Advertisement

அத்தியாயம் 17

தனதறையில் நிலஞ்சனாவுக்காக காத்திருந்தான் வான்முகிலன். அறை முதலிரவுக்காக எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டிருக்க, அறையில் இருந்த பாக்யஸ்ரீ மற்றும் தன்னுடைய திருமணம் புகைப்படத்தை பார்த்திருந்தான். 

இதே அறையில் தான் அவனுக்கும், பாக்யஸ்ரீக்கும் திருமணம் நடந்த பொழுது முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று அவன் பாக்யஸ்ரீக்காக ஆவலுடன் காத்திருந்தும் அவள் வரும் முன் தூங்கியிருந்தான்.

இன்று நிலஞ்சனாவுக்காக வான்முகிலன் ஆசையாசையாக ஒன்றும் காத்திருக்கவில்லை. அவளிடம் தெளிவாக பேசி புரிய வைக்க வேண்டிய விஷயங்கள் இருந்தன.   

  

நிலஞ்சனா அறைக்கு வர தாமதமாகும் ஒவ்வொரு வினாடியும் வான்முகிலனின் இதயம் பந்தயக் குதிரையின் வேகத்தில் துடித்தது.

தான் சொல்வதை நிலஞ்சனா புரிந்துகொள்வாள். ஏற்றுக்கொள்வாள் என்பதில் வான்முகிலனுக்கு எந்த சந்தேகமுமில்லை. எந்த குழப்பமும் வந்து விடக் கூடாது என்பதற்காக ஆரம்பத்திலையே பேசி விட வேண்டும் என்பது தான் அவன் முடிவு.

அவனை காத்திருக்க வைத்த நிலஞ்சனா ஒருவாறு பால் செம்போடு உள்ளே வந்தாள்.

வந்தவள் வான்முகிலனை கண்டு கொள்ளாது. பால் செம்பை மேசை மீது வைத்து விட்டு நேராக சென்றது கண்ணாடி மேசையின் மீது அருகே தான்.

அதற்குண்டான இருக்கையில் அமர்ந்து “தூங்குறதுக்கு எதுக்கு இவ்வளவு அலங்காரம் பண்ணங்களோ” பொறுமையாக தலையில் சூடியிருந்த மல்லிகை சரத்தில் குத்தியிருந்த கொண்டை ஊசிகளை ஒவ்வொன்றாக கழற்றலானாள்.

அவளையே பார்த்திருந்த வான்முகிலனுக்கு கோபம் வரவில்லை. தான் பேசும் முன்பாகவே அவள் நிலைமையை புரிந்து கொண்டாலென்று ஆனந்தம் அடைந்தான்.

“நான் வேணா ஹெல்ப் பண்ணவா?” நிலஞ்சனா புரிந்து கொண்டாள் என்ற நிம்மதியில் அவள் அருகே வந்திருந்தான் வான்முகிலன்.

“ஓஹ்… சுவர்” கண்ணாடி வழியாக அவனை ஏறிட்டு அனுமதி கொடுத்தவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

வான்முகிலன் நிலஞ்சனாவை நெருங்க, நெருங்க நிலஞ்சனாவுக்கு உள்ளுக்குள் பதற ஆரம்பித்தது.

மனதுக்குள் காதலை வைத்துக்குக் கொண்டு முகத்தில் கொஞ்சம் கூட தெரியாமல் எவ்வாறு நடிப்பது? இத்தனை நாட்கள் சமாளித்து விட்டாள். அதுவும் அவன் மனைவி என்றான பின் மனதுக்குள் இனம் புரியாத பதட்டம் கூடியிருந்தது.

முகம் மாறுவதை மறைக்க முடியாமல் கண்ணாடி வழியாக அவனை பார்த்து புன்னகைத்து வைத்தவளுக்கு மெதுவாக வியர்க்க ஆரம்பித்திருந்தது.

பொறுமையாக கொண்டை ஊசிகளை கழற்றியவாறு “தேங்க்ஸ்” என்றான் வான்முகிலன்.

