Advertisement

தூறல் 11 :

கண்மணியை திரும்ப  அழைக்க  மனம்  இல்லாமல் என்ன  ஆச்சு என்று அடுத்த ஒரு நாள் முழுதும் மண்டை பிய்த்துக் கொண்டான். இன்னும் ரெண்டு வாரத்தில்  கல்லூரி திறக்க போகுது. அப்ப இங்க வந்து தானே ஆகணும். அப்ப உன்னை  வெச்சுக்கிறேன் டீ என்று கருவிக்  கொண்டான்.

கண்மணி அவள் பாட்டி வீட்டுக்கு சென்ற போது அவள் அத்தை செல்வி “என்ன தேனு கல்யாணம் ஆகி ஆறு மாதம் ஆச்சு  எதாவது விசேஷம் உண்டா!”

விஷமமாக சிரித்து “அம்மா வீட்டுக்கு ரெஸ்ட் வந்து இருக்கிறாய் என்றால் …..உன் வீட்டுகாரர் ரொம்ப படுத்தராரோ! ரெண்டு வாரம் ஆச்சு. ரொம்ப ஓவர். இப்படியா அவரை காயவிடுவது. இந்நேரம் உங்க மாமாவா இருந்தால் என்னை குண்டுகட்டாக தூக்கிட்டு வந்து இருப்பாரு  ” என்று  கிண்டல் கேலி செய்தவுடன்

“இப்ப  தான தெரியுது, எங்க அத்தை ஏன் அடிக்கடி அவங்க அம்மா வீட்டுக்கு போயிடறாங்க என்று. இது தான் விஷயமா, நான் கூட உங்க அம்மா மீது பாசமோ என்று தான இத்தனை நாள் நினைத்துக் கொண்டு இருந்தேன், இப்ப தெரிஞ்சிடுச்சே செல்வி செல்லம். மாமா வந்து உன்னை தூக்கிட்டு வரணும் தான் அப்பப்ப கிளம்பிடறையா ?”  என்று கிண்டலாக பேசினவுடன்  செல்வி  வெட்கப்பட்டு “சும்மா இரு தேனு. மானத்த வாங்காத !அத்தை என்ன நினைப்பாங்க” அடக்கினாள்.

“பார்த்தாயா! நான் உன்னை கேள்வி  கேட்டால் அப்படியே பேச்சை மாற்றிவிட்டாய்.என்ன விஷயம்? எதாவது விசேஷமா?”

இப்ப இருக்கும் நிலையில் அது ஒன்று தான் குறைச்சல். அது தான் ரெடி மேட் குழந்தைக்கு தாயாக இருக்கேனே என்று மனதில் பொருமிக் கொண்டு இருந்தாள்.

“கனவுலகிற்கு போயாச்சா? என்ன தான் தினமும் பத்து தடவ பேசினாலும் அருகில் இருப்பது போல வருமா கண்மணி?”

“நான்  பத்து தடவை! சரி. உனக்கு சான்ஸ் கிடைத்து இருக்கு  .விடுவியா என்ஜாய்”  என்று கண்மணி பல்லைக் கடித்தாள்.

“என்னிடம் எதுக்கு பாயற? உன்  தோழி பவி தான் சொன்னா ?எந்நேரமும் அவ புருஷனுடனே போனிலும், மடி கணினியிலும் பேசிக்கிட்டு  இருக்கா . கூப்பிட்டாலும் எடுப்பதில்லை வருத்தப்பட்டாள். உங்க ஆத்தாவும் அப்படி தான் சொல்லுச்சு “.

கண்மணி மனதில், ப்ராஜெக்ட் விஷயமா வேலை செய்வதை இப்படி நினைத்துக் கொண்டார்களா? சந்தோசம் .

