Advertisement

தூறல் 7:

அலுவலகத்தில் “என்ன மாப்பிள்ளை, எங்க மாமா பெண் ரத்தினம்  எப்படி இருக்கா ?”என்ற  குரலில் சித்து நிமிர்ந்தான் .

“அதை உங்க மாமா பெண் ரத்தினத்திடம் தான் கேட்கணும்”.

இவனுக்கு எத்தனை மாமா பெண் இருக்காங்க என்று சித்து  மனதில் கேட்டுக் கொண்டான் .

“இது தான வேண்டாம் சொல்வது! உன் பெண்டாட்டிய பற்றி உன்னிடம் கேட்காம யாரிடம் கேட்க !”

“என்  மனைவி பேர் கண்மணி தான? நீ யாரை கேட்கிற?”

“எங்க தேனுவை தான் கேட்கிறேன் !”

“அடபாவி! உனக்கு அடுக்குமா? எனக்கே சந்தேகம். குடும்பத்தில் குழப்பத்தை உண்டு செய்யறையே! ஒருத்திக்கு எத்தனை பேர் தான் வைப்பீங்க “என்று சித்து ஷ்யாமை  கட்டிக் கொண்டான் .

“சித்து, நான் உன்னிடம் கொஞ்சம்  பேசணும். இப்ப ப்ரீயா இருந்தா லஞ்ச் வெளியே போகலாமா?” இருவரும் மனம் விட்டு பேசினார் .

ஷ்யாம் மனதில் இருக்கும் அத்தனை கேள்விக்கும் விடை கிடைத்தது.

“நான் இப்படி என்று கொஞ்சம் கூட யோசிக்கவில்லை டா!  நீ Ahmedabad படித்தேன் தெரியும் . அதற்கு பின்னால் இப்படி கதை இருக்கு என்று எனக்கு தெரியாமல் போச்சே! ஒன்றாகவே தான இருந்தோம். எப்படி டா என்னிடம் சொல்லணும் கூட தோன்றவில்லையா?  உன் நிலையை நினைத்தால் கவலையா தான் இருக்கு !”

ஷ்யாமும், சித்தார்த்தும் சென்னையில் ஒரே கல்லூரியில்  ஒன்றாக மேல் படிப்பு படித்தனர். படிக்கும் போதே நெருங்கிய நண்பர்களானார்கள். நண்பர்கள் எண்ணம் ஒத்து போனதால் படிப்பு முடித்தவுடன் இருவரும் சேர்ந்து  ஆட்டோமொபில் உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கினார்கள்.

ஷ்யாம்  படிப்பில் கெட்டியாக  இருந்தாலும் தொழில் என்று வந்தால் முடிவு எடுக்க முடியாமல் திணறுவான். பல தடவை சித்தார்த் சொல்லியும் தப்பான முடிவு எடுத்து  கம்பனிக்கு பல கோடி நஷ்டம் ஆனது . கருத்து வேறுபட்டால்  இருவருக்கும் அப்பப்ப சண்டை வந்தது .

சித்து வெளியூர் சென்ற சமயம் எடுத்த ஆர்டரை  முடிக்க முடியாமல் பேர் கெட்டு விடும் பயந்து, ஏமாந்து டுப்ளிக்கேட் ஸ்பர்ஸ் வாங்கி ஏற்றுமதி செய்து  இருக்கிறான் . தரம் குறைவாக இருப்பதால் எடுத்த ஆர்டர் அனைத்தும் திரும்பியது. நஷ்டம் ஈடு செய்ய அவசரமாக  உள்ளூர் சந்தையில் விற்று  கன்சுமேர் கேஸ் வரைக்கும் சென்றுவிட்டது.

இதை அறிந்த சித்தார்த், “முட்டாள் தனத்துக்கும் அளவே இல்லையா? போனது போகட்டும், நஷ்டம் என்று அத்தோட விட வேண்டியது தான !எதற்கு இப்படி அவசரமா முடிவு செய்த! குறைவான தரத்தில் விற்றால் நம்மை நம்பி எவன் ஆர்டர் தருவான். சாதாரண கேஸ் நினைத்தாயா?  நம்ம கம்பனி விஷயத்தை பொறுத்த வரை இனி நான் தான் முடிவு எடுப்பேன் !நீ விலகிக்கோ” என்றபோது பெரிய சண்டை ஆனது ..

சித்து கோபமாக “ஒரு தடவை தெரியாமல் செய்தால் தான் தவறு . மறுபடி மறுபடி அதே தவறை செய்தால் திமிரு என்று அர்த்தம்! முட்டாளை பார்த்து இருக்கேன். அதி முட்டாளை இப்ப தான் பார்க்கிறேன்.உனக்கு ஒரு வாய்ப்பு தரேன் ஷ்யாம். உன்னை கேசில் இருந்து விடுவிக்கணும் என்றால் வெறும்  பார்ட்னரா மட்டும்  இருந்துக்கோ ! உன் ஷேர் உனக்கு தான். நான்  கம்பனி முழு  பொறுப்பு எடுத்துக் கொள்வேன். நீ தலையிட கூடாது . வெறும் ஸ்லீபிங் பார்ட்னர். இஷ்டம் இல்லை என்றால் நீ உன் வழி  பார்த்துக் கொண்டு போ! நான் என் வழியில் செல்கிறேன் ” என்று  சொன்னவுடன்

அவர்கள் ஆரம்பித்த தொழில் நன்றாக வளர வேண்டும் என்ற ஆசையில், சித்து மீதுள்ள நம்பிக்கையில், ஷ்யாம்  சித்து சொன்னபடியே ஒத்துக் கொண்டான் .

ஷ்யாம் அவன் ஊரிலே அவனுக்கு பிடித்த கல்லூரியில்   விரிவுரையாளராக சேர்ந்து கொண்டான். அவனுக்கு பிடித்த தொழிலும் கூட.

சித்தார்த் மிக திறமையாக நிர்வாகம் செய்வதை பார்த்தாலும் ஒவ்வொரு தொழிலையும் ஆரம்பிக்கும் போது  ஷ்யாம் எப்படி ,என்ன ,ஒத்துவருமா  என்று கேள்வி கேட்டு தொலைத்து விடுவான் . ஷ்யாம் வெளியே கேள்வி கேட்டு சண்டை போட்டாலும் சித்து மீதுள்ள நண்பன் என்னும் பாசம் அப்படியே தான் இருந்தது . நட்புக்கு என்றும் மரியாதை தருபவன். இன்று வரை தொடர்கிறது.

