Advertisement

அத்தியாயம் 15

மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம் 

“கெட்டி மேளம், கெட்டி மேளம்”

நாதஸ்வர இசை முழங்க வான்முகிலன் நிலஞ்சனாவின் கழுத்தில் தாலி கட்டினான். அதே நரம் ஆதித் மாளவிகாவின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான்.

தினம் தினம் வீட்டில் நடக்கும் பிரச்சினையை பார்த்த காஞ்சனாதேவிக்கு மகன் திருமணம் செய்து கொண்டாலாவது அவன் நிம்மதியாக இருப்பான் என்று தோன்றியது.

சாருமதி வான்முகிலன் நிலஞ்சனாவை காதலிப்பதாக கூறியதை காஞ்சனாதேவி சட்டென்று ஒன்றும் நம்பிடவில்லை. பாக்யஸ்ரீயும், வான்முகிலனும் வாழ்ந்த வாழ்க்கையை கண்கூடாக பார்த்தவள் தானே. பாக்யயஸ்ரீ இறந்து ஐந்து மாதங்கள் கூட நிரம்பவில்லை. அதற்கிடையில் நிச்சயமாக முகிலன் இன்னொரு பெண்ணை மணக்க நினைத்திருக்க மாட்டான் என்று காஞ்சனாதேவிக்கு நன்றாகவே தெரியும்.

நிலஞ்சனா வீட்டுக்கு வந்த பொழுது சந்திரமதி தான் வரவேற்றாள். மற்றவர்கள் நிலஞ்சனாவை சந்திக்கவுமில்லை. ராமோடு வந்ததால் தொழில் விஷயமாக பேச வந்திருப்பாளென்று சந்த்ரமதியும் நிலஞ்சனாவை பற்றி விசாரித்திருக்கவில்லை.

வான்முகிலன் எங்கு செல்கிறான்? யாரோடு இருக்கிறான் என்று ராமிடம் காஞ்சனாதேவி கேட்டறியும் பொழுது நிலஞ்சனாவை பற்றியும் அறிந்து வைத்திருந்தாள். விபத்து நடந்த அன்று அலைபேசியில் காஞ்சனாதேவி நிலஞ்சனாவோடு உரையாடி இருந்தமையால் நிலஞ்சனாவை பற்றி நல்ல அபிப்ராயம் இருந்தது. கூடவே வேலை பார்த்தால் இவ்வாறெல்லாம் பேசுவார்களா என்ற ஆதங்கமும் உள்ளுக்குள் கனன்றாலும்,  ஒரு அன்னையாக மகன் மறுமணம் செய்து கொண்டால் ஆனந்தமடையும் முதல் நபர் அவளாகத்தானே இருப்பாள்.

“சொல்லு முகிலா அக்கா சொல்லுறது உண்மையா?” கடுகளவாவது உண்மையிருக்கக் கூடாதா என்ற நப்பாசையில் தான் கேட்டாள்.

இல்லை என்று ஒற்றை வார்த்தையில் வான்முகிலன் மறுத்து விட முடியும். விளக்கமாக கூறினால் தானே அன்னை புரிந்துகொள்வாளென்று “அது வந்தும்மா…” என்று ஆரம்பித்தான்.   

“என்ன வந்து போயி. நீ கல்யாணம் பண்ண போற மலர்விழிக்கே நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறது தெரிஞ்சிருக்கு. கல்யாணத்துக்கு பிறகு தன்னோட வாழ்க எப்படி இருக்கும் என்று அந்த பொண்ணு அச்சப்படுது” தம்பிக்காக பேசாமல் யாரென்றே தெரியாத மலர்விழிக்காக பேசினாள் சாருமதி.

ஆதித்தோடு நின்றிருந்த ஆதி குடும்பத்தார் சாருமதி பேசவும் என்ன பிரச்சினையோ என்று அப்பக்கம் வந்திருக்க “எங்க மருமகள் கர்ப்பமாக இருக்குறத காரணமாக வச்சி மலர்விழிய கல்யாணம் பண்ணிக்க சொல்லித்தான் எங்கப்பா மிரட்டினாரா?” ஆதிசங்கர் வான்முகிலனை கேட்டார்.

