Advertisement

சிலம்பல் – 23(2)

இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்து இருந்தாலும், இருவரின் வாழ்க்கையுமே முடிந்திருக்கும். பெருமா தான் முதலில் தெளிந்து எழுந்தான். அதற்குள் மற்ற யானைகளும் அந்த இடத்தில் குழுமியிருந்தன.

 

அப்போது தான் தன்னை காப்பாற்றிய யானையை பெருமா இனம் கண்டான். இவன் தீ விபத்தில் முதல் உதவி செய்த யானை தான் அது. மெதுவாய் எழுந்து நின்றவன் வித்யாவை சகதியான இடத்திலிருந்து சற்றே உலர்ந்த இடத்திற்கு இடம் மாற்றினான்.

 

அவனுக்கு தேவைப்பட்ட முதல் உதவி சிகிச்சைகளை அளித்து முடித்தவன், அவன் சுவாசம் சற்று சீரான பிறகே யானைகளின் புறம் திரும்பினான். அவனுக்காக அங்கே எந்த யானையும் நின்று கொண்டிருக்கவில்லை.

 

என் பணி முடிந்தது என்பதை போல அந்த கூட்டம் முன்னோக்கி நடந்து கொண்டிருந்தது. வேகமாய் அவற்றின் முன்னே ஓடியவன், அந்த யானைக் கூட்டத்தை கை கூப்பி வணங்கினான். அந்த குறிப்பிட்ட பெண் யானை மட்டும் தும்பிக்கை உயர்த்தி அவன்  நன்றியை ஏற்றது.

 

மற்ற யானைகள் இது எங்களின் வாடிக்கை என்பதை போல முன்னே நடந்து கொண்டிருந்தன. அந்த யானைக் கூட்டம் மேலும் சிறிது தூரம் முன்னேறும் வரை பெருமா அங்கேயே உறைந்து போய் நின்றிருந்தான்.

 

அப்போது தூரத்தில், “பெருமா… வித்யா…’’ என்ற யாழியின் அலறல் கேட்க, குரல் வந்த திசை நோக்கி ஓடினான். மறுகரையில் யாழி சித்தம் கலங்கியவள் போல, அழுது கரைந்த விழிகளோடு குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 

“யாழி இங்க…! இங்க இருக்கேன்…!’’ என பெருமா கைகளை உயர்த்தி காட்ட, அவனை கண்டவளின் மனம் விடுதலையை உணர்ந்தது.

 

கண்கள் ஆனந்தக் கண்ணீரை கசிய விட, “ரொம்ப பயந்துட்டேன். வித்யா எங்க..?’’ என்றாள் முடிந்த அளவு குரலை உயர்த்தி. ஆறின் பேரிரைச்சல் அவர்களின் சம்பாசனைக்கு இடையூறாய் இருந்தது. ஆக பெருமாவும் உரத்த குரலில், “நல்லா இருக்கான். பயப்படாத.’’ என்றான்.

 

பின்னர்  இருவரும் ஆறு சற்றே ஓடையாகும் பகுதி வரை நடந்து வந்தார்கள். அதுவரை வித்யாவை பெருமா சுமந்து கொண்டே நடந்தான். அதன் பின் பெருமா அந்த ஓடையை கடந்து யாழியை அடைந்தான்.

அவன் வித்யாவை பாதுகாப்பான இடத்தில் படுக்க வைக்கும் வரை பொறுத்து இருந்தவள் பின் அவனை பாய்ந்து சென்று கட்டிக் கொண்டாள். “உங்க பின்னாடியே ஆத்துல குதிக்கணும் போல இருந்துச்சி. ஒருவேளை என் உதவி தேவைபட்டா என்ன செய்றதுன்னு தான் கரையில நின்னு தேடினேன்.’’ என்றாள் கலங்கிய விழிகளோடும், கரகரத்த குரலோடும்.

 

அவள் தலையை கோதி கொடுத்தவன், “நல்ல வேளை நீ அப்படி எந்த முட்டாள் தனமும் செய்யலை டோரா…!’’ என்றவன் நன்றாக அழுத்தம் கொடுத்து அவளை அணைத்துக் கொண்டான். இருவருக்குமே அந்த அணைப்பு தேவைப்பட்டது.

 

சற்று நேரத்தில் அவளை தன்னிடமிருந்து பிரித்து விலக்கி நிறுத்தியவன், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு டோரா. நீ வித்யாவை பார்த்துக்கோ. நான் இப்ப வந்திடுறேன்.’’ என்றவன் காட்டிற்குள் ஓடினான்.

