Advertisement

அத்தியாயம் 14

ஆதித்-மாளவிகா மற்றும் வான்முகிலன்-மலர்விழி திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடந்துக் கொண்டிருந்தது.

“என்னம்மா இப்போ உனக்கு சந்தோசம் தானே” மலர்விழியை பார்த்துக் கேட்டார் ஆதிசேஷன்.

அவர் கையை பற்றி “நீங்க சந்தோஷமாக இருக்கிறீங்களா? அப்பா…” அன்பு பொங்க புன்னகைத்தாள் மலர்விழி.

“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” உதடுகள் விரிய புன்னகைத்தார் ஆதிசேஷன்.

“ஆமா அப்பா… வான்முகிலன் எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சாரு. நீங்க அவர மிரட்டி ஒன்னும் சம்மதம் வாங்கலையே” நடந்தது எதுவும் தெரியாதது போலவே பேசினாள் மலர்விழி.

“சே சே நான் எதுக்கு மிரட்டணும். அவன் அக்கா பொண்ணு நம்ம ஆதித்தோட வாரிச சுமக்குறா இல்ல. கல்யாணம் பண்ணி வைக்க சொன்னான். ஆதிரியன் படுத்த படுக்கைல இருக்கும் போது எப்படி கல்யாணம் பண்ணுறது? ஆதிரியன் கண் முழிக்கட்டும் என்று சொன்னேன். அவசரமா பண்ணனும் என்றா உன்ன கல்யாணம் பண்ணிக்கணும் என்று கோரிக்கை வச்சேன். சரியென்று சொல்லிட்டான்” என்றார்.

“ஓஹ்… கோரிக்கை தான் வச்சீங்களா. மிரட்டல இல்ல. எனக்காக நீங்க யார் கிட்டயும் சண்டை போட கூடாது” வரும் சிரிப்பை அடக்கியவாறே பேசினாள்.

   

“உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்மா…” என்ற ஆதிசேஷன் என்ன செய்தார் என்று யோசித்துப் பார்த்தார்.

வான்முகிலன் மலர்விழியை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுத்ததற்கு காரணம் நிலஞ்சனா மட்டுமென்றால் நிலஞ்சனாவை கொலை செய்யக் கூட தயங்கியிருக்க மாட்டார்.

ஆனால் மலர்விழி கூறியது போல் அவள் தந்தையில்லாதவள் என்று தான் வான்முகிலன் மலர்விழியை நிராகரித்திருக்கின்றானென்று அவன் தேன்மொழி பற்றி பேசியதிலையே புரிந்து கொண்டார்.

நிலஞ்சனாவை கொன்று வான்முகிலனை கோபத்துக்குள்ளாக்கி மலர்விழிக்கு திருமணம் செய்து வைத்தால் தனது ஒரே மகள் மலர்விழி நிம்மதியாக வாழ மாட்டாள். வான்முகிலனே திருமணத்துக்கு சம்மதம் சொல்ல வேண்டும் என்று ஆதித்தை மாளவிகாவை பார்க்க விடாமலும், பேச விடாமலும், சுபியை ஆதிரியனை பார்க்க விடாமலும் செய்தார்.

அது பிரதிபலித்து மாளவிகாவும் சுபியும் அழ சாருமதி ஆதிசேஷனை அலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தாள்.

“வீட்டு பொம்பளைங்க நீங்க அழுதா தான் ஆம்பளைங்க மனசு கரையும். உங்க தம்பி மனச கரைக்க உங்களால முடியாதா? கண்ணீராலால கரையாத கல் மனச கொலை மிரட்டல் கூட கரைக்கும்மா” ஆதிசேஷன் சாருமதியை உசுப்பேத்தி விட்டிருக்க, தம்பி என்றும் பாராமல் காலில் விழுந்தாள். செத்துடுவோம் என்று மிரட்டினாள் சாருமதி.

“அவன் எதற்கும் அசருரமாதிரி தெரியல சம்பந்தி. என்ன பண்ணுறது என்றே எனக்குத் தெரியல” சாருமதி புலம்ப

“அப்போ எங்க வீட்டு மருமக தற்கொலைக்கு முயற்சி பண்ணாதான் ஒத்துப்பார் போல” என்று இதை தான் செய்ய வேண்டும் என்று சொல்லாமல் சொன்னார்.