சித்தார்த்துக்கு , பல நாள் கழித்து கண்மணியை அவன் அறையில் கண்டவுடன் மனதிற்கு எதோ இதமாக இருந்தது. அவள் அருகாமையை ரசித்து வேற எதுவும் பேசாமல் அமைதியாக படுத்துக் கொண்டான் .

கண்மணி மனதில், இத்தனை நாளா நான் வீட்டில்  இல்லை. எப்படி  இருக்க? பரீட்சை எப்படி எழுதின? என்ன? எதென்றாவது  கேட்கிறானா பாரு! திமிர் பிடித்தவன் . டேபிள் மீது எதோ சரக்கு வேற இருக்கு ! இவர் நிஜமா குடிப்பாரா ? இவரை பற்றி ஒன்றுமே தெரியமாடீங்குது.

எப்படியோ போகட்டும். பல நாள் கழித்து அந்த வாரத்தில் ஊருக்கு போக போறோம் என்பதே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது . அவர்களை எல்லாம் எண்ணி சிரித்த படி கண் மூடினாள்.

சித்து மனதில் ,கண்மணி மெதுவாக இடம் பிடிக்க தொடங்கி இருப்பதை அவள் அறியாள்.

சித்து நினைவுகள் அவன் கல்லூரி காலத்துக்கு சென்றது.

சித்து Ahmedabad உள்ள சிறந்த தொழில் நுட்பக் கல்லூரியில் bachelors படிப்பை படித்தான். ஷ்ரவன் தான் அவனுக்கு நெருங்கிய தோழன் . அவனுடன் அறையை பகிர்ந்து கொண்டு இருந்தான் .ஷ்ரவன், சித்து அளவில் வசதி படைத்தவன்  கிடையாது. அவன் படித்து தான் அவன் குடும்பத்தை முன்னேற்றணும் என்று தீவரமாக படித்தான். அப்போது  எல்லாம் சித்து எந்நேரமும் விளையாடுதனமாகவே இருப்பான் .

அவன் குறும்பு பேச்சால், வசீகரிக்கும் அழகால்  அனைவரையும் அவன் பக்கம் கவர்ந்துவிடுவான். இதனாலே கல்லூரியில் அவன் கொஞ்சம் பிரபலமானவன். பெண்களுக்கு கோபிகை கண்ணனாக விளங்கினான். யாருக்காவது உதவி என்றால் முதல் ஆளா நிற்பான்.

தீப்தி என்னும் சக மாணவி இவர்களுக்கு  தோழியானாள். படிப்பில் படு சுட்டி. எந்நேரமும் துருதுரு என்று இருப்பாள். பழக இனிமையானவள் .

தீப்தி மும்பையில்  இருக்கும் பெரிய தாதாவின் பெண் . அந்த  பயத்தாலே ஷ்ரவன் எப்போதும் அவளிடம் இருந்து ஒதுங்கி போவான். சித்துவிடம் இவள் சிநேகமே வேண்டாம். நமக்கு ஆபத்து என்று எப்போதும் எச்சரிக்கை செய்து கொண்டு தான் இருப்பான் .

சித்துவும், தீப்தியும் எந்நேரமும் ஒன்றாக தான் சுற்றுவார்கள் . இருவருக்குள் எல்லா கருத்தும் ஒத்து போனது .ரெண்டு பேரும் சேர்ந்தால் நேரம் போவது  தெரியாமல் மணிகணக்கா பேசுவார்கள் . கல்லூரியில் அவர்களை பார்த்தாலே லவ்பர்ட்ஸ் என்று தான் சொல்லுவார்கள். அதை பற்றி எல்லாம் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சித்து கல்லூரிக்கு வரவில்லை  என்றால் அவளும் அன்று கட் அடித்து சென்று விடுவாள் .

இதை பார்க்க ஷ்ராவனுக்கு  கோபம்  வந்தது . ‘அவன் பின்னால் சுத்துவதை விடு ! அவன் ஒழுங்கா படிக்கணும்!  உன் வீட்டு மனிதர்களை பற்றி தெரிந்து கொண்டே இப்படி செய்யாத !’ என்று தீப்தியிடம் சண்டை போட்டான் .

“சரி! அப்ப உன் பின்னால் சுத்தறேன்! ஓகே வா. உண்மையை சொல்லு! உனக்கு எங்களை பார்த்து  பொறாமை தான ”  என்றவுடன் ஆளை விடு தாயே என்று ஷ்ரவன்  அலறி அடித்து ஓடினான் .

யார் என்ன சொன்னாலும், அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் சித்துவிடம் இயல்பாகவே பழகினாள்.

சித்து  லீவில் சென்னை வந்த போது தீப்தியும் அவனுடன் வந்து இறங்கினாள். தீப்திக்கு ஒரு அண்ணன் தான். அவளிடம் எப்பவும் கண்டிப்பா நடந்து கொள்வான் .

தீப்திக்கு, பிரவீன், அதிதி , ஜானகி,வெற்றி பார்த்தவுடன் மிகவும் பிடித்துவிட்டது. அதே போல சித்து வீட்டில் உள்ள அனைவர்க்கும் அவளை பிடித்து இருந்தது .

அதிதி, பிரவீன் பள்ளி படிப்பை படித்துக் கொண்டு இருந்தார்கள் . அதிதி அவளிடம் “உங்க அப்பா தாதா சொல்லறீங்க ,நீங்க  இத்தனை எளிமையா இருக்கீங்க! ஆச்சரியமா இருக்கு”

“எனக்கு அந்த வாழ்க்கையே பிடிக்கவில்லை. நான் படித்தது எல்லாம்  போர்டிங் ஸ்கூலில் தான் . லீவ் விட்டாலே எல்லா குழந்தையும் வீட்டுக்கு போகணும் அழுவாங்க . நான் உல்டாவா அங்கேயே இருக்கேன் அழுவேன் .வீட்டிற்கு வந்தாலும் பாட்டி, தாத்தா வீட்டுக்கு கிளம்பிடுவேன் . நான் 12th படிக்கும் போது அவங்களும் இறந்துட்டாங்கா .

