Advertisement

அத்தியாயம் 21

வெளியே எங்காவது சென்று சாப்பிட்டு செல்லலாமா? என்று வான்முகிலன் கேட்டிருக்க, உடனே சம்மதித்த நிலஞ்சனா, பின் வீட்டில் நமக்காக காத்துக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லையென்று வான்முகிலனையே கேட்டாள்.

காஞ்சனாதேவியை அழைத்து வெளியே சாப்பிட்டு வருவதாக கூற அவளும் சரியென்று விட்டாள்.

வீட்டுக்கு செல்லும் வழியில்லையே ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்திய வான்முகிலன் நிலஞ்சனாவை உள்ளே அழைத்து சென்றான்.

பணியாளுக்கு உணவை எடுத்து வருமாறு நிலஞ்சனா கூறி முடித்த உடனே வான்முகிலன் ஆகாஷை பற்றி பேச ஆரம்பித்தான்.

“அதானே கல்யாணமான உடனே பொண்டாட்டிய கூட்டிகிட்டு டைம் ஸ்பென்ட் பண்ண ரொமான்டிக் டின்னருக்கு வந்திருக்கானேனு பார்த்தேன். அதெல்லாம் கனவுல தான் நடக்கும் போல. வேலைய தவிர எதையுமே பேச மாட்டான்.

தன்னை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூடவா இவனுக்கு தோணாது? நானும் மலர்விழி போல் இருந்திருந்தால் இவன் நிலைமை என்னவாகும்? இவனாக கேட்கும் வரையில் நான் என்னை பற்றி சொல்லப் போவதில்லை” பெருமூச்சு விட்ட நிலஞ்சனா தண்ணீரை அருந்தலானாள்.

“என்ன நான் பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன். இவ பதில் சொல்லாம இருக்காளே” என்று வான்முகிலன் நிலஞ்சனாவை பார்த்தான்.

“அதான் ஆதிசேஷன் கிட்ட ஆகாஷ் தான் பண்ணான்னு விலாவரியாக சொன்னீங்களே” வேண்டா வெறுப்பாக பதில் சொன்னவள் வான்முகிலன் முறைக்கவும் “சரி சரி மலர்விழி இருந்ததால அப்படி சொன்னீங்க. ஆனா ஒன்னு கவனிச்சீங்களா? மிஸ்டர் ஆகாஷ் ஆதி குரூப்ல தான் எப்பவும் இருப்பாரு. பைலட் ராஜேஷ் போலீஸ்ல கம்பளைண்ட் கொடுத்த நேரம் ஆகாஷ் தலைமறைவாகிட்டாரு.

ஆகாஷ் தான் பைலட் ராஜேஷ கடத்திருந்தா ஹோட்டல் ரூம்லயா போய் இருப்பான்? யாரும் கண்டு பிடிக்க முடியாத இடத்துக்கு இல்ல போய் இருப்பான்” என்றாள்.

“ஆமா அந்த ஆகாஷ போலீஸ் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகும் பொழுது குடிச்சிட்டு தூங்கியிருக்கான்னு தெளிவா தெரிஞ்சது. போலீஸ் அவனை தேடுறதே அவனுக்கு தெரியல என்று நினைக்கிறேன். நடந்தது விபத்து தான்” என்றான் வான்முகிலன். 

“போலீஸ் விசாரணை முடியட்டும். வீட்டுக்கு போன உடனே தூங்கணும். முன்ன எல்லாம் ஆபீஸ் முடிஞ்ச உடனே வீட்டுக்கு போய் ப்ரீயா இருப்பேன். கல்யாணம் ஆனதும் ஆச்சு. வீட்டுக்கு போயும் ஆபீஸ் வேலைய பார்க்க வேண்டியதா இல்ல இருக்கு” முணுமுணுத்தவாறே நிலஞ்சனா உணவு வரவும் சாப்பிட ஆரம்பித்தாள்.

இவ்வளவு பிரச்சினை நடக்கிறதே நடந்தது விபத்தாக இருக்காது என்றுதான்  நிலஞ்சனாவுக்கு தோன்றியது. அதை வான்முகிலனிடம் வெளிப்படையாக கூறாமல், பேச்சை மாற்றவென்று தான் புலம்பினாள். ஆனால் மனதில் இருந்ததை தான் கூறினாள்.

