Advertisement

அத்தியாயம் 11

கழிவறைக்கு வந்த நிலஞ்சனா மலர்விழியை கண்டு கொள்ளாது அவள் பாட்டில் முகம் கழுவலானாள்.

அன்று மலர்விழி தேநீரை கொடுத்த பொழுது பேசியதை வைத்து ஒரு ஊகத்தில் தான் வான்முகிலனிடம் “என்ன மலர்விழி ப்ரொபோஸ் பண்ணி நீங்க அவங்கள வேண்டாம்மென்று சொன்னீங்களா?” என்று கேட்டாள்.

அதிர்ந்த வான்முகிலன் அவனும் மலர்விழியும் ஒரே கல்லூரியில் படித்ததாக கூறியதோடு நிறுத்தியிருந்தான்.

அவனது அதிர்ந்த முகமே நிலஞ்சனா ஊகித்தது சரியென்று உறுதியானது. அதற்கு மேல் அவனிடம் இவளும் எதையுமே கேட்கவில்லை. அவனுடைய அந்தரங்க விஷயங்களை பேசுமளவுக்கு இருவரும் இன்னும் நெருங்கிப் பழகவில்லை. வான்முகிலனே கூறினால் தான் உண்டு. அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையால் நிலஞ்சனா வம்படியாக வான்முகிலனின் வாயை கிளறி என்ன நடந்தது என்று கேட்டறிந்துக் கொண்டால் தான் உண்டு.

ஆக மலர்விழிக்கு வான்முகிலன் மீது எதோ ஒரு கோபம் இருக்கிறது. மலர்விழிக்கும் தனக்கும் தொழில்ரீதியான பேச்சு வார்த்தையுமில்லை. சிநேகிதமாக பேசவும் ஒன்றுமில்லை என்றுதான் நிலஞ்சனா அவளை கண்டு கொள்ளவில்லை.  

மலர்விழிக்கு நிலஞ்சனாவிடம் பேச பிடிக்கவில்ல்லை. ஆனால் நிலஞ்சனாவுக்கும் வான்முகிலனுக்கும் என்ன உறவு என்று அறிந்துகொள்ள வேண்டும் என்று அவள் உள்ளம் துடித்தது.

எரிச்சலை உள்ளுக்குள்ளே அடக்கிக் கொண்டு “உங்களுக்கும் வான்முகிலனுக்கும் ஏற்கனவே பழக்கமா?” கைகளை கழுவியவாறே கண்ணாடியை பார்த்தவள் நிலஞ்சனாவை பாராமலையே கேட்டாள்.

நிலஞ்சனா சாதாரண பெண்ணல்லவே! வக்கீல். தன்னிடம் பேசுபவர் அன்று என்ன பேசினார். இன்று என்ன பேசுகிறார்? என்ன நோக்கத்தோடு பேசுகிறார் என்று கணிப்பவளாச்சே.

அன்று வான்முகிலனை “மிஸ்டர் வான்முகிலன்” என்ற மலர்விழி, இன்று சாதாரணமாக வான்முகிலன் என்றதும் வான்முகிலனுக்கும் அவளுக்கும் ஏற்கனவே அறிமுகம் இருக்கு, மலர்விழிக்கு வான்முகிலன் மீது எதோ ஒரு கோபம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள்.

“அத தெரிஞ்சிக்கிட்டு நீங்க என்ன செய்ய போறீங்க?” மலர்விழி கேட்ட உடனே நிலஞ்சனா சொல்லிவிடுவாளா? அதுவும் அவளை பாராமல் கண்ணாடியை பார்த்தவாறே பேசுவதிலையே மலர்விழிக்கு தன்னிடம் பேச விருப்பமில்லை. வான்முகிலனுக்கும் தனக்கும் என்ன உறவு என்று அறிந்துகொள்ள வேண்டும் என்றுதான் கேட்கிறாள் என்பதும் தெளிவாக தெரிந்தது.

தான் இன்முகமாக, சாதாரண ஒரு கேள்வியை கேட்டால் என்ன இவள் எடுத்தெறிந்து பேசுகிறாள்? மலர்விழிக்கு எரிச்சல் போய் கோபம் கனன்றது. அது அவள் முகத்திலும் பிரதிபலித்தது.