எங்க அண்ணாவும், அப்பாவும் செய்யும் வேலையை  பார்த்து கோபம் தான் வரும். அவர்கள் கீழே வேலை செய்யும் ஆட்கள்   என்னை பார்த்தாலும் அலறுவாங்க “.

அதிதி “நீங்க கத்தியை பார்த்தாலே மயக்கம் போட்டு விழுவீங்க என்று அவங்களுக்கு தெரியாது போல!”

“என்னை கிண்டாலா செய்யற” என்று தீப்தி  துரத்தினாள்.

“இப்ப கூட நான் இங்க வரது அப்பாக்கு தெரியாது . அப்பாவை கூட சமாளிச்சிடலாம். எங்க அண்ணன் இருக்கானே! என்னை உண்டு இல்லை செய்திடுவான் . சமுதாயத்தில் இவங்களுக்கு சமமானவங்களோட பழகணுமாம். அப்ப ரௌடி,கேடி ,பிக்பாகெட், டான்  கூட தான் பழகனும்” என்று அழகா சிரித்தாள்.

சித்து குடும்பத்தில்  ஒருத்தியாகவே இருந்தாள்.

ஜானகிக்கும், வெற்றிக்கும் தீப்தியை பிடித்தாலும், அவள்  பின்புலம் அறிந்து அவர்கள் குடும்பத்திற்கு  கண்டிப்பா ஒத்து  வராது என்று  அவர்கள் ஆசையை உள்ளுக்குளே வைத்து பூட்டினர் .

வெற்றி மகனிடம்  மறைமுகமாக இது எல்லாம்  ஒத்துவராது என்று  தெரிவித்தார்.

எத்தனை ஆசை, கனவுகளோட, சிட்டு குருவி போல  சந்தோஷமா இருந்தா ..    எங்கே தவறு நடந்தது .கொஞ்சம் அவசரபடாமல் இருந்து இருக்கலாம் . அவன் கைகளில், நெற்றியில் உள்ள தழும்புகளை நீவிய படி அன்று எதுக்கு அப்படி மழை பெய்யணும்.

அந்த கோர விபத்து நடக்கணும். அவள் இந்நேரம் இருந்தால் எத்தனை நல்லா இருக்கும் . எல்லாருக்கும் இழப்பு தான ?

அவங்க அண்ணன் கோப படுவதில் என்ன நியாயம் .

இந்த தடவை ஷ்ரவன் வந்தா பேசி முடிக்கணும் . இந்த தடவை கண்டிப்பா வருவேன் சொல்லி இருக்கான். பார்க்கலாம் .எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்கும் ,கிடைக்கணும் நம்பினான்.

 பக்கத்தில் ஏதோ அசைவு கேட்டு திரும்பினான்  .

கண்மணி வலியால் முனங்கிக்  கொண்டு இருந்தாள்.

இவளுக்கு என்ன ஆச்சு !

“கண்மணி இங்க பாரு !” என்று அவள் கன்னத்தை தட்டி விழிக்க செய்தான். அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு இருந்தது  . கனிவாக “என்ன டா? என்ன ஆச்சு!”

அவன் கனிவு அவளை அசைத்தது. ஒன்றும் இல்லை என்று தலையாட்டினாள்.

இவனுக்கு இத்தனை கனிவா கூட பேச முடியுமா என்று முழித்தாள். எந்நேரமும் தந்தூரி அடுப்பு போல காயும் இவன், என்னிடமே இப்படி பேசறான் என்றால் இவன் முதல் பெண்டாட்டியிடம் எத்தனை பிரியமா இருந்து இருப்பான். எப்படி  அவங்களை  பிரிந்து இருக்கான் . அவளை மறக்க முடியாம தான் என் மீது கோபத்தை கட்டுராரோ என்று என்னும் போது மேலும்  அவள் கண்ணில் இருந்து நிற்காமல் கண்ணீர் .

“என்ன  ஆச்சு டா! என்னிடம் சொன்னா தான தெரியும் . உங்க மிஸ் திட்டுனாங்களா? இந்த செமஸ்டர் பரிட்சை ஒழுங்கா எழுதலையா ?  பெயிலாகிடுவையா? என் காசு 3500 போச்சா!கோவிந்தாவா? இனி அதை சம்பாதிக்க மூன்று மாதம் ஆகுமே!”

“சரி !அது வரை உங்களுக்கு  பழைய கஞ்சியே ஊத்தறேன் .எப்படி வசதி” .

“அச்சோ கஞ்சியா! நான் ஜுரம் வந்தா கூட சாப்பிட மாட்டேனே !” என்றதை கேட்டு இதழ் கடை ஓரத்தில் சிரிப்பு எட்டி பார்த்தது . வலியை மீறி சிரித்தாள்.

தலையணையில் ரெண்டு மொத்தி “நீங்க  பேசுவது உங்களுக்கே ஓவரா தெரியல. நான் உங்களை மாதிரி மக்கு இல்லை .என்னை எதுக்கு திட்ட போறாங்க! நான் யூனிவெர்சிட்டி டாப்பர். ரேங்க் ஹோல்டர் தெரிஞ்சுக்கோங்க! இந்த தடவையும் நான் தான் முதல் வருவேன் ” .

“சந்துல,  சைக்கில் காப்பில என்னை மக்கு சொல்லியாச்சு.நிஜமா ஒன்றும் இல்லையா?” என்ற போது சொல்லலாமா ,வேண்டாமா யோசித்தாள்.

சித்து விடாபிடியாக “என்ன சொல்லு ?”

“கொஞ்சம் எனக்கு அந்த வயிர் வலி மாத்திரையை எடுத்து கொடுக்கறீங்களா?”

“எதனால் வலி. எப்போதில் இருந்து வலி .டாக்டரை பார்த்தாயா?”

கண்மணி முறைத்து “ஐயா சாமி , எனக்கு மாத்திரையே வேண்டாம் .சும்மா  நொய் நொய் அனத்தாம பேசாமல் படுத்து தூங்குங்க. அது அப்படி தான் ..ரெண்டு நாளில் சரியா போய்டும்” .