நான்  வந்து ரெண்டு வாரம் மேல் ஆகிவிட்டது. நிம்மதி என்று இருக்கானா? அவன் இப்படி இருக்க, அங்க அவன் வீட்டுக்கு  எப்படி போவது. அத்தை ,அதிதி ,பிரவீன் ஏன் மாமா கூட சீக்கிரம் வா என்று அழைத்து விட்டார்கள் .ஒரு வார்த்தை வா என்று கூறினானா? அங்க போனா தான படிப்பை படித்து முடிக்க  முடியும். கஷ்டப்பட்டு படித்ததுக்கு டிகிரி கண்டிப்பா வாங்கிடனும் .இவனுக்காக  எல்லாம் பாதியிலே விட கூடாது .

ஏற்கனவே இன்டர்ன் வேளைக்கு வர சொல்லி இருந்த கம்பனி வேற பல தடவை அழைத்து விட்டார்கள் .எப்படியும் இங்க இருக்க  விட மாட்டாங்க. அப்பா, அம்மா பல தடவை முகத்துக்கு நேராகவே எப்ப கிளம்பற கேட்டாச்சு .இனி என்ன சொல்லி தள்ளி போட .

“கண்மணி பேச்சையே காணோம். உன் வீட்டுகாரர் நியாபகம் வந்திடுச்சா! ஷ்யாம் வந்து இருக்கான் பாரு .தோட்டத்துக்கு போயிடு வரேன் போனான்” .

“நானும்  போயிடு வந்திடறேன் அத்தை!”

மாலை நேரம், கீழ் வானம் சிவந்து , சில் என்று தென்றல் காற்று இதமாக வீசிக் கொண்டு இருந்தது . இரு புறமும் தென்னை மரங்கள் , அழகிய ஓடை, அதை எல்லாம் ரசித்த படி வரப்பில் நடந்து  போகும் போது ஆடு குட்டி கண்ணில் பட்டது. அதை எப்படியாவது தூக்கிட வேண்டும் என்று துரத்திக் கொண்டு போனாள்.எங்க போற உன்னை விட போறது இல்லை என்று துரத்தி பிடித்து தூக்கின போது, சித்து  வண்டியில் அமர்ந்த படி அவன் மனைவியை ரசித்து,  இதை எல்லாம் படம் பிடித்துக் கொண்டு இருந்தான்.

அதை தூக்கினவுடன் இவள் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம் . இங்க இருக்கும் மனிதனை கொஞ்சாம, அதை தூக்கி கொஞ்சுவதை பாரு என்று சித்துக்கு பொறாமை உணர்வு எட்டி பார்த்தது.

கண்மணி, சின்ன சின்ன விஷயத்தையும் ரசித்து செய்வதை கண்டான். சின்ன  பட்டாம்பூச்சியை  கூட துரத்திக் கொண்டு போறாளே! துள்ளி திரியும் கண்மணியை  எண்ணி வியந்தான் . இவளா அங்க வீட்டில் அமைதியா இருப்பது.

அங்கு இருந்த ஊஞ்சலில் அத்தனை வேகமாக ஆடினாள்.அவள் ஆடின  வேகத்தை கண்டு சித்துக்கு மயக்கம் வருவது போல ஆனது.

அவள் முகத்தில்  தான் எத்தனை சந்தோசம். எத்தனை அழகு .என் முகத்தில்  எப்போது இப்படி சந்தோஷத்தை காணலாம் . இயற்கையை ரசிப்பதிலா?அதற்கு எல்லாம் எங்க நேரம்.

தொழிலில் பல கோடி மதிப்புள்ள காண்டராட் கிடைத்தால் தான ?

எந்நேரமும் இயந்திரமாய் ஓடும் அவன் வாழ்க்கையை பற்றி அப்போது தான் நினைத்து பார்த்தான். அப்படி ஓடுவதால் அவனுக்குள் இருக்கும் ரசிக்கும் தன்மையே மறந்து விட்டதா?

முடிந்த அளவு வாழ்க்கையை ரசித்து, அனுபவித்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.அவன் மனம் அப்போதே பட்டாம் பூச்சி  பின்னால் செல்லும் அவன் மனையாள் பின்னால் சென்றது .

அப்போது தான் கண்மணி தலையில் கட்டை கவனித்தான் .என்ன ஆச்சு! ஏன் யாரும் எதுவும் சொல்லவில்லை .எப்படி அடிபட்டுச்சு என்று அவன் அறியாமல் பதற்றம் தொத்திக் கொண்டது .

