Advertisement

அத்தியாயம் 12

நாட்கள் வேகமாக நகர்கிறதே தவிர யாருடைய வாழ்க்கையிலும் எந்த முன்னேற்றமுமில்லை.

அடுத்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மலர்விழிக்கு உதவி செய்யும் நபர் மலர்விழிக்கு அலைபேசி அழைப்பு விடுத்து கோபப்பட்டார்.

“இல்ல அங்கிள். அவசரப்பட்டு எதுவும் செய்யக் கூடாது. அந்த வக்கீல் வேற கண்கொத்தி பாம்பா வான்முகிலன் கூடவே இருக்கா. முதல்ல அவள அவன் கிட்ட இருந்து பிரிக்கணும்”

“என்ன அவள போட்டுத் தள்ளணுமா? அந்த பவானிய கூட கொல்ல வேணாம் னு சொல்லி அடச்சீ வைக்க சொன்ன. சுயநினைவே வராத படி தினமும் இன்ஜெக்சன் போட்டுக்கிட்டு இருக்கேன். எதுக்கு இன்னும் அவள உசுரோட வச்சிருக்க? கொன்னுடலாம்” என்றான்.   

 “கொல்லுறது ஈஸி அங்கிள். பவானி யாரோ எவளோ என்றா நம்ம திட்டத்த அவ கண்டு பிடிச்சப்போவே கொன்னிருப்பேன். அவ வான்முகிலன் பி.ஏ நம்ம ராமோட காதலி. அதான் அவள உசுரோட வச்சிக்கலாம் என்று சொன்னேன்”

“சரி இப்போ என்ன பண்ண போற? உன் திட்டம் தான் என்ன?” 

“எங்கப்பா மிஸ்டர் ஆதிசேஷன் வான்முகிலனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று முடிவு பண்ணிட்டாரு. வான்முகிலன் “நோ” சொல்லிட்டான்.

ஆனாலும் ஆதிசேஷன் விடாம அவங்கக்கா கிட்ட என்ன அவரோட வளர்ப்பு மகள் என்று அறிமுகப்படுத்தி தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்சா தான் அவங்க பொண்ணு மாளவிகாகு அதிகமான சொத்த எழுதி வைக்கிறதா சொல்லிட்டாரு.

அந்தம்மா சொத்துக்கு ஆசப்பட்டு வான்முகிலன் வீட்டுல கலகம் செய்ஞ்சிகிட்டு இருக்காங்க”

“ஓஹ்… இதுக்குதான் சட்டுனு ஒரு திட்டத்த போட்டு நிச்சயதார்த்தம் நடக்கும் போது வான்முகிலன் அக்காகிட்ட பேச ஆள ஏற்பாடு பண்ண சொன்னியா. ஆதிசேஷன் குடும்பத்தாரோடு விவரம் எனக்கு நல்லாவே தெரியும். வான்முகிலன் குடும்பத்தார விசாரிச்சு வச்சது நல்லதா போச்சு”

“யாருக்கும் சந்தேகம் வராம நீங்க ஏற்பாடு செஞ்ச லேடிய உள்ள வரவச்சி அவங்க வான்முகிலனோட அக்கா கூட பேசின உடனே அனுப்பிட்டேன். அங்க வெடிச்ச வெடி இன்னும் புகஞ்சிக்கிட்டுதான் இருக்கு”

“வான்முகிலன் சம்மதிக்கவே மாட்டான்னு நினைக்கிறியா? ஆதிசேஷனும் விடமாட்டார். ஒருவேளை சம்மதிச்சான்னா கல்யாணம் பண்ணுவியா?”

“வான்முகிலன எனக்கு பிடிக்கும். ஆனா அவனுக்கு என்ன பிடிக்கலையே எங்குறது போலத்தான் அப்பாகிட்ட பேசிகிட்டு இருக்கேன். அதான் அவர் வான்முகிலன எப்படி லாக் பண்ணலாம் என்று யோசிச்சுகிட்டு இருக்காரு.

அவன் சிக்கினா கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன். கூட இருந்து கொஞ்சம் கொஞ்சமா அவனை அழிப்பேன்” கோபத்தில் கண்கள் சிவந்தாள் மலர்விழி.

