Advertisement

சிலம்பல் – 23 (1)

 

வித்யாவிற்கு தன் விழிகளை திறப்பதற்கு அத்தனை சிரமமாக இருந்தது. ஆனாலும் அவனை சுற்றியிருந்த காரிருளை விரட்ட பிடிவாதமாய் விழிகளை திறக்க முயன்று கொண்டிருந்தான் அவன்.

 

அப்போது யாரோ தன் விழிகளை குளிர்ந்த நீர் கொண்டு துடைத்து விட, அவனுக்கு இமைகளை பிரிப்பது சற்றே இலகுவாக இருந்தது. பெரும் முயற்சிக்கு பின்பு விழிகளை திறக்க, முதலில் மங்கலாய் தெரிந்த புற உலகு பின் தெளிவான பார்வைக்கு வந்தது.

 

அவன் தெளிவான கண்கள் முதலில் உள்வாங்கியது பதட்டம் நிறைந்த பெருமாவின் முகத்தை தான். பெருமாவின் முகத்திலிருந்த பதட்டத்தை கண்ட வித்யா லேசாய் புன்னகைக்க முயன்றான். ஆனால் லேசாய் அவன் உடலை அசைக்க முயன்றதற்கே முழங்காலின் கீழ் ஆரம்பித்த வலி நேராய் உச்சி வரை பாய்ந்தது.

 

“அம்மா…’’ வித்யா வலியில் அலற, “காலை அசைக்காதீங்க வித்யா. கணுக்கால் எலும்பு முறிஞ்ச மாதிரி இருக்கு.’’ என்ற யாழியின் வார்த்தைகள் அவன் செவி அடைந்ததன. யாழி எங்கிருக்கிறாள் என வித்யா தலையை திருப்பி பார்த்தான்.

 

அப்போது தான் தன் தலை பெருமாவின் மடியில் இருப்பதை உணர்ந்தவன், அவன் தலைக்கு நேர் பின்னே யாழி நிற்பதை உணர்ந்தான். காய்ந்த தொண்டையை எச்சில் கொண்டு ஈரப்படுத்திக் கொண்டவன், “என்ன நடந்தது…?’’ என்றான் சற்றே திணறலாய்.

 

அவன் பேசியதுமே சற்று முகம் தெளிய பெருமா “ம்… காட்டாறு அடிச்சிட்டு போனதுல ரெண்டு பேரும் இப்ப சொர்க்கத்துல இருக்கோம்.’’ என்றான் சிரியாமல். வித்யாவின் முகம் அவன் கொடுத்த பதிலில் புன்னகையில் உறைய, “நீங்க சரி…! என்னை எப்படி சொர்க்கத்துல அலோ செஞ்சாங்க.’’ என்றான் வித்யா.

 

அதற்குள் சுரை குடுவையில் யாழி நீர் கொண்டு வந்து கொடுக்க, அதை பெருமா வித்யாவிற்கு புகட்டினான். வறண்டிருந்த தொண்டைக்கு அது அத்தனை ஆறுதலாக இருக்க, உடலில் பரவிய புத்துணர்வு அவன் எழுந்து அமர உதவியது.

 

இப்போது யாழியும் அவன் முன் வந்து நின்றாள். “கொஞ்ச நேரத்துல என்னை கலங்கடிச்சிடீங்க ரெண்டு பேரும்.’’ என்றாள் அழுகை உறைந்த குரலோடு. யாழியின் தோள்களில் இருந்த குட்டிக் குரங்கு தற்சமயம் இறங்கி வித்யாவின் நெஞ்சில் அமர்ந்து அவன் மார்பில் தலைவைத்து படுத்துக் கொண்டது.

 

இவர்கள் காட்டும் அன்பு, ஏதேதோ மனக் கதவுகளை திறக்க, பெருமாவை பார்த்தவன் சற்றே உணர்ச்சி நிரம்பிய குரலில், “என்ன நடந்தது பிக் ப்ரோ…?’’ என்றான். இந்த முறை எனக்கு உண்மை வேண்டும் என்ற பிடிவாதம் அந்த குரலில் ஒலித்தது.

 

“சும்மா அவரையே கேட்டுட்டு இருந்தா…! என்ன நடந்ததுன்னு கரையில நின்னு முழுசா பார்த்தவ நான் தான். சொல்றேன் பொறுங்க. அதுக்கு முன்னாடி இதை கொஞ்சம் சாப்பிடுங்க.’’ என்றவள் ஏற்கனவே பெருமா சென்று பறித்து வந்திருந்த மூலிகை இலைகளை அவனிடம் நீட்டினாள்.