அவள் புலம்பல் காதில் விழவே “ரொம்ப தான் இவள படுத்துறோமோ?” வான்முகிலனும் அமைதியாக உண்ணலானான்.

வழமையாக சாப்பிடும் பொழுது நிலஞ்சனா தான் பேசுவாள். வான்முகிலன் தன் கருத்தை கூறியவாறு கேட்டுக் கொண்டிருப்பான்.

இன்று அவன் பேசவே நிறைய விஷயங்களும், சந்தேகங்களும் இருக்க நிலஞ்சனாவின் அமைதி அவனை இம்சித்தது.

அதற்காக அவளிடம் என்னிடம் “பேசு பேசு” என்று கெஞ்சவா முடியும்? அவளை பார்ப்பதும் சாப்பிடுவதுமாய் வான்முகிலன் நேரம் கடத்திக் கொண்டிருந்தான்.

நிலஞ்சனா ரொம்பவும் பொறுமையாக சாப்பிட்டு முடித்தாள். அவளுக்கு தொழில் பேச்சில்லாமல் வான்முகிலனோடு நேரம் செலவிட வேண்டும். அதற்காகவே கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாள்.

“என்ன ரொம்ப பசியா? வேற ஏதாச்சும் ஆடர் பண்ணவா?”

“ஐஸ் கிரீம்” என்றவள் கண் சிமிட்டி புன்னகை செய்தாள்.

“வயிறு நிறஞ்சதும் மூட் மாறிச்சு போல, ராட்சசி ஈஸ் பேக்” மெலிதாக புன்னகைத்த வான்முகிலன் அவள் கேட்ட ஐஸ் கிரீமை வரவழைத்துக் கொடுத்தான்.

“உங்களுக்கு வேணுமா?” என்று வான்முகிலனை கேட்ட நிலஞ்சனா அவன் “வேண்டாமென்று” மறுக்கும் பொழுதே அவனுக்கு ஊட்டி விட்டாள்.

“போதும், போதும்” என்று அவளை தடுத்தது மட்டுமல்லாமல், எழுந்து கொண்டு “சீக்கிரம் கிளம்பலாம் லேட் ஆச்சு” என்றான். 

வான்முகிலனுக்கு அவள் மீது கோபம் வரவில்லை. குளு குளுவென்று ஐஸ் க்ரீமை ஊட்டி விட்டதால் கோபம் வரவில்லையோ தெரியவில்லை. அல்லது இந்த கொஞ்சம் மாதங்களாக இருவரும் ஒன்றாக உணவுண்பதால் உண்டான நெருக்கத்தால் கோபம் வரவில்லையோ தெரியவில்லை.

ஆனால் அவள் கணவன் என்ற உரிமையில் ஊட்டி விட்டிருப்பாளோ என்ற அச்சத்தில் தான் வீட்டுக்கு கிளம்பலாமென்று எழுந்து கொண்டான் என்பது அவன் மனமறிந்து ரகசியம்.

இன்றைக்கு இதுவே போதும் என்ற ஆனந்தத்தில் அவனோடு வீட்டுக்கு கிளம்பினாள் நிலஞ்சனா.

இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்த பொழுது சாருமதி கிளம்பி டில்லி சென்று விட்டாள் என்ற தகவல் தான் கிடைத்தது.

“ம்ம்…” என்ற வான்முகிலன் மேற்கொண்டு எதையுமே கேட்காமல் மாடியேறி சென்று விட்டான்.

காஞ்சனாதேவி நிலஞ்சனாவை பிடித்து வைத்துக் கொண்டு பேச்சுக் கொடுக்கலானாள். அவளும் பொறுமையாக பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

“நிலஞ்சனா…” வான்முகிலன் அடிக்குரலில் கத்தியதும்

“போம்மா… சீக்கிரம் போய் என்னனு பாரு. வேலைக்கு போயிட்டு வந்த உன்ன நான் பிடிச்சி வச்சு பேசிகிட்டு இருக்கேனில்ல. என்ன ஒன்னும் சொல்ல முடியாம உன்ன திட்ட போறான்” காஞ்சனாதேவி நிலஞ்சனாவை தன்னிடமிருந்து விடுவிக்க, வான்முகிலன் ஏன் கத்தினானென்று நிலஞ்சனாவுக்கு நன்றாகவே புரிந்தது.

