Advertisement

20.1:

கிருஷ்ணன் ஷ்ரவனை அழைத்து வர , அமெரிக்கா செல்ல எண்ணி அணைத்து ஏற்பாடும் செய்தான் .அவனுக்கு விசா வழங்க மறுத்தனர் . கண்மணி  ஐடியா படி ஷ்ரவன்  அன்னை மேகலாவை தொடர்பு கொண்டு அவளை நேரிலே போய் இருவரும் சந்தித்தனர் .

அவர்கள் இருப்பது தேனி பக்கம் ஏதோ  கிராமம் . அவன் அன்னை கிராமத்து மனுஷி .

இந்த குக் கிராமத்தில் இருப்பவங்க  எப்படி டா ஷ்ரவன் பேரு வெச்சாங்க ! என்று தேவிற்கு பெரிய சந்தேகம் .

மேகலா , ஷ்ரவன் நண்பன்  என்று இருவரிடமும்  மிகவும் பாசமாக பழகினாள். “எங்க குடும்பத்துக்காக தான் என்  மகன் இத்தனை கஷ்டப்படறான் .ஓடா  தேயறான் …

மூன்று  வருஷம் ஆச்சு .ஊர் பக்கமே வரல ! இப்ப  தான் பெண் பார்த்து இருக்கோம்.அதுவும் இப்ப உடனே வர முடியாதாம்.இங்க  எதோ பிரச்சினை இருக்கு சொல்லறான் .அது முடிந்தவுடன் வரானாம்” . இதைக் கேட்ட தேவும் ,கிருஷ்ணனும் பார்வையாலே செய்தியை பரிமாறிக் கொண்டார்கள்.

“ஷ்ரவன் யாரு பேரு வெச்சா?” என்று தேவ் அவன் சந்தேகத்தை கேட்டவுடன் “என் மகன் பேரு சரவணன் தான் வைத்தோம் .அது அவன் ராசிக்கு சரி இல்லை என்று நீங்க சொல்லும் பேரு  ‘ஷ்ரவன்’  மாற்றிக் கொண்டான் .எங்களுக்கு எப்போதும் சரவணன் தான்” .

தேவும், கிருஷ்ணனும் ,மேகலாவிடம் நடந்த அணைத்து உண்மையும் கூறினர். மேகலாவிற்கு அவள் மகனா இப்படி செய்தது என்று அதிர்ச்சியே ! நம்ப முடியாமல் உறைந்தாள்.

கண்மணி மூலம் ஷ்ரவன், தீப்தி நெருக்கமாக இருக்கும் பல புகை படம் அவர்களுக்கு கிடைத்தது .

ஆதாரமாக அந்த  புகை படங்களை காட்டினர். என் மருமக சினிமா நடிகை போல இம்புட்டு அழகா இருக்குது . அதுக்கு வாழ கொடுத்து வைக்கவில்லை ..யாரை சொல்லி நோக ?

நந்துவை பார்த்தவுடன் அதில் ஷ்ரவன் ஜாடையை கண்டு  அவர்கள் சொல்லாமலே “என் பேரனா?” நந்து புகைப் படத்தை ஆசையாக தடவி , “இந்த கிறுக்கு பயலுக்கு ஏன் இப்படி புத்தி போச்சே” என்று புலம்ப ஆரம்பித்தாள்.

ஷ்ரவனை இந்தியா வரவழைக்க உடனே திட்டம் தீட்டினர் .

“என் மகன்  ஏதோ வயது கோளாறில் தப்பு செய்து இருக்கலாம், ஆனால் கண்டிப்பா  துரோகம் செய்து இருக்க மாட்டான், நான் அப்படி வளர்க்கவில்லை” என்று அந்த தாய் உள்ளம் மகனுக்காக வாதாடியது “என் மகனுக்கு அடுத்தவர் பணம் மீது ஆசை கிடையாது இப்போதே  நிருபித்து காட்டறேன்”  என்று சவால் விட்டாள்.