“அத நான் தானே சொல்லணும். நீங்க தானே எனக்கு இப்போ ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க” அவன் எதற்காக நன்றி சொன்னான் என்று நன்றாக புரிந்தாலும் நிலஞ்சனா வேண்டுமென்றே புரியாதது போல் பேசினாள்.

“இல்ல நான் சொல்ல வந்தது” என்று வான்முகிலன் ஆரம்பிக்க

“இந்த நெக்லஸையும் கொஞ்சம் கழட்டி விடுங்க” உத்தரவிட்டாள்.

வான்முகிலனின் முடிவு என்ன என்று நிலஞ்சனாவுக்கு நன்றாகவே தெரியும். ஒரு தடவை என்ன பல தடவைகள் அவன் மனதில் பாக்யஸ்ரீக்கு மட்டும் தான் இடம். வேறு யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறி விட்டான். தான் அறைக்குள் வந்த உடனே அதை பற்றி தான் பேசப் போகின்றான். கடைசிவரை காதலிப்பவனை இரயில் சிநேகிதன் போல் பார்த்தவாறு காலம் கடத்த முடியுமா? அவனை விலக்கி வைப்பதும், விலகி நிற்பதும் இதற்கான தீர்வல்லவே. நான் தான் அவனுடைய மனைவி. அவன் மீது எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அவனறியாமல் அதை அவனுக்கு புரிய வைக்க வேண்டும். புரிந்து கொண்டால் தான் அவன் தன்னை ஏற்றுக்கொள்வான் என்று நிலஞ்சனாவும் நன்கு அறிவாள். 

அவனை புரிந்து வைத்திருக்கும் அவளுக்குத் தெரியாதா? அவனை எவ்வாறு கையால வேண்டும் என்று?

மறுக்காமல் சரியென்று உதவி செய்ய நெக்லசின் கொக்கியை கையால் கழற்ற முயன்றவன் முடியாமல் வாய் வைத்து கழற்ற முயன்று நிலஞ்சனாவின் கழுத்திலையே முத்தம் வைத்தான்.

அதை இருவருமே எதிர்பார்க்கவில்லை. நிலஞ்சனாவிக்குள் மின்சாரம் பாய, உடல் கூசி சிலிர்த்தாள்.

இதற்கு முன் வான்முகிலன் நிலஞ்சனாவை தொட்டுப் பேசியதே இல்லையென்று சொல்ல முடியாது. அப்பொழுதெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாதவளின் மனதில் எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. இன்று அவள் அவனது மனைவி. காதல் ஆசை வேறு எட்டிப் பார்த்திருக்க, ஆட்டம் கண்ட உடல் அவளை காட்டிக் கொடுத்திருந்தது. 

சட்டென்று அவளை விட்டு விலக்கியவன் “சாரி. தவறுதலா, தெரியாம” என்ன சொல்வது என்று அவளையே கண்ணாடி வழியாக பார்த்திருந்தான்.

பெருமூச்சு விட்டு தன்னை சமநிலைக்கு கொண்டு வந்து எழுந்து அவன் அருகில் நெருங்கி வந்தவள் “இன்னக்கி நமக்கு பஸ்ட் நைட். உங்க அவசரம் புரியுது. வாங்க…” என்றவள் கட்டில் பக்கம் நடக்க,

“நிலஞ்சனா… என்ன விளையாடுறியா? விளையாடுற நேரமா இது?” என்ன ஆச்சு இவளுக்கு புரியாமல் குழம்பினான் வான்முகிலன்.

“நான் விளையாடல. தெளிவாத்தான் பேசுறேன்” நிதானமாக அவனை திரும்பிப் பார்த்தாள்.

“உனக்கு ஏற்கனவே தெரியும். நான் என் ஸ்ரீய தவிர யாரையும் நினச்சிக் கூட பார்க்க மாட்டேன்னு. உன் கிட்ட அன்னைக்கே நான் தெளிவா சொல்லிட்டேன். இன்னைக்கும் அதையே தான் சொல்லுறேன்”

“என்ன சொன்னீங்க? பாக்யஸ்ரீ தான் என் மனைவி. பிலாஹ்… பிலாஹ்… பிலாஹ்… என்று என்னென்னமோ சொன்னீங்களே அதுவா?” நாடியில் கைவைத்து யோசிப்பது போல் பாவனை செய்தாள் நிலஞ்சனா.

