Advertisement

அத்தியாயம் 10

அடுத்த நாள் காலை மலர்விழி கண்விழிக்கும் பொழுதே அவள் அலைபேசி அடித்தது. அழைத்தது ஆதிசேஷன்.

“காலையிலையே எதுக்கு கூப்பிடுறாரு?” என்று சிந்தித்தவாறே “சொல்லுங்கப்பா ஏதாவது பிரச்சினையா?” பொய்யாய் குரலில் பதட்டத்தை கொண்டு வந்தாள்.

ஆதிசேஷனை நம்ப வைக்க பிடிக்குதோ, பிடிக்களையோ “அப்பா” என்று அழைத்து தான் ஆகா வேண்டும் வேறு வழியில்லை. காரியாலயம் மற்றும் பொது இடங்கள் எங்கே சென்றாலும் ஆதிசேஷனை ஐயா என்று அழைப்பவள், ஆதிசேஷனின் வீட்டில் இருக்கும் பொழுதும், அவளது வீட்டில் இருக்கும் பொழுதும் “அப்பா” என்று தான் அழைப்பாள். அந்த வகையில் மிகவும் தெளிவாக இருந்தாள் மலர்விழி.

“என்னம்மா காலையிலையே போன் பண்ணதும் பயந்துட்டியா? எந்த பிரச்சினையுமில்ல… முக்கியமான விஷயம் பேசணும். ஆபிஸ்ல பேச முடியாது. வீட்டுக்கு வரியா?”

“அதானே பிரச்சினை பண்ண நான் இருக்கும் பொழுது வேற யாரு உங்களுக்கு பிரச்சினை உண்டு பண்ணுவாங்க?” ஆதிசேஷன் பேசப் பேச நக்கலாக நினைத்தவள் வீட்டுக்கு வரச் சொன்னதும் “எதற்காக இருக்கும்?” என்று சிந்தித்தவாறே ஆதிசேஷனின் வீட்டுக்கு கிளம்பினாள்.  

இவள் கிளம்பிச் சென்ற நேரம் ஆதிசேஷனின் வீட்டில் அனைவருமே காலை உணவுக்காக மேசையில் அமர்ந்திருக்க, இவளை கண்டதும் அனைவரின் முகங்களும் கொஞ்சம் சுருங்கத்தான் செய்தது.

“வாம்மா… வந்து என் பக்கத்துல உக்காரு” ஆதிசேஷன் அன்போடு அழைக்க, மலர்விழி புன்னகையோடு அவர் அருகில் சென்று அமர்ந்தாள்.

ஆதிசங்கர், ஆதித்யன், ஆதிதேவ் மூவரும் வளமை போல் முறைக்க, இளைய தலைமுறையினர் மலர்விழியிடம் பேசலாமா? வேண்டாமா? என்று குழம்பி நின்றனர்.

 “அம்மா கனகவள்ளி என் பொண்ணு வந்திருக்கா. அவளுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு எடுத்து வைமா” மூத்த மருமகளை ஏவினார் ஆதிசேஷன்.

கனகவள்ளி எந்த சங்கடமும் படவில்லை. கணவனை பார்த்து அனுமதியும் கேட்கவில்லை. மாமனார் சொன்னதை கேட்டு மலர்விழியிடம் வந்தவள் “உனக்கு என்ன பிடிக்கும் என்று தெரியலமா… இன்னக்கி இட்லி, தோசை, சக்கரபொங்கல் தான் பண்ணோம். இதுவே ஓகே வா இல்ல வேற ஏதாச்சும் பண்ணட்டுமா?” இன்முகமாகத்தான் கேட்டாள்.

“ஐயோ அண்ணி நீங்க அன்பா கேட்டதே சந்தோசம். இங்க இருக்கிறதே போதும். ஆமா ஏன் நீங்க மூணு பேரும் சாப்பிடமா இருக்கிறீங்க. நீங்களும் எங்க கூடயே உக்காந்து சாப்பிடலாமே” இந்த வீட்டில் ஆண்கள் சாப்பிட்ட பின் தான் பெண்கள் சாப்பிட வேண்டும் என்று எந்த சட்டமுமில்லை. ஆனால் கணவன் சாப்பிட்ட பின் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.

அதை மலர்விழியிடம் கூற முடியுமா? “நாங்களும் இவங்க கூடயே உக்காந்தா யார் பரிமாறுறது. நீ சாப்பிடுமா. கயல்விழி அத்தைக்கு சாப்பாடு கொடுக்குறா” ஆதித்யனின் மனைவி லதா புன்னகையோடு கூறியதோடு அடுத்து அவள் ஆதிதேவின் மனைவி கயல் எங்கே என்று கேட்பாளேன்று அதற்கும் சேர்த்தே பதில் கூறினாள்.