“அது எப்படி சரியா போகும். நீ எப்போதில் இருந்து டாக்டர் ஆன ? நீயா எதாவது மாத்திரை போட்டால் எப்படி? எதனால் இப்படி. உங்க அப்பாவ மீசையை மட்டும் முறுக்கிட்டு அலைய சொல்லு . இதை எல்லாம் பார்க்க மாட்டானா?”

அச்சோ ராமா! எங்க அப்பா எங்க இருந்து வந்தாரு ! இவன் நம்மளை நிம்மதியா படுக்க  கூட விட மாடீங்கிரானே கண்மணி மனதில் புலம்பி,

கோபத்தில்  எழுந்து  அமர்ந்து “எங்க அப்பாவை பேசும் வேலை எல்லாம் வேண்டாம். இப்ப உங்களுக்கு என்ன தான் வேண்டும் . எனக்கு மாதத்தில்  மூன்று  நாட்கள் இப்படி தான் இருக்கும். எனக்கு இதுக்கு  மேல  விளக்கம்  கொடுக்க கஷ்டமா  இருக்கு  .வேண்டும் என்றால் கூகிலாறை  கேட்டுகோங்க”  .

“ஏன் டீ, உனக்கு வலி எதனால்  கேட்டா அதை கேட்டுக்க சொல்லற?”

“எனக்கு கால் வலி உயிர் போகுது! முடிந்தால் பிடித்துவிடுங்க !இல்லை என்றால் பேசாம இருங்க.”

உடனே பட்டென்று “அதற்கு வேற ஆளை பாரு !” அவள் முறைத்த  முறைப்பில்  அமைதியானான் .

கூகிளார் உதவியுடன் என்ன என்று கண்டும் பிடித்தான். பாவம் அவளே கஷ்ட படும் போது இப்படி இம்சை செய்து இருக்கேனே!

கண்மணி, கண் மூடி படுத்துக் கொண்டு இவன் தான் என்னிடம் அப்படி பேசுனதா? ஒரு வேலை கனவோ !கனவா தான் இருக்கும் .இவனாவது அப்படி பேசுவதாவது. கனவு கண்டினு ஆகுதா பார்க்கலாம் என்று கண்களை அழுந்த மூடிக் கொண்டாள்.

மெதுவாக சித்து மனதில் சாரல் மழை அடிக்க தொடங்கியது . இவளை எனக்கு பிடிக்காத போது எதுக்கு  இவளிடம்  இத்தனை உரிமை எடுத்துக் கொள்கிறேன்.

ரொம்ப நாள் கழித்து பார்ப்பதால் இருக்கும். வேற ஒன்றும் இல்லை என்று அவனுக்குள் சொல்லிக் கொண்டான். சித்து மனதில் தோன்றிய  மாற்றத்தை ஒத்துக்க முடியாமல் திணறினான்.

*****

அலுவகத்தில் அன்று வரிசையாக மீட்டிங் இருந்ததால் சித்தார்த் மிகவும் பிசியாக இருந்தான். அப்போது  ஒரே  எண்ணில் இருந்து பல தடவை அழைப்பு வந்தது .

மீட்டிங் முடிந்து எடுத்தவுடன் “என்ன புது மாப்பிள்ளை, என் தங்கச்சி இருந்த இடத்தில் இன்னொருத்தியா? உனக்கு எல்லாம் மனசாட்சி என்பதே கிடையாதா ? நாங்க என் தங்கையை பிரிந்து வேதனை படுவது உனக்கு எங்க புரிய போகுது .நீ தான் அவளை மறந்துட்டாயே!  இல்லை என்றால் புது பெண்டாட்டி மோகம் பிடித்து ஆட்டுமா?அதுவும் கிராமத்து பைங்கிளி! என் தங்கை உனக்கு என்ன துரோகம் டா செய்தா ! எப்ப போவா காத்துகிட்டு இருந்தாயா?”

சித்தார்த் கோபமாக “உனக்கு எல்லாம் மூளை என்பதே இல்லையா? கிளிபிள்ளை மாதிரி உண்மையை எத்தனை தடவை சொல்ல! என் பர்சனல் விஷயத்தில் தலையிட உனக்கு உரிமை இல்லை. இப்ப உனக்கு  என்ன வேண்டும்! எதுக்கு கூப்பிட்ட! எனக்கு தலைக்கு  மேல வேலை இருக்கு!”

“அன்றைக்கு அந்த அமைச்சர் வைத்து என் வாயை அடைத்துவிட்டாய்! அதே போல எப்போதும் நடக்காது ! எங்க அப்பா வேண்டும் என்றால் உன் நடிப்பில் ஏமாறலாம்! நான் இல்லை “.

சித்தார்த்  அழுத்தமாக “ஹே , உனக்கு ஒரு தடவை சொன்னால் புரியாது ! அது தான் அன்றே நிருபித்து விட்டேனே !அப்புறம் என்ன ?”

“நீ சாட்சியை எப்படி வேண்டும் என்றாலும் வளைத்து  இருக்கலாம். இன்று நான் அதிக பணம் கொடுத்தால் அவங்க என் பக்கம். இந்த விஷயத்தில்  உன்னை விட போறது இல்லை ” .

“என்ன வேண்டும் என்றாலும் செய்துக்கோ! எனக்கு வேற வேலை இருக்கு .சும்மா கூப்பிட்டு தொந்தரவு செய்யாத!” என்று போனை கட் செய்தான் .

மறுபடியும்  போன் செய்து இம்சை செய்வான் என்று சுவிட்ச் ஆப் செய்துவிட்டான் .

தேவ் அறைக்குள் நுழையும் போது சித்து தலையை பிடித்து அமர்ந்து கொண்டு இருந்தான் .”சித்தார்த், தலை வலியா? என்ன ஆச்சு !பல தடவை முயற்சி செய்தேன் .போன் சுவிட்ச் ஆப் வந்தது!”

“அவன், அந்த ராம்கி  கூப்பிட்டு  இருந்தான்” .

“அவனா? தீப்தி அண்ணனா? அவனுக்கு என்ன வேண்டுமாம் ? தைரியமா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு சொல்லிட வேண்டியது தான?”

“அதை தெரிந்து தான் அழைத்து இருக்கான்” என்று பேசின அனைத்தையும் கூறினான் .

