Advertisement

அத்தியாயம் 16

காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட மலர்விழிக்கு ஒன்றும் புரியவில்லை. 

தான் இதுவரை போட்ட பழிவாங்கும் திட்டத்தில் எங்கே சுற்றி யார் வந்தாலும் தன்னிடம் வந்து நிற்க முடியாதபடி தான் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறாள். அப்படியிருக்க தன் மேல் யார் கம்பளைண்ட் கொடுத்தது அதுவும் கொலை வழக்கு என்று யோசனையாக அமர்ந்திருந்தாள்.

“சொல்லுங்க மேடம் ரம்யா சடகோபாலன தெரியுமா?. உங்க காலேஜ் ஜூனியர். உங்க ஊரு தான். அவங்க தான் உங்க மேல கம்பளைண்ட் கொடுத்திருக்காங்க. அவங்க ஹஸ்பண்ட் கடைசியா உங்களைத்தான் சந்திக்க வந்திருக்காரு. அதற்கு பிறகு அவர் வீட்டுக்கே போகல” இன்ஸ்பெக்டர் மதியழகன் தான் அவளை விசாரித்துக் கொண்டிருந்தார்.

“ரம்யா? யாரு” என்று யோசித்தவள் கல்லூரியில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக ஞாபகத்தில் வரவும் “காலேஜுக்கு பிறகு நான் ரம்யாவ சந்திக்கவே இல்லையே அப்பொறம் எப்படி எனக்கு அவ ஹஸ்பண தெரியும்? யார் அவர்?”

“என் வைப்புக்கு உங்கள நல்லாவே தெரியும் மேடம். ஒரே காலேஜ் தான்” என்று ஜவகர் ஆரம்பிக்கும் பொழுதே முகம் மாறிய மலர்விழி “ஆபீஸ் விசயத்த பேசிட்டு பேசலாம்” என்றது கண்முன் வந்து போனது.

அன்று ஜவகர் சொல்ல வந்தது ரம்யாவை பற்றியா?  ரம்யாவை சந்திக்க நேர்ந்திருந்தால் பழிவாங்கும் படலத்தில் அவளையும் சேர்த்திருப்பாள். சந்திக்காத ஒருத்தியின் கணவனை எவ்வாறு கொலை செய்திருக்க முடியும்? என்பது தான் மலர்விழியின் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

“ஆர்.கே கம்பனியோட மேனேஜர் ஜவகர் தான் ரம்யாவோட ஹஸ்பண்ட். அவர் ஆதி குரூப்புக்கு வந்திருக்காரு. உங்களைத்தான் சந்திச்சிருக்காரு” என்று மதியழகன் கூற, சிரித்தாள் மலர்விழி.

“காலேஜ் படிக்கும் பொழுது ரம்யாவோடு கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்தது என்னவோ உண்மை தான். அதற்காக காலேஜ் முடிச்சி இத்தனை வருஷமா அதையெல்லாம் நினைச்சி பகையை வளர்த்துக்கிட்டு இருக்க முடியுமா? எனக்கு என்று ஒரு லைப் இருக்கு சார்”

மலர்விழி ரம்யாவை தெரியவே தெரியாது என்று மறைக்க நினைக்கவோ, ரம்யாவோடு தனக்கு எந்த மாதிரியான உறவு இருந்தது என்பதை மறுக்கவோ நினைக்கவில்லை.

கொலை வழக்கில் விசாரணைக்காக அழைத்து வந்திருக்கிறார்கள். அதுவும் ரம்யா புகாரளித்திருக்கின்றாள் என்றால் தன்னுடைய பின்னணி, கடந்த காலம் என்று அனைத்தையும் விசாரித்திருப்பார்கள். ரம்யா நல்ல விதமாகவா கூறியிருக்க போகின்றாள்?