மாளவிகா கர்ப்பமாக இருக்கிறாள் என்று ஆதித் அன்னையிடம் போய் கூற “ஏன்டா நீ மட்டும் இப்படி இருக்க? உன் அண்ணன் ஆதிரியனை பார்த்து திருந்த மாட்டியா?” என்று லதா அவனை அடித்தாள்.

திருமணத்தை நடாத்துவது தானே இதற்கான தீர்வு என்று லதா கணவனிடம் பேச, ஆதித்யன் சகோதரர்களை அழைத்து பேசியிருந்தான்.

“நாம பேசி என்ன செய்ய அப்பா தானே சொல்லணும். அவர் என்ன அமைதியா இருக்காரு என்று ஆதிசேஷனிடம் கேட்டிருக்க, “கொஞ்சம் பொறுமையாக இரு அந்த வான்முகிலனுக்கு பாடம் புகட்ட வேணும்” என்றிருந்தார்.

ஆதிசேஷன் வைப்பது தானே சட்டம். தந்தை எதோ செய்கிறார் என்று வளமை போல் இவர்கள் கண்டு கொள்ளாது இருந்து விட,  திருமண பத்திரிகை அச்சிட்டு வந்த பின் தான் வான்முகிலனுக்கும், மலர்விழிக்கும் திருமண ஏற்பாடும் செய்யப்பட்டிருப்பதை அறிந்து கொண்டனர்.

ஏற்கனவே மலர்விழி மீது அளவில்லா வெறுப்பில் இருப்பவர்கள் தந்தையின் இந்த செயலில் கடும் கோபத்துக்குளாகினர். இதில் வான்முகிலன் எப்படி சம்மதித்தானென்றெல்லாம் இவர்கள் யோசித்த்துப் பார்க்கவுமில்லை. அது அவர்களுக்கு அவசியமுமில்லை.

“உங்க அப்பா நெருக்கடி தான் கொடுத்தாரு. மிரட்டலெல்லாம் எங்க வீட்டுல இருந்து தான் வந்தது” கொஞ்சம் நக்கலாக கூறியவாறே சாருமதியை பார்த்த வான்முகிலன் ஆதித்யனை ஏறிட்டு “உங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன். வாக்கெல்லாம் கொடுக்கல. கல்யாணம் நின்னிருச்சு. இப்போ உங்க பையன் கல்யாணம் நடக்கணுமா? இல்ல நிறுத்திடலாமா? என் அக்கா பொண்ணு வயித்துல உங்க குடும்ப வாரிசு வளருது. நீங்க யோசிச்சு முடிவு பண்ணுங்க” ஆதித்தை பெற்றது ஆதித்யன் அல்லவா அவனை பார்த்து கூறினான்.  

மலர்விழியை ஆதிசேஷனை தவிர குடும்பத்தில் யாருமே ஏற்றுக்கொள்ளவில்லையென்று ஆதிரியன் மூலம் வான்முகிலன் அறிந்து வைத்திருந்தான் தான். மலர்விழிக்காக இவர்கள் மாளவிகாவுக்கும், ஆதித்துக்கும் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்த மாட்டார்கள் ஆனால் ஆதிசேஷன் எடுத்த முடிவுக்கு எதிராக இவர்கள் செயல்படுவார்களா என்பது கேள்விக்குறி.

மாளவிகாவின் வயிற்றில் வளரும் வாரிசால் தங்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை என்று ஆதிசேஷன் இறுமாப்பாக கூறினாலும், சமூகத்தில் பணம், அந்தஸ்து என்று இருக்கும் அவர் குடும்பத்துக்கு இந்த விஷயம் வெளியே வந்தால் மாபெரும் அவமானம் தான்.

வான்முகிலன் இவர்களை மிரட்டாமல் “வாரிசு வளருது. அது வளர்ந்து கிட்டு இருக்கு. மறைக்க முடியாது. இன்னும் கொஞ்சம் நாளில் ஊருக்கே தெரிந்து விடும்” என்று மறைமுக அச்சுறுத்தல் தான் விடுத்தான்.  

