Advertisement

அத்தியாயம் 23
தீவாளி பட்டாசு சத்தம் நாடெங்கும் வெடிக்க ஆரம்பித்திருந்த நேரம். சாரு லஹிருவோடு சேர்ந்து பட்டாசு வெடிக்கலானாள். தீபாவளியன்று கிருஷ்ணன் நரகாசூரனை வீழ்த்தி வெற்றிப் பெற்றது போல் சாருவின் மனதில் இருந்த அத்தனை சங்கடங்களும் மறைந்து அவள் லஹிருவை முழுமனதாக ஏற்றுக் கொண்டு விட்டாள். 
ஆரம்பத்தில் அவன் எது செய்தாலும் குழப்பமாகவும், சந்தேகமாகவும் மட்டும்தான் அவளுக்கு இருந்தது. இங்க வந்து எதற்காக நடிக்கிறான் என்ற கோபம் இருக்கவே வீட்டில் இவனோடு பேச முடியாது என்று ஊற்றுக்கு குளிக்க செல்லலாம் என்று கணவனை அழைத்து சென்றாள் சாரு.
தண்ணீரை பார்த்ததும் “இந்த மலைல இப்படியொரு ஊத்து இருக்கிறது எனக்கு தெரியலையே” என்றவாறே உடைகளை கலையலானான் லஹிரு.
“இங்க வந்தும் எதற்க்கு நடிக்கிற? இங்கதான் பாட்டி இல்லையே” முறைத்தவாறே கேட்டாள் லஹிருவின் மனையாள்.
இவளிடம் பேசிவிட வேண்டும். பேசி புரிய வைத்து விடலாம் என்று லஹிரு நினைத்திருக்க, அதற்கான சந்தர்ப்பம் இரவு அமைந்தும் பேசாது அவளை சீண்டியே நேரத்தை கடத்தி இருந்தான்.
அவளோடு இருந்தால் நேரம் போவதே தெரிவதில்லை. பேச வேண்டியதை பேசாமல் எதை எதையோ பேசுவதை அவனும் உணராமல் இல்லை. அது அவனுக்கு பிடித்தும் இருந்தது.
அவளே கேட்டதில் “என்ன பார்த்தா நடிக்கிறது போலவா தெரியுது?” புன்னகைத்தவன் வேறெதுவும் பேசாமல் குளிக்கலானான்.
“என்ன இவன் நடிக்காதே என்றால் சரி என்று சொல்ல வேண்டும் அல்லது நடிக்கவில்லை என்று சொல்ல வேண்டும். குழப்பத்தில் ஆழ்த்துவது போல் பதில் சொல்கிறான் என்று மீண்டும் கோபம் கொண்டாள்.
சாரு குளிக்கவில்லை கல்லில் அமர்ந்து தண்ணீரில் காலை நனைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
இரண்டு கல்லுகளுக்கு நடுவே சிறிய குளம்போல் இருந்த இடத்தில் அசையாத நீரில் மீன்குஞ்சுகள் நீந்துவதைக் கண்டவள் “ஐ… மீன்குஞ்சு” என்று அவைகளை பிடிக்க போக
“அவள் மேல் தண்ணீரை அடித்தவன் நல்லா பாரு அது மீன் குஞ்சே இல்ல தவள குஞ்சு” என்றான் லஹிரு.
மீன் குஞ்சுகள் ஓடும் நீரில் எதிர் நீச்சல் போடும். இவைகள் ஒரே இடத்தில் தேங்கி இருக்கும் நீரில் நீந்திக் கொண்டிருப்பதை பார்த்து அவன் சொல்வது உண்மை என்று புரிந்தாலும், மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கவே 
“உனக்கு என்ன தெரியும்?” என்பதை போல் முறைத்தவள் தண்ணீரில் இறங்க, கல்லில் படிந்திருந்த பாசி வழுக்கி தண்ணீரில் விழுந்திருந்தாள்.