இவள் பொறுமையாக அறைக்குள் வர, வான்முகிலன் அறையில் தொங்க விடப்பட்டிருந்த பாக்யஸ்ரீயியுடனான அவனது திருமண புகைப்படத்தை காணாது இடுப்பில் கைவைத்தவாறு சுவரை வெறித்துக் கொண்டிருந்தான்.

“என்னாச்சு? கேஸ் விஷயமா ஏதாவது ஞாபகம் வந்திருச்சா? அப்படி கத்துனீங்க? அத்த பயந்துட்டாங்க” அவன் என்ன மனநிலையில் இருப்பான் என்று அறிந்தும் புரியாதது போல் கேட்டாள்.

“இது உன் வேலை தானே. இது நீ பார்த்த வேலை தான். சொல்லு” அவளை பிடித்து தன் புறம் திருப்பி உலுக்கியவன் கோபமாக முறைத்தான்.

“என்ன வேல? என்ன சொல்லுறீங்க?” நீ மட்டும் தான் என்னவென்று சொல்லாமல் சண்டை போடுவியா? நானும் தான் என்னவென்றே தெரியாதது போல் சமாளிப்பேன் என்பது போல் முகத்தை வைத்திருந்தாள்.

“எங்க என் கல்யாண போட்டோ? சொல்லு” நிலஞ்சனாவின் கையை இறுக்கிப் பிடித்திருந்த விதத்தில் அவளுக்கு வலிக்கவே ஆரம்பித்திருக்க,

பல்லை கடித்து பொறுமை காத்தவள் “நமக்கு நேத்து தானே கல்யாணமாச்சு. உடனேவா போட்டோவை கொடுப்பாங்க. அடுத்தவாரம் கொடுப்பாங்க” வான்முகிலன் என்ன பேசுகிறான் என்று புரியாதது போலவே பேசினாள்.

“இங்க இருந்த போட்டோ எங்க? என் ஸ்ரீயோட போட்டோ” சுவரின் புறம் அவளை திருப்பி கன்னத்தையும் திருப்பினான்.

“இங்க போட்டோ இருந்ததா? நான் கவனிக்கலையே” என்றாள்.

“அவ்வளவு பெரிய போட்டோ உன் கண்ணுல படலையா?”

“நேத்து நைட் இந்த ரூமுக்குள்ள வந்தேன். வந்ததுல இருந்தே ஏதேதோ பேசினீங்க, அப்பொறம் தூங்கினோம். காலைலயே குளிச்சிட்டு கீழ போனேன். அப்படியே ஆபீஸ் போனேன். எனக்கென்ன தெரியும்” தனக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்தாள்.

வான்முகிலன் நிறுவனத்திற்கு தன்னை விட்டு சென்ற கடுப்பில் உள்ளே வந்த நிலஞ்சனாவிடம் காஞ்சனாதேவி “முகிலன் பாக்யாவை இன்னும் முழுசா மறக்கல. நீ தான் அவனை புரிஞ்சிக்கணும்” என்றிருந்தாள்.

“பழைய காயங்களை கீறுற மாதிரி அவங்க போட்டோவை ரூம்ல மாட்டி வச்சிருந்தா அவரால என்ன ஏத்துக்க முடியாது அத்த” என்று நிலஞ்சனா மறைமுகமாக பாக்யஸ்ரீயின் பொருட்களை வான்முகிலனின் அறையிலிருந்து அப்புறப்படுத்துமாறு காஞ்சனாதேவிக்கு கூறியிருந்தாள்.

மகனின் வாழ்க்கை சிறக்க அன்னையாக காஞ்சனாதேவி எதை வேண்டுமானாலும் செய்ய காத்திருக்க, புகைப்படங்களையும், பாக்யஸ்ரீயின் பொருட்களையும் அப்புறப்படுத்த மாட்டாளா. வான்முகிலன் வரும் முன் எல்லாவாற்றையும் சுத்தம் செய்திருந்தாள்.

