Advertisement

அத்தியாயம் 18

ஆதிசேஷன் வீட்டில் காலை உணவுக்காக ஒவ்வொருவராக சாப்பாட்டு மேசைக்கு வந்து கொண்டிருக்க, ஆதிசங்கர் தனத்தை சக்கர நாட்காலியில் அமர வைத்து தள்ளியவாறே வந்து ஆதிசேஷனுக்கு வலது பக்கம் அமர்த்தினான்.  

அது தான் அவள் இடம். தனம் இல்லாததால் மலர்விழியை அங்கு அமர்த்தி உணவுண்டு கொண்டிருந்தார் ஆதிசேஷன். உரிமையுடையவள் வந்து விட்டாள். இனி மலர்விழியின் இடம் எங்கே?

காலை உணவுக்காக வந்த மலர்விழி தான் அமரும் இடத்தில் தனம் அமர்ந்திருப்பதை பார்த்து எங்கே அமர்வது என்று யோசித்தாள்.

“மலர்விழி வந்து உங்கப்பாக்கு பரிமாறு. அவர் வயிறார சாப்பிடட்டும்” மலர்விழியை பாராமலையே அழைத்தாள் தனம்.

“இந்தாளுக்கு சோறு போடவும், ஆயா வேலை பார்க்கவுமா? நான் இந்த வீட்டுக்கு வந்தேன். இப்போ இந்தம்மா என்ன செய்ய காத்திருக்காங்க?” தனம் கூறியதை செய்ய மாட்டேன் என்று மலர்விழியால் மறுக்கவும் முடியாது. அவள் செய்யப் போவது அவளது அப்பாவுக்கு. வேறு வேலை ஏவியிருந்தாலும் மலர்விழிக்கு தனம் பெரியம்மா அல்லவா. மறுக்க முடியுமா? அமைதியாக மலர்விழி ஆதிசேஷனுக்கு பரிமாறினாள்.

மாளவிகா ஆதித்ததோடு வந்து அமராமல் நின்றிருந்தாள். அவள் மாமியார் லதா நேற்றே அவளுக்கு இந்த வீட்டு விதிமுறைகளை பாடமெடுத்திருந்தாள்.

“கர்ப்பமாக இருக்குற நீ என்ன நின்னுகிட்டு இருக்க? உன் புருஷன் பக்கத்துல உக்காரு. நீ அவனை பாத்துக்க, அவன் உன்ன பாத்துக்கட்டும். உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல யாரும் தேவையில்லையே” தனத்தின் பேச்சுக்கு மறுபேச்சு உண்டா? மாளவிகா ஆதித்தோடு அமர்ந்து கொண்டாள்.

கனகவள்ளி, லதா, கயல்விழி மற்றவர்களுக்கு பரிமாற தனம் எல்லாவற்றையும் பார்வையாலையே அலசியவாறு தனது தட்டில் என்ன வைக்க வேண்டும் என்றும் கூறினாள்.

அனைவரும் வந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்து விட, ஆதிசேஷனுக்கு பரிமாறிய மலர்விழி அடுத்து என்ன செய்வது என்று பார்த்தாள்.  

“என்ன பாக்குற? உன் அப்பா சாப்பிட்டு முடிக்கும் வரையில் நீ அவர் பக்கத்துலயே நில்லு. அவருக்கு என்ன வேணும் என்று பார்த்து, பார்த்து எடுத்து வை” மிரட்டும் தொனியில் தனம் கூற, ஆதிசேஷன் எதுவும் பேசவில்லை.

“வெளிய தான் புலி வீட்டுல எலி போல” ஆதிசேஷனை கேலியாக பார்த்த மலர்விழி அமைதியாக நின்றிருந்தாள்.

“மலர் எனக்கு கொஞ்சம் சுடு தண்ணி கொடுமா… நீ பரிமாறினதால என்னமோ கொஞ்சம் அதிகமா சாப்பிட்டேன்” ஆதிசேஷன் மலர்விழியை பார்த்து புன்னகைக்க, மலர்விழியும் கொடுத்தாள்.

ஆதிசேஷன் கைபொறுக்கும் சூட்டை விட சூடு அதிகமாகத்தான் குடிப்பார் என்று மலர்விழிக்கு நன்றாகத் தெரியும். அவள் அவ்வாறு தான் கொடுத்தாள். 

தனம் அமர்ந்திருக்கும் பக்கமாக தண்ணீர் கிளாஸை வைத்திருந்த ஆதிசேஷன் எதையோ எடுக்க முனைய தண்ணீர் கிளாஸ் தனத்தின் மடியிலையே விழுந்தது.

