Advertisement

அத்தியாயம் 20

“இங்க ஆதித் யாரு?” இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆதிசேஷன் வீட்டுக்குள் வந்து நின்று விசாரித்தார்.

“ஆதித் என் பேரன். இந்த நேரம் அவன் ஆபீஸ்ல இருப்பான். எதுக்காக இன்ஸ்பெக்டர் அவனை தேடுறீங்க?” சக்கர நாட்காலியை தள்ளியவாறே வந்த தனம் அமைதியாக கேட்டாள்.

வீட்டுக்கு போலீஸ் வந்ததும் வீட்டு பெண்கள் என்ன எதோ என்று வாசலுக்கு ஓடி வந்திருக்க, மாமியார் விசாரிப்பதை பார்த்து அங்கேயே நின்றனர்.

“மிஸ்டர் ஆதிரியனோட வண்டி பிரேக் வயரை பிடுங்கினதாக ஒருத்தன் வந்து சரணடஞ்சிருக்கான். ஆதித் சொல்லித்தான் செஞ்சானாம். நான் ஆதித்த கைது பண்ணி விசாரிக்கணும். சரி நான் ஆபீஸ்ல போய் பாத்துக்கிறேன்” இன்ஸ்பெக்டர் மதியழகன் கிளம்பலாம் என்று திரும்ப

“உன் பையன் தான் என் பையன கொல்ல திட்டம் போட்டானா? என் பையன் நல்லா சம்பாதிக்கிறான் எங்குற பொறாம” கனகவள்ளி லதாவை பார்த்து திட்ட ஆரம்பித்தாள்.

எப்படி ஓடியாடி திரிந்த பையன் ஆதிரியன். இப்படி கோமாவில் படுத்த படுக்கையில் கிடக்கின்றானே என்ற ஆதங்கம் மட்டும் தான் கனகவள்ளின் கண்ணீருக்கு பின்னால் இருந்தது.   

“என் பையன் தறிகெட்டு சுத்துறவன் தான். இப்படி கொலை செய்யிற அளவுக்கு போக மாட்டான்” பதறினாள் லதா.

ஆதிரியன் கோமாவில் விழுந்த பொழுது கூட அன்னையை வைத்து பேசி சுபிக்கும் ஆதிரியனுக்கும் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்த நினைத்தாலே ஒழிய ஆதிரியன் இறக்க வேண்டும் என்று என்றைக்குமே லதா நினைத்ததில்லை. அப்படி மகனிடம் கூட கூறியதில்லை. அந்த நம்பிக்கையில் தான் ஆதித் ஆதிரியனை கொலை செய்யும் அளவுக்கு சென்றிருக்க மாட்டான் என்று உறுதியாக கூறினாள்.

“ஷூ… கொஞ்சம் அமைதியாக இருங்க” மருமகள்களை அடக்கிய தனம் மதியழகனிடம் “இன்ஸ்பெக்டர் சரணடைஞ்சவன் என்ன வாக்கு மூலம் கொடுத்தான்?” என்று கேட்டாள்.

 “சொன்ன காச ஆதித் கொடுக்காததனால சரணடைஞ்சானாம்” என்ற மதியழகன் வெளியேறினார்.

“லதா வக்கீலுக்கு போன் போட்டுக் கொடு” என்ற தனம் வக்கீலிடம் பேசினாள்.

“ஆதித்த சின்ன சின்ன தப்பு பண்ணுறவன் தான். அவனுக்கு ஆதிரியன் மேல கோபமோ, பகையோ, பொறாமையோ இல்ல. ஆதிரியன் தன்னோட சகோதரர்கள நல்ல முறையில தான் நடத்துறான். அறிவுரை சொல்வான். அவன் சொல்லுறதால எரிச்சல் வேணா வந்திருக்கலாம். அதுக்காக ஆதித் ஆதிரியன கொலை செய்ய திட்டம் போட்டான் எங்குறது அபத்தம். யாரோ நம்ம குடும்பத்து மேல கல்லு வீச ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்கு மேலையும் நாம பார்க்க வேண்டியிருக்கும்.

கோபப்பட்டு, சந்தேகம் கொண்டு ஆளாளுக்கு பேசி வைக்காதீங்க. அப்பொறம் வார்த்தைகளை அள்ள முடியாது. எந்த சூழ்நிலையிலும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காம இருந்தீங்கன்னா, பசங்க உங்களை பார்த்து கத்துப்பாங்க. போங்க போய் வேலைய பாருங்க” அதிகாரக் குரலில் மருமகள்களை துரத்தினாள் தனம்.  

