Advertisement

அத்தியாயம் 2

முக்கிய செய்தி இன்று மாலை டில்லியிலிருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானம் 477 தரையிறங்கும் பொழுதே, தரையில் மோதியதில் வெடிப்புக்குளாகி விபத்துக்குள்ளாக்கியது. சீரற்ற காலநிலையால் மின்னல் தாக்கி அதனால் ஏற்பட்ட கோளாறால் விமானத்தை சரிவர தரையிறக்க முடியாமல் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக விமானநிலையம் அறியத்தருக்கிறது.

விமானத்தில் பயணம் செய்த அறுநூறு பேரில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலையே உயிர் நீர்த்ததாகவும், எரிகாயங்களோடு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்திருப்பதாகவும், பயணிகளின் குடும்பத்தார் விமானநிலையத்துக்கும், மருத்துவமனைகளுக்கும் படையெடுத்துக் கொண்டிருப்பதையுமே நீங்கள் காணொளி காட்ச்சிகளாக கண்டு கொண்டிருக்கிறீர்கள்.

காட்சிகளாக தொலைக்காட்ச்சியில் செய்தி ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்க, சத்தத்தை குறைத்த மலர்விழி ஆதிசேஷனை ஏறிட்டாள்.

ஆதிசேன் எழுபது வயதை எட்டி இருந்தாலும் ஆளுமையான குரலும், கம்பீரமும் கொஞ்சம் கூட குறையாமல் இன்றும் சாணக்யனாக தொழில்துறையில் வளம் வருபவர்.

“இதுக்குத்தான் நமக்கு தெரிஞ்ச தொழில பார்க்கணும் எங்குறது” என்றான் ஆதிசேஷனின் மூத்தமகன் ஆதிசங்கர்.

“நம்ம பிளைட் லன்ச்சாகி ஆறு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள கிராஷ் ஆனது நமக்கு நல்லதில்ல” என்றான் நடுவில் பிறந்த ஆதித்யன்.

ஆதிசேஷன் ஆதி க்ரூப்பின் அதிபர். போர்ன் வித் சில்வர் ஸ்பூன் என்றால் மிகையாகாது. பணபலம், ஆள்பலம் இருக்க, அதிகாரத்தை எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் வாங்கி விடுபவர்.   

தாத்தா ஆதிபெருமாள் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என்றிருந்து அரசியலில் குதித்தவர். அதில் சம்பாதித்ததை புத்திசாலித்தனமாக தந்தை ஆதிசிவன் பல தொழில்களில் ஈடுபடுத்தியிருந்தார். ஆதிசேஷன் கால் பதிக்காத தொழிலே இல்லை. இறுதியாக சொந்தமாக விமானம் தயாரித்து பறக்க விட வேண்டும் என்ற கனவை சமீபத்தில் தான் நனவாக்கியிருந்தார்.

நடந்த விபத்தால் தொழில் சாம்ராஜ்யத்தின் முடிசூடா அரசன் என்று தனக்கிருக்கும் பெயருக்கு களங்கம் வந்து விடுமோ என்ற கவலை தான் ஆதிஷேஷனுக்குள் இருந்தது. என்ன செய்வது என்று இரண்டு கைகளையும் கோர்த்தவாறு அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தார்.

“எல்லாம் இவள் வந்த நேரம். ஒருவேள உருப்படியா நடக்குதா? சனியன கூடவே வச்சி சுத்திகிட்டு இருந்தா ஒன்னும் விளங்காது” விறைப்பாக நின்றிருந்த மலர்விழியை பார்த்து கூறியவாறே முறைத்தான் ஆதிசங்கர்.

“இவ என்னைக்கு வந்தாளோ அம்மா படுத்த படுக்கையாகிட்டாங்க. தரித்திரம் வீடு தேடி வந்தா, வீட்டு லக்ஷ்மி பின் வாசல் வழியாதான் வெளியேறும் என்று சும்மாவா சொன்னாங்க” என்றான் ஆதித்யன்.