“அதான் அப்பா இங்க இல்லையே. அவர் இல்லாத இடத்துல நாம முடிவு செய்யலாம். நம்ம கிட்ட கூட கேட்காம அந்த மலர்விழிக்கு அவர் வான்முகிலன மாப்பிள்ளையா பார்த்திருக்காரா? என் பொண்ணுக்கு பார்த்த மாப்புள. அதுவும் என் பொண்ண வேணாம்னு சொன்னவன அவர் பொண்ணுக்கு பார்பாரா? ஏற்கனவே குடும்பத்துல ஏகப்பட்ட பிரச்சினை. இதுல வான்முகிலன மாப்பிள்ளையா கொண்டு வந்து புதுசா வேற பிரச்சினையை உண்டு பண்ணனுமா?” சகோதரர்களோடு கலந்தாலோசித்த ஆதிசங்கர் வான்முகிலனிடம் பேசுமாறு ஆதித்யனை அனுப்பினான். 

“இதுல என்ன யோசிக்க வேண்டியிருக்கு. இவ்வளவு செலவு பண்ணி கல்யாணத்த ஏற்பாடு செஞ்சது நிறுத்தவா? அவளுக்காக எல்லாம் என் பையன் கல்யாணத்தக நிறுத்த முடியாது. என் பையன் கல்யாணம் ஏற்பாடு செஞ்சது போல நடக்கும்” என்றான் ஆதித்யன்.

மாளவிகா-ஆதித் திருமணம் ஆதிசேஷன் இல்லாமலையே நடைபெறுகிறது. இது அவருக்குத் தேவை தான் என்று எண்ணினான் வான்முகிலன்.

 “முகிலா உன் கல்யாணமும் இன்னைக்கே நடக்கணும்” காஞ்சனாதேவி மகனை ஏறிட்டாள்.

“அதான் கல்யாண பொண்ண போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்களே” நக்கலாக ஆரம்பித்தவன் காஞ்சனாதேவின் பார்வையில் அமைதியானான்.

“நான் உன் கிட்ட என்ன கேட்டேன்? எனக்காகவும் நம்ம குடும்பத்துக்காகவும் கல்யாணம் பண்ணிக்க சொன்னேன். குடும்பத்துக்காக பண்ணிக்க அவசியமில்லை. ஆனா இப்போ எனக்காக பண்ணிக்க?”

ஆதிதியை ஆதிசேஷன் வான்முகிலனுக்காக கேட்டு வந்த பொழுதே அவளை பார்த்து அந்த குடும்பத்தில் பெண்ணெடுக்க வேண்டுமா? என்று அஞ்சியவள் தான் காஞ்சனாதேவி.

இன்று வான்முகிலன் மாளவிகாவுக்காக மலர்விழியை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டதை கூட அரை மனதோடு தான் சம்மதித்திருந்தாள். 

மலர்விழியை பார்த்த மட்டில் நல்ல பெண்ணாக தெரிய மகன் வாழ்க்கை சிறக்கும் என்று நிம்மதியடைந்தவளுக்கு அவள் ஆதிசேஷனின் மகள் என்றது உறுத்தியது. ஆதிசேஷன் என்னமோ மலர்விழி வளர்ப்பு மகள் என்று தான் அறிமுகப்படுத்தினார். ஆனால் ஆதிசேஷனை சாருமதி வீட்டுக்கு அழைத்த  பொழுது வான்முகிலனிடம் “தேன்மொழி என் மனைவி” என்று கூறும் பொழுது காஞ்சனாதேவியும் அங்குதான் இருந்தாள். ஆதிசேஷன் நடந்ததை மறந்திருப்பார். காஞ்சனாதேவி மறக்கவில்லை.

ஆதிசேஷனின் பழைய வாழ்க்கையில் என்ன குளறுபடிகள் இருக்குமோ? அதனால் மகன் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டுவிடுமோ என்று அன்னையாக அஞ்சினாள். ஆனால் மாளவிகாவின் திருமணம் நடக்க வேண்டும் என்பதால் எதையுமே செய்ய முடியாமல் மகனுக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.

அவள் வேண்டுதலை கடவுள் செவி சாய்த்தார் போலும். மலர்விழியை காவல்துறையினர் அழைத்து சென்றிருக்க, வான்முகிலனின் திருமணம் நின்றிருந்தது.

இப்போதைக்கு தானே திருமணம் நின்றது, மீண்டும் ஆதிசேஷன் சுபியை ஆதிரியனுக்கு திருமணம் செய்து வைக்கும் பொழுது விளையாட மாட்டார் என்று என்ன நிச்சயம்? அதற்குள் வான்முகிலனின் திருமணத்தை நிகழ்த்தியாக வேண்டும் என்பது தான் காஞ்சனாதேவியின் தீர்மானம். அதனால் மகன் தனக்கு கொடுத்த வாக்கை நினைவு கூறினாள். 

