Advertisement

அத்தியாயம் 19

“வாழ்த்துக்கள் சார். வாழ்த்துக்கள் மேடம்” விரிந்த புன்னகையோடு ராம் வான்முகிலனையும், நிலஞ்சனாவையும் வரவேற்றான்.

வான்முகிலன் ராமை முறைத்தவாறே அவனது இருக்கையில் அமர்ந்து “மிஸ் நிலஞ்சனா… மலர்விழி பத்தி விசாரிக்க ஒரு டிடெக்டிவ்வ ஏற்பாடு செஞ்சோமே ஏதாவது தகவல் கிடைச்சதா?”

மலர்விழி கொலை வழக்கில் சிக்கியிருக்கிறாள். அதன் விவரத்தையும் அறிய வேண்டும் என்றுதான் வான்முகிலன் நிலஞ்சனாவை கேட்டான்.

“எக்ஸ்கியூஸ் மீ சார். நவ் ஐம் மிஸிஸ் நிலஞ்சனா வான்முகிலன். கால் மீ மிஸிஸ் நிலஞ்சனா வான்முகிலன்” அவனையே மிரட்டி கண் சிமிட்டி புன்னகைத்தாள்.

“ரொம்ப முக்கியம்” உதடு பிதுக்கி அவளுக்கு பழிப்பு காட்டியவன் “வேலைய பார்க்கலாமா?” கொஞ்சம் பணிவாகவே கேட்டான்.

நேற்றிரவு தான் என்ன பேச இருந்தோம் தன்னையே மடக்கி நிலஞ்சனா என்னவெல்லாம் பேசி தன்னை சம்மதிக்க வைத்தாள் என்று ஒரு முன்னோட்டத்தை பார்த்து விட்டானே மீண்டும் இங்கே அவளோடு மல்லுக்கட்டி வேலையை தாமதமாக்க வேண்டுமா என்றுதான் பணிந்து போனான் வான்முகிலன்.   

சரி கணவன் மனைவி செல்லச் சண்டையை பிறகு வைத்துக் கொள்ளலாமென்று டிடெக்டிவ்க்கு அலைபேசி அழைப்பு விடுக்குமாறு ராமை பணித்தாள் நிலஞ்சனா.

“எக்சுவலி டிடெக்டிவ் ஏதாவது உருப்படியான தகவல் கொடுத்திருந்தா அத வச்சி உங்களுக்கும், மலர்விழிக்கும் நடக்க இருந்த கல்யாணத்த நிறுத்தலாம் என்று கூட யோசிச்சேன். அவர் தான் உருப்படியான எந்த தகவலையும் கொடுக்களையே”

நிலஞ்சனா கூறி முடிக்கும் பொழுது “இன்னும் கொஞ்சம் நேரத்துல அவரே இங்க வாறாராம்” என்றான் ராம்.

“ஏன் ஒரு போன் கூட பண்ணலையாம்?” கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டான் வான்முகிலன்.

“முடிஞ்ச அளவுக்கு எல்லா தகவலையும் கண்டு பிடிச்ச பிறகே வர்றதா இருந்தாராம்” என்று ராம் சொல்ல,

“முக்கியமான விஷயம் என்றாலும் அப்பொறமாக சொல்லக் சொன்னீங்களா?” வான்முகிலனை முறைத்தாள் நிலஞ்சனா.

அவள் முறைப்பதையெல்லாம் கண்டு கொண்டால் காரியாலயத்தில் வேலை பார்க்க முடியுமா? “அட்லீஸ் மலர்விழிய போலீஸ் கூட்டிட்டு போன கேஸ் என்னாச்சு என்றாவது தெரியுமா?” நீ உன் வேலையை பார்த்தியா? என்று வான்முகிலன் நிலஞ்சனாவை குற்றம் சாட்டினான். 

நேற்று தான் அவளுக்கும் அவனுக்கும் திருமணமே நிகழ்ந்தது. சடங்கு, சம்ப்ரதாயம் என்று அவனோடுதான் அவள் இருந்தாள். வேலையை எவ்வாறு பார்த்திருக்க முடியுமென்று கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுபவனை ஆதங்கமாக பார்த்தவள் “என் உசுர போற நிலைமையிலும் உங்க வேலைய பார்த்துட்டு தான் சாவேன். நீங்க ஒன்னும் பயப்படாதீங்க” என்று “மிஸ்டர் ராம் சாருக்கு டீடைல் கொடுங்க” என்று ராமை பார்த்தாள்.

