Advertisement

அத்தியாயம் 1

முக்கிய செய்தி இன்று மாலை டில்லியிலிருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானம் 477 தரையிறங்கும் பொழுதே, தரையில் மோதியதில் வெடிப்புக்குளாகி விமான விபத்து நிகழ்ந்திருப்பதாக தகவல். இயந்திர கோளாறா? சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளானதா? வேறேதும் பிரச்சினையா? என்று இன்னும் சரியான தகவல் கிடைக்கவில்லை.

விமானத்தில் பயணம் செய்த பயணிகளை மீட்கும் பணி உடனடியாக நடந்தேறிக் கொண்டிருக்க, எத்தனை விமானிகள் பாதிப்புக்குள்ளானார்கள் என்றும் இன்னும் அறியப்படவில்லை.

மேலதிக தகவல் கிடைத்த உடன் மீண்டும் நேரலையில் உங்களை தொடர்புகொள்கிறோம்.

“அம்மா… அம்மா… இங்க வா… பிளைட் க்ரஷ் ஆகிட்டதாக நியூஸ்ல சொல்லுறாங்க. மாமா அந்த பிளைட்டுலதானே வர்றதா சொன்னாரு”

வான்முகிலனின் இளைய அக்காவான சந்திரமதியின் மகள் சுபி அன்னையை கத்தி அழைத்தாள்.   

“ஏய் என்னடி சொல்லுற? என் தம்பிக்கு என்ன ஆச்சு?” சந்திரமதிக்கு மூத்தவளான சாருமதி அரக்கப்பறக்க தொலைக்காட்ச்சியின் முன் வந்து நின்றவள் பாடல் ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து சுபியை திட்ட ஆரம்பித்தாள்.

“எதுக்கு இப்போ சும்மா, சும்மா என்ன திட்டுறீங்க? பிரேக்கிங் நியூஸ் என்று அந்தம்மா சொன்னதைத்தான் நான் சொன்னேன்” சுபி பெரியம்மாவோடு மல்லுக்கு நிற்க, 

“ஆமாண்டி நான் வர்றதுக்குள்ள அந்தம்மா ஓடி போய்ட்டா பாரு. எப்போ பார்த்தாலும் டீவி முன்னாடி உக்காந்துகிட்டு ரிமோர்ட்ட கைல வச்சிக்கிட்டு நீயா ஒன்ன பார்த்துகிட்டு இருப்ப. இந்த வீட்டுலதான் நாங்களும் இருக்கோம். நாங்க எப்பவாச்சும் டீவி பார்க்க முடியுதா? பிரேக்கிங் நியூஸாம் பிரேக்கிங் நியூஸ். புலி வருது, புலி வருது என்று ஒருத்தன் பொழுது போகாம கத்தினான் எங்குற கதை போல உன் கருநாக்கு சொன்னது பளிச்சிட போகுது” தன் வயதையும் மறந்து சுபியோடு சண்டை போடலானாள் சாருமதி.

தன் அக்காவை வெறுப்போடு பார்த்தவாறு வந்த சந்திரமதி. “சுபி விளக்கு வைக்கிற நேரத்துல நடு வாசல்ல இருந்துகிட்டு இப்படி கத்தி கூப்பாடு போடாதே என்று உனக்கு எத்தனை தடவ சொல்லுறது. வீடு விளங்குமா?” மகளுக்கு சொன்னாலும் அக்காவுக்கு பதிலடி கொடுத்த சந்திரமதி “போ.. போய்.. படிக்கிற வேலைய பாரு. இந்த வருஷமும் அரியஸ் வச்சீனா. ரோட்டுல போற எவனயாச்சும் கூட்டிட்டு வந்து கட்டி வைப்பேன்” மகளையும் மிரட்ட, அன்னையை முறைத்து விட்டு சென்றாள் சுபி.

வான்முகிலன் இளம் தொழிலதிபர். அவன் தந்தை ஆரம்பித்த ஆட்டோ மொபைல் நிறுவனத்தை தனியாளாக உழைத்து இன்று நாடளவில் யாரும் அறியும் வி.எம் கம்பனி என்று எடுத்து சென்றவன்.