யாரோ மூன்றாம் மனிதன் பேச்சை கேட்டு மகனை சந்தேக படரோமே என்று கூட  வருந்தினாள்.

ஷ்ரவனுக்கு அழைத்து , அவனுக்கு பார்த்து இருக்கும் பெண்ணின்  அப்பாக்கு உடம்பு முடியவில்லை என்றும்,  கல்யாணம் முடிந்தவுடனே பல கோடி மதிப்புள்ள சொத்தை மகள் பெயரில் மாற்றிவிடுவராம். இந்த பெண் இல்லை என்றால் வேற பெண்ணை பார்க்கலாமா? அவங்களுக்கு அவசரமா  திருமணம் முடிக்கனுமாம் . உனக்கு தான் இப்போதைக்கு வர முடியாது சொல்லறியே !”

ஷ்ரவன் பதறி , “அம்மா! அப்படி எங்க சொன்னேன். நிஜமா பல கோடி சொத்தா? அன்று கூட நீங்க  அப்படி சொல்லவில்லையே, நல்லா விசாரித்து விட்டீர்கள் தான?”

அவன் அன்னை ஒரு போதும் அவனுக்கு வெளியே பெண் பார்க்க ஒத்துக் கொள்ள மாட்டாள் என்று உறுதியாக நம்பி “நம்ம ஜாதியில் அப்படி  யாரு அம்மா?”

இள வயதில் முடிவு எடுக்க தெரியாமல், தீப்தியை  நழுவ விட்டது போல, எங்கே இப்ப வந்த சந்தர்ப்பமும் நழுவிடுமோ பயந்து “அம்மா, சரி என்று  உடனே முடிவை சொல்லிடு. ஏற்கனவே கையில் விழுந்த சீதேவியை, காலில் போட்டு தட்டி விட்டேன் ! இனி மறுபடியும் முட்டாள் தனம் செய்ய மாட்டேன்! என் தேவைகளுக்கு பணம் சம்பாதிப்பது மிகவும் கஷ்டமான விஷயம்!”

அவர்கள் பேச்சை கேட்ட கிருஷ்ணன் மாதம் ஒருத்தியுடன் குடும்பம் நடத்த எப்படி சம்பாதித்து கட்டுபடி ஆகும், அச்சு அடிச்சா தான் உண்டு  என்று முணுமுணுத்தான்.

“அவங்க எங்க இருக்காங்க? பெண் எப்படி ? உடனே கல்யாணம் என்றாலும் சரி தான் .நீ  எதுவும் வேண்டாம் சொல்லவில்லை தான! எனக்கும் உங்களை பார்க்கணும் போல இருக்கு .நான் அடுத்த வாரமே கிளம்பி வரேன். அவங்களிடம் சொல்லி ஏற்பாடு செய்யுங்கள். நானும் எத்தனை நாளைக்கு இப்படி தனி ஆளா இருந்து  கஷ்டப்படுவது”.

மேகலா “பணத்தை பார்க்கவில்லை! குணமா இருந்தால் போதும் சரவணா!”

பல்லை கடித்து “ஷ்ரவன் சொல்லு! குணத்தை வைத்து ஊறுகாய் கூட போட முடியாது ! இங்க எந்நேரமும் வேலை  என்று ஓடினால் தான் ஓரளவுக்கு வசதியா வாழ முடியுது ! என் தேவைக்கு பத்த மாடீங்குது .எத்தனை நாளைக்கு கஷ்ட பட !”

“ரொம்ப மாறிவிட்டாய்! பெண், நம்ம கருப்பு சாமி அண்ணன் பேத்தி தான். அவிங்க துபாயில இருந்து இப்ப தான் இந்தியா பக்கம் வந்து இருக்காங்க போல? பெண்ணு உனக்கு ஏற்ற ஜோடி” என்று மேகலா  மகனிடம் பொய் சொன்னாள்.

பல தடவை மகன் சொத்தை பற்ற கேட்டதை நினைத்து  அவளுக்கே ஒரு மாதிரியாக இருந்தது .