சிவம் அழைத்து “மாப்பிள்ளை எங்க இருக்கீங்க !அப்பவே அருகே , ஊர் எல்லைக்குள் வந்தாச்சு சொன்னீங்க.வழி மாறி போய்டீங்களா ? மாடசாமி  அவசர சோலியா  கிளம்பிட்டான். நாளை காலையில் தான் அவனை  பார்க்க முடியும். இருட்டின பிறகு இடத்தையும் ஒழுங்கா பார்க்க முடியாது .காலையில் நேரத்திலே பார்த்துக்கலாம்”.

போன தடவை சிவமிடம் மொத்தமாக இடம் விலைக்கு வந்தால் அவனிடம் தெரிவிக்கும் படி சொல்லி இருந்தான்.மக்களுக்கு கேடு விளைவிக்காத ஒர்கனிக் பார்மிங் விவசாயம்  செய்யவேண்டும் என்று அவரிடம் தெரிவித்து இருந்தான் . அவனுடைய நெடுநாளைய கனவும் கூட. விவசாயத்தில் சிவமும் முழு மனதாக உதவி செய்வதாக தெரிவித்தார் .

அதற்காக நேற்று சித்துவை அழைத்து விவரம்  தெரிவித்த போது பல வேளைக்கு நடுவிலும் கண்மணியை பார்க்கும் சாக்கு கிடைத்ததை எண்ணி உடனே கிளம்பினாள். ஏற்கனவே ஒரு நாளா, என்ன ஆச்சு என்று மண்டை உடைத்துக் கொண்டு இருந்தவனுக்கு அல்வா சாப்பிடுவது போல ஆனது.

அவர் அழைத்த பிறகு தான் அவன் வழி மாறி, ரெண்டு ஊர் அடுத்து இருக்கும் பூவரசன்பாளையத்துக்கு வந்தது தெரிந்தது .

கண்மணி  பாட்டி ஊர் தான இது. இவ இங்க தான் இருக்கிறாளா? இங்க  எப்ப வந்தா? என்னை அறியாமலே என் கால்கள் என் செல்ல குட்டியை தேடி தானா வந்திடுச்சு போல ..

“என்ன மாப்பிளை சத்தத்தையே காணோம் !வழி தான் மாறி போய்டீங்க தெரியுது . எங்க இருக்கீங்க. அடையாளம் சொல்லுங்க .நம்ம கதிரை அனுப்பட்டுமா?”

“மாமா நான் இருப்பது பூவரசன் பாளையம்”.

அவர் சந்தோஷமாக “அட, எங்க மாமியார் ஊருக்கு போய்டீங்க போல! அங்கேயே இருங்க .பார்த்தீங்களா உங்களை அறியாமலே  என் பெண் இருக்கும் இடத்துக்கு போய்டீங்க, இன்று காலை தான் தேனு அங்க போனா”  என்று வெடி சிரிப்பு சிரித்தார் .

“அங்கேயே இருங்க .மல்லி கணவர் சேகரை அனுப்பறேன்.”.

“இல்லை  மாமா !வேண்டாம் .வேண்டாம்” .

நான் இவளை பார்க்க வந்த மாதிரியே ஆகிடுச்சே!

குரல் உள்ளே போய்  “நான் கண்மணியை பார்த்திட்டேன் . அவளுடனே போய்க்கிறேன்” .

சிவம் வியப்பாக “அட, அதற்குள் தேனுவை பார்த்தாச்சா ! ரொம்ப வேகம் தான் .நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்க வரேன் .இன்று இங்க தங்கிட்டு நாளை இடத்தை  பார்த்துவிட்டு ஊருக்கு கிளம்பலாம்.”

