Advertisement

அத்தியாயம் 13

இரண்டு வாரங்கள் கடந்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதிரியனிடம் எந்த முன்னேற்றமுமில்லை.    

ஓட்டுநர் கண் விழித்து வண்டியில் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறைக்கு வாக்குமூலம் கொடுத்தார்.

சென்னையை விட்டு வெளியூர் சொல்வதாயின் முழு பரிசோதனைக்கு உட்படுத்திய பின்தான் வண்டியை எடுத்து செல்ல வேண்டும் என்பது காலம் காலமாக கடைபிடிக்கும் முறை. அப்படியிருக்க, பிரேக் பைலியராக வாய்ப்பே இல்லை. யாரோ செய்த சதி என்று நொடியில் புரிந்து கொண்ட ஆதிசேஷன் ஆதிரியனுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி குடும்பத்தாரை தவிர வேறு யாரையும் அனுமதிக்க வேண்டாமென உத்தரவிட்டிருந்தார்.

வான்முகிலன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவன் தான் ஆதிரியனின் பாதுகாப்புக்கு இரகசியமாக ஒருவரை ஏற்பாடு செய்திருந்தானே.

ஆதிரியனை பற்றி சிந்திப்பதை விட அவனுக்கு பெரிய தலைவலி வீட்டில் காத்திருந்தது.

சாருமதி தினமும் அவனது திருமணத்தை பற்றி பேசி பிரச்சினை செய்து கொண்டு தான் இருக்கின்றாள்.

முன்பு என்றால் மாளவிகாவை திருமணம் செய்துகொள்ள சொல்பவள் இப்பொழுது ஆதிசேஷனின் குடும்பத்திலையே பெண்ணெடுக்குமாறு வற்புறுத்த ஆரம்பித்திருந்தாள்.

“ஆதிசேஷனுக்கு பொண்ணே இல்ல. நான் யாரை கல்யாணம் பண்ண?” என்று அக்காவை கூர்ந்து பார்த்தான்.

சாருமதி வான்முகிலன் கூடப் பிறந்தவளானாலும் சுயநலத்தின் மொத்த உருவம் என்று அவனுக்குத் தெரியாதா?

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தன்மீது அக்கறை கொண்டு அவள் கூறுவது போல் தெரியவில்லை. அதில் அவளுக்கு ஏதோ ஆதாயம் இருக்கிறது என்று புரியவே மலர்விழியை பற்றி இவளுக்குத் தெரியுமா? என்றுதான் போட்டு வாங்கப் பார்த்தான்.

சாருமதி வான்முகிலனின் அக்கா இல்லையா? தான் ஆதிசேஷனிடம் அதிகமாக சொத்து கேட்டது தம்பிக்குத் தெரிந்தால் தம்பி என்ன செய்வான் என்று அவளுக்குத் தெரியாதா?

“பொண்ணு இல்லனா என்ன பேத்தி இருக்காளே” என்று சமாளித்தாள்.

“எனக்கும் மாளவிகாகும் பத்து வருஷம் வயசு வித்தியாசம் என்று தான் வேணாம்னு சொன்னேன். ஆதிதேவ் பொண்ணு உன் பொண்ண விட சின்ன பொண்ணு. அந்த பொண்ண கட்டிக்க சொல்லுறியா?” என்று இவன் அக்காவை மடக்கினான்.

“எனக்கு என் பொண்ண அந்த வீட்டுல கட்டிக் கொடுக்கவே இஷ்டமில்ல. வேற வழியில்லாம அனுப்புறேன். நீ கூடவே இருந்தா அவள கண்ணும் கருத்துமா பார்த்துப்ப என்று தான் சொன்னேன்” கண்ணை கசக்கினாள்.

கோபமாக பேசி, வாக்குவாதம் செய்து ஏற்றுக்கொள்ளவில்லையானால் கடைசி ஆயுதம் கண்ணீர் தானே அதை தான் சாருமதி வான்முகிலனுக்கு எதிராக பிரயோகித்தாள்.

சாருமதியின் கண்ணீருக்கு அஞ்சுபவனா வான்முகிலன். “எனக்கு கல்யாணம் பண்ண இஷ்டமில்ல” என்று விட்டு சென்றான்.