“என்னம்மா பேசுற? ஆதிசேஷன் ஐயாக்கு வாக்கு கொடுத்திருக்கோம். அவர் பொண்ணுக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்கு நீ கொஞ்சம் கூட கவலைப்படாம உன் பையன் கல்யாணத்த பத்தி பேசுற? அவர் வந்து கேட்டா என்ன பதில் சொல்வ?” வான்முகிலன் பேசும் முன் சாருமதிதான் குறுக்கே புகுந்து பேசினாள்.

மலர்விழியை காவல்துறை அழைத்து சென்றதில் எங்கே சொத்து கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில், வான்முகிலனை குற்றம் சொல்ல முனைத்தவள் நிலஞ்சனாவும் வான்முகிலனும் காதலிப்பதாக கூறி, தேவையில்லாமல் அவளை இந்த பிரச்சினையில் இழுத்திருந்தாள்.

இப்பொழுது வான்முகிலன் நிலஞ்சனாவை திருமணம் செய்து கொண்டால் மாளவிகாவுக்கு அதிகமான சொத்து கிடைத்து விடாதே. எங்கே அன்னை இருவருக்கும் திருமணத்தை நிகழ்த்தி விடுவாளோ என்று தான் குறுக்கே பேசினாள்.

அக்கா பேசப் பேச பல்லைக் கடித்த வான்முகிலன் “ஆமா எனக்கு மலர்விழி கட்டி வச்சா, ஆதிசேஷன் உனக்கு என்ன கொடுக்குறதாக டீல் போட்டாரு. பெத்த பொண்ணுக்கு பால்ல தூக்க மருந்து கொடுத்து அவ கைய அறுத்திருக்க” சாருமதிக்கு கேட்க்கும்படி மட்டும் அடிக்குரலில் சீறினான் வான்முகிலன்.

“என்ன உளறுற?” இதுநாள் வரை சாருமதி எதை செய்தாலும் வான்முகிலன் குடும்பத்தினருக்காக பொறுத்துப் போனான். அக்காவிடம் எதையுமே கேட்டு சண்டை போட்டதில்லை. சமாதானமாகத்தான் பேசி சமாளித்து விட்டிருக்கிறான்.   

திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு மாளவிகா அவனிடத்தில் வந்து “என்ன மன்னிச்சிடுங்க மாமா? நான் தற்கொலைக்கு முயற்சி செய்யவே இல்ல. அம்மா தான் பால்ல தூக்க மருந்த கலந்து கொடுத்து என் கைய அறுத்துட்டாங்க. நீங்க கல்யாணம் பண்ணி சந்தோஷமாக வாழனும். எனக்காக ஒன்னும் நீங்க இந்த கல்யாணத்த பண்ணிக்காதீங்க. உங்களுக்காக பண்ணிக்கோங்க. உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி பொண்ண பார்த்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க. பிடிக்காத கல்யாணத்த எனக்காக பண்ணிக் கிட்டு என்னால நீங்க நிம்மதியில்லாம, சந்தோஷமில்லாம இருந்தா நான் எப்படி நிம்மதியோடும், சந்தோஷமாகவும் இருப்பேன்” கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரை துடைக்க தோன்றாமல் அவள் பேச

“அது உங்க அம்மா வேலை என்று எனக்கு ஏற்கனே தெரியும். வலது கை பழக்கமுடைய நீ, எப்படி இடது கையால கத்திய பிடிச்சி அவ்வளவு அழுத்தமா உன்னோட வலது கைய அறுத்துக்க முடியும்?

நீ மயங்கி இருந்தத பார்த்தப்போ வேற எதுவும் தோணல. பதறிட்டேன். நிதானமா யோசிச்சப்போ தான் ஏதோ தப்பா இருக்கு என்று புரிஞ்சது. டாக்டர் கிட்ட விசாரிச்சேன். டாக்டர் தான் நீ தூக்க மருந்தும் எடுத்திருக்க, கம்மியான டோஸ் தான். உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லனு சொன்னாரு.