சுடுநீர் பட்டு தனம் அலறியிருக்க வேண்டும். எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் “உங்கப்பாக்கு என்ன வேணும் என்று உன்ன தானே பார்த்து பரிமாற சொன்னேன். இப்போ பாரு என் கால வேக வச்சிட்டாரு” தனம் மலர்விழியை சாடிக் கொண்டிருக்க, அவள் பெற்ற புத்திரர்கள், மருமகள்கள் என்று அனைவருமே அவளிடம் ஓடி வந்திருந்தனர்.

தனக்கு ஒன்றுமில்லையென்று மடியிலிருந்த துணியை உதறி சிந்திய தண்ணீரை துடைத்துக் கொண்டவள், அனைவரையும் செல்லுமாறு கூறினாள்.  

ஆதிசேஷனின் புறம் குனிந்து “என்ன என் கால்கள் செயல் இழந்து போச்சா? என்னால நடக்க முடியுமான்னு சுடு தண்ணிய கொட்டி செக் பண்ணுறீங்களா? எனக்கு ஏற்கனவே ஹெல்த் இஸ்ஸு இருந்தது. வயசாகிருச்சில்ல. உங்க பொண்ணு வந்த நேரம் கொஞ்சம் ப்ளாட் ப்ரெஸ்ஸர் அதிகமாகி எனக்கு ஸ்ட்ரோக் வந்தது உண்மை. நான் படுத்த படுக்கையிலேயே இருக்கணும் எங்குறது தானே உங்க ஆச. அப்போ தானே நீங்க நினச்சபடி ஆடலாம். அதுக்காகத்தான் தினமும் வந்து என்ன பார்த்துட்டு போனீங்க.

உங்க மனச எதுக்கு நோகடிக்கணும். அதான் நீங்க என்ன நினைச்சீங்களோ அதையே டாக்டர் வாயால சொல்ல வச்சேன். அதுக்காக சட்டுனு அந்த டாக்டரை போட்டு தள்ள போய்டாதீங்க. இந்நேரத்துக்கு அவரு குடும்பத்தோட வெளிநாட்டுக்கு போய் இருப்பாரு. அவரை விடுங்க. நம்ம விசயத்துக்கு வாங்க.

நான் வீட்டுல இருந்தாலும் ஆபீஸ்ல என்ன நடக்குது என்று கண்காணிச்சுக்கிட்டு தான் இருக்கேன். உங்க பொண்ணு உங்ககிட்ட வேலைக்கு சேர்ந்ததுல இருந்தே நீங்க சரியில்ல.

ஆரம்பத்துல சின்ன பொண்ணு மேல ஆசைப்படுறீங்களோ என்ற சந்தேகம் தான் வந்தது.

ஆனா உங்க ஜாதக தோஷத்துக்கு உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பொறந்தே ஆகணும் என்று முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஜோசியர் சொன்னது ஞாபகம் வந்தது. அத சொல்லி முப்பது வருஷமாச்சே. இப்போ எதுக்கு பொண்ணு தேடுறீங்க? பழி கொடுக்கவா? என்று கூட சந்தேகம் வந்திருச்சு.

இல்ல. இது வேற என்று என் உள்மனம் சொன்னப்போ தான் நீங்க உங்க பொண்ண கூட்டிட்டு வந்தீங்க. அப்போ ஜோஸ்யக்காரன் சொன்ன ராசி நட்சத்திரத்துல ஒரு பொண்ண தேடி கல்யாணம் பண்ணி பொண்ணையும் பெத்திருக்குறீங்க.

உங்க சுயநலத்துக்காக நீங்க எந்த எல்லைக்கும் போவீங்க என்று தெரியும். இந்த தடவ என்ன பண்ணி வச்சிருக்கிறீங்க என்ற அதிர்ச்சில தான் மயங்கியே விழுந்தேன். அத எனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டேன்.

உங்கப்பா சாகும் போது எனக்கு பொறந்த பசங்களுக்கு மட்டும் தான் சொத்து சேரும். நான் எடுக்குறது தான் முடிவு என்று உயில் எழுதிக் கொடுத்தாரு. நான் உசுரோட இருக்குற வரைக்கும் உங்களால உயில்ல எந்த மாற்றமும் செய்ய முடியாது. நான் செத்துட்டா உங்க பொண்ணுக்கும் சொத்தை எழுதி வைக்கலாம்ல.