“அப்போ அதுக்கு தடையா இருக்குறது அந்த வக்கீல் தானே அவள கொல்ல வேணாம்னா கடத்திடவா?”

“ஒன்னும் பண்ண வேணாம் அங்கிள். அவள லவ் பண்ணுறதாக வான்முகிலனே என்கிட்டே சொன்னான். அவ முன்னாடி வான்முகிலன் என் கழுத்துல தாலி கட்டணும். கட்ட வைக்கணும். அப்போ தானே ரெண்டு பேருக்குமே வலிக்கும்”

“நீ என்னென்னமோ சொல்லுற? வான்முகிலன லாக் பண்ண ஏதாவது திட்டம் வச்சிருக்கியா?”

“நான் எதுக்கு புதுசா திட்டம் போடணும்? அதான் அந்த ஆதித் இருக்கானே. நிச்சயமாகிருச்சு என்று மாளவிகா கூடத்தான் சுத்திகிட்டு இருக்கான். அவங்களுக்கு கொஞ்சம் தனிமையை மட்டும் அடிக்கடி ஏற்பாடு செஞ்சி கொடுத்தேன். ரிசல்ட் கூடிய சீக்கிரம் வந்துடும்” என்றவள் சத்தமாக சிரிக்க

“சரிம்மா… இங்க வேலைய முடிச்சிட்டு ரெண்டு மூணு நாள்ல வந்துடுவோம் ஆபீஸ்ல சந்திக்கலாம்” என்றவரோ அலைபேசியை துண்டித்து விட்டார்.

“யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க ஆகாஷ்” பின்னால் இருந்து ஆதிரியனின் குரல் கேட்கவும் ஆடிப்போனான் ஆகாஷ்.

“வேற யாரு உங்க தங்கச்சிகிட்ட தான். நான் எங்க போனாலும் கூடவே வருவாளே. ஊட்டி பாக்டரிக்கு போறேன்னதும் அந்த குளிருல என்னால இருக்க முடியாது என்று வரமாட்டேன்னு சொல்லிட்டா. இப்போ போன் போட்டு எப்ப வரீங்க? என்ன பண்ணுறீங்க என்று உசுர வாங்குறா” அலைபேசியை அனைத்து சட்டை பையில் வைத்தவாறே கூறினான் ஆகாஷ்.

“ஆதிதி கொஞ்சம் பிடிவாதக்காரிதான். ஆனா பாசமானவ. நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தா போதும். சீக்கிரம் குழந்தை பெத்துகிறத பத்தி யோசீங்க. பொறுப்பு வந்தா அவ வழிக்கு வருவா” என்றான் ஆதிரியன்.

“பாசமானவதான். புருஷன் மேல வைக்க வேண்டிய பாசத்த அந்த வான்முகிலன் மேல இல்ல வச்சிருக்கா” கடுப்பானாலும் புன்னகைத்த ஆகாஷ் ஆதிரியனுக்கு எந்த பதிலையும் கூறவில்லை.

அக்கணம் ஆதிரியனின் அலைபேசி அடித்தது. யார் அழைப்பது என்று பார்த்தவன் “இந்த போன நான் பேசிட்டு வரேன். நீங்க வேலைய பாருங்க”

தனியாக நகர போனவனை நிறுத்தி “என்ன மாப்புள வருங்கால மனைவியா? பேசுங்க பேசுங்க. கல்யாணமாகும் வரைக்கும் தான். அப்பொறம் அவங்க பேசுறத தான் நாம கேட்கணும்” ரொம்ப அனுபவப்பட்டுட்டேன் என்ற முகபாவனையிலையே கூறினான் ஆகாஷ்.

“சரி தான் இத நான் ஆதிதி கிட்ட சொல்லுறேன்” சிரித்தவாறே ஆதிரியன் வெளியே வந்தான்.

“சொல்லுங்க மிஸ்டர் பிரதீப். ஏதாவது தகவல் கிடைச்சதா?”

மலர்விழியை தாத்தா ஆதிசேஷனின் உதவியாளர் என்று அறிந்திருந்த வரையில் வேலையில் அவள் மீது எந்த குறையும் சொல்ல முடியாது.