தான் சொல்லித்தான் காஞ்சனாதேவி செய்தால் என்று அறிந்தால் வான்முகிலன் தன் மீது கோபம் கொண்டு தன்னை நெருங்கவே மாட்டான் என்று நிலஞ்சனாவுக்குத் தெரியாதா? அதனால் தான் தனக்கு தெரியாது என்று சமாளித்தாள்.

“அப்போ யார் பண்ணாங்க?” உன்னை தவிர இதை யாரும் செய்திருக்க முடியாது. எனோ வான்முகிலனுக்கு அவள் மீது தான் சந்தேகம் இருந்தது.

“எனக்கென்ன தெரியும்? வீட்டுக்கு வந்தாலும் நிம்மதியில்லை. ஆபீஸ்ல தான் கேள்வி கேட்டு கொல்லுறாரு என்றா வீட்டுல தேவையில்லாத ஆணியெல்லாம் பிடுங்குறாரு” புலம்பியவாறே குளியலறைக்குள் புகுந்தாள்.

“நிலஞ்சனா நேற்று மாலை தானே நம்ம வீட்டுக்கே வந்தாள். அவள் செய்திருக்க வாய்ப்பில்லை. அம்மா… அம்மா தான் இதை செஞ்சிருப்பாங்களா?” நிலஞ்சனா புலம்பியதில் கொஞ்சம் மனமிறங்கினான். 

அன்னையிடம் சென்று கேட்கவும் முடியாது. கேட்டு அன்னையின் மனதை நோகடிக்கவும் முடியாது. தனக்கு நிலஞ்சனாவோடு திருமணமானதால் தான் அன்னை தனதறையை சுத்தம் செய்திருக்கிறாள் என்று புரிய, புகைப்படங்களை எங்கே போட்டிருப்பாள் என்ற ஊகத்தில் பழைய பொருட்களை போட்டு வைக்கும் அறைக்கு சென்று தேடலானான்.

சல்லடை போட்டு தேடியும் பாக்யஸ்ரீயின் எந்த புகைப்படமும் வான்முகிலனின் கண்களுக்கு சிக்கவில்லை. சோர்ந்து போனவனாக அறைக்கு திரும்ப, குளித்து விட்டு வந்த நிலஞ்சனா முடியை விரித்துப் போட்டவாறு தலையை துவட்டிக் கொண்டிருந்தாள்.

பின்னாலிருந்து பார்த்த வான்முகிலனுக்கு பாக்யஸ்ரீ நிற்பது போல் தெரிய வேக எட்டுக்களை எடுத்து வைத்து அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டான்.

“அசையாத. கொஞ்சம் நேரம் இப்படியே இரு” வான்முகிலன் அவள் விலக விடாது தன்னுள் இறுக்கிக் கொண்டான்.

எனக்காக நீ இங்கே காத்துக் கொண்டிருப்பது தெரியாமல் உன்னை  எங்கெங்கோ தேடினேன். இனி என்னை விட்டு நீங்கிச் செல்ல உன்னை விட மாட்டேன். என்றது அவன் அணைப்பு

திடுக்கிட்ட நிலஞ்சனா வான்முகிலனின் சொல்லுக்கிணங்கி அசையாமல் அமைதியாக நின்றாள்.

அவள் கழுத்தில் சின்ன சின்ன முத்தம் வைத்தவாறே “ஸ்ரீ… என்ன விட்டு போயிடாத ஸ்ரீ. என் கூடவே இரு ஸ்ரீ. நீ இல்லாம என்னால எதையுமே யோசிக்க முடியல” என்றான்.

கிறங்கி நின்ற நிலஞ்சனா வான்முகிலன் தன்னை பாக்யஸ்ரீ என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்று புரிந்ததும் வேகமாக அவன் புறம் திரும்பினாள்.