 “சரி அண்ணி” ரொம்பவே உரிமையாக புன்னகைத்த மலர்விழி “நேத்து நிச்சயதார்த்த பங்க்ஷன்ல யார் என்றே தெரியாதது போல நடந்துகிட்டீங்க. இன்னக்கி பாசமழையை பொழியிறீங்க. உங்களையெல்லாம் நல்லா வச்சி செய்யணும்” மனதுக்குள் கருவியவாறே ஆதிசேஷனுக்கு பார்த்துப் பார்த்து பரிமாறியள் சாப்பிடலானாள். 

“அங்க பாரு என்னமோ அவ சமச்சத்து போல என்னமா எடுத்து வைக்கிறா? விட்டா அப்பாக்கு ஊட்டி விடுவா போலயே. இதுல எங்க பொண்டாட்டிங்க வேற அவ மேல என்னமா பாசத்த பொழியிறாங்க. நம்மள வெறுப்பேத்துறாங்களாம்” ஆதிசங்கர் கடுப்பில் பொரிய, தம்பிகள் இருவரும் மலர்விழியை வெறுப்பாக பார்க்கலாயினர்.

“நிச்சயதார்த்தம் நடக்குமா? நடக்காதான்னு பயந்துகிட்டே இருந்தேன். நல்லவேளை நீங்க நல்லபடியா நடத்திட்டீங்க” தன்னிடம் சொல்லாமல் நிச்சயதார்த்தத்தை நடாத்தினாரென்றால் தன்னை சந்தேகப்படுகிறாரா? அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா? என்று மலர்விழி அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. அதன் பின் தானே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க முடியும்.     

“எவன் என்ன பண்ணாலும் இந்த ஆதிசேஷனை ஒன்னும் பண்ண முடியாது” கர்வமாக மீசையை முறிக்கினார் ஆதிசேஷன்.

“ஆனாலும் அப்பா நீங்க என் கிட்ட கூட சொல்லாம மறச்சிட்டீங்க பாத்திங்களா?” சொல்லியிருந்தால் நிச்சயதார்த்தம் நடந்திருக்காதே என்ற பார்வையோடு தந்தையிடம் முறையிட்டாள் மலர்விழி.

“சொல்லக் கூடாது என்று இல்லமா… இவனுக்கு சொன்னா அவனுக்கு சொல்லணும். ஒருத்தனுக்கு சொல்லி இன்னொருத்தனுக்கு சொல்லலைனா அப்பாக்கு அவன் தான் முக்கியம். என் மேல பாசம் இல்லனு அவனுங்கக்குள்ள சண்டை போட்டுக்குவானுங்க. அதான் யார்கிட்டயும் சொல்லல” சிரித்தார் ஆதிசேஷன்.

“ஓஹ்… பெத்த பசங்களுக்கு கூட தெரியாதா? அப்போ என் மேல சந்தேகம் இல்ல” என்று புன்னகைத்த மலர்விழி அமைதியாக சாப்பிட்டாள்.  

“நீங்க ஆபீஸ் வரலையா?” என்று ஆதிதேவ் ஆதிசேஷன் மலர்விழியை அழைத்துக் கொண்டு காரியாலய அறைப்பக்கம் செல்வதை பார்த்து கேட்டான்.

“நீங்க மூணு பேரும் போங்க. நான் என் பொண்ணு கூட பேச வேண்டியிருக்கு பேசிட்டு வரேன்” என்று மலர்விழியோடு நடந்தார்.

இங்கே ஆதிசங்கர் அவர் மனைவி கனகவள்ளியை பிடிப்பிடியென்று பிடிக்கலானார்.

“அறிவிருக்கா உனக்கு. அவ கிட்ட போய். என்ன வேணும் என்று கேட்டு ஈ…னு இளிக்கிற?”

“இந்த வீட்டுல அதிகாரம் யார் கைல இருக்கு? உங்க அப்பா கைல இருக்கு? அவர் சொல்லுறது தானே சட்டம். அவரை எதிர்த்து ஏதாவது செய்ய முடியுமா? சொத்த பிரிச்சி தனிக்குடித்தனம் போன பிறகு நீங்க சொல்லுறத கேக்குறேன். அதுவரைக்கும் என் மேல பாயாதீங்க” கனகவள்ளி கணவனிடம் காய்ந்தாள். 