சுமங்கலியா போகுற எண்ணமெல்லாம் எனக்கு இல்லைங்க. உங்க விதவையா காலம் பூரா இருந்துடலாம் என்று நினைக்கிறேன் என்ன சொல்லுறீங்க?” மெல்லிய குரலில் ஆதிசேஷனுக்கு மட்டும் கேட்கும்படி பேசிய தனத்தை முறைத்துப் பார்த்தார் ஆதிசேஷன்.

தனம் எனும் தனலட்சுமி பல தொழில்களுக்கு அதிபராக இருந்த ரத்னதேவ் என்பவறின் இரண்டாவது புதல்வி. அறிவும் ஆற்றலும் நிறைந்தவள். தந்தையோடு சேர்ந்து தொழிலை பார்த்துக்கொள்ளும் சாமர்த்தியசாலியும் கூட. அக்கா ஆதிலட்சுமி சாந்தசுரூபி. வீட்டை கவனித்துக் கொண்டு, கடவுளை வணக்கியவாறும், வீணை வாசிப்பதும், பரதநாட்டியம் ஆடுவது என்று இருப்பவள்.

ஆதிசேஷனின் தந்தை ஆதிசிவன் மகனுக்கு பெண் கேட்டு வந்தது ஆதிலட்சுமியை தான். ஆதிலட்சுமி கனவுகளோடு திருமணத்துக்கு தயாராக, திருமண ஏற்பாடுகளும் மும்முரமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

திருமணமன்று காலை முகூர்த்தநேரம் நெருங்கும் பொழுது மணப்பெண்ணான ஆதிலட்சுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

சொந்தபந்தங்கள் மட்டுமல்ல, சமூகத்தில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள். நடிகர்கள் என்று நாட்டில் உள்ள முக்கியமான புள்ளிகள் அங்கே கூடியிருக்க, மணப்பெண் ஓடிப் போய் விட்டாள் என்று திருமணத்தை நிறுத்த முடியுமா?

உடனடியாக ஆதிசேஷன்-தனலட்சுமி திருமணம் நடந்தேறியது.

தன்னை அன்னையாக வளர்த்த அக்கா ஓடிப் போய் விட்டாள் என்பதை தனலட்சுமியால் நம்பவே முடியவில்லை. ஆதிசேஷனை திருமணம் செய்துகொள்ள முழு மனதோடு தானே சம்மதம் சொன்னாள். அவ்வாறிருக்க அவள் யாரை காதலித்தாள்? யாரோடு ஓடிப் போனாள்? அவ்வாறு போக வேண்டியதன் அவசியம் தான் என்ன? நான் இன்னாரை காதலிக்கிறேன் என்று கூறியிருந்தால் தந்தையே அவளுக்கு அவள் காதலிக்கும் பையனை திருமணம் செய்து வைத்திருப்பார். ஆனால் அவள் தான் யாரையும் காதலிக்கவில்லையே. எங்கே தவறு நடந்தது? புரியாமல் தவித்தாள்.

முதலிரவு அறையில் ஆதிசேஷன் அமைதியாக பேசினான். “என் அப்பா பார்த்த பொண்ணதான் நான் கல்யாணம் பண்ணிக்கணும். அதுதான் எங்க குடும்ப வழக்கம். உன் அக்காவை நான் பொண்ணு பார்க்க வந்ததோடு சரி. உன் அக்கா முகம் கூட எனக்கு ஞாபகம் இல்ல. திடிரென்று கல்யாண பொண்ணு மாறிப் போனதுல எனக்கு எந்த மனவருத்தமும் இல்ல. ஆனா உனக்கு குழப்பமும், வேதனையும் இருக்கும். எனக்கு நீதான் மனைவி. உன் முடிவுக்கு நான் மதிப்பு கொடுக்குறேன்” என்று தூங்கலானான்.

எதோ ஒரு காரணத்திற்காக அக்கா இந்த திருமணம் வேண்டாமென்று முடிவு செய்திருப்பாள். அதற்காக இவர் என்ன செய்ய முடியும் என்று நாளடைவில் தனலட்சுமி மனதை தேற்றிக் கொண்டு ஆதிசேஷனோடு குடும்பம் நடாத்த ஆரம்பித்தாள்.

அடுத்தடுத்து அவளுக்கு பிறந்த மூன்றும் புத்திரர்கள். அதுவும் அறுவை சிகிச்சை மூலம் தான் பிறந்தார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தனம் செத்துப் பிழைத்தாள். நான்காவது குழந்தைக்கு இடமே இல்லை. யோசித்து கூட பார்க்கக் கூடாது. தனம் உயிர்பிழைக்க மாட்டாள் என்பது தான் மருத்துவரின் எச்சரிக்கை.