ஆனால் இன்று வீட்டுக்கு சென்றால் காஞ்சனாதேவி வாசலில் காத்திருந்தாள்.

“என்னம்மா எப்பவுமில்லாம இன்னக்கி வெளியவே நிக்கிறீங்க?”

வான்முகிலனுக்கு திருமணமாகும் வரையில் வாசலில் காத்திருந்தவள் தான். பாக்யஸ்ரீ வந்த பிறகு அவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருந்தாள்.

பாக்யஸ்ரீ இறந்த பின் கூடுதல் கவனமெடுத்து, வான்முகிலன் நேரத்துக்கு சாப்பிட்டானா? மது அருந்துகிறானா? எங்கெல்லாம் செல்கிறான் என்று ராமிடம் கேட்டு தெரிந்துகொள்கிறாள்.

வீட்டில் சிறு முகமாற்றத்தையும் காட்டுவதில்லை. வளமை போலவே நடந்துகொள்வாள். அதனால் தான் வான்முகிலன் இவ்வாறு கேட்டான். 

“மாளவிகாகு உடனடியாக கல்யாணம் நடக்கணும். சுபி கட்டிக்க போற பையனுக்கு ஆக்சிடன்ட் ஆச்சு என்று தானே நாம கல்யாணத்த தள்ளி போட்டோம். இப்போ அவசரமா மாளு கல்யாணத்த நடாத்தனும்”

அன்னையின் பதட்டம் வான்முகிலனின் கண்களுக்கு புலப்பட்டாலும் காரணத்தை ஊகிக்க முடியவில்லை. “அப்படி என்னம்மா அவசரம்? ஆதிரியன் கண் முழிக்க மாட்டான் என்று நினைக்கிறியா? இல்ல மாளுவும், மாப்பிள்ளையும் இருந்த அந்த வீடியோவால திரும்ப ஏதாவது பிரச்சினை வரும் என்று பயப்படுறியா?”

வான்முகிலனுக்கு புரியவில்லை. ஆதிரியன் குணமாகும் வரையில் மாளு மற்றும் சுபியின் திருமணத்தை தள்ளிப் போட வேண்டும் என்று அன்னை தான் அவனிடம் வந்து பேசினாள்.

அது மட்டுமா? அக்கா சாருமதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தும் பொழுதெல்லாம் “கண்டிப்பா அவன் கல்யாணம் பண்ணிப்பான். இப்படியே இருந்துட முடியுமா? அவனுக்கு கொஞ்சம் டைம் கொடு. இப்படி அவனை தொல்லை செய்யாதே” என்று தனக்காக யோசித்தவள். இப்படி திடிரென்று வந்து மாளவிகாவின் திருமணத்தை நடாத்த வேண்டும் என்று ஏன் கூறுகிறாள்?

“முதல்ல உள்ள வாப்பா…” வான்முகிலனை கையேடு அழைத்து உள்ளே செல்ல, மாளவிகா, சாருமதி, சந்திரமதி மூவரும் வாசலில் நின்றிருந்தனர்.

“என்ன பிரச்சினை?” வழமைக்கு மாறாக சாருமதி அமைதியாக நிற்பதை பார்த்தே, ஏதோ தப்பாக உள்ளது என்று புரிந்துகொண்டான்.

“நம்ம மாளு உண்டாகியிருக்கா. நிச்சயதார்த்தம் தான் ஆகிருச்சே. அதான் கல்யாணமாகப் போகுதே” மகனிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வது? தயங்கி, தட்டுத் தடுமாறி மாளவிகா செய்தது தவறு என்று அறிந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முயன்றாள் காஞ்சனாதேவி.

மயங்கி விழுந்த மாளவிகாவை மருத்துவர் பரிசோதித்து அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்றதும் சாருமதி மகளை அடிக்கப் பாய்ந்தது என்னவோ உண்மை தான். இதை வைத்தே தம்பியை திருமணத்துக்கு சம்மதம் சொல்ல வைக்க வேண்டும் என்று எண்ணியவள் அன்னையிடம் அழுது கரைந்தாள்.