தண்ணீர் முழங்கால் அளவு கூட இல்லை. கால் வைக்கும் இடமெல்லாம் கற்கள் நிறைந்திருக்க, சாரு விழுந்ததும் கல்லில் தான். விழுத்தவள் கல்லில் தொப்பென்று அமர்ந்து விட்டாள்.
“ஹேய் பார்த்து” வேகமாக லஹிருவால் அவளை அடைய முடியவில்லை.
தண்ணீரோடு சேர்ந்து கல்லில் விழுந்ததில் அதிர்ந்தவள் எழவே இல்லை.
“ஒன்னும் இல்லையே ஒன்னும் இல்லையே? வலிக்குதா? உன்னால எந்திரிக்க முடியுமா?” லஹிருவின் குரலில் கண்களில் நிறைத்த நீரை ஓடும் நீரை கொண்டு அடித்துக் கழுவிக் கொண்டாள்.
இடுப்பில் சுர்ரென்று வலி பரவ எழுந்துகொள்ளவே பயமாக இருந்தது.
“ரொம்ப நேரம் தண்ணீருல இருக்காத” என்றவாறே அவளை மெதுவாக தூக்கி கைத்தாங்கலாக அழைத்து வந்து தண்ணீருக்கு வெளியே உள்ள கல்லில் அமர்த்தினான்.
கால் பிசகி விட்டதா என்று ஆராய்ந்தவன், இடுப்பு பலமா பட்டதா என்றும் கேட்டான்.
வலியை பொறுத்துக் கொண்டு இல்லை. என்று வேகமாக தலைதசைத்தாள் சாரு.
அவள் முகம் பார்த்தவாறே “எதுவானாலும் சொல்லு” என்றவனின் குரலில் பதட்டம் கூடி இருந்தது.
அன்று அவள் வழுக்கி விழுந்த பொழுதும் இதே பதட்டம் அவனிடம் இருந்தது கூடவே அவளை திட்டவும் செய்தான். இன்று திட்ட மட்டும் இல்லை. இத்தனைக்கும் அவன் சொன்னதை கேளாமல் சென்றதற்கு அவன் திட்டி இருக்கலாம்.
காதலை உணர்ந்துகொள்ள முன் கோபப்பட்டவனால் காதலை உணர்ந்து கொண்ட பின் அவள் மீது கோபப்பட இயலவில்லை என்பதுதான் உண்மை.
“வீட்டுக்கு போலாமா?” குளிர்ந்த நீர் வேறு உடலை ஊசியாக குத்த சாருவுக்கு  உடல் மேலும் வலிப்பது போல் தோன்றியது.
“ரொம்ப வலிக்குதா? உன்னால நடக்க முடியுமா?” பதட்டம் கொஞ்சம் கூட குறையாமல் கேட்டவன் சாருவின் கையை பற்றி இருந்ததை விடவே இல்லை.
வலியிலும் அவள் அதை கவனித்தாள்.
“வீட்டுக்கு போய் தைலம் ஏதாவது பூசினா சரியாகிடும்” என்றவள் அவனை பிடித்தவாறு வீடு நோக்கி நடந்தாள்.
வீட்டுக்கு சென்ற உடனே பஞ்சவர்ணத்திடம் சொல்லி உடனே தைலம் தடவி விட சொன்னவன். வலி குறையவில்லையென்றால் உடனே மருத்துவரிடம் செல்லலாம். சொல்லாமல் இருக்காதே என்றும் கூறினான்.
படுத்துக்க கொண்டிருந்தாள் சாருவுக்கு வலிக்கவே இல்லை. ஆனால் படுக்கையை விட்டு எழுந்து அமர முடியாமல் திண்டாடினாள். மருத்துவரிடம் செல்லலாம் என்றால் அவளோ இரண்டு நாட்களில் சரியாகி விடும் என்றாள்.