 

அவளுக்கு முன்பாக குட்டிக் குரங்கு அவனை நெருங்கி அமர்ந்திருந்தது. யாழியும் கவலை தேய்ந்த முகத்தோடு அவன் அருகே அமர்ந்து கொண்டாள். காட்டிற்குள் நுழைந்த பெருமா, புகை போட்டு உதவி கேட்டுவிட்டு, வரும் போதே மூலிகை இலைகளையும் பறித்து வந்திருந்தான்.

 

நடந்தவை அனைத்தையும் பெருமா சொல்லி முடித்த போது, வித்யா இமைக்கவும் மறந்து போய் அமர்ந்திருந்தான். எந்த யானை தன் நிலத்தில் நுழைந்து விடக் கூடாது என்று நினைத்தானோ அந்த யானை தான் தன் உயிர் உடலை விட்டு வெளியேறாமல் காத்து இருக்கிறது என்ற எண்ணமே அவன் அகந்தையை சிதறடிக்க போதுமானதாய் இருந்தது.

 

‘இப்படியெல்லாம் கூட நடக்குமா…?’ என்று நாம் எண்ணி முடிப்பதற்குள், அதை விட அதிகப்படியான நிகழ்வுகள் நம்மை கடந்திருக்கும். அதுதான் வாழ்க்கை. சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்த வித்யா, முகத்தை உள்ளங் கைகளால் அழுந்த துடைத்துக் கொண்டான்.

 

தொண்டையை செருமி குரலை சரி செய்து கொண்டவன், “ரொம்ப சாரி ப்ரோ…! நீங்க சொன்னப்ப எல்லாம் புரியல. ஆனா கண்ணுக்கு முன்னாடி மரணம் கண்ணாமூச்சி ஆடிட்டு போனதுக்கு அப்புறம் சில விஷயங்கள் நெத்தியில அறைஞ்ச மாதிரி புரியுது. இனி நீங்க வீணா அலைய வேண்டாம். கரியன் தோட்டத்துல…’’

 

வித்யா அந்த வார்த்தைகளை முடிக்கும் முன் பெருமா கை உயர்த்தி வேண்டாம் என்பதை போல நிறுத்தினான். “நீ எதையும் சொல்ல வேண்டாம் வித்யா. கண்டுபிடிக்கிறேன். நானே கண்டுபிடிக்கிறேன். யானை உன்ன காப்பாத்தின நன்றி உணர்ச்சியில இருக்க. இப்ப நீ எதையாவது சொல்லிட்டா பின்னாடி உன் குடும்பம்னு வரும் போது, நீ அவங்களுக்கு துரோகம் செஞ்ச மாதிரி உணர்வ. ஆனா நானா கண்டுபிடிச்சா… அது உன்னோட தோல்வியா மட்டும் தான் இருக்கும். தோல்வியை சுலபமா கடந்து போயிடுவ. ஆனா நீயே உன் குடும்பத்துக்கு துரோகம் செஞ்சிட்ட நினைப்பு உன் மனசுல தங்கிட்டா நீ அதுல இருந்து வெளிய வர ரொம்ப கஷ்டப்படுவ.’’ என்றான் மற்றவனை அறிந்தவனாய். 

 

அவன் வார்த்தைகள் வித்யாவிற்கு அளப்பரிய ஆறுதலை அளிக்க, “ப்ரோ…’’ என்ற அழைப்புடன் அருகிருந்த அவனை பாய்ந்து  கட்டிக் கொண்டான் வித்யா. “நான் உங்களை மோசமா பழி வாங்க நினச்சேன். சொந்த ஊர்ல இருந்து வெளிய துரத்த திட்டம் போட்டேன். உங்க காதலிகிட்ட இருந்து உங்களை பிரிக்க சதி செஞ்சேன். ஆனா நீங்க… ஆனா நீங்க… என் மனசு கூட வலிக்க கூடாதுன்னு யோசிக்கிறீங்க. இந்த காட்டுக்கும் உங்களுக்கும் எந்த வித்யாசமும் இல்ல ப்ரோ. நாம இங்க குழி பறிச்சாலும், அதுல விதை தூவி இந்த காடு மரமாக்கிடும். அது போல தான் நீங்களும். நான் எத்தனை துரோகம் செஞ்சிருந்தாலும், என்னை மனுசனா மாத்திட்டீங்க.’’ என்றான் கலங்கிய விழிகளுடன்.