சிவம் மனைவியிடம்  “பார்த்தியா செல்லம்மா! நீ தான்  இந்த ரெண்டு வாரமா  என்னமோ ஏதோ என்று புலம்பிக் கொண்டு இருந்த . அது மாதிரி எல்லாம் ஒன்றும் இல்லை .தேனு அங்க இருப்பதை அவரிடம் சொல்லி அங்கேயே  வரசொலிட்டா போல. என் பெண் விவரமானவ தான்.  மாப்பிளை  அங்க தான் இருக்காரு .உங்க அப்பாவிடம் சொல்லி விருந்துக்கு ஏற்பாடு செய்ய சொல்லு .பேத்தியும், அவ மாப்பிளையும் வரவே இல்லை புலம்பிக்கிட்டு இருந்தாரே !” என்று போனை அணைக்காமல்  சந்தோஷமாக மகளை பற்றி பேசியது அனைத்தும் சித்து காதில் விழுந்தது .

என் மீது சந்தேகம் இருந்தும் அவள் அப்பா, அம்மாவிடம் கேட்காமல் இருக்காளே! ஆச்சரியம் தான் என்று எண்ணிக் கொண்டான்.

அவரிடம் பேசிக் கொண்டே கண்மணியை நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தான் . கண்மணி செயல் ஒவ்வொன்றும் அவனை ஈர்த்தது . சித்து இதுவரை  கிராமங்களுக்கே சென்றது கிடையாது .பிறந்தது ,வளர்ந்தது எல்லாம் சிடியில் தான். இந்த மாதிரி இயற்கை காட்சியை நகர்ப்புறங்களில் எப்படி காண முடியும். எந்நேரமும் வேலை என்று பறந்து கொண்டு இருப்பவன், அதுவும் பாதி நேரம் ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங் என்று களிப்பவனுக்கு இந்த காட்சி எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக, விருந்தாக  அமைந்தது.

கண்மணி, அவர்கள் தோட்டத்தில்   இருக்கும் அரசமரத்தடி விநாயகருக்கு ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து  அபிஷேகம் செய்து ,மாலை போட்டு  விளக்கு ஏற்றி கண்ணில் நீர் வழிய வேண்டிக் கொண்டு இருந்தாள். அதை பார்த்து சித்து மனம் உருகியது . எதற்கு இந்த அழுகை. என்னால் தான .பார்த்தால் கொஞ்சம் இளைத்து தெரிகிறாளே! இவ சாப்பிடும் அழகு தான் தெரியுமே !

அம்மா சொன்னாங்க என்பதற்காக  படிக்கும்  சின்ன பெண்ணை கல்யாணம் செய்து இருக்கவே கூடாது . என்ன? ஏது ? என்று புரியாமல் அவள் வருந்துவது புரிந்து இருந்தும் சித்துவினால்  ஒன்றும் செய்ய முடியாத நிலை .இன்னும் கொஞ்ச நாள் தான் . 

ஷ்யாமை அங்கு காணாமல் வீட்டுக்கு கிளம்பினாள். எதையோ யோசித்த படி சென்றவள் எதிரே ஏதோ உருவம், கண்டு பின்னால் நகர்ந்தாள்.

யார் நம்ம தோட்டத்தில் இப்படி என்று பார்த்த போது சித்து சிரித்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தான் .

இவனா? இவர் எங்க இங்க? எப்படி? எதற்கு வந்தார் ? என்ற குழப்பத்தை அவள் முகம் தெளிவா படம் பிடித்து காட்டியது. ஒன்றும் பேசாமல் அமைதியாக செல்வதை பார்த்து சித்து கோபம் தலைக்கு ஏறியது .ஒரு சிரிப்பு சிரித்தால் என்ன? என்னை பார்க்க எத்தனை பேர் காத்துக் கொண்டு இருக்காங்க.சின்ன பெண் பார்த்தால் ரொம்ப தான் துள்ளரா?

ஏனோ அவளிடம் கடுமையாக நடக்க மனம் வரவில்லை. அவன் கோபத்தை ஒதுக்கி, வேகமாக செல்லும்  அவள் கைகளை பற்றினான் .

“கண்மணி  நில். ஒரு நிமிஷம் , நான் சொல்வதை கேளு . உனக்கு தாலி  கட்டிய கணவர் என்று வேண்டாம். ஆறு மாதமா ஒரே அறையில், ஒரே வீட்டில் இருக்கிறோம் என்ற முறையில் என்னை பார்த்தவுடன்  கொஞ்சம் அரை இன்ச் சிரிப்பு  சிரித்து இருக்கலாம் .