சித்து, “நீ கண்மணி சிஸ்டரிடம் ஒழுங்கா சொல்லிவிடு . உனக்கு எத்தனை தடவை  சொல்வது. இதை விளையட்டாய் விடாத? அவங்களுக்கா தெரிந்தால் எதாவது பிரச்சினை ஆகிட போகுது. கல்யாணம் ஆகி இத்தனை  நாளில் நீ கண்டிப்பா சொல்லி இருக்கணும். இனியும் சரி வராது” .

சித்து மனதில் ஏதோ யோசித்த படி அமர்ந்து விட்டான் .

சித்து அவன் பழைய வாழ்க்கை பற்றி சொன்னால் என்ன நடக்கும் . கண்மணி ஒத்துக் கொள்வாளா ?

ஷ்யாமிடம் புலம்பியது போல் தேவிடமும்  “வெட்கத்தை விட்டு சொல்லறேன் , இப்ப எல்லாம் காலம் முழுதும் சந்தோஷமா என் கண்மணியுடன்  வாழனும்  ஆசை டா . அவளை நான் விரும்பறேன். என் மனம் முழுதும்  கண்மணி  தான் இருக்கா! அவ அருகாமைக்காக  ஏங்கறேன் ! இந்த  மாற்றம் எப்போது இருந்து தெரியவில்லை , என்னை அறியாமலே என் மனதில் புகுந்துவிட்டாள். அவ கோபித்துக் கொண்டு போனா என்னால தாங்க முடியாது.. நினைக்கவே பயமா இருக்கு” என்று சின்ன  பையன் போல சித்தார்த் புலம்பினான்.

“ஆஹா! the cat is out of the bag. உன்  மனசை பற்றி நீ அறியவே , புரிந்து கொள்ளவே உனக்கு இத்தனை நாள் ஆகி இருக்கு ! சிஸ்டர் கண்டிப்பா புரிந்து கொள்வார்கள்” என்று தேற்றினான்.

கண்மணி, கண்ணன் பிறந்த நாளைக்கு ஷ்யாமுடன்  ஊருக்கு கிளம்புவதாக இருந்தது . அன்று காலை  சித்து  நண்பர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்தனர் . சித்து , விருந்துக்கு ஏற்பாடு செய்ய சொல்லி  இருந்தான். கண்மணி எல்லாரையும் வாய் நிறையா அண்ணா அழைத்தாள். அதிதியும், ஆனந்தும் கண்களாலே  பேசிக்  கொண்டு இருந்தனர். அதை கண்மணி கண்டு கொண்டு, கதை  அப்படி போகுதா?கவனிக்கிறேன்!

உணவு உண்ட பிறகு அனைவரும் சித்தார்த்துடன் அலுவலகத்திற்கு கிளம்பினார்கள். சித்தார்த் கார் ஏறும் போது “ஒரு நிமிஷம் டா !   முக்கியமான பைலை மறந்துவிட்டேன்” என்ற போது அனைவரும் கோரசாக ஒ ஒ ஒ ஒ ஒ போட்டனர் .

“டேய் சும்மா இருங்க  டா . நம்ம ஜாக்கி பயந்து அலறுது” என்று அவன் செல்ல நாயை காட்டினான்.

“சரி, மெதுவா எடுத்துக் கொண்டு வா! வாங்கிறதை வாங்கிட்டு, கொடுப்பதை கொடுத்து ,எடுப்பதை எடுத்துக் கொண்டு வா! கொஞ்சம் சீக்கிரம் வந்தா தேவல”

சித்தார்த் கடுப்பாக “டேய், நிலைமை புரியாம சும்மா எரிச்சலை கிளப்பாதீங்க! அந்த பைல் இல்லாம நாம அங்க போவது  வேளைக்கு ஆகாது!” அப்பாவியாக “நேற்று விடிய விடிய கஷ்டப்பட்டு  தயார் செய்தது”

சும்மாவே அவனை கிண்டல் செய்பவர்கள், சித்து இப்படி சொன்னா சும்மா விடுவார்களா ?

கிருஷ்ணன் “இருக்கும் ,இருக்கும்” என்று எல்லா பக்கமும் தலை ஆட்டினான் .

“ஒ ஒ !அப்படியா சார். விடிய ,விடியவா? பார்க்க பூனை மாதிரி இருந்து கொண்டு செய்யும் வேலை …..சரி ,சரி முறைக்காத  அப்படியா தான் இருக்கும்  ” என்று ஆனந்த் வாரினான் .

அவங்க கிண்டலுக்கு பயந்தே ,போன் செய்து கண்மணியை டேபிள் மீது இருக்கும் பைலை எடுத்து வர சொன்னான் .

சித்து அழைத்தவுடன் கண்மணி, புதுசா என்ன பழக்கம் .எதா இருந்தாலும் மேல வந்து எடுத்திட்டு போக வேண்டியது தான! அது  என்ன  கீழே  இருந்து அழைத்து பேசுவது.

கண்மணி சிரித்துக் கொண்டு, இரு டா மகனே உனக்கு இருக்கு !

“என்ன சித் அத்தான், பைலை எடுத்து வர சொல்லும் சாக்கில் ரொமான்ஸ்  தேவையா, தினமும் அதை மறந்து  விட்டேன், இதை வைத்து விட்டேன்  என்று உங்களுக்கு ஒரு  விளையாட்டு! பெரிய காதல் மன்னன் நினைப்பு” என்று குரல் கொடுத்த படி வெளியே வந்தாள்.

அதை கேட்டு நண்பர்கள் ‘நடத்து மகனே! நாங்க எதற்கும் குறுக்க நிற்க போவது இல்லை! சொன்னா முறைக்கிற’ என்று கிண்டல் செய்தனர் .

சித்து மனதில் இவ நல்லா தான இருந்தா! என்ன ஆச்சு என்று குழம்பினான்  .

வேண்டும் என்றே நண்பர்களை பார்த்து பிரேக் அடித்து  “ஐயோ சாரி அண்ணாஸ்! நீங்க இருக்கீங்க என்று தெரியாம அப்படி பேசிட்டேன்!”

சித்துவிடம் “நீங்களாவது சொல்லி இருக்க வேண்டாம்! சுத்த மோசம் சித்” என்று கண் சிமிட்டினாள்.