தனத்திற்கு மலர்விழி மீது தான் சந்தேகம் இருந்தது. அவளை அழைத்து விசாரித்தால் “ஆமாம் நான் தான் செய்தேன்” என்று உண்மையை ஒத்துக்கொள்ளவா போகிறாள்? ஆதாரத்தை காட்டினால் கூட மறுக்கத்தான் பார்ப்பாள்.

மலர்விழியின் அன்னை தேன்மொழியை பற்றி ஆதிரியன் ஏற்பாடு செய்த துப்பறிவாளர் கூறிய தகவல்கள் கூட அவளை கட்டிப் போட பத்தவில்லை.

இருக்கும் ஒரே வழி அவள் சிக்கியிருக்கும் கொலை வழக்கில் உள்ளே செல்வது தான். அவள் கொலை செய்ததாக கூறும் அந்த பெண் ரம்யாவின் கணவன் ஜவகருடைய பிணம் கிடைத்தால் மலர்விழி உள்ளே செல்வாள். அதன் பின் என் குடும்பம் நிம்மதியடையும்.

ஆம் ஆதிரியனின் அலைபேசியை வைத்து ஆதிரியன் யாரோடு தொடர்பில் இருந்தான் என்று கண்டு பிடித்து அவனை யார் கொலை செய்ய முயன்றிருப்பார்கள் என்று கண்டு பிடிக்க முயன்றாள் தனம்.

வான்முகிலன் ஆதிசேஷனோடு தொழில் புரிவதால் ஆதிரியன் வான்முகிலனோடு பேசியது தனத்திற்கு சந்தேகத்தை உண்டு பண்ணவில்லை.

ஆதிரியன் ஏற்பாடு செய்திருந்த துப்பறிவாளர் பிரதீப்பை அழைத்து பேசி ஆதிரியனின் நிலையை கூறி இனிமேல் தன்னிடம் தகவல்களை கூறுமாறு கூறியிருக்க, அவ்வாறுதான் தனத்திற்கு மலர்விழியை பற்றி ஆதிரியன் விசாரித்தது தெரிய வந்தது.

மலர்விழியை தங்களது குடும்பத்திலிருந்து விலக்கி வைக்க, ஜவஹருக்கு என்ன நிகழ்ந்தது என்று அறியத்தருமாறு பிரதீப்பை கேட்டுக் கொண்டிருந்தாள் தனம்.

இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆதி குரூப்புக்கு சென்று அனுமதி வாங்கி உள்ளே சென்று ஆதித்தை கைது செய்ய எண்ணுகையில் வக்கீல் பரமசிவம் ஆதித்துக்கான முன்ஜாமீனோடு நின்றிருந்தார்.

“ரொம்ப பாஸ்ட் தான். விசாரிச்சா தானே குற்றவாளியா? இல்லையா? என்றே தெரியும். ஆதிரியனோட அம்மாக்கு ஆதித் பண்ணியிருப்பான் என்று சந்தேகம். உங்களுக்கு எப்படி சார்?” என்று ஆதிசங்கரை கேட்டார் இன்ஸ்பெக்டர் மதியழகன்.

இந்த இடத்தில் ஆதிசங்கர் கோபப்பட்டு ஆதித்தை அடித்திருந்தாலோ, அரெஸ்ட் பண்ண சொல்லியிருந்தாலோ, மதியழகன் ஆதித்தை இழுத்து சென்றிருப்பார். அதற்காகத்தானே அவர் அப்படி பேசினார்.

“என் பையனுக்கு நடந்தது விபத்து. யாரோ திட்டம் போட்டு எங்களுக்குள்ள பிரச்சினையை உண்டு பண்ணி எங்களுக்குள்ள பகையை மூட்டி விடப் பாக்குறாங்க. ஆதிரியன மட்டுமல்ல, ஆதித்தையும் நான் தான் தூக்கி வளர்த்தேன். எங்க பசங்கள பத்தி எனக்குத் தெரியும்” என்றான் ஆதிசங்கர்.

தனம் மருமகள்களை துரத்தவும் கனகவள்ளி ஆதிசங்கருக்கு அலைபேசி அழைப்பு விடுத்து வீட்டில் நடந்ததை கூறி தனக்கும், தன் மகனுக்கும் இந்த வீட்டில் பாதுகாப்பில்லையென்று கணவனோடு சண்டை போடலானாள்.