மலர்விழி ஆதிசேஷன் மகள் என்ற அன்றிலிருந்து குடும்பத்தில் பிரச்சினைகள் ஆரம்பமாகி இருக்க, அவளை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், ஒதுக்கவும் முடியாமல் இருந்தான் ஆதிரியன்.

மலர்விழியை பார்க்கும் பொழுது எதுவோ ஒன்று சரியில்லை என்று மனம் உறுத்த அவளை சந்தேகப்பட வைத்தாலும், மலர்விழி ஒரு பெண். நடக்கும் சம்பவங்களுக்கும் அவளுக்கும் நிச்சயமாக சம்பந்தம் இருக்காது என்றுதான் அவளை பற்றி தோண்டித் துருவாமல் இருந்தான்.

வான்முகிலன் பேசிய பின் அவளுக்கு யாராவது உதவினால் நிச்சயமாக அவளால் இதையெல்லாம் செய்ய முடியும் என்று புரிந்தது. 

வான்முகிலன் ஒரு துப்பறிவாளரை வைத்து மலர்விழியை பற்றி அறிந்து கொண்ட பின் அழைக்கிறேன் என்று கூறி இருந்தாலும் ஆதிரியனுக்கு மனம் கேட்கவில்லை.

தானும் ஒரு துப்பறிவாளரை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரதீப் என்பவரை ஏற்பாடு செய்திருந்தான். அவர் தான் அழைத்திருந்தார்.  

“மிஸ் மலர்விழி இங்க சென்னைல தான் காலேஜ் முடிச்சிருக்காங்க. அவங்களுக்கும் மிஸ்டர் வி.எம் கம்பெனியோட உரிமையாளர் வான்முகிலனுக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கு. அவங்க ப்ரெண்ட்ஸ் என்று சில பேர் சொல்லுறாங்க. லவ்வர்ஸ் என்று சில பேர் சொல்லுறாங்க” என்றார் பிரதீப்.

“என்ன வான்முகிலனும் மலர்விழியும் ஒரே காலேஜ்ல ஒண்ணா படிச்சாங்களா?” அதிர்ச்சியானவன் “இதை பற்றி வான்முகிலன் தன்னிடம் ஏன் பகிர்ந்துகொள்ளவில்லை என்று யோசித்தான்.

“சார். அவங்க லவ்வசா? ப்ரெண்ட்ஸா என்ற டீடைல் வேணும்னா நான் மேற்கொண்டு விசாரிக்கறேன்”

“இல்ல வேணாம். வேற ஏதாவது தகவல் கிடைச்சதா?”

“ஆமா அவங்க அம்மாவோட பேர் தேன்மொழி. சொந்த ஊர் கோயம்புத்தூர்”

“தேன்மொழி. கோயம்புத்தூரா”

“ஆமா சார். அங்க போனாதான் அவங்கள பத்தின தகவல் கிடைக்கும்”

“சரி நீங்க போங்க. நானும் வரேன். நாம மீட் பண்ணலாம்” என்ற ஆதிரியன் அலைபேசியை துண்டித்து யோசனைக்குள்ளானான்.

வேக வேகமாக தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்து துணிகளை பையில் அடுக்கியவன் ஆகாஷின் அறை கதவை தட்டினான்.

இரண்டு நிமிடங்களாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஆகாஷை அலைபேசியில் தொடர்பு கொண்டு அவன் எங்கே எனக் கேட்க, ஹோட்டலிலுள்ள உணவகத்தில் மேனேஜர் கதிரவனோடு இருப்பதாக கூறினான்.

“நான் அவசரமாக ஊருக்கு போறேன். நீங்க இங்க உள்ள எல்லா வேலையையும் முடிச்சுட்டு வாங்க” என்று அலைபேசியை துண்டிக்கப் போக,

“நானா? நான் தனியா எப்படி பாக்குறது?”

“அதான் மேனேஜர் கதிரவன் இருக்காரே. அவர் பாத்துப்பார்” என்ற ஆதிரியன் அலைபேசியை துண்டித்தான்.

