Advertisement

தூறல் 18.1:

கண்டிப்பா அவன் அறையில் தீப்தி இல்லையே! வேற ஒரு பெண்ணை தான பார்த்த நியாபகம். பேய் போல இருந்தாலே !அன்று பேரழகி என்று வர்ணித்த  உதடு இப்ப  உனக்கு பேயா என்று மனசாட்சி  குட்டியது. அவளிடமும் ஒன்றும்! யோசிக்க, யோசிக்க மண்டை வெடித்து விடும் போல ஆனது.

இதை நான் கண்மணியிடம் சொல்ல முடியுமா? எத்தனை அசிங்கமான  விஷயம் . என்னை பெண் பித்தனாக அல்லவா நினைப்பாள்.

எல்லாரும் சொல்வது போல நந்து என் மகன் தானா? கண்டிப்பா நான் தீப்திக்கு துரோகம் செய்து இருக்க முடியாது . என் வாழ்க்கையில் வந்த  ஒரே பெண் என்  கண்மணி மட்டும் தான் என்று அவனுக்குள் பல தடவை சொல்லிக் கொண்டான்

இத்தனை நாளா இவனை இப்படியே விட்டது தப்போ?

ஷ்யாம் மூலம் கண்மணி  விஷயம் அறிந்து சித்துவிடம் சொல்லாமல் தேவை மிரட்டி மும்பைக்கு அழைத்து சென்றாள் .

தீப்தி அப்பா வர்மா வீட்டிற்கே நேரா சென்றாள். உள்ளுக்குள் அங்க இவளுக்கு எப்படி வரவேற்பு இருக்குமோ என்று பயந்து தான் சென்றாள். பெரிய கோட்டை போல வீடு ! பார்க்கவே  பிரமாண்டமா இருந்தது .

தீப்தி அப்பா கண்மணியை கண்டவுடன் யார் என்று அறிந்து கொண்டார் . நந்தனை பார்க்க வந்து இருப்பதாகவும் கூறினாள். நல்ல வேலை  மகன் ஊரில் இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் .

“அங்கிள், என்னை உங்க மகள் போல நினைத்துக்கோங்க” என்றவுடன் அவர் கண்ணில் நிற்காமல் கண்ணீர். அவருக்கு என்ன பேசுவது  என்றே தெரியவில்லை .

“நான் நந்தனை பார்க்கணும்.”

மூன்று வயது குழந்தை பார்க்க அத்தனை அழகா இருந்தான் . அவனை நன்கு ஆராய்ந்து, அப்பாடி! கொஞ்சம் கூட சித்து சாயல் இல்லை என்று இழுத்து பிடித்த மூச்சை வெளியிட்டாள். என்ன தான் தெளிவா இல்லை முடிவு கொண்டாலும் அவள் மனம் நந்துவை காணும்  வரை அடித்துக் கொண்டு தான் இருந்தது. ஒரு வேலை சித்து போல அப்படியே இருந்தால்? அதனால தான் உடனே கிளம்பியது .

நந்து ,கண்மணியை பார்த்து மிரண்டான் . “அவன் அப்படி தான் மா .புது ஆளுங்க கூட எளிதா பழகமாட்டான். கொஞ்சம் பழகினால் விடமாட்டான் .

நாங்க செய்த பாவம் தான் எங்களை இப்படி படுத்தி எடுக்குது .. என் மகளை  பறி  கொடுத்தேன் . அவ நியபாகமா இருக்கும் என் பேரன் நிலைமையை பார்த்தாயா” என்று அழுதுவிட்டார் .

நந்தன், தாத்தா அழுவது பொறுக்காமல் கண்மணி மீது கையில் இருக்கும் தம்பலாறை  வீசினான். சரியா நடு நெற்றியில் உரசி சென்றது . ரத்தத்தை கண்டு அழுக ஆரம்பித்தான் .