ஆனால் லாஹிருவால் அவள் படும் வேதனையை பார்த்துக் கொண்டு இருக்க இயலவில்லை. மருத்துவரிடம் அழைத்து சென்று எஸ்ரே வேறு எடுத்து பார்த்து விட்டான். எலும்பு முறிவு எதுவும் இருக்கவில்லை. இருந்தால் வீக்கம் இருந்திருக்கும். சதை பிடிப்புதான் என்று மாத்திரைகள் சில எழுதி கொடுத்திருந்தார்.
இரண்டு நாட்களாக அவளை எந்த வேலையும் செய்ய விடாது இவனே அவளுடைய வேலைகளை பார்கலானான்.
அவளால் அமர்ந்து உண்ண முடியவில்லையென்று இவனே ஊட்டியும் விட்டான்.
“இல்லை அத்த ஊட்டி விடுவாங்க” சாரு மறுக்க,
“ஏன் நான் ஊட்டி விட்ட சாப்பாடு தொண்டைல இறங்காதா? பேசாம சாப்பிடு டி” புன்னகைத்தவாறுதான் கூறினான்.
அவளால் அவனை முறைக்கக் கூட முடியவில்லை. இவள் கொஞ்சம் அசைந்தாலும் ஏதாவது வேண்டுமா என்று கேட்பான்.
அவள் இருமினால் போதும் தண்ணீரோடு வந்து நிற்பான். சாய்ந்து ஒரு கையை நிலத்தில் ஊன்றி தான் அவள் தண்ணீரே பருகினாள்.
“பொறுமையா குடி ஒன்னும் அவசரமில்லை” என்றவாறு இவன் டம்ளரை பிடித்திருந்தான்.
அவன் நடிக்கவில்லை என்று மட்டும் தெரிந்தது. ஆனால் தன்னை விரும்புகிறான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. கணவனை கடமையை நிறை வேற்றுகின்றானா? என்று அவன் அவளுக்காக செய்பவைகளை பார்த்திருப்பாள். 
வளமை போல் பஞ்சவர்ணம் நாடகம் பார்க்க வெளியே சென்றாள். முத்துவை அவள் அழைக்கவே இல்ல. அவனும் புரிந்துகொண்ட கிளம்பி விட்டான்.
என்னதான் பகல் முழுக்க அவள் கூடவே இருந்தாலும். இரவில் கிடைக்கும் அந்த அரைமணிநேர தனிமை வித்தியாசமான உணர்வை கொடுத்திருந்தது.
ஆனால் இரண்டு நாட்களாக அவளோடு லஹிருவாள் பேசக் கூட முடியவில்லை. வலிநிவாரணியின் காரணமாக சாரு தூங்கி இருந்தாள். கை, கால் பட்டால் அவளுக்கு வலிக்குமோ என்று இவன் ஒதுங்கி படுக்க, அவளோ இவன் மீது தூங்கி இருந்தாள். 
இரண்டு நாட்களிலையே லஹிருவின் கவனிப்பிளையே சாரு குணமாகி இருந்தாள்.
சாரு நடந்ததையும், நடப்பதையும், லஹிரு பேசியதையும் வெகுவாக யோசிக்கலானாள்.
லஹிரு முத்தமிடும் பொழுது தடுத்தாளே ஒழிய அதை வெறுக்கவுமில்லை. பிடிக்கவில்லையென்று அவள் கண்ணீர் வடிக்கவுமில்லை. அவள் ஆள் மனம் அதை ரசிக்கத்தான் செய்தது. விரும்பத்தான் செய்தது என்பதை மெதுவாகத்தான் உணர்ந்தாள். அவளுக்குத்தான் அவனை ஏற்கனவே பிடித்திருந்ததே. இவன் பேசியவைகளால் தானே மனதுக்கு திரையிட்டு ஒதுங்கி இருந்தாள்.