ஆதித் இப்படியொரு காரியத்தை செய்தானா? என்று கோபத்தில் இருந்த ஆதிசங்கரை தனத்தின் குரல் அமைதி படுத்தியது.

கனகவள்ளி கணவனை அழைப்பாள் என்று அறிந்து தனம் அவளை தேடி வந்திருக்க, அவள் நினைத்தது போல் ஆதிசங்கரோடு பேசிக்கொண்டிருக்கையில் அலைபேசியை பறித்து தனம் மகனோடு பேசினாள்.

ஆதித்தை பற்றி தெளிவாக கூறியவள் தனக்கு மலர்விழியின் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி, எக்காரணத்தைக் கொண்டும் ஆதித்யனோடும், ஆதித்தோடும் சண்டை போடக் கூடாது என்று வாக்குறுதி பெற்றுக்கொண்டாள்.

நடப்பதை அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கும் மலர்விழியை கண்காணித்தவாறே தான் ஆதிசங்கர் இன்ஸ்பெக்டர் மதியழகனிடம் பேசினான்.

“ஒரு வயசுக்கு மேல கூடப்பிறந்த அண்ணன், தம்பியே பங்காளிங்க தானே சார். இவங்க ரெண்டு பேரும் அண்ணன், தம்பிக்கு பொறந்தவங்க. சொத்துக்காக என்ன வேணாலும் பண்ணிப்பாங்க” கொஞ்சம் நக்கலாகத்தான் இன்ஸ்பெக்டர் மதியழகன் பேசினார்.

அரச குடும்பங்களில் பதவிக்காகவும், சொத்துக்காகவும் கொலையே நடக்கிறது நீங்கள் மட்டும் எம்மாத்திரம் என்ற எண்ணம் தான் அவருக்கு.

“முறையா அப்பா சொத்தை கொடுக்கலைனா தானே அந்த மாதிரியான பிரச்சினைகள் வரும். எங்களுக்கு அந்த மாதிரியான எந்த பிரச்சினையும் வராது” என்ற ஆதிசங்கர தனம் கூறியதையும் நினைவில் கொண்டான்.

“எனக்கு பொறந்த பசங்களுக்கு மட்டும் தான் சொத்து போய் சேரனும் என்று ஆதிசிவன் தாத்தா உயில் எழுதிக் கொடுத்திருக்காரு. உங்கப்பாக்கு பொறந்தவளுக்கு நயாபைசா போகாது. நீங்க மூணு பேரும் ஒத்துமையா இருந்தா மட்டும்தான் சொத்தை எழுதிக் கொடுப்பேன். இல்லனா அநாதை ஆசிரமத்துக்கு எழுதி வைப்பேன்” என்றிருந்தாள்.

மதியழகன் கிளம்பி சென்ற பின் “எனக்கு பொறக்க போற புள்ள மேல சத்தியமா நான் இத செய்யல” என்றான் ஆதித்.

ஆதித் எதை செய்தாலும் ஆதிரியனோடு ஒப்பிடுவதால் தான் அவன் போதை மருந்துக்கு அடிமையாகி பெண்கள் சகவாசத்தில் விழுந்திருந்தான்.

அவனுக்கு ஆதிரியன் மீது மட்டுமல்ல வீட்டார் மீதும் கோபம் இருக்கத்தான் செய்தது. ஆதிரியன் கேலி, கிண்டல் செய்து ஒதுக்க நினைத்திருந்தால் கொலை செய்யும் அளவுக்கு கூட சென்றிருப்பான். ஆனால் ஆதிரியன் முன்மாதிரியான அண்ணனாகத்தான் இருந்திருக்கின்றான்.

ஆதிரியனை புரிந்து கொண்ட பின் அவன் மீதிருந்த கோபம் போய், தன்னை பெற்றவர்கள் மீதிருந்த கோபத்தில் செய்த தவறை செய்து கொண்டிருந்தவன், அதிலிருந்து வெளியே வரவும் முடியாமல் மனதளவில் துவண்டு போய் இருந்தான்.

மாளவிகா அவன் வாழ்க்கைக்குள் வந்த பின்னர் தான் மெல்ல மெல்ல தன்னை மீட்டுக் கொண்டிருக்கின்றான். 

 ஆதித் பேசும் பொழுது அவனை கவனித்த ஆதிசங்கருக்கு நிச்சயமாக ஆதிரியனின் விபத்துக்கு, ஆதித்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று புரிந்தது. தானும் சகோதர்களும் கோபத்தில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளால் மெம்மேலும் சிக்கல்களை உருவாக்குகிறோம் என்று அறிந்து தான் அன்னை அவ்வாறு பேசினாள் என்பதையும் புரிந்து கொண்டான்.