நைட் நீ ஒண்ணுமே சாப்பிடல, அக்கா உனக்கு பால் கொடுத்து தூங்க வச்சான்னு அம்மா புலம்பினாங்க. பெத்த பொண்ணு என்றும் பார்க்காம இந்த எல்லை வரைக்கும் போன அக்கா என்ன வேணா செய்யலாம். எதுக்காக செய்யிறானு நான் கண்டு பிடிக்க வேணாம்? அதுக்காகத்தான் இந்த கல்யாணம் நீ கவலைப்படாம போய் கல்யாணத்துக்கு தயாராகு” என்றான்.

வான்முகிலனுக்கு மாளவிகாவின் மேல் கோபமில்லை. அவளை சாருமதி மிரட்டி இருப்பாள். அல்லது மாளவிகா சுயநலமாக சிந்தித்திருப்பாள். கருவை சுமக்கும் பெண்ணாக அவள் நிலைமை அவனுக்குப் புரிந்தது. 

அவன் கோபமெல்லாம் அவன் அக்கா சாருமதி மேல் தான். தான் செய்ததை சாருமதி உடனே ஒத்துக்கொள்வாளா? இல்லையென்றே சாதித்தாள்.

“என் கிட்ட டாக்டர் ரிப்போர் இருக்கு. இதோ இப்போவே மாளவிகாவை கூப்பிட்டு கேட்டு இந்த கல்யாணத்த நிறுத்தவா?” என்று அக்காவையே மிரட்ட சாருமதி மாளவிகாவின் மணமேடையில் பக்கம் சென்றாள்.

“எதுக்கு நீ அவள மிரட்டிக் கிட்டு இருக்க, நான் சொல்லுறத செய்” என்றாள் காஞ்சனாதேவி. 

“ஏன்மா தாலி கட்ட நான் தயாராக இருந்தாலும் இந்த பொண்ணு சம்மதிக்கணுமில்ல. அவங்க சம்மதிக்க மாட்டாங்க?” நிலஞ்சனாவை ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

நிலஞ்சனாவிடம் தன் மனதை பற்றியும், மனநிலை பற்றியும் தெளிவாக கூறிவிட்டான். அவளுக்கு தன் மீது இஷ்டம் கூட இல்லை. அவள் இந்த திருமணத்திற்கு ஒரு பொழுதும் சம்மதிக்க மாட்டாளென்று நூறு விகிதம் நம்பிக்கை இருக்கவே அவ்வாறு கூறினான்.

“ஏன் சம்மதிக்க மாட்டா? பெத்தவங்க இங்க இல்லாததாலையா? நான் அவங்க கிட்ட போன்லேயே பேசுறேன்?” மகனுக்கு எப்படியாவது திருமணம் நிகழ வேண்டும் என்று எண்ணும் அன்னை வேறு எவ்வாறு சிந்திப்பாள்? 

“என் அம்மா சின்ன வயசுலயே தவறிட்டாங்க. அப்பா சமீபத்துல தவறிட்டாங்க. எனக்குன்னு யாருமில்ல” காஞ்சனாதேவி பெற்றவர்களை பற்றி பேசியதில் நிலஞ்சனாவும் யதார்த்தமாக கூறினாள்.   

“அப்போ என்ன பிரச்சினை? எண்ணானாலும் கல்யாணத்துக்கு பிறகு பார்த்துக்கலாம். நான் உன் கால்ல வேணா விழுறேன்” இன்றே, இந்த முகூர்த்தத்திலையே மகனின் திருமணம் நடக்க வேண்டும் என்று காஞ்சனாதேவி முடிவு செய்து விட்டதன் தீவிரம் வார்த்தைகளில் வெளிப்பட்டது.

“அம்மா….”

“ஆன்டி”

காஞ்சனாதேவி அவ்வாறு சொன்னதற்கே இருவரும் பதறினர்.

“பிடிவாதம் பிடிக்காம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க. மத்தத அப்பொறம் பார்க்கலாம்”

“இப்போ என்னமா அவசரம். கொஞ்சம் நாள் போகட்டும்” தனக்கும் நிலஞ்சனாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்ற உண்மையை கூறாமல் வான்முகிலன் காலம் கடத்த முயன்றான்.

நிலஞ்சனா அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். குடும்பம் என்று வரும் பொழுது தனது விருப்பு, வெறுப்புக்களை தள்ளி வைத்து, யோசிக்காமல் எதையும் செய்ய துணிந்து விடுவான். இது தான் உண்மை என்று எண்ணிக் கொண்டிருக்கும் அன்னையின் மனம் நோகக் கூடாது என்று உண்மையை கூறாமல் சமாதானப்படுத்த முயல்கிறான்.