அப்படி இல்லையா, நீ கண்களால் சிரிக்கும் ஸ்பெஷல் சிரிப்பு . அது மட்டும் போதுமே? அதுவும் இல்லையா? என் சட்டையை பிடித்து ,எங்க டா வந்த, கோபமாக ஒரு கேள்வி? இப்படி எதுவும் இல்லாமல் பஸ் ஸ்டாப்பில் நின்று இருக்கும் ரோடு  சைடு ரோமியோவை பார்த்து முறைப்பது போல முறைத்துக் கொண்டு போனா என்ன டீ அர்த்தம்.”

“டீ சொல்லும் வேலை எல்லாம் வேண்டாம்” என்று அவனை முறைத்தாள்.

அதற்குள் அவனுக்கு பல போன் அழைப்புகள் வந்தது .அதை பிடுங்கி  அப்படியே பக்கத்தில் இருக்கும் கிணற்றில் போட்டால் என்ன என்று  கூட கண்மணிக்கு தோன்றியது .

எதற்கு இந்த எண்ணம். அவளுடன் மட்டுமே அவன் பேசணும் என்ற பொறாமையிலா?

அப்படி எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. என் நேரத்தையும் சேர்த்து  வீண்  செய்யறானே அதுக்கு தான்  என்று சொல்லிக் கொண்டாள்.

“என் பெண்டாட்டியை நான் அப்படி தான் டீ போட்டு பேசுவேன்”

அவள் முகம் கோபத்தில் சிவப்பதை கண்டு “கூல் ,கூல்.நான் சொல்வதை கொஞ்சமாவது கேளு . உனக்கு இன்னும் ஒரு வருடம் படிப்பு இருக்கு. என் மீது கோபம் கொண்டு அதை நிறுத்திடாத .உன்னை நான் எதற்கும்  தொந்தரவு செய்ய மாட்டேன் .

படித்து முடித்த பிறகு  நீ என்ன முடிவு செய்யறையோ அதற்கு நான் கட்டுபடறேன். மூளை என்று இருந்தால் நான் சொல்வதை கொஞ்சம் யோசி.”

பேச்சை பாரு. இவனுக்கு மட்டும் பொங்கி  வழிவது போல பேசறான் . சுரண்டுவதற்கு கூட ஒன்று இல்லை என்று தெரியாது போல. ஓங்கி நடு மண்டையில் நங் என்று குட்டினால் என்ன  என்று   தோன்றிய எண்ணத்தை மிகவும் கஷ்டப்பட்டு  கட்டு படுத்தினாள்.

அமைதியாக  லுக்  விட்டே கொள்ளறாலே ராட்ஷசி .என் திட்டத்துக்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே என்று வேண்டி “என்னை பற்றி உங்க வீட்டில் சொல்லாமல் இருப்பதுக்கு தேங்க்ஸ். அம்மாக்காக கொஞ்ச நாள் நாம ஒன்றா ஒரே வீட்டில் இருந்து ஆகணும்.

 பிரவீன், அதிதி கல்யாணம் முடிந்து அவங்களுக்கு  ஒரு பேரன், பேத்தி வந்திடுச்சினா அப்புறம்   நம்மளை கண்டு கொள்ள மாட்டாங்க. அதற்கு பிறகு உன் வழியில் நீ செல்ல, உனக்கு விவாகரத்தும் கொடுக்க தயார்.”

“அவங்களுக்கு தான் உங்க மூலம் பேரன்  இருக்கே! அப்புறம் நான் எதற்கு. அதனால்  என்னை வேண்டாம் தான் சொல்லுவீங்க . உங்க தம்பி ,தங்கை கல்யாணம், உங்க வேலை எல்லாம் முடித்து எனக்கு விவாகரத்து கொடுக்க போறேன் சொல்லறீங்க !குட்”.