நிலஞ்சனாவுக்கு அறிவு கொஞ்சம் அதிகம் என்று கூடவே இருந்த பார்த்தவள் தான் மலர்விழி. மனதில் கோபம், வஞ்சமும், பகையும் திட்டங்களும் கூடவே கொஞ்சம் பதட்டமும் இருந்ததால் நிலஞ்சனா எப்படிப்பட்டவள் என்பதை மறந்து விட்டாள் போலும்.

மலர்விழியின் கோபமுகத்தை பார்த்த நிலஞ்சனா தான் கணித்ததை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு “சொல்லுங்க எனக்கும் வான்முகிலனும் என்ன உறவு என்று தெரிஞ்சிக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க? நீங்க யார் என்றே எனக்குத் தெரியாது. வான்முகிலனுக்கு உங்கள ஏற்கனவே தெரியும் தானே. இந்த கேள்வியை ஏன் நீங்க அவர் கிட்ட கேட்கல? அவர்கிட்டயே கேட்டிருக்கலாம். உங்களுக்கு அவர்மேல் இருக்குற கோபம் இன்னும் போகலையா”

“தான் என்ன கேட்டால் இவள் என்ன சொல்கிறாள்? தன்னை பற்றி வான்முகிலன் இவளிடம் கூறியிருக்கின்றான் என்றால் இவர்களுக்கிடையில் உண்மையிலயே நெருக்கமான உறவுதான். அது நட்பா? காதலா? சாதாரண நட்பாக தெரியவில்லை. காதல் போல் தான் தெரிகிறது.

மனைவி இறந்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் இவளை பிடித்துக் கொண்டானா?” சற்று முன் இருவரும் அந்நியோன்யமாக உணவுண்ட காட்ச்சியை வைத்து இருவரும் காதலர்கள் என்று உறுதி செய்யலானாள் மலர்விழி.

நிலஞ்சனா மலர்விழியை தூண்டுகிறாள் என்று புரியாமல் “ஓஹ்… என்ன பத்தி பேசுற அளவுக்கு உங்களுக்குள்ள நெருக்கம்னா நீங்க ரெண்டு பேரும் லவ்வசா?” நிலஞ்சனாவின் வாயிலிருந்து பெற வேண்டிய பதிலை இவளே கேட்டு விட்டாள்.

“ஏன் மனைவியை இழந்த வான்முகிலன் அவங்களையே நினைச்சு அழுதுகிட்டு ஒரு மூலைல உக்காந்துகிட்டு இருக்கணும் என்று நினைக்கிறீங்களா? அப்படி இருக்குறத பாக்யஸ்ரீயும் விரும்ப மாட்டாங்க. வான்முகிலனாலையும் ரொம்ப நாளைக்கு அப்படி இருந்துட முடியாது. அவர நம்பி அவர் கம்பனில வேலை செய்யிற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கு” மலர்விழி கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் பதிலடி கொடுத்தாள்.

“பரவால்ல பொண்டாட்டி செத்த கொஞ்சம் நாளையே மனச தேத்திகிட்டாரே. ஏற்கனவே பொண்டாட்டிய கொல்ல திட்டம் போட்டுத்தான் விமான விபத்தையே நிகழ்த்தினாரென்று அவருக்கு கெட்ட பெயர் இருக்கு. இப்போ உங்க காதல் விவகாரம் வெளிய வந்தா அது உறுதியாகும்” நக்கலடித்தாள் மலர்விழி.

இருவரும் காலேஜில் ஒன்றாக சந்தித்துக் கொண்ட பொழுது நடந்த நிகழ்வால் இத்தனை வருடங்கள் மலர்விழி வான்முகிலன் மீது கோபமாக இருக்கிறாளென்றால் அவளது கோபத்துக்கு பின்னால் இருப்பது பொறாமையா? வஞ்சமா? என்று நிலஞ்சனாவுக்கு புரியவில்லை.

“ஏற்கனவே எங்களுக்கு பழக்கம் இருந்திருந்தா தானே இந்த பிரச்சினை? நானும் வான்முகிலனும் சந்திச்சதே விபத்துக்கு பிறகு தானே. அது போலீஸ் விசாரிச்சா கூட தெரிய வரும்” என்ற நிலஞ்சனா மலர்விழியை கூர்ந்து பார்த்தாள்.