அதே தான் லதாவும் ஆதித்யனிடம் கூறினாள். “ஆதிரியனாவது சொந்தமா தொழில் பண்ணி அவனுக்கென்று சொத்து சேர்த்து வச்சிருக்கான். அவன் அம்மா கனகா அக்காவே உங்க அப்பாக்கு அடங்கி போகணும் என்று நினைக்கிறாங்க. உங்க பையன் தருதலையா சுத்துறான். நான் அடங்கி போகணும் என்று நினைக்கிறதுல என்ன தப்பு? அதிகாரம் உங்க கிட்ட இருந்தா மட்டும் பேசுங்க. இல்லையா… மூடிக்கிட்டு உக்காருங்க.

என்ன கல்யாணம் பண்ணுறப்போ தனியா பிஸ்னஸ் பண்ண போறேன். அப்பா கூட இருக்க மாட்டேன்னு, தனியா தொழில் தொடங்கி நடுரோட்டுல தானே நின்னீங்க. உங்க நம்பி உங்க அப்பாகிட்ட சொத்த எழுதி கொடுங்க என்று கேட்கக் கூட முடியுமா?” கணவனை கறிச்சு கொட்டலானாள் லதா.

அவளிடம் பேசுவதை விட காரியாலயம் கிளம்புவதே மேல் என்று அங்கிருந்து கிளம்பினான் ஆதித்யன்.

மலர்விழியை அழைத்துக் கொண்டு காரியாலய அறைக்கு வந்த ஆதிசேஷன் அவள் கையை பற்றி “அப்பா மேல கோபமில்லையே” கனிவாக கேட்டார்.

நெஞ்சம் முழுவதும் வஞ்சம் இருக்க, எதற்காக கேட்கின்றார் என்று தெரியாததனால் “உங்க மேல எனக்கென்னப்பா கோபம்?” என்று மெலிதாக புன்னகைத்தாள்.

“என் பொண்ணு நீ. உனக்கு ஜாம் ஜாமென்று கல்யாணம் பண்ணி வைக்கணும். உன்ன விட்டுட்டு என் பேரன்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். அதான் கேக்குறேன். அப்பா மேல கோபமில்லையே”

“என்னப்பா நீங்க? ஆதிரியனுக்கு என் வயசு தானே. அதுவும் இந்த கல்யாணம் ஊரு, உலகத்துக்காக உங்களுக்கும் வான்முகிலனுக்கும் எந்த பிரச்சினையும் இல்லனு சொல்லத்தான் இவ்வளவு அவசரமாக நிச்சயதார்த்தம் பண்ணீங்க. அதோட ரிசால்ட்ஸ் மீடியால உடனே தெரிஞ்சதே” கொஞ்சம் நக்கல் கலந்த குரலில் தான் கூறினாள்.

“அதான் உனக்கு ஆதிரியனோட வயசு. இருபத்தி ஆறாச்சு. காலேஜ் முடிச்ச கையோட என் கம்பனில ஜோஇன் பண்ண. ரெண்டு வருஷம் கம்பனி வேலைகளை கத்துக்கிட்டு எனக்கு கீழ வேல பார்க்க வந்த. வந்த ரெண்டாவது நாளே என் பொண்ணு என்று தெரிஞ்சி கிட்டேன்.

ஆனா நான் உன்ன என் பொண்ணா ஏத்துக்கல. மனதளவில் தயாராகுறதுக்கு எனக்கு கொஞ்சம் நேரம் தேவை பட்டது. அதுக்குள்ள மூணு மாசம் ஓடிப்போச்சு. பொண்ணு என்று உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ஒரு வருஷத்துக்கு மேலாகுது. இன்னும் நான் பெத்த பசங்க உன்ன ஏத்துக்கல. அவங்க ஏத்துக்கிட்டா போதும் மத்தவங்க தானா ஏத்துப்பாங்க. சரி அத விடு. அவங்க எதுக்குறப்போ ஏத்துக்கட்டும்.

ஆனா ஒரு அப்பாவா எனக்கு கடமைகள் இருக்கே. உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும். வெளிப்படையாகவே கேக்குறேன். உனக்கு வான்முகிலன ஏற்கனவே தெரியும் தானே. உனக்கும் அவனுக்குமிடைல ஏதாவது இருந்ததா? அவன் ரொம்ப நல்லவன். நேர்மையானவன். உனக்கு அவன் மேல எதோ ஒரு கோவம் இருக்கு என்று எனக்கு தோணுது என்ன பிரச்சினை என்று சொன்னா உக்காந்து பேசி தீர்த்துக்கலாமே” 

ஆதிசேஷன் என்ன சொல்ல முனைகிறார் என்று மலர்விழிக்கு சட்டென்று புரிந்தது. வான்முகிலனுக்கும் தனக்கும் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.