காலங்கள் உருண்டோட குழந்தைகளும் வளர ஆரம்பித்து ஆதிசேஷன்-தனம் தம்பதியினர் எந்த பிரச்சினையுமில்லாமல் இல்லற வாழ்க்கையில் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ஆதிசேஷன் உள்நாட்டுலையே வணிகம் செய்கிறோம். வெளிநாட்டிலும் நாம் தொழில் தொடங்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்க, ஆதிசேஷனின் தந்தை ஆதிசிவன் ஜோசியத்தை நம்புபவர். எதை செய்தாலும் ஜோசியரை அணுகி நல்லநேரம், சகுனம் என்று பார்ப்பவர்.

புதிதாக தொழில் ஆரம்பிக்க ஜோசியரை அணுகிய பொழுது ஜோசியர் கூறியதாவது, இந்த வீட்டுல மகாலக்ஷ்மி இல்லையே. பெத்துக் கொடுக்க எஜமானியால முடியாது. இந்த நாள், நட்சத்திரத்துல பிறந்த பெண்ணால் பிறக்கும் பெண்ணால் சௌபாக்கியம் உண்டாகும். வெளிநாட்டுல தொழில் என்ன வானத்துலயே தொழில் செய்யலாம். உடனடியாக அப்படியொரு பெண்ணை பார்த்து உங்க மகனுக்கு திருமணம் செய்து வைங்க இல்லையென்றால் உங்க உயிருக்கே ஆபத்து. தொழில்ல பல அடிகள் விழும். பிரச்சினைக்கு மேல பிரச்சினைகள் வரும்”

ஜோசியர் சொல்லும் பொழுதே ஆதிசேஷனுக்கு நாற்பத்தி ஐந்து வயதாகியிருந்தது. இந்த வயதில் இரண்டாம் திருமணமா? திருமணம் தான் செய்ய வேண்டுமா? அந்த பெண் என் குழந்தையை சுமந்தாள் போதாதா? இந்த வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் அந்தஸ்து என்னவாகிறது? என்றெல்லாம் தந்தையிடம் கேட்டுப் பார்த்தான்.

“என்னடா ரொம்ப நல்லவன் போல நடிக்கிற? பொண்டாட்டி மேல ரொம்ப பாசமோ? ரத்னதேவோட மொத்த சொத்தையும் அடையணும்னா அவனோட ஒரு பொண்ண கொலை பண்ணனும். மூத்தபொண்ணுதான் அம்மாஜியா இருக்கா அவளை கட்டிக்க சின்னப்பொண்ணு அடாவடியா இருக்கா அவளை கொன்னுடலாம் னு சொன்னேன். நீ என்னடான்னா மூத்தவள கொன்னு சின்னவள கட்டிகிட்ட.

அந்த கழுத குடும்பத்த பாத்துகிறத விட்டு தொழில்ல மூக்கை நுழைகிறா. ஜோசியர் அவ ஜாதகம் நல்லா இருக்கு என்று சொன்னதால அவளை உசுரோட விட்டு வச்சிருக்கேன். இல்ல அவளை எப்பயோ போட்டு தள்ளியிருப்பேன்” ஆதிசிவன் கொலைவெறியில் கூச்சலிட்டார்.

“அமைதியா பேசுங்கப்பா. அவ காதுல விழுந்துட போகுது” ஆதிசேஷன் பொறுமையாக பேசினான்.

“ஜோசியர் என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி இருந்தாலே பண்ணியிருப்பேன். உனக்கென்ன” எரிச்சலானார் ஆதிசிவன். 

அன்று அவர்களுக்கு அருந்த தேநீர் கொண்டு வந்த தனத்தின் காதில் இவர்கள் பேசிய அனைத்தும் ஒன்று விடாமல் விழுந்து விட்டது. இவர்களை சும்மா விடுவதா? கொலை செய்து விடலாம் என்று தான் அவள் மனம் சொன்னது.

இவர்களை கொலை செய்து விட்டு தான் ஜெயிலுக்கு சென்றால் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வது? அக்கணம் அன்னையாக சிந்தித்தாள். இல்லை இவர்களை பழிவாங்க வேண்டியது வேறு வழியில். எந்த சொத்துக்காக ஆதிசேஷன் அலைகிறாரோ அவருக்கு எந்த சொத்தும் கிடைக்கக் கூடாது என்று முடிவு செய்தாள்.

ஆதிசிவன் காலையில் அருந்தும் கஞ்சியில் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை கலந்து அவரை படுக்கைக்கு தள்ளி அன்பான மருமகளாக அவரை கவனித்துக் கொண்டாள்.