 

வித்யா கேள்வியாய் பார்க்க, “இதை கசாயம் செய்ற அளவுக்கு இப்போ நம்மகிட்ட வசதி இல்ல. நிறைய தண்ணியை குடிச்சி இருக்கீங்க. எலும்புல வேற அடி. அதான் வலி குறையவும், மூச்சு பிரச்சனை வரமா இருக்கவும் இந்த மருந்து. கொஞ்சம் கசப்பா இருக்குமாம். மென்னு முழுங்கிடுங்க. கரடி கலைச்ச தேன் கூட்ல மீதம் இருந்ததுன்னு சொல்லி உங்க ப்ரோ உங்களுக்கு தேன் எல்லாம் கொண்டு வந்து வச்சி இருக்கார். இதை சாப்பிட்டு முடிச்சதும் தரேன்.’’ என்றாள் உத்தரவாய்.

 

அவளின் அதிகாரத்தில் லேசாக சிரிப்பு வந்த போதும், தட்டாமல் வித்யா அந்த இலைகளை வாங்கி உண்டான். மூலிகையின் அதீத கசப்பில் அவன் முகம் சுருங்க, குட்டிக் குரங்கு, அதுவரை ஏதோ தின்பண்டம் என அவனிடம் கையை நீட்டிக் கொண்டிருந்தது, உடனே கையை பின்னால் இழுத்துக் கொண்டது.

 

அதை கண்டு யாழியும், பெருமாவும் சிரிக்க, வித்யாவின் இதழ்களிலும் முறுவல் பூத்தது. அடுத்து யாழி தேனடையில் இருந்த தேனை நேரடியாக அவன் வாயில் பிழிய, ஒவ்வொரு சொட்டாய் அது அமிழ்தம் போல அவன் வாயில் விழுந்தது.

 

இப்போது அவன் விழி மூடி அதை  ரசித்து விழுங்க, அவன் மீதிருந்து கீழே இறங்கிய குட்டிக் குரங்கு, தானும் அவனைப் போல தலையை மேலே உயர்த்திக் கொண்டு வாயை திறந்தது. யாழி அதன் வாயில் தேனை பிழிபவள் போல அருகே சென்று ஏமாற்ற, அதுவோ அவள் கையில் இருந்த தேனை கைகாட்டி மீண்டும் தன் வாயை நோக்கி விரல் காட்டி ‘எனக்கும் வேண்டும்’ என கேட்டது.  

 

அவள் மீண்டும் அதனிடம் கொண்டு செல்வதும், பின்பு ஏமாற்றுவதுமாக இருக்க, ஒருகட்டத்தில் அவள் கையில் இருந்த தேனடையை அப்படியே பறித்துக் கொண்டு போய் தாழ இருந்த மரக் கிளையில் அமர்ந்து அடையோடு தேனை சாப்பிட தொடங்கியது.

 

அது பறித்துக் கொண்டு போனதுமே, கீழே நின்று கை கால்களை உதறியவள், “ஏய்… நான் இன்னும் டேஸ்ட் கூட செய்யலை. ஒழுங்கா பாதி குடு.’’ என்று அதை மிரட்டிக் கொண்டிருந்தாள். அதுவோ இப்போது நாக்கை வெளி தள்ளி, அவளுக்கு பழிப்பு காட்டியது.

 

பெருமா, வித்யா இருவரும் அந்த காட்சியை கண்டு பொங்கி சிரிக்க, “உங்களுக்கு எல்லாம் சிரிப்பா இருக்கா. எனக்கு தெரியாது பெருமா. நீங்க எந்த மலைத் தேனீகிட்ட கொட்டு வாங்கினாலும் சரி. எனக்கு தேனடை வேணும்.’’ என்றாள் கைகளை உதறி சிறுபிள்ளை போல.

 

“சரி…! ரொம்ப கையை காலை உதறாத டோரா. கொஞ்சம் வளர்ந்த குட்டியை ஏதோ ஒரு அம்மா தவற விட்டுட்டு போயிட்டதா நினச்சி எதாச்சும் கரடிக் கூட்டம் உன்னை அலேக்கா தூக்கிட்டு போயிடப் போகுது.’’ என்றான் பெருமா சற்றும் சிரியாமல்.

