Advertisement

சிந்துவை காணோம் தேடியபடி சிறிது தூரம்  சென்ற போது ஒரே சத்தமாக இருந்தது . “என்ன ஆச்சு ஷ்யாம். இந்த நேரத்தில் என்ன சண்டை  நம்ம ராசு பெரிப்பா குரல் கேட்குது . யாரோ திருடன் வந்துட்டாங்களா?”

“தெரியவில்லையே கண்மணி. ஆனா எப்படி? ரெண்டு வாரம் முன்பு தான் திருடன் வந்தான். அன்றும் இப்படி தான் சத்தம் . திருட வந்தவனை உண்டு இல்லை ஆக்கிட்டாங்க. அவர் வீட்டில் போய் திருட வந்து இருக்காயே  என்று திருடனிடமே கேட்டு விட்டேன்” .

அவன்  முதுகில் ரெண்டு வைத்து  “லூசு அத்தான். உனக்கு லொள்ளு தான் .ரெண்டு வாரம் முன்பு திருட  வந்தால் இப்ப வர கூடாது என்று  இருக்கா? வா போய் பார்ப்போம். இவரை வேற காணோம்.”

அங்கே இருந்த கும்பல்  நடுவில் சித்து பாவமாக முழித்துக் கொண்டு  இருந்தான். அவன் சொல்வதை கேட்காமல் அவள் பெரிப்பா “பார்த்தா ஆளு சோக்கா இருக்க . பட்டணத்தில் இருந்து வந்த கும்பலா? இந்த மாதிரி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க . டிப் டாப்பா வந்து ஆட்டை எல்லாம் களவாடிகிட்டு போகலாம் நினைத்தால் சும்மா இருப்போமா?

மந்தையில் இருக்கும்  ஆட்டை எல்லாம்  போடோ பிடித்து உன் நண்பனுக்கு வேற தூது அனுப்பறையா?அந்த களவாணி எங்க இருக்கான் சொல்லு. தோளை உரிச்சு போடறேன்” .

சித்து “என்ன சார். எத்தனை தடவை சொல்வது . நான் இந்த ஊரில் இருக்கும் என் மாமனாருடைய மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்து இருக்கேன். ஷ்யாம் அப்பா வீட்டுக்கு.” ஷ்யாமை ஊருக்குள் எல்லாரும் சுந்தர் என்று தான் அழைப்பார்கள் . அதனால் யாருக்கும் புரியவில்லை .

சித்துக்கு, கண்மணி தாத்தா, மாமா  பெயர்  தெரியவில்லை.

“மாட்டினவுடனே நல்ல கதை அளக்கிற! எந்த மாமியார் வீட்டுக்கு . ஊருக்குள் உன்னை பார்த்த மாதிரியே இல்லை . சும்மா கதை விடாத . தினமும் ஆடு திருடு போகுதே என்று  இன்று தூங்காம உஷாரா இருந்தேன் . சரியான  நேரத்தில் வந்து நீயே மாட்டிகிட்ட .நாளைக்கு பஞ்சாயத்தை கூட்டி உன்னை என்ன செய்யறேன் பாரு” .

சொல்வதை கேட்காமல் இப்படி பேசியே இந்த கிராமத்தான் இம்சை செய்யறானே . நல்ல நேரத்தில் போனை வேற வீட்டிலே விட்டு  வந்து விட்டேன் என்று நொந்து கொண்டான்.

சித்து குரல் கேட்டு கண்மணி அங்கு விரைந்தாள்.

கண்மணியை கண்டவுடன் சித்து முகம் மலர்ந்தது.

“ராசு  பெரிப்பா”

தேனு ,ஷ்யாமை கண்டவுடன்  “அட தேனு குட்டி, நீங்க எங்க இங்க, இந்த நேரத்தில்? எப்ப வந்தீங்க?”

கண்மணி சித்துவை பார்ப்பதை பார்த்து “இது ஒரு பஞ்சாயத்து. நீ வீட்டுக்கு போ ! உங்க பெரிமா உள்ளே இருப்பா? இவனை தோட்ட வீட்டில் அடைத்து வைத்து விட்டு வரேன் . மாப்பிளை சௌக்கியமா ?அவரை ஒரு தடவையாவது நம்ம வீட்டு விருந்துக்கு உங்க அப்பனை அழைத்து வர சொல்லி இருந்தேனே? நீ போனை போட்டு கொடு . நானே அவரிடம்  சொல்லறேன்.”