“நான்  உடனே பணம் ஐந்து லட்சம் அனுப்பறேன் ! இன்னும் வேண்டும் என்றால் சொல்லுங்க . வீட்டுக்கு தேவையானதை எல்லாம் வாங்கி போடு! கஞ்ச தனம் செய்யாதீங்க. நம்மளை வசதி இல்லாதவங்க, இல்லாத பரதேசி! நினைத்து ஓடிட போறாங்க  !ரங்கசாமியிடம் சொல்லி மாடியில் எனக்கு ஒரு அறை கட்ட சொல்லு .எல்லா வசதியும் இருக்கும் படி செய்” .

இதை கேட்க மேகலாவிற்கு கஷ்டமா இருந்தது .போன மாதம் , அவன் தந்தைக்கு கண் ஆபரேஷன் செய்யணும் பணம் கேட்ட போது இப்ப இந்த கிழத்துக்கு கண் தெரிந்து என்ன ஆக போகுது, பணம் எல்லாம் இல்லை ,அப்புறமா பார்க்கலாம்  சொன்னவன் இப்போது பெண் வீட்டார் முன்பு அவன் கௌரவத்தை நிலை நாட்ட  சர்வ சாதாரணமா ஐந்து லட்சம் அனுப்பறேன் சொல்லறான் என்று  தாய் மனம் வருந்தியது .

மேகலா முகத்தை கண்டு கிருஷ்ணன் “கவலை படாதீங்க அம்மா ! உங்க மகன் போல நாங்க இருக்கோம் !”

அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை இருவரும் மேகலவுடன் சேர்ந்து திட்டம் தீட்டினர்.

இருக்கும் நாட்களில் எதுவும் சொதப்பாமல் பக்கவா செய்து முடித்தனர் .

சித்து, நாளை மறுநாள்  மும்பை கோர்டில் கண்டிப்பா ஆஜர் ஆகணும் என்று அதை நினைத்தே கவலை கொண்டு இருந்தான் . பேசாமல் நந்து என் மகன் தான் அழைத்து வந்து விடலாம் . அந்த டெஸ்ட் எடுத்து என் பெயர் கெட்டு அசிங்கபடுவதை விட இது  மேல்! ஏற்கனவே ராம்கி , நந்து என் மகன் என்று  தான சொல்லிக் கொண்டு இருக்கான். அது தான உண்மை.

பத்திரிகைக்கு தெரிந்தால் என் நிலை . வெளியே தலை காட்ட முடியுமா? தொழில் வட்டாரத்தில் பெயர் கேட்டால் ?

அவன் என்னை என்ன செய்யணுமோ செய்யட்டும். தீப்தி கஷ்டப்பட்டதை பார்த்த போது யாருக்கு தான் கோபம் வராது ! எனக்கே அன்று  ஷ்ரவனை வெட்டி தள்ளனும் தான ஆத்திரம் வந்தது!

நான் நந்துவை அழைத்து வந்த பிறகு  கண்மணி என்னுடன் ஒரே  வீட்டில் இருப்பாளா? இருக்க சம்மதிப்பாளா ?

அவளை எப்படி பிரிய ?அதற்கு என் உயிர் போனால் கூட தேவல ..

அவளை பார்த்து  எத்தனை நாள் ஆச்சு ! அவளை ஆசையா அணைக்க மாட்டோமா? அவன் கைகளில்  அவள் தவழ மாட்டாளா என்று அவள் புகை படத்தை அனைத்துக் கொண்டு விட்டத்தை பார்த்து படுத்துக் கொண்டு இருந்தான்.

அவள் இல்லாத ஒரு வாரமே  மூன்று யுகம் போனது போல இருக்கு! அவள் இல்லாமல் என்னால் காலம் முழுதும் தனியா இருக்க முடியுமா?

அப்போது அறைக்கு வந்த கண்மணி அவன்  இருந்த நிலையை கண்டு அப்படியே நின்றுவிட்டாள்.அவளுக்கு அவனை பார்க்க பாவமாக தான் இருந்தது . என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்தான் . அனுபவிக்கட்டும் . இப்பவாது உண்மையை சொல்லணும் தோணுதா! கடன்காரா?