 

அவன் கிண்டலில் மேலும் முகம் சுருக்கியவள், சற்று தள்ளி இருந்த மரக் கிளையில் சென்று அமர்ந்தாள். இப்போது சிரித்தாள் அவளின் கோபம் பெருகும் என்பதை உணர்ந்த வித்யாவும், பெருமாவும் தங்களின் சிரிப்பை இதழ்களை கடக்க அனுமதிக்காது உள்ளத்தோடு சிறை வைத்தனர்.

 

தனக்கு போதுமான அளவு தேனை உண்டு முடித்த குட்டிக் குரங்கு, மீந்த தேனடையை எடுத்துக் கொண்டு, யாழியை தேடி நடந்தது. அவள் அமர்ந்திருந்த கிளையில் தானும் ஏறிக் கொண்டு, தேனடையை அவள் கைகளில் வைத்து விட்டு, ‘சாப்பிடு’ என சொல்வதை போல ஒற்றை விரலை தன் வாயில் நுழைத்து சைகை காட்டியது.

 

அதன் அன்பில் உருகிப் போனவள், “இனி இந்த ரெண்டு தடியனுங்க கூடவும் நான் கா. நீ மட்டும் எனக்கு போதும் புஜ்ஜி.’’ என்றவள், தேனடையை பிழிந்து அதில் வழியும் தேனை சப்புக் கொட்டி விழுங்கினாள்.

 

“கஷ்டப்பட்டு கரடியை ஏமாத்தி கொண்டு வந்தது நானு. பிடுங்கி சாப்பிட்டு மிச்சம் கொடுத்த ஆள் ஹீரோ வா…?’’ என்றான் பெருமா. “ஹி… ஹின்னு பல்லை காட்டி காட்டி சிரிச்சீங்க இல்ல… போங்க நீங்க பேசாதீங்க.’’ என்றவள் தேனை சுவைப்பதில் கவனமானாள்.

 

வழக்கம் போல அவள் சுவைத்து உண்பதை பெருமா ரசனை விழி கொண்டு ரசிக்க துவங்கினான். ‘நீயும் பார்…’ என்று ஊக்கிய மனதினை கட்டுப்படுத்தி, வித்யா விழிகளை திருப்பிக் கொண்டான். ஒரு வழியாய் யாழி கையில் இருந்த தேனை முடித்து விட்டு யாழி மரத்திலிருந்து இறங்கினாள்.

 

அவள் இறங்கும் வரை வேறு பக்கம் பார்வையை பதித்திருந்த வித்யா, “டோரா மேடம். இப்பவாவது நடந்தது என்னன்னு இந்த அடியேன் மேப்புக்கு தகவல் சொல்லுவீங்களா…?’’ என்றான் அறியும் ஆவலில்.

 

“ஓ… சொல்லலாமே. ஆனா என்னை கிண்டல் செஞ்சி பக பகன்னு சிரிச்சிட்டு இருந்தீங்க இல்ல. சோ… இன்னும் அரை மணி நேரத்துக்கு என் காது கேக்காது.’’ என்றவள் மண்ணை திரட்டி கைகளை சுத்தம் செய்து  விட்டு, குடுவையில் இருந்த நீரைக் குடித்தாள்.   

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க வந்திடுவாங்க யாழி. நான் ஏற்கனவே சொன்னது தான். நீயும் அவங்க கூட கிளம்பு. என்னோட வேலை இன்னும் ஒரு ஆறு மணி நேரத்துல முடியணும். நான் அதை முடிக்கணும்.’’ என்றான் சற்றே கவலை குரலில்.

 

“நானும் முன்னாடியே சொன்னது தான். உங்களை தனியா விட்டுட்டு என்னால எங்கயும் போக முடியாது.’’ என்றாள் பிடிவாத குரலில்.

 

“ப்ளீஸ்…! கொஞ்சம் நிலமையை புரிஞ்சிக்கோ டோரா. என்னோட முழுக் கவனமும் இப்ப ஒரு விசயத்துல நான் குவிக்கணும். நீங்க கூட வந்தா உங்களை சுத்தி தான் என் கவனம் இருக்கு. இனி அது வேலைக்கு ஆகாது. ஒரு நாள் தானே. நான் கண்டிப்பா பத்திரமா திரும்ப வந்துடுவேன்.’’ என்று அவளுக்கு புரிய வைக்க முயன்று கொண்டு இருதான்.

 

“நானும் இங்க தான் இருக்கேன். என்ன பிரச்சனைன்னு என்கிட்டயும் சொல்லலாம்.’’ என்றான் வித்யா சற்றே கடுப்பான குரலில். அவனை நோக்கி யாழி ஒரு பெரு மூச்சுடன் திரும்பினாள்.