“வான்முகிலன ரொம்ப நம்பாதீங்க மேடம். எந்த நேரத்துல மனசு மாறுவான்னு தெரியல” கடுப்பில் உச்சத்தில் இருந்த மலர்விழி தன்னை அறியாமலே வார்த்தைகளை துப்பியிருந்தாள். நிலஞ்சனா அவளையே பார்த்திருக்கவும் சுதாரித்தவள் கழிவறையை விட்டு வேகமாக வெளியேறினாள்.

வெளியே வந்தால் வான்முகிலன் நிலஞ்சனாவுக்காக காத்திருந்தான். அதை பார்த்து மேலும் எரிச்சலடைந்தவள் வான்முகிலனிடம் வந்து “வாழ்த்துக்கள். மனைவி இறந்தா என்ன ஆம்பளைங்களுக்கு உடனே வாழ்க அமைஞ்சிடும். நிலஞ்சனா நல்ல சாய்ஸ் தான்” என்றாள் நக்கலாக.

அவள் பின்னால் வந்த நிலஞ்சனா “இவ மனசுல என்ன இருக்கு என்று கண்டு பிடிக்க நான் அமைதியாக இருந்தா, அவளா ஒன்னு நினைச்சி, அத இவன் கிட்டயே போய் சொல்லிட்டாளே என்ன சொல்ல போறானோ?” என்று வான்முகிலனை தான் பார்த்தான்.

“என் பொண்டாட்டி செத்துட்டான்னு நான் மூலைல உக்காந்து அழணும் எங்குறது தானே பல பேரோட ஆச. நான் இன்னொரு கல்யாணம் பண்ணி புள்ள குட்டியோட வாழ்ந்தா மொதல்ல சந்தோசப்படுறது என் பொண்டாட்டிதான்” என்றவன் “நிலு போலாமா?” நிலஞ்சனாவின் இடுப்பில் கைபோட்டவாறு அங்கிருந்து சென்றான்.

செல்லும் அவர்களை முறைத்தவாறு நின்றாள் மலர்விழி.

ராம் வண்டியை கொண்டு வந்து நிறுத்தியதும் இருவரும் ஏறிக்கொள்ள வண்டி கிளம்பியது.

வான்முகிலனிடம் எந்த விளக்கமும் நிலஞ்சனா கேட்கவில்லை.

“என்ன சொன்னா அவ?” நிலஞ்சனாவின் அமைதியை பார்த்து வான்முகிலனே கேட்டான்.

“செகரட்டரி பேசினது இருக்கட்டு. நீங்க அவங்க கிட்ட என்ன பேசினீங்க? என் அனுமதியே இல்லாம எதுக்கு என்ன தொட்டீங்க?” வான்முகிலனை முறைத்தாள்.

“சாரி. ஆதிசேஷன் மலர்விழி கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாரு. நோ சொல்லவும் உன் பெயரத்தான் உபயோகிச்சேன். மலர்விழியும் வந்து உன்ன பத்தி பேசியதும். அதுக்குள்ள அவர் இவளுக்கு போன் போட்டு சொல்லிட்டாரு என்று தான் நினச்சேன். வேற வழியில்லாம கொஞ்சம் உன் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டேன்”

“ஏன் மலர்விழிய கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே. அவங்க உங்க எக்ஸ் லவர் தானே” நிலஞ்சனா வான்முகிலனை பாராமல் கூற, இவர்களின் சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்த ராம் தான் அதிர்ந்தான்.

“அவளை கல்யாணம் பண்ணனும் என்றிருந்தா அம்மா எனக்கு பொண்ணு பாக்குறேன்னு சொன்னப்போவே மலர்விழி பத்தி அம்மா கிட்ட சொல்லி இருப்பேன். அம்மா என் ஆசைக்கு குறுக்க வந்திருக்க மாட்டாங்க. அப்போ எனக்கு அவ ஞாபகம் வரல. சொல்லப் போனா என்னைக்கு என் குடும்பம் தான் முக்கியம் என்று முடிவெடுத்து அவ கிட்ட லவ்வ சொல்லாம வந்தேனோ, அவ லவ்வ சொன்னப்போ கூட ரிஜெக்ட் பண்ணிட்டு வந்தேனோ அன்னைல இருந்து அவளை பத்தி நினைக்கிறதையே விட்டுட்டேன்.