“அம்மா இப்படி இருக்கும் பொழுது நீங்க இவ கூடவே இருந்தா நாலு பேர் நாலு விதமா பேச மாட்டாங்களா? இவளுக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்று நாங்க விளக்கம் வேற கொடுக்கணுமா? அத நாங்க எங்க வாயால வேற சொல்லனுமா?” என்னமோ மலர்விழிக்கும் ஆதிசேஷனுக்கும் தப்பான உறவு இருப்பதாக மற்றவர்கள் பேசுகிறார்கள் என்பது போலவே பேசினான் ஆதிசங்கர்.

“இவள உங்க கூட வச்சிக்கிறத விட்டுட்டு எங்கயாச்சும் வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சிடுங்க. ஏன் ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணமும் பண்ணி வைங்களேன். நாங்களே முன்ன நின்னு கல்யாணத்த நடாத்தி வைக்கிறோம். ஆனா இவ எங்க கண்ணு முன்னால நிக்கிறதுதான் பத்திகிட்டு எரியுது” என்றான் ஆதித்யன்.

“என் பையன் வயசுல ஒரு பொண்ண கூட்டிகிட்டு வந்து உங்க பொண்ணு என்று சொன்னா ஊர் சிரிக்காதா? நல்லவேள அந்த அசிங்கம் இன்னும் நடக்கல” என்றான் ஆதிசங்கர்.

“என்ன நடக்கல னு நிம்மதி பெருமூச்சு விடுறியா? எத்தனை நாளைக்குத்தான் ஊரு, உலகத்துக்கிட்ட இருந்து மறச்சி வைக்க முடியும்? இவ கூடவே சுத்திக்கிட்டு இருந்தா என்னைக்கோ ஒருநாள் இந்த உண்மை வெளிய வரத்தான் போகுது” என்றான் ஆதித்யன்.

அண்ணனும் தம்பியும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மலர்விழியை தாக்கி பேசியது மட்டுமில்லாமல் அவளை இங்கிருந்து துரத்தியடிக்க முயன்றனர்.

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஆதிசேஷன் மேசையில் பலமாக அடித்து கோபத்தை வெளிக்காட்டினார்.

“ரெண்டு பேருக்குமே அம்பது வயசு நெருங்கிருச்சு. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம எங்க உக்காந்துகிட்டு என்ன பேசிகிட்டு இருக்கிறீங்க?

 அவ என் பொண்ணு என்று நான் தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து உங்களுக்கு அறிமுகப்படுத்தி வச்சேன். ஆனா அவ என் சேகரட்டரியா இருந்துடுறேன். பொண்ணு என்ற உரிமையோ, எந்த அந்தஸ்தோ வேணாம் என்று சொல்லிட்டா.

அவளால குடும்பத்துலையோ, உங்களுக்குள்ளையே எந்த பிரச்சினையும் வரக் கூடாது என்று நினைக்கிற அவள உன் அம்மாவும் புரிஞ்சிக்கல. நீங்களும் ஏத்துக்கல. அத்தோட விட்டுடாம அவள பார்க்கும் போதெல்லாம் கண்டபடி கறிச்சுக்கொட்டிக் கிட்டு இருக்கிறீங்க. நீங்க எல்லாரும் எனக்குத்தான் பொறந்தீங்களா?” 

“அப்பா…” அண்ணனும் தம்பியும் ஒருமிக்க குரல் உயர்த்தினர்.

“சொத்துல பங்கு கூட வேணாம். என் கூடவே இருந்தா போதும் என்று நீங்க பேசுற எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு பொறுமையா இருக்கா.

அவளுக்கிருக்குற பொறுமையும் நிதானமும் உங்க கிட்ட துளி கூட இல்ல” இன்னும் என்னவெல்லாம் கூறினாரோ, ஆதிசேஷன் பேசப் பேச மலர்விழியின் மீது அவர்களுக்கு கோபம் கொப்பளித்ததே தவிர பாசம் வரவில்லை. 

மலர்விழி எதையுமே கண்டு கொள்ளாமல் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அன்னையிடம் தந்தை எங்கே என்று கேட்டவள் தான். அன்னையின் கண்ணீரை பார்த்து நாளாக நாளாக கேட்பதை விட்டு விட்டாள்.

அப்பன் பெயர் தெரியாதவள் என்று மலர்விழியை பாடசாலையில் ஒதுக்கினார்கள் என்றால், செல்லுமிடமெல்லாம் அன்னை நடத்தைகெட்டவள் என்று துரத்தினார்கள்.