“தீயென்றால் கை வெந்துவிடுமா?” தூங்கிக் கொண்டிருந்த மாளவிகாவின் கையை அறுத்து கத்திக் கூச்சலிட்டதே சாருமதி தான்.

அவள் நினைத்தது போல் வான்முகிலன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த உடன் ஆதிசேஷனை அழைத்து வான்முகிலன் சம்மதம் சொன்னதை கூறியும் விட்டாள்.

கையில் கட்டோட கண்விழித்த மாளவிகா தான் நடந்தது என்னவென்று புரியாமல் முழித்தாள். 

“என்ன ஆச்சு? நான் எப்படி ஹாஸ்பிடல்ல?” இரவுணவு வேண்டாம் இருக்கும் மனநிலையில் தன்னால் சாப்பிட முடியாது என்று தூங்கப் போனவளை அன்னை சாருமதி வலுக்கட்டாயமாக பால் புகட்டி தூங்க வைத்தது ஞாபகம் வந்தது.

“என்னம்மா ஆச்சு?”

தான் தன்னுடைய சொந்த மகளின் கையை அறுக்கும் பொழுது அவள் கத்தி கலாட்டா பண்ணி விடக் கூடாது. தான் போட்ட திட்டம் தோல்வியடையக் கூடாதென்று சாருமதி மாளவிகாகு கொடுத்த பாலில் தூக்க மருந்து கலந்து கொடுத்திருந்தாள்.    

அதை கூறாமல் “ஆ… தூக்கத்துல கைய அறுத்து தற்கொலை செஞ்சிக்க பார்த்த நான் தான் உன்ன காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்” என்றாள் சாருமதி.

அன்னை கூறிய விதத்திலையே என்ன நடந்தது என்று தெளிவாக தெரிய “அம்மா… என்ன காரியம் செஞ்சிருக்க?” மாளவிகாவுக்கு கோபத்தோடு அழுகையும் வந்தது. தன்னை பெற்றவளா இப்படி செய்தாள்.

“ஆமாண்டி.. முகிலன் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான். இனி உன் வாழ்க்கைல எந்த பிரச்சினையுமில்ல. அடுத்தவங்களை பத்தி யோசிக்காம உன் வாழ்க்கையை பார்” அதிகாரக் குரலில் அறிவுரை கூற, மாளவிகா அமைதியானாள். 

நடப்பதையெல்லாம் உடனுக்குடன் சாருமதி ஆதிசேஷனிடம் சொல்லிவிடுவதால் வான்முகிலன் வீட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து வைத்திருந்தார் ஆதிசேஷன்.

திருமண வேலைகள் தங்கு தடையின்றி நடைபெறுவதால் மட்டும் அவர் சந்தோஷமாக இல்லை. வான்முகிலனை வென்று விட்டோம் என்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்தார். 

ஆனால் மலர்விழிக்கு அந்த அளவுக்கு ஆனந்தமில்லை. வான்முகிலன் விருப்பமில்லாமல் சம்மதித்து விட்டான். அவன் காதலி அந்த நிலஞ்சனா என்ன செய்வாள்? என்ன மனநிலைக்கு தள்ளப்படுவாள்? அவர்களை சந்தித்து அவர்களின் முகங்களை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. காரணமில்லாமல் அவர்களை சந்திக்கவும் முடியாதே.

“அப்பா… எனக்கு ஒரு உதவி செய்வீங்களா?”

“என்னமா… சொல்லுமா?” அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என்பது போல் துடித்தார் ஆதிசேஷன்.

“நம்ம வீட்டுல தான் யாரும் இன்னுமே என்ன ஏத்துக்கல. ப்ரெண்ட்ஸ் என்றும் எனக்கு யாருமில்ல. அவர் கிட்ட சொல்லி அவரோட பிரென்ட் லாயர் நிலஞ்சனாவ எனக்கு மணப்பெண் தோழியா இருக்க சொல்ல முடியுமா?”

மலர்விழியின் சூழ்ச்சி புரியாமல் எவ்வளவு வெள்ளந்தியாக இருக்கிறாள் தன் மகள். வான்முகிலனின் காதலியை தோழியென்று நினைத்துக் கொண்டு இருக்கிறாள். அப்பாவிப் பெண் என்றெண்ணியவாறே “அவ்வளவு தானே. நான் பாத்துக்கிறேன்மா” ஆறுதலாக மகளின் கையை தட்டிக் கொடுத்தார்.   