கண்டிப்பா இவளுக்கு நட் கழண்டு விட்டது. கன்பர்ம் என்று அவளை முறைத்துக் கொண்டு இருந்தான் 

“எப்படியோ எங்க தங்கச்சி  நல்லா இருந்தா சரி” .

“ஒன்றுக்கு மூன்று அண்ணா இருக்கும் போது இந்த தங்கச்சிக்கு என்ன குறை வர போகுது !”

“தங்கச்சி! ஐஸ் பார் வைத்தால் தாங்கும்! நீ ஐஸ் மலையே எங்க தலையில் வைத்தால் தாங்குமா? சொல்லு !”

சித்து கடுப்பில் “டேய் உங்க பாசமலர் படத்தை அப்புறம் ஓட்டுங்க! இப்ப மணி ஆச்சு” என்றான் .

மதியம் மூன்று மணி போல ஷ்யாம் வந்தவுடன் ஜானகியிடம் சொல்லிக் கொண்டு ஊருக்கு கிளம்பினாள். சித்தார்த்திடம் சொன்னாலும் ஒன்று தான், சொல்லாமல் கிளம்பினாலும் ஒன்று தான் . நம்மளை எதற்கு தேட போறான் . பத்து நாள்  வீட்டில் இல்லை .எங்க? என்ன? என்றாவது கேட்டு இருப்பானா ?

நான் தான் இவரை எந்நேரமும்  நினைத்துக்  கொண்டு இருக்கேன் !எப்படியோ போகட்டும். கண்ணுக்கு பிறந்தநாள் பரிசாக அழகிய கைகடிகாரம்  வாங்கினாள்.

முதல் முதலா கடைக்கு வரோம். சித்துக்கும் ஒன்றை வாங்கலாம் என்று விலை உயர்ந்த  ரோலெக்ஸ் கை கடிகாரத்தை ஆசையாக வாங்கினாள். இன்னும் பத்து நாளில் வரும் அவன் பிறந்த நாள் போது கொடுக்கலாம் என்று எண்ணினாள். நான் கொடுத்தவுடன் ஆசையாக  போட்டுக் கொள்வது போல !

வண்டியில் கண்மணி ஷ்யாமிடம் “ஷ்யாம் நான் சொன்னது என்ன ஆச்சு !அவரை பற்றி தெரிந்ததா?”

கொஞ்சம் பயந்து கொண்டே “நாம கேள்விபட்டது போல அவர் முதல் கல்யாணம் எல்லாம் உண்மை இல்லை தான? கண்டிப்பா அப்படி இல்லை என்று  உறுதியா தோன்றினாலும், சில சமயம் சித்தார்த் பழகுவதை, அவர் கோபத்தை  பார்த்தால், அப்படி இருக்குமோ என்று கூட தோணுது !”

“தேனு, உங்களுக்கு கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆச்சு! என்னை கேட்பதிற்கு பதில் அவனிடமே கேட்டு  இருக்கலாமே “

“என்னால முடியல அத்தான் ! ஒருவேளை அவர்  ஆமாம் என்று விட்டால் அதற்கு பிறகு என்னால் யோசிக்க கூட முடியவில்லை .எனக்கு பயமாகவே இருக்கு “

“இதை அவன் கேட்டால் எப்படி வருத்தப்படுவான் யோசித்தாயா ? அவன் மீது இன்னுமா உனக்கு நம்பிக்கை வரவில்லை” .

“நம்பிக்கை வேற, உண்மை வேற “

“ஒரே வீட்டில் இருக்கீங்க. கணவரா வேண்டாம் , ஒரு  நண்பனா  அவனை பற்றி  தெரிந்து வைத்து இருக்கலாமே”

இறங்கிய குரலில் “கேட்டு இருக்கலாம் , தெரிந்து வைத்து இருக்கலாம், இருக்கணும்” என்று அவள் தவறை உணர்ந்தாள்.

“அதை எல்லாம் விடு தேனு ! உங்களுக்கும் கல்யாணம் ஆகி ஆறு மாதம் ஆகிடுச்சு. உண்மையை சொல்லு! உங்க கல்யாணத்திற்கு முன் அவன் வாழ்க்கை எப்படி இருந்தாலும் இப்ப அவனை நீ முழுமனதாக  ஏற்றுக் கொள்வாயா ?”

“எனக்கு அவரை பிடிக்கும் ………. !”

‘சொல்லு ?’

“எனக்கு  சொல்ல தெரியலையே!”

“அவருக்கு கல்யாணம் ஆகி இருந்தால் …”

“அப்படி இல்லை தான அத்தான். என்னால் அடுத்தவங்க உபயோகித்த புக் கூட யூஸ் செய்ய பிடிக்காது என்று உனக்கு தெரியும் தானே! அப்படி இருக்க வாழ்க்கை ……..”

“உண்மை அதுவா இருந்தால் என்ன செய்வதா உத்தேசம். அவனை விட்டு பிரிந்து சென்றுவிடுவாயா? பிரிந்து  வேற கல்யாணம் ?”

“இல்லை. அது கண்டிப்பா நடக்காது. நீ விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாத அத்தான் .என்னால் தாங்கிக்க முடியாது !ப்ளீஸ் ! அவர் இல்லாத  வாழ்க்கையை  என்னால் யோசிக்க, நினைத்து கூட பார்க்க  முடியவில்லை.”

இனி கண்மணி வாழ்கையை பற்றி கவலை பட   தேவை  இல்லை என்று ஷ்யாம்  நிம்மதியாக  உணர்ந்தான். உண்மையை சித்துவே சொல்லட்டும். அது தான் சரி .எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் சரியா போய்டும் எண்ணிக் கொண்டான்.

முதலில் சித்துக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று  கண்மணி சொன்னவுடன் அவன்  மீது கோபமாக இருந்த ஷ்யாம் உண்மை அறிந்து, சித்துவை விட நல்ல துணை கண்மணிக்கு அமையாது என்று சந்தோஷமாக இருந்தான்.

“அத்தான் ! உண்மை சொல்லு! நான் நினைப்பது போல….”

“நீ நினைப்பது போல எல்லாம் இல்லை கண்மணி! உனக்கு விவரமா சொன்னால் தான் புரியும்” என்னும் போது கண்மணி செல் இசைத்தது

சித்தார்த் “எங்க இருக்க கண்மணி!”