ஆதிசேஷன் கூட அவளை பார்த்தாலும் அவ கூட பேச சந்தர்ப்பம் அமையல. அவளா பேசவுமில்ல. என்ன பேசுறது என்று எனக்கும் தோணல. என் ஸ்ரீ இறந்த பிறகு லைப்ல சில விஷயங்களை கடந்து தான் போகணும் என்று நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன். அதான் அன்னக்கி அவகிட்ட சகஜமா பேசினேன். ஆனா அவ என் மேல இன்னமும் கோபமா தான் இருக்கா” என்றான் வான்முகிலன்.

“அது ஒன்னும் சாதாரண கோபமா தெரியல. கொலைவெறி. பொறாமையா கூட இருக்கலாம்” என்ற நிலஞ்சனா “அவ பொறாமையை தூண்டுற மாதிரி கோபத்தை தூண்டுற மாதிரி நீங்க ஏன் நடந்துக்கிறீங்க?” உண்மையிலையே வான்முகிலனுக்கு என்ன தான் வேண்டும்? அவன் மலர்விழியிடம் என்ன எதிர்பார்க்கின்றான்? தன்னிடம் என்ன எதிர்பார்க்கின்றான்? என்று அவனது பதிலில் தேட முயன்றாள்.

“அப்போ என்னோட சூழ்நிலை காதலை விட குடும்பம் முக்கியம் என்று தோணுச்சு. மலர்விழி வேணாம்னு சொல்லிட்டேன். நான் ஒன்னும் மலர்விழி காதலிச்சு ஏமாத்தவுமில்ல. யூஸ் பண்ணிக்கவுமில்ல.

இப்போ வேணாம்னு சொல்லுறதுக்கு ஒரே காரணம் என் ஸ்ரீ தான். என் ஸ்ரீயத் தவிர யாரையும் என்னால காதலிக்க முடியாது” என்றான்.

“அவ கிட்ட அந்த பேச்சு பேசிட்டு. நிலு என்று என் பேர சுருக்கி செல்ல பேரு வேற வச்சி கொஞ்சிட்டு இங்க வந்து ஸ்ரீ.. ப்ரீ.. த்ரீ.. என்று கத சொல்லுறீங்களா? உங்களுக்கு பயம் எங்க நீங்க அந்த மலர்விழி திரும்ப லவ் பண்ணிடுவோமோ என்று பயம்” என்றாள் நிலஞ்சனா.

வான்முகிலனின் மனதை படித்து விட்டாள். அவன் அவனது மனதை இரும்புத்திரை கொண்டு பாக்யஸ்ரீ என்ற சாவியால் பூட்டி விட்டான். அதை திறக்க அவனை நேசிக்கும் பெண்ணால் தான் முடியும். அப்படியொருத்தியை அவள் எங்கே தேடுவாள்? ஆதாலால் அவனை சீண்டினாள். 

“எனக்கு எந்த பயமுமில்லை. நான் தெளிவா தான் இருக்கேன். அதான் சொன்னேனே. அவ மேல காதல் இருந்திருந்தா அம்மா கிட்ட சொல்லி அவளையே கல்யாணம் பண்ணியிருப்பேன்னு”

“பாக்யஸ்ரீயை நீங்க என்ன லவ் பண்ணியா கல்யாணம் பண்ணீங்க? அரேஞ் மேரேஜ் தானே. அவங்க இல்லனா என்ன இன்னொரு பொண்ணு” என்றவளை தன் பக்கம் திருப்பியிருந்தான் வான்முகிலன்

“இனப். என்னமோ உன் பேர சொல்லிட்டேன்னு ஓவரா பேசாத. ஒருநாளும் என் மனசுல உன்ன பத்தின எண்ணங்கள் வராது” என்றான்.

“சந்தோசம்” என்ற நிலஞ்சனா அவள் இறங்கும் இடம் வரவும் இறங்கிக் கொண்டாள்.

“அவ என்ன நினைச்சுகிட்டு இருக்கா மனசுல?” ராம் வண்டியை திருப்பவும் ராமிடம் பொருமினான் வான்முகிலன்.

“ஆள விடுங்கடா சாமி. இந்த ஆட்டத்துக்கு நான் வரல” காது கேளாதவன் போல் அவன் அமைதியாக வண்டியை ஓட்டினான்.