“அப்பா முகிலா பொண்ண பார்க்க வேணாமா…”

“பூ வைக்க வேணாமா?”

“நிச்சயம் பண்ண வேணாமா?”

“மாங்கல்யம் செய்ய வேணாம்?”

“பொண்ணுக்கு நலங்கு வைக்கணும்டா”

இப்படி எதை காஞ்சனாதேவி வான்முகிலனிடம் கேட்டாலும் அவனிடமிருந்து வந்ததோ ஒரே பதில் “எந்த சடங்கும் வேணாம்” என்பது தான்.

“பொண்ணு கழுத்துல தாலியாச்சும் கட்டினா சரி தான்” சாருமதி கிண்டல் செய்தவாறே நகர்வாள்.

கல்யாண நாளும் அழகாக விடிந்தது. ஒரே மண்டபத்தில் இரு மணவறையில் அமைத்து ஒன்றில் வான்முகிலன் அமர்ந்து மந்திரம் ஓதிக் கொண்டிருக்க, மற்றதில் ஆதித் அமர்ந்து மந்திரம் ஓதிக் கொண்டிருந்தான். 

இரண்டு திருமணத்திற்கும் இரண்டு முகூர்த்த நேரங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். இரண்டு கல்யாணத்தையும் கண்குளிர பார்க்கலாமென்று காஞ்சனாதேவி கூற,

“அப்போ என் பொண்ணு கல்யாணத்த முதல்ல வச்சிக்கலாம்” என்றார் ஆதிசேஷன்.

“ஏன் ஆதித்- மாளவிகா கல்யாணம் முன்னாடி நடந்தா நான் உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்ட மாட்டேன்னு நினைக்கிறீங்களா?” ஆதிசேஷன் அவசரப்பட்டதில் கிண்டலடித்த வான்முகிலன் “ஒரே முகூர்த்தத்துல, ஒரே நேரத்துல கல்யாணம் நடக்கட்டும். யாரும் யார் மேலையும் சந்தேகப்பட வேண்டியதில்லையே” என்று விட்டான்.

மணப்பெண்ணுக்கான ஒரு அறையில் மலர்விழி தயாராகிக் கொண்டிருக்க அவளுக்குத் துணையாக நிலஞ்சனா அமர்ந்திருந்தாள்.

மிரட்டி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க முடியாத வான்முகிலனை அவனது குடும்பம் என்ற பலவீனத்தை உபயோகித்து தான் பணிய வைத்திருந்தார் ஆதிசேஷன்.

நிலஞ்சனாவை மிரட்டவும் முடியாது. அவளது பலவீனம் என்னவென்றும் தெரியாது. அப்படியிருக்க நிலஞ்சனா எப்படி மலர்விழியோடு அமர்ந்திருக்கின்றாள்?

திருமண பத்திரிகைகள் அச்சிடப்பட்டு வந்த உடனே அதை எடுத்துக் கொண்டு ஆதிசேஷன் வான்முகிலனின் காரியாலயம் வந்தார்.

இன்முகமாக வான்முகிலன் அவரை வரவேற்கவில்லையானாலும் முகம் திருப்பவில்லை.

“என்ன விஷயமாக வந்தீங்க?” நேரடியாகவே விசயத்துக்கு வந்தான்.

“நான் தொழில் விஷயமாக பேச வரல வான்முகிலன் கல்யாண விஷயமா வந்தேன்” இன்னும் நீ அடங்கவே இல்லையா? என்பது போல் பார்த்தார்.

“ஓஹ்… அப்போ வீட்டுக்கே வர வேண்டியது தானே எதுக்கு இங்க வந்தீங்க?” என்றவாறே கைக்கடிகாரத்தை பார்த்தான். சொல்லாமல் கொள்ளாமல் வந்தது மட்டுமல்லாமல் தன்னுடைய தொழில் நேரத்தை வீணடிக்கிறார் என்பதை சொல்லாமல் சொன்னான்.

அது ஆதிசேஷனுக்கு நன்றாகவே புரிந்தது. “நான் வந்தது மிஸ் நிலஞ்சனாவ கல்யாணத்துக்கு அழைக்க. எங்க அவங்க? உங்க அறைல காணோம்?” கிண்டலாகத்தான் கேட்டார்.