உடனே கட்டு போட்டு “எனக்கு ஒன்றும் இல்லை. நீங்க எதுக்கு அழறீங்க. ஆண்டிக்கு ஒன்றும் இல்லை பாருங்க” என்று கட்டு மீது தடவி காட்டினாள். நந்தன், பூ ,பூ என்று கண்ணில் நீருடன் பிஞ்சு கைகளால் காயத்தை வாருடினான். கண்மணி முகத்தில் சிரிப்பை கண்டு அவனும் சிரித்தான் . கண்மணிக்கு அஞ்சலி படம் பார்ப்பது போல இருந்தது.

உலகில் இப்படி பிறக்க, இவர்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள் என்ற மனவலியை மறைத்து அவனுடன் சிரித்தாள்.

“பல நாள் கழித்து இப்ப தான் சிரிக்கிறான். நீ வந்தது ரொம்ப சந்தோசம்”..அன்று நாள் முழுதும் அவனுடனே கழித்தாள். இந்த மாதிரி குழந்தைகள் எல்லாம் கடவுள் குழந்தைகள் . தீப்தி  அப்பா வர்மாவுடன் சேர்ந்து பல வேலைகளை செய்தாள்.

“சித்து வரலையா மா!”

“இல்லை மாமா! நான் மட்டும் தான் நந்துவை பார்க்கணும் வந்தேன் . அடுத்த தடவை கண்டிப்பா அவரை அழைத்து வரேன்.”

“என் மகன் தான் பிரச்சினை செய்யறான். எனக்கோ வயசாகிடுச்சு.ரத்தம் எல்லாம் சுண்டி போச்சு. இப்போது தான் மனிதர்கள் அருமை எல்லாம் புரியுது . அவன் இளரத்தம் .அதுவும் தங்கை மீது அதிக பாசம் கொண்டவன். அதனால் தான் இப்படி செய்யறான்.”

நந்தனை அழைத்து சென்று சித்துக்கு ஷாக் கொடுக்கலாமா என்று கூட யோசித்தாள். அவனையே சமாளிக்க முடியவில்லை இதில் நந்தனையும் சேர்த்து  ரொம்ப கஷ்டம் என்று சிரித்துக் கொண்டாள்.

சித்துக்கு அன்று மனமே சரி இல்லை. கண்மணியை தேடினான். அவனுக்கு கிடைத்த செய்தி அதிர்ச்சியை தந்தது.

அவளை எந்த ஆபத்தும் நெருங்க விட கூடாது .ராம்கி அவளை எதுவும் செய்திட கூடாது என்று செக்யூரிட்டி மூலம் பல ஏற்பாடுகளை செய்தான். அவளுக்கு அழைத்தாலும் எடுக்கவில்லை .மிகவும் பயந்துவிட்டான்.

வண்டி ஒட்டிய படியே எதோ யோசித்து சென்று  நடுவில் இருந்த மீடியனில் மோதி அச்சிதேன்ட் ஆனது !

சித்து தலையில் அடிபட்டு அந்த இடத்திலே நினைவை இழந்தான் !…………….

கண்மணி அவன் வீட்டுக்கு வந்ததை அறிந்து, ராம்கி அவளை அவன் இடத்திலே சிறை பிடிக்க முயற்சித்தான். அவன்  திட்டமிடும் முன் தேவின் துரித நடவடிக்கையால், கண்மணியும், தேவும் அங்கிருந்து வேகமாக கிளம்பி வந்து  பிளைட் ஏறிவிட்டார்கள் .

அவளை பிடிக்க முடியாத கோபத்தில் ராம்கி , ‘நாலு வருஷமா அந்த சித்தார்த்  தான் ஆட்டம் காட்டறான் நினைத்தால் அவன் பெண்டாட்டி என் கோட்டைக்குள்ளே நுழைந்து சென்று இருக்கிறாள்! என்ன துணிச்சல் .சரியான துணிச்சல்காரி தான்.’