அதற்கும் வான்முகிலன் ராமை திட்ட ஆரம்பித்தான். 

வீட்டுக்கு சென்ற வான்முகிலனுக்கு நடந்த அனைத்தும் கோர்வையாக ஞாபகத்தில் வந்து எதை எதையோ சிந்தித்தான்.

திருடன் போலீஸ் விளையாட்டில் தான் யார் என்ற அடையாளம் போலீசுக்கு தெரியாமல் இருக்கும் வரையில் தான் குற்றவாளியின் ஆட்டம் இருக்கும்.

குருதியை மோப்பம் பிடிக்கும் வேட்டை மிருகங்களை போல் துப்பு துலக்கியவாறு இரையை தேடி துரத்திக் கொண்டே இருக்கும் போலீஸாருக்கு குற்றவாளி தன்னையறியாமளையே ஆதாரங்களை விட்டுச் சென்று விடுவான். 

மலர்விழியும் அவ்வாறுதான் அவளையறியாமலே அவள் மீது வான்முகிலனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தாள்.

மலர்விழி ஆதிசேஷனை “அப்பா” என்றழைத்ததும், ஆதிசேஷன் மலர்விழியை தன்னுடைய “மகள்” என்றதும் வான்முகிலனின் கண்களுக்குள் வந்து நின்றது.

மலர்விழியை திருமணம் செய்ய முடியாது என்றதால் ஆதிசேஷனிடம் கேட்கவும் முடியாது. தனக்கு யாருமில்லை. தான் ஒரு அநாதை என்ற மலர்விழியின் தந்தை ஆதிசேஷனா? என்று அவளிடமும் கேட்க முடியாது. யாரிடம் கேட்பது என்று தூக்கம் வராமல் சிந்தித்தவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

“நிலஞ்சனா…. அவளிடம் கேட்டால் உடனே தீர்வு சொல்வாள். மலர்விழி ஆதிசேஷனை அப்பா என்றழைத்ததை நிலஞ்சனா கவனித்திருப்பாளா?  கவனித்திருந்தால் கேட்டிருப்பாளே. கவனித்திருந்தாலும் அவளுக்குத்தான் ஆதிசேஷனின் குடும்பத்தை பற்றித் தெரியாதே”

“இப்போ எதுக்கு நீ நிலஞ்சனாவ பத்தி யோசிக்கிற?” அவன் மனம் கேள்வி எழுப்ப,

“இது ஒபிசியல்” தலையை உலுக்கியவன் மலர்விழியை பற்றி சிந்திக்க,

“சே…” எழுந்து சென்று முகம் கழுவி விட்டு வந்தான்.

திருமண கோலத்தில் அறையிலிருந்த புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த பாக்யஸ்ரீயை பார்த்தவன் “உன்ன லவ் பண்ணாம கல்யாணம் பண்ணவன் என்று நிலஞ்சனா சொன்னா. உலகத்துல இருக்குற எல்லாருமே லவ் பண்ணியா கல்யாணம் பண்ணுறாங்க. நான் உன் மேல வச்சிருக்கிற லவ்வ யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லையே.

என் மனைவியை காதலிக்கனும் என்று தான் நான் உன் கழுத்துல தாலி கட்டினேன். உன்ன புரிஞ்சிக்க எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேணும் என்று நினச்சேன். ஆனா நீ என்ன விட பாஸ்ட்டா கல்யாணத்துக்கு முன்னாடியே என்ன பத்தி தெரிஞ்சிக்கிட்டு என்ன காதலிக்கவே ஆரம்பிச்சிருந்த.

உன் காதல் ஆழமானது. உன் மேல எனக்கு காதல் வரவும் அது தான் காரணம். நம்ம காதலையும், வாழ்ந்த வாழ்க்கையை பத்தியும் மத்தவங்களுக்கு விளக்கமும் கொடுக்கணுமா என்ன?” பாக்யஸ்ரீயின் புகைப்படத்தோடு பேசிப் பேசியே தூங்கிப் போய் இருந்தான் வான்முகிலன்.