“ஆக அம்மணி ஆப் டியூட்டி பார்த்துட்டுதான் இந்த பேச்சு பேசுறாங்க” மெலிதாக புன்னகைத்த வான்முகிலன் ராமை ஏறிட்டான்.  

“ரம்யா ஜவகர் எங்குறவங்க மிஸ் மலர்விழி மேல அவங்க ஹஸ்பண கடத்தி கொன்னுட்டதாக கேஸ் பைல் பண்ணியிருக்காங்க. அவங்க மிஸ் மலர்விழியோட காலேஜ் ஜூனியரும் கூட” என்றான் ராம்.

வான்முகிலன் யோசனைக்குள்ளாக நிலஞ்சனா பேசினாள்.

“மிஸ்டர் ஆதிசேஷன் கூப்பிட்ட உடனே நான் சும்மா ஒன்னும் அவர் பொண்ணு கல்யாணத்துக்கு போய் அவர் பொண்ணு மலர்விழி கூட இருக்கல.

அவங்களுக்கு உங்க மேல கோபம் இருக்குறது தெரிஞ்ச விஷயம் தானே. கோபம் இருக்குறவங்க உங்கள எப்படி கல்யாணம் பண்ண சம்மதிச்சிருப்பாங்க?  

மலர்விழிக்கு உங்க மேல உண்மையிலயே லவ் இருக்கா இல்ல ஆதிசேஷனோட கட்டாயத்தின் பேர்ல உங்கள கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாங்களா என்று தெரிஞ்சிக்கத்தான் போனேன்.

அவங்களுக்கு உங்க மேல இருக்குறது பகை மட்டும் தான். உங்கள கல்யாணம் பண்ணி பழிதீர்த்துக்கத்தான் திட்டம் போட்டிருக்காங்க” என்றாள் நிலஞ்சனா.

நிலஞ்சனா சொன்னதும் சந்தேகமாக கூட எந்தக் கேள்வியும் வான்முகிலன் கேட்கவில்லை. மலர்விழியுடனான சந்திப்புக்கள், பேச்சுக்கள் என்று அனைத்தையும் அசைபோட்டவன் அவள் கூறுவது உண்மையென்று அமைதியாக இருந்தான்.

“மலர்விழிக்கும் ஆதிசேஷனுக்கும் என்ன பகை என்று தெரிஞ்சா அதுல நீங்க எப்படி வந்தீங்க என்றும் தெரிஞ்சிக்கலாம்” என்றான் ராம்.

“நான் அவள காதலிச்சு ஏமாத்தவுமில்ல. யூஸ் பண்ணிக்கவுமில்ல. காதலை சொன்னப்போ ரிஜெக்ட் மட்டும் தான் பண்ணேன். ஆதிசேஷனோட பகைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. என்ன எக்ஸ்டராவா சேர்த்திருக்கா” என்றான் வான்முகிலன்.

அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ராம் தலையசைத்தான்.

“காதலிச்ச பிறகு ஒரு சில காரணங்களால பிரேக்கப் பண்ணுறதே சாதாரணம். இதுல ரிஜெக்ட் பண்ணதால ஒருத்தி உங்க மேல பகையை வளர்த்திருக்கா எங்குறது நம்பும்படியாக இல்ல” யோசனையாக கூறினாள் நிலஞ்சனா.

“இப்போ நீ என்ன சொல்ல வர நான் பொய் சொல்லுறேன்னு சொல்ல வரியா?” நிலஞ்சனா தன்னை நம்பவில்லை என்ற கோபம் தான் வான்முகிலனுக்குள் கனன்றது.

“நான் அப்படி சொல்லல ஹபி. ஆதிசேஷன் மீது மலர்விழிக்கு இருக்கும் பகை உங்க ரிஜெக்ஷனுக்கு வலு சேர்த்திருக்கும் என்று சொல்லுறேன்” அதுக்கும் இதுக்கும் தொடர்பு இருக்கு என்று சொல்லுறேன்” என்றாள்.

அவள் புருஷா என்று அழைக்காமல் ஆங்கிலத்தில் ஹபி என்று அழைத்ததை வான்முகிலன் கண்டும் கொண்டான். புரிந்தும் கொண்டான். ஆனால் காட்டிக்கொள்ளத்தான் இல்லை. “என்ன தொடர்பு என்று தெரியாது. இத தானே சொல்ல வர?” கோபத்தை காட்டி அந்த வார்த்தை மட்டும் காதில் விழாதது போல் நடித்தான்.