“அப்போ என்ன நம்பி வேலைய ஒப்படிச்சிட்டு போகல. மேனேஜரை நம்பி போறான்” புலம்பியவாறே உணவுண்டவன் மேனேஜர் கதிரவன் வந்து அமரவும் “யோவ் வாஷ் ரூம் போயிட்டு வர உனக்கு இவ்வளவு நேரமா? சாப்பிடும் போதாவது கம்பனி கொடுயா. அவனுங்கதான் என்ன சுத்தமா மதிக்க மாட்டானுங்க நீயுமா?” என்று ஆதிசேஷனின் குடும்பத்தார் மீதிருந்த மொத்த கோபத்தையும் கதிரவன் மீது காட்டலானான் ஆகாஷ்.

“கொஞ்சம் வேகமாக போங்க”

வழமைக்கு மாறாக வேகமாக வண்டியை ஓட்டுமாறு கூறும் ஆதிரியனை ஆச்சரியமாக பார்த்தவாறே மலைப்பாதை என்றும் பாராமல் வண்டியை வேகமாக ஓட்டலானார் ஓட்டுநர்.

மதியம் தாண்டியிருந்த நேரம் ஆதிரியன் அலைபேசியோடு ஐயமாகியிருந்தான்.

மலைப்பாதை மட்டுமல்ல வளைவான பாதை என்பதால் வண்டியின் வேகம் ஆதிரியனுக்கு அசௌகரியமாக இருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வான்முகிலனோடு பேசியவாறு வந்தான்.

மலைப்பாதை என்பதால் சில வளைவுகளில் எந்த வண்டி கீழே இருந்து மேலே வருகிறது என்று தெரிந்து விடும். ஓட்டுநர் பார்த்தவாறு தான் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

ஒரு வலைவில் பார்க்கும் பொழுது ஒரு லாரி மாத்திரம் தான் வந்து கொண்டிருந்தது.

லாரி கடந்த உடன் வண்டியை அதிவேகமாக வளைவில் திருப்ப எதிரே வந்த காரை பார்த்து அதிர்ந்து எப்படியோ சமாளித்து வண்டியை நிறுத்த முயன்றால் வண்டியில் பிரேக் பிடிக்கவில்லை.

கார் லாரியை தாண்டி செல்ல முயன்ற பொழுது ஓட்டுநர் பார்த்ததில் லாரியால் கார் மறைந்திருந்தது. அதனால் லாரிக்கு பின்னாடி வந்து கொண்டிருந்த காரை ஓட்டுநர் கவனித்திருக்கவில்லை.

வேறு எந்த வண்டியும் வரவில்லை என்று ஓட்டுநர் வேகமெடுக்க எதிரே வந்த காரில் மோதியிருப்பார். விபத்திலிருந்து தப்பித்து விட்டார். ஆனால் வண்டியில் பிரேக் பிடிக்காததால் வண்டி பள்ளத்தை நோக்கி சரிய ஆரம்பித்தது. 

அதிவேகமாக வந்ததால் ஓட்டுனரால் வேகத்தை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. பாதைகள் இருக்கும் சரிவென்றால் சமாளித்து பாதையிலாவது ஒட்டியிருப்பாரோ என்னவோ. மறுபக்கமுள்ள பள்ளத்தாக்கில் வண்டி விழுந்தது.

“ஆதிரியன்” மறுமுனையில் அலைபேசியில் தொடர்பிலிருந்த வான்முகிலன் கத்தினான்.

இந்த பக்கம் வான்முகிலன் அவசர என்னை தொடர்பு கொண்டு விபத்து நடந்ததாக தகவல் கூற, மாலை நரம் என்பதால் நன்றாகவே வெளிச்சம் இருக்க, கீழிருந்து மேலே வந்து கொண்டிருந்த வண்டிகளில் ஒரு சிலரும் விபத்தை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக வந்த  காவல்துறை இருவரையும் மீட்டு மருத்துவனையில் அனுமதித்து வீட்டுக்கும் தெரிவித்திருந்தனர்.

ஆதிரியன் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றான் என்று அறிந்ததும் அதிர்ச்சியோடு கோபமும் கொண்டார் ஆதிசேஷன்.