அடுத்த நாள் நிலஞ்சனா வான்முகிலனின் காரியாலயம் வரும் பொழுது ஆதிரியன் அங்கே அமர்ந்திருந்தான். சுபலக்ஷ்மியை திருமணம் செய்துகொள்ளப் போகின்றான். அது விஷயமாக ஏதாவது பேச வந்திருக்கின்றானா? தொழில் விஷயமாக பேச வந்திருக்கின்றானா? யோசனையாகவே அவனை பார்த்தவள் அவன் அசௌகரியமாக அமர்ந்திருப்பதை பார்த்து குடும்ப விஷயம் என்று புரிந்து கொண்டாள்.

இவர்கள் குடும்ப விஷயம் பேசும் பொழுது தனக்கு இங்கு என்ன வேலை என்று நிலஞ்சனா வெளியேற முயல வான்முகிலனின் கணீர் குரல் அவளை தடுத்தது.

“எங்க போறீங்க மிஸ் நிலஞ்சனா? பொது எதிரியை கண்டு பிடிக்க வேண்டாமா? அதற்காகத்தான் ஆதிரியன் வந்திருக்காரு” என்றான்.

சட்டென்று அவனை திரும்பிப் பார்த்தவள் எதுவும் பேசாமல் ஆதிரியனுக்கு முன்னால் வந்தமர்ந்தாள். 

“என் கிட்ட என்னெல்லாம் சொன்னீங்களோ அதெல்லாம் வக்கீலம்மாகிட்ட சொல்லுங்க” என்றான் வான்முகிலன்.

நிலஞ்சனா நீ ஒரு வக்கீல். உன்னை என் கம்பனியில் வேலைக்கு சேர்த்திருக்கிறேன். என்னுடைய சொந்த விஷயங்களை பேசவல்ல என்று சொன்னதோடு, “அம்மா” என்று மரியாதை கொடுத்து அவள் அறிவுக்கூர்மையை கூறினானா அல்லது அவனுக்கும் அவளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்த நினைக்கின்றானா தெரியவில்லை.

சினேகமாக பேசும் வான்முகிலனின் பேச்சு இன்று மாறுபட்டிருப்பதற்கான காரணம் நேற்றிரவு பேசியதன் தாக்கம் என்று நிலஞ்சனாவுக்குத் தெரியாதா? உள்ளுக்குள் புன்னகைத்தவள் வெளியே எதையுமே காட்டிக்கொள்ளாமல் ஆதிரியனை ஏறிட்டாள்.

மலர்விழியை ஆதிசேஷன் வீட்டுக்கு அழைத்து வந்ததிலிருந்து இன்று வரையில் நடந்ததை கூறினான் ஆதிரியன்.

“ஓஹ்… அதான் நேத்து மிஸ் மலர்விழி உங்க தாத்தாவை அப்பான்னு கூப்டாங்களா?” என்ற நிலஞ்சனா “உங்க சந்தேகம் தான் என்ன வான்முகிலன்?” நிலஞ்சனா வான்முகிலனை கேட்டாள்.

ஆதிசேன் தனது மகளான மலர்விழியை வான்முகிலனுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினார். மலர்விழிக்கு வான்முகிலன் மேல் கோபமிருக்கிறது. இதெல்லாம் போக காலையிலையே ஆதிரியனை அழைத்து மலர்விழியின் இறந்தகாலத்தை அறிந்துகொள்ள நினைப்பதன் நோக்கம் தான் என்ன?

“அந்த பைலட் ராஜேஷை டுவிட் போட வச்சதே இந்த மலர்விழியாகத்தான் இருக்கும் என்று எனக்கு சந்தேகமாக இருக்கு”

“எனக்கும் தான்” என்றான் ஆதிரியன்.

“பைலட் ராஜேஷ் காணம போய்ட்டாரு. அவரை மிரட்டி டுவிட் போட வைக்க மலர்விழியால முடியுமா?”

ஒரு பெண்ணால் தனியாக இதையெல்லாம் செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது என்று வான்முகிலனும் ஆதிரியனும் நிலஞ்சனாவை பார்த்தனர்.

“மலர்விழிக்கு யாராவது உதவி செஞ்சிருக்கணும். ஏன் அந்த பைலட் ராஜேஷே உதவி செஞ்சிருக்கலாம். அவங்களுக்குள்ள என்ன உறவு என்று கண்டு பிடிக்கணும். அதுக்கு முதல்ல. மலர்விழியோட அம்மாக்கும், ஆதிசேஷன் ஐயாகும் என்ன சம்பந்தம் என்று விசாரிங்க. இது எதுவுமே தெரியாம மலர்விழி மேல சந்தேகப்படுறது தப்பு” என்றாள்  நிலஞ்சனா.