“சரியான கல்லூலிமங்கன்” செல்லமாய் மனதுக்குள்ளேயே அவனை கொஞ்சிக் கொண்ட நிலஞ்சனா “டிடெக்டிவ் வரட்டும் அடுத்து என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்” என்று வான்முகிலனை பார்த்து கண்சிமிட்டினாள். 

“ராட்சசி” அவளை மதுக்குள்ளேயே வைதவன் “ராம் ஆதிரியனோட நிலைமை என்ன? பிரேக் வயரை பிடிங்கினது யார் என்று கண்டு பிடிக்க முடிஞ்சதா?” ராமை ஏறிட்டான்.

“வண்டி ஆதிரியன் சார் தங்கியிருந்த ஹோட்டல் பார்கின்லதான் இருந்திருக்கு. வெளியாட்கள் யாரும் வர வாய்ப்பில்ல. உள்ளே இருந்த யாரோ தான் பண்ணியிருக்கணும் என்று போலீஸ் சொல்லுறாங்க. அன்னைக்கி ஹோட்டல்ல தங்கியிருந்தவங்க, ஸ்டாப் என்று எல்லாரையும் போலீஸ் இன்னமும் விசாரிக்கிறாங்க”

“அப்போ நான் சந்தேகப்பட்டது சரி தான். ஆதிரியான பாலோ பண்ணிக் கிட்டு மலர்விழிக்கு ஹெல்ப் பண்ணுறவன் போய் இருக்கான். ஆதிரியன் தங்கியிருந்த ஹோட்டல்லயே ரூம் எடுத்து ஆதிரியன கண்காணிச்சிக்கிட்டு இருந்திருக்கான். அவன் தான் பிரேக் வயரை பிடுங்கி இருக்கான்”

“முதல்ல மலர்விழிக்கு எத்தனை பேர் ஹெல்ப் பண்ணுறாங்க என்றே தெரியல. ஆபத்து எந்த வழில வேணா வரலாம்” என்றாள் நிலஞ்சனா.

ஆதிரியனுக்கு நடந்தது சாதாரண விபத்தல்லவே. ஊட்டி வரை சென்று ஆதிரியனை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்றால் இங்கு சென்னையில் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அல்லவா.

“இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்” என்ற வான்முகிலன்.

“நிறைய பேர் இருந்தா பக்காவா திட்டம் போட்டு பல வேலைகளை பார்த்திருப்பா. சின்ன டீம் தான். ரெண்டு மூணு பேர். இல்ல அதை விட குறைவு. ஆள் பலம் குறைவு. மூளை பலம் ப்ளஸ் அவங்க யார் என்று நமக்கு தெரியாது என்ற பலம். அவங்க பாக் ஸ்டோரி நமக்கு தெரியாது என்ற பலம். நம்மள பத்தி பக்காவா விசாரிச்சு சின்ன டீடைல் கூட தெரிஞ்சி வச்சிருக்காங்க என்ற பலம் தான்”

   

வான்முகிலன் பொறுமையாக யோசித்து நிதானமாக பேசவும் தான் நிலஞ்சனாவுக்கும் அது உண்மை என்று தோன்றியது.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் வான்முகிலன் ஏற்பாடு செய்த துப்பறிவாளர் உள்ளே வந்தார்.

“வாங்க மிஸ்டர் ரங்கநாதன். என்ன ஒரு போன் கூட பண்ணல”

“நான் ஒரு எஸைன்மெண்ட் எடுத்தா ரெண்டு நாள் கழிச்சி தான் வேலையே ஆரம்பிப்பேன் சார். நான் வேலை பாக்குறதே உங்களை போல பெரிய புள்ளிங்களுக்கு. உங்க எதிரி என்ன பின் தொடருறங்களான்னு செக் பண்ணிக்கத்தான் அந்த ரெண்டு நாளும்.

வேலைய முடிக்கிற வரைக்கும் யாருக்கும் போன் பண்ண மாட்டேன். ஏன் போன் யூஸ் பண்ண கூட மாட்டேன். நான் பாக்குற வேல கான்பிடன்சியல். நான் பாட்டுக்கு போன் பேசப் போய் அத யாராச்சும் ஒட்டுக்கேட்டா என் உயிருக்கும் ஆபத்து. உங்களுக்கும் பிரச்சினை” என்றார் ரங்கநாதன்.