 “சங்கரா உன் பொண்டாட்டிய வீட்டுலையே இருக்க சொல்லு. நானும் நீயும் மட்டும் போலாம்”

“ஐயோ என் பையனுக்கு என்ன ஆச்சு என்று தெரியலையே. இந்த நேரத்துலயும் என் பையன பார்க்க விடாம அதிகாரம் பண்ணுறாங்களே” கோபத்திலும், வேதனையிலும் கதறி துடித்தாள் கனகவள்ளி. 

“அங்க போய் நீ என்ன மருத்துவமா பார்க்கப் போற? நிலைமை என்னனு பார்த்து அவனை சென்னைக்கு கூட்டிட்டு வரணும். இங்க வந்த பிறகு பக்கத்துல இருந்தே பார்த்துக்கமா” எரிச்சலாக மொழிந்த ஆதிசேஷன் மூத்த மகனை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

மருத்துவமனைக்கு வந்தால் இவர்களுக்கு முன் வான்முகிலன் அங்கு நின்றிருந்தான்.

“நீங்க எங்க இங்க? உங்களுக்கு யாரு தகவல் சொன்னாங்க?” ஆதிசேஷன் யோசனையாக கேட்க,

“இங்க ஏதாச்சும் வேலையா வந்திருப்பாரு. விபத்து நடந்தப்போ என்ன எது என்று பார்த்து அது ஆதிரியன் என்றதும் வந்திருப்பாரு” என்றான் ஆதிசங்கர்.

“ஊட்டிக்கு வேலையாக வந்தவன் சரியாக விபத்து நடந்த இடத்துலையா இருப்பான்? என்னடா முட்டாள் தனமா பேசிகிட்டு இருக்க?” மகனை முறைத்த ஆதிசேஷன் வான்முகிலனின் பதிலுக்காக அவனை ஏறிட்டார்.

“ஆதிரியன் வரும் பொழுது சுபி கிட்ட தான் பேசிகிட்டு வந்திருக்காரு போல. பதறி துடிச்சவ என்ன ஒரு வழி பண்ணிட்டா. என்ன? ஏது? என்று பார்த்துட்டு வரேன்னு நான் கிளம்பி வந்தேன்” என்றான் வான்முகிலன்.

தானும், ஆதிரியனும் சேர்ந்து மலர்விழியை பற்றி துப்பு துலக்குவதை பற்றி ஆதிசேஷனிடம் கூற முடியுமா?

ஆதிரியன் விபத்துக்குள்ளாகும் பொழுது ஓட்டுநர் “சார் சார் பிரேக் புடிக்க முடியல” என்று கத்தியது வான்முகிலனுக்கு தெளிவாக கேட்டது.

நிச்சயமாக இது திட்டமிட்டு நடாத்தப்பட்ட விபத்து என்று வான்முகிலனுக்கு தெரிந்ததால் உடனடியாக ஊட்டிக்கு வந்தான்.

வந்தவன் முதலில் காவல்துறையை அணுகி வண்டியை பரிசோதிக்குமாறு கூறினான்.

வான்முகிலன் ஆதிசேஷன் கேட்ட கேள்விக்கு பதில் கூறுவதை கேட்டவாறே ஆகாஷும், மேனேஜர் கதிரவனும் அங்கு வந்து சேர்ந்தனர்.

“நீங்க ரெண்டு பேரும் எங்க போய் தொலைஞ்சீங்க? ஆதிரியன் எதுக்காக தனியாக ஊட்டில இருந்து கிளம்பினான்?” ஆதிசங்கர் ஆகாஷை முறைத்தவாறே கதிரவனின் மேல் பாய்ந்தான்.

“இங்க வேல இன்னும் முடியல. எங்களை வேலைய கவனிக்க சொல்லிட்டு தம்பி தனியாக வண்டிய எடுத்துட்டு போய் இருக்காரு. என் கிட்ட கூட சொல்லல. ஆகாஷ் சார் தான் என் கிட்ட சொன்னாரு” என்றார் மேனேஜர் கதிரவன்.

“அவன் சொந்த பிஸ்னஸ பாக்குறதுக்கு குடும்ப பிஸ்னஸ அம்போன்னு விட்டுட்டு போய்ட்டானா?” ஆதிரியன் ஊட்டியை விட்டு எங்கு கிளம்பினான்? எதற்காக கிளம்பினான் என்று தெரியாததால் ஆதிசேஷன் ஒரு காரணத்தை கண்டு பிடித்து ஆதிரியனை திட்டினார்.