 

அவன் முதுகில் தேறுதலாய் கட்டிக் கொடுத்த பெருமா, “ஓவரா எமோசனல் ஆகாத வித்யா. இதுல என்னோட சுய நலமும் இருக்கு. உன்னோட சாவல்ல ஜெயிச்சி யானைகளோட வழித் தடத்தை அதுகளுக்கு மீட்டுக் கொடுக்கலைன்னா நானெல்லாம் மூணு வயசுல இருந்து காடறிஞ்சவன்னு பேர் வாங்கினதுல என்ன பிரயோஜனம். நீ போட்ட சாவல்ல நான் ஜெயிக்க கிடைச்ச வாய்ப்பா தான் இதை நான் பாக்குறேன். நீ விசயத்தை சொல்லிட்டா நீ விட்டுக் கொடுத்ததா என் வாழ்க்கை இருக்கும். நானே கண்டுபிடிச்சா நான் ஜெயிச்சி வாங்கின பரிசா என் வாழ்க்கை இருக்கும். எனக்கு யாரும் விட்டுக் கொடுத்த ஆறுதல் பரிசு எல்லாம் வேண்டாம்.’’ என்றான் முகத்தில் கீற்றானா புன்னகையை தேக்கி.

 

அவன் தன்னை தேற்றுவதற்கு தான் இத்தனை பேசுகிறான் என்பதை உணர்ந்து கொண்ட வித்யா, “நீங்க கண்டிப்பா ஜெயிப்பீங்க ப்ரோ. ஆனா பரிசா உங்களுக்கு ஒரு ஊர் சுத்தி ப்ளஸ் வாயாடி டோரா தான் வெற்றிக் கோப்பையா கிடைப்பாங்க. அது ஓகே வா பார்த்துக்கோங்க.’’ என்றான் தானும் இதழ்களில் புன்னகையோடு.

 

யாழி அமர்ந்திருந்த திசையை திரும்பிப் பார்த்தவன், கண்களில் காதல் மின்ன, “ஊர்சுத்தியா இருந்தாலும் சரி… வாயாடியா இருந்தாலும் சரி. எனக்கு என்னோட டோரா என் கூட வாழ்கையை பகிர்ந்து கிட்டாலே போதும்.’’ என்றான்.

 

“ப்ரோ… அய்யோ கண்ல டைட்டானிக் படம் ஓட்டாதீங்க. முடியல. ‘’ என்றவன், “டோரா… ! இங்க வாங்க…!’’ என உரக்க குரல் கொடுத்தான். இவன் அழைத்ததும் அவள் வேண்டா வெறுப்பாய் கிளையில் இருந்து இறங்கி வந்தாள்.

 

அதுவரை இலைகளை கிள்ளி விளையாடிக் கொண்டிருந்த குட்டிக் குரங்கும், இவள் நடப்பதை கண்டதும், தானும் அவள் பின்னே ஓடி வந்தது. யாழி அருகில் நெருங்கி வந்ததும், “நாம கிளம்பலாம் யாழி. கண்டிப்பா பிக் ப்ரோ சீக்கிரம் திரும்பி வந்திடுவார். நீங்க சொன்ன மாதிரி இங்க அவருக்கு எந்த கெட்டதும் நடக்காது. ஏன்னா இந்த காட்ல இருக்க, சின்ன புல் பூண்டு கூட அவருக்கு ஆயுதம். நாம வெளிய போய் அவர் வெற்றியோட வரப் போற நிமிசதுக்காக காத்திருக்கலாம். நாம அவர் கூட இருக்க ஒவ்வொரு நொடியும், அந்த நிமிஷம் அதிகமாகிட்டே போகுது. நாம பாதுகாப்பா வெளிய இருந்தா அவர் வேலையை சீக்கிரம் முடிச்சிட்டு வந்துடுவார்.’’ என்றான் உறுதியான குரலில்.

 

ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் படுத்திக் கொண்டவள், பெருமாவின் கண்களை சந்திக்கமால், “ஆனா உங்க பிக் ப்ரோக்கு ஒரு நாள் தான் டயம். அதுக்குள்ள அவர் தன்னோட டாஸ்கை முடிச்சி ஊருக்கு வரலைனா மறுபடி அவரை தேடி நான் காட்டுக்குள்ள வந்திடுவேன்.’’ என்றாள் பிடிவாத குரலில்.

 

உடனே தன் கைகளை தலைக்கு மேல் தூக்கி கும்பிடு போட்ட பெருமா, “அம்மா தாயே… நான் அதுக்கு முன்னாடி கூட வந்திடுறேன்.  உங்க ஒத்துழைப்பிற்கு ரொம்ப நன்றி…!’’ என்றான் இதழ்களில் விசம புன்னகையுடன்.