அவர் அவ்வாறு கூறிய பின் நிலஞ்சனாவின் சிறு மூளையில் பொறி தட்டியது. அவர் பேசி முடிக்கும் வரையில் அமைதியாக கவனிக்கலானாள்.      

“நீங்க கொடுத்த தகவலை வச்சி காலேஜுக்கு போய் விசாரிச்சு மலர்விழியோட சொந்த ஊர் கோயம்புத்தூர் என்று கண்டு பிடிச்சேன். அங்க போய் விசாரிச்சதுல. மலர்விழிக்கு அம்மா இருந்திருக்காங்க அப்பா இல்ல.

டீடைலா சொல்லணும் என்றா… மலர்விழியோட அம்மா தேன்மொழிக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு. கல்யாணத்துக்கு மூணு நாள் இருக்கும் போது குலதெய்வ பூஜைக்காக கோவிலுக்கு போனவங்க வீடு திரும்பல. அவங்க காதலிச்சவங்களோட ஓடிப் போய்ட்டாங்க என்று ஊரே பேசிச்சு.

மூணு வருஷம் கழிச்சி நாலு மாத குழந்தையான மலர்விழியோட தான் அவங்க ஊருக்கே வந்திருக்காங்க. வந்தவங்க எங்க போனாங்க? என்ன நிலமைல இருந்தாங்க என்று விசாரிக்காம ஓடுகாலி என்று பட்டம் கட்டி நடத்தை கெட்டவ என்று முத்திரையும் குத்தி ஊரே அவங்கள ஒதுக்கி வச்சிட்டாங்க.

சொந்த ஊருல அவங்க பேர்ல வீடு இருந்தது. மாசாமாசம் செலவுக்கு பணம் வந்துகிட்டே இருந்தது. ஆதி குரூப்ல இருந்து தான் பணம் அனுப்பியிருக்காங்க. ஆதிசேஷன் தான் அனுப்பியிருக்கணும் என்று என் கணிப்பு. ஆதிசேஷன் தான் மலர்விழியோட அப்பா. தேன்மொழியோட கணவர்.

அதை பத்தி தேன்மொழி யார்கிட்டயும் சொல்லல. காரணம் ஆதிசேஷன் சமூகத்துல பெரிய அந்தஸ்துள்ள இருந்தாரு. ஆனா ஆதிசேஷன் தேன்மொழி எப்படி கல்யாணம் பண்ணார் எங்குறது ஒரே மர்மமாகவே இருக்கு” என்றார் துப்பறிவாளர்.

“அப்போ அந்த இடைப்பட்ட மூணு வருஷம் தேன்மொழிக்கு என்ன நடந்தது என்று கண்டு பிடிக்க முடியல என்று சொல்ல வாரீங்களா?”

“தேன்மொழி அவங்களாகவே போனாங்களா? கடத்தப்பட்டங்களா என்று தெரியல. காதலனை நம்பி போனவங்க ஏமார்ந்து நின்னப்போ ஆதிசேஷன் உதவி இருக்கலாம். இல்ல ஆதிசேஷன் கடத்தியிருக்கலாம்.

அத பத்தி தெரிஞ்சிக்க தேன்மொழி இப்போ உயிரோட இல்ல. ஆதிசேஷன் சொன்னா தான் உண்டு”

“ஆதி குரூப்ல இருந்து ஆதிசேஷன் நேரடியாக தேன்மொழிக்கு பணம் போட்டிருக்க மாட்டாரே. யாருக்கோ சொல்லி தான் போட்டிருப்பார். அந்தாள கண்டு பிடிங்க. முக்கியமா தேன்மொழி யாரை கல்யாணம் பண்ண இருந்தாங்க. அவர் தேன்மொழியோட சொந்தமா என்று கண்டு பிடிச்சி சொல்லுங்க. அதி முக்கியமா மலர்விழிக்கு எப்படி ஆதி குரூப்ல வேலை கிடைச்சது என்று கண்டு பிடீங்க” என்றாள் நிலஞ்சனா.

“என்ன இவள் சம்பந்தமே இல்லாமல் யார் யாரையோ பற்றி விசாரிக்க சொல்கிறாளே என்று பார்த்த வான்முகிலன் எதுவும் பேசாமல் துப்பறிவாளர் ரங்கநாதனனுக்கு விடை கொடுத்தான்.