தந்தையின் நிலையை பார்த்தே ஆதிசேஷனுக்கு உள்ளுக்குள் அச்சம் பரவ ஆரம்பித்திருந்தது. எப்படியாவது குறிப்பிட்ட நாள், நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை தேடி கண்டு பிடிக்க வேண்டும் என்று மும்முரம் காட்டலானான்.

இந்தப்பக்கம் தனம் தந்தையின் உதவியோடு ஜோசியரின் குடும்பத்தை கடத்தி வைத்தி ஜோசியரை ஆதிசிவனிடத்தில் அனுப்பி ஆதிசேஷன் தேடும் பெண் கிடைக்காவிட்டால் ஆதிசிவன், மற்றும் ஆதிசேஷன் இருவரின் உயிருக்கும் உத்தரவாதமில்லை. தொழிலும் சரியும் அதிலிருந்து தப்ப எல்லா சொத்தையும் தனத்தின் பெயரில் எழுதிவைக்குமாறு கூறும்படி உத்தரவிட்டிருந்தாள். ஆதிசிவனும் ஜோசியர் கூறுவதை நம்பி அவ்வாறே செய்தார்.

ஆதிசிவன் இறந்து விட ஜோசியரின் குடும்பத்தை விடுவித்த தனம் தன் அக்கா இறப்பதற்கு காரணமான ஜோசியரை கொன்றுவிட்டாள்.

அதன்பின் ஆதிசேஷன் தொழிலை பார்த்துக் கொண்டாலும் தனம் ஆட்டுவிக்கும் பொம்மை போல் தான் இருந்தார் ஆதிசேஷன். இதற்கெல்லாம் காரணம் தான் தேடும் பெண் கிடைக்காதது தான் என்று முழுமூச்சாக தேடலானார்.

ஆதிசேஷனால் தனத்தை கொலை செய்யவும் முடியவில்லை. தன் உயிருக்கு ஆதிசேஷனால் ஆபத்து வரும் என்று நன்றாகவே அறிந்திருந்த தனம் ஜோசியரை வைத்து அதற்கும் வழிவகுத்திருந்தாள். ஆதிசேஷன் தனத்தை கொலை செய்ய நினைத்து ஆதிசேஷனால் தனத்தின் ஒரு ஒரு தலை முடிக்கேனும் தவறு நிகழ்ந்தால் ஆதிசேஷனின் சாம்ராஜ்யமே அழிந்து விடும் என்று கூறி வைத்திருந்தாள். நன்றாக இருந்த தந்தை திடிரென்று படுத்த படுக்கையில் விழுந்து மரணித்த அதிர்ச்சியில் ஜோசியர் கூறியதை அப்படியே நம்பிய ஆதிசேஷன் தனத்தின் மேல் கைவைக்க அஞ்சினார்.

தனம் பக்கவாத்தில் விழுந்து விட்டாள் இனி எழுந்துகொள்ளவே மாட்டாள் என்றதும் இனி அவள் இறந்து விடுவாள். இயற்கையாகவே அவள் இறந்து விட்டால் எந்த பிரச்சினையுமில்லையென்று ஜோசியர் கூறி இருந்தமையால் தான் தான் இனி தன்னுடைய ராஜ்யத்துக்கு அரசன் என்று மார்தட்டிக் கொண்டார்.

தான் சரிந்ததும் வயதாகி விட்டது. சாவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுநாள் வரை ஆதிசேஷனின் சொத்துக்களுக்கே ஆதிசேஷனை பாதுகாவலனாக வைத்தாயிற்று. இனிமேலும் அவ்வாறுதான்.

படுத்த படுக்கையில் இருந்தவாறே தனம் சொத்துக்களை என்ன செய்ய வேண்டுமோ செய்து விட்டாள். இனி ஆதிசேஷனால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆதிசேஷன் மலர்விழியை வீட்டுக்கு அழைத்து வந்து பெரிய தப்பு பண்ணி விட்டார்.

மலர்விழியை பற்றி தனம் நினைத்திருந்தால் விசாரித்து அறிந்திருப்பாள். அது அவளுக்கு வேண்டாத வேலை. மலர்விழி நல்லவளோ, கெட்டவளோ ஆதிசேஷனின் வாரிசு. ஆதிசேஷன் அவளை ஏற்றுக்கொண்டு புதல்வர்களை பகைத்துக் கொண்டார்.