“இல்ல. இல்ல. அக்கறை, சக்கர என்று ஏமாந்துடாத சாரு” அவள் மனம் அலர்ட் செய்ய குழம்பி நின்றாள் சாரு. 
சாரு இங்கு வந்ததே இவனோடு வாழவா? வேண்டாமா? என்று யோசிக்கத்தான். இவன் அவளுக்காக செய்பவைகளை பார்த்து இவள் காதலில் கசிந்து உருகி இருக்க வேண்டும். ஆனால் குழம்பி எந்த முடிவுக்கும் வர முடியாமல் தவித்தாள்.
அன்றும் பஞ்சவர்ணமும் முத்துவும் வழமையான நேரத்தில் வெளியே சென்றிருக்க, லஹிரு அவளை தொல்லை செய்யாது தூங்க ஆயத்தமானான்.
தலையணையின் மேல் இரண்டு கைகளையும் வைத்து தலையை கைக்கு கொடுத்து அவனையே பார்த்திருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டு குட் நைட் சொன்னவன் அவளை பார்த்தவாறே அவளை போலவே தூங்க முயற்சி செய்ய “எதற்காக இதெல்லாம் செய்யுற?” என்று கேட்டாள் சாரு.
 “எத கேக்குற?”
எல்லாம் தான். என்ன பாத்துகிறது. எங்க வீட்டுக்கு எல்லாம் செய்யிறது. இதோ இப்போ அன்பான கணவன் போல என்ன கிஸ் பண்ணது எல்லாம்”
“நான் நடிக்கிற என்று இன்னமும் நினைக்கிறியா?” புன்னகை மாறாமல் கேட்டான் லஹிரு.
இல்லையென்று தலையசைத்தவள் “உனக்குத்தான் என்ன பிடிக்காதே. பாட்டிக்காக சேர்ந்து வாழ முயற்சி செஞ்சி எதற்காக வீணா கஷ்டப்படுற? பிடிக்காத ஒன்ற எவ்வளவு காலம் செய்ய முடியும்? ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பு தட்டாதா? வேணாம் இத இப்படியே நிறுத்திடலாம்”
அவன் நடிக்கவில்லையென்று புரிந்து போனதும் எதற்காக? என்ற கேள்வி அவளை குடைந்ததில் ஒருவேளை பாட்டிக்காகத்தான் சேர்ந்து வாழ முயற்சி செய்யலாம் என்று இத்தனையும் செய்கிறானோ என்று நினைத்தவள் பொறுமையாக இவனுக்கு சொல்லி புரியவைத்து விடலாம் என்று ஆரம்பித்தாள் சாரு. 
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது போல் லஹிருவும் விளக்கம் கொடுக்க முனைய வில்லை. அவளே தன்னை புரிந்துகொள்ள வேண்டும், தன் காதலை உணர வேண்டும் என்று நினைத்து அமைதியாகவே இருந்தான். ஆனால் அவன் விளக்கம் கொடுக்காமல் இவள் புரிந்துகொள்ள மாட்டாள் போலும்.
பெருமூச்சுவிட்டவன் “ஒருவாறு நான் நடிக்கல என்று உனக்கு விளங்கிருச்சு. அப்பத்தாக்காக இல்லனு எப்படி புரிய வைக்கிறது?” நாடியை தடவி யோசித்தான்.     
இவன் என்ன சொல்ல விழைகிறான் என்று சாரு பார்க்க “எனக்கு உன்ன பார்த்ததும் பிடிச்சிருந்தது என்று சொன்னா நீ நம்பவா போற? இல்ல பார்க்க பார்க்க பிடிச்சிருந்தது என்று சொன்ன ஏதுபியா?” என்று சிரிக்க, சாரு முறைக்கலானாள்.