தொண்டையை  சரி செய்து அவன் அருகில் நகர்ந்தாள். அவளை கண்டவுடன் புகைப்படத்தை தலையணை அடியில் வைத்து “வா கண்மணி !” குரலில் வருத்தமாக ” ஊரில் இருந்து  காலையிலே வந்தாச்சு போல . இப்ப தான் என்னை   பார்க்க வர. ஒரே வீட்டுக்குளே  இருந்து என்ன  கண்ணாமூச்சி  ஆட்டம். அப்பப்ப உங்க அப்பாவை பார்க்க போய்விடுகிறாய்! என்னிடம் சொல்வது கூட இல்லை.

நீ வீட்டில்  இருப்பதே தெரிய மாடீங்குது ! இப்ப எல்லாம் என் கண் முன்னால் கூட வருவதில்லை.. கணவரா வேண்டாம் ஒரு நண்பனா என்னிடம் பழகலாம் ல ! என்னை பார்க்க கூட பிடிக்கவில்லையா தேனு ?”

அடபாவி டைலாக் அப்படியே மாற்றி சொல்லறானே ! கொஞ்ச நாள் முன்பு, என்னை பார்க்க கூட பிடிக்கவில்லை என்று  இவன் தான அப்படி சத்தம் போட்டான் . பரவாயில்லை என்னை  மிஸ் செய்து இருக்கான். செய்யறான். நல்ல முன்னேற்றம் தான் . இவனை எல்லாம் கட்டி வைத்து முத்தம் கொடுக்கணும் என்று திட்டினாள்.

“தாரளமாக, கணவராகவே பழகலாமே! நானும் அதையே தான் சொல்லறேன்! இன்று ஒரு நாள்  நான் இங்க தங்கிக் கொள்ளட்டா!”

சித்து மனதில் சும்மா பேச்சைக் கேளு !அதில் குறைச்சலே இல்லை .

சித்து கிண்டலாக “மழை பெய்யுது! இடி இடிப்பதால் பயமா?”

கண்மணி மனதில் சரி சொல்வதை விட்டு கேள்வி கேட்பதை பாரு “பயமா ?எனக்கா?” என்று வீராப்பா கேட்டு பாவமாக ‘ஆமாம்’ என்று உதட்டி பிதுக்கி தலை ஆட்டினாள்.

வேண்டும் என்றே அவனை சீண்ட எண்ணி  “இஷ்டம் இல்லை என்றால் நான் போய் அத்தையுடன் படுத்துக் கொள்கிறேன்! நீங்க போடோவிடமே டூயட் பாடுங்க !”  என்று பழிப்பு காட்டி  திரும்பியவுடன்

அவள் அழகில் தலைகுப்புற விழுந்து, எங்கே சென்று விடுவாளோ பயந்து   ” ஹே நில்லு! எங்க போறா? இப்ப தான வந்த ! நான் ஒன்றும் சொல்லவில்லை தாயே! நீ தாராளமா தங்கலாம்! உங்க ரூம் மேடம்  !எதுக்கு பர்மிஷன் எல்லாம் கேட்டு ! வேண்டும் என்றால் டூயட் பாடலாமா ” என்று அமர்ந்த நிலையிலே வேகமாக இழுத்தான் . அவன் மீது பூக்குவியலாய் விழுந்தாள்.

அவனை அருகில் கண்டு தடுமாறி “இப்ப எதுக்கு இப்படி இழுத்தீங்க! உங்க குரலிலே கோபம் தெரியுது!  அப்புறம் மழையில் கொண்டு போய் விட்டு வந்துடுவீங்க! எதுக்கு வம்பு, நான் அத்தையிடமே போறேன்”

ராட்ஷசி! சரியான நேரத்தில் சொல்லி காட்டுறாளே!

“என் மானத்த வாங்காத தேனு! பொறுமையை ரொம்ப சோதிக்கிற! அம்மா என்ன நினைப்பாங்க?  பேசாமல் அமைதியா இங்கேயே படு !”