அவள் சொல்வது சரிதான் என்று ஆதிரியனை பார்த்த வான்முகிலன் ஒரு பிரைவேட் டிடெக்டிவை ஏற்பாடு செய்து மலர்விழியை பற்றி அறிந்துகொண்டு அழைக்கிறேன் என்று கூற ஆதிரியன் அங்கிருந்து வெளியேறினான். 

இங்கே மலர்விழி நிலாஞ்சனாவை பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.

“அன்னக்கி மீட்டிங்கிலேயே அவ புத்திசாதுரியமானவ என்று நிரூபிச்சிட்டா. அது தெரிஞ்சும் என் கோபத்தால் அவகிட்ட போய் வாய கொடுத்து மாட்டிகிட்டேன். என்னமா பேசி என்னையே மடக்கிட்டா. அவள பத்தி தெரிஞ்சும் உஷாரா இருந்திருக்கணும். என் கோபத்தினால வந்த வினை. அந்த வான்முகிலன் இன்னொரு கல்யாணம் பண்ணா என்ன? இன்னொருத்திய வச்சிருந்தா என்ன? அவனை பழிவாங்குறது தானே என் எண்ணம். அத விட்டுட்டு அவன் யார காதலிக்கிறான்னு எதுக்கு கவலை பாடணும்” தன்னையே நொந்துகொண்டவள் நடந்ததை நினைத்து கவலை படாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தாள்.

அந்தநேரம் சாருமதி ஆதிசேஷனை பார்க்க வேண்டும் என்று வந்து நின்றாள்.

“இவங்க வான்முகிலனோட அக்கா இல்ல. போட்ட வெடி இந்தம்மா நெஞ்சுக்குள்ள நல்லாவே வெடிச்சிருக்கு போலயே?” உள்ளுக்குள் சிரித்தவாறு “அப்பொய்ன்ட்மென்ட் இருக்கா மேடம்” பணிவாகக் கேட்டாள்.

சாருமதியை நிச்சயதார்த்த நிகழ்வில் பார்த்து தான் அடையாளம் காண வேண்டும் என்றில்லை. என்று வான்முகிலனை பழிவாங்க முடிவு செய்தாலோ அன்றே அவன் குடும்பத்தை பற்றியும், குடும்பத்தாரை பற்றியும் அலசி ஆராய்ந்து விட்டாள்.

“சொந்தக்காரங்களுக்கு அப்பொய்ன்ட்மென்ட் எதுக்கு. சார்கிட்ட சம்பந்தியம்மா வந்திருக்கேன்னு சொல்லு” அதிகாரக் குரலில் கூறிய சாருமதி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

மலர்விழி எந்த பதட்டமும் இல்லாமல் ஆதிசேஷனின் அறைக்கு சென்று வான்முகிலனின் அக்கா வந்திருப்பதாக கூற, நெற்றியை தடவினார் ஆதிசேஷன்.

நேற்று வான்முகிலனிடம் பேசியதை அவன் வீட்டில் கூறி மலர்விழிக்கு வான்முகிலனை கேட்டதற்கு பிரச்சினை செய்ய வந்திருப்பாளோ? யார் வந்திருப்பாள் என்று சிந்தித்தவாறே உள்ளே அனுப்புமாறு கூறினார்.

உள்ளே வந்த சாருமதி “வணக்கம். முக்கியமான விஷயம் பேசணும். வீட்டுல வந்து தான் பேசணும். ஆனா வீட்டுல பொம்பளைங்க இருப்பாங்க அதான் ஆபீசுக்கு வந்தேன்” அனுமதிக்கெல்லாம் காத்திருக்காமல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

தனது இருக்கையிலிருந்து எழுந்த ஆதிசேஷன் “என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்டவாறே சாருமதியின் எதிரே வந்தமர்ந்தார்.

“இப்போதைக்கு எதுவும் சாப்பிடுற மூட்ல இல்ல. எதுக்காக வந்தேன்னு சொல்லுறேன்” என்றவளோ நேரடியாக விசயத்துக்கு வந்தாள்.