“நான் என்ன சொல்லறேன்! நீ என்ன சொல்லற? புரிஞ்சுக்கோ தேனு”

“ரெண்டும் ஒன்று தான்” .

கண்மணி மனதில் இப்பவும் அவன் வாழ்க்கையில்  என்ன நடந்தது என்று சொல்லறானா  பாரு. அத்தனை நம்பிக்கை என் மீது . கண்டிப்பா பாராட்டனும் என்று திட்டி வெளியே இயல்பாக ” நான் சொல்ல  நினைத்ததை தான் நீங்களும் சொல்லறீங்க. நான் உங்க டீலுக்கு ஒத்துக்கிறேன் .இன்னும் ஒரு வருஷம் என்னை பொறுத்துக் கொண்டால் போதும். படித்து வேலை தேடி கிளம்பிடுவேன். அதற்கு பிறகு நீங்க சொன்னாலும் இருக்க மாட்டேன்.”

கிராமத்தில் வளர்ந்தவள். விவாகரத்து எல்லாம் வேண்டாம் , கொடுக்க மாட்டேன், நம்ம வீட்டுக்காக கடைசி வரை ஒன்றாகவே  இருக்கலாம், வாழலாம்  என்று சொல்லுவா எதிர் பார்த்து ஏமாந்தான் .

எப்படியோ, இது ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம் என்று பொறுமை காத்தான்.

அவள் முகத்தை கண்டு “கொஞ்சம் சிரிக்கலாமே கண்மணி . ஒரு நண்பனா நினைக்கலாமே” என்று கை கொடுத்த போது அவள் யோசித்த படி கைகளை நீட்டினவுடன் பற்றிக் கொண்டான் .

“சரி, இப்ப சொல்லு தலையில் என்ன காயம். எப்படி ஆச்சு” என்றவுடன் முறைப்பதைக் கண்டு “ப்ளீஸ்! நண்பனிடம் சொல்லலாமே.”  அவன் பிறந்த நாள் அன்று ,பழனி சென்ற  போது அவள் மயக்கம் போட்டு விழுந்ததை பற்றி கூறினாள்.

“முட்டாள். படித்தவ தான? உன்னை யார் விரதம் இருக்க சொன்னது . முருகன் வந்து சொன்னாரா? அறிவே கிடையாதா?”

கண்மணி அழுத்தமாக “என் வாழ்க்கையில் நண்பர்களுக்கும் எல்லை உண்டு”

சரியான அழுத்தக்காரி என்று திட்டி ‘சாரி’ என்று மன்னிப்பு வேண்டினான்.

“ஒ, இப்ப தான புரியுது. அம்மா இதுக்கு தான் ஸ்கேன் எடுக்க சொன்னாங்களா? நான் என்னமோ ஏதோ என்று” சிரிப்பை அடக்க பெரும் பாடு பட்டான் .

கண்மணி யோசனையாக “….என்னமோ ஏதோ என்றால் …….”

“நீ எதோ வாந்தி எடுத்து, அதை அவங்க  தப்ப அர்த்தம் கொண்டு …… எனக்கு கூட  அப்படியா இருக்குமோ சந்தேகம்? ஆனா எப்படி? நீ தான் என்  கிட்ட கூட வரலையே என்று யோசித்தேன்” என்றவுடன்

 “ச, பேச்சை பாரு  உங்களை எல்லாம் சும்மா விட கூடாது ” என்று துரத்திக் கொண்டு ஓடினாள்.

“அடிக்காத டீ ! என் செல்லம் ,பட்டு” என்று கெஞ்சினான்

 “கல்யாணம் ஆன ஆறு மாதத்தில் இதை தான எதிர் பார்க்க தோனும். நீ கன்சீவா இருக்க, அதை பற்றி தான் பேசறாங்க நினைத்தேன். நல்ல வேலை நான்  எதையும் உளறி கொட்டல”.

கண்மணி  மூச்சு வாங்க ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள். “எனக்கும் கால் வலிக்குது. கொஞ்சம் நகர்ந்து உட்காரு” என்று மிரட்டி அவளுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டான் .