“ஏற்கனவே ஏதோ வீடியோ வந்து மாப்புளையே மாறி போச்சு. இந்த விஷயம் தெரிஞ்சா… சம்பந்தி வீட்டுல நம்மள மதிக்கவே மாட்டாங்க. இதுக்குதான் நான் முகிலன் அந்த குடும்பத்துல பெண் எடுக்க சொன்னேன். அப்போ அவங்க கொஞ்சம் நமக்கு அடங்கி இருப்பாங்க. என் பொண்ணு வாழ்க்கையே முகிலன் கைல தான் இருக்கு. நீதாம்மா எப்படியாவது அவன் கிட்ட பேசி சம்மதம் வாங்கணும்”

“சரி நான் முகிலன் கிட்ட பேசுறேன்” என்று காஞ்சனாதேவி கூறினாலும் வான்முகிலனின் வாழ்க்கையை பணயம் வைக்க அன்னையாக அவள் விரும்பவில்லை. இதை கூறினால் மகன் ஒரு தீர்வு கூறுவான் என்று தெரியும் என்பதால் விஷயத்தை மட்டும் கூறினாள்.

“என்னமா நீ அத மட்டும் சொல்லுற? என் கிட்ட நீ சொன்னதையும். நான் உன் கிட்ட சொன்னதையும் சொல்லு. என் பொண்ணு வாழ்க்கையே அவன் கைல தான் இருக்கு” குலுங்கி குலுங்கி அழுதாள் சாருமதி.

“என் கைல என்றா என்ன அர்த்தம்?” அக்கா என்ன சொல்ல விளைகிறாள் என்று வான்முகிலனுக்கு புரியாதா?

“அது வந்துபா நீயும் ஆதிசேஷன் குடும்பத்துல பொண்ணெடுத்தா, நம்ம பொண்ணுங்க பத்திரமா பாத்துப்பியே. அதைத்தான் சொல்ல வந்தா” காஞ்சனாதேவி மகனுக்கும், மகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படாமலிருக்க, சமாதானமாக பேசினாள்.

“பொம்பள புள்ளைய ஒழுங்கா வளர்க்க தெரியல. அவ எங்க போறா? என்ன பண்ணுறான்னு தேடி பார்க்க வேணாம். ஊரு மேய விட்டுட்டு இப்போ என் தலையை உருட்டுறியா? வீடியோ வந்தப்போவே இவ ஒழுங்கா இருக்க வேணாம்.

சூடு சொரணை இருக்குற மனிஷனுங்க வாழ்க்கைல ஒரு அடி விழுந்த உடனே சுதாரிச்சுப்பாங்க. அதே தப்ப திரும்ப திரும்ப பண்ண மாட்டாங்க.

டில்லில பொறந்து வளர்ந்தா நம்ம கலாச்சாரம் பண்பாடு எல்லாத்தையும் மறந்து இப்படித்தான் கூத்தடிப்பாளா?” வான்முகிலன் மாளவிகாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சாருமதியிடம் தான் காய்ந்தான்.

ஆதித் எப்படிப்பட்டவன் என்று நன்கு தெரியும் என்பதால் அவனை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ள மனம் முரண்டினாலும் நடந்த அசம்பாவிததால் வேறு வழியில்லாமல், ஆதிரியன் அவனை நல்ல வழிக்கு கொண்டு வரலாம் என்று உறுதிமொழி கொடுத்திருந்ததனால் இந்த திருமணத்துக்கு சம்மதித்தான்.

சாருமதியை அழைத்து ஆதித் எப்படிப்பட்டவன் என்று விலாவரியாக கூறாமல் கல்யாணம் நல்ல முறையில் நிகழும் வரையில் மாளவிகா ஆதித்தை சந்திக்காமல் இருப்பது நல்லது என்று கூறியிருந்தான். 

அவன் பேச்சை பொருட்படுத்தாது இருவரும் சந்தித்துக் கொண்டது மட்டுமல்லாமல் அவள் கர்ப்பமாக வேற இருக்கிறாள். இது நிகழக் கூடாதென்று தானே இருவரும் சந்தித்துக்கொள்ள கூடாது என்று கூறினான்.

“நான் உன் கிட்ட என்ன சொன்னேன்? கல்யாணம் நடக்குற வரைக்கும் ரெண்டு பேரும் மீட் பண்ண கூடாது. வேண்டாத சிக்கல் வரும் என்று சொன்னேனே. இதோ வந்திருச்சில்ல. இப்போ நீயே பாத்துக்க”

“டேய் முகிலா இப்படி பேசினா எப்படிடா… நீ தான் சம்பந்தி வீட்டுல பேசி அவங்க கல்யாணத்த அவசரமா பண்ணனும்” அமைதியாக நின்றிருந்த சந்திரமதி பேசினாள்.