தனம் இறந்து விட்டால் வக்கீல் மூலம் சொத்துக்கள் தங்களுக்கு கிடைத்து விட்டது என்று அறிந்து கொண்டதன் பின் ஆதிசேஷனின் நிலைமை என்னவாகும்?

சொந்த வீட்டில் கூட இடமில்லை. சொல்லிக்கொள்ள சொந்தமும் இல்லை.

மதிப்பார்களா?

கவனிப்பார்களா?

ஓடி ஓடி பணிவிடைதான் செய்வார்களா?

     

கண்டுகொள்ள கூட மாட்டார்கள். அநாதை பிணமாகத்தான் போவார். அதுதான் தனத்துக்கு வேண்டும்.

தனம் முற்றாக குணமடைந்து விட்டாளா என்று சுடுநீரை ஊற்றி பார்க்கும் அளவுக்கு கல்நெஞ்சக்காரராக இருக்கும் ஆதிசேஷனுக்கு இந்த நிலைமை தேவை தான்.

ஆதிசேஷன் மலர்விழியை மகள் என்ற பாசத்தில் அவரோடு வைத்துக் கொண்டிருப்பதாக வீட்டில் உள்ள அனைவருமே நினைத்திருக்க, சுயநலத்தின் மொத்த உருவமான ஆதிசேஷன் காரணமில்லாமல் மலர்விழி தன்னோடு வைத்துக்கொள்ள மாட்டார் என்று தனத்துக்கு நன்றாகவே தெரியும். 

தனம் நினைத்திருந்தால் மலர்விழியை ஏற்றுக்கொண்டு அவளிடம் உண்மைகளை கூறி, அவள் பக்க நியாயங்களை கேட்டறிந்திருப்பாள். ஆனால் மலர்விழி ஒரு நச்சுப் பாம்பு. அவள் வந்தது ஆதிசேஷனை பழிவாங்க மட்டுமல்ல தன் குடும்பத்தையும் சேர்த்து பழி தீர்க்க என்று ஆதிரியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் ஆதிரியனின் அலைபேசி தரவுகளை கண்டறிந்து ஆதிரியன் மலர்விழியை பற்றி விசாரித்திருக்கின்றான் என்று புரிந்துகொண்டாள்.

ஆதிசேஷன் தன்னோட சுயநலத்துக்காக தன்னை வைத்திருக்கிறார் என்று அறியாமல் ஆதிசேஷனை பழிதீர்க்க துடிக்கும் மலர்விழி ஒருபக்கம்.

தன்னை பழிதீர்க்க துடித்துக் கொண்டிருக்கிறாள் தன் மகள் என்று அறியாமல் பாசம் காட்டுவது போல் நடிக்கும் ஆதிசேஷன் மறுபக்கம்.

இருவரின் உண்மைகளும் தெரிந்தும் “உங்க ஆட்டத்தை நீங்க ஆடுங்க நான் வேடிக்கை பார்க்கிறேன்” என்று அமர்ந்திருக்கிறாள் தனம்.

வான்முகிலன் வீட்டில் கம்பனிக்கு செல்ல வான்முகிலன் தயாராகி கீழே வந்தான். அவன் வரும் பொழுது நிலஞ்சனா அவனுக்கு முன்னதாகவே தயாராகி உணவு மேசையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுதுதான் குளித்திருப்பாள் போலும் விரித்துப் போட்ட கூந்தலில் பாதி முகம் மறைக்க, அதுவும் புடவையில் பக்கவாட்டு தோற்றத்தில் பார்க்க பாக்யஸ்ரீ நிற்பது போல் நின்றிருந்தாள். வான்முகிலனின் இதயம் ஒருமுறை நின்று துடிக்க படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தவன் அங்கேயே நின்றுவிட்டான்.  

சந்திரமதி தம்பியை புன்னகையோடு பார்த்தவாறு வந்து அமர, காஞ்சனாதேவி மகன் நிற்பதை பார்த்து வாய் திறக்க போனவள் அவன் பார்வை  நிலஞ்சனாவின் மீதிருப்பதி பார்த்து சந்தோசமாக வந்து அமர்ந்து கொண்டாள்.

வான்முகிலனை இன்னும் காணோம் என்று சிந்தித்தவாறே மாடியை ஏறிட்ட நிலஞ்சனா அவன் படிகளில் நிற்பதை பார்த்து கூந்தலை கொண்டையிட்டவாறே புன்னகைத்தாள்.

“என்ன அங்கேயே நின்னுட்டிங்க வாங்க சாப்பிடலாம். ஆபீஸ் கிளம்ப வேணாமா?”