“ஆனா அதுதான் உண்மை. அப்பத்தா சொல்லுற பொண்ணத்தான் கல்யாணம் பண்ணனும் எந்த காரணத்தை கொண்டும் அவங்கள கஷ்டப்படுத்தக் கூடாது என்று இருந்தேன். உன்ன பார்த்ததும். இங்க கொஞ்சம் ஆட்டம் காண ஆரம்பிச்சிருச்சு” இதயத்தை தொட்டுக்க காட்டியவன் “ஆனா அன்னக்கி நீ பேசிய பேச்செல்லாம் கேட்ட பின்னாலையும் உன்ன பத்தி யோசிப்பேனா? அப்பப்பப்பா… நான் என்ன இந்த காலனிலையே எவனும் உன்ன கட்ட ஓகே சொல்லி இருக்க மாட்டான்” என்றதும் மீண்டும் சாரு அவனை முறைக்கலானாள்.
அவன் சொல்வதில் கொஞ்சம் உண்மையும் இருந்தது. தந்தையை தேடிக் கண்டு பிடிக்கும்வரை தனக்கு திருமணம் என்ற ஒன்று ஆகக் கூடாது என்று உறுதியாக இருந்தவளுக்கு அவள் வாய்தான் வேலியாக இருந்தது.   
“அது உன் தப்பில்ல. இந்த மாதிரியான சூழ்நிலைல வளர்ந்தா அப்டித்தான்னு இங்க வந்த உடனே புரிஞ்சிக்கிட்டேன். நீ உன் அப்பாவை பிரிஞ்சி இந்த மாதிரியான சூழ்நிலைல வளர என் அப்பாவும் ஒரு காரணம். சாரி” அவள் கைகளை பற்றியவாறே கூற,
“உங்கப்பாவை நான் பார்த்தது கூட கிடையாது. அவர் பண்ணதுக்கு நீ எதுக்கு சாரி கேக்குற? குடிச்சிருக்கியா?” கிண்டலாக கேட்டவள் மேலே சொல்லும்படி சைகை செய்தாள்.
இன்றுதான் அவன் மனம் திறந்து பேசுகிறான் இதில், நன்றியையும், மன்னிப்பையும் கலந்து இடையில் குழப்பிக்கொள்ள அவள் விரும்பவில்லை.
“வாய்… வாய்…” என்றவன் “ஹரித போல என்னால யார் கூடையும் சகஜமாக பழக முடியாது. அப்படியே வளர்ந்துட்டேன். அவன் உன் கூட பேசுறத பாக்குறப்போ பொறாமையா இருக்கும். எங்க அவன் உன்ன லவ் பண்ணுறேன்னு வந்து நிப்பானோன்னு ஒரே டென்சன். அவனை திட்ட முடியாது. மொத்த கோபத்தையும் உன் மேலதான் காட்ட முடியும். உன் மேல மட்டும்தான். அது எதோ உரிமை என்று வச்சுக்கோயேன்” முகத்தில் விழுந்த அவள் கூந்தலை காதோரம் ஒதுக்கி விட்டவன்
“என்னதான் உன் மேல கோவத்தை காட்டினாலும். அன்னைக்கி நீ வழுக்கி விழுந்தப்போ மனசு ரொம்ப பதறி போச்சு. உனக்காக எதற்கு பதறனும் என்று அந்த கோபத்தையும் உன் மேலதான் காட்டினேன். என் மனசு உன் பக்கம் சாஞ்சிட கூடாது என்றுதான் கோபத்தை காட்டி உன் கிட்ட இருந்து விலகி போனேன். போதாததற்கு நீயும் உன் ப்ரெண்டும் பேசினது வேற கேட்டுடேனா? உன்ன பத்தின அபிப்பிராயம் தப்பாகவே மாறிப் போச்சு”
அவள் முறைப்பதையும் பொருட்படுத்தாமல் “நீ வாயாடிதான். ஆனா எல்லாத்துக்கும் பயப்படுவ. அத பார்த்து எனக்கு சிரிப்பு வரல உன்ன பத்திரமா பாத்துக்கணும் என்றுதான் தோணிருச்சு. அது ஏன் என்று நான் யோசிக்கவே இல்ல.