“எதுவோ பண்ணிக்கோங்க” வான்முகிலன் கோபமாக மாடியேறி சென்று விட்டான்.

“என்ன இவன் இப்படி பேசிட்டு போறான்?” என்ன செய்வது என்று புரியாமல் ஆதங்கத்தில் கத்தினாள் சாருமதி. 

மாளவிகாவின் முதுகில் அடித்தவாறே அவளை உள்ளே தள்ளி சென்ற சாருமதி “என்னடி பண்ண போற? உன் மாமா கைய விரிச்சிட்டான்” வான்முகிலனிடம் காட்ட முடியாத கோபத்தை மாளவிகாவிடம் காட்டலானாள்.

“அம்மா கொஞ்ச நேரம் அமைதியா இருமா? என்னமோ ஆதித் என்ன கல்யாணம் பண்ணாம முடியாது என்று சொல்லிடுவான்னு போலயே கத்துற” என்ற மாளவிகா ஆதித்தை அலைபேசியில் அழைத்தாள்.

“என்ன செல்லம் மோர்னிங் வரேன்னு சொன்ன வரல. போன் பண்ணா கூட எடுக்கல” கொஞ்சலாகத்தான் பேசினான் ஆதித்.

திருமணமென்றாலே தெறித்து ஓடும் ஆதித்தை அமர்த்தி கடைசிவரை இப்படி விளையாட்டுத்தனமாக இருந்துட முடியாது. என்றோ ஒருநாள் திருமணம் செய்து வாழ்க்கை துணையோடு வாழ்ந்து தானேயாக வேண்டும். அது மாளவிகாவாக இருந்தால் நல்லது தானே. அவளை புரிந்துகொள்ள முயற்சி செய் என்று ஆதிரியன் புத்திமதி கூறியிருக்க,

“வேற வழி. தாத்தா முடிவு பண்ணிட்டாரே” முணுமுணுத்தவன் மாளவிகாவோடு பழக ஆரம்பித்த பின் மாளவிகா அவன் மேல் காட்டும் அன்பு பிடித்திருந்தது. அவனும் மனதளவில் அவளை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தான்.

“போன கொடு” அலைபேசியை வாங்கிய சாருமதி “மாப்புள உங்க தாத்தா எங்க இருக்காரு நான் அவரை உடனே பார்க்கணும்”

சாருமதியின் குரலை வைத்தே ஏதோ பிரச்சினை என்று புரிந்து கொண்ட ஆதித் “அத்த ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டான்.

“பிரச்சினை என்றும் சொல்ல முடியாது. இல்லனும் சொல்ல முடியாது. நான் அவர பார்க்கணும்” சாருமதி பிடிவாதம் பிடிக்க,

“யார்கிட்டடா பவ்வியமா பேசிகிட்டு இருக்க?” அவன் பின்னால் வந்து நின்றார் ஆதிசேஷன்.

“ஆதிரியன் படுத்த படுக்கைல இருக்கான். கூட வந்து வேலைய பார்க்க சொன்னா வருங்கால பொண்டாட்டிகிட்ட போன்லேயே குடும்பம் நடாத்துறியா?” என்ன இவன் இப்போவே பொண்டாட்டிக்கு அடங்கிட்டான் என்று கோபமாகத்தான் கேட்டார்.

“இல்ல அத்த பேசுறாங்க. உங்ககிட்ட தான் பேசணுமாம்” என்ற ஆதித் அலைபேசியை ஆதிசேஷன் கையில் கொடுத்து விட்டான்.

ஆதிசேஷன் “சொல்லுமா” என்றதும் சாருமதி வீட்டுக்கு வருமாறு கூறி அலைபேசியை துண்டித்தாள்.

ஆதித்தை அழைத்துக் கொண்டு ஆதிசேஷன் வான்முகிலனின் வீட்டுக்கு வந்த பொழுது இரவாகியிருந்தது. காஞ்சனாதேவிதான் வாசலிலிருந்து வரவேற்றாள்.