அவன் அப்பாவிடம் “உன் பெண்ணை இந்த உலகில் இல்லாம செய்தவன் பெண்டாட்டிக்கு  நீ,  ராஜ உபசாரம் செய்து அனுப்பி இருக்க! அவள் நுழைந்தவுடன் எனக்கு தகவல் சொல்லி இருக்க வேண்டாம் . இந்த குழந்தையை பார்த்தும் உனக்கு ஆத்திரம் வரல . முதலில் உன்னை  போட்டு தள்ளுனா தான் புத்தி வரும். வயசாகிடுச்சு நிரூபிக்கிற. நீ கொடுக்கும் இடம் தான் அவர்களுக்கு இத்தனை துணிச்சலை தருது. ரெண்டு பேருக்கும்  வெட்டுறேன் குழி !அப்ப தெரியும் இந்த ராம்கி யார் என்று!”

அவனுடைய வக்கீல், “சார், அப்படி எல்லாம் அவசரபடாதீங்க ! கொஞ்சம் பொருங்க . உங்களுக்கு சாதகமா தான் தீர்ப்பு வரும் . அவன் சொத்து அத்தனையும் பிடுங்கி நடுரோட்டில் நிறுத்திடலாம். இத்தனை நாள் பொருத்தீங்க சார் . இன்னும் கொஞ்சம்”

ஏற்கனவே,  அந்த சித்தார்த் விவரமா, அவனுக்கோ அவன் குடும்பத்தை  சார்ந்தவங்களுக்கோ எதாவது பிரச்சனை வந்தால் அதற்கு ராம்கி  தான் பொறுப்பு என்று கம்ப்ளைன்ட் செய்து இருந்தான். அதை எண்ணிய அவன் வக்கீல்  அவனை அடக்கினார் .

வக்கீலை முறைத்து  “ திட்டம் எல்லாம் பலமா தான் இருக்கு. ஒரு கேஸ் ஒன்றை வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு முடிக்க முடியல, பேச்சை கேளு! நீ எல்லாம் வக்கீல் . என்னத்த படித்து கிழித்த !உன்னை முதலில் மற்றறேன்! அப்ப  தான் இந்த கேஸ் உருப்படும்.

மூன்று வருடமா அவன் நிழலை கூட தீண்ட முடியலையே! அத்தனை கவனமா, பாதுகாப்பான ஏற்பாட்டுடன் தான நடமாடிக்கிட்டு இருக்கான் .எனக்கே தண்ணீ கட்டறான்”  என்று மேஜை மீது ஓங்கி  குத்தினான்.

“எப்படியும் அடுத்த ஹியரிங்  அவங்க கண்டிப்பா நேரில்  வந்து தான ஆகணும் ராம். நமக்கு சாதகமா முடியவில்லை என்றால் ஒரு வழி செய்திடலாம்” என்று அவன் நண்பன் தன்வீர் திட்டம் தீட்டினான் ..

வக்கீல், இந்த கடன்காரனுக்கு ராம் பேரு வேற! என் மனைவி அம்புஜம் சொல்வது போல வீடு கூட்டும் தொடபத்துக்கு பட்டு குஞ்சம் பெயர்! பேருக்கும் இவனுக்கும் சம்மந்தம் இருக்கா! பண்றது அத்தனையும் அடி தடி, அட்டூழியம். இந்த இடத்தில்  வேலை செய்யறேன்  என்னுடைய  வீட்டுக்காரி அம்புக்கு  தெரிந்தால் ஆத்துலயே விட மாட்டா! தள்ளி வெச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பா “

ராம்கி “என்னையா வக்கீல்! தனியா புலம்பல் ..”

“அந்த சித்துவை என்ன செக்ஷனில் மாட்ட வைக்கலாம், நமக்கு சாதகமா என்ன  செய்யலாம் யோசித்தேன்.”