ஆதிசேஷனை பழிவாங்க நினைக்கும் மலர்விழி முதலில் செய்வது குடும்பத்தில் கல்லெறிந்து சகோதர்களை தூண்டி விட்டு ஆளாளுக்கு சண்டை போட வைப்பது தான் என்று தனம் சரியாக கணித்திருந்தாள். அதை தெளிவாக கூறியிருந்தால் கூட ஆதிசங்கர புரிந்து கொண்டிருக்க மாட்டானென்று தான் சொத்தை பற்றி பேசியிருந்தாள்.     

“என்னம்மா இது ஒரு பிரளயமே வெடிக்கும் என்று கணக்கு போட்ட. புஷ்வாணமா போயிருச்சு” மலர்விழிக்கு உடனடியாக அலைபேசி அழைப்பு விடுத்து மலர்விழிக்கு உதவி செய்யும் நபர் விரக்தியாக பேசினார்.

“அது தான் அங்கிள் எனக்கும் புரியல. இந்த அண்ணன் தம்பிங்க மூணு பேருமே அப்பாக்காக ஒத்துமையா இருக்குறது போல நடிச்சிகிட்டு இருக்காங்க. என்னனு தெரியல இன்னக்கி பாசமழையை பொழியிறாங்க”

“எனக்கென்னமோ நடக்குறது எதுவுமே சரியா படல. அந்த ஆகாஷ தவிர பொதுவாகவே அவனுங்க வேலை பாக்குறவங்கள மதிக்க மாட்டானுங்க. அதனால அவனுங்க என்ன நினைக்கிறானுங்க என்று கண்டு பிடிக்க முடியல”

“அந்த ஆகாஷ். அவன் கிட்ட பேச்சுக் கொடுத்து ஏதாச்சும் இன்போர்மேஷன் கிடைக்குமான்னு பாருங்க”

“அட நீ வேற. அவன அவன் பொண்டாட்டி கூட மதிக்க மாட்டா. அவ மதிச்சா தானே, வீட்டுல நடக்குறத பத்தி சொல்லுவான். அதுங்க பேசிக்கிட்டா தானே நமக்கு இன்போர்மேஷன் கிடைக்கும். சுத்தம்” என்றார்.

“ஆதிரியன ஆக்சிடன்ட் பண்ணிட்டான்னு ஆத்தித்த மாட்டி விட்டு அண்ணன், தம்பிக்குள்ள பிரச்சினையை உண்டு பண்ணலாம்னு பார்த்தேன். அது நடக்கல. உடனடியாக ஏதாவது செய்யணும் அங்கிள்” கோபம் கண்களில் அனல் பறக்க கூறினாள் மலர்விழி.

“ஒரு வழியிருக்கு மா. நெருக்கடியான நேரத்துல செய்யலாம் என்று கைவிட்டது தான். இப்போ செய்யலாமா?” என்று அவர்கள் என்ன திட்டமிட்டார்கள் என்றதை நினைவு படுத்தினார்.

“ம்ம்… பண்ணுங்க அங்கிள். ஆகாஷ் மேல பெருசா இவனுங்களுக்கு பாசமோ, மருமகன் என்ற மரியாதையோ இல்லாட்டியும் குடும்ப மானத்துக்கு கேடு என்றா, கம்பனிக்கு ஆபத்து என்றா அப்படியே ஆடிப்போவானுங்க இல்ல”

“அது மட்டுமாம்மா… அந்த ஆகாஷுக்கு இவனுங்கள பழிவாங்க மோட்டிவ் இருக்கே. சட்டுனு நம்பிடுவானுங்க” சிரித்தார். 

“முக்கிய செய்தி. சென்னையில் நடந்த விமான விபத்தில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடந்தது விபத்தே இல்ல. திட்டமிட்ட சதியென்று ட்விட் செய்த விமானி ராஜேஷ் தலைமறைவாகி இருந்த நிலையில் தான் தலைமறைவாகவில்லையென்றும், ஆதி குரூப் அதிபர் ஆதிசேஷனின் மூத்த மகனான ஆதிசங்கரின் மருமகன் ஆகாஷ் தன் குடும்பத்தை கடத்தி, தன்னை மிரட்டி அப்படியொரு டுவிட் போட வைத்ததாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றார். திரு. ஆகாஷை போலீசார் வலை விரித்து தேடிக் கொண்டிருக்கின்றனர்”

“என்னது அந்த ஜோக்கர் ஆகாஷ் பார்த்த வேலையா இது? அவன் தான் இப்படியொரு டுவிட்ட போட சொன்னானா?” ஆதிதேவ் கோபத்தின் உச்சியில் கத்தினான்.