அன்று வான்முகிலன் பேசிய பொழுது கோபப்படாமல் அமைதியாக பேசியிருந்தால் இவர் இன்று இந்த கேள்வியை கேட்டுக்க மாட்டாரோ என்னவோ என்று நினைத்தவள் “வான்முகிலனுக்கும் எனக்குக்கும் இடைல எந்த பிரச்சினையுமில்ல. அவர் என் சீனியர். காலேஜ்ல நல்ல பழக்கம். சொல்ல போனா ப்ரெண்ட்ஸ்ஸா தான் பழகினோம். திடிரென்று எந்த தொடர்பும் வேண்டாம் என்று விலகி போய்ட்டாரு. ஒருவேள அப்பன் பேர் தெரியாதவளோடு எதுக்கு பழகனும் என்று நினைச்சாரோ என்னவோ. என்னதான் நல்லவர் என்று நினைச்சாலும் மனுஷங்க தானே. ஏதாவது கெட்ட குணம், குறை இருக்கத்தான் செய்யும். வான்முகிலன் இதையெல்லாம் பார்ப்பார் போல” என்றாள்.

தான் வான்முகிலனை காதலித்ததாக மூச்சு விடவில்லை மலர்விழி. அதை கூறினால் ஆதிசேஷன் ஒற்றை காலில் நின்று வான்முகிலேனோடு இந்த திருமணத்தை நடாத்தி வைத்திருக்கவும் கூடும். 

“வான்முகிலன் கிட்ட நான் பேசுறேன். என் பொண்ணு என்று சொன்னா வேணாம்னு சொல்லாவானா?” ஆதிசேஷனுக்கு கோபம் கனன்றது. பாசம் கண்ணை மறைக்கும் என்பது இது தானோ? தனது பேத்தியை வேண்டாமென்று சொன்னவன் வான்முகிலன் என்பதையும் மறந்து கோபம் கொண்டார் ஆதிசேஷன்.

“உங்க பேத்தியையே வேணாம்னு சொன்னவரு உங்க பொண்ண வேணாம்னு சொல்ல எவ்வளவு நேரமாகும்? வேணாம்… அப்பா. என்ன உங்க பொண்ணு என்று வான்முகிலன் கிட்ட சொல்லப் போய். அதையே காரணமா வச்சி வான்முகிலன் வேற ஏதாவது பிரச்சினை பண்ணுவாரு” என்றாள்.

“என்ன பண்ணனும் என்று எனக்குத் தெரியும் நான் பாத்துக்கிறேன்” என்றார் ஆதிசேஷன். ஆதிதியை வேண்டாமென்று சொல்ல தக்க காரணம் இருந்தது. ஆதிசேஷனை பொறுத்தவரையில் மலர்விழி தங்கமான பெண் அவளை வேண்டாமென்று சொல்வானா? சொல்லட்டும் அந்த வான்முகிலன் பாத்துக்கிறேன் என்ற இறுமாப்பு தான் இருந்தது.

“என்ன ஆடு தானா வந்து சிக்குது?” எப்படியாவது ஆதிசேஷனையும், வான்முகிலனையும் மோத விட வேண்டும் என்று எண்ணியிருந்தால் ஆதிசேஷன் அதற்கான வழியை வகுத்து விட்டார் என்ற சந்தோஷத்தில் அவரோடு கம்பனிக்கு கிளம்பினாள் மலர்விழி.

கம்பனிக்கு சென்று கொண்டிருந்த மலர்விழியின் மனதுக்குள் தோன்றியது ஒரே ஒரு கேள்விதான். வான்முகிலனை திருமணம் செய்துகொள்ள உனக்கு சம்மதமா? என்பதுதான்.

“நான் தான் ஆதிசேஷனின் மகள் அதுவும் முறை தவறி பிறந்தவள் என்று அறிந்தால் நிச்சயமாக வான்முகிலன் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டான். ஆதிசேஷனும் வான்முகிலனும் மோதிக்கொள்வார்கள் அப்படியே இந்த திருமணம் நிகழ்ந்தாலும் எனக்கு இதில் துளி கூட சம்மதமில்லை.

வான்முகிலன் மீதிருந்த காதலை என்றோ நெஞ்சிலிருந்து துடைத்தெறிந்து விட்டேன். அப்படியே அவனை திருமணம் செய்துகொள்ள நேர்ந்தாலும் அது அவனை பழிவாங்க மட்டும் தான்” உதடு வளைத்து ஏளனமாக மென்னகை செய்தாள்.