“அவன் ஒன்னும் சொந்த வேலைக்காக குடும்ப தொழிலை பார்க்காம இல்ல. ரெண்டையும் ஒழுங்காதான் பாக்குறான்” ஆதிரியன் விபத்துக்குள்ளாகி படுத்தப்படுக்கையாக இருக்கும் நிலைமையிலையும் அவனை பற்றி குறை தான் சொல்ல வேண்டுமா என்று தந்தையின் மீது கோபம் வரவே கத்தினான் ஆதிசங்கர்.

“உன் பையன பேசினா வலிக்குது. என் பொண்ண பத்தி நீ தினமும் பேசுற” அந்த நேரத்திலும் ஆதிசேஷன் மலர்விக்காக பேச

“பொண்ணா அது பிசாசு. அது வந்த நேரம் தான் இப்படியெல்லாம் நடக்குது. நான் டாக்டரை போய் பார்த்துட்டு வரேன்.  எந்த நேரத்துல என்ன பேசணும், யாரை பத்தி பேசணும் என்று தெரியல” கோபமாக ஆதிசங்கர் மருத்துவரை தேடிச் சென்றான்.

“இவன் திருந்தவே மாட்டான்” என்று ஆதிசேஷன் மகனின் பின்னால் சென்றார். 

“யோவ் மேனேஜர் ஆதிரியன் பொழைப்பானா? மாட்டானா? பந்தயம் வச்சிக்கலாமா?” தன்னை மதிக்கும் ஒரே ஜீவன் கதிரவனென்று கதிரவனிடம் கேட்டான் ஆகாஷ்.

“சார் எதுல விளையாடுறது என்று ஒரு அளவே இல்லையா?” கதிரவன் பதறினான்

“ஆதிரியனுக்கு ஏதாவது ஆச்சுன்னா என் அக்கா பொண்ணு வருத்தப்படுவா. அவ வருத்தப்பட்டா ஆதிதி கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கும்” என்ற வான்முகிலன் ஆகாஷை தள்ளி விட்டு நகர்ந்தான்.

“அவன் அக்கா பொண்ணு வருத்தபட்டா என் பொண்டாட்டி எதுக்கு அழணும். லூசு மாதிரி பேசிட்டு போறான்” செல்லும் வான்முகிலனை புரியாமல் பார்த்தான் ஆகாஷ்.   

“அவர் உங்கள கொன்னுடுவேன்னு மிரட்டிடு போறாரு. நீங்க என்ன சார் காமடி பண்ணுறீங்க” மேனேஜர் கதிரவன் தீவிரமான முகபாவனையில் கூற, அச்சத்தின் உச்சிக்கே போனான் ஆகாஷ்.

  மருத்துவரிடம் விசாரித்ததில் ஆதிரியன் கோமாவுக்கு சென்றதாகவும், ஓட்டுநர் பலத்த காயங்களோடும் உயிர் தப்பியிருக்கிறார் என்றார்.

“அது எப்படி டாக்டர் வண்டி ஓட்டினவன் தப்பிச்சிட்டான் என் பையன் உசுருக்கு போராடுறான் னு சொல்லுறீங்க? அவன் பின்னாடி தானே உக்காந்திருந்தான்” ஆதிரியனின் நிலைமையை பார்க்க முடியாமல் கொதித்தான் ஆதிசங்கர்.  

“ட்ரைவர் ரூல்ஸை மீறாம ட்ரைவ் பண்ணியிருக்காரு. அதனால சேப்பாகிட்டாரு. மிஸ்டர் ஆதிரியன் சீட் பெல்ட் போடல. பின்னாடி இருந்தாலும் அடி பலமா விழுந்திருக்கு. வெளிக்காயங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம். அவர் கோமால இருந்து கண் முழிச்சா தான் அடுத்து என்ன ட்ரீட்மெண்ட் பண்ணனும் என்று பார்க்கணும்” என்றார் மருத்துவர்.

“டாக்டர் என் பேரன நான் சென்னைக்கே கூட்டிட்டு போலாம்னு இருக்கேன். இப்போவே கூட்டிட்டு போலாமா?”