“இன்னும் எத்தனை நாட்களுக்கு பாக்யஸ்ரீயோட பேர சொல்லி என்ன தொட்டு இம்ச பண்ண போறீங்க? என்ன நீங்க கல்யாணம் பண்ணதாலையோ, இல்ல நான் இந்த ரூம்ல இருக்குறதாலையோ நீங்க கன்பியூஸ்ல பாக்யஸ்ரீ என்று என்ன நினைக்கலையே. அன்னக்கி ஹோட்டல் ரூம்ல கூட இதே மாதிரி தான் நடந்துகிட்டீங்க. சரி அறையிருளில் பார்த்து குழம்பியிருப்பீங்க என்று விட்டுட்டேன். இன்று அறை வெளிச்சமாகத்தானே இருக்கிறது? அப்படி என்ன குழப்பம்.

சரி அன்னக்கி எதோ ஒரு மனநிலைல இருந்தீங்க என்று விட்டுடலாம். ஆனா இன்னக்கி நான் உங்க வைப். சந்தர்ப்பம் சூழ்நிலையால் நம்ம கல்யாணம் நடந்தாலும் நீங்க தான் என் ஹஸ்பண்ட் அத என்னைக்கும் மாத்த முடியாதே.

எனக்கும் ஆசைகள் இருக்கு. என் புருஷன் என்ன மட்டுமே நேசிக்கும். என் பேர மட்டுமே சொல்லணும். எல்லா பொண்ணுகளுக்கு இருக்குற சராசரியான ஆசைகளும், கனவுகளும் தான் எனக்கும் இருக்கு.

நீங்க என்ன மனசாலை ஏத்துக்கலைனாலும் பரவால்ல இப்படி பாக்யஸ்ரீ பேர சொல்லி என்ன இம்ச பண்ணாதீங்க. எனக்கு என்று ஒரு மனசிருக்கு. உங்க பொண்டாட்டியா சத்தியமா என்னால தாங்க முடியாது” பெருகும் கண்ணீரை கஷ்டப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்து அழுகுரலை அடக்கியவாறே கூறி முடித்தவள் கட்டிலில் ஏறி படுத்துக்க கொண்டாள்.

அவனை காதலித்தாலும் அவன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவன் சந்தோசம் தான் முக்கியம் என்று எண்ணுபவள்  நிலஞ்சனா. அவளுக்கு அவன் மனநிலை புரியாமளா இருக்கும். சரியென்று இவள் பொருத்துப் போனால், அவன் திரும்பத் திரும்ப அதையே தான் செய்வான். இன்னும் எத்தனை நாட்களுக்கு மனதில் காதலை வைத்துக் கொண்டு கணவன் அணைக்கும் பொழுதெல்லாம் முன்னாள் மனைவியின் பெயரை கூறுகிறானே என்று வருந்துவாள். அவன் மீண்டு வர வேண்டுமானால் இவள் இவ்வாறு பேசித்தானாக வேண்டும். 

நிலஞ்சனா பேசப் பேச அதிர்ச்சியாக அவளையே பார்த்திருந்த வான்முகிலனுக்கு இவளை பாக்யஸ்ரீ என்று தான் தவறாக ஏன் நினைக்கிறோம் என்று புரியாமல் குழம்பினான்.

அவளை சமாதானப்படுத்தவோ, மன்னிப்பு கேட்கவோ நினைக்காமல் வான்முகிலன் குளியலறைக்குள் புகுந்திருந்தான்.

தண்ணீர் தேகத்தில் விழுந்தோட நிலஞ்சனா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் அவன் ஞாபகத்தில் வந்து நின்று அவன் செய்தது தவறு என்று அவனோடு சண்டை போடலானது.

“அவ பேசினத்துக்கு என்ன ரெண்டு அற விட்டிருந்தா தேவலாம் போலயே. அவ பேசியதும், அவ முகமும் தான் கண்ணுக்குள்ள வந்து நிக்குது” புலம்பியவாறே சவக்காரத்தை கையில் எடுத்தவன் “அவ்வளவு ரியாக்ட் பண்ண என்ன இருக்கு? அதான் சந்தர்ப்ப சூழ்நிலையால் கல்யாணம் ஆச்சு என்று தெரியுதுல்ல. நான் தொட்டப்போவே என்ன தள்ளி விட்டுட்டு போக வேண்டியது தானே. கட்டிபுடிச்சா அமைதியா நிப்பாளாம். ஸ்ரீ பேர சொன்னா மட்டும் சூடு, சொரணை வருதாம்” தான் செய்தது தவறு என்று அறிந்தும் நிலஞ்சனாவை குற்றம் சொல்ல ஆரம்பித்தான் வான்முகிலன்.