மூத்தவள் சாருமதி டில்லியில்தான் படித்தாள். அடிக்கடி விமானத்தில் பயணம் செய்யும் பொழுது சந்தித்தாளா? அல்லது விமான நிலையத்தில் சந்தித்தாளா தெரியவில்லை அப்போது இரண்டாம் நிலை விமானியாக இருந்த கார்த்திக்பாபு என்பவரை காதலித்து மணந்து மாளவிகாவை பெற்றெடுத்தாள். கணவனோடு சாருமதி டில்லியில் தான் வசித்து வந்தாள். என்று தம்பிக்கு திருமணம் பேச வேண்டும் என்று அன்னை காஞ்சனாதேவி கூறினாளோ அன்று வீட்டுக்கு வந்தவள் தான் இன்னும் டில்லிக்கு செல்லவில்லை.   

சந்திரமதி வீட்டில் பார்த்த பொறியாளர் மாப்பிள்ளையை திருமணம் செய்திருந்தாள். அவளுக்கு சுபி எங்குற சுபலக்ஷ்மி மற்றும் சஷிகாந்த் என்று இரண்டு பிள்ளைகள்.

கணவர் ராஜ்காந் விமானநிலையத்தில் வேலை பார்ப்பதாலும், தாய் வீடு சென்னையில் இருப்பதாலும் சாருமதி அன்னையோடு இருந்து விட்டாள்.

தந்தை இறந்த பின் வான்முகிலன் நிறுவன பொறுப்பை ஏற்ற பின்னும் எல்லாம் சுமூகமாகத்தான் போய் கொண்டிருந்தது. 

அவன் திருமணத்தை பற்றி பேச்சு ஆரம்பமானதும் தான் சாருமதிக்கு இருப்புக்கொள்ளவில்லை. தன் மகளான மாளவிகாவை தம்பிக்கு கட்டி வைக்க வேண்டும் என்று அன்னையிடம் வாதாடினாள்.

அன்னை காஞ்சனாதேவிக்கோ அதில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை. அதற்கு முக்கிய காரணம் மாளவிகாவுக்கும் சுபிக்கும் ஒரே வயதுதான்.

ஒரு பெண்ணின் மகளை மகனுக்கு திருமணம் செய்து வைத்தால், மற்ற மகளின் மனம் கஷ்டப்படாதா? அதனால் சொந்தத்தில் வேறு பெண்ணை பார்த்து வான்முகிலனுக்கு திருமணம் செய்து வைத்தாள் காஞ்சனாதேவி.

பாக்யஸ்ரீயை பெண் பார்க்க சென்றது, பூ வைத்தது எல்லாம் காஞ்சனாதான். பாக்யஸ்ரீயின் புகைப்படத்தை பார்த்தும் வான்முகிலனுக்கு பெரிதாக திருமணத்தில் ஈடுபாடு இருக்கவில்லை.

“இப்போ என்ன அம்மா அவசரம்?” என்று தான் கேட்டான். ஆனால் வீட்டில் நடக்கும் யுத்தத்தை பார்க்கும் பொழுது தனக்கு திருமணம் என்ற ஒன்று நடந்தால் தான் அமைதி நிலவும் என்று புரிய, பாக்யஸ்ரீயை உடனே திருமணம் செய்துகொள்ள சம்மதித்தான்.

திருமணம் கோலாகலமாக சென்னையில் நடந்தது. பாக்யஸ்ரீ சதாசிவத்துக்கு ஒரே மகள். அண்ணையில்லாதவள். அதனால் காஞ்சனாதேவியோடு நன்றாகவே ஒட்டிக் கொண்டாள்.

ஆனால் அவளால் வான்முகிலேனோடு நெருங்கிப் பழக முடியவில்லை. திடிரென்று நடந்த திருமணத்தால் வேலையில் கவனமாக இருக்கும் வான்முகிலேனால் அவளுக்காக நேரமொதுக்க முடியவில்லை.

அது போதாதென்று சாருமதி வேறு பாக்யஸ்ரீயை வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருந்தாள்.

அமைதியே உருவான பாக்யஸ்ரீ வான்முகிலனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று மனதுக்குள் மருகிக் கொண்டிருந்தாள்.

“அப்பா முகிலா… கல்யாணமாகி மூணுமாசமாகப் போகுது. பாக்யா வீட்டுலயே இருக்கா. எங்கேயுமே போகல. அவளை எங்கயாச்சும் கூட்டிக்கிட்டு போயா” அனைவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்க, காஞ்சனாதேவி மகனுக்கு அன்பாக கட்டளையிட்டாள்.