கூடவே வைத்து சுற்றிக் கொண்டு இருக்கிறாயே, காதலிப்பதாகவும் சொன்னாயே, பார் நிலஞ்சனாவை உன் வாழ்க்கையிலிருந்து துரத்தி விட்டேன். என் மகள் உன் வாழ்க்கைக்குள் வந்து விட்டால் அவள் அந்த நிலஞ்சனாவை இங்கிருந்தும் துரத்தி விடுவாள் என்றது அவர் பார்வை.

“என்னை பார்க்கணும் என்றாலே அபொய்ன்ட்மென்ட் வாங்கிட்டு தான் வரணும். நிலஞ்சனா என்னோட லாயர் அவங்க நீங்க பெர்சனலா பார்க்கணும் என்றா அவங்கள அவங்க வீட்டுலையே போய் பார்த்திருக்க வேண்டியது தானே”

“என் அனுமதியில்லாமல் இங்கே அமர்ந்திருக்கிறாய் இதில் நீ என்னிடம் வேலை பார்பவளை பார்க்க வந்தாய் என்கிறாயா?” என்று ஆதிசேஷனின் மூக்கை உடைத்தான் வான்முகிலன்.

இப்படி இருவரும் மாறி மாறி வாய் சண்டை போட்டுக் கொண்டிருக்க, அதை பார்த்த ராம் மெதுவாக நழுவிச் சென்று நிலஞ்சனாவை அழைத்து வந்தான். 

நிலஞ்சனாவை பார்த்ததும் “வாம்மா வந்து இப்படி உக்காரு” ஆதிசேஷன் அன்பாக அழைக்க யோசனையாக அவர் எதிரே அமர்ந்தாள் நிலஞ்சனா.

“என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன். நீ கண்டிப்பாக வரணும்” என்று கல்யாண பத்திரிக்கையை நிலஞ்சனாவிடம் நீட்டியவர் “என் பொண்ணு பொறக்குறப்போ கூட இருந்தேன். வளருறப்போ கூட இருக்கல. அவ கல்யாணத்த சிறப்பா பண்ணனும் எங்குறது என்னோட ஆச. என்னோட குடும்பம் அவள முழு மனச ஏத்துக்கல. தோழிகள் என்றும் அவளுக்கு யாருமில்ல. அவ கூட அவ வயசுல ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்கும். வான்முகிலனுக்கு தெரிஞ்ச நீயாக இருந்தா இன்னும் நல்லா இருக்கும். ஒரு அப்பாவாக கேட்குறேன் என் பொண்ணு கூட இருப்பியா?” உத்தரவிடாமல் வழமைக்கு மாறாக மலர்விழியை பெற்ற அப்பாவாக கோரிக்கையாகத்தான் கேட்டார்.

“கண்டிப்பா இருக்கேன் சார். எப்படியும் மிஸ்டர் வான்முகிலன் கல்யாணத்துக்கு நான் வரணும் இல்லையா? அவருக்காக வந்தாலென்ன அவர் திருமணம் செய்யும் பெண்ணுக்காக வந்தாலென்ன? எனக்கும் அவரோட குடும்பத்தார பத்தி தெரியாது. நீங்க சொல்லுறது போல மலர்விழி என் வயசு தானே அவங்க கூட இருந்தா எனக்கு கம்படபளா இருக்கும்” என்றாள்.

“என்ன இவ வான்முகிலனை திருமணம் செய்ய முடியவில்லையே என்ற கோபமோ, வருத்தமோ இல்லாமல் பேசுகிறாளே! நாம தான் இருவரையும் தப்பாக நினைத்து விட்டோமோ” என்று யோசனையாக வெளியேறினார் ஆதிசேஷன். 

“நானே உன்ன என் கல்யாணத்துக்கு கூப்பிடல. இதுல நீ எனக்காக வருவியாம். வந்து மலர்விழியோட உக்காந்திருப்பியாம். எந்த ஊரு நியாயம் இது?”

மலர்விழியோடு இருக்கிறேன் என்றதில் வான்முகிலனுக்கு நிலஞ்சனா மீது கோபம் வந்தது. ஆனாலும் திருமணத்திற்கு செல்ல வேண்டும், வேண்டாம் என்று கூற தன்னால் முடியாது. அது அவளுடைய தனிப்பட்ட விருப்பம். கோபத்தை இப்படித்தானே காட்ட முடியும்.

“இப்போ நான் கல்யாணத்துக்கு வர்றது பிரச்சினையா? மலர்விழி கூட இருக்குறது பிரச்சினையா?”