“ரெண்டு பேர் எப்படி? நான் …”

“ஒன்றும் வேண்டாம் இப்படியே உட்கார். உன் தோழி கவியுடன் அமர இப்படி தான் யோசிப்பாயா?” என்று அவள் வாயை அடைத்தான்.

நண்பன் சொன்னது தப்ப போச்சே!

அவளுடன் நெருங்கி அமர்ந்து ஊஞ்சல் ஆடிய படி “நமக்குள் ஒரு டீல் வெச்சுக் கொள்வோமா? எங்க இருந்தாலும் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இரவில் பேசிடனும்.”

கண்மணி சந்தேகமா “எதுக்கு?” என்ற போது அவள் தலை காட்டி “இந்த மாதிரி”  அவள் வயிற்ரை பார்த்து “தப்பா அர்த்தம் கொண்டு மாட்டிகிட்டு முழிப்பதை தடுக்கலாமே என்று தான். நமக்குள் இருக்கும் உறவை பற்றி யாரிடமும் சொல்ல  கூடாது. நாலு சுவருக்குள் எப்படியோ? எல்லார் பொருத்தவரை முக்கியமாக நம் வீட்டை பொறுத்த வரை  நாம் கணவன் மனைவி.”

கண்மணி “இப்போதில் இருந்து சண்டை போட்டால் தான பிரியும் போது சந்தேகம் வராது”.

இதில் எல்லாம் விவரம் தான். பிரிவதிலே குறியா இருக்காளே ? 

மாலை  அவள் அப்பா சிவம், சந்தேகமாக வருந்தி  பேசினதை பற்றி  கூறினான். இப்போதில் இருந்தே அவர்களை  வறுத்த  எனக்கு மனம் இல்லை கண்மணி. ஒரு வருடம் கழித்து அப்புறம் என்ன செய்யலாம்  யோசிக்கலாம்.

வேற வழி இல்லாமல் “ஒ கே” என்று ஒத்துக் கொண்டாள்.

“அப்ப, கண் கொள்ள காட்சி! நானும் கையை விடுவீங்க, பேசி முடிபீங்க பார்க்கிறேன் ம்ம்ம் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம் . ஊஞ்சல் ஆடிய படி ரொமான்ஸ்.. நீங்க பேசி முடிப்பது போல  இல்லை என்று தான் அருகில் வந்தேன். என்ன மேடம்! ரெண்டு வாரம் கழித்து சித்துவை பார்ப்பதால் பேசிகிட்டே இருக்கணும் தோணுதோ” .

“சிவ பூஜை கரடி டா “ என்று சித்து ஷ்யாமை கட்டிக் கொண்டான் .

“அடபாவி, யாரை கரடி சொல்லற?”

“உங்களை தான் அத்தான். சரியா தான சொல்லி இருக்காரு ..”

ஷ்யாம் முறைத்தபடி “என்ன ரெண்டு பேரும் விளையாடறீங்களா?அவனுக்கு ஜால்ராவா?”

“என் புருஷனுக்கு நான் ஜால்ரா போடாம யார் போடுவா அத்தான்? நான் எப்போதும் அவர் கட்சி தான்” அவள் சொன்னதைக் கேட்டு  சித்து கண்கள் ஒளிர்ந்தது .

அதை கண்ட கண்மணி  உடனே “ஒரு வேலையை ஒத்துகிட்டா அதை கட்சிதமா செய்யணும் ல ..என்ன, நான் சொல்வது சரி தான”

சித்தார்த் முகம் காற்று போன பலூன் போல ஆனது . இவள் ஷ்யாம் முன் நடிக்கிறாளா?

ஷ்யாம் “அவன் என்ன சொன்னாலும் அவனுக்கு  ஜால்ரா தட்டுவதா ஒத்துக் கொண்டாயா? நல்ல பெண்டாட்டி! இப்படி பெண்டாட்டி கிடைக்க கொடுத்து வைத்து இருக்கணும் சித்து சார் .புருஷன் தான் பெண்டாட்டிக்கு ஜால்ரா போடுவதை பார்த்து இருக்கேன் .இங்க தலை கீழா இருக்கே . எஞ்சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் மாப்பிள்ளை .