அவர் சென்ற பின் தன்னையே பார்த்திருக்கும் வான்முகிலனை சீண்டினாள் நிலஞ்சனா.

“என்ன ஹபி அப்படி பாக்குறீங்க? ப்ளஷ் ஆகுதில்ல” கன்னங்களை உள்ளங்கையால் தேய்த்தவாறே வரும் புன்னகையை அடக்கினாள்.   

நிலஞ்சனா வேண்டுமென்றே தான் அவ்வாறு  செய்தாள். அவள் செய்தது அவளுக்கே வெட்கத்தை வரவழைத்திருந்தது.

இதுவரையில் இப்படியொரு நிலஞ்சனாவை பார்த்திராத வான்முகிலனும் தன்னை மறந்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

பாவம் ராம் தான் இவர்களுக்கு நடுவில் சிக்கி அங்கே இருக்கவும் முடியாமல், வெளியே செல்லவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தான்.

சுதாரித்து, தன்னை கட்டுக்குள் கொண்டு வந்த வான்முகிலன் “இல்ல உன் மண்டைக்குல போட்டு எதையோ உருட்டிக்கிட்டு இருந்த, நீயா சொல்லுவ என்று தான் பார்த்தேன்” என்றான்.

“அதானே நான் செல்லமா கூப்டுறது உன் காதுல விழாதே” அவனை செல்லமாகவே முறைத்தவள் “நீங்க சொன்ன பாயிண்ட் தான். மிஸ் மலர்விழிக்கு உதவி செய்யிற ஆட்கள் ஒருத்தர் ரெண்டு பேராக இருந்து, அதுவும் அவங்க ஆதி குரூப்லயே இருந்தா, ஈஸியா அவங்களால ஆதி பமிலி டீடைலும் மலர்விழிக்கு கிடைச்சிருக்கும், உதவியும் கிடைச்சிகிட்டே இருக்கும்.

மிஸ்டர் ஆதிரியன ஊட்டி வரைக்கும் பாலோ பண்ணி போனதாக சொல்லுறீங்களே? ஏன் அந்தாளு ஆதிரியன் கூடவே இருந்திருக்கக் கூடாது? ஆதிரியனும் ஒரு டிடெக்டிவ்வ ஏற்பாடு செஞ்சதாக சொன்னீங்களே அந்த டிடெக்டிவ் ஆதிரியன் கூட பேசினதை இந்தாளு ஒட்டுக் கேட்டிருக்கலாம், இல்ல எதேச்சையாக கேட்டிருக்கலாம். அதனால பிரேக் வயரை பிடுங்கி ஆதிரியன கொல்ல திட்டம் போட்டிருக்கலாம்”

“குட் பாய்ண்ட். அதுக்குதான் டிடெக்டிவ் கிட்ட அந்த டீடைல்ஸ் கேட்டியா?” சபாஷ் என்று மெச்சாமல் உன் அறிவை பத்திதான் எனக்கு ஏற்கனவே தெரியுமே என்ற பாணியில் பேசினான் வான்முகிலன்.

“மிஸ் மலர்விழிக்கு உதவி செய்யிறது யார் என்று கண்டு பிடிச்சாலே போதும், மோட்டிவ் தெரிஞ்சிடும். அப்பொறம் அவங்கள லாக் பண்ணுறது ரொம்ப ஈஸி” என்றாள் நிலஞ்சனா.

“ஆதிசேஷன் அவர் பொண்ணு மேல பாசத்தை பொழியிறாரு. அவ அவரை காவு வாங்க காத்திருக்கா. அது தெரிஞ்சாலே அவர் மலர்விழி போட்டு தள்ளுவாரு. ஆனா எனக்கு இருக்குற ஒரே சந்தேகம் அம்பது வயசுல ஒரு பொண்ண பெத்து, அத குடும்பத்துக்கும் உலகத்துக்கும் மறச்சி வளர்த்து இப்போ எதுக்கு பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு?

இந்த விஷயம் வெளிய தெரியக் கூடாதென்று அவரே மலர்விழி கொன்னிருப்பாரு. அவரே கூட்டிட்டு வந்ததுதான் எனக்கு இடிக்கிது” வான்முகிலன் யோசனைக்குள்ளாக நிலஞ்சனாவிடமும் பதிலில்லை.