“அவன் சொத்த ஆட்டைய போட்டு, அவன செல்லா காசாக்கி. அவன அடிமையாக வச்சிக்க நினச்சா? இது என்ன அரசாட்ச்சியா? எதிர்க்க முடியாதவன் பகையை வளர்த்துகிட்டு பழிதீர்க்க இப்படி ஏதாவது தான் செய்வான்” ஆதிசேஷனை பார்த்தவாறே கூறினாள் தனம்.

“வீட்டு ஆம்பளைங்க தான் இப்படியென்றா கட்டின பொண்டாட்டி கூட மதிக்கிறதில்ல. பின்ன எப்படி ஒரு மனுஷன் இருப்பான்” ஆதிதியை முறைத்தவாறே கனகவள்ளி பேசினாள்.

“நாங்கதான் பேசிகிட்டு இருக்கோமில்ல. நீ எதுக்கு பேசுற?” ஆதிசங்கர மனைவியை அடக்க,

“நான் என் பொண்ண குத்தம் சொன்னேன். உங்க யாரையும் நான் எதுவும் சொல்லல” இருந்த மொத்த கோபத்தையும் யார் மீது காட்டுவதென்று தெரியாமல் இருப்பவள் கனகவள்ளி, கணவன் அடக்க நினைத்ததும் சீறினாள்.     

“எதுக்கு நீ இப்போ அவ வாய மூட சொல்லுற? அதான் ஊரே பேசுதே” என்ற தனம் “முதல்ல ஆகாஷ் எங்க இருக்கான்னு கண்டு பிடிங்க”

“கண்டு பிடிச்சி அவன தூக்குல போடுங்க. இப்படியொரு காரியம் பண்ணவன் எதுக்கு உசுரோட இருக்கணும்” கோபத்தை கக்கினாள் ஆதிதி.

“உன் புருஷன் இத பண்ணானானே தெரியாது. அவன் பண்ண நினைச்சிருந்தாலும், இப்படியெல்லாம் பண்ண அவனால முடியுமா? தைரியம் இருக்கா? யாராச்சும் உதவி செஞ்சாங்களா? இப்படி நிறைய கேள்வி இருக்கு. இது எதுவுமில்ல. அவன கொன்னுட்டா எல்லா பிரச்சினையும் முடிஞ்சிடுமா?

அவனே இத பண்ணி, வெளியுலகத்துக்கு தெரிஞ்சி போச்சேன்னு சூசைட் பண்ணாலும், நாமதான் கொன்னதாக மீடியா சொல்லும்.

பிரச்சினையை சமாளிக்க கொலை தீர்வாகாது” ஆதிசேஷனை கூர்ந்து பார்த்தவாறே கூறினாள் தனம்.

ஆதிசேஷன் தனத்தை பேச விட்டு அமைதியாகவே இருந்தார்.

ஆகாஷ் தான் ஆட்டுவித்தால் ஆடும் கைப்பொம்மை. அவனால் இப்படியொரு காரியத்தை நிச்சயமாக செய்திருக்க முடியாது. ஆதிரியன் நலமாக இருந்திருந்தால் இந்நேரம் இதற்கான தீர்வை கூறியிருப்பான். வான்முகிலனிடம் தான் சென்று நிற்க வேண்டுமா என்று மலர்விழியை அழைத்தார்.

வான்முகிலனும் நிலஞ்சனாவோடு அமர்ந்து தொலைக்காட்ச்சி செய்தியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹோட்டலில் அறையெடுத்து தங்கியிருந்த ஆகாஷை காவல்துறையினர் கைது செய்து செல்லும் காணொளி தான் ஓடிக் கொண்டிருந்தது.

தலைமறைவாக இருப்பதாக எண்ணி ஹோட்டலில் அறையெடுத்து தங்கிய தொழிலதிபர் என்று மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வளம் வந்து கொண்டிருந்தன.

“இந்த ஆகாஷ் இப்படி செய்திருப்பானென்று என்னால நம்ப முடியல” வான்முகிலன் சந்தேகமாகவே கூறினான்.

“பைலட் ராஜேஷ் தெளிவான வாக்கு மூலம் கொடுத்திருக்காரு. போலீஸ் விசாரணையில் ஆகாஷ் என்ன சொல்லுறாரு என்று பார்க்கலாம்” என்றாள் நிலஞ்சனா. 