சொந்த ஊரில் சொந்தபந்தங்கள் அத்தனை பேர் இருந்தும் அனாதையாக வளர்ந்த வலியை யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூட முடியாமல் எத்தனை இரவு தனிமையில் அழுதிருப்பாள்?

சென்னை காலேஜில் சீட் கிடைத்த பின்தான் விடிவு காலம் பிறந்தது. மூன்று வருடங்கள் நிம்மதியாக படித்தாள். இறுதியாண்டு அவள் ஊரிலிருந்து வந்த ஒருத்தியால் எல்லாமே மாறிப்போய் காலேஜ் மாணவர்கள் இவளை பற்றி மட்டுமே பேசலாயினர்.

அந்த வயது பக்குவப்பட்ட வயது. மறைமுகமாக கிண்டலடிப்பவர்களையும், குத்திப் பேசுபவர்களையும் மலர்விழி கண்டுகொள்ளவேயில்லை. சிலர் முகத்துக்கு நேராகவே “உன் அப்பா பேர் என்ன? உன் அம்மாவுக்காகவாது அப்பா பேர் தெரியுமா?” என்று கேட்டு கேலி செய்வார்கள்.

“ஏன் உனக்கு உன் அப்பா பேர் தெரியலையா? உன் அம்மாவுக்கே சந்தேகமா? பக்கத்து வீட்டுக்காரனா? எதிர்வீட்டுக்காரனா? ஒழுங்கா கேட்டுக்க, இல்லனா சொந்த அண்ணனையே கல்யாணம் பண்ண நேரிடும்” என் அம்மாவையாடி பேசுற? என்று பதில் பேச முடியாதபடி கேட்டுவிடுவாள்.

இப்படி பேசினால் கைநீட்ட மாட்டார்களா? அடிதடி சண்டை கூட நடக்கும். கராத்தே கற்று வைத்திருப்பதால் இவளிடம் அடிவாங்கி செல்பவர்கள் இவள் பக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டார்கள்.

கல்லூரி படிப்பை நிறைவு செய்த பின் வேலை தேட வேண்டுமல்லவா. ஆனால் அவளுக்கு எந்த சிரமமும் இல்லாமல் ஆதி க்ரூப்பில் ஆதிசேஷனுக்கு செயலாளராக பணிபுரிய சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்த சந்தர்ப்பம் யாருக்கும் எளிதாக கிடைப்பதில்லை. ஆதிசேஷனோடு வேலை பார்ப்பதும் அவ்வளவு சுலபமில்லையே. இரகசியங்களை காக்க வேண்டும், அஞ்சக் கூடாது. எது நடந்தாலும் முகத்தில் பிரதிபலிக்காமல் இருக்க வேண்டும்.

பல சோதனைகளை கடந்துதான் மலர்விழியை வேலைக்கே அமர்த்தியிருந்தார் ஆதிசேஷன்.

வேலைக்கு சேர்ந்த இரண்டாம் நாளே, அவளுக்காக ஒதுக்கப்பட்ட மேசையில் அவளும் அவளது அன்னையும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து “தேன்மொழி… தேன்மொழிதான் உன் அம்மாவா…” என்று அதிர்ந்து நின்ற ஆதிசேஷன் சில நொடிகளைளையே தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

“ஆமா…” என்றவள், அவர் அதிர்ச்சியை பார்த்தே “நீங்கதான் என் அப்பாவா?” என்று கேட்டாள்.

“தேன்மொழி எங்க? நல்லா இருக்காளா?” சாதாரணமாகத்தான் கேட்டார். தேன்மொழி மீது காதல் கொண்டு உருகியது போல் குரலில் பிரதிபலிக்கவுமில், முகத்தில் காட்டிக் கொள்ளவுமில்லை.

“அம்மா நாலு வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டாங்க. அம்மாதான் அப்பா யார் என்று குழந்தைக்கு அறிமுகப்படுத்தி வைப்பாங்க. என்ன நான் வளர்ந்த பிறகு போட்டோல நின்னு உங்கள அடையாளம் காமிச்சிட்டாங்க” என்றவள் வேலையை பார்கலானாள்.