“அந்தாளுதான் கேக்குறாரு என்றா மனசு உருகி உடனே ஓகே என்று சொல்லிடுவியா? ஏற்கனவே அவர் நாம லவ் பண்ணுறதாக நினைக்கிறாரு. அதனால தான் உன்ன கல்யாணத்துக்கே கூப்பிட்டாரு. அவரா கூப்பிட்டாரா? மலர்விழி கூப்பிட சொன்னாளோ? இது தெரியாம நீயும் வரேன்னு உருகுற”

“ஆமா அவங்க தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க. இப்போ நான் பேசினத்துல ஆதிசேஷன் சார் புரிஞ்சிகிட்டு இருப்பாரு. இதையே மலர்விழிக்கும் புரிய வச்சிட்டா உங்க வாழ்க நிம்மதியா இருக்கும். ஏற்கனவே அவங்க உங்க மேல கோபமா இருக்காங்க. இதுல என்ன வச்சி உங்க மேல சந்தேகப்பட்டு உங்க நிம்மதிய எடுத்துடுவாங்க. இது தேவையா?” வான்முகிலனை பார்த்து புன்னகைத்தாள்.

“ஆமா நான் அப்படியே அவள உருகி உருகி லவ் பண்ணி கல்யாணம் பண்ண போறேன் பாரு. அவ சொல்லுறத கேட்டு ரியாக்ட் பண்ண” கோபத்தில் முகம் சிவந்தான் வான்முகிலன்.

என்ன இவன் சிறுபிள்ளை போல் கோபப்படுகிறான் என்று “அவங்கள பிடிக்கலைன்னா பக்கத்துல இருக்குற பொண்ணுக்கு தாலி கட்டிடுங்க. மலர்விழிகிட்ட இருந்து மட்டுமில்ல ஆதிசேஷன் கிட்ட இருந்தும் தப்பிச்சிடுவீங்க” என்று சிரித்தாள் நிலஞ்சனா.

“அப்படி பண்ணா ஆதிசேஷன் கல்யாணமேடை என்றும் கூட பார்க்காம என்ன கொன்னுடுவாரு” என்றான்.

“அப்போ உங்களுக்கு தப்பிக்க வழியே இல்ல. நான் வேணா மிஸ் மலர்விழி கிட்ட பேசிப் பார்க்கவா?”

“ஒன்னும் வேணாம். இது தான் என் விதினா யாரால மாத்த முடியும்?”  கோப்பை புரட்டி பார்க்க ஆரம்பிக்க, அவனை சீண்டாமல் நிலஞ்சனா வெளியேறியிருந்தாள்.

மலர்விழியின் ஆடை அலங்காரம் எல்லாம் முடியும் வரையில் மலர்விழி அமர்ந்திருக்கும் நிலஞ்சனாவை கண்ணாடி வழியாக கவனித்துக் கொண்டிருந்தாள்.

இவள் வான்முகிலனின் திருமணத்திற்கு வருவாளென்று தெரியும். தந்தை இவளை தன்னோடு இருக்க சம்மதம் பெற்றுக்கொள்வார் என்றும் தெரியும். ஆனால் இவள் மனதில் என்ன இருக்கிறது என்று அறிவது தானே கடினம்.

இவளிடம் பேச்சுக்கு கொடுத்தால் இவள் என் வாயை பிடுங்கும் ரகமாச்சே. அதனால் சாதாரணமாகத்தான் பேச வேண்டும் என்பது தான் அவள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

“நான் எப்படி இருக்கேன்? அழகா இருக்கேனா? இந்த சாரி. ஜுவேல்ஸ் எல்லாம் நல்லா இருக்கா?” மலர்விழி ஆர்வமாக ஒன்றும் நிலஞ்சனாவிடம் கேட்கவில்லை. பேச்சை ஆரம்பிக்கத்தான் கேட்டாள்.

ஒரே பார்வையில் மேலிருந்து கீழ் வரை பார்த்தவள் “ஆ பெர்பெக்ட்டா இருக்கு. எந்த குறையும் இல்ல” என்றாள்

“உங்களுக்கு ஒன்னும் வருத்தமில்லையே” தயங்கி தயங்கி கேட்பது போல் வார்த்தைகளை நிறுத்தி, இழுத்து கேட்டாள்.