“இங்க சொல்லு, யோசி. அங்க கோர்டில் வாயை திறக்காத !” என்று தன்வீர் கடுப்பானான் .

ராம்கி கோபமாக “தன்வீர், நீ சொல்வது போல அவனை அப்படி எல்லாம் ஒரேடியா போட்டு தள்ள கூடாது! கொஞ்சம் கொஞ்சமா துடிக்க வைக்க வேண்டும். என் தங்கை எப்படி வேதனையில் துடிச்சாலோ அப்படி?”

கண்மணியை இஷ்டம் இல்லாமல் தான் தேவ், ராம்கி- வர்மா வீட்டுக்கு அழைத்து சென்றான். அவளை, அங்கே அவன் பார்வை படும்  தூரத்திலே இருக்க சொல்லி   எச்சரித்தான் .

சித்து ஏற்பாடு செய்து இருந்த செக்யூரிட்டி ஆட்கள் மூலம்  நிலைமை விபரீதம் அறிந்த தேவ், கண்மணியை அந்த இடத்தில் இருந்து வேகமாக நகர்த்தினான். கொஞ்ச நேரம் தாழ்த்தி இருந்தால் சித்துக்கு என்ன பதில் சொல்ல?

எல்லாம் கண்மணியால் தான். இவளுக்கு இத்தனை துணிச்சல் ஆகாது. என்னையும் அல்லவா மிரட்டி அழைத்து வந்து விட்டாள். தனியா கிளம்பறேன் சொன்னதும் இவளுடன் பதறி அடித்து கிளம்பியது தப்பு. முன்பே எங்க? என்ன? எல்லாம் விசாரித்து தடுத்து இருக்கணும் . சித்துக்காகவாது தகவல் சொல்லி இருக்கணும்  என்று  நொந்து கொண்டான் .

அந்த கோபம் கண்மணி மீது திரும்பியது . “ஏதோ படம் பார்த்த மாதிரி இருக்கு அண்ணா , சூப்பர் எஸ்கேப்”  என்றவுடன் கோபத்தில் தேவ் வெடித்தான் . “உனக்கு கொஞ்சம் கூட மூளை இல்லை. எத்தனை பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்து இருக்கோம் தெரியுமா? எனக்கு எதாவது ஆனாலும்  பரவாயில்லை. உனக்கு எதாவது ஆனால்  சித்து முகத்தில் எப்படி விழிப்பேன்.

அவன், உன் மீது உயிரையே வைத்து இருக்கான் என்று  உனக்கு தெரியுமா ! இனி சித்துக்கு தெரியாமல் இப்படி செய்ய கூடாது” என்று கண்மணியிடம் சத்தியம் வாங்கின பின் தான் அமைதியானான் .

கண்மணி வழி எல்லாம் நந்தனை பற்றியே பேசிக் கொண்டு வந்தாள். விமானம் தரை இறங்கியதும் கிருஷ்ணனும் இவர்களுடன் சேர்ந்து கொண்டான் .

தேவ்  அவனை பார்த்தவுடன் “நீ எங்க டா இங்க? கோவையில் இன்று முக்கிய மீட்டிங் இருக்கு சித்து சொன்னான்”

தேவிடம் கண்களாலே ‘அப்புறம்’ என்று செய்தியை பரிமாறினான்.

எல்லாரும் ஒரே காரிலே கிளம்பினர். கிருஷ்ணன் நேராக தேவிடம் விஷயத்தை சொல்ல முடியாமல் , செல் போனில் மெசேஜ் அனுப்பினான். செய்தியை படித்து தேவ் அதிர்ந்தான்.

முக உணர்வுகளை  கண்மணியிடம் வெளி காட்டிக் கொள்ளாமல், அடக்க பெரும்பாடுபட்டான் .