இந்த இடத்தில் உண்மையை கூறுவது தான் உசிதம் என்று உண்மையை மறைக்காமல் கூறியவள்,

“மிஸ்டர் ஜவஹர் ஆதி குரூப்புக்கு வந்ததாக நீங்களே சொல்லுறீங்க. அவர் வந்தது வேல விஷயமாக என்ன சந்திக்க. அவரை பெர்சனலா சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லாத போது அவர் ரம்யா கணவர் என்றே எனக்குத் தெரியாது.

எனக்கு ரம்யா மேல பகையுமில்ல. ஜவஹர் ரம்யாவோட கணவர் என்றும் தெரியாது. அவர் காணாமல் போனதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்ல” மலர்விழி எந்த தயக்கமுமில்லாமல் உண்மையை தான் கூறினாள்.

“உங்க மேல கம்பளைண்ட் கொடுத்த உடனே உங்கள கைது பண்ணி விசாரிக்கணும் என்றா ஆதாரமில்லாமல் உங்கள இங்க கூட்டிட்டு வந்திருக்க மாட்டோம் இல்ல மேடம்” என்ற இன்ஸ்பெக்டர் மதியழகன் “மிஸ்டர் ஜவஹரோட வண்டி ஆதி குரூப்ல இருந்து வெளில போறப்போ கூட நீங்களும் போய் இருக்கிறீங்க. வேலை விஷயமா என்று சொல்லாதீங்க. ஆபீஸ் டைம் முடிஞ்சிருச்சு. சீசீடிவியை செக் பண்ணிட்டோம்” இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க? என்பதை போல் மலர்விழியை பார்த்திருந்தார்.

“சார் அன்னக்கி என் வண்டி பஞ்சர். அத பார்த்து அவர் லிப்ட் கொடுத்தாரு” மலர்விழி கூறும் பொழுதே மதியழகன் குறுக்கே பேசினார்.

“உங்க வண்டி பஞ்சர் ஆனத கூட நம்புறேன். அன்னிக்கிதான் நீங்க மிஸ்டர் ஜவகர பார்த்திருக்குறீங்க. அது எப்படி அன்னக்கி பார்த்தவரோட வண்டில போனீங்க?” இது நம்பும்படியாக இல்லையே. நீயாகத்தான் ஜவகரிடம் லிப்ட் கேட்டிருக்கிறாய். ரம்யாவின் கணவன் என்று அறிந்து தான் கேட்டிருக்கிறாய். அவர் வண்டியில் போக வேண்டி நீயே உன் வண்டியை பஞ்சர் செய்திருப்பாய் என்று குற்றம் சாட்டினார் இன்ஸ்பெக்டர் மதியழகன்.

“சார் அன்னக்கி மிஸ்டர் வான்முகிலன டின்னருக்கு மீட் பண்ண வேண்டியிருந்தது. ஆதிசேஷன் ஐயா வேல விசயத்துல கறாரா இருப்பாரு. வண்டி பஞ்சர். டக்சில வந்தேன். அதான் லேட் என்றெல்லாம் காரணம் சொல்ல கூடாது. அது அவருக்கு பிடிக்காது. டாக்சிக்கு வைட் பண்ண முடியாது என்றுதான் அன்னைக்கு அவர் வண்டில வீட்டுக்கு போனேன்”

“ஆனா நீங்க டின்னருக்கு ஆதிசேஷன் ஐயா ஏற்பாடு செஞ்ச வண்டில தானே போனீங்க? அவர் தானே உங்கள வீட்டுலையும் விட்டாரு” மலர்விழி எதை சொன்னாலும் முட்டுக்கட்டையாக கேள்விகளை அடுக்கினார் இன்ஸ்பெக்டர்.

“ஆமா சார் ஆதிசேஷன் ஐயாவே போன் பண்ணி டின்னருக்கு போக, வண்டி அனுப்புறேன்னு சொன்னாரு. சொன்ன நேரத்துக்கு வண்டியும் வந்தது நானும் அவர் சொன்ன நேரத்துக்கு போய் சேர்ந்தேன். என் வண்டி பஞ்சரானது அவருக்குத் தெரியாது. நைட் நேரம் நான் வண்டியோட்ட வேணாம்னு வண்டி அனுப்பியிருப்பாரு” மலர்விழி நடந்ததை கூற,

“அவர் உங்க அப்பா தானே. பொண்ணுக்கு ஒரு ட்ரைவரை ஏற்பாடு செய்யிறதுல அவருக்கு ஒன்னும் சிரமமில்லையே” என்ற மதியழகனை அதிர்ச்சியோடு பார்த்தாள் மலர்விழி.