“இருங்க ஒரு நிமிஷம்”

மழை எதாவது வருதோ  என்று கண்ணாடி வெளியே தலை  நீட்டி பார்த்தாள். எப்போதும் இவள் தான் அவனை அழைப்பாள். அப்படி அழைத்தாலும் சிடு சிடு கோபமாக தான் பேசுவான். இன்று அவனே அழைத்ததும் இல்லாமல் ஒழுங்கா அவள் பெயரை சொல்லி எங்க இருக்க கேட்டால் ….

அவள் செயலை பார்த்து ஷ்யாமிற்கு சிரிப்பு வந்தது .

போனில் சித்து ” பட்டிக்காடு! கேள்வி கேட்டா பதில் சொல்லணும் தெரியாது. இதுக்கே இப்படி முழித்தால் பரிட்சையில் எப்படி  முழிப்ப” என்று திட்டு விட்டு “இரவு  லீலா பலசிள் நண்பர்களுக்கு சின்ன விருந்து கொடுக்க  ஏற்பாடு செய்து இருக்கேன்! கிளம்பி ரெடியா  இரு ! நான் வந்து அழைத்து செல்கிறேன்!”

அவளை மேலும் வம்பிற்கு இழுக்க ஆசைப்பட்டு “நம்ம கல்யாணத்திற்கு எடுத்த  நாற்பது ஆயிரம் ரூபாய்  பட்டு புடவை, உங்க ஆத்தா போட்ட இருவது பவுன் காசுமாலை,  நகைகளை அடுக்கி ஊர்வலத்துக்கு கிளம்புவது போல கிளம்பாதா? நாம போவது ஸ்டார் ஹோட்டால்! புரிந்ததா?”

அவன் கேலி ,கிண்டல் எல்லாம் அவள்  மனதில் பதியவில்லை .

குரலே எழும்பாமல் “இன்று இரவா? பார்டியா, நானுமா?”

எப்போதும் ஏட்டிக்கு  போட்டியா பேசும் கண்மணி தான? பட்டிக்காடு என்றாலே சீறுவா ? அதிலும் இப்படி கிண்டல் செய்து இருக்கேன். நான் எதோ மாற்றி சொல்லிவிட்டேனா? பார்ட்டி என்று தான சொன்னேன்.

இந்த பட்டிக்காடு என்னுடன் தனியா ஹோட்டலுக்கு வர பயப்படுறாளா?அப்படியே அறையை புக் செய்து தள்ளிக்கிட்டு போனா என்ன செய்வா? சே சே!  என் பெண்டாட்டிய எதுக்கு தள்ளிக்கிட்டு, கூட்டிகிட்டு போனா? என்று எண்ணி சிரித்துக் கொண்டான் .

‘சரி’ சொல்வதை தவிர அவளுக்கு வேற வழி இல்லை .

வண்டியில் ஷ்யாம் “என்ன ஆச்சு. உன்னுடைய ஹிட்லர் என்ன சொல்லறாரு. அவருடன் பேசும் போது வெறும் காற்று தான் வருது” .

“ஷ்யாம், வண்டியை  வீட்டுக்கு திருப்பு!”

“என்ன ஆச்சு கண்மணி!”

“அவர் எதோ விருந்து கொடுக்கணும் சொல்லறாரு! நான் கண்டிப்பா கலந்து கொள்ளனுமாம்”

“உன்னிடம் முன்பே சொல்லி இருந்தாரா?”

ஏனோ அந்த நிமிடம் அவளால் சித்தார்த்தை விட்டுக் கொடுக்க முடியவில்லை .”போன வாரமே சொன்னாங்க!நான் தான் மறந்துட்டேன்.”

“நல்ல வேலை ஊர் போய் வண்டியை திருப்பு சொல்லாமல் விட்டாயே!”

கண்மணி மனதில் முக்கியமான பார்ட்டி என்றால் முதலிலே சொல்ல வேண்டாமா! இவர் என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கார். நீயே போய்கோ என்று சொல்லலாம் நினைத்தாள். கல்யாணம் ஆகி இத்தனை மாதத்தில் சித்தார்த்தின் முதல் கோரிக்கை. அதை தட்டி  கழிக்க அவளுக்கு மனம் இல்லை .

அப்போது  தான் அவன் சொன்னது எல்லாம் உரைத்தது. பட்டிக்காடு சொல்லாத சொன்னா அதையே சொல்லறான். கல்யாண புடவை கட்டி, காசு மாலை போட வேண்டாமா?

தினமும் அப்படி தான் வளைய வரேனா? இவன் இதுவரை என்னை  எத்தனை இடத்திற்கு அழைத்து சென்று இருக்கிறான். இவன் சொல்வது போல என்று கிளம்பி இருக்கேன்.

எத்தனை கொழுப்பு இருக்கணும். தினமும் பத்து கிலோமீட்டர் ஓட விடனும். சும்மா இல்லை. எங்க தோட்ட நாயை விட்டு துரத்தனும் . அப்ப தான் சரி வரும். இவன் சொன்னதுகாகவே அப்படி கிளம்பி போகணும் என்று கற்பனை  செய்து சிரித்துக் கொண்டாள்.

 செல் போனில் தொடர்ந்து  கோபமாக  திட்டி மெசேஜ் அனுப்பினாள்.

சித்தார்த் மீது கோபம் இருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் பொறுமையாக வளம் வந்தாள்.

ஹோட்டலுக்குள்  நுழைந்தவுடன் சித்து நண்பர்களை கண்டு முன்னே சென்றுவிட்டான் .

கண்மணி மனதில், கூட ஒருத்தி வரா! அவளை அழைத்து போகணும் இல்லாமல் இப்படி கழட்டி  விட்டா என்ன அர்த்தம் .

“வாவ்! பிரிட்டி பிரின்சஸ்! நீ எங்க இங்க! ரொம்ப அழகா இருக்க !looking beautiful ” என்று அவள் கல்லூரி சீனியர் மாணவன் கண்மணி அழகை வியந்து பாராட்டினான்.