அதன்பின் ஆதிசேஷனும் அவளிடம் அவளை பற்றியோ, தேன்மொழியை பற்றியோ எதுவுமே பேசவில்லை. அமைதியாக அவருடைய வேலையை பார்கலானார்.  

ஆதிசேஷனுக்கு மூன்று மகன்கள் இருந்தாலும் தன்னுடைய மொத்த திறமையும் கொண்டு பிறந்தவள் மலர்விழி என்பது அவளுடைய, வேலை செய்யும் முறையிலையே கண்டு கொண்டவர் என்ன நினைத்தாரோ, அவளை வீட்டுக்கு அழைத்து சென்றார்.

பொதுவாக வேலை செய்பவர்களை அவர் வீட்டுக்கு அழைத்து வரவே மாட்டார். அதிசயமாக ஒரு பெண்ணை அழைத்து வந்திருப்பதை பார்த்த அவர் மனைவி தனம் மூத்த மருமகளிடம் “ஒருவேளை மாமா ஆதிரயனுக்கு இந்த பொண்ண பார்த்திருப்பாரோ, பொண்ணு வேற என் மாமியார் மாதிரியே இருக்கா” என்று சந்தோஷமாக சிரித்தாள்.

ஆதிசங்கரின் மனைவி கனகவள்ளி. அவர்களுக்கு ஒரு மகன் ஆதிரயன் ஒரு மகள் ஆதித்தி.

ஆதிதியை ஒரு தொழிலதிபருக்கு திருமணம் செய்து வைத்து அவனது தொழிலையும் ஆதி க்ரூப்பில் இணைத்து விட்டார் ஆதிசேஷன்.

ஆதிரயனுக்குத்தான் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது மகனான ஆதித்யனுக்கு ஒரே மகன் ஆதித். மனைவி லதா. ஆதித் குடும்பத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் பிளே பாயாய் சுற்றிக் கொண்டிருப்பவன். தாத்தாவின் கட்டளைக்கு இணங்க வாரத்துக்கு மூன்று நாள் கம்பனி பக்கம் தலை காட்டிக் கொண்டிருப்பவன்.

இறுதியாக ஆதிதேவ் மனைவி கயல்விழி. ஒரு பையன் ஆதிநாத். ஒரு பொண்ணு ஆதிரா. இருவருமே காலேஜ் படிப்பவர்கள்.

தங்களுக்கு சரிசமமாக தாத்தா மலர்விழியை அமர்த்தி அவரே உணவு பரிமாறியது அனைத்து இளைய தலைமுறையினருக்கும் ஆச்சரியமே.

ஆதிசேஷன் என்றாலே எதிரே நின்று இவர்கள் பேச அஞ்சும் போது “யார்டா இவ?” என்று வியந்து பார்த்திருந்தனர்.

அன்னையும் பாட்டியும் பேசியது ஆதிரயனின் காதில் விழத்தான் செய்தது. அவன் ஆதிசேஷனை அறிந்திருந்த வரையில் செல்வாக்கான குடும்பத்திலிருந்து பெண்ணெடுப்பாரே தவிர மலர்விழியை போன்ற சாதார ஒரு பெண்ணை நிச்சயமாக இந்த குடும்பத்துக்கு மருமகளாக கொண்டு வர மாட்டார். இந்த பெண்ணை அழைத்து வந்ததற்கு வேறு காரணம் இருக்கக் கூடும் என்று அமைதியாக வேடிக்கை பார்த்திருந்தான்.

அனைவரும் உண்டு முடித்த பின் தான் ஆதிசேஷன் மலர்விழி தன்னுடைய மகள் என்று குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 

மகள் போல எண்ணுகிறாரா? அல்லது தத்தெடுக்க நினைக்கிறாரா என்று அங்கிருந்தவர்கள் குழம்பி நிற்க, “மகள் என்றா? சொத்து எழுதி வைக்க போறீங்களா? இல்ல தத்து எடுக்க போறீங்களா?” மகன்கள் மூவரும் கேள்விகளோடு மலர்விழியை தூற்ற ஆரம்பித்தனர்.