“என்ன மிஸ் மலர்விழி மிஸ்டர் ஆதிசேஷன் உங்க அப்பா இல்லைனு சொல்ல வாரீங்களா?”

“இது எப்படி உங்களுக்குத் தெரியும்? இந்த விஷயம் வெளியாட்கள் யாருக்கும் தெரியாதே” அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டாள் மலர்விழி.

“ஸ்டேஷனுக்குள்ள வந்ததுல இருந்து என் பொண்ணு என் பொண்ணு என்று வெளிய கத்திக்கிட்டு இருக்காரு, அத வச்சி தான் கேட்டேன்” சாதாரணமாக கூறிய மதியழகன் “மிஸிஸ் ரம்யாவோட மொபைலுக்கு அன்னவுன் நம்பர்ல இருந்து ட்ரிடன் மெஸேஜ் போய் இருக்கு. மிஸ்டர் ஜவகர் கடத்தி வச்சிருக்குறதாக பணம் கேட்டிருக்காங்க. அந்த நம்பர் ஆதி குரூப் இருக்குற ஏரியால தான் ஆனாகி ஆப்பாகியிருக்கு. ஜவகர் கடத்தி, கட்டிப் போட்ட போட்டோஸ் கூட அனுப்பியிருக்காங்க”

“சார் பணம் கேட்டு மிரட்டியதாக சொல்லுறீங்க. ரம்யா பணம் கொடுத்தாளா? மிஸ்டர் ஜவஹருக்கு என்ன தான் ஆச்சு? உண்மையிலயே  அவர் செத்துட்டாரா?” சம்பந்தமே இல்லாமல் தான் இதில் எவ்வாறு வந்து மாட்டிக் கொண்டோம் என்று புரியாமல் குழம்பினாள் மலர்விழி.

“மூணு வாரமா அங்க வா இங்க வானு இழுத்தடிச்சு. பணம் வாங்கியிருக்காங்க. ஆனா மிஸ்டர் ஜவகர் வீடு போய் சேரலனதும் மிஸிஸ் ரம்யா போலீஸோட உதவிய நாடியிருக்காங்க. கடைசியாக மிஸ்டர் ஜவகர் ஆதி குரூப்புக்கு வந்ததினாலயும், கிட்ணப்பர் தொடர்புகொண்ட போன் நம்பர் உங்க கம்பனி ஏரியா எங்குறதாலையும் அவங்க உங்க மேல கம்பளைண்ட் கொடுத்திருக்காங்க”

ரம்யா என்னவெல்லாம் இன்னல்களை அனுபவித்தாள் என்று கண்குளிர பார்க்க முடியவில்லையே என்ற சோகம் மலர்விழியின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. “அப்படீன்னா மிஸ்டர் ஜவகர் உயிரோட தானே இருக்காரு. அவர் உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே” பொய்யாய் பதறினாள்.

“சி மிஸ் மலர்விழி பணம் கொடுத்த பிறகும் விக்டமை விடுவிக்கலைனா அவங்க உயிரோட இருக்குற சான்ஸ் கம்மி”

“சரி சார். ரம்யாகு என்ன பிடிக்கல. சந்தேக கேஸ்ல தானே என்ன கைது பண்ணியிருக்கணும். கொலை கேஸ் என்று சொல்லுறீங்க”

“மிஸ் ரம்யாவுக்கு ட்ரெடன் மெஸேஜ் அனுப்பின அன்னவுன் நம்பர் உங்க பேர்ல இருக்கு மிஸ் மலர்விழி” என்றதும் அதிர்ந்து நின்றாள் மலர்விழி.