“எனக்கு என்ன வருத்தம்? புரியல?” மலர்விழி என்ன கேட்கின்றாளென்று நிலஞ்சனாவுக்கு நன்றாகவே புரிந்தது. அவள் என்று வாயை திறந்து மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூறியிருக்கின்றாள்? அவள் செய்வது மற்றவர்களின் வாயை கிளறி அவர்களின் மனதில் உள்ளதை சொல்ல வைப்பது தானே.

“இல்ல இந்த கல்யாணம் நடக்குறதுல உங்களுக்கு ஒன்னும் வருத்தமில்லையே” தான் கேட்டது இவளுக்கு புரியாவில்லையோ என்று கல்யாணம் என்ற வார்த்தையை சேர்த்திருந்தாள் மலர்விழி.

“இவங்க எதுக்கு வருத்த படணும்?” என்றவாறே வந்தாள் சாருமதி.

சாருமதி வான்முகிலனின் அக்கா என்று நிலஞ்சனாவுக்குத் தெரியும். ஆனால் சாருமதிக்கு நிலஞ்சனா யார் என்று சரியாகத் தெரியாது.

“நான் நிலஞ்சனா. மிஸ்டர் வான்முகிலனோட லாயர்” நிலஞ்சனா இந்த அறிமுகம் போதுமென்று கூற,

“நீங்க யார் என்று சொல்லிடீங்க. நீங்க அவருக்கு யார் என்று சொல்லுங்க. இந்த கல்யாணமே வான்முகிலன கட்டாயப்படுத்தி நடக்கிறதா எல்லாரும் பேசிக்கிறாங்க. கல்யாணத்துக்கு பிறகு எங்களுக்குள்ள சண்டை வந்தா, அவர் காதலிச்ச உங்கள கல்யாணம் பண்ணி இருந்தா அவர் சந்தோஷமா இருந்திருப்பார் என்று ஊரே பேசும்.

இந்த உண்மை தெரிஞ்சும் நான் அவர கல்யாணம் பண்ணிகிட்டேன்னு என்ன தான் தப்பா பேசுவாங்க. என் கூட வாழுற வாழ்க்கைல அவர் சந்தோசமாக இல்லைனா காதலிக்கிற உங்க ரெண்டு பேரையும் பிரிச்சுட்டோமே என்ற குற்ற உணர்ச்சி என்ன கொன்னுடும்” கலங்கிய கண்களை துடைப்பது போல் அவர்களுக்கு முதுகு காட்டி பாசாங்கு செய்தாள் மலர்விழி. 

சாருமதி எப்படிப்பட்டவள் என்று மலர்விழிக்கு நன்றாகவே தெரியும். இந்த திருமணம் எக்காரணத்தைக் கொண்டும் நிற்காது. திருமணத்திற்கு பின் வான்முகிலனை ஒருவழி செய்யும் பொழுது நிலஞ்சனாவும் வான்முகிலனும் காதலித்தார்கள் என்பதை அவன் வீட்டில் யாராவது அறிந்திருக்க வேண்டியே அப்பாவி போல் கூறினாள். 

“என்ன? முகிலன் இந்த பொண்ண லவ் பண்ணுறானா?” சாருமதி அதிர்ந்து விழிக்க,

மலர்விழியின் சில அவதாரங்களை பார்த்து விட்ட நிலஞ்சனாவுக்கு அவள் ஏதோ திட்டமிடுகிறாளென்று புரியாதா?

“நான் மிஸ்டர் வான்முகிலன் கூடவே இருக்குறதால அவங்க தப்பா புரிஞ்சிகிட்டு இருக்காங்க” என்று சாருமதியிடம் கூறிய நிலஞ்சனா “நான் யார் கிட்டயும் வான்முகிலன காதலிக்கிறதாக சொல்லவே இல்ல மிஸ் மலர்விழி. நல்ல யோசிச்சு பாருங்க. நீங்களாகத்தான் கேட்டீங்க. என் வாயால நான் வான்முகிலன லவ் பண்ணுறேன்னு சொல்லவே இல்ல” அன்று ஹோட்டல் கழிவறையில் என்ன நடந்தது என்பதை நினைவூட்டினாள்.

நிலஞ்சனாவிடம் மூக்குடைபட்டது தான் மலர்விழிக்கு நன்றாக ஞாபகம் இருந்ததே. “ஒருவேளை அப்படியும் இருக்குமோ” என்று எண்ணியவாறே சாருமதியிடம் வேறு சொல்லி மீண்டும் நிலஞ்சனா விடம் மூக்குடைப்பட்டது தான் மிச்சமென்று நொந்து கொண்டவள் சட்டென்று “ஆனா வான்முகிலன் சொன்னாரே. உங்கள லவ் பண்ணுறதாக வான்முகிலன் சொன்னாரே” என்று குழந்தை போல் சிரித்தாள்.