உபசரிப்பு பலமாக நடந்ததே ஒழிய எதற்காக சாருமதி அழைத்தாள் என்று கூறவில்லை.

அவள் காஞ்சனாதேவியை பார்ப்பதும், காஞ்சனாதேவி சாருமதியை பார்ப்பதுமென்று நின்றிருந்தனர்.

“ஏதாவது பிரச்சினையா?” ஆதிசேஷன் கேட்டார்.

விஷயத்தை கூறாமல் “ஆமா மாளுக்கும், மாப்பிள்ளைக்கும் அடுத்த முகூர்த்ததுலையே கல்யாணம் பண்ணனும்” என்றாள் சாருமதி.

“அது எப்படிம்மா? என் ரெண்டு பேரன்களுக்கும் தான் நிச்சயம் பண்ணோம். ஒருத்தன் ஹாஸ்பிடல்ல இருக்கான். இத்தனைக்கும் அவன் மூத்தவன். இந்த நேரத்துல சின்னவனுக்கு கல்யாணம் பண்ணா ஊரு உலகம் என்ன சொல்லும்?”

“என்ன சொல்லும்? கல்யாணத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ண போற பொண்ண கற்பமாகிட்டான்னு சொல்லும்” என்றவாறே வந்தான் வான்முகிலன்.

“என்ன சொல்லுறீங்க முகிலன்?” ஆதிசேஷன் அதிர்ச்சி அடையவில்லை. சாதாரணமாகத்தான் கேட்டார்.

“நிஜமாவா?” கண்களாளேயே மாளவிகாவிடம் கேட்ட ஆதித் நொந்துகொண்டான்.

கல்யாணமே ஒரு அவசரத்தில் நிகழ்கிறது இதில் குழந்தை வேறயா? தாத்தா என்ன சொல்ல போறாரோ என்று அமைதியாக அமர்ந்திருந்தான்.

“ஏன் உங்களுக்கு உங்க பேரன பத்தி தெரியாதா? உங்க ரெத்தமில்ல” ஆதிசேஷன் மலர்விழியின் தந்தையென்றால் ஆதிசேஷனும் ஒரு பெண் பித்தனாகத்தான் இருப்பார் என்று மறைமுகமாக சாடினான்.

கனன்ற கோபத்தை வார்த்தைகளாக்கி “தப்பு என் பேரன் மட்டும் செய்யல வான்முகிலன். உங்க அக்கா பொண்ணும் சேர்ந்து தான் செஞ்சிருக்கா” என்றார் ஆதிசேஷன்.

சாருமதியை ஏகத்துக்கும் முறைத்த வான்முகிலன் ஆதிசேஷனிடம் திரும்பி “சரி தப்பு ரெண்டு பேரோடதும் தான். கல்யாணம் பண்ணி வைக்கிறது தானே ஒரே முடிவு. எப்போ பண்ணலாம்?” இது தான் தீர்வு இதை தான் செய்ய வேண்டும் உத்தரவு போடும் தொனியிலையே பேசினான் வான்முகிலன்.

“கல்யாணம் நடக்கலைனா என் பேரனுக்கு எந்த பிரச்சினையுமில்ல. உங்க வீட்டு பெண்ணுக்குத்தான் பிரச்சினை வான்முகிலன்” என்னயா மிரட்டுகிறாய்? என்று பார்த்தார் ஆதிசேஷன்.

“அப்போ உங்க குடும்ப வாரிசு உங்களுக்கு வேணாம்” இவனும் தெனாவட்டாக பேச

“நான் அப்படி சொல்லல. ஆதிரியன் கண் முழிச்சி உடனே இந்த கல்யாணம் நடக்கும். இல்ல இப்போவே நடக்கணும் என்றா நீங்க என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்” என்று லாக் செய்தார்.

“உங்க பொண்ணுனா? வளர்ப்பு பொண்ணா? ரெண்டாம் தாரத்துக்கு பொறந்தாங்களா? வைப்பாட்டிக்கு பொறந்தாங்களா?” சீற்றமாகத்தான் வந்தது வான்முகிலனின் வார்த்தைகள்.

நடக்கும் அனைத்துக்கும் பின்னால் இருப்பது மலர்விழி என்றால்? அவள் இவரை பழிவாங்கத்தானே இதையெல்லாம் செய்ய வேண்டும். இவர் செய்த பாவம் தானே என்ற கோபத்தில் தான் கேட்டான்.