கண்மணி சித்துவை முறைத்த படி  இப்படி பாதி ஊர் கூடும் அளவிற்கு என்ன செய்தாரோ? ஆடு திருடின கள்ளன் போல முழிப்பதை பாரு என்று பல்லை கடித்து ,  “போன் போட  வேண்டாம் பெரியப்பா . உங்க கண் முன்னாலே இருக்காரு .நேராகவே சொல்லிடுங்க.”

“எங்க தேனு, உன்னுடன் நம்ம ஊருக்கு வந்து இருக்காறா?”

சித்துவை கை காட்டிய  படி “இதோ, இவர் தான் உங்க மாப்பிள்ளை” என்றவுடன் ராசுக்கு மயக்கம் வருவது போல ஆனது.

ராசு பதறி “அட மாப்பிளை தம்பி! நீங்க எங்க இங்க இந்த நேரத்தில்? நீங்க தான்  தேனு வீட்டுகாரர் என்று நிசமா, சாமி சத்தியமா தெரியாது சாமி , என்னை மன்னிச்சிடுங்க, கல்யாண அவசரத்தில் பார்த்தது தான் . நான் தெரியாம” என்று வார்த்தைகள் அவருக்கு தந்தி அடித்தது .

ஷ்யாம் அதற்குள் அவன் தாத்தாவுடன் வந்தான். அவர் “என்ன ராசு! நம்ம மாப்பிள்ளை  தம்பியுடன் உனக்கு என்ன பஞ்சாயத். ஆள் பார்த்து பேசவேண்டாம்” என்று முத்து சாமி கோபித்துக் கொண்டார்.

“அச்சோ இல்லை சித்தப்பு, நான் ஏதோ தெரியாம ? மன்னிச்சிடுங்க . நீங்க வீட்டுக்கு வாங்க தம்பி . ஒரு வாய் பால் குடிச்சிட்டு போகலாம்” என்று வலிய அழைத்து அவர்களுக்கு பால், பழம்  கொடுத்து பல தடவை மன்னிப்பு கேட்டு  தான் அனுப்பினார் .

அவள் தாத்தா வீட்டில் கண்மணிக்கும் , சித்துக்கும் தனி அறை கொடுக்க பட்டது .கொஞ்சம் சின்ன அறை தான் . கட்டிலும் சின்னது தான். அவள் அத்தை முன்பு ஒன்றும் சொல்ல முடியாமல், பேசாமல் அமைதியா அறைக்குள் சென்றாள்.

அறைக்குள் நுழைந்தது முதல் கண்மணி  சித்து முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள். கண்மணி வீட்டில், அவள்  பெரிய அறையையே மாட்டு கொட்டகை போல இருக்கு சொன்னவர். இந்த இடத்தில தங்க சொல்லிடாங்க என்று என்ன சொல்ல போறானோ ?

முருகா நீ தான் காப்பத்தனும்.

“உங்களுக்கு இங்க வசதி இல்லை தெரியும். கொஞ்சம் அட்ஜச்ட  செய்துக்கோங்க .நான் கீழே படுத்துக்கிறேன் .மொட்டை மாடி கதவை திறந்தா  காற்று  நல்லா வரும்” என்று ஜன்னலை திறந்து வைத்தாள்.

அவன்  வாயை அடைக்க கண்மணிக்கு ஒரு ஐடியா கிடைத்தது .

தரையில் விரிப்பு  விரித்து தலையணையை மடியில் வைத்து “சரி, இப்ப சொல்லுங்க. வாக்கிங் போறேன் தான சொன்னீங்க . எதுக்கு இந்த  நேரத்தில் அங்க போனீங்க . அதுவும்  ஆட்டு  கொட்டகைக்கு” .

நக்கலாக “லைட் அடித்து என்ன தேடுனீங்க. எத்தனை ஆடு என்று கணக்கு செய்தீங்களா? கால்நடை மருத்துவம் படித்து இருக்கீங்களா ? நல்லா ஊட்டமா வளர்ந்து இருக்கா பார்த்தீங்களா ?பக்ரிதுக்கு   மொத்தமா வாங்கி ஏற்றுமதி செய்ய ஏதோ  ஐடியா இருக்கா என்ன? புது தொழிலா?”

சித்து  பல்லை கடித்து “எதுக்கும் இல்லை . கொஞ்ச நேரம் கேள்வி கேட்காமல் சும்மா இரு.”