“மலர்விழிக்கு உதவி செய்றதே அந்த பைலட் ராஜேஷாக இருந்தா அவர் பொய்யாக கம்பளைண்ட் கொடுத்திருப்பார். ஆகாஷ திட்டம் போட்டு சிக்க வச்சிருப்பாங்க இல்ல” என்றான் வான்முகிலன்

“மிஸ் மலர்விழியோட மிஸ்டர் ஆதிசேஷன் இங்க வந்திருக்கிறாராம்” என்றவாறே வந்தான் ராம்.

“என்ன சொல்லாம கொள்ளாம வந்திருக்காரு. இப்போ எல்லாம் சொல்லாம கொள்ளாம வர்றதே அவருக்கு வேலையா போச்சு” என்றான் வான்முகிலன். 

“வந்தவங்கள திரும்பிப் போகச் சொல்ல முடியுமா? உள்ள வரச் சொல்லுங்க. எனக்கும் மலர்விழியோட தீர்த்துக்க வேண்டிய கணக்கிற்கு” என்றாள்  நிலஞ்சனா.

“என்ன கணக்கு? தேவையில்லாம நீ ஏதாவது பேசி வைக்காத” நிலஞ்சனாவை முறைத்தான் வான்முகிலன்.

மலர்விழியையும், ஆதிசேஷனையும் வளமை போலவே வான்முகிலன் வரவேற்று அமரவைத்தான்.

தனக்கும் நிலஞ்சனாவுக்கும் நடந்த திருமணத்தை பற்றி தான் ஆதிசேஷன் பேச வந்திருப்பார் என்று எண்ணினான் வான்முகிலன். அதனால் தான் நிலஞ்சனாவை எதுவும் பேசக் கூடாது என்று அச்சுறுத்தினான்.

ஆதிசேஷன் அழைத்த உடன் மலர்விழியும் மறுக்காமல் வந்ததே காதலிக்கவில்லையென்ற நிலஞ்சனா எவ்வாறு வான்முகிலனை திருமணம் செய்து கொண்டான் என்று அறிந்துகொள்ளத்தான். ஆதிகேஷனே அதை பற்றி பேசுவாரென்று எதிர்பார்த்தாள்.   

பவானியை காரணமாக வைத்து ராமை மிரட்டி அறிந்து கொண்டதையும் சரி பார்க்க வேண்டாமா?

மலர்விழிக்கும் வான்முகிலனுக்கு திருமண ஏற்பாட்டை செய்து, கடைசியில் வான்முகிலன் அவன் காதலித்த நிலஞ்சனாவை திருமணம் செய்திருக்கிறான். அவர்களை சந்திக்க மலர்விழியை அழைத்து செல்கிறோமோ அவள் மனநிலை என்னவாக இருக்கும் என்றெல்லாம் ஆதிசேஷனுக்கு கவலையில்லை.

ஏன் இந்த நேரத்தில் வான்முகிலனின் உதவி தேவை படுவதால் நிலஞ்சனாவை திருமணம் செய்ததை கேட்டு வாக்குவாதம் கூட செய்யவில்லை.

  

நிலஞ்சனா உரிமையாக வான்முகிலனின் அருகில் அமர்ந்துகொள்ள, ராம் அனைவருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்கலானான்.

ராம் வான்முகிலனுக்கு கொடுக்கும் முன் நிலஞ்சனா எடுத்து “ஆ… ஹபி” என்று வான்முகிலனுக்கு காபியை கொடுக்க அவன் புன்னகையோடு அதை பெற்றுக்கொண்டான். வேறு வழி மலர்விழியும், ஆதிசேஷனும் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கின்றார்களே.

இறுதியாக மலர்விழிக்கு கொடுக்க போனவனை தடுத்த நிலஞ்சனா “அவங்க தான் மத்தவங்க குடிச்சத குடிக்க மாட்டாங்களே சாரி அது என்னோட கப்” என்று மலர்விழிக்கு கொடுக்கப் போன கப்பை வாங்கிக் கொண்டவள் “அச்சோ இதுலயும் நான் வாய் வச்சிட்டேன். சாரி” என்று புன்னகைத்தாள்.

மலர்விழிக்கு கடுப்பாக இருந்தாலும் இந்த இடத்தில் பொறுமை ரொம்ப அவசியமென்று “பரவால்ல” என்று புன்னகைத்ததோடு “எப்படியோ நீங்க காதலிச்சவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்” என்றாள்.