இவள் என் ஸ்ரீ இல்லை நிலஞ்சனா. தனக்குள் கூறிக் கொண்டவன் அவளுக்கு எந்த பதிலும் கூறாமல் வந்து அமர  நிலஞ்சனா அவனுக்கு பரிமாறினாள்.

அதற்குள் காஞ்சனாதேவியும் சந்த்ரமதியும் தங்களுக்கு தானே பரிமாறிக் கொண்டிருக்க, “என்ன அத்த நான் பரிமாறியிருப்பேனே” என்றவாறே அமர்ந்து தனக்கு பரிமாறிக் கொண்டாள்.

“நீ உன்னையும் உன் புருஷனையும் பார்த்துக்கிட்டா போதும். எங்கள நாங்க பாத்துகிறோம்” என்றாள் காஞ்சனாதேவி.

“அதென்ன? புருஷன மட்டும் பார்த்துகிறது? வீட்டு வேலைகளை யாரு பாக்குறதாம்? வீட்டுக்கு வந்த மருமக இல்ல பார்க்கணும்” என்றவாறே வந்தாள் சாருமதி.

“ஏன் பாக்யஸ்ரீய வேலை வாங்கினது போல நிலஞ்சனாவையும் வேலை வாங்கலாமென்று நினைக்கிறியா? நீ அவளை என்னவெல்லாம் பண்ண என்று எனக்கு தெரியாது என்று நினைக்கிறியா? ஸ்ரீ சொல்லலைனா என்ன? இந்த வீட்டுல என்ன எல்லாம் நடக்குது என்று எனக்கு நல்லாவே தெரியும்”

“டேய் என்னடா பேசுற?” சாருமதிக்கு கோபமும், அதிர்ச்சியும் ஒன்றாகவே வந்தது. தம்பி இதுநாள் வரை அவளை எதிர்த்து பேசியதே இல்லை. என்றுமில்லாமல் இன்று எதிர்த்து பேசுவது புது மனைவியால் என்று எண்ணினாள். அதை வார்த்தைகளாக கூறியும் விட்டாள்.

“என்னடா பொண்டாட்டி வந்த உடனே தலை, கால் புரியாம ஆட ஆரம்பிச்சிட்டியா?”

“இங்க பாருங்க நீங்களாச்சு. உங்க தம்பியாச்சு. எதுவேனா பேசிக்கோங்க. நடுல வீணா என்ன இழுக்காதீங்க. நான் ஒரு லாயர். குடும்பம், சொந்தம் என்று பார்க்க மாட்டேன் கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன். இந்த பிரைன் வாஷ் பண்ணி வேல வாங்குறது. டிராமா பண்ணுறது எல்லாம் என் கிட்ட செல்லாது” சாருமதி மலர்விழிக்காக பேசியது கண்ணுக்குள் வந்து போக  யாரையும் கண்டு கொள்ளாமல் நிலஞ்சனா மிரட்டினாள்.

“என்னடா பொண்டாட்டிய வச்சி மிரட்டுறியா?” அதற்கும் சாருமதி வான்முகிலனை திட்டினாள்.

“அதான் உன் பொண்ணு கல்யாணம் முடிஞ்சிருச்சே. இன்னும் என்ன என் வீட்டுல பண்ணுற? உன் புருஷன் டில்லில தனியா இல்ல இருக்கான். அப்பொறம் அவன் இன்னொருத்திய வச்சிருக்கான் என்று கண்ண கசக்காம போய் உன் புருஷன கவனிக்கிற வழிய பாரு” கறாராக கூறிய வான்முகிலன்  நிலஞ்சனா பேசியதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

சொந்த மகள் மாளவிகாவின் திருமணத்திற்கே சாருமதியின் கணவன் கார்த்திக்பாபு விருந்தாளி போல் ஒருநாள் முன்னாடி வந்து கல்யாணம் முடிந்த அன்றே கிளம்பி சென்றிருந்தான். அதை தான் இவ்வாறு கூறி அக்காவை அச்சுறுத்தினான்.

கார்த்திக்பாபு சந்த்ரமதியோடு சண்டை போட்டாலும் இவ்வாறான தவறை செய்ய மாட்டான் என்று வான்முகிலன் நன்கறிவான். மாளவிகாவின் திருமணம் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதால் வேலையின் காரணமாகத்தான் கார்த்திகிபாபுவால் விடுமுறை எடுக்க முடியவில்லை.

சாருமதி இங்கிருந்தால் வீணான பிரச்சினைகள் உருவாகும் என்று அவளை அவள் வீட்டுக்கு அனுப்ப வேண்டி இது என் வீடு என்று அழுத்தமாக கூறினான். 