அவள் நினைத்தது நடந்துவிட்டது சந்தோஷமாக உணர்ந்தாள். இருந்தாலும் அவளுக்கு பதில் சொல்லாமல் இருப்பதை எண்ணி

கண்மணி கோபமாக திரும்பி படுத்து “எனக்கு என்ன? எங்க ராசு பெரிப்பா நாளைக்கு உங்களை பஞ்சாயத்தில் நிறுத்தி கேள்வி கேட்டு இருக்கணும். அப்ப தெரிந்து இருக்கும்”  என்று முனுமுனுத்தாள்.

“நான் ,நான் …..”

சொல்லுங்க..

“நீ மாலை ஒரு ஆட்டு  குட்டியை  வைத்து கொஞ்சிக் கொண்டு இருந்தாயே!”

ஆமாம்  அதுக்கு என்ன ?

“அந்த ஆடு ரொம்ப அழகா இருந்தது. அந்த ஆடு அங்க இருக்கா தேடினேன்”.

“நீங்க செய்தது திருப்பதியில் போய் மொட்டையை தேடின கதை தான் . உங்களை ..நல்ல வேலை அவங்க முன்பு இதை சொல்லி மானத்தை வாங்கல.”

சொன்னேனே?

கண்மணி அதிர்ச்சியாக “என்னது ? சொன்னீங்களா?”

“எத்தனை தடவை சொன்னேன்.  அந்த பட்டிக்காடு மனிதனுக்கு புரியலையே ?’

“துரை  இங்கிலிஷில் பேசுனீங்களா?அது தான்” .

“நம்ம தோட்டத்தில் இருந்த ஆடு இங்க எப்படி வரும். யோசிக்க வேண்டாம். அதை பார்க்கவா இத்தனை கலவரம் .உங்களை” என்று தலையணையை வீசினாள்.

“எனக்கு எப்படி தெரியும். நான் நினைத்தது ஒன்று ..”

“உங்க  நினைப்பை குப்பையில் போடுங்க. நைட் நேரத்தில் போய்  ஆட்டை தேடினாராம் .கொலைவெறியில் இருக்கேன். பேசாமல் அமைதியா படுத்து தூங்கினால் உங்களுக்கு நல்லது ..இல்லை …….”

“நீ இங்க, மேலே என்னுடன்  கட்டிலிலே படுக்கலாமே ? கீழே படுக்க கஷ்டமா இல்லை?” என்று சித்து அக்கறையாக வினவினான்.

இவர் புரிந்து பேசறாரா? இல்லை புரியாம  பேசறாரா ?இந்த  கட்டிலில் ஒரு ஆள் படுப்பதே கஷ்டம் .இதில் ரெண்டு ஆளா. கஷ்டகாலம் தான் போ .

கோபத்தில் பல்லைக் கடித்து “கீழே படுப்பது, பஞ்சு மெத்தை போல சுகமா இருக்கு …”

“அப்ப நானும் அதே  பஞ்சு மெத்தையில் படுத்து  பார்க்கிறேன்” என்ற போது கண்மணி அழுதுவிடுபவள் போல “மணி ரெண்டு ஆச்சு .என்னை தூங்க விடுங்க,ப்ளீஸ் !” என்று கெஞ்சினாள்.

கண்மணி  இப்படி பேசுவதை  கேட்க எத்தனை சந்தோஷமா இருக்கு . என்ன! கொஞ்சம் வேற சிட்டுவேஷனில் சொல்லரா? என்று சித்து மனதில் அலுத்துக் கொண்டான் .

காலையில் ஐந்து மணிக்கே விழிப்பு வந்த சித்துக்கு பொழுது போகாமல், ஆறு மணி வரை நேரத்தை கடத்தி,  பொறுமையின்றி  கண்மணியை எழுப்பினான் . எத்தனை நேரம் தான் இவளை இப்படியே பார்த்துக் கொண்டு இருப்பது. ஜன்னல் எல்லாம் திறந்து வைத்து  இருப்பதினால் குளிர வேற செய்யுது. இதற்கு மேல் முடியாது  .கஷ்ட காலம் சித்து. இம்சை செய்யறா ராட்ஷசி,  தூங்குவதை பாரு  புலம்பிக் கொண்டான் .

“கண்மணி, மணி ஆச்சு”

 “ப்ளீஸ் சித்து, இன்னும் கொஞ்ச நேரம்” .