மாமாவையே இங்க அனுப்பி இருக்கணும் .நான் வந்தேன் பாரு என்னை சொல்லணும் . வாங்க விருந்து தயார் ஆகிடுச்சு” என்று அழைத்துக் கொண்டு நகர்ந்தான் .

சித்தார்த் கண்மணிக்கு தட புடல் விருந்துக்கு ஏற்பாடு செய்தனர் . சித்து எல்லாரிடமும் மிகவும் இயல்பாக பழகினான். எல்லாரிடமும் அவர்களுக்கு  தகுந்தது போல பேசினான் . இந்த மாதிரி உணவை சாப்பிட்டதே இல்லை என்று பாராட்டினான். சூப்பர் மாப்பிளை என்ற பட்டத்தை பெற்றான் .

பிழைக்க  தெரிந்தவன் . எப்படி பேசி கவுக்கிறான் பாரு என்று கண்மணியால் வியக்காமல் இருக்க முடியவில்லை .

அவனையே இமைக்காமல் பார்க்கும் கண்மணியை பார்த்து கண் சிமிட்டினவுடன் கண்மணி கன்னங்கள் அழகா சிவந்தது. அதை அவள் அத்தை , தாத்தா அனைவரும் கண்டு கொண்டனர்.

அவர்கள் இருவரும் அன்று அங்கு தான் தங்கி செல்லனும் என்று கட்டாயபடுத்தி தங்க வைத்தனர். கண்மணியுடன் கொஞ்ச நேரம் செலவு செய்ய எண்ணிய சித்தார்த் அவளை பார்த்த படி “அதிகமா  சாப்பிட்டேன். நான் கொஞ்சம் நடந்து கொண்டு வரேன்” என்ற போது அவள் தாத்தா “கண்மணி, மாப்பிள்ளையுடன் துணைக்கு போயிடு வா. வழி மாறிட போறாரு!”

குழந்தைகளுடன் மும்மரமாக விளையாடிக் கொண்டு இருந்தவள்  சித்துவை கண்டு கொள்ளாமல் “அது எல்லாம் போக மாட்டார் தாத்தா. அவர் பத்து தடவை உலகத்தை சுற்றி  வந்தவர் . இந்த பூவரசன் பாளையத்தில் தான் தொலைந்து போக போறாராக்கும்.”

“பக்கத்தில் தான் தாத்தா போக போறேன் . கொஞ்ச நேரத்தில் வந்திடுவேன்” என்று வெளியேறினான் .

விவரம் புரியாத பெண்ணாக இருக்காளே என்று அவள் பாட்டி தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தாள்.

ரம்மியமான இரவு பொழுதில் சில் என்று காற்று முகத்தில் மோத நிலவில் ஒளியை ரசித்த படி நடந்தவனுக்கு அவனை  யாரோ தொடர்வது போல தோன்றியது. ஒரு வேலை கண்மணி தான் வராளா என்று ஆசையாக திரும்பின போது ஏமாற்றமே அடைந்தான்.

இரவு வெகு நேரம் ஆகியும் சித்துவை காணாமல் கண்மணி தவித்தாள். பத்து நிமிடத்தில் வரேன் சொல்லி ஊருக்கே கிளம்பிட்டாரா ? நான், அவர் கூட போகாத கோபத்தில் கிளம்பி இருந்தாலும் ஆச்சிரியபடுவதற்கு இல்லை. வண்டி இங்க தானே இருக்கு .

“ஷ்யாம் இன்னும் அவரை காணோம். எங்கயாவது வழி மாறி போய் இருக்க போறாரு!”

அவள் தவிப்பை பார்த்து  ஷ்யாம் சிரித்த படி “அப்பவே தாத்தா போக சொன்னாரே! நீ தான் கேட்கவில்லை” .

“கிண்டல் செய்யாத அத்தான். எனக்கு பயமா இருக்கு .வா பார்த்திட்டு வருவோம்” என்று கவலையாக கிளம்பினாள்.

அங்கே சென்ற போது……

Advertisement