“உனக்கு தான் ஞாபக சக்தி அதிகமாச்சே. நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் ரிப்பீட் பண்ண அவசியமில்லன்னு நினைக்கிறன்” எரிச்சலாக மொழிந்தான் வான்முகிலன்.

“ஆ…. எல்லாமே ஞாபகம் இருக்கு. பாக்யஸ்ரீ உங்க மனைவி என்று சொன்னீங்க. அவங்க உங்க முன்னாள் மனைவி. இப்போ நான் தான் உங்க மனைவி. அப்போ நீங்க சொன்னது எல்லாமே மாறி என்னை தானே சேரும்?” புருவங்களை உயர்த்தி அவனை கேட்டாள்.

பல்லை கடித்த வான்முகிலனோ “உன் அறிவை வச்சி என் கிட்ட விளையாடனும் என்று நினைக்காத. என் மனசுல உனக்கு என்னைக்குமே இடம் கிடையாது. என் ஸ்ரீயோட இடத்தை ஒரு காலமும் நீ நிரப்ப முடியாது” திட்டவட்டமாக கூறினான்.

“ஓகே… அப்போ நான் என் வீட்டுக்கு கிளம்புறேன். போக முன்னால உங்க அம்மாகிட்ட எல்லா உண்மையையும் சொல்லிட்டு கிளம்புறேன்”

கதவை நோக்கி நடந்தவளை இழுத்து தன்புறம் திருப்பிய வான்முகிலன். “என்ன வெறுப்பேத்துறியா? உனக்கு என்ன தான் வேணும்?” அன்னைக்காகத்தானே இவளை திருமணமே செய்து கொண்டேன். தூங்கும் அன்னையை எழுப்பி இவள் உண்மையை கூறுகிறேன் என்று ஏடாகூடமாக சொல்லப் போய் அன்னைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று பதறினான். 

“உங்களால உங்க அம்மாவ சமாதானப்படுத்த முடியல. அவங்க மனசு நோகக் கூடாது என்று என் கழுத்துல தாலி கட்டிடீங்க. எக்சுவலி அந்த மலர்விழிகிட்ட இருந்தும், ஆதிசேஷன் கிட்ட இருந்தும் தப்பிக்கணும். அதுவும் ஒரு காரணம். ஒரு காரணம் என்ன? அது தான் முக்கியமான காரணம்.

நானும் உசுருள்ள பொண்ணு தான். பொம்மை இல்ல. எனக்கும் ஆசாபாசம் இருக்கு. கல்யாணம் பண்ணிக்கணும். கணவனையே காதலிக்கனும். குழந்தை பெத்துக்கணும். எனக்கென்று சில கனவு இருக்கு. எந்த உணர்ச்சியுமில்லாத ஒரு ஜடம் போல உங்க கூட வாழ முடியாது.

அதான் இப்போவே உங்க அம்மா கிட்ட உண்மைய சொல்லி வீட்டை விட்டு போய்டலாமென்று கிளம்புறேன்” நிலஞ்சனா போகிறேன் என்று கூறினாலும் வான்முகிலன் பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக்கொள்ள நினைக்கவேயில்லை.