குளித்து விட்டு வந்தவன் நிலஞ்சனா தூங்குகிறாளா? அல்லது விழித்திருக்கிறாளா? என்று  அவள் முகத்தை பார்க்க முயன்றான். அவளோ அவனுக்கு முதுகு காட்டியவாறு படுத்திருக்க, அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

சரி. நாமளும் சென்று அமைதியாக தூங்குவோம் என்று கட்டிலின் மறுபுறம் வந்து படுத்துக்கொள்ள, நிலஞ்சனா அவனுக்கு முகத்தை காட்டாது திரும்பி படுத்தாள்.

“பாருடா கோவமா இருக்காங்களாம். காலைல என் முகத்தை பார்த்துக்கிட்டுதான் ஆபீஸ்ல வேல பார்க்கணும். அது ஞாபகம் இருக்கட்டும்” தனக்கு சொல்லிக்கொள்வது போல் கூறியவன் “எதுக்கு இவ இவ்வளவு கோபப்படுறா?” என்று யோசிக்கலானான்.

“எல்லா பிரச்சினைகளும் முடிந்த பின் தான் இவளை என் வாழ்க்கையிலிருந்து விலக்க வேண்டும் என்று நினைத்தால், இவள் நடந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டு என்னை அவள் கணவனாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றாளா?” நிலஞ்சனா பேசியதன் சாராம்சம் இது தான் என்று முடிவு செய்த வான்முகிலன் இதை பற்றி அவளிடம் மீண்டும் பேசி தெளிவு படுத்த வேண்டும் என்று எண்ணினான்.

அடுத்த நாள் காலையில் வளமை போல் வான்முகிலன் காலை உணவுக்காக சாப்பாட்டு மேசைக்கு வர நிலஞ்சனா எல்லாம் எடுத்து வைத்து அவனுக்காக காத்திருந்தாள்.

“குட் மோர்னிங்” என்றவனை ஒரு பார்வை பார்த்தவள் பதில் சொன்னாள். 

“அப்பாடா ராட்சசியோட கோபம் போயிருச்சு” போலயே என்றவாறே அமர்ந்து அவள் பரிமாறியதை உண்ணலானான்.

காஞ்சனாதேவியும், சந்த்ரமதியும் இருந்ததால் பொதுவான சம்பாஷனையே நிகழ்ந்தது. 

உண்டு முடித்து வான்முகிலன் வண்டியில் ஏறி நிலஞ்சனாவுக்காக காத்திருக்க, அவளோ இவனை கண்டுகொள்ளாது அவளது வண்டியை எடுக்கலானாள்.

“ஏய் என்ன பண்ணுற? ஒரே ஆபீஸ் தானே போறோம். ஒன்னாவே போலாம். எதுக்கு உன் வண்டிய எடுக்கணும். பெட்ரோல் கூட வேஸ்ட்பா” புன்னகை முகமாக பேசுபவனை கடுப்பாக பார்த்தாள் நிலஞ்சனா.

“ஓஹ்… நேத்து மட்டும் பெட்ரோல் ப்ரீயா போட்டாங்களா? என்ன சமாதானப்படுத்த பாக்குறீங்களா? தள்ளுங்க. எனக்கு ஆபீஸ் போக நேரமாகுது” வண்டியில் ஏறி அமர்ந்தே விட்டாள்.

வண்டி சாவியை பிடுங்கி “ஒழுங்கு மரியாதையா வந்து என் வண்டில உக்காருற, அடம்பிடிச்சின்னா? தூக்கிட்டு போவேன்” என்று மிரட்ட,

இரண்டு கையையும் நீட்டி “ம்ம்… தூக்கிட்டு போங்க” என்றாள்.

“ராட்சசி” முணுமுணுத்தவனுக்கு மெலிதான புன்னகை எட்டிப் பார்த்திருந்து.

“இவ்வளவு வைட் எல்லாம் என்னால தூக்க முடியாது” அவளை கிண்டல் செய்தவரே அவள் கையை பற்றி அழைத்து சென்றான்.