கல்யாணம் ஆனா அன்னிக்கி வேற நீயும், வான்மதியும் தேவையில்லாம பேசி என் கோபத்தை தூண்டி விட்டுடீங்க. அதன் விளைவுதான் அந்த அக்ரிமெண்ட். ஆனா என் மனசு எனக்கு எப்போ புரிஞ்சது என்றா நான் உன்ன கிஸ் பண்ண பிறகுதான்” என்றவன் சிரித்தான்.
என்னதான் சாரு முறைத்தாலும் அவன் பேசுவதை ஆசையாக கேட்டிருந்தாளே ஒழிய குறிக்கிடவில்லை.
“ஈஸியா உன்ன திட்ட முடிஞ்சா என்னால இத உன் கிட்ட எப்படி சொல்லுறது என்ற தயக்கம். அந்த அக்ரிமெண்ட் வேற நமக்குள்ள பிரச்சினை பண்ணும் என்று உன்கிட்ட இருந்த காபியையும், என் கிட்ட இருந்த காபியையும் இல்லாம பண்ணிட்டேன். அசலை பாக்டரி லாக்கர்ல வச்சிருந்தேன். அத அப்பொறம் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். அதுதான் அப்பத்தா கைல சிக்கிருச்சு”
“அப்போ பாட்டிகிட்ட சொன்னதெல்லாம்…” சாரு இழுக்க
“எல்லாமே உண்மை. எல்லாம் இங்க இருந்து சொன்ன வார்த்தைகள் தான்” நெஞ்சை தொட்டுக்க காட்டியவன் “உன்ன போய் எனக்கு எப்படி பிடிச்சு போச்சு என்று எனக்கே சிரிப்பா இருக்கும். ஆனா இந்த யக்ஷணிய எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.
“நான் யக்ஷணியா? இப்போ பாரு யக்ஷணி என்ன செய்யும் என்று?” என்றவள் அவன் மேல் ஏறி அவனை கடிக்க முயன்றாள்.
“விடுடி… விடுடி…” லஹிரு அவளிடம் போராடலானான்.
சட்டென்று அவள் கைகளை சேர்த்து அணைத்தவன் மெதுவாக அவளை அவள் படுக்கையையிலையே கிடத்தி அவள் மேல் காலையும் போட்டு அசைய முடியாதபடி பிடித்துக் கொண்டவன் “இப்போ என்ன பண்ண போற?” என்று கேட்க, சாரு அவனை கடிக்க முயல, இவனோ அவளை முத்த மிட, “வேண்டாம், வேண்டாம்” என்றவள் சிரிக்கலானாள்.
“என்ன வேணாம்? எனக்கு வேணும்” என்றவன் மேலும் முன்னேற சாரு என்றவாறு கதவை திறந்தாள் பஞ்சவர்ணம்.
லஹிரு சட்டென்று அவளிடமிருந்து விலகி இருக்க சாருவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. தலையணையில் முகம் புதைத்து இவள் சிரிக்க, லஹிருவும் சிரிக்கலானான்.
என்னதான் சிரிப்பை அடக்கினாலும் அவர்களின் சிரிப்பு சத்தம் பஞ்சவர்ணத்துக்கு கேட்காமலில்லை. என்னவென்று கேட்காமல் அவள் உறங்கிப் போக, இவர்களும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு உறங்க முயற்சி செய்தனர்.
இருவரினது மனமும் நிறைந்திருந்தது. தூக்கம்தான் வருமா? என்றிருந்தது.
லஹிரு அவள் முகம் முழுவதும் குட்டி குட்டி முத்தங்கள் வைக்க, சாரு அவனை அணைத்துக் கொண்டு அவன் கொடுக்கும் முத்தங்களை ரசித்தவாறு தூங்குமாறு கூறிக் கொண்டிருந்தாள்.