“அவர் கூட என் பெயரை…” என்று நிலஞ்சனா ஆரம்பிக்கும் பொழுதே

“யேன்மா… அதான் இல்லனு சொல்லிட்டியேமா… கல்யாணம் நல்லபடியா நடக்கணும். நீ பாட்டுக்கு சொந்தகாரங்க முன்னாடி நின்னு எதையாவது உளறிடாத” மலர்விழி ஒரு அப்பாவி புரியாமல் பேசுகிறாளென்றெண்ணிய சாருமதி நிலஞ்சனாவை அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றாள். 

“இவங்க என் பிரெண்டு எனக்காக கல்யாணத்துக்கு வந்திருக்காங்க” நிலஞ்சனா வெளியே செல்ல விடாது அவள் கையை பற்றி தடுத்து தன்னோடு வைத்துக் கொண்டாள் மலர்விழி.

“முகூர்த்தத்துக்கு நேரமானா கூப்பிடும் பொழுது ரெடியா இரு. மாலையை கழட்டி அவ கழுத்துல போட்டுடாத. அப்பொறம் உங்கப்பா என் பொண்ணு கல்யாணத்த நிறுத்திடுவாரு” புலம்பியவாறே சாருமதி வெளியேறினாள்.

நிலஞ்சனா ஏதாவது சொல்வாளோ என்று பார்த்த மலர்விழிக்கு அவள் அமைதியாக அமர்ந்திருப்பது ஏமாற்றத்தை கொடுத்தது.

ஆனால் நிலஞ்சனாவின் அமைதிக்கு பின்னால் ஆழிப் பேரலையே சுழன்றுக் கொண்டிப்பது மலர்விழிக்கு புரியவில்லை.

மலர்விழி வான்முகிலனை காதலித்திருக்கிறாள். வான்முகிலன் அவளை நிராகரித்து விட்டான். அதனால் அவளுக்கு அவன் மேல் கோபம் இருக்கிறது. அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்தது அவள் பொறாமையை தூண்டி விட்டிருந்தது. மீண்டும் அவளுக்கு அவனை திருமணம் செய்ய சந்தர்ப்பம் அமையும் பொழுது சந்தோஷமாக அவனை திருமணம் செய்து வாழ்வாள். இது தான் உண்மையாக அவள் அவன் மேல் காதல் கொண்டிருந்தால் செய்திருப்பாள்.

“மத்தவங்க குடிச்சத நான் குடிக்க மாட்டேன்” என்று அன்று அவள் சொன்னது டீயை அல்ல வான்முகிலனை.

வான்முகிலனை பார்த்த உடன் அவள் மனதில் பழைய நினைவுகள் அலைகளித்திருக்கும். அவன் நினைவுகளை துரத்த ஏற்கனவே திருமணமான வான்முகிலனை எக்காரணத்தை கொண்டும் தான் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று தான் அவ்வாறு பேசியிருக்கின்றாள்.

உண்மையிலயே வான்முகிலன் இன்று வேறொரு பெண்ணை காதலிக்கிறான் என்று தெரிந்து கொண்டதும் தான் காதலிக்கும் வான்முகிலன் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று அவர்களை சேர்த்து வைக்கப் பார்ப்பாளே ஒழிய இப்படி தன்னிடமே நடித்திருக்க மாட்டாள்.

அப்படியென்றால் இவள் வான்முகிலனை காதல் கொண்டு திருமணம் செய்யவில்லை. பழிவாங்கும் எண்ணத்தில் திருமணம் செய்கின்றாளென்று புரிந்து கொண்ட நிலஞ்சனா யாருக்கோ அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டாள்.

நிலஞ்சனா என்ன செய்கிறாளென்று எட்டிப் பார்க்கவும் முடியாது. அது அநாகரீகம். கேட்கவும் முடியாது. அந்த அளவுக்கு நெருக்கமும் இல்லையே. கேட்காமல் தெரிந்துகொள்ள முடியாதே. கேட்டு விட்டாள்.