ராமின் அலைபேசி குறுஞ்செய்தி வந்ததாக ஒலியெழுப்பவும் ராம் அலைபேசியோடு வெளியேறினான்.

வந்த குறுஞ்செய்தி அறியப்படாத அலைபேசி எண்ணிலிருந்து வந்திருந்தது. வந்தது ஒரு காணொளி. அது என்னவென்று திறந்து பார்த்த ராம் அதிர்ந்தான்.

எதோ ஒரு அறையில் மயக்க நிலையில் படுத்திருந்தாள் பவானி. சுயநினைவே இல்லாமல் இருக்கும் அவளை பார்த்து வாய்பொத்தி கண்ணீர் வடித்தான் ராம்.

“பவி எங்கடி இருக்க? உனக்கு என்னதான் ஆச்சு? யார் உன்ன இப்படி பண்ணாங்க?” மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் எழ, ராம் காணொளியை பார்த்து விட்டான் என்று தொழில்நுட்பம் காட்டிக் கொடுத்ததும் அந்த தெரியாத எண்ணிலிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.

உடனே இயக்கி காதில் வைத்த ராம் பதறியவாறே “ஹலோ” என்றான்.

“என்ன மிஸ்டர் ராம். உங்க காதலிய கண்குளிர பார்த்துட்டீங்களா? என்ன பண்ண போறீங்க? போலிஸுக்கு போக போறீங்களா? உங்க காதலிய காப்பாத்த போறீங்களா?” அந்த கீச்சுக் குரல் சத்தமாக சிரித்தது.

தன்னுடைய குரலை கண்டு பிடித்து விடக் கூடாதென்று குரலை மாற்றி எதோ ஒரு ஆப்பிலிருந்து பேசுகிறான் போலும். மிமிக்கிரி கார்ட்டூன் வாய்ஸ் போல் இருந்தது.   

“யார் நீ? என் பவிய என்ன பண்ண? உனக்கு என்னதான் வேணும்?” கேள்விகள் மட்டும் தான் ராமிடமிருந்து வந்தது.

“கடைசியா கேட்டது தான் சரியான கேள்வி. பவானி உயிரோட தானே இருக்கா. உயிரோட உனக்கு வேணும்னா நான் சொல்லுறத நீ பண்ணு”

“பவி எனக்கு வேணும். நான் என்ன வேணாலும் செய்யிறேன்” உடனே ராம் சரணடைந்தான்.

“வான்முகிலன். உன் பாஸ் வான்முகிலனோட ஆக்டிவிடீஸ் எல்லாம் எனக்கு உடனே தெரியணும்”

“புரியல. பாஸ் எங்க போறாரு வராரு என்று சொல்லனுமா? அவரோட பிஸ்னஸ் டீலிங் பத்தி சொல்லனுமா?” விவரமாகத்தான் கேட்டான் ராம்.

“அவன் பிஸ்னஸ் டீலிங் எனக்கெதுக்கு. பிளைட் க்ரஷ் பத்தி சொல்லு. அவன் மூவ் என்ன? ஆதிசேஷனுக்கு எதிரா அவன் ஏதாவது திட்டம் வச்சிருக்கானா? ஆதிசேஷன் குடும்பத்தை பத்தி அவனுக்கு என்ன தெரியும். குறிப்பா ஆதிசேஷன் பொண்ண பத்தி. எங்க கடகடன்னு சொல்லு பார்க்கலாம்” மிரட்டவெல்லாம் இல்லை. சாதாரண தொனியில் தான் கேட்டான்.

“பிளைட் கிராஷ் பத்தி போலீஸ் என்ன சொல்லுறாங்களோ அந்த அளவுக்குத்தான் பாஸுக்குத் தெரியும். பிளாக் பாக்ஸ் ரிப்போட் வந்தா தான் அடுத்து மூவ் பண்ணுவாரு. ஆதிசேஷன் ஐயா குடும்பத்தை பத்தி பெரிசா ஒன்னும் தெரியாது. ரீசன்ட்டா தான் அவரோட ஒரு அக்கா பொண்ண ஆதிசேஷன் ஐயாவோட பேரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு. இன்னொரு அக்கா பொண்ணுக்கு ஆக்சிடன்ட் ஆன ஆதிரியன் கூட நிச்சயம் பண்ணியிருக்காங்க.