தன்னை ஏன் இந்த நிலஞ்சனா போலீசில் சிக்க வைத்திருக்கக் கூடாது என்ற சந்தேகம் கூட மலர்விழிக்கு வந்திருக்க, நிலஞ்சனாவின் பதிலை வைத்து கண்டு பிடிக்க முயன்றாள்.

நிலஞ்சனா சாதாரணமாகவே உசாராகத்தான் பேசுவாள். மலர்விழி யார்? எப்படிப்பட்டவளென்று அறிந்து கொண்ட பின் அளந்தல்லவா பேசுவாள்.

“உங்க புண்ணியத்துல. எங்களுக்கு கல்யாணம் நல்லபடியாக நடந்திருச்சு” என்றாள்.

நீ சருமதியிடம் நாங்கள் காதலர்கள் என்று கூறியதால் திருமணம் நடந்தது என்றும் எடுத்துக்கொள்ளலாம். அல்லது உன்னை போலீஸ் அழைத்து சென்றதால் திருமணம் நிகழ்ந்தது என்றும் எடுத்துக்கொள்ளலாம். அது மலர்விழி எவ்வாறு எடுத்துக்கொள்வாளோ அதை பொருத்திருக்கும். 

நிலஞ்சனா செய்ததை பார்த்து பல்லை கடித்த வான்முகிலன் பெண்களை கண்டு கொள்ளாது ஆதிசேஷனை ஏறிட்டு என்ன விஷயமாக இங்கே வந்ததாக விசாரித்தான். 

“நிவ்ஸ் பார்த்தீங்களா? ஆகாஷ் இத பண்ணியிருப்பான்னு எனக்கு தோணல? அந்த பொது எதிரி தான் இத பண்ணியிருப்பானா?” ஆதிசேஷன் தீவீர முகபாவனையில் கேட்டார்.

“திருடனை கூடவே கூட்டிட்டு போய் அவங்கம்மா ஜக்கம்மா கிட்டயே வாக்கு கேட்ட கதையா மலர்விழி கூடவே கூட்டிட்டு வந்து உண்மைய சொல்ல விடாம பண்ணிட்டாரே” தேநீரை ஒரு மிடறு அருந்தின வான்முகிலன் யோசனை செய்வது போல் பாவனை செய்தான்.

“என்ன யோசிக்கிறீங்க முகிலன்”

“இல்ல உங்களுக்கும் ஆகாஷுக்கும் என்ன பகை? அவர் எதுக்கு இப்படியொரு ட்வீட் போட்டு நடந்த விபத்த சதியென்று பைலட் ராஜேஷ் குடும்பத்தை கடத்தி சொல்ல சொன்னாரு?”

“அப்போ ஆகாஷ் தான் இத பண்ணான்னு சொல்லுறீங்களா? அவன் அந்த அளவுக்கு வர்த்த இல்ல” என்றார் ஆதிசேஷன்.

“இல்ல சார். நான் விசாரிச்ச வரைக்கும். நீங்க அவர் சொத்த அபகரிச்சதனால அவருக்கு உங்க மேலையும், உங்க குடும்பத்து மேலையும் பகை இருக்கு. அண்ட் அவர் மனைவி. உங்க பேத்தி அவரை கொஞ்சம் கூட மதிக்கிறது இல்லையாம். அதனால கூட அவர் இப்படி செஞ்சிருக்கலாம்” என்றாள் நிலஞ்சனா.

“அது மட்டுமில்ல. மலர்விழி கொலை செய்ததாக சொன்ன மிஸ்டர் ஜவகர் ஆதி குரூப்புக்கு கூட்டிட்டு வந்ததே ஆகாஷ் தான். உங்கள தவிர மலர்விழி உங்க குடும்பத்துல யாருமே ஏற்றுக்கொள்ளலையே இப்படியொரு பழியை மலர்விழி மேல போட்டு மலர்விழிய ஓரம் கட்டி ஆதிதி கூட சேர நினச்சியிருக்கலாம். இல்ல உங்க குடும்பத்துக்கு கூட சேர நினச்சியிருக்கலாம். அதுவும் இல்லனா மலர்விழிக்கு உங்க குடும்பத்து மேல பகையை உண்டாக்க நினைச்சிருக்கலாம்” என்றான் வான்முகிலன்.

“தான் ஒரு பெண் என்பதால் இவர்களுக்கு தன் மீது சந்தேகம் வரவில்லை. ஆகாஷை பைலட் ராஜேஷை கடத்தியதாக கோர்த்து விட நினைத்ததில் இவர்களே என்னை ரம்யா கணவரின் வழக்கிலிருந்து விடுவித்து விடுவார்கள் என்று கனவில் மிதந்தாள் மலர்விழி.