“ஆதி க்ரூப் கம்பனி புதுசா டொமஸ்டிக் பிளைட் உருவாக்குறாங்களே அதுக்கு நாமதான் பொருள் சப்லை பண்ணுறோம். எவ்வளவு பெரிய ப்ரொஜெக்ட். ஏர்க்ராப்ட் பார்ட்ஸ் தயாரிக்கணும் என்கிறது அப்பாவோட கனவு. இங்க கம்பனி ஆரம்பிக்கிறதுக்கு பார்ட்ஸ் இம்போர்ட் பண்ணலாம் அது லாபமானது. கிட்ட தட்ட எட்டு மாசமா கஷ்டப்பட்டு போராடி வாங்கின டீல். ஒழுங்கா பண்ண வேணாமா? அதான் நைட்டு, பகல் என்று பார்க்காம ஓடிக்கிட்டு இருந்தேன். டீல் நல்ல படியா முடிஞ்சிருச்சு. இனிமேல் நான் ப்ரீதான் உன் மருமகளுக்கு எங்க போகணுமோ கேட்டு சொல்லு கூட்டிட்டு போறேன். அவதான் என்கிட்டே பேசவே மாட்டேங்குறாளே” பாக்யஸ்ரீயை பார்த்தவாறுதான் பேசினான் வான்முகிலன்.

அவளும் சட்டென்று அவனைத்தான் பார்த்தாள். “என்ன நான் பேச மாட்டேனா? என்ன பேச? எப்போ வீட்டுக்கு வரீங்க? எப்போ? கிளம்புறீங்க என்றே தெரியல” என்றது அவள் பார்வை.

அவனுக்கு ஏன் வான்முகிலன் என்று தந்தை பெயர் வைத்தார் என்று அங்கிருந்தவர்களுக்குத் தெரியுமென்பதால் அமைதியாக அமர்ந்திருந்தனர்.     

பாக்யஸ்ரீயை பார்க்கும் பொழுது வான்முகிலனுக்கு சிரிப்பாகவும் இருந்தது பாவமாகவும் இருந்தது. புது இடம். புது மனிதர்கள். தான் யார் என்றே அவளுக்குத் தெரியாது. பெண் பார்க்கத்தான் தன்னால் செல்ல முடியவில்லை. அலைபேசியிலாவது ஓரிரு வார்த்தை பேசியிருக்கலாம். பேசத் தோணவில்லை.

தன்னுடைய சொந்த திருமணத்துக்கே முகூர்த்த நேரத்துக்கு அரைமணிநேரம் இருக்கத்தான் மண்டபத்துக்கு சென்று அமர்ந்து மந்திரம் ஓத ஆரம்பித்தான்.

இந்த திருமணம் நடக்குமா? நடக்காதா? மாப்பிள்ளை வருவானா? மாட்டானா? என்று அவனை காணும் வரையில் குரல்கள் எழுந்த வண்ணம்தான் இருந்தன. அதுவே பாக்யஸ்ரீயை நிலைகுலைய வைத்திருந்தது என்றால் முதலிரவு அறைக்கு மனதில் பல கேள்விகளோடு நுழைந்தவளுக்கு அங்கேயும் ஏமாற்றம் தான் எஞ்சியிருந்தது. களைப்பில் முகிலன் தூங்கிருந்தான்.

இவனுக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லையோ என்று பாக்யஸ்ரீயை நினைக்க வைத்தது முகிலனின் இந்த செயல் தான்.

அவனும் தான் என்ன செய்வான்? அவள் வரட்டும் ஓரிரண்டு வார்த்தை பேசி தன்னை புரிய வைத்து விடலாம் என்று காத்திருந்தவன் களைப்பில் உறங்கி விட்டான். கண் விழித்தவன் அருகில் உறங்கும் பாக்யஸ்ரீயை புன்னகையோடு பார்த்து விட்டு கிளம்பி சென்று இரவில் தான் வந்தான். அவன் வரும் பொழுது இவள் தூங்கியிருந்தாள்.