“தான் ஆதிசேஷனின் குடும்பத்தாருக்கு வலை விரித்தால் தனக்கு யாரோ வலை விரித்திருக்கிறார்கள். யாராக இருக்கும்?

வான்முகிலன்?

நிச்சயமாக அவனுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.

ஆதிரியன்?

அவன் தான் சதா என்னை சந்தேகக் கண் கொண்டு பார்த்திருக்கின்றான். ஆனால் அவன் தான் படுத்தப்படுக்கையாக இருக்கின்றானே. அவனாக இருக்கவும் வாய்ப்பில்லை.

எனக்குத் தெரியாத என் எதிரி யார்?

“என் அப்பாவ தவிர என் குடும்பத்துல யாருமே என்ன ஏத்துக்கல. அதனாலதான் நான் ஆதிசேஷனோட பொண்ணு எங்குற விஷயத்தையே வெளியுலகத்துக்கு சொல்லாம மறைச்சேன். என்ன பிடிக்காத யாரோ ரம்யாவ பத்தி தெரிஞ்சிக்கிட்டு என்ன மாட்டி விட ஏதாவது பண்ணியிருப்பாங்களோனு தோணுது. மிஸ்டர் ஜவகர நான் தான் கடத்தி ரம்யாவ ப்ளாக்மெயில் பண்ணியிருந்தா என் பெயர்லயா சிம் வாங்கியிருப்பேன்?”

நியாயமான கேள்விதான். மலர்விழி கேட்டது நியாயமான கேள்வி தான்.

“நீங்க ஒன்னும் லா படிகலையே? இல்ல… எந்த கேள்விக் கேட்டாலும் டிபைன்ட் பண்ணுறீங்க. இல்ல ஒருவேளை புனை பெயர்ல கற்பனை கதை எழுதுறீங்களோ?” நக்கலடித்தார் இன்ஸ்பெக்டர் மதியழகன்.

மலர்விழிக்கு கோபம் கனன்றாலும் பொறுமையாக “தப்பு செஞ்சிருந்தா தானே சார் தப்பிக்க வழி தேடணும்? நான் எந்த தப்பும் பண்ணல. நான் கேட்குறது நியாயமான கேள்வி தானே” என்றாள்.

“சட்டத்துக்கு தேவ சாட்ச்சியும் ஆதாரமும் தான் மிஸ் மலர்விழி. ஆதாரம் உங்களுக்கு எதிரா இல்ல இருக்கு. தப்பு செய்றவங்க சட்டத்துல இருக்குற ஓட்டையெல்லாம் எங்க இருக்கு என்று பார்த்து பார்த்து தப்பிக்கிறாங்க. நீங்க படிச்ச கிரிமினலா இருக்கிறீங்க. இவ்வளவு பேசுற நீங்க. நீங்களே உங்க பேர்ல சிம் வாங்கி. மிஸ்டர் ஜவகர கடத்தி, மிஸிஸ் ரம்யாவ மிரட்டி பணம் வாங்கியிருக்கலாம். உங்கள உங்க குடும்பம் ஏத்துக்கல எங்குறது உங்களுக்கு சாதகமான காரணமாக் கூட இருக்கலாம்” என்றார் இன்ஸ்பெக்டர் மதியழகன்.

“இந்த வழக்குல நான் தான் குற்றவாளி என்று முடிவு பண்ணிட்டு பேசிகிட்டு இருக்கிறீங்க இன்ஸ்பெக்டர். மிஸ்டர் ஜவகரோட பாடி கிடைக்கிற வரைக்கும் இது கடத்தல் வழக்கு தான். உங்க கிட்ட பேசுறதுக்கு நான் ரம்யா கிட்ட பேசி புரிய வச்சிருப்பேன்” என்றாள்.

ஆதிசேஷன் வக்கீலோடு உள்ளே வர, “அப்பா…” என்று ஓடிச்சென்று மலர்விழி அவரை கட்டிக் கொண்டு ஓவென அழுதாள்.