 

அவன் கைகளை தலைக்கு மேல் தூக்குவதை கண்ட குட்டிக் குரங்கு, தானும் அவனைப் போல கைகளை தலைக்கு மேல் தூக்கி கும்பிடு போட்டது. அதை கண்ட மூவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

 

அதே நேரம் இவர்களை அழைத்து செல்ல, டோலியுடன் நான்கு வலுவான பழங்குடியின ஆண்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் இருளர் மொழியில் பெருமாவிடம் உரையாட, அவனும் அந்த மொழியில் சரளமாக அவர்களுடன் உரையாடினான்.

 

அவர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த மரத் தூளியில் வித்யாவை வாகாக படுக்க வைத்தனர். அவர்கள் புறப்படும் முன் பெருமா யாழியிடம், “இவங்க பஸ் பெசிலிடி இருக்க ஏரியா வரை உங்களை கூட்டிட்டு போயிடுவாங்க. அங்க இருந்து நீ வித்யா வீட்டுக்கு போன் போடு. அவங்க வந்து மெடிக்கல் ஹெல்ப் அரேஞ் செய்யட்டும். நீயும் உன் வீட்டுக்கு போ. ஏன் ரெண்டு நாளா ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்டா… உடம்பு சரியில்லைன்னு சொல்லி சாமாளி. நானும் சீக்கிரம் இங்க இருந்து வந்துடுவேன்.’’ என்றான் நம்பிக்கை குரலில்.

 

யாழி, ‘சரி…’ என்பதாய் தலை அசைக்க, அவர்கள் அவனை தூக்கிக் கொண்டு நகரும் போது, பெருமாவின் தோளை தொட்ட வித்யா, “மண்ல தான் ரகசியங்கள் கால காலமா பதுக்கப்பட்டு வருது.’’ என்றான்.

 

‘உன் குறிப்பை நான் புரிந்து கொண்டேன்.’ எனும் விதமாய் பெருமா தலை அசைக்க, அவர்களின் பயணம் தொடங்கியது. குட்டி குரங்கின் தலையில் தட்டி வித்யா விடை பெற, ‘கர்..’ என குரல் கொடுத்தது அது.

 

“பாய் புஜ்ஜி…! இனி இவரை நீ தான் பத்திரமா பார்த்துக்கணும்.’’ என யாழி பெருமாவை குட்டிக் குரங்கின் வசம் ஒப்படைத்து, அதன் தலை கோதி விடை பெற, அது அவளைப் போலவே தானும் அவள் தலையை கோதி கொடுத்தது.

 

இப்போது இருவரின் விழிகளும் கலங்க, அவர்களின் பயணம் துவங்கியது. அதுவரை அவர்கள் விடைபெற்று போகிறார்கள் எனப் புரியாத குட்டிக் குரங்கு, பெருமா நடக்காமல் ஒரே இடத்தில் நிற்கவும், ‘நீயும் நட…’ என்பதை போல அவன் தோளில் அமர்ந்து அவனை உந்தியது.

 

“நம்ம பயணம் இனி வேற திசையில புஜ்ஜி…” என்றவன் அவர்களுக்கு எதிர்பக்கம் நடக்க, அவர்கள் தங்களைப் பிரிந்து போகிறார்கள் என்பதை புரிந்து கொண்ட குட்டிக் குரங்கு, ‘கர்..’ என பலமாய் குரல் கொடுத்துக் கொண்டே, அவர்களை பார்த்துக் கொண்டே வந்தது.

 

வித்யாவும், யாழியும் கூட குட்டிக் குரங்கையும், அதை தோளில் சுமந்த படி நடக்கும் பெருமாவின் முதுகையும், வளைவுப் பாதையில் அவர்கள் மறையும் வரை பார்த்துக் கொண்டே சென்றனர். பெருமா விழிகளை திருப்பவே இல்லை. தான் முன் சென்று முடிக்க வேண்டிய காரியம் அவனை வில்லிலிருந்து விடுவிக்கப்பட்ட அம்பை போல நேர் திசையில் செலுத்திக் கொண்டிருந்தது.

 

தன்னை கன்னி வைத்து பிடித்து காவு வாங்க, ஒருவன் பழி வெறியுடன் காத்திருப்பதை உணராத பெருமா, குட்டிக் குரங்குடன், அந்த காட்டுப் பாதையில் ஒற்றையாய் நடந்து கொண்டிருந்தான். நாளைய சூர்யோதயம் பார்க்கப் போகும் கொடூரத்தை உணர்ந்தார் போல, கிழக்கிலிருந்து வீசிய கொண்டல், தன் காற்றின் மொழியில் அவன் காதில் ரகசியம் பேச முயன்று தோற்றுக் கொண்டிருந்தது.

 

சலம்பும்.  

Advertisement