“உண்மைதான் திருமணம் என்பது இருவர் சம்பந்தப்பட்டது. நான் என் ஸ்ரீயை நினைத்துக் கொண்டு வாழ்ந்து விட முடிவு எடுத்து விட்டேன். அது என் தனிப்பட்ட விருப்பம். என் இறுதி மூச்சு வரையில் ஸ்ரீயின் நினைவுகளோடு தனியாக இருந்திருக்க வேண்டும். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் என்னை இவளோடு இணைத்து விட்டது. இவளுடைய ஆசை என்ன? கனவு என்ன? லட்ச்சியம் என்ன? என்று ஒன்றும் தெரியாமல் அன்னை கூறியதற்காக, ஆதிசேஷன் மற்றும் மலர்விழியிடமிருந்து தப்பிக்க இவளை பயன்படுத்திக் கொண்டேன். இவள் வாழ்க்கைக்கு நானல்லவோ பொறுப்பு. இவளுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறதே. அதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையே” என்று வான்முகிலனின் ஒரு மனம் நிலஞ்சனாவின் கூற்றை ஏற்று அவளுக்காக வாதித்துக் கொண்டிருக்க,

மறுமனமோ “அம்மா சொன்ன உடன் இவள் எதற்காக இந்த திருமணத்திற்கு சம்மதித்தாள்? மறுத்திருக்க வேண்டியது தானே. தவறு இவள் மீது தான். அம்மா கையை பிடித்து அழைத்த உடன் மணவறையில் வந்து அமர்ந்து விடுவாளா? முடியாது என்று அந்த இடத்திலிருந்தே செல்ல வேண்டியது தானே. என் அம்மா இவளுக்கு யாரோ தானே. நான் என் அம்மாவின் மனம் நோகக் கூடாது என்று நினைப்பதும் இவள் நினைப்பதும் ஒன்றா? இவள் முடியாது. மாட்டேன் என்று கிளம்பி சென்றிருந்தால் அம்மாவை சமாதானப்படுத்தியிருப்பேன். நிலைமையை எடுத்துக் கூறி புரிய வைத்திருப்பேன்” என்றது.

மனம் நினைத்ததை மனதுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே. அதை அவளிடமே கூறி அவளை குற்றம் சாட்டினான் வான்முகிலன்.

“எனக்குத்தான் பெத்தவங்க இல்ல. இல்லாதவங்களுத்தான் அருமை அதிகம். என்ன பொண்ணு போல பாத்துக்கிறேன்னு சொன்னாங்க. அவங்க மனச நோகடிக்க என்னால முடியல. என்ன குத்தம் சொல்லுறீங்க? உங்கம்மா கேட்டப்போ எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லைனு சொல்ல வேண்டியது தானே. உண்மைய சொல்ல உங்களுக்கு அப்படியென்ன வலிக்குது?” நிலஞ்சனா வான்முகிலனை முறைத்தாள்.

தன்னுடைய அன்னை இவளுக்கு யாரோ? எவளோ? மகள் போல் பார்த்துக்கொள்கிறேன் என்றதற்கே மனம் நோகக் கூடாது என்று எண்ணுகிறாள். நான் பெற்ற மகன். என் அன்னையின் மனம் நோகும்படி நடந்துகொள்வேனா? என்ன பேசுகிறாள்?

நிலஞ்சனா கேட்ட கேள்விக்கு அதில் கூறாமல் “எங்கம்மாவுக்காகத்தானே என்ன கல்யாணம் பண்ண? இப்போ மட்டும் வீட்டை விட்டு போனா எங்கம்மா மனசு நோகாதா?”

நீ தான் அதி புத்திசாலி என்று நினைப்போ? யாராக இருந்தாலும் வீக்னஸ் என்ற ஒன்று இருக்கும். உன் வீக்னஸ் பாசம், இல்ல அம்மா, இல்ல தாய்பாசமா? எப்படி வேணா இருக்கட்டும். அதை வைத்தே உன்னை என் கூட வைத்துக்கொள்கிறேன்” என்று சுயநலமாக சிந்தித்தான் வான்முகிலன்.

பாவம் அவனுக்குத் தெரியவில்லை. நிலஞ்சனா காலையில் கல்யாண மண்டபத்தில் நடந்ததை நினைவு கூர்ந்ததே வான்முகிலன் இப்படித்தான் பேசுவான், சொல்லப்போனால் இப்படித்தான் பேச வேண்டும் என்றுதான். அவள் நினைத்தது போலவே அவன் பேசினான்.