தேவிடம் “அண்ணா, அவரிடம் சொல்லாமல் கிளம்பிட்டேன். இனி என்ன சொல்லுவாரோ பயமா இருக்கு ? நீங்களும் என்னுடன் வீட்டுக்கு வரீங்களா? ப்ளீஸ்! இந்த செல்லில் வேற சார்ஜ் இல்லை .அவரை அழைக்கணும் .உங்க செல் தாங்க”

கிருஷ்ணன் பதற்றமாக “இல்லை! வேண்டாம். வேண்டாம் !நேரிலே பேசிக்கலாம்” .

கண்மணியிடம் எப்படி சொல்ல என்று  தேவும் ,கிருஷ்ணனும் முழித்துக் கொண்டு இருந்தனர்.

தேவ் ஒன்றும் பேசாமல் அமைதியாக  இருக்கவே “ என்ன ஆச்சு அண்ணா! உடம்புக்கு முடியலையா? என்னால்  தான் உங்களுக்கு வீண் அலைச்சல்.”

கண்மணி பேசுவதற்கு எல்லாம் தேவ், கிருஷ்ணனும் ஒரு வார்த்தையிலே பதில் அளிப்பதை கண்டு அமைதியானாள் .

நேராக பெரிய  மருத்துவமனை முன் வண்டி நின்ற போது “இங்க எதுக்கு அண்ணா! யாரையாவது பார்க்கணுமா? நான் அப்படியே வீட்டுக்கு கிளம்பி இருப்பேனே! நீங்க உள்ளே போயிடு மெதுவா வாங்க . நான் வீட்டுக்கு போறேன் .வேண்டும் என்றால் டிரைவர் காளி அண்ணனை அனுப்பட்டுமா?”

“நீயும் வா கண்மணி !” என்று கிருஷ்ணன் அழைத்ததும்

“ நான் எதுக்கு அண்ணா! எனக்கு ஹாஸ்பிடல் வாடையே பிடிக்காது ! எனக்கு பயம் கூட. அத்தை இருந்த போதே கஷ்டப்பட்டு தான் இருந்தேன். அவரை இருக்க சொல்லி பாதி நேரம் நழுவிடுவேன். நான் போய் அவரை பார்க்கணும் .கோபத்தில் இருப்பாரு! எல்லாம் சொல்லி சமாதன படுத்தனும்.”

“ நீ வந்திட்டு, அப்புறம் போகலாம் வா” என்று கிருஷ்ணன் பிடிவாதமா அழைத்து சென்றான்.

ஹாஸ்பிடல் காரிடாரில் அவள் அப்பாவை தான் முதலில் பார்த்தாள். அப்பா இங்க எங்க வந்தார் !யாருக்கு உடம்புக்கு முடியல ! ஒரு வேளை தாத்தாக்கு! இருக்காது ! யாருக்கும் எதுவும் இருக்க கூடாது வேண்டி உடனே விரைந்தாள்.

“நீங்க எங்க அப்பா ! செக் அப்  செய்ய வந்தீங்களா? எல்லாரும் நலம் தான?”

சிவம் ஒன்றும் பேசாமல் கண்மணி தலையில் வாஞ்சையாக தடவிவிட்டார். அவர் தோள் மீது சாயிந்து  “நீங்க ரொம்ப மோசம் ! அவருடன் சண்டை போட்டு  கிளம்பினதில்  இருந்து நீங்க என்னை பார்க்கவே வரவில்லை. பேசவும் இல்லை. அப்பா, அவர் பாவம் . நீங்க வந்து இருப்பது தெரிந்தால் எத்தனை சந்தோஷபடுவார். அவர் மீது உங்களுக்கு வருத்தம் இல்லையே! எனக்காக அவருடன் சண்டை வேண்டாம் ! உங்க மருமகன் ரொம்ப நல்லவர் அப்பா ! எனக்கு ரெண்டு பேரும் முக்கியம் அப்பா!”