எப்பொழுது தூங்கினார்கள் தெரியவில்லை. அன்றைய விடியல் இருவரினதும் முகத்தில் புன்னகையை மட்டுமே கொண்டு வந்து சேர்ந்திருந்தது.
பஞ்சவர்ணம் வீட்டிலையே இருப்பதால் சாருவை தனியாக சந்திக்க முடியாமல் லஹிரு திண்டாட அவளோ இவனுக்கு பலிப்புக் காட்டியவாறு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள்.
“சித்தி ஏதாவது வாங்க வேண்டுமா? தீபாவளிக்கு ஏதாவது வாங்காம விட்டு போச்சுன்னா சொல்லுங்க நானும் சாருவும் போய் வாங்கிட்டு வரோம்” சாருவை வெளியே கிளப்ப முயன்றான் லஹிரு.
காரிலையே ஒரு ட்ரைலரை ஓட்டி விடலாம் என்று இவன் திட்டம் போட “ஒன்னும் இல்ல மாப்புள எல்லாம் வாங்கியாச்சு” என்று அவன் திட்டத்தில் தீயை வைத்தாள் பஞ்சவர்ணம்.
“நல்ல பாருங்க, கடைசி நேரத்துல, அத காணோம் , இது இல்லனு சொல்ல போறீங்க”
“என்ன ஓவரா பண்ணுறான்” என்று சாரு பார்க்க கண்களாளேயே கெஞ்சும் கணவனை கண்டு நாக்கை துருத்தி பழிப்பு காட்டி ஓடிவிட்டாள். 
இது தங்களுடைய வீடு என்றால் இந்நேரம் அவளை இழுத்து அறையை பூட்டி… ஏதேதோ கற்பனை செய்தவன் “ஆமா இந்த வீடுகள்ல அந்த விஷயம் எப்படி?” அப்பொழுதுதான் அவன் யோசிக்கவே ஆரம்பித்தான்.
  
அன்றிரவு முத்து சினிமாவுக்கு போய் இருந்தான். வளமை போல் பஞ்சவர்ணம் சீரியல் பார்க்க கிளம்ப “சித்தி இன்னக்கி அரை மணிநேரம் பத்தாது ஒரு மணிநேரம் ஆகும்” என்றான் லஹிரு.
சாரு போர்வையால் அவள் முகத்தை மூடிக் கொண்டாள்.
பஞ்சவர்ணம் பதில் எதுவும் பேசவில்லை கதவு பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள்.
காற்றும் பலமாக வீச ஆரம்பித்திருக்க மழையும் தூரல் போட ஆரம்பித்திருந்தது. தகரக் கூரையில் விழும் தூரலின் சத்தம் வித்தியாசமான இசையாக ஒலிக்க லஹிருவுக்கு அது ரொம்பவே பிடித்திருந்தது. 
“என்ன சாரு ஆரம்பிக்கலாமா?” என்று லஹிரு அவளை நெருங்க வெக்கத்தில் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டவளை அணைத்துக் கொண்டவன் “சாரு உனக்கு ஏதாவது நிறைவேறாத ஆசைகள் இருந்தா சொல்லு. ஒவ்வொண்ணா நிறைவேத்திடலாம்”
இந்த மாதிரியான சூழ்நிலையில் வளர்ந்தவளுக்கு ஏகப்பட்ட ஆசைகள் இருக்கக் கூடும். எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும் தன்னால் அவள் பட்ட மனக்காயங்களுக்கும், தன் தந்தையால் ஏற்பட்ட கஷ்டங்களுக்கும் தீர்வு காண வேண்டியே கேட்டான்.
.