“அதுக்காக நான் உங்க கூட இருக்க முடியுமா? உங்க கூட இருக்கணும்னா நீங்க என்ன அஜஸ்ட் பண்ணி தான் ஆகணும். அது உங்களால முடியாது.  அத விட பெட்டர் நீங்களே உங்க அம்மா கிட்ட எல்லா உண்மையையும் சொல்லுறது. என்னால உங்கம்மா மனச நோகடிக்க முடியாது. அந்த கில்டி பீலின்ல என்னால வீட்டை விட்டும் போக முடியாது. நீங்களே போய் சொல்லிடீங்கன்னா நான் நிம்மதியா இந்த வீட்டை விட்டு கிளம்பிடுறேன்” உள்ளுக்குள் புன்னகைத்தாள்.

சற்று முன் காஞ்சனாதேவியிடம் உண்மையை கூறி  வீட்டை விட்டு கிளம்புவதாக கூறியவள், இப்பொழுது தன்னால் உண்மையை கூறி காஞ்சனாதேவியின் மனதை புண்படுத்த முடியாது. உண்மையை நீயே கூறு என்று வான்முகிலன் ஒருகாலமும் செய்யத் துணியாத காரியத்தை பற்றி பேசுகிறாளென்று வான்முகிலனுக்கு புரியவே இல்லை.  

“அங்க சுத்தி இங்க சுத்தி வீட்டை விட்டு போறதுலையே குறியா இருக்கா” பல்லைக் கடித்த வான்முகிலன் “இல்ல நான் உனக்காக சில விஷயங்களை விட்டுக்கொடுக்குறேன்” மனமுவந்து தான் கூறினான்.

“சரி வாங்க வந்து தூங்குங்க” நிலஞ்சனா கட்டிலில் போய் அமர்ந்தாள்.

“இல்ல நான் சோபால தூக்குறேன்” என்றான்.

“இன்னக்கி மட்டுமா? டைலியும் தூங்க போறீங்களா? இல்ல  ஏன் கேக்குறேன்னா சோபால கால குறுக்கிக்கிட்டே தூங்கணும். அசௌகரியமா இருக்கும். இல்ல கீழ தூங்குறேன். அது இது என்று ஸீன் கிரியேட் பண்ணாதீங்க. அத்த வந்து பார்த்து அது வேற பிரச்சினையாக போகுது. நான் ஒன்னும் உங்க மேல கால, கைய போட மாட்டேன் பேசாம வந்து தூங்குங்க. பிடிவாதம் பிடிச்சீங்க. நான் பாட்டுக்கு உங்கம்மா ரூம்ல போய் படுத்துப்பேன். அப்பொறம் வரும் பிரச்சினைகளை நீங்க பாத்துக்கோங்க” தலையணையை தட்டிப் போட்டு அவன் வருகிறானா என்று ஓரக்கண்ணால் பார்த்தவாறே அமைதியாக மிரட்டினாள்.  

“ராட்சசி” மெதுவாக முணுமுணுத்த வான்முகிலன் அமைதியாக மறுபுறம் வந்து அமர்ந்தான்.

“விட்டா இவரு அந்த மலர்விழி கழுத்துல தாலி கட்டியிருப்பாரு. இந்நேரம் இங்க அவ இருந்திருப்பா. நான் வந்து மாட்டிகிட்டேன்” அவனுக்கு கேட்க வேண்டி கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்தாள்.

“என்ன சொன்ன?”

“குட் நைட் சொன்னேங்க. இழுத்து போர்த்திக்கிட்டு தூங்குங்க” நிலஞ்சனாவுக்கு ஏதாவது அவனிடம் பேசிக் கொண்டு இருக்க வேண்டும். அவன் மனம் விட்டு பேசினால் போதும். உடனே ஒன்றும் அவன் சகஜமாக பேசி விட மாட்டான். என்னை பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டால் போதும் என்று கூறியவைகள் தான் அவளுக்குத் தெரியும். இனி அவனை பேச வைப்பது அவள் வழி.