ஆதிசேஷன் ஐயாவோட செக்கடரி மலர்விழி அவரோட சொந்த பொண்ணு எங்குறதே கொஞ்சம் நாளைக்கு முன்னாடி தான் தெரியும். அந்த மலர்விழியும் சாரும் ஒரே காலேஜ்ல படிச்சதாகவும் ப்ரெண்ட்ஸ் என்றும் சார் லாயர் கிட்ட சொல்லிக்கிட்டு இருந்ததை நான் கேட்டேன். அவ்வளவு தான் எனக்குத் தெரியும்”

“உருப்படியான எந்த தகவலும் இல்ல. பரவால்ல வேறேதாவது தகவல் கிடைச்சா உடனே எனக்கு கால் பண்ணி சொல்லணும் புரிஞ்சுதா. நீ என்கிட்ட பேசுறத பத்தி வேற யார்கிட்டயாவது மூச்சு விட்ட மவனே பவானி செத்துடுவா” சத்தமாக சிரித்தவாறே அலைபேசியை துண்டித்தது அந்த குரல்.

“எதுக்குமா இப்போ அவனுக்கு போன போட்டு பவானி உயிரோட இருக்குற வீடியோவை அனுப்பி தேவையில்லாம விசாரணை பண்ண” காபிக்கு சக்கரையை கலந்தவாறே மலர்விழியை கேட்டார் மலர்விழிக்கு உதவி செய்யும் அந்த நபர்.

“வான்முகிலன கல்யாணம் பண்ணி அவன டாச்சர் பண்ணலாமென்று திட்டம் போட்டா எனக்கு யாரோ ஸ்கெட்ச்சு போட்டுட்டாங்க. அந்த ஆதிரியனே டிடெக்டிவ் வச்சி என்ன பத்தி தெரிஞ்சிக்க முடிவு பண்ணிட்டான். நீங்க அவன் கூட இருந்ததால அவன அந்த டிடெக்டிவ் கிட்ட பேசினது காதுல விழுந்திருச்சு. அவன் வண்டி பிரேக் வயர பிடுங்கி ஆக்சிடன்ட் பண்ணதுல கோமாக்கு போய்ட்டான்.

என்ன சந்தேகக் கண் கொண்டு பார்த்த ஆதிரியனோட மெகா வேஷன் தான் வான்முகிலன். நான் ஆதிசேஷன் பொண்ணு என்று தெரிஞ்ச பிறகு அந்த வான்முகிலன் சும்மா இருப்பானா? கண்டிப்பா என்ன பத்தி தோண்டி துருவுவான். அங்க சுத்தி இங்க சுத்தி நம்ம கிட்ட வந்து நிற்க முன்னாடி நாம அவன் என்ன செய்யிறான் என்று தெரிஞ்சிக்கணும் அதுக்காகத்தான் ராம ஸ்பையா போட்டேன். பவானியை ஏன் இன்னும் உயிரோட வச்சிருக்குறீங்க என்று கேட்டீங்களே இப்படியொரு சிட்டுவேஷன்ல உதவும் என்று தான்” என்றாள் மலர்விழி.

“சரி தான். அந்த ராம் நமக்கு இன்போர்மேஷன் கொடுப்பானா?”

“பவானி உயிரோட இருக்கா என்று தெரிஞ்சதுக்கே பார்த்தீங்கள்ல காதல் மயக்கத்துல என்னமா புட்டு புட்டு வைக்கிறான். பவானியை காதலிக்கிறான் இல்ல, காப்பாத்தணும் இல்ல, நிச்சயமாக கொடுப்பான்” என்ற மலர்விழி பவானி எப்படி அவளிடம் சிக்கினாளென்று சிந்தித்துப் பார்த்தாள்.

வான்முகிலனும், ஆதிசேஷனும் ஒன்றாக இணைந்து விமானம் தயாரிக்க ஆரம்பித்த காலம் அது. இரண்டு நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஒன்றாக வேலை பார்த்த நேரமது.

இரண்டு நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு குடோனில் பொருட்களை கொண்டு வந்து வைத்தால் விம்.எம் நிறுவனத்தின் சார்பாக ராமும் பவானியும் சென்று சரி பார்ப்பார்கள். ஆதி குரூப் சார்பாக அநேகமாக மலர்விழி தான் வருவாள்.  

அவ்வாறு வந்து போகும் பொழுது தான் பவானியும் ராமும் காதலிப்பது மலர்விழியின் கண்ணில் விழுந்தது.