நிலஞ்சனாவின் உதவி அவனுக்குத் தேவை. அதற்காக வேண்டியாவது. அவன் அவளை சமாதானப்படுத்தியாக வேண்டும். அவள் ரொம்ப கோபமாக இருப்பாள் என்று நினைத்தவனுக்கு அவளின் குழந்தை தனமான செயல் சிரிப்பை மூட்ட, உண்மையில் தான் பார்த்த நிலஞ்சனாவா இவள் என்று ஆச்சரியமும் அடைந்தான்.

எங்கே பாக்யஸ்ரீயோடு வாழ்வதாக நினைத்து தன்னோடு வாழ நினைப்பானோ என்ற அச்சம் கூட நிலஞ்சனாவுக்குள் எழ ஆரம்பித்திருக்க, நேற்று நடந்ததை வைத்து நிலஞ்சனா வான்முகிலனிடம் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள எண்ணவே இல்லை. அவன் தன்னை புரிந்துகொள்ள வேண்டும் என்று தான் அவனிடம் கோபட்டாள்.

அவன் மீது காதல் கொண்ட மனமும் அவன் மீது கோபத்தை இழுத்து பிடித்து வைக்க விடாமல் அவளையே இம்சை செய்ய, அவளே சமாதானமடைந்திருந்தாள். மேலும் மேலும் அதை பற்றி பேசக் கூடாது என்று தான் இரவு அவனை தவிர்த்தாள்.

நேற்று போல் அவன் கிளம்பி சென்று விடுவான். தன்னுடைய வண்டியிலையே செல்லலாம் என்று இவள் கிளம்ப வான்முகிலனே வந்து அழைத்தது ஆச்சரியத்தை தாண்டி ஆனந்தத்தை கொடுத்தது.

வான்முகிலனின் வண்டி நிறுவனத்தை நோக்கி பயணிக்க வான்முகிலன் நிலஞ்சனாவிடம் அவன் நினைத்ததை பேச ஆரம்பித்தான்.

“என்னால என் ஸ்ரீய மறக்க முடியாது. அது இந்த ஜென்மத்துல நடக்காது. என் வாழ்க்கைல இன்னொரு பொண்ண என்னால ஏத்துக்கவும் முடியாது. சத்தியமா அது நடக்காது. உன்ன ஏன் என் ஸ்ரீயா என் கண்களுக்கு தெரியுது என்று எனக்குத் தெரியாது. உனக்கும் அவளுக்கும் என்ன ஒற்றுமை என்று கூட எனக்கு புரியல. அத தெரிஞ்சிக்கணும் என்று கூட எனக்கு இஷ்டமில்லை. ஏன்னா என் ஸ்ரீ தான் எனக்கு எல்லாமே. நிச்சயமாக என் வாழ்க்கைல உனக்கென்று இல்ல வேற எந்த பெண்ணுக்கும் இடமில்லை.

இந்த எல்லா பிரச்சினையும் முடியட்டும். அதன் பிறகு நாம டிவோர்ஸ் பண்ணிக்கலாம். நீ சந்தோசமா உன் வாழ்க்கையை பார்க்கலாம்” வான்முகிலன் பேசி முடிக்கையில் நிறுவனத்திற்கே வந்திருந்தான்.

வான்முகிலன் பேசுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த நிலஞ்சனா “இப்போ தான் தெரியுது ஏன் மலர்விழி உங்களை பழிவாங்க துடிக்கிறாங்க என்று. உங்க வாழ்க்கைல ஒரு மலர்விழி போதாதா? இப்படி பேசி இந்த நிலஞ்சனாவோட கோபத்தையும் சம்பாதிக்க வேணுமா?” அவனை ஏகத்துக்கு முறைத்தவாறே வண்டியை விட்டு இறங்கி நிறுவனத்துக்குள்ளே நடந்து சென்றாள்.

“இவளுக்கு என்ன தான் வேணும்? வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுறவன ஏன் தான் டாச்சர் பண்ணுறாளோ. ராட்சசி” நிலஞ்சனாவை திட்டியவாறே வான்முகிலனும் இறங்கி நடந்தான்.  

Advertisement