“அவ எனக்கு பொறந்தவ. என் ரெத்தம்” இதற்கு மேல் தன்னிடம் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்று உறுதியான குரலில் கூறி முகத்தை விறைப்பாக வைத்திருந்தார் ஆதிசேஷன்.

கணவன் மகள் என்றதில் தனம் மயங்கி சரிய ஆதிசங்கர், ஆதித்யன், ஆதிதேவ் மூவரும் மனைவியர்களோடு அன்னையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றிருக்க, இளைய தலைமுறையினர் அனைவருமே ஒரு அறையில் கூடி பேசிக் கொண்டிருந்தனர்.

“தாத்தா இப்படி பண்ணுவார் என்று நான் நினைக்கவே இல்ல” ஆதிரா குறுக்க, நெடுக்க நடந்தவாறே கூற,

“அண்ணா வயசுல ஒரு அத்த. எப்படி இருக்கு? சொல்லவே கூச்சமா இருக்கு” என்றான் ஆதிநாத்.

“ஆனாலும் செம்ம யாங்கான அத்த” என்ற ஆதித் உள்ளுக்குள் “என்னடா எனக்கு வந்த சோதனை?” என்று நொந்து கொண்டான்.

வாரம் மூன்று நாட்கள் கம்பனிக்கு சென்று கொண்டிருந்தவன் மலர்விழியை பார்த்ததிலிருந்து அவளை பார்க்கவென்றே மதிய உணவு நேரத்துக்கு தினமும் சென்று விடுவான்.

இவன் நோக்கம் அறியாமல் அவளும் இவனோடு சாதாரணமாக பேசுவாள்.

“டேட்டிங் போலாமா?” என்று வெளிப்படையாகவே ஆதித் கேட்டிருக்க, அவனை ஆழ்ந்து பார்த்தவள் புன்னகையோடு மறுத்து விட்டாள்.

இவன் அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. பணத்துக்கு வரியா?” என்று கேட்டு அவளை அசிங்கப்படுத்தியது மட்டுமல்லாமல், தனியாக அவளை சந்திக்கும் பொழுதெல்லாம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்வது போல் நெருங்கி நிற்பான்.

பொறுமையாக கூறிப் பார்த்த மலர்விழி ஒரே ஒரு கராத்தே பஞ் முகத்திலையே வைத்து எச்சரிக்கை செய்திருந்தாளே ஒழிய தான் யார் என்ற உண்மையை கூறவுமில்லை. நடந்ததை ஆதிசேஷனின் காதுக்கு கொண்டு செல்லவுமில்லை. 

“தாத்தாவுக்கு மட்டும் தெரிஞ்சிருந்தா நான் காலி” தனக்குள் முணுமுணுத்தவன் “அழகு மட்டுமில்ல ரொம்ப டேஞ்சரஸ் ஆன்டி” என்றான் ஆதித்.

 “உன் புத்தி…” ஆதிரா தலையில் அடித்துக் கொண்டாள்.

“என்ன அண்ணா நீங்க ஒண்ணுமே பேசாம இருக்கிறீங்க?” ஆதிநாத் ஆதிரயனை கேட்டான்.

“தாத்தா சும்மா ஒன்னும் தன்னோட பொண்ண எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கல. தீர யோசிச்சு, ஒரு முடிவோடுதான் அறிமுகப்படுத்தி வச்சாரு. அவரோட முடிவுல அவர் மாற மாட்டாரு. நாமதான் அந்த பொண்ண நம்ம அத்தையா ஏத்துக்கணும்” என்றான் ஆதிரயன்.

ஆதிரயனின் நடை, உடல் மொழி, பேசும் விதம், என்று எல்லாமே ஆதிசேஷனை ஒத்திருக்கும். அது மட்டுமன்றி ஆதிசேஷனை சரியாக புரிந்து வைத்திருப்பவனும் இவன் ஒருத்தன் தான்.

ஆதிரயன் கேலி கிண்டல் செய்ய மாட்டான். எதை பேசினாலும் சரியாக பேசுவான் என்று இளசுகளுக்குள் மத்தியில் ஒரு நல்ல அபிப்பாராம் இருக்க ஆதிரயன் கூறியதை அனைவருமே மறுக்காமல் ஆமோதித்தனர்.