“வான்முகிலன்” கத்திய ஆதிசேஷன் சட்டென்று அடங்கி “தேன்மொழி என் மனைவி. பார்த்து பேசுங்க” என்றார்.

“மனைவியா?” உள்ளுக்குள் அதிர்ந்தாலும் முகத்தில் காட்டாது “உங்க பொண்ண என்னால கல்யாணம் பண்ண முடியாது” என்று வான்முகிலன் எழுந்து கொண்டான்.

“அப்போ ஆதிரியன் கண் முழிக்கும் வரைக்கும் காத்திருங்க” என்று ஆதித்தை மாளவிகாவிடம் பேச விடாம தன்னோடு அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

அடுத்த நாள் சுபலக்ஷ்மி ஆதிரியனை பார்க்க மருத்துவமனைக்கு போனால் ஆதிசேஷன் வைத்திருந்த பாதுகாவலர்கள் அவளை உள்ளே விடாது வெளியேறுமாறு கூறினர்.

என்ன நடக்கிறது? ஆதிரயனுக்கு ஏதாவது பிரச்சினையோ என்று கனகவள்ளியை அலைபேசியில் அழைத்தாள்.

“என்னமா சொல்லுற? உன்ன எதுக்கு உள்ள விடாம இருக்கான்?” ஆதிராயனின் அறையிலிருந்து வெளியே வந்த கனகவள்ளி பாதுகாவலர்களை திட்டியவாறே சுபியை உள்ளே அழைத்து செல்ல முயன்றாள்.

“எங்களை மன்னிச்சிடுங்க. ஆதிசேஷன் ஐயாவோட உத்தரவு” என்று அவர்கள் சுபியை உள்ளேயே விடவில்லை. 

“என்ன திடிரென்று? மாமனார் இப்படி செய்கிறார்? ஒன்றும் புரியாமல் கணவனை அழைத்தாள்.

“அதுவா… அப்பா.. அந்த வான்முகிலனுக்கு பாடம் புகட்ட நினைக்கிறார். அப்பா பேச்சை என்னால மீற முடியாது. நீயும் உன் மருமகள தள்ளி வை” சாதாரணமாக கூறினான் ஆதிசங்கர்.

கையாலாகாத கணவனை எண்ணி கனகவள்ளிக்கு கோபம் கோபமாக வந்தது.

“நீ வீட்டுக்கு போம்மா. மனச போட்டு குழப்பிக்காத” சுபலக்ஷ்மியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்.

அழுதவாறே சுபலக்ஷ்மி வீட்டுக்கு வந்து சேரும் முன் மருத்துவமனையில் நடந்தது தான் ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலரின் மூலம் அறிந்து கொண்டான் வான்முகிலன்.

“ஆதிசேஷன் அவரோட ஆட்டத்த ஆரம்பிச்சிட்டாரு”

“ஏன் மிஸ்டர் முகிலன் பிடிவாதம் பிடிக்கிறீங்க? மிஸ் மலர்விழி கல்யாணம் பண்ண ஒத்துக்கோங்களேன். உங்க எக்ஸ் மேல கொஞ்சூண்டாலும் உங்களுக்கு லவ் இல்லையா?” என்ற நிலஞ்சனாவை முறைத்துப் பார்த்தான் வான்முகிலன்.

வீட்டுக்கு சென்றால் சுபலக்ஷ்மி மாத்திரமன்றி வீட்டு பெண்கள் அனைவருமே அமர்ந்து அழுது கொண்டிருந்தனர்.

“என்ன?” என்று கேட்டால் தானே என்னவென்று கூறி அவன் தலையை உருட்டுவார்களென்று வான்முகிலன் அவர்களை கண்டு கொள்ளாது மாடிக்கு செல்ல, சாருமதி ஓடி வந்து அவன் காலில் விழுந்தாள்.

“அக்கா என்ன பண்ணுற?” பதறியவன் கீழே அமர்ந்து விட்டான்.