வான்முகிலன் அவனது காரியாலயத்தில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்க, நிலஞ்சனாவும் அங்கே தான் அமர்ந்திருந்தாள்.

கம்பனி வேலைகளை பார்ப்பதை விட விமான விபத்தை தொடர்ந்து அதனால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் நடந்தது விபத்தா? சதியா? விபத்தென்றால் அதை யார் திசைதிருப்ப முயலும் எதிரி? அவனை எவ்வாறு கண்டு பிடிப்பது என்பது தான் பிரதான சம்பாஷணையாக இருந்தது.

“மிஸ்டர் முகிலன் உங்க பொருள் தரமானது என்று போலீஸ் தரப்புல விசாரணை முடிஞ்சி பிரஸ் எனவுன்சமண்ட் இன்னும் ஒரு வாரத்துல வந்துடும்.

விபத்து நடந்த அன்னைக்கு ஏர்போர்ட்ல வேல செஞ்ச எல்லாரையும் போலீஸ் விசாரிச்சுக்கிட்டு தான் இருக்காங்க. யார் யார் எந்த நேரத்துல எங்க இருந்தாங்க என்ற சீசீடிவி புட்டேஜ் கூட இருக்கு. அதனால உங்க மாமாக்கு எந்த பிரச்சினையும் வராது என்று நினைக்கிறேன்.

பிளைட் எரிஞ்சதுல பிளாக் பாக்ஸ் ரொம்ப சேதமாச்சு னு சொல்லுறாங்க அத ரெகவரி பண்ண இன்னும் எத்தனை நாளாகும் என்று தெரியல. என்ன பதிவாகியிருக்கு என்று தெரிஞ்சா நடந்தது விபத்தா, சதியானு கிளியராகிடும்”

“நான் எந்த தப்பும் பண்ணலன்னு எப்படி நீ இவ்வளவு கான்பிடன்சா நம்புற?” பவானியை தேடி வந்தவள் கொஞ்சம் கூட தன்னை சந்தேகப்படாமலா இருப்பாள்?

“உங்க மேல தப்பு இருந்தா கண்டிப்பா நீங்க என்ன கூட வச்சிக்க மாட்டேங்க” என்றாள் நிலஞ்சனா.

அவளுடைய பதில் எவ்வளவு தெளிவானது. பவானியை ஏதாவது செய்திருந்தாலும், விபத்துக்கு நான் காரணமாக இருந்தாலோ அதை இவள் கண்டு பிடித்து விடக் கூடும் என்று முதலில் செய்வது இவளை வேலையிலிருந்து தூக்குவது தானே.

நிறுவனத்தின் சட்ட சிக்கல்களை கவனித்துக் கொண்டிருந்த வக்கீல் சிதம்பரம் தான் தன்னுடைய ஜுனியர் என்று நிலஞ்சனாவை அனுப்பி இருந்தார்.

“ஏன் சார் ஒரு சின்ன பொண்ண என் கிட்ட விட்டுட்டு நீங்க அமேரிக்கா போகப் போறீங்க. இங்க இல்லாத சுகம் அப்படி என்ன அங்க இருக்கு”

“என் பையன் குடும்பத்தோட அங்க தானே இருக்கான். பேர பசங்கள பிரிஞ்சி நானும் எத்தனை நாளைக்கு இங்க தனியா இருக்குறது. நிலஞ்சனா ஒன்னும் சாதாரண பொண்ணு இல்ல. அவ திறமையை நான் சொல்ல மாட்டேன் நீயே பாரு” என்றிருந்தார்.

பவானியை தேடி வந்தவள் எப்படி சிதம்பரம் சார் அனுப்பின பெண்ணானால் என்று வான்முகிலனுக்கு குழப்பம் இருக்கத்தான் செய்தது. அதை அவன் நிலஞ்சனாவிடமே கேட்டான்.

“சென்னைல பவானி கூட தங்கலாம் என்று முடிவு பண்ணேன். அப்போ வேலையும் வேணுமில்ல. சிதம்பரம் சார காண்டாக்ட் பண்ணேன். சென்னை வந்தா என்ன வந்து பாரு என்று சொன்னாரு.

பவானியை தேடி உங்க ஆபீஸ் வந்தேன். அதற்கு பிறகு தான் சிதம்பரம் சார போய் பார்த்தேன் உங்க ஆபீஸ்ல வேலைக்கு சேர்ந்தேன்” என்றாள்.

பவானியை தேடும் வரையில் இவள் இருக்கட்டும் என்று வான்முகிலன் நினைத்தாலும் அவள் அவனது எல்லா பிரச்சினைகளிலும் உதவி செய்ய, இவனும் அவளிடமே எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளலானான்.