“ஆமா பாட்டிக்கு உடம்பு முடியாம எல்லாரும் ஹாஸ்பிடல் போய்ட்டாங்க. ஆனா தாத்தா அவரோட பொண்ணு கூட ஆபீஸ் ரூம்ல பேசிகிட்டு இருக்காரு” என்று ஆதிநாத் சொல்ல

“பாட்டியை விட பொண்ணு தான் முக்கியம் என்று தாத்தா சொல்லாம சொல்லிட்டாரு” என்றாள் ஆதிரா.

“பொண்ணு மட்டும் தானா? பொண்டாட்டியும் இருக்காங்களா?” ஆதித் யோசனையாக கேட்க,

“இன்னைக்கின்னு பார்த்து ஆதித்தி இங்க இல்லையே. அவ இருந்தா ஆகாஷ் மாமா கிட்ட சொல்லி எப்படியாச்சும் புது அத்தைய பத்தி தகவல் திரட்டியிருப்பா” என்றாள் ஆதிரா.

“தகவல் திரட்டியிருப்பா. ஆனா புது அத்தைய பத்தி தெரிஞ்சா தாம் தூம்னு குதிப்பாளே” என்றான் ஆதித்.

“நடந்தத எதையும் மாத்த முடியாது. இப்போ நாம முடிவெடுக்க வேண்டியது நம்ம அத்தைய வெல்கம் பண்ண போறோமா? இல்ல அத்தையே வேணாம் னு முடிவு பண்ணி அதற்கான வேலைய பார்க்க போறோமா?” தீவீர முகபாவனையில் கூறினான் ஆதிரியன்.

“இவ்வளவு அழகான அத்த, இந்த வயசுல இருந்தா நல்லா தான் இருக்கும்” ஆதித் குலைந்தவாறே கூற,

அவன் பின் மனடையில் தட்டிய ஆதிரா “குடும்ப மானம் காத்துல பறக்கும்” என்றாள்.

“ஏத்துக்கிட்டா தாத்தா சந்தோசப்படுவாரு. அதேநேரம் பாட்டியும் நம்மள பெத்தவங்களும் நம்ம மேல கோபப்படுவாங்க. ஏத்துக்கலைனா தாத்தா நம்ம மேல கோபப்படுவாரு.

தாத்தா நம்ம மேல கோபப்படுறதோ, அவர் பொண்ணுக்கு சொத்து எழுதி வைக்கிறதோ எனக்கு பிரச்சினை இல்லை. தாத்தாக்கு என் வயசுல ஒரு பொண்ணு இருக்கான்னா நம்ம குடும்பத்தை பத்தியும், தாத்தாவை பத்தியும் மீடியா கண்டபடி கதை கதையா பேசிடுவாங்க. அது நம்ம வியாபாரத்தையும் பாதிக்கும்.

நாம என்ன செஞ்சாலும் குடும்பத்தை பத்தியும், மீடியா, சொசைட்டி என்று எல்லாத்த பத்தியும் சிந்திச்சுதான் செயல்படனும்” என்றான் ஆதிரயன்.

இளைய தலைமுறைக்கு மலர்விழியை ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையுமில்லை. ஆதிசேஷனுக்கு இருக்கும் சொத்து மதிப்புக்கு நான்கில் ஒரு பங்கை கொடுக்க நேரிடும் என்றதும் கொஞ்சம் யோசித்தவர்கள், ஏற்றுக்கொண்டால் குடும்பத்தில் நிம்மதி என்பது இல்லாமல் போய்விடும் என்பது புரிய தீவிரமாக யோசிக்கலாயினர்.

“அப்பா நீங்க ஹாஸ்பிடல் போய் பெரியம்மா கூட இருங்க. நான் கிளப்புறேன்” என்றாள் மலர்விழி.

“நான் என்ன டாக்டரா? அங்க போய் நிற்க. ஹாஸ்பிடல் என்றாலே எனக்கு அலர்ஜி. போனா அவ பக்கத்துல எனக்கும் பெட் போட நேரிடும்” என்றார் ஆதிசேஷன்.

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்த மலர்விழி “நீங்க என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்போ எல்லாரையும் ஒண்ணா பார்க்க முடிஞ்சதே என்ற சந்தோசம் இருந்தது.