சில நாட்கள் வெளியூருக்கு செல்பவன் ஒரு வாரம், இரண்டு வாரம் கடந்து தான் வருகிறான். பாக்யஸ்ரீக்கு இவன் எங்கே சென்றிருக்கிறான் என்று தெரியவில்லை. புது மாமியாரிடம் கேட்கவும் ஒரு மாதிரியாக இருந்தது.

மகன் மருமகளிடம் சொல்லி விட்டுத்தான் செல்கிறான் என்று காஞ்சனாதேவி அவர்களின் விஷயத்தில் தலையிடாமலிருக்க, மனைவியிடம் அன்னை கூறி விடுவாள் என்று முகிலன் நினைத்துக் கொள்வான்.

மூன்று மாதமாக இவர்களது வாழ்க்கை இப்படித்தான் சென்று கொண்டிருந்தது. இன்றுதான் காலை உணவுக்கே முகிலன் வீட்டில் இருக்கின்றான்.

முகிலனின் வியாபார விஷயங்கள் பாக்யஸ்ரீக்கு தெரியாததால் கணவன் தன்னிடமிருந்து விலகி ஓடிக் கொண்டிருக்கின்றான் என்று குழம்பிக் கொண்டிருந்தாள்.

தனது ஒரே மகளான மாளவிகாவை தான் தம்பி திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும், தங்கை பிரச்சினை செய்ததால் வேறு வழியில்லாமல் முகிலன் உன்னை திருமணம் செய்தான் என்று குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலானாள் சாருமதி. 

“இப்போ உனக்கு புரியுதா? என் தம்பி என் அம்மாகாத்தான் உன்ன கல்யாணம் பண்ணிகிட்டான்னு. என்னமோ அம்மா சொன்னதுக்காகத்தான் உன்ன கூட்டிகிட்டு போறேன்னு சொன்னான். அதுக்காக நீ பாட்டுக்கு அவன் கூட கிளம்பிடாத” காலை உணவை உண்டு முடித்து பாத்திரங்களை விளக்கிக் கொண்டிருந்த பாக்யஸ்ரீயை பார்த்து நக்கலாக கூறிக் கொண்டிருந்தாள் சாருமதி.

பாக்யஸ்ரீக்கு கண்ணீர் முட்டிக்கு கொண்டு வந்தது எதுவும் பேசாமல் அமைதியாக சாருமதிக்கு முதுகு காட்டியவாறு பாத்திரம் விளக்கலானாள்.

“ஸ்ரீ காபி கேட்டு எவ்வளவு நேரமாச்சு? இன்னும் என்னதான் பண்ணிக்கிட்டு இருக்க?” என்றவாறு சமயலறைக்குள் வந்த முகிலன் “தலைவலிக்குது சீக்கிரம் காபியை போடு”

கணவன் எப்பொழுது காபி கேட்டான்? என்று குழம்பியவாறே அவனை பார்த்தவள் தலைவலி என்றதும் பாத்திரங்களை விட்டு விட்டு காபி போடலானாள்.

“அவ போட்டு கொண்டு வருவா. நீ போ. போய் ரெஸ்ட் எடு” இன்முகமாக தம்பிக்கு உத்தரவிட்டாள் சாருமதி.

“என்னடா இன்னக்கி வீட்டுல இருக்கேன். நம்ம பொண்டாட்டி வந்து பேசுவான்னு நான் ரூம்ல காத்துகிட்டு இருந்தா, அவ வரக் காணோமே என்று இங்க வந்தா, அதான் வீட்டுல மூணு பொம்பளைங்க இருக்கோம் என்று வீட்டுல இருந்த சமையற்காரம்மா, வேலையாள் ரெண்டு பேரையும் துரத்திட்டு எல்லா வேலையையும் என் பொண்டாட்டி தலைல கட்டிட்டு ஹாயா அவளை அதிகாரம் வேற பண்ணுறியா? நீ திருந்தவே மாட்டியா?” என்று அக்காவை ஒரு பார்வை பார்த்தவன்,

“பொறுத்து பொறுத்து பார்த்து முடியாமத்தான் நானே இறங்கி வந்தேன். திரும்ப மாடிக்கு போகணுமா? நான் இங்கயே இருந்து குடிச்சிட்டு போறேன்” என்று அங்கேயே அமர்ந்து விட்டான்.