“ஒர்க்” ஒற்றை வார்த்தையில் முடிக்கும் பொழுதே முகூர்த்தத்துக்கு நேரமாகிறது என்று சாருமதி மலர்விழியை அழைக்க வந்தாள்.

“மணமேடையிலையும் என் கூடவே இருங்க” மலர்விழி  நிலஞ்சனாவின் கையை பிடித்து கேட்க,

“கண்டிப்பா” என்ற  நிலஞ்சனாவின் முகத்தில் எந்த மாற்றமுமில்லை.  

அந்த பதிலில் எந்த பிரச்சினையுமில்லை என்று எண்ணினாள் மலர்விழி.

மணமேடைக்கு அழைத்து செல்லப்பட்ட மலர்விழி வான்முகிலனின் பக்கத்தில் அமரவைக்கப்பட்டாள்.

அமைதியான முறையில் எல்லாம் நடந்துக் கொண்டிருக்க, தலை குனிந்து அமர்ந்திருந்தாள் மலர்விழி. அவள் மனமோ “கல்யாணம் மட்டும் முடியட்டும். அடுத்தடுத்து, ஒவ்வொண்ணா உங்க எல்லாருக்கும் இருக்கு” என்று கருவிக்கு கொண்டாள்.      

ஒரு பெண் காவலாளியோடு காவல்துறை அதிகாரிகள் நான்கு பேர் மண்டபத்துக்குள் நுழைய அங்கே சலசலப்பு ஏற்பட்டது.

திருமணத்திற்கு கமிஷ்னர் வந்திருக்க, அவரே முன் வந்து என்ன பிரச்சினை என்று கேட்டார்.

“மலர்விழி மேல ஒரு கம்பளைண்ட் வந்திருக்கு. அவங்கள கைது செஞ்சி விசாரிக்கணும்” என்றனர்.

“என்ன கேஸ் யார் கொடுத்திருக்காங்க” கமிஷ்னர் விசாரிக்கும் பொழுதே மணமேடையிலிருந்து வான்முகிலன் எழுந்து வந்திருக்க, ஆதிசேஷனும் அவர்களின் அருகில் வந்தார்.  

“எதுவானாலும் என் பொண்ணு கல்யாணம் நடந்த பிறகு பாத்துக்கலாம்” ஆதிசேஷன் கோபம் எட்டிப் பார்க்க கூறினார்.

“சார் ஒன்னும் பண்ண முடியாது. மீடியா எல்லாத்தையும் கவர் பண்ணிட்டாங்க. எத்தனை பேர் லைவ் கவரேஜ் கொடுக்குறாங்களோ. அவங்கள உடனே விசாரணைக்கு கூட்டிட்டு போகணும். இது மர்டர் கேஸ்” என்றார் கமிஷ்னர்.

கமிஷ்னர் மட்டுமென்றால் சமாளித்திருக்க முடியும். ஊடகங்களும் அங்கே கூடியிருக்க, எப்படி சமாளிப்பார்? வேறு வழியில்லாமல் மலர்விழியிடம் வந்து நின்றார் ஆதிசேஷன்.

“என்னது கொலையா? என்ன சொல்லுறீங்க?” புரியாமல் முழித்தாள் மலர்விழி.

“முதல்ல நீங்க வாங்க மேடம்” இந்த இடத்திலிருந்தது வழக்கை பற்றி பேச முடியாதென்று கமிஷ்னர் மலர்விழியை அழைத்து செல்ல ஆதிசேஷன் கூடவே கிளம்பினார்.

திருமணம் நின்று விட்டது என்று வான்முகிலனை சந்தோஷத்தில் திகழ “அடப்பாவி கல்யாணத்த நிறுத்த நீ தான் இப்படி பண்ணியா?” சாருமதி தம்பியை முறைக்க,

“என்ன உளறுற” அக்காவை பதிலுக்கு முறைத்தான்.

“சும்மா நடிக்காத. செத்து போன பொண்டாட்டிய மறக்க முடியாது என்று சொல்லிட்டு இந்த லாயர் பின்னாடி சுத்திகிட்டு இருக்க. இவளைத்தான் லவ் பண்ணுறேன்னா சொல்லித் தொலைய வேண்டியது தானே” நிலஞ்சனாவை இழுத்து நிறுத்தி தம்பியோடு சண்டை போடலானாள்.

“என்ன சொல்லுற?” என்று காஞ்சனாதேவி விசாரிக்க ஆரம்பித்தாள்.

Advertisement