ஆகாஷை மலர்விழி தான் சிக்க வைத்தாளா? அல்லது அவன் தான் இந்த காரியத்தை செய்தானா? என்று போலீஸ் விசாரமையில் தெரியவரும். அதற்குள் மலர்விழிக்கு உதவி செய்யும் நபரை கண்டு பிடிக்க வேண்டும் என்ற சிந்தனையில் ஆதிசேஷனை வழியனுப்பி வைத்த வான்முகிலன். 

“உன்ன தான் அவ கூட எதுவும் பேச வேணாம் னு சொன்னேனே. நான் சொல்லுறத நீ கேட்கவே மாட்டியா?” நிலஞ்சனாவை கோபமாக முறைத்தான்.

“அந்தம்மாவும் தான் கல்யாணத்துக்கு வாழ்த்து சொன்னாங்க. நீங்க நன்றி என்று ஒரு வார்த்த சொன்னீங்களா? பிடிக்காத பொண்டாட்டிய கூடவே வச்சிக்கிட்டு இருக்குறத போல மூஞ்ச வச்சிக்கிட்டு இருந்தா? அவங்க கண்டபடி கேட்கத்தான் செய்வாங்க. நான் பேசத்தான் செய்வேன்” என்றாள்.

“நான் என்ன சொல்லுறேன்? நீ என்ன பேசிகிட்டு இருக்க?” இவள் தானே ஆரம்பித்து வைத்தாள் அதனால் தானே மலர்விழி பேசினாள் என்று வான்முகிலன் யோசிக்க,

“பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ண வேணாம்? கண்டவளுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணிக்கிட்டு. என்ன புருஷான்யா நீ. தள்ளு” அவன் நெஞ்சின் மீது கைவைத்து தள்ளி விட்ட நிலஞ்சனா அவன் அறையை விட்டே வெளியேறினாள். 

“டேய் ராம். என்னடா இவ? என்ன பண்ணானு இவளுக்கு நான் சப்போர்ட் பண்ணனும் என்று துடிக்கிறா?” புரியாமல் தான் ராமிடம் கேட்டான்.

“பொறாமை சார். மேடம் உங்க வைப். நீங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்ணாம மலர்விழிக்கு சப்போர்ட் பண்ணுறீங்க என்ற பொறாமை. மலர்விழி உங்க எக்ஸ்” என்று ராம் பேச்சை நிறுத்தினான்.

“அவ என் எக்சுமில்ல, ஒரு மண்ணுமில்ல. இவ என் பொண்டாட்டி என்றா எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ணனுமா? சரி? தவறு என்ற ஒன்று இருக்கே? இவ பேசினது தப்பு தானே?” வான்முகிலன் நிலஞ்சனா தன்னுடைய மனைவியென்று உணர்ந்து தான் கூறினானா? பேச்சு வாக்கில் கூறினானா? தெரியவில்லை.  

வான்முகிலன் ராமிடம் முறையிட்டுக் கொண்டிருக்க, கதவை திறந்த நிலஞ்சனா “என்ன பொண்டாட்டி என்று ஏத்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ் ஹபி” என்று கண் சிமிட்டினாள். 

“ராட்சசி. இங்க இருந்து தான் ஒட்டு கேட்டுக்கிட்டு இருந்தியா?” நிலஞ்சனாவை முறைக்க,

“அவ உங்கள யூஸ் பண்ண பொருள் என்று சொன்னா. அத பார்த்துட்டு சும்மா நிக்க சொல்லுறீங்களா? என் புருஷன பேசினா நானும் பேசுவேன். நீங்க கேட்கக் கூடாது” வான்முகிலனையே மிரட்டினாள்.

“இன்னும் நீ கிளம்பலையா?” என்று நிலஞ்சனாவை பார்த்தவன், ராமிடம் “என் அனுமதியில்லாமல் யாரும் என் ரூமுக்கு வரக் கூடாது” என்றான்.

“உங்க பொண்டாட்டி நான் வருவேன். அதான் பொண்டாட்டி என்று சொல்லிடீங்களே” நிலஞ்சனா செல்லாமல் அங்கேயே நிற்க,

“ராட்சசி” மெலிதாக புன்னகைத்த வான்முகிலன் அவளை கண்டு கொள்ளாது வேலையில் கவனமானான்.

Advertisement