“போலாம் பிரச்சினை இல்ல” மருத்துவர் அனுமதித்த உடன் ஆதிரியனை உடனடியாக சென்னையிலுள்ள ஆதி குரூப்புக்கு சொந்தமான ஆதி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆதிரியனை பார்க்க வீட்டார் மாத்திரமன்றி வான்முகிலன் வீட்டிலிருந்து சுபி, சந்திரமதி, காஞ்சனாதேவி மூவரும் வான்முகிலனோடு வந்திருந்தனர்.

“வீட்டுக்கு வர்ர மருமகள் மகாலட்சுமியா இருக்கணும் இப்படி வருங்கால புருஷன் உசுர எடுக்கக் கூடாது. ஜாதகம், பொருத்தம், நல்ல நேரம் பார்த்து இந்த திருமணத்தை பேசியிருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா?” லதாவின் அன்னை தான் வாய்க்கு வந்தபடி பேசினாள். 

ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று கனகா யோசிக்க, சுபி கலங்கியவாறே அன்னையின் கையை பற்றினாள்.

“இன்னும் எத்தனை நாளைக்கு நடக்குறது எல்லாத்துக்கும் பொம்பள புள்ளையே குத்தம் சொல்வீங்க? இன்னமும் கல்யாணமே நடக்கல. ஆதிரியன் கோமாகு போய்ட்டான். எந்திருக்கவே மாட்டான் இந்த கல்யாணம் நடக்காது என்று நாங்க தான் எங்க பொண்ணுக்கு இன்னொரு மாப்புளைய பார்த்து கட்டி வைக்க முடிவு செஞ்சிருக்கணும்.

ஆனா பாருங்க நிச்சயதார்த்தம் மட்டும் தான் ஆகிருச்சு. கட்டிக்க போறவனுக்கு இப்படியாகிருச்சேன்னு அவ துடிச்சு போய் ஓடி வந்தா, கண்டவங்க பேச்செல்லாம் கேட்க வேண்டியதா இல்ல இருக்கு.

ஆதிசேஷன் ஐயா என்னமோ தொழில் மட்டுமில்ல குடும்பத்தையும் என் கண்ட்ரோல்ல வச்சிருக்கேன்னு சொல்வாரு. நீங்க பேசுறத பார்த்தா அப்படி தெரியலையே” என்றான் வான்முகிலன்.

“அம்மா கொஞ்ச நேரம் சும்மா இருக்குறியா?” லதா அன்னையை அடக்க,

“உண்மைய சொன்னா கசக்கத்தான் செய்யும். எனக்கென்ன வந்ததது” என்றவாறே லதாவின் அன்னை அறையை விட்டு வெளியேறினாள்.

உண்மையில் ஆதித்தை விட ஆதிரியன் சம்பாதிப்பதும், ஒரே குடும்பத்தில் பெண்ணெடுப்பதும் லதாவுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை.

ஆதித் செய்த காரியத்தால் மாளவிகா, ஆதித் திருமணத்தை முறிக்க முடியாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆதிரியன் மற்றும் சுபலக்ஷ்மியின் திருமணத்தை நிறுத்த வேண்டி அன்னையை வரச் சொன்னதும், பேசச் சொன்னதும் லதா தான்.

வான்முகிலன் இவ்வாறு பேசுவான் என்று எதிர்பார்க்காததால் அன்னையை திட்டுவது போல் அங்கிருந்து போக சொன்னாள்.

என்ன தான் ஆதிசேஷன் தன்னுடைய குடும்பம் பிரிந்து செல்லக் கூடாது என்று அனைவரையும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக தன்னோடு வைத்துக் கொண்டாலும், அவர்களுக்குள் பிரச்சினை எரி மலையாக தூங்கிக் கொண்டு தான் இருக்கிறது. எந்த நேரத்தில் வெடித்து சிதறும் என்பது தான் தெரியவில்லை.

“சுபி நீ சொல்லு. இந்த கல்யாணம் நடக்கணுமா?”

“என்ன மாமா பேசுற? இந்த நேரத்துல தானே அவர் கூட இருக்கணும். நான் அவர் கூட இருந்தே பாத்துக்கிறேன்”

“கூட இருந்து பாத்துகிறது என்றா? இருபத்தி நாலு மணி நேரமுமா? உன்னால முடியுமா?”