அவள் தன்னை பற்றி என்ன நினைக்கின்றாள்? நல்ல அபிப்ராயம் வைத்திருக்கின்றாளா? என்று அறிந்துகொள்ளவே அவ்வாறு கேட்டான்.

அந்த பதிலும் அவளது புத்திக்கூர்மையை தான் பறை சாற்றியது. 

கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்த ராம் “ஆதிசேஷன் ஐயா உங்கள மீட் பண்ணனும் என்று சொல்லுறாரு. எதோ பெர்சனலா பேசணுமாம்” என்றான்.

“வீட்டுக்கு வாராராமா?”

“இல்ல ஹோட்டல்ல வச்சி மீட் பண்ணலாம்னு சொல்லுறாரு”

“ஹோட்டல்ல வச்சி என்ன பெர்சனலா பேசணும் என்று சொல்லுறாரு?” யோசனையாக நிலஞ்சனாவை பார்த்தான் வான்முகிலன்.

அவளுக்குத்தான் மூக்கு வேர்த்தது போல் மற்றவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்து விடுமே.

“என்ன பார்த்தா என்ன அர்த்தம்? போய் தான் பார்க்கணும்” என்றாள்.

சிரித்த வான்முகிலன் “அப்போ நீயும் கூட வா. என்னனு பார்க்கலாம்” உள்ளுக்குள் உறுத்தவே அவளையும் அழைத்தான்.

“பெர்சனலா தானே பேசணும் என்றாரு. நான் எதுக்கு?” நிலஞ்சனாவுக்கும் நடக்கப் போவது சரியாகத் தோணவில்லை.

“என்னமோ சரியா தோணல. அதான் கூப்பிட்டேன்” வரதும் வராததும் உன் இஷ்டம் என்பதை போல் தோளை குலுக்கினான்.

அவர்களின் சம்பாஷணையை அமைதியாக பார்த்திருந்த ராம் “அப்போ ஈவ்னிங் வராதா சொல்லிடவா?”

“இல்ல. டின்னர் வரேன்னு சொல்லு” என்றான் வான்முகிலன்.

ஆதிசேஷனை காத்திருக்க செய்யாமல் வான்முகிலன் நிலஞ்சனாவோடு அவர் கூறிய ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான்.

வான்முகிலேனோடு ராம் தான் வருகிறான் என்று தான் எண்ணியிருந்தார் ஆதிசேஷன். நிச்சயமாக நிலஞ்சனாவை எதிர்பார்த்திருக்க மாட்டார். “இந்தப் பெண் எதற்காக இவனோடு சுற்றிக் கொண்டிருக்கின்றாள்?” என்ற பார்வையோடு இருவரையும் வரவேற்றார்.

“இவள் முன்னிலையில் எவ்வாறு திருமண பேச்சை ஆரம்பிப்பது?” என்ற யோசனையிலையே உள்ளே வந்த மலர்விழியை தன்னோடு அமர்த்திக் கொண்டார்.

ஆதிசேஷன் மலர்விழியை அவரோடு அமரச் சொன்னதை ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் பார்த்தான் வான்முகிலன். அந்தஸ்து, தராத்திரம், லொட்டு, லொசுக்கு என்று பார்ப்பவர் தான் ஆதிசேஷன். தன்னிடம் வேலை பார்க்கும் சாதாரண பெண்ணை உணவுண்ண அமர்த்திக் கொண்டாரா?

“இருவருக்குள்ளும் அப்படி என்ன உறவு?” கொஞ்சம் சந்தேகமாகவும் பார்த்தான்.

“என்ன உணவு ஆடர் செய்யலாம்?” என்று ஆதிசேஷன் வான்முகிலனை கேட்க

“லேடீஸ் பஸ்ட்” என்றவன் உணவுப் பட்டியலட்டையை  நிலஞ்சனாவிடம் கொடுத்தான்.

பொறுமையாக அதை ஆராய்ந்தவள் வான்முகிலனிடம் என்ன என்ன வேண்டும் என்று கூறினாள்.

மலர்விழியிடம் இவ்வாறு கேட்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஆதிசேஷனுக்கு இருக்கவில்லை. வான்முகிலனின் செயலை பார்த்து ஆதிசேஷனும் உணவுப் பட்டியலட்டையை மலர்விழியிடம் கொடுத்து விட்டார்.

வான்முகிலன் நிலஞ்சனா கூறிய உணவுகளை ஆடர் செய்ய “உங்களுக்கு ஒன்றும் ஆடர் செய்யவில்லையா?” என்று ஆதிசேஷன் வான்முகிலனை கேட்டார்.

“எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் நிலஞ்சனா ஆடர் பண்ணா” என்ற வான்முகிலனை ஆதிசேஷன் யோசனையாக பார்த்தார்.

பணியாள் மலர்விழிக்காக காத்திருப்பதை பார்த்து “அப்பா… உங்களுக்கும் எனக்கும் இது ஓகே தானே” என்று ஆதிசேஷனினிடம் கேட்டு விட்டு அவற்றை எடுத்து வருமாறு பணியாளை அனுப்பி வைத்தாள்.

“அப்பாவா?” என்று வான்முகிலன் இருவரையும் யோசனையாக பார்க்க மலர்விழி வான்முகிலன் பார்ப்பது தெரிந்தும், தெரியாதது போல் அமர்ந்திருந்தாள்.

மலர்விழி வந்து ஆதிசேஷனோடு அமரும் பொழுதே வான்முகிலன் சந்தேகமாக பார்ப்பதை அவள் கவனித்து விட்டாள். அதனால் தான் வேண்டுமென்றே “அப்பா” என்றழைத்தாள்.

வான்முகிலன் எதுவும் கேளாமல் பொதுவான விஷயங்களையும், பொது எதிரியை பற்றியும் பேசலானான்.

உணவும் வந்து சேர்ந்தது. வான்முகிலனும், ஆதிசேஷனும் மாத்திரமே பேசிக் கொண்டிருந்தார்கள் தவிர மலர்விழியும், நிலஞ்சனாவும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. 

நிலஞ்சனா அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கவனமாக இருந்தாள்.

மலர்விழியோ வான்முகிலன் நிலஞ்சனாவிடம் “இதை சாப்பிட்டு பாரு இது நல்லா இருக்கும்” என்று சொல்வதும்,  நிலஞ்சனா வான்முகிலனிடம் “இது நல்லா இருக்கு இத ட்ரை பண்ணுங்க” என்று சொல்வதும் வினோதமாக இருக்கவே “இவர்களுக்கிடையில் என்ன மாதிரியான உறவு?” என்று சிந்தித்தவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

ஆதிசேஷனும் அவர்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தார். இவருடைய நெருக்கமும் சாதாரண பழக்கம் போல் தெரியவில்லையே. மலர்விழியை திருமணம் செய்து கொள்ளும்படி எவ்வாறு கேட்பது? என்ற குழப்பத்திலையே ஆதிசேஷனுக்கு சாப்பாடு கூட இறங்கவில்லை.

நிலஞ்சனாவும் வான்முகிலனும் ஒன்றாக வேலை பார்க்க ஆரம்பித்து ஒரு மாதத்துக்கும் மேலாகிறது. கம்பனி வேலையென்றால் அவள் வான்முகிலேனோடு இருந்திருக்க அவசியம் ஏற்பட்டிருக்காது. விமான விபத்தினால் ஏற்படும் பிரச்சினைகளால் வான்முகிலனே அவளை அவனோடு இருத்திக்கொள்வான்.

இருவரும் ஒன்றாகத்தான் உணவுண்பர்கள். அவனுக்கு என்ன பிடிக்கும் என்பது இவளுக்குத் தெரியும். இவளுக்கு என்ன பிடிக்கும் என்பது அவனுக்குத் தெரியும். அதனால் தான் நிலஞ்சனா உணவை ஆடர் செய்யும் பொழுது வான்முகிலனிடம் கேளாமலே ஆடர் பண்ணியிருந்தாள்.

இது தெரியாமல் பார்ப்பவர்களின் கண்களுக்கு அவர்கள் காதலர்களாகவும், கணவன் மனைவி போலவும் தான் தெரிவார்கள். 

உணவையும் உண்டு முடித்து விட்டார்கள் ஆதிசேஷன் வான்முகிலனை அழைத்த விஷயத்தை மட்டும் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. கேட்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்திலையே அமர்ந்திருந்தார் ஆதிசேஷன்.

ஆனால் மலர்விழியால் அவ்வாறு அமர்ந்திருக்க முடியாதே. அவள் வந்ததோ இருவருக்குமிடையில் பிரச்சினையை மூட்டிவிடத்தானே.

அவள் இருந்த கடுப்பில் “பொண்டாட்டி செத்து ரெண்டு மாசம் கூட ஆகல அதுக்குள்ள அடுத்த கல்யாணத்துக்கு தயாராகிட்டியா?” என்று வான்முகிலனை பார்த்து கேட்டிருப்பாள். அவ்வாறு கேட்டால் ஆதிசேஷனுக்கு அவள் மீது அதிதிருப்தி வந்து விடுமே என்று அமைதியாக இருந்தாள்.