ஆதிசேஷன் மலர்விழியை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, வக்கீல் பரமசிவம் அவளை வெளியே கொண்டு வரும் வேலைகை பார்த்தார்.

சிம் மலர்விழியின் பெயரில் வாங்கப்பட்டது மட்டும் தான் காவல்துறைக்கு இருக்கும் ஒரே ஆதாரம். மலர்விழியின் வீட்டை அலசியும் அந்த சிம்முக்குண்டான அலைபேசி கூட கிடைக்கவில்லை. ஜவகர் கிடைத்தால் தான் இந்த கேஸ் இனி நகரும். அதுவரை மலர்விழி முன் ஜாமில் பெற்றுக்கொண்டிருந்தாள்.

“நீ தனியாக இருக்காதே என் கூட வீட்டுக்கு வா” என்று ஆதிசேஷன் மலர்விழியை அழைக்க மறுக்காமல் கூடவே சென்றாள்.

தன்னை மாட்டி விட நினைக்கும் குள்ளநரி அந்த வீட்டிலல்லவா இருக்கின்றான்.

ஆதிசேஷன் வீட்டுக்கு வந்தால் ஆதித்-மாளவிகா ஜோடி திருமணம் முடிந்து வந்திருந்தனர்.

அதை பார்த்து கோபத்தின் உச்சிக்கே சென்றவர் மகன்கள் மூவரையும் அழைத்து திட்ட ஆரம்பித்தார்.

“யாரை கேட்டு கல்யாணத்த நடத்தினீங்க? நான் இல்லாம கல்யாணத்த நடத்துற அளவுக்கு பெரிய மனிஷங்களாகிட்டீங்களா?”

“யாரை கேட்கணும்? அவன் பையன் கல்யாணத்த நடாத்த அவன் யாரை கேட்கணும்?” ஆதிசேகனின் மனைவி தனம் சக்கர நாட்காலியில் அமர்ந்தவாறே கேட்க, அதிர்ந்து நின்றார் ஆதிசேஷன்.

“தனம் உனக்கு உடம்பு குணமாகிருச்சா?” தினமும் மனைவியை சென்று பார்ப்பவருக்கு தனம் குணமடைந்து வருவது ஏன் தெரியவில்லை. மருத்துவரிடம் கேட்ட பொழுது வாய்ப்புகள் குறைவு என்று தானே கூறினார். இவள் எப்படி குணமானாள்? 

“ஏன் நான் படுத்த படுக்கையிலேயே இருந்தா நீங்க உங்க இஷ்டத்துக்கு ஆடலாமென்ற எண்ணமோ?” கணவனை முறைத்தவள் லதாவை அழைத்து அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை பார்க்கும்படி ஏவினாள்.

இந்த வீட்டில் ஆதிசேஷனை அதிகாரம் செய்யக் கூடிய ஒரே ஜீவன் தனம் மட்டும் தான். அன்னையின் குரல் கேட்டு புதல்வர்கள் மூவரும் ஆசையாய் ஓடி வந்திருக்க, மருமகள்கள் வீட்டில் நடக்க வேண்டிய சடங்குகளை செய்ய சென்றனர்.

“உங்க அதிகாரமெல்லாம் ஆபீஸோட வச்சிக்கோங்க. வீட்டுல இருக்கக் கூடாது” மிரட்டும் தொனியில் தான் தனம் பேசினாள்.

இதுநாள் வரை தனம் கணவனை இவ்வாறு பேசியதே இல்லை. மலர்விழி வந்ததால் ஏற்பட்ட மாற்றம் என்று மகன்கள் பார்த்திருந்தனர்.

“என்ன உங்க பொண்ணு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா? நடத்திட்டீங்களா?” அது என்ன மாதிரியான தொனியென்று ஆதிசேஷனால் கூட அறியமுடியவில்லை.