இந்த பட்டிக்காடு எங்க போனா! கூடவே வர வேண்டியது தான !எங்க வேடிக்கை பார்த்திட்டு நிற்கிறா என்று சித்து திரும்பும் போது யாரோ ஒருவன் கண்மணியுடன் வழிந்து கொண்டு இருந்தான்.

அவன் சொன்னதைக் கேட்ட  சித்துக்கு இவனுக்கு ரொம்ப தான் கொழுப்பு. நான் இருக்கும் போதே இப்படி வழியறானே! என் பெண்டாட்டியை இவன் எப்படி அப்படி சொல்லலாம் என்று கோபம் தலைக்கு ஏறியது. அதை அடக்கி  உடனே அவன் கால்கள் அவளிடம் சென்றது!

“என்ன  தேனு, ஏதாவது வேண்டுமா? இவர் யாரு ?”

அவன் தேனு என்று கூப்பிட்டதை கேட்டு சந்தோசம் அடைந்தாள்.

கண்மணி உடனே “இவர் என்னுடைய கணவர், சீனியர்”.

“என்ன, உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா! நிஜமாகவா”

“அதற்கு எதுக்கு உங்களுக்கு அதிர்ச்சி மிஸ்டர்! தப்பு ஒன்றும் இல்லையே !  உங்க கல்லூரி வாசலில் பிரமாண்டமான போஸ்டர் வைக்க சொல்லி இருந்தேனே! நீங்க பார்க்கவில்லையா ?”என்று சித்து  நக்கல் செய்தான் .

“இல்லை சார், சும்மா தான் கேட்டேன்” என்று நழுவினான் .

உரிமையாக சித்து தோளில் தலை சாயித்த படி “தேங்க்ஸ். இத்தனை நாளா என் பின்னால் சுற்றிக் கொண்டு இருந்தான். மடையனுக்கு சொன்னாலும் புரியல . இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டான் நினைக்கிறேன்” .

“முதலிலே சொல்வதற்கு என்ன?” என்று கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்பினான் .

கண்மணி ஒன்றும் பேசாமல் அமைதியாக  நகர்ந்துவிட்டாள்.

பார்ட்டி முடிந்து வீட்டுக்கு சென்றவுடன் அவர்கள் அறையில் “நீங்க என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கீங்க! பார்ட்டி என்றால் முன்பே சொல்ல வேண்டாமா?”

“ஏன் நான் ஒரு மணி நேரம் முன்பு சொன்னேனே! நீ அலங்காரம் செய்து கொண்டு வர ஒரு மணி நேரம் போதவில்லை போல! அப்படி தான  பட்டிக்காடு!”

அவனை முறைத்துக் கொண்டு “எப்படியோ போ என்று அப்படியே போய் இருக்கணும் .உங்களுக்காக அடித்து பிடித்து வந்தேன் பாரு என்னை சொல்லணும்” .

“நான்  அழைக்கும் போது வீட்டில் தான இருந்த? ஷாபிங் போய் இருந்தாயா? உங்களுக்கு எல்லாம் இதை விட்டா வேற என்ன தெரியும்” .

“ஆமாம்  சார் .கொஞ்சம் செங்கல்பட்டு வரைக்கும் ஷாபிங் போய் இருந்தேன். அப்படியே விட்டு இருந்தா எங்க வீட்டுக்கு மேலும் நாலு மணி நேரத்தில் போய் சேர்ந்து இருப்பேன்.”

“அங்க எதாவது மால் திறந்து இருக்காங்களா என்ன?”

“வர கோபத்தில் எதாவது திட்டிட போறேன் .பேசாம இருங்க . நாளைக்கு கண்ணுக்கு பிறந்தநாள் என்று எத்தனை ஆசையாக கிளம்பினேன் தெரியுமா? இங்க வந்ததில் இருந்து முதல் முதலா இப்ப தான் ஊருக்கு கிளம்பறேன்! அது உங்களுக்கு பொறுக்கல?” என்று வருந்தினாள். அவள் வருத்தம் அவனையும்  தாக்கியது .

அவன் மீது தப்பு வைத்துக் கொண்டு என்ன பேச என்று அமைதியாக அவன் வேலையை தொடர்ந்தான் .

“இங்க ஒருத்தி தொண்டை  தண்ணீர் வற்ற கத்திக் கொண்டு இருக்கேன். பதில் சொன்னா தான ஆகும்” .

“அடுத்த வருடம் கூட பிறந்த நாள் வரும். அப்ப போய்கோ” என்ற போது கையில் இருக்கும் தலையணையை வைத்து நன்றாக மொத்தினாள்.

இதை எதிர் பார்க்காத சித்தார்த் “அடி ராட்ஷசி, எதுக்கு டீ இப்படி அடிக்கிற ! ஐயோ ,அம்மா! என்னை கொடுமை செய்யறாளே! காப்பாத்துங்க”

“மூச். சத்தம் போடாதீங்க ! எதுக்கு இப்படி ஊரை கூட்டி என் மானத்தை வாங்கறீங்க”

இப்படி பேசி, சண்டை போட சித்துக்கு  சுவாரசியமாக இருந்தது .முதலில் எல்லாம் வீட்டில் அதிதி ,ப்ரவீனுடன்  எப்போதும் இப்படி தான் சண்டை போடுவேன் .இப்ப எல்லாம் தனியா இருப்பது போல உணர்வது இதனால் தானா?

சித்து அமைதியாக  இருப்பதை பார்த்து அச்சோ மறுபடியும் வேதாளாம்  முருங்கை மரம் ஏறிட்டானா! என்னை திட்ட ஆரம்பிச்சிடுவானே!

‘ஸ்டார்ட் தி மியூசிக்’ என்று சொல்லி காதில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு கண்ணை மூடினாள்.

சின்ன  குழந்தை  போல அவள் செய்வதை பார்த்து  சித்துக்கு சிரிப்பு வந்தது. கண்மணியிடம்   மேலும்    சிறிது    நேரம்   சீண்டி   விளையாடினான்   .கண்மணி  மனதில்  இவருக்கு  என்ன  ஆச்சு! நல்லா தான   இருந்தாரு என்று யோசிக்க தொடங்கினாள். மனதில் இவர் இப்படியே சிரித்து பேசினா எத்தனை நல்லா இருக்கும் என்று எண்ணிக் கொண்டாள்.

Advertisement