“வான்முகிலன் நீங்க இப்படியே இருந்துட முடியுமா? இன்னொரு கல்யாணம் பண்ணுறத பத்தி யோசீங்க” எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியாமல் அறிவுரை கூறுவது போல் கூறினார் ஆதிசேஷன்.

“நான் வாஷ் ரூம் போயிட்டு வரேன்” ஆதிசேஷன் எதையோ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திணறுவதை பார்த்திருந்த நிலஞ்சனா அவர் பேச ஆரம்பிக்கவும் இடைஞ்சலாக தான் எதற்கு என்று நழுவினாள்.

“நானும் வரேன்” இன்முகமாக மலர்விழியும் நிலஞ்சனாவோட நடந்தாள். ஆதிசேஷன் வான்முகிலனிடம் என்ன பேசுவாரென்று தெரியாது. அதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்றுதான் இடத்தை காலி செய்தாள்.    

செல்லும் பெண்களை பற்றியெல்லாம் வான்முகிலனின் சிந்தனையிலில்லை. முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று அழைத்து எதற்காக சம்பந்தமே இல்லாமல் தன்னை இன்னொரு திருமணம் செய்துகொள்ள சொல்கிறார் என்று ஆதிசேஷனை யோசனையாக பார்த்தான் வான்முகிலன்.

அவர் மனதில் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர் போக்கிலையே பேசி தான் கண்டு பிடிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டவன் “கண்டிப்பா பண்ணிப்பேன் சார். அதுக்கு இன்னும் நேரம் கூடி வரணும்” என்றான்.

“நேரம் கூடி வரணுமா? இல்ல பொண்ணு சம்மதிக்கணுமா?” என்று தூரே செல்லும் நிலஞ்சனாவை பார்த்தார் ஆதிசேஷன்.

“எனக்கேத்த பொண்ண நீங்க பார்த்துட்டீங்க போல. இந்த தடவையாச்சும் சரியான பொண்ண பார்த்துட்டீங்களா?” நிலஞ்சனாவை ஆதிசேஷன் பார்த்ததை கவனித்தாலும் அவர் மனதில் இருப்பது அதுவல்லவே என்று நொடியில் புரிந்து போக அவரது கேள்விக்கு பதில் கூறாமல் இவனாக ஒரு கேள்வியை கேட்டான்.

வான்முகிலனின் அந்தக் கேள்வியில் அவனுக்கும் நிலஞ்சனாவுக்கும் எந்த தொடர்பும் இல்லையோ நாம தான் தப்பாக கணித்து விட்டோமோ என்று எண்ணி வாய் திறந்தார். “மலர்விழி தான். அவ என் பொண்ணு. அத பத்தி நாம அப்பொறமா டீடைலா பேசலாம். ஐ மீன் தனியா” நமக்கு நடுவில் நிலஞ்சனா எதற்கு என்று சொல்லாமல் சொன்னார்.

“ஓஹ்… இதான் விஷயமா?” என்று புன்னகைத்தவன் “சாரி மிஸ்டர் ஆதிசேஷன் அப்படி நீங்க யாரை எனக்காக பாத்திருக்குறீங்க என்று தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன். என்ன பத்தின கவலை உங்களுக்கு வேண்டாம். என் வாழ்க்கையை நான் பாத்துக்கிறேன்” என்றான். 

“அப்படீன்னா நீங்களும் அந்த லாயர் பொண்ணும்…”  வான்முகிலனின் பதிலுக்காக காத்திருந்தார்.

நிலஞ்சனாவும் தானும் ரிலேஷன்ஷிப்ல இருக்கிறதாக நினைக்கிறாரா? நல்லது என்று எண்ணியவன் “இதனால உங்க பேரங்க கல்யாணத்துல எந்த பிரச்சினையும் வராதே” கொஞ்சம் நக்கல் கலந்த தொனியில் மிரட்டியவன் அவரிடம் விடைபெற்று நிலஞ்சனாவுக்காக காத்திருந்தான்.

செல்லும் வான்முகிலனை கடுப்போடு பார்த்தார் ஆதிசேஷன். “நான் நினச்சா கல்யாணத்த நிறுத்துவேண்டா. என் பேரன்களுக்கு பொண்ணு கிடைக்கும். உன் அக்கா பொண்ணுங்களுக்குத்தான் மாப்புள கிடைக்காது” கோபத்தில் பொரிந்தவரின் மனமோ இந்த திருமணம் எதற்காக நிகழ்கிறது என்பதை ஞாபகமூட்டியது.   

Advertisement