யாரோ ஒரு பெண் குரல் அதிகாரம் செய்வதை கேட்டு மலர்விழியும் அங்கே வந்து சேர்ந்தாள். மலர்விழியை ஆதிசேஷன் மகள் என்று வீட்டுக்கு அழைத்து வந்த அன்று தானே தனம் பக்கவாதத்தில் விழுந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாள். மலர்விழி தனத்தை பார்த்திருந்தால் ஒழிய அவள் குரலை கேட்டிருக்கவில்லை. இன்று தான் கேட்கின்றாள். 

“கல்யாணம் நின்னு போச்சு” என்ற ஆதிசேஷன் காரணத்தை கூறவில்லை. கூறும் எண்ணமும் அவருக்கில்லை.

“உங்க பொண்ணு என்று உங்க குடும்பமே ஏத்துக்கல. ஊரு உலகத்துக்கும் சொல்லல. தத்தும் எடுக்கல. கல்யாணம் மட்டும் பண்ணி வைப்பீங்களோ?”

நீ எதை முறையாய் செய்தாய் என்று மறைமுகமாக கணவனை சாடினாள். அது ஆதிசேஷனுக்கு நன்றாகவே புரிந்தது. பதில் பேச முடியாமல் மௌனம் காத்தார்.  

தனம் பேசப் பேச தன்னை குற்றவாளியாக்க முயற்சி செய்வது தனமாக இருப்பாளோ என்று சந்தேகமாக பார்த்தாள் மலர்விழி.

“ஏய் பொண்ணு. என் புருஷனுக்கு பொறந்த உன்ன தான். இங்க வா…” தனம் மலர்விழியை அழைக்க மலர்விழியும் தனத்தின் அருகில் சென்றாள்.

“இப்போ எதுக்கு அவள கூப்பிடுற?” தனம் ஏதாவது பேசி மகளின் மனதை நோகடித்து விடுவாளோ என்று அஞ்சினார் ஆதிசேஷன்.

“உங்க பொண்ண நான் கொலை பண்ண கூட்டிட்டு போகல. தைரியமா போங்க” நக்கலாக கூறிய தனம் சக்கர நாட்காலியை தள்ளுமாறு மலர்விழியை ஏவினாள். 

மலர்விழி எந்த பதட்டமுமில்லாமல் தனத்தை அவளது அறைக்கு அழைத்து சென்றாள்.

“டீ போட தெரியுமா?” தனம் மலர்விழியிடம் கேள்வியாக கேட்டதோடு, போடுமாறு உத்தரவிட்டாள்.

எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டிருக்க, எந்தக் கேள்வியும் கேளாமல் மலர்விழி தேநீர் தயாரித்து தனத்தின் கையில் கொடுத்தாள்.

தனத்துக்கு உடம்பு முடியாமல் போய் ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. படிப்படியாக குணமடைந்து வருகிறாள் என்று எந்த தகவலும் ஆதிசேஷன் கூறியிருக்கவில்லை. மலர்விழி அறிந்தவரையில் தனம் எழுந்திருக்கவே வாய்ப்பில்லை என்று தான் பேசிக்கொண்டார்கள்.

இன்று சக்கர நாட்காலியில் அமர்ந்திருந்தாலும், பக்கவாதத்தால் விழுந்தது போலில்லாமல் கையில் டீ கப்பை ஏந்தி அருந்தும் விதத்தில் பக்கவாதம் என்றோ குணமாகியிருக்க வேண்டும்.

திருமணத்திற்கு வராததை வைத்துப் பார்த்தால் தனம் குணமாகியது வீட்டாருக்கு கூட தெரியவில்லை.

“இந்தம்மா எதற்காக தான் குணமானதை மறைக்க வேண்டும். இப்பொழுது எதற்காக வெளிப்படுத்தியிருக்க வேண்டும்” என்ற சிந்தனையிலையே தன்னுடைய தேனீரை அருந்தினாள் மலர்விழி.

“பரவாலையே டீ நல்லாவே போடுற” என்ற தனம் “உன் அம்மா இருக்காங்களா? செத்துட்டாங்களா?” நான் கேட்கும் கேள்விகளுக்கு நீ பதில் சொல்லணும் என்பதை போல் பார்த்தாள். 