“நான் எதுக்கு தேனு சண்டை போட போறேன்! அவர் நல்லவர் தான் டா” என்று அவருக்கு குரல் கமறியது.

அங்கு வந்த நர்ஸ் “சித்தார்த் உறவினர்  யாரு! இதில் கையெழுத்து போடுங்க”.

என்ன சொன்னாங்க. சித்து பெயரை சொன்னது போலவே இருக்கு !

அப்போது தான் ஜானகி, வெற்றி, அவள் அம்மா செல்லமா அனைவரும் அங்கு இருப்பதை  பார்த்தாள். சித்தார்த்தை அவள் கண்கள் தேடியது .எல்லாரும் இங்க இருக்காங்க என்றால் ? இருக்காது என்று சொல்லிக் கொண்டு மெதுவாக செல்லமாவிடம் முன்னேறி நகர்ந்தாள்.

நர்ஸ் பேசுவதை வைத்து சித்தார்த்துக்கு தான் ஏதோ என்று அவள் மூளை சொல்லியதை மனம் ஏற்க மறுத்தது .

“அம்மா! அவர் எங்க? யாருக்கு என்ன ஆச்சு?” அருகில் இருந்த  ஜானகி அழுத முகத்தை கண்டு  “என்ன ஆச்சு அத்தை! யாராவது சொல்லுங்க”. குரல் நடுங்கிய படி “எனக்கு பயமா இருக்கு ” .

சித்துக்கு அச்சிதேன்ட் ஆகி கை ,கால் , தலையில் அடி என்று கேள்விப்பட்டவுடன் கண்மணி “இருக்காது , அவருக்கு ஒன்றும் இல்லை” என்று  அப்படியே  மயங்கினாள்.

மயக்கம் தெளிந்தவுடன்  அவள் அன்னை செல்லமாவிடம் , “அவருக்கு ஒன்றும் இல்லை சொல்லுங்க அம்மா! என் மீது இருக்கும் கோபத்தில் தான இப்படி சொல்ல சொன்னார் . என்ன தண்டனை வேண்டும் என்றாலும் கொடுக்கட்டும். அவருக்கு ஒன்றும் இல்லை சொல்லுங்க அத்தை. விளையாட்டு வேண்டாம் . நல்லா இருக்கு சொல்லுங்க  ப்ளீஸ், நான் அவரை பார்க்கணும்” என்று கதறினாள்.

சித்து நிலைமை  கொஞ்சம் கவலை கிடமாக தான் இருக்கிறது என்றும், இன்னும் 12 மணி நேரம் போனால் தான் என்ன  என்று தெளிவாக சொல்ல முடியும்  மருத்துவர்கள்  கூறிவிட்டனர் .

யார் என்ன சமாதனம் சொன்னாலும் கண்மணி அழுது கதறுவதை அவர்களால் பார்க்க முடியவில்லை .

“மாமா, அவர் சொல் படி கேட்கிறேன் மாமா. இனி இப்படி எல்லாம் செய்ய மாட்டேன்!  அவரை எனக்கு பத்திரமா திருப்பிக் கொடுங்க . தேவ்  அண்ணா! எனக்கு   அவர் உயிரோட வேண்டும் , நான் அவரை பார்க்கணும், அவருக்கு என்ன ஆச்சு , அவர் எனக்காக சிரிக்கும் அந்த சிரிப்பை நான் பார்க்கணும் ,எனக்காக கோபப்படும் பார்வையை நான் ரசிக்கணும் .. கிருஷ் அண்ணா நீங்களாவது என்னை அவரிடம் அழைத்துக் கொண்டு போங்க..”

அவளை என்ன சொல்லி தேற்ற  என்று தெரியாமல் குழம்பினர் .

சித்து என்னிடம் வந்துவிடு, உங்களுக்கு ஒன்றும் இல்லை  என்று எந்நேரமும் அதையே  ஜபம் செய்து கொண்டு இருந்தாள்.

Advertisement