முகிலனுக்கு பாக்யஸ்ரீயை பிடிக்குமா என்று கேட்டால் சொல்லத் தெரியவில்லை. அவனுக்குத் தெரிந்தது எல்லாமே அவன் குடும்பம் மட்டும்தான்.

காலேஜ் படிக்கும் பொழுது அவனை ஒரு பெண் காதலிப்பதாக சுற்றி சுற்றி வந்தாள். அந்த வயதில் அவன் மனமும் தடுமாறத்தான் செய்தது. அந்த நேரத்தில் தந்தை இறந்து விட, அத்தனை பொறுப்பையும் அன்னை அவன் தோள் மேல் ஏற்றி வைத்திருக்க, மனதில் துளிர் விட்ட காதலும் கரைந்தோடியிருந்தது.

அக்கா சாருமதி காதலித்து திருமணம் செய்திருந்தாலும், அடிக்கடி மாமாவோடு சண்டை போட்டுவிட்டு இங்கே வந்து தங்குவதும், வீட்டில் பார்த்த மாப்பிளையோடு சந்திரமதி அமைதியாக குடும்பம் நடாத்துவது முகிலனுக்கு விநோதமாகத்தான் இருந்தது.

பேச்சு வாக்கில் காஞ்சனாதேவியிடமே ஒருநாள் கேட்டிருக்க, “அந்த காலத்துல என் பாட்டி பத்து புள்ள பெத்த பிறகும் புருஷன் மூஞ்சி தெரியாது என்று சொல்வாங்க. எங்கம்மா எங்கப்பா பேர சொன்னதே இல்ல. ஏன் நான் கூட உங்கப்பாக்கு என் மாமனார் பார்த்த பொண்ணுதான். தாலி கட்டினது யார் என்று கூட எனக்குத் தெரியல.

இப்போ எல்லாம் புருஷன சாதாரணமா வாடா, போடா என்று பேசுறாங்க. கேட்டா பெண் உரிமை, தோழர்களா பழகுறோம் என்று எதையெதையோ சொல்லி அன்னக்கி நம்மள அடிமையா வச்சிருந்தது போலவே பேசுவாங்க.

உங்கப்பா என்னைக்காவது என்ன திட்டி பாத்திருக்கிறியா? எனக்கு புரியுதோ புரியலையோ கம்பனில நடக்குறது, நாட்டு நடப்பு என்று எல்லாத்தையும் என்கிட்டத்தான் பேசுவாரு. அவருக்கு பேச யாருமில்ல எங்குறதுக்காகவா? இல்ல நான் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும் எங்குறதுக்காகவா? என் கூட நேரம் செலவழிக்கணும் எங்குற ஒரே காரணத்துக்காக. நான் அவர் கூட சகஜமா பேசணும் எங்குறதுக்காக.

நான் அவர் மேல வச்சிருந்தது பயமில்ல. மரியாதை. கணவனே கண்கண்ட தெய்வம்னு சொல்வாங்க. அது கணவன் மனைவியை நடத்துறதுலதான் இருக்கு. மனைவி புருஷனுக்கு கொடுக்குற மரியாதைல இருக்கு. நாமே மத்தவங்க முன்னாடி மரியாதை இல்லாம பேசினா, மத்தவங்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டாங்க.

இந்த காலத்துல ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கவும், பேசி பழகவும் நவீன வசதிகளும், சந்தர்ப்ப சூழ்நிலையும் ஏராளம் இருக்கு. ஆனா காதல் என்ற பேர்ல பசங்க பண்ணுறதும், தவறான வழில போறதும் கலாசார சீர்கேடா இல்ல இருக்கு.

ஒரு பொண்ணு ஒரு பையன்கிட்ட அன்பையும், பாதுகாப்பையும் எதிர்பார்ப்பா, அவனை நம்பி போனா செல்போன்ல வீடியோ எடுத்து அவன் அவளையே மிரட்டுறான். பொண்ணுனங்க மட்டும் சும்மாவா? பசங்க கிட்ட பேசி பணம் பறிக்கிறாங்க. இங்க பொண்ணுங்களுக்கும் பாதுகாப்பில்ல. பசங்களுக்கும் பாதுகாப்பில்ல. பெத்தவங்க பசங்கள எப்படி வளக்குறது என்ற பயம் போய் எப்படி பாதுகாக்கிறது என்ற பதட்டத்துலயே வாழ வேண்டியதா இருக்கு”

வீட்டிலையே இருக்கிறாள். கோவிலுக்கு தவிர எங்குமே செல்லாத அன்னைக்கு இவ்வளவு விஷயம் தெரிகிறதா? ஆச்சரியமாக காஞ்சனாதேவியை பார்த்தவன் “நான் என்ன கேட்டா நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்க? போம்மா… என்று புன்னகைத்தவாறே நகர்ந்து விட்டான்.