“முகிலா என்னென்னமோ சொல்லி நான் கூட உன்ன மிரட்டலாம். ஆனா எனக்கு அதுல துளி கூட இஷ்டமில்லை. திரும்பவும் கேட்குறேன். நான் இதுவரைக்கும் உன் கிட்ட எதுவுமே கேட்டதில்ல. இப்போ நீ இத பொண்ண கல்யாணம் பண்ணிக்க” என்று காஞ்சனாதேவி நிலஞ்சனாவை பார்த்தாள்.

அன்னை பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று அன்று வான்முகிலன் தான் காஞ்சனாதேவிக்கு வாக்கு கொடுத்தானே ஒழிய காஞ்சனாதேவி ஒன்றும் நான் பார்க்கும் பெண்ணை நீ திருமணம் செய்ய வேண்டும் என்று அன்று கேட்கவே இல்லை.

ஆனால் இன்று நிலைமை வேறு. வான்முகிலனால் அன்னையின் பேச்சை மீற முடியவில்லை. தலையசைத்தவன் நிலஞ்சனாவை பார்த்தான். அவள் சம்மதம் சொல்ல வேண்டுமே?

 “என்னமா யோசிக்கிற? நான் உன்ன என் பொண்ணு போல பாத்துக்கிறேன்” காஞ்சனாதேவி நிலஞ்சனாவின் கையை பற்றி மணவறைக்கு அழைத்தாள்.   

எதுவுமே பேசாமல் மணவறையில் வந்து அமர்ந்து கொண்டவளின் அருகில் வான்முகிலனும் வந்து அமர்ந்து கொண்டான்.

உனக்கு சம்மதமா என்று வான்முகிலன் நிலஞ்சனாவிடம் கேட்கவே இல்லை. கேட்டிருக்கணுமோ என்று நினைக்கும் அளவுக்கு அவன் வாழ்க்கை மாறப்போகிறது என்று அவனுக்குத் தெரியவில்லை.

திருமணம் இனிதே நிறைவேறிய பின் மாளவிகாவை ஆதிசேஷனின் வீட்டில் விட சாருமதியோடு சந்த்ரமதியையும் அனுப்பி வைத்த காஞ்சனாதேவி வான்முகிலனையும், நிலஞ்சனாவையும் தன்னோடு வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாள்.  

வீட்டில் நடைபெறும் அனைத்து சடங்குகளும் நிறைவு பெரும் வரையில் அமைதியாக இருந்த வான்முகிலன் விறுவிறுவென மாடியேறி சென்று விட்டான்.

நிலஞ்சனா ஒரு தடவை வான்முகிலனின் வீட்டுக்கு வந்திருக்கின்றாள். ராமோடு வந்ததால் என்னவோ காவலாளி உள்ளே விட்டார். ராம் அழைத்து வந்து அவளை காரியாலய அறையில் அமர்த்தியிருந்தான். அன்று வீட்டார் யாரையும் அவள் சந்திக்கவில்லை. சந்திக்கும் சூழ்நிலையும் அமையவில்லை.

நிலஞ்சனா வான்முகிலனை மதுரை செல்லும் விமானத்தில் சந்தித்ததாக வான்முகிலன் நினைத்துக் கொண்டிருக்கின்றான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக பவானி வி.எம் கம்பனியில் வேலைக்கு சேர்ந்ததிலிருந்தே தினமும் அலைபேசியில் நிலஞ்சனாவிடம் வான்முகிலனை பற்றி தான் பேசுவாள்.

“என்ன வேலைக்கு போன இடத்துல பாஸ ரொம்ப பிடிச்சிருக்கு போல” பவானி வான்முகிலனை விரும்புகிறாளோ என்ற சந்தேகத்தில் நிலஞ்சனா கிண்டல் செய்தாள்.