“அப்போ நீதான் மலர்விழிய அரெஸ்ட் பண்ண ஏற்பாடு செஞ்சி கல்யாணத்த நிறுத்தினியா?” நிலஞ்சனா கல்யாணத்தை நிறுத்தி இருப்பாள் என்று எண்ணியவனுக்கு அவள் அவனை திருமணம் செய்து கொள்ளத்தான் மலர்விழியுடனான திருமணத்தை நிறுத்தினாள் என்று சந்தேகம் வரவில்லை. வந்திருந்தால் சண்டை போட்டிருப்பான். பேச்சும் திசை மாறியிருக்கும்.  

“நான் பிளான் பண்ணது உங்கள அரெஸ்ட் பண்ண” அவன் முகம் பார்த்து சாதாரணமாகத்தான் கூறினாள் நிலஞ்சனா.

“என்ன?” வான்முகிலன் அதிர்ச்சியடையவில்லை. இவளுடைய திட்டம் தான் என்னவென்று ஆவலாகத்தான் கேட்டான்.

“மிஸ் மலர்விழி உங்கள லவ் பண்ணுறதால கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்களோ என்று தெரிஞ்சிக்கத்தான் மிஸ்டர் ஆதிசேஷன் அவர் பொண்ணு கூட இருக்க சொன்னதும் சரியென்று சொன்னேன்.

“என்ன பேசுற? அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல” வான்முகிலன் உடனே மறுக்க,

“நீங்க அவங்கள லவ் பண்ணல ஓகே. அவங்க உங்கள காலேஜ்ல வச்சி லவ் பண்ணதாக நீங்க சொன்னீங்களே. ப்ரொபோஸ் பண்ணதாக சொன்னீங்களே. அதே லவ் அவங்களுக்கு இன்னமும் இருந்தா அவங்க உங்கள புரிஞ்சிகிட்டு உங்க கூட…” வான்முகிலன் முறைக்கவும் “சரி விடுங்க…

ஆனா மலர்விழி உங்க மேல பகையோட இருக்கா என்று உறுதியான பிறகு உங்க கல்யாணம் மலர்விழியோட நடக்கக் கூடாது. எப்பவுமே நடக்கக் கூடாது என்றா உங்கள போலீஸ் அரெஸ்ட் பண்ணனும். என்ன கேஸ்ல உள்ள போடலாம் என்று யோசிச்சேன். பொம்பள கேஸ்…” என்று இழுத்தவள் வான்முகிலன் அவளை கொலைவெறியோடு பார்ப்பதை பார்த்து

“சும்மா சொன்னேன்…. அதான் இருக்கே விமான விபத்து கேஸ். திருமணம் நிகழ ஐந்து நிமிடங்கள் இருக்கும் பொழுது மண்டபத்துக்குள் நுழைந்து மணப்பெண் மலர்விழியின் கழுத்தில் தாலி கட்ட விடாமல் பிரபல தொழிலதிபர் வான்முகிலனை கைது செய்த போலீஸ் என்று பிரேக்கிங் நிவ்ஸ் வந்திருக்க வேண்டியது. பாவம் மலர்விழி தூக்கிட்டு போய்ட்டாங்க” கொஞ்சம் நக்கல் கலந்த குரலில் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள்.

“என்ன அரெஸ்ட் பண்ண சொல்லி போலிஸுக்கு தகவல் சொல்லியிருந்தா மலர்விழி அரெஸ்ட் பண்ணிக்க கொண்டு போன கொஞ்சம் நேரத்துலையே மண்டபத்துக்கு போலீஸ் வந்திருக்கணுமே. வரலையே” உன் திட்டம் என்ன ஆனது? மலர்விழி எவ்வாறு கைது செய்யப்பட்டாள் என்று தான் கேட்டான்.

“நான் ராம வச்சி டம்மி போலீசை ஏற்பாடு செஞ்சி வச்சிருந்தேன். உள்ள வந்தது நிஜ போலீஸ். மலர்விழி கூட்டிட்டு போய்ட்டாங்க. ராம வரவேணாம்னு சொல்லிட்டேன்”

“ஆமா மலர்விழிய எதுக்காக போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்க?’