அன்னை பார்த்த பெண் என்றுதான் பாக்யஸ்ரீயை தயக்கமின்றி திருமணம் செய்து கொண்டான். அவளை புரிந்துகொள்ளவும், தன்னை புரியவைக்கவும் கொஞ்சம் கால அவகாசம் தேவை. இனி அவளுக்காக நேரம் ஒதுக்க வேண்டும், தந்தை அன்னையை நடத்தியது போல் அவளோடு பழக வேண்டும்  இதோ இப்பொழுது அறைக்கு வந்து விடுவாள் என்று காத்திருந்தால் பாக்யஸ்ரீ அறைக்கு வருவது போல் தெரியவில்லை.

அவளை தேடி வந்த பொழுதுதான் சாருமதி பேசியதை கேட்டான். குடும்பத்தில் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்வதோடு, மனைவியின் மனம் நோகாமல் இனிமேல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.

பாக்யஸ்ரீ காபி போட்டு கொடுத்த பின் அதை அருந்தி விட்டு முகிலன் சென்று விடுவான். சந்திரமதி மதிய உணவை சமைக்க வருவதற்குள் இன்னும் நாலு வார்த்தை இவளை பேசிட வேண்டும் என்று சாருமதி அங்கயே காத்திருந்தாள்.

புதிதாக திருமணமானவர்கள். ஏதாவது பேசிக்கொள்வார்கள். ஏன் கொஞ்சக் கூட செய்வார்கள் நந்தி போல் நடுவில் நான் எதற்கு என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சாருமதி முகிலனிடம் மாளவிகாவின் புராணம் பாட ஆரம்பித்தாள்.

“ம்ம்..” என்று கேட்டுக் கொண்டிருந்தவன் பாக்யஸ்ரீ காபியை போட்டு அவன் கையிலையே கொடுக்கவும், “எடுத்துக் கொண்டு ரூமுக்கு வா ஹனிமூன் போறத பத்தி டிஸ்கஸ் பண்ணனும்” என்றான்.

“இல்ல பாத்திரம், பகலைக்கு சமைக்கணும்” எதோ இவனை திருமணம் செய்து வந்ததே இந்த வீட்டில் இந்த வேலைகளை பார்க்கத்தான் என்பது போல் இவள் பேச பல்லைக் கடித்தான் முகிலன்.

“எல்லா வேலையையும் அக்கா பாத்துப்பாங்க. நீ நேத்து வந்தவ. அவங்க இந்த வீட்டுல பொறந்து வளந்தவங்க. நீ வா” கொஞ்சம் கோபமாகவும், அதிகாரக் குரலிலும் முகிலன் கூற சாருமதிக்கு குஷியோ குஷி. பாக்யஸ்ரீயை நக்கலாக பார்த்து சிரித்து வைத்தாள்.

முகிலன் அவ்வாறு பேசாவிட்டால் சாருமதி ஏதாவது சாக்குபோக்கு சொல்லி பாக்யஸ்ரீயை அங்கேயே இருத்திக் கொண்டிருப்பாள். பிரச்சினை வரக் கூடாது என்று நினைத்த முகிலன் அக்காவை கடிய நேர்ந்திருக்கும்.

கணவன் தன்னை காப்பாற்றத்தான் அழைக்கின்றான் என்று அறியாத பாக்யஸ்ரீக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அமைதியாக அவன் பின்னால் நடந்தாள். 

அறைக்குள் நுழைந்தவன் அங்கேயே நிற்க,  தலைகுனிந்தவாறே சிந்தனையில் வந்தவள் அவன் மீது மோதி காபி கப்பை கீழே போட்டுடைத்தாள்.

“ஐயோ… காபி… கப்” என்று பாக்யஸ்ரீ பதற,

“ஏய் கைல பட்டிருச்சா?” அவளுக்காக பதறிய முகிலன் அவள் கைகளை பற்றி பார்கலானான். 