 

“உங்களுக்கு இப்ப மெடிக்கல் ஹெல்ப் தேவை வித்யா. இனி நீங்க நடக்கவும் முடியாது. சோ இங்க இருக்க ட்ரைபல்ஸ்கிட்ட பெருமா ஹெல்ப் கேட்டு இருக்கார். அவங்க டோலி தயார் செஞ்சி எடுத்துட்டு வரதா சொல்லி இருக்காங்க.’’ என்றாள்.

 

“ஹெல்ப் கேட்டாரா…? எப்படி…? டோலின்னா…? தோழியை பேஸ் புக்ல கலாய்க்க யூஸ் செய்வோமே ஒரு வார்த்தை அப்படி இருக்கு.’’ என்றான்.

 

“அதெல்லாம் உங்க ப்ரோ புகை போட்டு சிக்னல் கொடுத்துட்டார். அவர் புகை போட்ட அரை மணி நேரத்துல ரெண்டு பேர் நாம இருக்க இடத்தை தேடி வந்துட்டாங்க. அப்ப நீங்க மயக்கத்துல இருந்தீங்க. பாஸ்…! டோலின்னா உங்களை உட்கார வச்சி தூக்கிட்டு போகப் போற மர தூளி. உங்க கேர்ள் பிரண்ட்ஸ் பேர் இல்ல.’’ என்றாள் யாழி விளக்கம் கொடுக்கும் விதமாய்.

 

“ஓ…!’’ என்று உள் வாங்கிக் கொண்டவன், “அதுக்கு எதுக்கு நீங்க அவர் கூட ஆர்க்கியூ செஞ்சிட்டு இருந்தீங்க…?’’ என்றான்.

 

உடனே பதில் சொல்லாமல் யாழி முகத்தை திருப்பிக் கொள்ள, “அது வேற ஒன்னும் இல்ல வித்யா. உன்னோடவே யாழியையும் காட்டை விட்டு வெளிய போக சொன்னேன். முடியாதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.’’ என்றான்.

 

“அது சரி. அப்ப இதுல நான் பேச ஒன்னும் இல்ல. நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க. சரி ப்ரோ… நீங்க கான்சியஸா தான இருந்து இருப்பீங்க. நாம தண்ணிக்குள்ள அடிச்சிட்டு போகும் போது என்ன தான் நடந்தது. அவங்க சொல்ற மாதிரி எனக்கு தெரியல.’’

 

யாழி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு மீண்டும் சற்று தொலைவில் இருந்த மரத்தின் தாழ்ந்த கிளையில் சென்று அமர்ந்தாள். அவள் அப்பால் நகரவும், ஒரு மணி நேரத்திற்கு முன்னால் என்ன நடந்தது என்பதை வித்யாவிடம் தாழ்ந்த குரலில் சொல்லத் துவங்கினான்.

 

அவர்கள் காட்டருவியில் அடித்துக் கொண்டு செல்லும் போது, ஒரு மூன்று நிமிடத்திலேயே வித்யா சுய நினைவை இழக்க துவங்கி இருந்தான். முடிந்த அளவு பெருமா நீரில் மூச்சை பிடித்துக் கொண்டு மிதக்க முயன்று கொண்டிருந்தான்.

 

பத்து நிமிடத்திலேயே அவர்கள் காட்டாறு பள்ளத்திற்கு அடித்து செல்லப்பட்டிருந்தனர். கைக்கு கிடைத்த மரக் கிளையை பற்றிக் கொண்டவன், சற்றே முன் நோக்கி நீந்தி வித்யாவின் தலையை நீருக்கு மேல் கொண்டு வந்தான்.

 

வித்யாவை ஒரு கையிலும், மரக் கிளையை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு அவன் நீரில் போராட, சற்று தொலைவில் அவன் கண்ணில் பட்டது யானைக் கூட்டம். அப்போது கரையோரம் நடந்து கொண்டிருந்தது யானைக் கூட்டம்.

 

இவர்கள் நீரில் அடித்து செல்வதை கண்ட பெண் யானை, வேகமாய் நீருக்குள் நெருங்கி வந்தது. காட்டாற்றில் அதன் நீந்தும் வேகம் அலாதியாய் இருந்தது. தன் துதிக்கையில் இவர்களை பிடித்த யானை கரையை நோக்கி நீந்தி இருவரையும் கரை சேர்த்தது.

Advertisement