“நான் ஸ்கூல் முடிச்சப்போவே செத்துட்டாங்க”

“உங்கம்மாவ என் புருஷன் எப்போ கல்யாணம் பண்ணிகிட்டாரு என்று எனக்குத் தெரியாது. நிச்சயமாக உங்கம்மாவோட முழு சம்மதத்தோட இந்தக் கல்யாணம் நடந்திருக்காது. அப்படியே நடந்திருந்தாலும். உங்கம்மாவ ஏமாத்திதான் கல்யாணம் பண்ணியிருப்பாரு. அதுக்கான காரணம் எனக்கு நல்லாவே தெரியும்.

அது உனக்கு தெரிஞ்சதனாலதான் நீ இந்த வீட்டுக்குள்ள வந்திருக்க. என் புருஷன் கிட்ட நெருங்கியிருக்க. பாசம் என்ற திரையால் அவர் கண்ண மூடி அவரை நம்ப வச்சிருக்க” மலர்விழியை பார்த்தவாறே நிதானமாக வார்த்தைகளை கோர்த்து பேசினாள் தனம்.

“நீங்க என்ன சொல்லுறீங்க என்றே எனக்குப் புரியல” படுத்த படுக்கையில் இருப்பது போல் நடித்து தன்னை பற்றி விசாரித்து தன்னை வீழ்த்த நினைப்பது இந்த கிழவியா? தன்னை பற்றி என்னவெல்லாம் இந்த கிழவிக்கு தெரியும் என்று அறிந்துகொள்ள புரியாதது போல் நடித்தாள் மலர்விழி.

“அவருக்கு ஒரு பொண்ணு பொறந்தது என்று அவருக்கு நல்லாவே தெரியும் பொண்ணு பொறந்ததாலதான் உன் அம்மாவ கைவிட்டிருப்பாரு. இல்ல உங்கம்மாவே அவரை விட்டு ஓடிப்போய் இருப்பாரு. ஆனா உன்ன எப்படி விட்டுட்டாரு என்று தெரியல. பொத்தி பொத்தி வளர்த்திருந்தா இங்க கூட்டிகிட்டு வந்திருக்க மாட்டாரு. பொறந்த உடனே தூக்கிகிட்டு இல்ல வந்திருப்பாரு” மனதுக்குள் நினைத்த தனம் அதை மலர்விழியிடம் கூறாமல்

“தனக்கு ஒரு பொண்ணு இருக்கிறதே இருபது, இருபத்தி இரண்டு வருஷம் கழிச்சி தான் அவருக்கு தெரியும். அப்படியிருக்க, அப்பா எங்க என்று நீ உன் அம்மா கிட்ட நீ கேட்டிருக்க மாட்டியா? கேட்டிருந்தா உன் அம்மா உன் கிட்ட உண்மைய சொல்லியிருப்பாளே.

சரி சொல்லலைனாலும், அப்பாவ பார்த்த உடனே ஏன் இத்தனை நாளா என்ன தேடி வரல என்று கேட்டிருக்கணும். நீ தான் கேட்கலையே. அப்படீன்னா என் புருஷன் தான் உன் அப்பான்னு உனக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. தெரிஞ்சிதான் அவர அணுகியிருக்க.

சொத்து வேணாம் சொந்தம் தான் வேணும் என்று நீ சொல்லுறத அவர் வேணா நம்பலாம். நான் முட்டாளில்ல.

நீ அவர பழிவாங்கத்தான் நெருங்கியிருக்க என்று எனக்கு நல்லாவே தெரியும். அத பத்தி எனக்கு கொஞ்சம் கூட கவலை இல்ல. நீயாச்சு. உன் அப்பாவாச்சு. உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என் பசங்க, பேர பசங்க வரக் கூடாது.

உன்னால அவங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தது, என்னால உனக்கு என்னென்ன ஆபத்து வரும் என்று எனக்குத் தெரியாது” அமைதியாக மிரட்டினாள் தனம்.