ஆஹா! மேடம் இப்படி கொஞ்சினா  சூப்பரா தான் இருக்கு .

ஆனா இப்ப அது முக்கியம் இல்லையே?

“கண்மணி செல்லம் . கொஞ்சம் எழுந்துக்கோ ப்ளீஸ் !எனக்காக செல்லாம்” .

“நைட் தூங்க விடல , இப்பவும் படுத்தினா எப்படி ?”

“குளிருது கண்ணம்மா”

“நான் என்ன செய்ய? உங்க கால் அடியில் கெட்டி கம்பிளி இருக்கும் பாருங்க …”

நிலைமை புரியாமல் , என்ன  செய்வது என்று கேள்வியை  பாரு ….இவளை….. என்று பல்லைக் கடித்தான்.

மூன்று வயதான கண்மணி மாமா  பையன் அவினாஷ், கதவை தட்டி கண்மணி அருகில் வந்து படுத்துக் கொண்டான். “நீ வா செல்லம். நாம தூங்கலாம். குளிருதா?” என்று அவனை அணைத்த படி தூக்கத்தை தொடர்ந்தாள்.

கொஞ்ச நேரம் முன்பு இதையே தான நானும் சொன்னேன். அப்ப இப்படி செய்யணும் தோணுச்சா பாரு !குட்டி பிசாசு.

திடீர் என்று  கண்மணி  ‘அச்சோ ! கட்டில் இருக்கும் போது எதுக்கு கீழே  படுத்து இருந்த  என்று  செல்வி அத்தை கேள்வி கேட்டே என்னை ஒரு வழி செய்திடுவாங்களே!

என்ன நடக்குது என்று நோட்டம் விடவே இந்த வாண்டை அனுப்பி இருக்கலாம். அதற்கு பயந்து உடனே  அவினஷுடன்  சித்து பக்கத்தில் தாவி படுத்துக் கொண்டாள். “ஏன் டீ இதையே நைட் கேட்டா முறைத்த …”

இவர் நம்மளை இனி  தூங்க விட மாட்டார் . என் தூக்கமே போச்சு புலம்பி “சரி, என்ன வேண்டும் சொல்லுங்க.”

சித்து பாவமாக “எனக்கு பாத்ரூம் போய் குளிக்கணும்” .

 “சரி, வாங்க அவினாஷை அத்தையிடம் விட்டு தோட்டத்துக்கு போகலாம்” .

“விளையாடாத கண்மணி”

“விளையாடவில்லை. உண்மையா குளிக்க  தோட்டத்துக்கு தான் போகணும்” என்று அவனை அழைத்துக் கொண்டு போனாள்.

காலை பொழுது விடிந்தும் விடியாமல் அழகாக காட்சி அளித்தது .  இலையில் இருந்த பனித்துளிகளை ரசித்து, கைகளை தேய்த்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள். சித்து, கண்மணியிடம் “குளிரில் இப்படி தோட்டத்தில் குளிக்கனுமா? இது எல்லாம் ஓவர் . இம்சை படுத்தறைங்க சொல்லிட்டேன்.”

அதிகாலை வேளையில் புத்தம் புது மலர் போல அவனுடன் சலசலத்து, இணைந்து நடக்கும் அவன் கண்மணி அழகை   ரசித்துக் கொண்டான். எக்கு தப்பா பேசி  அவள் கொடுக்கும் அடிகளை சந்தோஷமாக  வாங்கிக் கொண்டான் .

பம்ப் செட்டில் தண்ணீர் வேகமாக விழுந்தது.

கண்மணி அதில் இறங்கி சில் தண்ணீரை ரசித்து குளித்தாள்.

தண்ணீர் பட்டதால் புடவை உடலோடு ஒட்டிக் கொண்டு அவள் அங்க வளைவுகளை  அழகா  எடுத்துக் காட்டியது . முகத்தில் நீர் துளிகளுடன் உதட்டில் உறைந்த சிரிப்புடன் “வந்து குளிங்க, தண்ணீர் சில்லுனு இருக்கு” என்ற போது சித்து உணர்ச்சி கடலில் தத்தளித்து  அவனை அடக்க பெரும் பாடு பட்டான் .

இந்த மாதிரி இனி சந்தர்ப்பம் அமையவே அமையாது என்று அவள் கரை ஏறும் வரை அங்கேயே அமர்ந்து, அவளுடன் பேசிய படி அவளை அணுவணுவாக ரசித்துக் கொண்டு இருந்தான் .