“இல்ல… இல்ல. கைல காபி ஊத்தல. கீழ தான் சிந்திருச்சு. இருங்க உங்களுக்கு வேற காபி போட்டுக் கொண்டு வாறேன்” என்று பாக்யஸ்ரீ நகர முயல, அவள் கைகளை இறுக பற்றி தடுத்தவன் காபி வேணாம். இப்படி உக்காரு உன் கூட பேசணும்” என்று அவளை அழைத்தான்.

“இத க்ளீன் பண்ணனும்” என்று கண்களாளேயே கூறியவள் அவனையும் தரையில் சிந்திய காபியையும் மாறி, மாறி பார்க்க,

“என்ன? இப்போ நீ இத க்ளீன் பண்ணிட்டு வரும் வரைக்கும் நான் வைட் பண்ணனுமா? இல்ல நானும் உன் கூட சேர்ந்து க்ளீன் பண்ணனுமா?”

என்ன இவள் நான் பேச வேண்டும் என்று கூறியும் அற்பமான விஷயங்களு முக்கியத்துவம் கொடுக்கின்றாளே என்று கொஞ்சம் கடுப்பில் தான் கேட்டான்.

“ஐயோ இல்ல. சொல்லுங்க என்ன பேசணும்?” அவன் கோபப்படுகிறான் என்றதும் சட்டென்று அமர்ந்து விட்டாள் பாக்யஸ்ரீ.

“என்ன இவள் இப்படி இருக்கின்றாள்? இப்படி இருந்தால் சாருமதி அக்காவை எப்படி சமாளிப்பாள்? இவளுக்கு எப்படி புரியவைப்பது? முகிலனுக்குத்தான் குழப்பமாக இருந்தது.

“சரி… நீ என்ன படிச்சிருக்க?”

தேனிலவுக்கு செல்ல வேண்டும் என்று தானே அழைத்தான் எதற்கு இப்பொழுது படிப்பை பற்றி கேட்கின்றானென்று திருதிருவென முழித்தாள் பாக்யஸ்ரீ.

“B .A”

“படிப்ப பாதில விட்டியா? இல்ல முடிச்சிட்டியா? மேற்கொண்டு படிக்க ஆசைப்படுறியா?” இவன் சாதாரணமாக கேட்க கண்களை அகல விரித்தவள், மறுப்பாக தலையசைத்தாள்.

“என்ன என் அக்கா ஏதாவது சொல்வாங்க என்று வேணாம்னு சொல்லுறியா?” என்றவனை இவள் ஆச்சரியமாக பார்க்க,

“இங்க பாரு… சாருமதி அக்கா உன்கிட்ட என்னவெல்லாம் சொல்லி வச்சிருக்காங்க என்று எனக்குத் தெரியாது. மாளவிகா நான் தூக்கி வளர்த்த பொண்ணு. அக்கா பொண்ணுங்கள கட்டிக்கணும் என்ற எந்த சென்டிமென்ட்டும் எனக்கு என்னைக்குமே இருக்கல.

அதேபோல கல்யாணத்துலையும் பெரிசாக எந்த ஈடுபாடும் இருக்கல. நீ என் அம்மா பார்த்த பொண்ணு. எந்த காரணத்துக்குக்காகவும் உன்ன விட்டுக் கொடுக்க மாட்டேன். கொஞ்சம் வேலைல பிஸியாகிட்டேன் அதனால் உன் கூட பேச கூட நேரம் கிடைக்கல.

அந்த கேப்ல சாருக்கா உன்ன நல்லா வச்சி செஞ்சிருக்காங்க என்று மட்டும் தெளிவா தெரியுது. அவங்க என் அக்கா. நானே அவங்கள பத்தி தப்பா சொல்லக் கூடாது. அவங்க  ஆசைய நிறைவேத்திக்க அவங்க என்ன வேணா சொல்வாங்க. இத்தனை நாளா நீ அமைதியா இருந்ததால வீட்டுல எந்த பிரச்சினையும் வரல. அதுக்காக அவங்க சொல்லுற எல்லாத்தையும் செய்யணும் எங்குற எந்த அவசியமும் இல்ல. புரியுதா?      