“இந்த நேரத்துல அவ பேச்சு ரொம்ப முக்கியம்? நான் இவரை காப்பாத்த எவ்வளவு பெரிய திட்டம் போட்டிருந்தேன். ஒரு நன்றி கூட இல்ல” வான்முகிலன் காதுபடவே முணுமுணுத்தாள் நிலஞ்சனா. காரியாலயத்தில் வைத்து இந்தக் கேள்வியை கேட்டிருந்தால் கூறும் பதிலும், வீட்டில் மனைவியாக கூறும் பதிலும் வேறு தானே அதை உணர்த்தத்தான் இப்படி கூறினாள். 

“உன் அறிவுக்கு அது ஒன்னும் அவ்வளவு பெரிய திட்டம் ஒன்றுமில்லை. நன்றி வேற சொல்லனுமா?” அவள் மீதிருக்கும் கோபத்தை இவ்வாறு தீர்த்துக் கொண்டான். நிலஞ்சனா யார் என்றே வான்முகிலனுக்கு தெரியாது. இதில் அவள் காதல் எங்கே தெரிய போகிறது? உணர்ந்துகொள்வானா? புரிந்து தான் கொள்வானா?

நிலஞ்சனா அவன் கோபத்தை பொருட்படுத்தாது. “மலர்விழிய கொலை வழக்குல அரெஸ்ட் பண்ணதாக தகவல். ஜாமீன்ல வெளிய வந்து ஆதிசேஷன் ஐயா வீட்டுல இருக்காங்க. இந்த தகவல் போதுமா? இல்ல இன்னும் ஏதாவது வேணுமா?” கிண்டல் தான் செய்தாள்.  

“இப்போ எதுக்கு அவளை பத்தி பேசிகிட்டு பேசாம தூங்கு” மலர்விழியை ஆதிசேஷன் வெளியே கொண்டு வந்து விடுவார் என்று தெரிந்து தானே நிலஞ்சனாவை திருமணம் செய்து கொண்டான். அதை நினைக்கையில் தன் மீதுதான் அவனுக்கு கோபம் வந்தது. எரிச்சலை நிலஞ்சனா மீது காட்டியவன் தலையணையில் தலை வைத்தான்.

வான்முகிலன் நிலஞ்சனாவுக்கு முதுகு காட்டியவாறு தூங்க முயன்று கொண்டிருக்க, நிலஞ்சனா அவன் முதுகை பார்த்தவாறு யோசித்துக் கொண்டிருந்தாள்.

“இன்னைக்கு எப்படியோ பேசி சமாளித்து விட்டாச்சு. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி திரும்ப ஸ்ரீ தான் என் பொண்டாடி. உனக்கு என் வாழ்க்கைல இடமே இல்லனு பேச முன் ஏதாவது செய்யணும். என்ன செய்யலாம்?” என்று யோசித்தவளின் கண்களில் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த வான்முகிலன் மற்றும் பாக்யஸ்ரீயின் திருமண புகைப்படம் விழுந்தது.

நினைவுகள். நம் வாழ்வில் மறக்க முடியாதவைகள் நினைவுகள். இன்பமான நினைவுகளை நாமே ஞாபகமூட்டி அப்பப்போ பார்த்துக்கொள்கிறோம். கசப்பான நினைவுகள் தானாகவே நமக்கு ஞாபகம் வந்து விடும். 

காதல் உணர்வுபூர்வமான நினைவு. அதனால் தான் வான்முகிலனால் பாக்யஸ்ரீயை மறக்க முடியவில்லை. பாவமாய் அவனை பார்த்தவள் “ஆமா அந்த மலர்விழிய காலேஜ் படிக்கும் போது காதலிச்சானே அவளை சுத்தமா மறந்துட்டு தானே பாக்யஸ்ரீயை கல்யாணம் பண்ணான். அப்போ பாக்யஸ்ரீயையும் மறந்துடுவான். மறக்க வைப்பேன்” சபதம் எடுப்பது போல் தனக்குள் கூறிக் கொண்டவள் சிரித்தும் கொண்டாள். 