“லவ் பண்ணுற அளவுக்கு பிடிக்கல. பிகோர்ஸ் அவர் என் பாஸ். அவர் கிட்ட பேசி என் ப்ரெண்ட கட்டிக்க சொல்லலாம்னு இருக்கேன்”

பவானி கிண்டல் செய்வதாக ஆரம்பத்தில் நிலஞ்சனா நினைக்க, போகப்போக வான்முகிலன் தான் நிலஞ்சனாவுக்கு சரியான ஜோடி என்று பேசினவள். இன்று வான்முகிலன் என்னவெல்லாம் செய்தான், என்ன நிறத்தில் ஆடை அணிந்து வந்திருந்தான் என்று முதற்கொண்டு கூறத் தொடங்க நிலஞ்சனாவும் ஆர்வமாக கதை கேட்பாள்.

“யாரு சாமி நீ. எனக்கே உன்ன பார்க்கணும் போல இருக்கே” பவானியின் பேச்சை பெரிதாக கண்டு கொள்ளாத நிலஞ்சனாவின் மனமோ வான்முகிலனை பார்க்க வேண்டும் என்று தொல்லை செய்ய இவளும் கிண்டல் செய்யலானாள்.

தோழிகள் வான்முகிலனை பற்றி பேசாத நாளே இல்லை.

“ஹேய் பேசாம நீ சென்னை வந்துடேன்” பவனி அழைத்தாள்.

“உனக்குத்தான் தெரியுமே நான் அப்பாவை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன்னு” என்றாள் நிலஞ்சனா.

இரண்டு வருடங்களுக்கு முன்பே நிலஞ்சனா வான்முகிலனிடம் வந்து சேர்ந்திருக்க வேண்டியவள் அவள் தந்தை ராஜகோபாலை பிரிய முடியாமல் மறுத்து விட்டாள்.

“சரி நீ தான் வர மாட்டேன்னு சொல்லுற பாஸ் டில்லி வராரு டி” என்ற பவானி வான்முகிலன் எந்த ஹோட்டலில் தங்கியிருக்கின்றான், எந்த அறையில் இருக்கின்றான், எத்தனை நாள் இருக்கின்றான் என்ற தகவல்களை கூறியிருந்தாள்.  

முதல் நாள் ஹோட்டலுக்கு சென்று வான்முகிலனை சந்திக்க வேண்டும் என்று கூறி அறை வாயிற் வரை சென்றவள் அழைப்பு மணியை அழுத்தி விட்டு அவன் வெளியே வரும் முன் அங்கிருந்து சென்று விட்டாள்.

வெளியே வந்த வான்முகிலன் கீழே இருந்த உணவுப் பாத்திரத்தை பார்த்து ராம் தான் கொண்டு வந்து வைத்திருப்பானென்று உள்ளே எடுத்துச் சென்றான்.

வான்முகிலனை நிலஞ்சனா ஊடகங்களின் மூலம் பார்த்து ரசித்திருக்கின்றாள் அதனால் அவளுக்கு அவனை அடையாளம் காண்பது ஒன்றும் சிரமனாக இருக்கவில்லை.

மின்தூக்கியின் கதவு சாத்தும் வேளையில் வான்முகிலனை பார்த்து ரசித்தவள், கீழே அவன் வரும் வரையில் காத்திருந்து மீண்டும் அவனை கண்குளிர தரிசித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

பவானியிடம் கேட்டு வான்முகிலனுக்கு என்ன பிடிக்கும் என்று அறிந்து கொண்டு தினமும் அவனுக்காக சமைத்து எடுத்துக் கொண்டு செல்பவள் அவன் அறைக்கு முன்பாக வைத்து அழைப்பு மணியை அடித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விடுவாள்.

ராம் தான் தனக்காக எங்கிருந்தோ வீட்டுச் சாப்பாட்டை எடுத்து வந்திருக்கின்றான் என்று எண்ணிக் கொண்டிருந்தான் வான்முகிலன்.

நிலஞ்சனா வான்முகிலன் அறியாமல் அவனை பார்த்திருந்தாலே ஒழிய அவனிடம் பேச முயற்சி செய்யவில்லை.

செய்திருக்க வேண்டுமோ? அவன் சென்னை சென்று மூன்று மாதங்களின் பின் பவானியிடமிருந்து வந்த அழைப்பில் அவனுக்கு திருமணமாகப் போகிறது என்று தான் கூறியிருந்தாள்.

அதன்பின் பவானி வான்முகிலனை பற்றி பேச விரும்பவே இல்லை. நிலஞ்சனாவும் கேட்கவில்லை.