“பேசறது எல்லாம் நல்லா தான் இருக்கு . இதில் குளிக்க என்ன பயம் ?” என்று அவனை வம்பிற்கு இழுத்தாள். “வேண்டாம் டீ. தோட்டம் என்று பார்க்கிறேன் . இல்லை இப்பவே …..”

கண்மணி எதார்த்தமாக “என்ன இப்பவே ..”

அவன் பார்வையை  கண்டு வாயை அழுந்த மூடிக் கொண்டாள். ஷ்யாம் வருவதை அறிந்து மோட்டார் அறைக்கு  துணி மாற்ற சென்று விட்டாள்.

அவள் வெளியே வந்த போது தண்ணீரில் நீந்தி விளையாடும் சித்துவைக் கண்டாள். பரவாயில்லை. ஆள் பார்க்க நல்லா தான் இருக்கான். உடம்பை கட்சிதமா  தான் வைத்து இருக்கான் என்று அவனை பார்த்து, அப்படியே  நின்றுவிட்டாள்.

அருகில்  கிளி, சத்தம் செய்து பறந்து சென்றதை உணர்ந்து தலையை சிலுப்பி ,ச ,என்ன மடத்தனம் . இப்படியா பட்டிகாட்டான் மிட்டாயை பார்த்த மாதிரி பார்க்க?

இவன் நம்மளை பட்டிகாடு திட்டுவது தப்பே இல்லை. அப்ப சித்து…… நான் குளிக்கும் போது என்று தலையில் அடித்துக் கொண்டு  வெட்கினாள் .

கண்மணி எதையோ நினைத்து சிரிப்பதை கண்ட சித்து அவள் மீது  தண்ணீர் வாரி இரைத்த படி  “என்ன சொன்னா, நானும் சிரிப்பேனே?” என்ற போது சிரித்துக் கொண்டு  “ஒன்றும் இல்லை. ஷ்யாம் அத்தான் எங்கே?”

போன் வந்தது .ஏதோ வேலை இருக்கு உடனே கிளம்பிட்டான் .

“மணி ஆச்சு கிளம்பலாம் , எத்தனை நேரம்” என்றவுடன் சித்து மார்கமாக சிரித்து ” நீ குளிக்கும் வரை நான் எத்தனை பொறுமையா  காத்துக் கொண்டு இருந்தேன். அவசரபடாத “

நீங்க  காத்துக் கொண்டு இருக்கவில்லை. என்னை பார்த்து சைட் அடித்துக் கொண்டு தான இருந்தீங்க என்று சொல்ல வந்ததை சொல்லாமல் நிறுத்தினாள். சும்மாவே கிண்டல் செய்பவன் இப்போது ஆமாம் அப்படி தான் சொல்லிவிட்டால் …வேற வினையே வேண்டாம்.

“வரப்பில் செருப்பு இல்லாமல் வாங்க” .

சித்து நடக்க கஷ்டபட்டான். அவள் கையை பிடிக்க எண்ணிய போது “வேண்டாம் .என்னையும் சேர்த்து தள்ளி விட்டிடுவீங்க” என்று சொல்வதற்குள் அவளையும் சேர்த்து வரப்பில் தள்ளினான் .

“என்னங்க, சொன்னேன்ல!”

அவன் சிரிப்பதை பார்த்து “டேய்  எருமை !சொன்னேன் ல !பண்ணி” என்று திட்ட ஆரம்பித்தாள்.

சித்து ரியாக்ஷனை பார்த்து “என்ன சார், இப்ப தேவதைகள் எல்லாம் வெள்ளை டிரெஸ்சில் பாடறாங்களா? எழுந்திரு தடியா !இப்ப தான குளித்தேன் .என் மேல் எல்லாம் சேறு!”

‘நான் குளித்து விடறேன் டீ தேனு குட்டி’ என்றதை   வாய்க்குள் முனங்கினான். தண்ணீர் விழும் சத்தத்தில் அவன் சொன்னது  கண்மணிக்கு கேட்கவில்லை .

கேட்டு இருந்தால் நீ மட்டும் தனியா சென்னை கிளம்ப வேண்டியது தான் .

எப்படியும் தனியா தான் கிளம்ப போறீங்க.

மறுபடியும் குளித்து  வீட்டிற்கு கிளம்ப மேலும் ஒரு மணி நேரம் ஆனது .