“உன் பிடிவாதத்தை விட்டு என் பொண்ணு வாழ்க்கையை பத்தி யோசி முகிலா. வெளில தெரிஞ்சா நம்ம குடும்பத்துக்கு தான் அசிங்கம். எத்தனை நாளைக்கு நாம நம்ம மாளு கர்ப்பமாக இருக்குறத மறச்சி வைக்க முடியும்? உன்னால ஆதிசேஷன் பொண்ண கல்யாணம் பண்ண முடியாது என்றா, நீயே உன் கையால எங்க ரெண்டு பேரையும் கொன்னுடு”

“என்னக்கா இப்படியெல்லாம் பேசுற?”

“எனக்கு வேற வழி தெரியல. இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிறாளே. ஆதிசேஷன் உன்ன அவர் பொண்ணுக்கு கட்டி வைக்கணும் என்று நினைக்கிறாரு. நீ முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிற. உங்க ரெண்டு பேரோட சண்டைல எங்க பொண்ணுங்க வாழ்க்கைதான் கேள்விக்குறியா நிக்குது. சுபிக்கு வேற மாப்பிள்ளையை பார்த்து கட்டி வச்சிடலாம். மாளுக்கு முடியாதே. அதான் செத்துடலாமென்று முடிவு பண்ணிட்டேன்” என்றாள்.

“பிரச்சினை என்று வந்தா சாகுறது தான் முடிவா?” கோபமாக வான்முகிலன் கேட்டான். 

“நான் போன் பண்ணலைனாலும் ஆதித் கூப்டுவாறு. இப்போ நான் கூப்பிட்டாலும் போன எடுக்க மாட்டேங்குறாரு. வீட்டுக்கு போய் பார்க்க ஒரு மாதிரி இருக்கு என்று ஆபீஸ் போனா உள்ளேயே விடமாட்டேங்குறாங்க. செத்துடலாம் போல இருக்கு” என்ற மாளவிகா கதறியழுதாள்.    

“வாழ வேண்டிய பொண்ணு செத்த பிறகு இந்த கிழவி மட்டும் எதுக்கு உசுரோட இருக்கணும் என்னையும் கொன்னுடு?” காஞ்சனாதேவி புலம்பினாள்.

“என்னையும் கொன்னுடுங்க. என்னால இந்த சிட்டுவேஷண ஹாண்டல் பண்ண முடியல” சுபி ஒரு பக்கம் இருந்து அழுதாள்.

“எதுக்கு இப்போ ஆளாளுக்கு சாவ பத்தியும், கொலை என்று பேசுறீங்க? ஒன்னு பண்ணுங்க எல்லாரும் சேர்ந்து என்ன கொன்னுடுங்க. அப்போ எந்த பிரச்சினையுமில்லல”

“முகிலா நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா போதும்” என்றாள் காஞ்சனாதேவி.

எதுவும் பேசாமல் அவனது அறைக்கு சென்றான் வான்முகிலன்.

அறைக்கு வந்த வான்முகிலன் பாக்யஸ்ரீயின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு அவளோடு பேச ஆரம்பித்தான்.

“ஏன் ஸ்ரீ யாருமே என்ன புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க. என்னால உன்ன தவிர யாரையும் நினைச்சி பார்க்க முடியாது. மலர்விழி நான் நேசிச்சது உண்மைதான். அது என் கடந்த காலம். மலர்விழி பத்தி உன் கிட்ட கூட நான் சொல்லலையே. சொல்லணும் என்றா ஞாபகத்துல இருந்திருக்கணும். அவளை நான் காதலிச்சேன் எங்குறதையே நான் மறந்துட்டேன். அவ ஞாபகமே என் மனசுல இல்ல. அப்போ எப்படி நான் அவளை பத்தி உன் கிட்ட சொல்லுறது.

அந்த நிலஞ்சனா மலர்விழி மேல கொஞ்சமாச்சும் லவ் இல்லையானு கேக்குறா? கொஞ்சமாச்சும் லவ் இருந்தா. அவ ஞாபகம் அடிக்கடி வந்திருக்குமே. எதையுமே யோசிக்க முடியாதபடி கம்பனி பொறுப்பு என் தல மேல வந்தது உண்மைதான். ஆனா கல்யாணம் என்று வரும் பொழுதாவது மலர்விழியோட ஞாபகம் வந்திருக்கணுமே? வரலையே.