“ஏன் முடியாது. கல்யாணமாகியிருந்தா யாரோட அனுமதியும் தேவைப்பட்டிருக்காது. இந்த கேள்வியும் வந்திருக்காது” கொஞ்சம் கோபத்தோடு பேசுபவளின் அருகில் வந்தாள் கனகவள்ளி.

“என்ன மன்னிச்சிடுமா. அந்தம்மா பேசினது கேட்டு நானே ஒரு நிமிஷம் அப்படி நினைச்சிட்டேன். நீ நினைச்சிருந்தா என் பையன வேணாம் என்றே சொல்லியிருக்கலாம் என்று எனக்கு தோணவே இல்ல” கண்கள் கலங்க சுபியை கட்டிக் கொண்டாள்.

“சரி அப்போ ஆதிரியன நீங்க ரெண்டு பேருமே கூடவே இருந்து பாத்துக்கோங்க. ஆதிசேஷன் ஐயா சொன்ன ஸ்பெஷல் நர்ஸ் தேவைபடாது” என்றான்.

ஆதிரியனுக்கு நடந்த விபத்து திட்டமிட்ட சதி. கொலை முயற்சி என்றால் மீண்டும் ஆதிரியனை கொலை செய்ய முயற்சி செய்வார்கள்.

இதை எல்லாம் செய்வது மலர்விழி என்றால் அவளால் மிகவும் இலகுவாக ஆதிரியன் இருக்கும் அறைக்கு வந்து போக முடியும்.

ஆதாரமில்லாமல் மலர்விழியால் ஆதிரியனின் உயிருக்கு ஆபத்து என்றால் ஆதிசேஷன் நம்ப மாட்டார். அவர் குடும்பத்தார் கூட என் பேச்சை நம்ப மாட்டார்கள்.

ஆதிரியன் கூடவே யாராவது இருக்க வேண்டும். என்று தான் சுபியை பேச வைத்து ஆதிரியனோடு இருக்கும்படி பார்த்துக்கொண்டான் வான்முகிலன்.

கனகவள்ளியும், சுபியும் மாத்திரமல்லாது தனக்கு நம்பிக்கையான ஒருவரையும் பாதுகாப்புக்கு போட வேண்டும் என்று முடிவு செய்தான்.

வான்முகிலன் பேசுவதை கேட்டவாறே ஆதிசேஷனோடு உள்ளே வந்தாள் மலர்விழி.

“ஆக்சிடண்ட்டுல செத்துடுவான்னு பார்த்தா இப்படி அறையும் குறையுமா படுத்து கெடக்குறான். நல்லவேளை யார்கிட்டயும் அவன் சந்தேகப்பட்டது, என்ன பத்தி கண்டு பிடிச்சது என்று எதையுமே சொல்லல. சொல்லி இருந்தா என் திட்டமெல்லாம் என்ன ஆகுறது?” மனதுக்குள் நினைத்தவாறே ஆதிரியனை பார்த்தவள்

“ஆதிரியனோட கண்டிஷன் என்னப்பா… எப்போ கண் முழிப்பார் என்று டாக்டர் சொல்லுறாங்க” சோகமான முகத்தோடு ஆதிசேஷனை ஏறிட்டாள்.

அதை தானே அவள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆதிரியன் கோமாவில் இருக்கும் வரையில் அவளுக்கு பிரச்சினையில்லை. கண் முழிப்பானென்றால் அவன் உயிரோடு இருக்கக் கூடாதே.

ஆதிரியனை காப்பாற்ற முடியும் என்று எனக்குத் தோணவில்லை என்று தலையசைத்து கூறினார் ஆதிசேஷன்.

அதை பார்த்து உள்ளுக்குள் புன்னகைத்தாலும் அவர் கையை ஆறுதலாக பற்றி “கடவுள் கிட்ட வேண்டிக்கலாம் ..ப்பா…” என்றாள் மலர்விழி.

 அவளை பார்த்திருந்த வான்முகிலனுக்கு அவள் நடிப்பது போல் தெரியவில்லை.

Advertisement