வான்முகிலனை பற்றியும், அவன் குடும்பத்தை பற்றியும், அவனை பற்றியும் விசாரித்து வைத்திருந்தவளுக்கு பவானி, ராம் காதல் கூட தனக்குதவும் என்று தோன்றியது.

விபத்து நடந்த நாளுக்கு முன் தினம் வான்முகிலன் இருந்ததோ பாக்யஸ்ரீயோடு டில்லியில். அந்த வாரம் முழுவதும் ராம் தான் இங்கிருக்கும் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான். பவானி அவளுடைய வேலைகளை பார்த்துக் கொண்டு ராமுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.

விபத்து நடந்த நாளுக்கு முன் தினம் ராம் ஆதி குரூப்புக்கு செல்ல வேண்டியிருந்தது. அதிகபட்ச வேலையின் காரணமாக மாலை செல்லலாம் என்றிருந்தவன் வேலைப்பளுவின் காரணமாக பவானியிடம் ஒழுங்காக பேசச் கூட முடியவில்லையே என்று அவளையும் அழைத்தான்.

“நிறைய வேலை பெண்டிங்ல இருக்கு பாஸ் வர்றதுக்குள்ள முடிக்கணும்” என்ற பவானி மறுத்து விட்டாள்.

வி.எம் நிறுவனத்திலிருந்து பவானி கிளம்பும் பொழுதே மாலை ஆறு மணி தாண்டியிருந்தது. வீடு இருக்கும் ஏரியாவுக்கு வந்தவளின் மனம் ஏனோ ராமை பார்க்க வேண்டும் என்று கூற, அவனை அழைக்க அலைபேசியை எடுத்தால் அலைபேசி உயிரில்லாமல் அணைந்து போய் இருந்தது.

சரி ராம் ஆதி குருப்பின் குடோனுக்குத்தானே சென்றான் என்று தன்னுடைய வண்டியில் கிளம்பி குடோனுக்கு சென்றாள் பவானி.

அங்கே எங்கு தேடியும் ராமில்லை. ஒரு இடத்தில் மலர்விழி யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவளிடம் உதவி கேட்கலாமென்று அவளை நெருங்கும் பொழுது மலர்விழி நாளை நிகழ்த்தவிருக்கும் விமான விபத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.

பவானி மறைந்து நின்று கவனிக்க, பயணிகள் செல்லும் விமானத்தில் ஆதிசேஷனின் இரசாயன தொழிற்சாலைக்கு சொந்தமான காற்றில் கலந்தால் உடனே தீப்பற்றும் ஒரு வகையான இரசாயனத்தை பயணிகள் பயணிக்கும் விமானத்தில் போக்குவரத்து செய்வதை பற்றியும், விமானம் வானில் இருக்கும் பொழுது இரசாயனம் காற்றில் கலந்து எவ்வாறு விமானம் தீப்பற்றும் என்பதை பற்றியும் கூறிக் கொண்டிருந்தாள்.

“அடிப்பாவி. எமகாதக்கியா இருப்பா போலயே” அலைபேசி கூட இல்லையே முதலில் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று பவானி திரும்புகையில் மலர்விழிக்கு உதவி செய்யும் நபர் பவானியின் தலையிலையே இரும்பு ராடால் அடிக்க பவானி மயங்கி சரிந்தாள்.

அந்த சத்தத்தில் அங்கு வந்த மலர்விழி தான் பேசியதை பவானி கேட்டு விட்டாள் என்று அறிந்தும் பவானியை கொல்ல வேண்டாமென்று ஆதி மருத்துவமனையிலையின் வி.ஐ.பி அறையில் அவளை அனுமதித்து அவள் கண் விழிக்காதபடி பார்த்துக் கொண்டிருக்கின்றாள். 

ஆதிசேஷனின் மூக்குக்கு கீழே இவ்வளவு பெரிய விசயத்தை செய்து கொண்டிருக்கிறாள் மலர்விழி.

பவானியின் அலைபேசி அவள் வீடிருக்கும் ஏரியாவில் அணைந்து போனதால் அவள் குடோனுக்கு வந்ததை தொழில்நுட்பத்தால் கண்டறிய முடியவில்லை. 

அவள் வண்டியையும், சீசீடிவி காட்ச்சிகளையும் மலர்விழி மற்றவர்களுக்கு கிடைக்காதபடி செய்து விட்டாள்.

Advertisement