இருந்தது.

“இல்ல. பவானியை கடத்தினதே அவங்கதான் என்று தெரியக் கூடாதென்றால் அவங்க இடத்துல வச்சிருக்க மாட்டாங்க. எனக்கென்னமோ ஹாஸ்பிடல்ல தான் வச்சிருக்கணும். யாருக்கும் சந்தேகமும் வராது” யோசனையாக கூறினாள் நிலஞ்சனா.

“அவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்ல எப்படி தேடுறது?”

“நானும் ராமும் ஒவ்வொரு வார்டா போய் பாக்குறோம் வேற வழியில்ல” என்ற  நிலஞ்சனா வான்முகிலன் வேண்டாமென்று மறுத்தும் ராமை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

இருவரும் தனித்தனியாக பிரிந்து ஒவ்வொரு மாடியிலிலுமுள்ள பொதுவான அறை, தனியறை என்று பரிசோதித்தவரே வந்தனர்.

வி.ஐ.பிகளுக்கென்றே தனியாக வார்டு இருப்பதை பார்த்து யாரும் கவனிக்காத நேரத்தில் உள்ளே நுழைந்தாள் நிலஞ்சனா. அந்த வார்டில் தனித்தனி அறைகள் இருக்க, ஒவ்வொன்றுக்கும் எண்கள் வேறு இருந்தன. நிலஞ்சனா பொறுமையாகவும், அவசரமாகவும் ஒவ்வொருவராக பார்வையிடலானாள். எல்லா அறையிலும் இருந்த அனைவருமே ஆண்கள்.

“அப்படியென்றால் பெண்களுக்கென்று ஒரு வார்டு இருக்க வேண்டுமே” என்று எண்ணியவள் அங்கிருந்து வெளியேறி ராமை அழைத்து விஷயத்தை கூறினாள்.

“நான் இருக்குற ப்ளோரும் பணக்காரங்களுக்கென்றே கட்டினது போல இருக்கு மேம். மாஸ்க் போட்டு டாக்டர் கோட் போட்டிருக்குறதால யாரும் என்ன கண்டுக்கல. பார்த்துட்டு உங்களுக்கு இன்போர்ம் செய்யிறேன் என்றவன் வி.ஐ.பி. என்ற பெயரை பலகை பார்த்ததும் உள்ளே நுழைந்தான்.

ஆண்களின் வார்டு எவ்வாறு இருப்பதாக நிலஞ்சனா சித்தரித்தாளோ அவ்வாறே தான் பெண்களின் வாடும் இருந்தது. ராம் வேக வேகமாக பவானியை தேடியவன் ஒரு அறையில் மயக்க நிலையில் படுத்திருந்த பவானியை பார்த்ததும் அவளை கட்டிக் கொண்டு அழுதான்.

யாராவது வந்து விடப் போகிறார்கள் அதற்குள் பவானியை இங்கிருந்து அழைத்து செல்ல வேண்டும் என்று உணர்ந்தவன் நிலஞ்சனாவை அழைத்து பவானியை கண்டு பிடித்து விட்டதாக கூறி வண்டிகள் நிறுத்துமிடத்துக்கு வருமாறு அலைபேசி வழியாக தகவல் தெரிவித்து விட்டு பவானியை அங்கிருந்த சக்கர நாட்காலியில் அமர்த்தி அவனும் பவானியோடு அங்கிருந்து கிளம்பினான்.

வண்டிகள் நிறுத்துமிடத்துக்கு வந்தவன் வண்டியில் பவானியை அமர்த்தி நிலஞ்சனாவுக்காக காத்திருக்க, நேரம் சென்று கொண்டிருந்ததே ஒழிய அவள் வருவது போல் தெரியவில்லை.

அவள் அலைபேசிக்கு அழைத்து அழைத்து பார்த்தவன் அலைபேசி எடுக்கப்படாததால் என்ன செய்வது என்று புரியாமல் வான்முகிலனை அழைத்தான்.

ராம் அழைக்கும் பொழுதே வான்முகிலனின் வண்டி உள்ளே வந்து கொண்டிருந்தது. ராமை பார்த்த வான்முகிலன் அவனருகில் வந்து வண்டியை நிறுத்த, பவானியை காப்பாற்றி விட்டதாகவும், நிலஞ்சனாவை காணவில்லையென்றும் பதட்டமடைந்தான் ராம்.

“ராம் நீ என் வீட்டுக்கு போ. நான் நிலஞ்சனாவ கூட்டிகிட்டு வரேன்” என்ற வான்முகிலன் நிலஞ்சனாவின் அலைபேசி எண்ணுக்கு அழைத்தவாறே மருத்துவமனைக்குள் நுழைய அவள் அலைபேசி அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற கணினிக்கு குரல் தான் அவன் செவியை நிரப்பியது.

Advertisement