“இங்க பாருங்க. எனக்கிருக்கிறது ஒரே பொண்ணு. அவள நல்ல இடத்துல கட்டிக் கொடுக்கணும் எங்குறது மட்டுமல்ல. நல்ல பையனுக்கு கட்டிக் கொடுக்கணும் எங்குறது தான் என் கனவு.

உங்க பேரன் தப்பானவன் என்று சொல்ல வரல. என் மாப்புளய பத்தி நானே தப்பா சொன்னா நல்லா இருக்காது. ஆனா பாருங்க என் பொண்ணு மூத்தவ. அவள உங்க மூத்த பேரனுக்கு கொடுத்திருக்கணும். நடந்த அசம்பாவிதத்துல உங்க ரெண்டாவது பேரனுக்கு கட்டிக் கொடுக்க வேண்டியதா போச்சு.

உங்க மூத்த பேரனுக்கு வேற இடத்துல வரன் பாத்திருந்தா பரவால்ல என் தங்கச்சி பொண்ணையே அதுவும் என்  பொண்ணோட தங்கச்சியையே பார்த்தா புகுந்த வீட்டுல என் பொண்ணு தங்கச்சிக்கு கீழ இருக்கணும் இல்லையா? அது அக்கா தங்கச்சிக்குள்ள வீணான பிரச்சினையை உருவாக்கும்.

இதுல உங்க மூத்த பேரன் தனியா சம்பாதிச்சு சொத்து வேற சேர்த்து வச்சிருக்குறதா சொல்லுறாங்க. தான் வாழ வேண்டிய வாழ்க்கை மாறிப் போச்சு என்று என் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இடைல கூட சுமூகமான உறவு ஏற்படுமா? சொல்லுங்க? 

உங்க வீட்டுல மருமகளுங்களை ஒரே மாதிரியா, சம அந்தஸ்து கண்டிப்பா கொடுப்பீங்க. அதனால எங்க வீட்டு பொண்ணுங்கக்குள்ள பிரச்சினை வராது. சொத்தையும் சரிசமமான கொடுத்தீங்கன்னா எந்த பிரச்சினையும் வராது” என்றாள்.

சாருமதி பேசப் பேச வான்முகிலன் மட்டுமல்ல அவன் குடும்பத்துப் பெண்களும் அவனை போலவே வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்றுதான் பேசுவார்கள் என்று நினைத்தவர் அவளது சாராம்சத்தை தெளிவாக புரிந்து கொண்டார்.

“ஒரு ஆணோட வெற்றிக்கு பின்னால ஒரு பெண் இருக்கா என்று சொல்லுவாங்கல்ல. என் பேரனுங்க கல்யாணம் பண்ண போற உங்க வீட்டு பொண்ணுகளால அவங்க முன்னேறுவங்களான்னு பார்க்கலாம். அத பொருத்துதான் யாருக்கு எந்த சொத்த கொடுக்குறது. யாருக்கு எந்த பொறுப்பை கொடுக்குறது என்று நான் முடிவு பண்ணுவேன்” என்றார் ஆதிசேஷன்.

வான்முகிலனை தான் சமாளிக்க முடியாமல் திண்டாடுவார். சாருமதியின் தந்திரமெல்லாம் ஆதிசேஷனிடம் பலிக்குமா?

“என்ன சாப்பிடுறீங்க?” மீண்டும் ஆதிசேஷன் கேட்க, அவரை முறைக்க முடியாமல் எழுந்து கொண்டாள் சாருமதி.

“உங்க பொண்ணுக்கு சம அளவில்ல. உங்க பொண்ணு பேர்லயே நான் சொத்து எழுதிக் கொடுக்குறேன். அதுக்கு உங்க தம்பி என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும் பண்ணிக்குவாரா?”

வான்முகிலனிடம் தோற்றுப்போக முடியுமா? அவன் அக்காவையே பயன்படுத்திக்கொள்ள நினைத்தார்.

“பொண்ணா? உங்களுக்கு பொம்பள புள்ளையே இல்லையே” சாருமதி யோசனையாக ஏறிட, அவர்களுக்கு குளிர்பானம் எடுத்து வந்த மலர்விழியை அறிமுகப்படுத்தினார் ஆதிசேஷன்.

Advertisement