காதல் வந்தால் மனம் எதை எதையோ யோசிக்கும் என்பது இது தானோ?

வான்முகிலன் மலர்விழியை காதலித்தான் என்பது உண்மை தான். அதை அவளிடம் சொல்லவுமில்லை. அவளுக்கு எந்த நம்பிக்கையும், வாக்கையோ கொடுக்கவுமில்லை. அதனால் மலர்விழியை அவன் வாழ்க்கையிலிருந்து, நினைவுகளிலிருந்து அவனால் இலகுவாக பிரித்து வைக்க முடிந்தது.

ஆனால் பாக்யஸ்ரீ… வான்முகிலனின் மனைவி. அவனுடைய இறுதி மூச்சு வரை இவளோடு தான் என்று முடிவு செய்து அவனோடு வாழ்ந்தவள். ஈருடல் ஓருயிராய் கலந்து அவன் குழந்தையை சுமந்தவள்.

காதலியிடம் பகிராத விஷயங்களை கூட மனைவியிடம் பகிர்ந்துகொள்ளும் கணவனாக இருந்தவன் வான்முகிலன்.

பாக்யஸ்ரீ அவனுக்கு தோழியாக, காதலியாக, மனைவியாக இருந்தவள். அவள் நினைவுகள் அவ்வளவு இலகுவில் அவன் மனதை விட்டு நீங்குமா?  நிலஞ்சனாவால் பாக்யஸ்ரீயின் நினைவுகளை முற்றாக வான்முகிலனின் மனதிலிருந்து நீக்கத்தான் முடியுமா? வெற்றிடத்தை நிரப்புவது போல் நிலஞ்சனா தன்னை அவனுள் நிரப்புவாளா?

நிலஞ்சனா வான்முகிலனின் சிந்தனையில் தூங்காமலிருக்க, வான்முகிலன் பாக்யஸ்ரீயின் சிந்தனையில் தூங்காமலிருந்தான்.

“என்ன மன்னிச்சுடு ஸ்ரீ. அம்மா சொல்லி நான் எதையும் செய்யாமலிருந்ததே இல்ல. அது உனக்கும் தெரியும். இக்கட்டான சூழ்நிலைல மலர்விழிய கல்யாணம் பண்ண முடிவு செஞ்சேன். அது உல்டாவாகி  நிலஞ்சனாவ கல்யாணம் பண்ணி கிட்டேன்.

என்னால சத்தியமா உன்ன மறக்க முடியாது. வேற யாரையும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இப்போ இருக்குற சூழ்நிலைல எல்லா பிரச்சினையும் முடியிற வரைக்கும் நிலஞ்சனாவோட உதவி எனக்கு தேவைப்படுது. அவளை பகைச்சிக்கவும் முடியாது. அம்மாகிட்ட உண்மைய சொல்லி அவளை வீட்டை விட்டு அனுப்பவும் முடியாது.

எல்லா பிரச்சினைகளும் முடிஞ்சா பிறகு நிலஞ்சனாகு நானே ஒரு வாழ்க்கையை அமைச்சு கொடுத்து அவளை என் வாழ்க்கைல இருந்து அனுப்பிடுவேன்”

வழமையாக பாக்யஸ்ரீயின் புகைப்படத்தோடுதான் பேசியவாறு உறங்குவான் வான்முகிலன். இன்று நிலஞ்சனாவின் வருகையால் பாக்யஸ்ரீயின் புகைப்படத்தை பாராமல் கண்களை மூடியவாறு அவள் முகத்தை கண்களுக்குள் கொண்டு வந்து மனதுக்குள் பேசியவாறே தூங்கிருந்தான்.

நிலஞ்சனா அவன் வாழ்க்கையில் வந்ததால முதல் மாற்றம் இதுவாக இருக்க அடுத்து என்னவாகும்? அவள் என்ன செய்ய காத்திருக்கின்றாள் என்று அறியாமல் வான்முகிலன் தூங்க அவன் முதுகை பார்த்தவாறு நிலஞ்சனா தூங்கலானாள்.

Advertisement