அவள் பாட்டி பேத்திக்கு வைர அட்டிகை , புடவை ,சித்துக்கு துணி என்று வைத்துக் கொடுத்தாள். எதுக்கு பாட்டி என்றவுடன் “ஒரே பேத்தி, உனக்கு செய்யாம யாருக்கு செய்வேன் . நீங்க ரெண்டு பேரும் காலம் முழுதும்  பிரியாம ஒன்றா சந்தோஷமா இருக்கணும் தான் இந்த பாட்டி ஆசை! நிறைவேற்றுவீங்களா மாப்பிள்ளை!”

சித்துக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை . எல்லாம் உங்க பேத்தி குட்டி பிசாசு கையில் தான் இருக்கு என்று மனதில் திட்டி “கண்டிப்பா  நான் இருப்பேன்” .

“நீ தேனு !”

தலையை மட்டும் ஆட்டினாள். பெரியவங்க கேட்கிறாங்க .வாயை திறக்கிறாலா பாரு ராட்ஷசி என்று சித்து மனதில் திட்டினான்.

அத்தை மல்லி, செல்வி கிண்டல் செய்ததால்  சித்துவை அவசரபடுத்தி  வேகமாக கிளம்பிவிட்டாள் .

கண்மணி  வீட்டுக்கு சென்றபோது அவள் அப்பா அவசர சோலியா  பன்னாரி அம்மன் கோவில் வரைக்கும் சென்றுள்ளதாகவும், இன்னும் இரண்டு மணி நேரத்தில்  வந்திடுவார். மதியம் விருந்து தயார் ஆகிக் கொண்டு  இருக்கு . அப்பா வந்தவுடன் இடம் பார்க்க போகலாம் சொன்னார் என்று செல்லமா தெரிவித்தார் . சித்து கிளம்பலாம்  எண்ணிய போது கண்மணி  “வந்தது வந்தீங்க. இடத்தை பார்த்து விட்டே கிளம்பிடலாம்.”

சித்து, கண்ணனுடன் சந்தோஷமாக பேசி பொழுதை கழித்தான் . கண்மணி, சித்துவிடம் வம்பு செய்து கொண்டு இருந்தாள்.

அவள் செல்ல குறும்புகளை ரசித்தான் .

பக்கத்து கோவிலில் மணியோசை கேட்டு , இப்படியே  காலம் முழுதும் என் கண்மணி என்னுடன் சந்தோஷமாக  இருக்கணும் என்று வேண்டிக் கொண்டான் .

அப்படியா? பேராசையோ ?

கண்ணன் அவள் அக்காவிடம் “அக்கா, எப்படியும்  இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு கவுன்சிலிங் இருக்கு . அப்ப ஒன்றாக சேர்ந்தே கிளம்பலாம். இப்ப அத்தான் மட்டும் போகட்டும்” .

அடே பொடி  பையா? உனக்கு என்ன கெடுதல் டா செய்தேன் .சும்மாவே கிளம்ப யோசித்துக் கொண்டு இருப்பவள், நீ இப்படி கேட்டால் …….என்று சித்து மனதில் கண்ணனை வறுத்து  எடுத்தான் .

அவள் அறையில் கண்மணி சித்துவிடம் “நான் ஊருக்கு வரல ,நீங்களே போங்க. கண்ணனும் ஆசையா கேட்கிறான்” .

உள்ளுக்குள்  அவன்  ஆசை மட்டும் தான் உனக்கு தெரியுதா என்று சித்து வருந்தினான்.

கண்மணி அவன் முகத்தை கண்டு சிரித்து “ இந்த மூன்று வாரமா என்னை கண்டுக்கவே இல்லை . இப்ப மட்டும் என்ன? நான் அத்தையிடம் சொல்லிக்கிறேன். ஒரு வாரம் தான. அப்புறம் ஒரு வருடத்தில் எப்படியும் தனியா…….”

சித்து முகத்தை  பார்த்து பேச்சை நிறுத்தினாள்.

அவள் குரலை வைத்தே அவள் விளையாடுவதை கண்டு கொண்டான் . அவள் சிரிக்கும் கண்களே அவளை காட்டி கொடுத்தது.

“என்னிடமே வா” என்று அவனும் பதிலுக்கு விளையாட்டுக்காக 

“என்ன நிலைமை புரியாம இப்படி பேசற? உனக்கு எத்தனை தடவை சொல்வது .புரியாது . அறிவே இல்லை .எங்க அம்மா என்ன சொல்லுவாங்க ?அவங்களுக்கு  இப்ப  தான் சர்ஜரி  ஆகி இருக்கு தெரியும் ல.”