“உங்களுக்கா அக்கறை இல்லை ! அத்தைக்காக  தான் சரி சொல்லறீங்க” என்று கோபப்பட்டவுடன்  “வாய் தவறி தெரியாம வந்திடுச்சு! என்னை மன்னிச்சிடு”

சித்து  அருகில் அமர்ந்து கொண்டு அவன் முகம் பார்த்து தயங்கிய படி “ஏங்க ! ஏங்க!”

“என்ன புதுசா மரியாதையை எல்லாம்! எப்போதும் போல சித்து சொல்லு!”

“சித்து ,உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும் !”

அப்போது பார்த்து பெரிய இடி! நடுங்கிய படி அவன் அருகில் மேலும் நகர்ந்து அமர்ந்து கொண்டாள். அவளை விடாமல் அப்படியே அவளை இறுக அனைத்துக்  கொண்டு “இப்படி பக்கத்தில் வந்து எத்தனை யுகம் ஆச்சு டீ!” என்று இறுக்கினான். கண்மணியும் மனதில் அதையே தான் நினைத்தாள்.

சித்து மனதில், மனதறிந்து நான் தீப்திக்கு கண்டிப்பா துரோகம் செய்யவில்லை! இந்த கனம் நிஜம் . என் தேனு என் பெண்டாட்டி.என் காதலி !கண்மணி என்ன கேட்டாலும் உடனே தந்துவிடனும்  என்ற முடிவில் இருந்தான் .

தாய் பறவை சிறகுகள் அடியில் குஞ்சுகள் பாதுகாப்பாக இருப்பதை போல பாதுகாப்பாக உணர்ந்தாள். அவன் தோளில் வாகாக சாயிந்து கொண்டு “சித்து! நான் நாளை கிளம்பறேன் !”

“எங்க டா ! இப்ப தான வந்த ? நானும் வரணுமா?ஆனால் நாளை முடியாதே ! முக்கியமான விஷயத்துக்காக மும்பை செல்ல வேண்டும்” !

“ஒ!ஒ !ஒ !” மனதில் அது தான் தெரியுமே!

“நான் இன்னும் ரெண்டு நாளில் வேலைக்கு  சேரனும்.”

சித்து அதிர்ச்சியாக “என்னது? வேலைக்கா ?அதுக்கு என்ன அவசியம் …ஒன்றும் வேண்டாம்” .

இவனுக்கு ஏதோ அம்நிஷியாவா? நல்லா தான இருக்கான். தடி வைத்து ரெண்டு மண்டையில் போட்டால் சரியா போய்டும். இவன் பேசினதை எல்லாம் ரெகார்ட் செய்து வைத்து தான் காட்டனும் போல.

சாதாரணமாக, இயல்பாக  “நம்ம விவாகரத்து கேஸ் அடுத்த மாதம் கோர்ட்டுக்கு வருது . தீர்ப்பு வந்தால் உங்களுடன் இருக்க முடியாது. அது  முறையும் இல்லை. அதனால் இப்ப கிடைத்த வேலையில் சேரலாம் முடிவு செய்து இருக்கேன்” .

சித்து சத்தமே இல்லாமல்  “ஒ !ஒ!”

ராட்ஷசி , கூலா வருத்தமே இல்லாமல் சொல்லறா? எல்லாம் கொழுப்பு .நான் தான் கவலைப்பட்டு இருக்கேன் .

வேலை  என்ன ,எங்கே எல்லாம் கேட்டுக் கொண்டான் .

“கண்மணி, எனக்காக ரெண்டு நாள்  பொறுப்பையா”

உடனே அவள் நக்கலாக  “ஒரு நாளில் என்ன மற்றம் நிகழ போகுது ! என்னுடன் குடும்பம் நடத்த போறீங்களா என்ன? நான் கேட்டதை கொடுக்க கூட உங்களுக்கு மனசு இல்லை” .

அவன் கண்ணில் வலியை கண்டு அமைதியானாள்.

Advertisement