“லூசு லூசு எந்த நேரத்துல என்ன கேட்டுகிட்டு இருக்கான். வெளிய போன அத்த எப்போ கதவை திறப்பாங்களோ? சட்டுபுட்டுனு ஆகா வேண்டிய காரியத்தை பார்க்க வேணாம். அரலூசு. பேசிகிட்டு இருக்கான். நீ சரிப்பட்டு வர மாட்ட” என்றவள் அவன் மேல் தாவி இருந்தாள்.
“ஏய் இருடி…” என்னதான் அவன் நேற்று பேசி இருந்தாலும், அவள் மனதில் இறுக்கங்கள் ஏதாவது இன்னும் மிச்சம் மீதி இருக்கா? என்று கேட்டு அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு இருந்தது.
இந்த வீட்டில் இப்படி ஒரு சூழ்நிலையில் தங்களது முதலிரவு நடப்பதில் அவளுக்கு சம்மதமா? என்று அறிந்து கொண்டு அவள் விருப்பத்து இணங்க தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அதனாலே அவன் சுற்றிவளைத்து ஆரம்பித்தான்.
ஆனால் அவளோ அவனை பேசவிடாது தன்னுடைய சம்மதத்தை கூறியதில் தகரக் கூரையின் கீழ் பொழிந்த மழையின் இன்னிசையில் அவர்களின் இல்லறம் இனிதே ஆரம்பமானது.   
இடியும் மின்னலுமாக மழை சோவென பொழிந்துக் கொண்டிருக்க, மணி பன்னிரண்டை தாண்டியும் சினிமாவுக்கு சென்ற முத்துவையும் காணவில்லை. சீரியல் பார்க்க சென்ற பஞ்சவர்ணமும் வீடு வந்து சேரவில்லை.
காலநிலையும் அவர்களுக்கு நேரத்தை ஒதுக்கிக் கொடுக்க, இன்று பொழிந்த வான்மழையின் காரணமாக குடிமகன்களின் வசை மழையின் சத்தம் காணாமல் போனதால் லஹிருவுக்கு எந்த தொந்தரவும் இருக்கவில்லை. 
லஹிரு பேசியதை மட்டும் வைத்து அவள் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவனை கவனித்ததில் அவளுக்காக மட்டுமல்லாது இந்த வீட்டில் உள்ள முத்துவோடும், பஞ்சவர்ணத்தோடும் கூட அவன் அன்பாகவும், நெருக்கமாகவும்தான் பழகினான்.
காலை, மாலை சுதுமெனிகேயை அழைத்து பாக்டரியில் என்ன நடக்கிறது என்று விசாரிப்பவன் ஹரிதவையும் அழைத்து இந்த, இந்த வேலைகளை செய்யுமாறு உத்தரவிடுவானே ஒழிய, தான் அங்கு வரவா என்று இருவரிடமும் ஒருதடவையாவது கேட்கவில்லை. ஆகா இங்கு இருப்பதை அவன் வெறுக்கவில்லை. அவளுக்காக சகித்துக் கொண்டு இருக்கவுமில்லை. விரும்பியே இருக்கின்றான்.
அவள் அவனை சொந்தம் என்று அறிந்துகொண்டுதான் நேசிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவனோ சொந்தம் என்று அறியாமல்தான் நேசிக்க ஆரம்பித்திருக்கின்றான்.
“பாட்டியின் மனம் நோகக் கூடாதென்று தான் பேசியதை வைத்து கொஞ்சம் என் மனம் நோகும்படி நடந்துகொண்டு விட்டான். அதுதான் நான் என்றோ மறந்து விட்டேனே” தூங்கும் கணவனை பார்த்து புன்னகைக்கலானாள்.
தீபாவளியன்று இருவரும்  ஒன்றாக சேர்ந்து எல்லா சடங்குகளையும் செய்தனர். தலைதீபாவளியோடு ஆரம்பித்த அவர்களின் வாழ்க்கை என்றும் சிறக்க வாழ்த்துவோமாக 
நன்றி
by MILA

Advertisement