தனத்தின் மிரட்டலுக்கெல்லாம் மலர்விழி அச்சப்படவில்லை. ஆதாக்கப்பட்ட ஆதிசேஷனியே அடக்கி தன் உள்ளங்கையில் வைத்திருக்கின்றாள். இந்த கிழவி தன்னை என்ன செய்து விட முடியும் என்று கேலியாக புன்னகைத்தாள்.

“உங்கப்பா போலவே நீயும் எதிரிகள சம்பாதிச்சு வச்சிருக்க போல. உன்ன யாரோ கொலை வழக்குல சிக்க வச்சிருக்குறதா சொன்னாங்க. உண்மையிலயே நீ நிரபராதியா? இல்ல குற்றவாளியா?

குற்றவாளியாகவே இருந்தாலும் உன் அப்பா உன்ன வெளிய கொண்டு வந்துடுவாரு. நீ கவலைப்படாத” நக்கலாகத்தான் சொன்னாள் தனம்.

மலர்விழி பார்க்க தன் மாமியாரின் சாயலில் இருக்கின்றாள். அன்னையின் சாயலில் இருப்பதால் தான் ஆதிசேஷனுக்கு மகள் மீது பாசம் வந்திருக்கிறது என்று தனத்தால் புரிந்துகொள்ள முடிந்தது. 

“நீங்கதான் எனக்கு நடக்க இருந்த கல்யாணத்த நிறுத்தி. என்ன கொலை கேசுல உள்ள தள்ள பார்த்தீங்களோன்னு நினச்சேன். அது நீங்க இல்லையா?”

தனத்தின் பேச்சில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகமாகவே தெரிந்தது. ஆதிசேஷனை அவளுக்கு பிடிக்கவில்லை என்றும் புரிந்தது. ஒருவேளை இதை இந்த கிழவி செய்திருந்தால் எதையும் செய்யக் கூடிய வல்லமை கொண்டவளாகத்தான் இருப்பாள். இவளிடம் ஜாக்கரதையாக இருக்க வேண்டும் என்று மலர்விழிக்கு அக்கணம் தோன்றியது.

“உங்கப்பா போல கீழ் தரமான காரியத்தை நான் செய்ய மாட்டேன். எனக்கு என் குடும்பம் முக்கியம். அதுல உங்கப்பாக்கு எந்த இடமுமில்லை. எந்த ஒரு மிருகமும் தன் குஞ்சுகளுக்கு ஆபத்து வரும் பொழுது எதிர்த்து போராடும். அதே மாதிரிதான் நானும். அது என் புருஷனாக இருந்தாலும் சரி. அவர் பெத்த மகளாக இருந்தாலும் சரி” என்றாள் தனம்.

“ஆக தன்னை இந்த கிழவி கொலை வழக்கில் சிக்க வைக்கவில்லை. யார் அது?” மலர்விழிக்கு யார் அது? ஏன் என்று சுத்தமாக புரியவில்லை.

“இப்போ நீ போலாம். நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்” அறை கதவை பார்த்த தனத்திடம் விடைபெறாமலே வெளியேறினாள் மலர்விழி.

தனக்கென்று ஒதுக்கிய அறையில் குறுக்கும், நெடுக்கும் நடை பயின்றவாறே தனம் பேசியவற்றை யோசிக்கலானாள்.

ஆதிரியனை விபத்துக்குள்ளாகி இன்று அவன் மருத்துவமனையில் படுத்த படுக்கையில் இருப்பதற்கான காரணம் தான் தான் என்று இந்தக் கிழவி அறிந்து கொண்டால் என்ன செய்வாள்?

அவள் அறிந்துகொள்ளும் பொழுது அவள் குடும்பமே சின்னாபின்னாமாகியிருக்கும் சிரித்தாள் மலர்விழி. 

ஆனால் மலர்விழியின் திட்டங்களை வான்முகிலன் மட்டுமல்ல, தனமும் தவிடு பொடியாக்கிவிடுவாளென்று மலர்விழிக்குத்தான் தெரியவில்லை.

Advertisement