ஆனா என்ன உங்க பொண்ணு என்று அறிமுகப்படுத்தினதுல குடும்பத்துல வீணான பிரச்சினைகள் வருமோ என்று எனக்கு பயமா இருக்கு.

உண்மை தெரிஞ்சதால பெரியம்மா ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகிட்டாங்க. அவங்களுக்கு ஏதாவது ஆகிருச்சுனா என்னாலையே என்ன மன்னிக்க முடியாம போய்டும்.

எனக்கு உங்க பொண்ணு என்ற உரிமையோ, அந்தஸ்தோ, சொத்தோ எதுவும் வேணாம். உங்க நிம்மதியும், சந்தோஷமும் எனக்கு ரொம்ப முக்கியம்.

என்னால இந்த குடும்பத்துல ஏதாவது பிரச்சினை வந்தா அது உங்க மனநிம்மதியை பாதிக்கும்.

அது மட்டுமா? உங்க மேல தப்பு கண்டு பிடிக்கலாம் என்று உங்க எதிராளிகளும், மீடியாவும் கண்கொத்திப் பாம்பா காத்துகிட்டு இருக்காங்க. நீங்களே தீனி போடுறது போல நடந்துக்கக் கூடாது.

உங்கள போல அப்பா யாருக்கும் கிடைக்க மாட்டாங்க. எனக்கு கிடைச்சிருக்குறீங்க. என்னால நீங்க யார் முன்னிலையிலும் தலை குனியக் கூடாது. அதுக்கு ஒருகாலமும் நான் விட மாட்டேன். எனக்காக நீங்க எடுத்த இந்த முடிவை மாத்திக்கோங்க” என்று விட்டாள்.

மலர்விழி தன்னை பற்றி நினைத்து முடிவெடுக்க சொன்னதில் ஆதிசேஷன் ரொம்பவே மகிழ்ந்தார். எந்த காரணத்துக்காகவும், யாருக்காகவும் அவளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று முடிவும் செய்தார்.

அவர் மனைவி தனலக்ஷ்மிக்கு அதிர்ச்சியில் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையில் விழுந்து விட்டாள். தனத்தை வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு அறைக்கு சென்று தினமும் பார்ப்பார்.

ஐம்பது வருட கல்யாண வாழ்க்கை ஒரே நொடியில் பொய்த்து போனதில் தனத்தால் தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்க முடியாமல் ஆதிசேஷனை பார்க்கும் பொழுதெல்லாம் கண்ணீர் வடிப்பாள்.

இதை பார்க்கும் அவள் பெற்ற மூன்று புதல்வர்களும் அமைதியாக இருப்பார்களா? அன்னைக்கு இந்த நிலைமை ஏற்படக் காரணமே மலர்விழி தானென்று அவளை காணும் பொழுதெல்லாம் திட்டித்தீர்ப்பார்கள்.

ஆதிதேவோடு ஆதிரயன் கதவை திறந்துட் கொண்டு உள்ளே வர மலர்விழி பழைய நினைவுகளிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டாள்.

மலர்விழியை பார்த்ததும் ஆதிதேவ் அவன் பங்குக்கு பொரிய ஆரம்பித்தான்.

“இவ்வளவு நேரமும் உன் அண்ணங்க ரெண்டு பேரும் பாடிகிட்டு இருந்தாங்க. இப்போ நீ ஆரம்பிச்சிட்டியா? ஆகா மொத்தத்துல நீங்க யாரும் நடந்த விமான விபத்துக்கு எந்த தீர்வும் சொல்ல வரல” கடுப்பில் உச்சத்தில் கத்தினார் ஆதிசேஷன்.

“ஓஹ்… ஒரு ரவுண்ட் அப்பாவும் சித்தப்பாவும் போய்ட்டுதான் வந்திருக்குறாங்களா?” என்று ஆதிரியன் மலர்விழியை பார்த்தான்.

மலர்விழி சொத்து வேண்டாம், சொந்தம் என்ற உரிமை வேண்டாம். எந்த அந்தஸ்தும் வேண்டாம் என்று சொன்னது ஆதிசேஷனுக்கு மனமகிழ்வை கொடுத்தாலும், ஆதிசேஷனின் மறு உருவமான ஆதிரியனுக்கு அவளை முழுதாக நம்ப முடியவில்லை.