தந்தை இறந்த பின் தனக்கு யாருமில்லை என்று புலம்பியவளை சென்னை வரும்படி கூறிதே பவானிதான்.

மதுரை செல்லும் விமானத்தில் வான்முகிலனை சந்திப்பாளென்று நிலஞ்சனா கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை. அவனிடத்தில் ஒரு அறிமுகம் தேவையென்று தான் பேச்சுக் கொடுத்தாள். தூங்கும் அவனை ரசித்துப் பார்த்தவள் விமானம் தரையிறங்கிய பின் வான்முகிலன் அவசரமாக சென்னை செல்வது விபத்துக்குள்ளான அவனது உறவினர்களை காணவென்று புரிந்து கொண்டு தான் அவனோடு சென்னை வரை பயணம் செய்தாள். அது அவன் மனைவியாக இருக்கக் கூடும் என்று எண்ணவில்லை.

அவனுக்கு தான் யாரென்றே தெரியாது. ஆறுதல் சொல்லவும் முடியாது. அவனிடம் எவ்வாறு நெருங்குவது என்று யோசித்தவளுக்கு பவானியை தேடிச் செல்ல சந்தர்ப்பம் அமைந்தது. அவளும் சென்றாள். ஆனால் அவனை சந்திக்க என்ன? உள்ளே செல்லவே காவலாளி விடவில்லையே.

வேலைக்காக சிதம்பரம் சாரிடம் கூறியிருக்க, இவளது நல்ல நேரம் வான்முகிலன் கம்பனியிலையே வேலையும் கிடைத்தது.

இது தான் அவன் குணம், இப்படித்தான் நடந்துகொள்வான் என்று பவானி கூறக் கேட்டே அவனை விரும்ப ஆரம்பித்தவளுக்கு, அருகிலிருந்து அவனை பார்க்கும் பொழுது அவள் மனம் தடுமாறாதா?

தன் மனதை கூற முடியாதபடி வான்முகிலன் இன்னும் அவன் மனைவியை காதலித்துக் கொண்டிருக்கின்றான். அதிலிருந்து அவனை வெளியே கொண்டு வர வேண்டுமானால் நடந்த விமான விபத்து திட்டமிட்ட சதியா? இல்லையா? என்பதை கண்டறிய வேண்டும்.

அவன் தன்னை காதலிக்கின்றானோ இல்லையோ அவனுக்கென்று ஒரு வாழ்க்கை அமைய வேண்டும். அவன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றெண்ணினாள்.

மலர்விழியை பற்றி அறிந்து கொண்ட பொழுதும் “மலர்விழியை காதலிக்கிறாயா?” என்று திரும்பத் திரும்ப கேட்டு அவனை சீண்டியது கூட அவன் மனதை அறிந்துக்கொள்ளத்தான்.

வான்முகிலனின் சம்மதமில்லாமல் ஒருநாளும் அவள் அவனை திருமணம் செய்துகொள்ள நினைக்கவேயில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் இருவரையும் ஒன்று சேர்த்திருந்தது.

வான்முகிலனை நன்கு அறிந்து வைத்திருந்த நிலஞ்சனாவோ அடுத்து வான்முகிலன் என்ன பேசுவான் என்று தெரியுமென்பதால் உள்ளுக்குள் புன்னகைத்தவள் அதற்காக காத்திருக்கலானாள்.

மலரிலும் மெல்லிய மனம் கொண்டவள் என்று பெண்களை பூவோடு ஒப்பிடுவார்கள். ஆனால் தீ கொழுந்து விட்டு எரியும் செங்காந்தள் மலரை எந்த பெண்ணோடும் ஒப்பிடுவார்களா என்று தெரியவில்லை.

தான் காதலித்தவனையும், தன்னுடைய குடும்பத்தையும் பழிதீர்க்க நெஞ்சம் முழுவதும் வஞ்சத்தோடு காத்திருக்கும் மலர்விழி செங்காந்தள் மலரை போல் எந்த பாகத்தை தொட்டாலும் மரணத்தை கொடுக்க கூடியவள்.

அதே செங்காந்தள் மலரில் மருத்துவமும் உண்டு. மனைவியை இழந்த வான்முகிலனை புரிந்து கொண்டு, அவன் மனதின் காயங்களை ஆற்ற அவனுக்கு கிடைத்த செங்காந்த மலர் தான் நிலஞ்சனா.

Advertisement