சாருமதிக்கு அவமானமாக இருந்தது. பெத்த மகளின் கையை அறுத்தது தம்பிக்கு தெரிந்தும் வீட்டில் சொல்லாமல் இருப்பது தன்னை காப்பாற்றவல்ல. மற்றவர்களுக்கு தெரிந்தால் மனமுடைந்து போவார்கள் என்ற ஒரே காரணத்துக்காகத்தான். இதில் அவன் புது மனைவி வக்கீலாக இருக்கின்றாள். அவளிடம் இவன் நிச்சயமாக வீட்டில் நடப்பவற்றை பகிர்ந்திருப்பான். அதனால் தான் இவள் தன்னை மிரட்டுகிறாள் என்று புரிந்துகொண்டாள்.

“என்னடா முகிலா என்னென்னமோ சொல்லுற?” தாங்களும் தான் வீட்டில் இருந்தோம். சாருமதி பாக்யஸ்ரீயை என்ன செய்தாள்? என்று புரியாமல் காஞ்சனாதேவி கேட்க, அதையே சந்த்ரமதியும் கேட்டாள்.

இப்போ அத பத்தி பேசி என்ன பிரயோஜனம். என் ஸ்ரீதான் இப்போ உயிரோடயே இல்லையே” கண்கலங்கிவனுக்கு நிலஞ்சனா தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினாள்.

“என்ன மன்னிச்சுடு முகிலா வீட்டுல இருந்தும் கவனிக்காம இருந்துட்டேன்” காஞ்சனாதேவி கவலையாக கூற, சாருமதியும் அக்காவை முறைத்தவாறு தம்பியிடம் மன்னிப்பு கேட்டாள்.

சாருமதி ஏடாகூடமாக பேசி வைப்பாள் என்று அறிந்து சந்திரமதி கவனமாகத்தான் இருந்தாள். அதையும் மீறி பாக்யஸ்ரீயிடம் பேசி வைத்திருக்கின்றாளே. தம்பிக்கு கல்யாணம் செய்து வைக்க இந்த பாடுபடுகிறாளென்று இவளுக்காக மனமிறங்கினால் தம்பி இந்த பெண்ணை காதலிப்பது தெரிந்தும் ஆதிசேஷனின் மகளை கட்டி வைக்க அமைதியாக இருந்த சுயநலக்காரி. இவள் இருந்தால் தம்பிக்கு பிரச்சினை கொடுத்துக் கொண்டே தான் இருப்பாள் முதலில் இவளை இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்று எண்ணினாள். 

நிலஞ்சனா சாருமதியை பேசும் பொழுது என்ன பெண் இவள் வந்த அன்றே இவ்வாறு பேசுகிறாள். அன்னையில்லாமல் வளர்ந்ததாலோ? என்று பார்த்த காஞ்சனாதேவி வான்முகிலன் பேசிய பின், தான் இருந்தும் சாருமதி வளர்ந்து நிற்கும் விதத்துக்கு நிலஞ்சனா பேசியதில் ஒன்றும் தப்பில்லை என்று எண்ணினாள்.

“நிலஞ்சனா மதியம் எங்கயும் வெளிய சாப்பிடாதீங்க. சமைச்சி ட்ரைவர் கைல கொடுத்து விடுறேன்” என்றாள் காஞ்சனாதேவி.

இருவரும் ஒரே இடத்தில் ஒன்றாக வேலை செய்கிறார்கள் இனிமேல் ஒன்றாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற உத்தரவு தான் அது. பாவம் காஞ்சனாதேவிக்கு தெரியவில்லை அவர்கள் ஏற்கனவே ஒன்றாகத்தான் உணவுன்கிறார்களென்று.

தலையசைத்து புன்னகைத்த நிலஞ்சனா தலை வாரவென்று அறைக்கு சென்றாள்.

வளமை போல் நீண்ட கூந்தலை போனிடைல் போட்டுக் கொண்டு நிலஞ்சனா வெளியே வந்தால் வான்முகிலன் கிளம்பி சென்றிருந்தான்.

“அடப்பாவி போறதோ ஒரே இடத்துக்கு, ஒரே வேலைக்கு. என்ன விட்டுட்டு போய்ட்டியே இரு உன்ன கவனிக்கிறேன்” என்று உள்ளே வந்து காஞ்சனாதேவியிடம் பேசி விட்டு தன்னுடைய வண்டியில் கிளம்பி நிறுவனத்துக்கு சென்றாள்.

Advertisement