அவ என் கடந்த காலம் என்று அவளை கடந்து வந்துட்டேன். திரும்ப அவகிட்ட என்னால போக முடியாது. போக முடியாததற்கு காரணம் அவ நான் காதலிச்ச மலர்விழியே இல்ல. ஆதிசேஷன் பொண்ணு.

ஆதிரியன் ஆக்சிடன்ட் ஆனப்போ மலர்விழியோட சொந்த ஊர் கோயம்புத்தூர் என்றும், அவ அம்மா பேர் தேன்மொழி என்றும் சொன்னவன் எனக்கும் அவளுக்கும் என்ன உறவு என்றும் தான் கேட்டான்.

அவன் டிடெக்டிவ் வச்சி விசாரிக்கிறது தெரிஞ்சிதான் அவன கொல்ல திட்டம் போட்டாங்களோ என்று எனக்குத் தோணுது.

மலர்விழி சென்னைல தான் இருந்தா. ஆனா அவளுக்கு உதவி செய்ற நபர் ஆதிரியன பின் தொடர்ந்து ஊட்டி வரைக்கும் போய் இருக்கலாம்ல.

இத நிலஞ்சனா கிட்ட சொன்னா ஆதாரம் எங்க என்று லாயரா பேசுறா. நம்ம ஆழ் மனசு நம்ம கிட்ட பொய் சொல்லுமா? மலர்விழி கிட்ட எதுவோ ஒன்னு தப்பா இருக்கு. அது என்னனு தெரியாம வெளிய சொல்லவும் முடியல” பாக்யஸ்ரீயின் புகைப்படத்தோடு பேசியவாறே தூங்கிருந்தான் வான்முகிலன்.

“ஐயையோ யாராச்சும் வாங்களேன். அம்மா எங்க இருக்க? முகிலா என் பொண்ண காப்பாத்து. பாவி இப்படி பண்ணிட்டாளே” சாருமதி கத்தி கூப்பாடு போடும் சத்தம் கேட்டு அடித்து பிடித்து எழுந்த வான்முகிலன் தடதடவென படிகளில் இறங்கி வர வீட்டிலுள்ள அனைவரும் மாளவிகாவின் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.

வலது கை மணிக்கட்டு அறுக்கப்பட்ட நிலையில் மாளவிகா கட்டிலில் மயங்கி கிடந்தாள்.

கை கட்டிலுக்கு வெளியே நீட்டுக் கொண்டிருக்க, இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. கத்தியும் அங்கேதான் விழுந்திருந்தது.

அவள் கையை துணியை கொண்டு அவசரமாக கட்டிய வான்முகிலன் அவளை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.

உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை. மாளவிகாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர் கூறிய பின்தான் அனைவரும் நிம்மதியடைந்தனர்.

“பாவி மக இப்படி பண்ணிட்டாளே. திரும்ப இப்படி  பண்ண மாட்டா என்று என்ன நிச்சயம்? இன்னக்கி நான் பார்த்துட்டேன் காப்பாத்திட்டேன். என்னைக்குமே இப்படி இவள பார்த்துகிட்டு இருக்க முடியுமா? இவளோடு சேர்ந்து நானும் சாகுறதுதான் சரி” சாருமதி புலம்ப,

வான்முகிலனிடம் வந்த காஞ்சனாதேவி “முகிலா அம்மா இதுவரைக்கும் உன்ன இத பண்ணு, பண்ணிதான் ஆகா வேணும் என்று கட்டாயப்படுத்தினதே இல்ல. இப்போ கேக்குறேன். நீ கல்யாணம் பண்ணிக்கணும். என்னக்காக, உன் கூடப்பொறந்தவளுங்களுக்காக, உன் அக்கா பொண்ணுகளுக்கா” இது என்னுடைய ஆணை. இதை நீ செய்தேயாக வேண்டும் என்று மகனை ஏறிட்டாள்.

செத்துடுவோம் என்று மிரட்டிய பொழுது கூட வான்முகிலன் அசரவில்லை. மாளவிகாவை அந்த கோலத்தில் பார்த்த பின் கலங்கித்தான் போனான். அவன் தூக்கி வளர்த்த பெண் அல்லவா.

“அது தான் உங்க விருப்பம் என்றா கல்யாணம் பண்ணிக்கிறேன். ஏற்பாடு பண்ணுங்க” என்றவன் மருத்துவமனையை விட்டே வெளியேறினான்.

Advertisement