கண்மணியை அவளுக்காக அழைக்காமல் அவன் அம்மாக்காக கிளம்ப சொன்னால் கோபப்படுவாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அவள் கோபத்தை ரசிக்கவே அப்படி சொன்னான் .

அவளை ஆசையாக பருகியபடி ,கண்ணடித்து, உதடு குவித்து, அவளை சிவக்க வைத்து  “உன்னை எல்லாம் இப்படியே விடுவது சரி பட்டு வராது. கன்னத்தில் நாலு கொடுத்து இழுத்திட்டு போனா தான் புத்தி வரும். என்ன நாலு கொடுத்திடலாமா? மரியாதையாய் கிளம்பும் வழியை பாரு, எனக்கு கோபம் வராது .வந்ததுனா ” என்ற கேலி குரலில்  சொல்லிக் கொண்டு இருக்கும் போது எங்க இருந்து கதிர் வந்தானோ! சித்து சட்டையை கோபமாக  பிடித்தான் .

“ஏன் டா ! என் தங்கையை உனக்கு கட்டி கொடுத்தா இல்லாத  கொடுமை எல்லாம் செய்வியா? இழுத்திட்டு போவியா? கேட்க ஆள் இல்லை நினைத்தாயா? எங்கே இப்ப தொடு பார்க்கலாம்! அவள் மீது கையை வைத்து பாரு !உன் நகம் பட்டாலும் தொலைந்தாய்.”

“ஹே! கூல் மச்சான். நாங்க சும்மா” .

“அண்ணா! என்ன இது. கை எடு? ”

“நீ சும்மா இரு கண்மணி . உனக்கு ஒன்றும் தெரியாது .இவனை விட்ட பேசிகிட்டே போவான். நல்லா எங்களை ஏமாதீட்ட! பட்டிகட்டில் பெண் எடுத்தா அவங்களுக்கு ஒன்றும் தெரியாது, எதுவும்  சொல்ல மாட்டாங்க நினைப்பா?”

சித்து பொறுமையாக “கதிர், என்னதிது கை எடுத்து பேசுங்க” .

சித்து சொன்னதை காதில் வாங்காமல் “இவளிடம் ரெண்டு வாரம் முன்பே கேட்டேன். எதாவது பிரச்சினையா என்று . அப்பவே சொல்லி இருக்கலாம் . பாவம் எங்களுக்காக பார்த்து எத்தனை கஷ்டப்பட்டு இருப்பா? சித்தியும், சித்தப்பாவும் அப்படி எல்லாம் இல்லை, இருக்காது , நம்ம மாப்பிள்ளை தங்க கம்பி சொல்லி  என் வாயை அடைத்துவிட்டார்கள் . எனக்கு ஆரம்பத்தில் இருந்து உங்க மீது சந்தேகம் தான். இப்ப தான தெரியுது கம்பி தகர கம்பி என்று”

“அண்ணா ப்ளீஸ் !கொஞ்சம் பொறுமை”

“நீ பேசாத தேனு. ‘சித்தார்த்’ என்று புத்தர் பெயரை வைத்துக் கொண்டால் நீ புத்தரா? உன் மகனுக்கு அம்மா வேண்டும் என்று என் செல்ல தங்கையை கல்யாணம் செய்து கொண்டாயா? இவ முகத்தை பார்த்து சொல்லு. இவளை போய் சித்தி சொல்ல வைக்க உனக்கு எப்படி மனசு வந்தது. உனக்கு எல்லாம் எத்தனை திமிர்,கொழுப்பு இருக்கணும்” என்று ஆத்திரத்தில்  சித்து முகம் மீது ரெண்டு குத்தினான் .

வயலில் உழைத்து, உரமேறின உடம்பு. அவன் அடித்தால் சித்து தாங்குவானா?

சித்து வலியை பொறுத்துக் கொண்டு “கதிர், எனக்கும் அவளுக்கு இருக்கும் பிரச்சினையில் நீ தலையிடாத. அவ கேட்கட்டும் ,இல்லை அவளை பெத்தவங்க கேட்கட்டும்” என்று சொல்வதற்குள் மீண்டும் அடித்தான் .