தாத்தா மகள் மீதுள்ள பாசத்தில் மதி மயங்கி விட்டார் என்று எண்ணி அவள் மீது சந்தேகம் கொண்டு அவளை பற்றி முழுவதாக விசாரித்தும் விட்டான். ஆனால் சந்தேகப்படும்படியான எதுவும் சிக்கவில்லை.

இருந்தாலும் மலர்விழியை நம்ப அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அவளிடம் எதுவோ ஒன்று சரியில்லை என்று உள்மனம் கூற அவளை தன் கண்காணிப்பிளையே வைத்திருக்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால் அவள் சாதாரணமாகத்தான் இருந்தாள்.

“பிளேன் க்ரேஷ் ஆனது இயற்கை அனர்த்தம் என்று ஏர்போர்ட்ல இருந்து தகவல் சொல்லிட்டாங்கல்ல தாத்தா. இது ஒரு விபத்து. இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரணும்” கத்திக் கொண்டிருந்த ஆதிசேஷனை அமைதிப்படுத்தினான் ஆதிரியன்.

“நீ என்னமா சொல்லுற?” ஆதிசேஷன் மலர்விழியை ஏறிட்டார்.

மலர்விழியிடம் ஆதிசேஷன் அபிப்பிராயம் கேட்டது அங்கிருந்த யாருக்குமே பிடிக்கவில்லை. ஆதிரியனை தவிர மற்ற மூவரும் அதை முகத்திலும் காட்டிவிட்டனர்.

அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் “நல்ல ஐடியா தான். ஒரு பிரெஸ் கான்பரன்ஸ் ஏற்பாடு செஞ்சு மக்களிடம் பொது மன்னிப்பு கேட்கணும்”

“மன்னிப்பா? அறிவிருக்கா?” ஆதிசங்கர் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய,

“வாய மூடு” என்ற ஆதிசேஷன் மலர்விழியிடம் விளக்கம் கேட்கலானார்.

“ஐநூறுக்கும் மேல மரணம் நிகழ்ந்திருக்கு. மக்கள் இந்த சம்பவத்தை சட்டென்று மறந்துட மாட்டாங்க. நம்ம பிளைட்ஸ் பத்தி நெகட்டிவ் தோட்ஸ் மக்கள் மனதுல உருவாக்கிருச்சு. நடந்தது விபத்து என்றாலும் மன்னிப்பு கேட்டா நம்மள பத்தி நல்ல அபிப்ராயம் உண்டாகும். நம்பிக்கை வரும்” என்றாள் மலர்விழி.

“நீ சொல்லுறது சரிதான். இப்போ இருக்குற சிட்டுவேஷன்ல நம்ம பிளைட்ல பயணம் செய்யவே மக்கள் பயப்படுவாங்க. நம்ம மேல நம்பிக்கை வந்தா தான் தைரியமா நம்ம பிளைட்ல பயணம் செய்வாங்க. அதுக்கு ஒரு மன்னிப்பென்ன ஆயிரம் கூட கேட்கலாம்” என்ற ஆதிசேஷன் ஆதிரியனை ஏறிட்டு “பிரெஸ் கான்பரன்ஸ்சுக்கு ஏற்பாடு பண்ணு. அங்க எங்க குடும்பத்துல உள்ள எல்லா ஆம்பளைங்களும் இருக்கணும்” என்று முடிவாக கூறி விட்டார். 

டில்லி விமான நிலையத்திலிருந்து தனது தோழிக்கு அழைத்து, அழைத்து ஓய்ந்த நிலஞ்சனா “என்ன இவ நான் போன் பண்ணலைனாலும் டேலி போன் பண்ணி கழுத்தறுப்பா. இன்னக்கி போன ஆப் பண்ணி வச்சிருக்கா. பாய் பிரென்ட் என்று எவனயாச்சும் கரெக்ட் பண்ணிட்டாளோ” அலைபேசியை வெறித்தவள் சென்னை பிளைட்ட மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னா கழுத்த நெறிப்பாலே. சரி வேற வழிய பாப்போம்” தனக்குள் புலம்பலானாள்.

Advertisement