நீ என் மனைவி. இந்த வீட்டுல எனக்கு என்ன உரிமை இருக்கோ, எல்லா உரிமையும் உனக்கும் இருக்கு. யாரைப்பார்த்தும் பயப்படவோ, ஒதுங்கிப் போகவோ தேவையில்லை.

முக்கியமா உனக்கு என்கிட்டே பேச எந்த தயக்கமும் இருக்கக் கூடாது. எந்த ஒரு விஷயத்தையும் நீ பேசலாம். அப்பாவை பார்க்க போகணுமா போலாம் ஓகேவா”

சட்டென்று அவனை இறுக அணைத்துக் கொண்டவள் “தேங்க்ஸ்” என்றாள். 

வான்முகிலன் பேசப் பேசத்தான் அவன் தன்னை சாருமதியிடமிருந்து காப்பாற்றி விட்டான். அவனுக்கு தன்னை பிடிக்காமலில்லை என்று புரிந்து கொண்டாள்.

நடந்தவைகளால் தான்தான் ஏதேதோ கற்பனை செய்து விலகியிருந்தது விட்டோம் என்று உணர்ந்தது கொண்ட நொடி முகிலனை நெருங்க பாக்யஸ்ரீக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை.

அதை முகிலன்தான் எதிர்பார்க்கவில்லை போலும். அவள் அணைத்த்தில் அதிர்ந்தவன், மெலிதாக புன்னகைத்தான்.

முகிலன் எதுவும் பேசாமல் இருக்கவே “சாரி” என்று அவனை விட்டு விலக பாக்யஸ்ரீ முயல, அவளை விலக விடாது தன்னோடு சேர்த்து அணைத்தவன் “எனக்குத்தான் உன்ன பத்தி ஒன்னும் தெரியாது. ஆனா உனக்கு என்ன பத்தி நிறைய தெரிஞ்சிருக்கும் போலயே” என்று சிரிக்க, பாக்யஸ்ரீ அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

அதுவே அவர்களின் சம்பாஷணையின் தொடக்கமாகி, பாக்யஸ்ரீயின் பார்வையில் முகிலன் என்று இவள் கதை சொல்ல மெல்ல மெல்ல அவர்களின் நெருக்கம் அதிகமானது.

நாளடைவில் இருவரும் இணைபிரியாத தம்பதியர்களாக மாற, காஞ்சனாதேவிதான் இன்னும் தேனிலவுக்கு செல்லவில்லையே என்று மகனை குடைய ஆரம்பித்தாள்.

“பழக்கமே இல்லாத பொண்டாட்டிய கூட்டிகிட்டு போய் சுவத்த பார்த்துகிட்டு இருக்கவா?” என்று முகிலன் முணுமுணுக்க,

“நீங்க அங்க போயும் சுவத்ததான் பார்த்துகிட்டு இருக்க போறீங்க” இரட்டை அர்த்தத்தில் கிண்டலாக கிசுகிசுத்தாள் பாக்யஸ்ரீ.

“அப்போ நம்ம ரூமே போதும் என்குறியா?” என்றவனை முறைக்க முடியாமல் பார்த்து வைத்தாள்.

பாக்யஸ்ரீ படிப்பை தொடர்ந்து கொண்டிருக்க, அவளுக்கு இரண்டு நாள் லீவ் கிடைத்தால் போதும் அவளை எங்கயாவது அழைத்துக் கொண்டு சென்று விடுவான் முகிலன்.

ஒருவாரம் அவனுக்கு டில்லியில் வேலை இருக்க அவன் கிளம்பி சென்றிருந்தான். பாக்யஸ்ரீக்கு இரண்டு நாள் லீவ் இருக்கவும் அவளை அவனிடம் அழைத்துக் கொண்டிருந்தான். இன்று மாலை இருவரும் தான் டில்லியிலிருந்து சென்னை வருவதாக இருந்தார்கள் அந்த விமானம் தான் விபத்துக்குளாகியிருந்தது.

மீண்டும் கூடிய தகவல்களோடு முக்கியச் செய்தி ஒளிபரப்பாக வீட்டில் இருந்த அனைவருமே தொலைக்காட்ச்சியின் முன் வந்து நிற்க, அதை பார்த்த காஞ்சனாதேவி மயங்கி சரிந்தாள்.

Advertisement