“அவங்க யாரும் கேட்க மாட்டாங்க தைரியமா. நான் இருக்கேன் டா”

“அண்ணா விடு, அப்பா வரட்டும் .கொஞ்சம் பொறுமையா இரு. அப்புறம் பேசிக்கலாம் . அவரை பேசவிடு” என்று அவன் கையை பிடித்து கண்மணி தடுப்பதை கேட்காமல் அவளை தள்ளி விட்டான் . கூரிய டேபிள் முனையில் அவள் மண்டை இடித்துக் கொண்டது .

சத்தம் கேட்டு  செல்லமா வந்த போது “சொல்லு டா . உன் முதல் சம்சாரம் அவங்களே இறந்தான்களா இல்லை நீ கொன்றுவிட்டாயா.நீ தான் அவங்களை மேல் அனுப்பி இருப்ப “

“ப்ளீஸ் !நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்க கதிர்” .

“என்ன கட்டு கதை சொன்னாலும் நான் நம்ப போறது  இல்லை. நான் நேரிலே அத்தனை உண்மையும்  அறிந்து கொண்டேன். துரோகி, இனி ஒரு நிமிடம் கூட என் தங்கை உன்னுடன் வாழமாட்டா. இப்ப வெளியே போகல  ஆளை வைத்து அடித்து துரத்துவேன் .பெண்டாட்டி அது இது சொல்லிக் கொண்டு வந்த, மரியாதை கெட்டு விடும்” .

அப்போதும் சித்து பொறுமையாக “வேண்டாம் கதிர் .பின்னால் வருத்தப்படுவீங்க” .

“என்ன மிரட்டறையா?” என்று மீண்டும் ரெண்டு அடி  கொடுத்தான்.

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்ட செல்லமா வாயடைத்து நின்றுவிட்டாள். அதிர்ச்சியில் “கதிர், நீ சொல்வது எல்லாம் !”

“உண்மை  தான் சித்தி . என் நண்பன் வக்கீல் குமார் கல்யாணத்துக்கு பாம்பே போய் இருந்தேன் ல, அப்போது அவன் மூலம் எனக்கு எல்லா உண்மையும் தெரிய வந்தது . அவன் எதேர்ச்சியாக தான் என்னிடம் பேசினான் . அவன் சொன்னதை  கேட்ட போது நெஞ்சே வெடிச்சிடுச்சு சித்தி . எத்தனை அருமையா நடித்து நம்மளை ஏமாற்றி  இருக்காங்க. ஒரு மூன்று வயது மகனுக்கு அப்பன் .நல்ல  மாப்பிள்ளை  தேடி பிடித்தோம். இவனை ,இவன் செய்த வேலைக்கு போலீசில் பிடித்துக் கொடுக்கனும் சித்தி” .

கதிருக்கு எப்போதும்  பொறுமை என்பதே கிடையாது .கொஞ்சம் முரடன் .எடுத்தவுடன் அடிதடி தான் .சிவம் தான் அவனை அடக்க சரியான ஆள் .

“இன்னும் உனக்கு இங்க என்ன வேலை. வெளியே போடா, மாரி இங்க வந்து இவனை வெளியே அனுப்பு” என்றவுடன் சித்து கோபத்தில் ,அவமானத்தில் வெளியேறினான் . கண்மணி இருக்கும் திசையை கூட பார்க்க பிடிக்காமல் , இத்தனை நடந்து இருக்கு என்னுடன் கிளம்பி வராளா பாரு .ஒரு நிமிடம் தயங்கிய சித்து இவ இங்கயே இருக்கட்டும் என்று கிளம்பிவிட்டான் .

செல்லமா “கதிர், நீ நல்லா விசாரிச்சியா.. எப்படி கதிர் இப்படி ஏமாந்தோம் .பார்த்தா அப்படி தெரியலையே!”

“நம்ம இப்படி வெளுத்து எல்லாம் பால் நினைப்பதனால் தான் அழகா ஏமாத்தி இருக்காங்க”

“… அச்சோ ,நான் என்ன செய்வேன் .உங்க சித்தப்பா இதை கேட்டால் தாங்குவாரா ? என் பெண் வாழ்க்கை இப்படியா ஆகணும் . படிச்சிட்டு இருந்த பெண்ணை ஜாதகம், அது, இது என்று சொல்லி  இதற்காகவா சீக்கிரம் கல்யாணம் செய்து வைத்தோம் .என் மக தேனுக்கு இந்த விஷயம் தெரியுமா? இதை கேட்டா தாங்குவாளா ?தேனு” என்று திரும்பும் போது கண்மணி…………

Advertisement